நேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்னல் ஓரமாக இருந்து, குப்பொன்று எதிர்த்திசை நகரும் காற்று முகத்தில் அடிக்க, கையோடு எடுத்துப் போன புத்தகத்தை இதழ் பிரிக்க ஆரம்பித்தால், சுற்றும் முற்றும் இருக்கும் ஐபொட் காதுகளும், உலக நடப்புக் குசுகுசுப்புக்களும் ஒரு பொருட்டாகவே இருக்காது. கதாசிரியன் கைபிடித்துப் போகும் இன்னொரு உலகத்துக்குப் போய்க்கொண்டிருக்கும் மனசு. அந்த வாய்ப்புத் தான் நேற்றுக் கிட்டியது. தாயகம் சென்றபோது வாங்கி வந்த புத்தக அடுக்குகளில் செங்கை ஆழியானின் "கிடுகு வேலி" நாவலை முன்னுரையில் இருந்து தொடர்ந்தேன்.
முன்னர் என் ஆதர்ஷ எழுத்தாளர் செங்கை ஆழியான் பற்றி நான் உங்கள் ரசிகன் என்ற பதிவை எழுதியபோது கிடுகுவேலி வாசிப்பனுபவம் பற்றிச் சொல்லியிருக்கின்றேன். எனது அம்புலிமாமா, பாலமித்ரா காலத்து உலகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனது இந்தக் கிடுகுவேலி நாவல். ஈழநாடு வாரமலரில் ஒவ்வொரு ஞாயிறுப் பதிப்பிலும் தொடராக வந்தபோது அந்தப் பக்கத்தைக் கிழித்து ஒரு பெரிய கைவினைக் கொப்பியில் ஒட்டிச் சேமித்து வைப்பேன். கல்கி, ஆனந்த விகடனில் வரும் தொடர்கதைகளைச் சேர்த்து பைண்ட் பண்ணி வைக்கும் என் அம்மாவின் பழக்கம் தான் எனக்கும் அப்போது தொற்றிக் கொண்டது. பெரியாக்கள் வாசிக்கும் கதை என்ற இலக்கணத்தை முதன் முதலில் காட்டியது இந்தத் தொடர் நாவல் தான். என் ஆரம்பகால வாசிப்பு இது என்பதால் நாவலின் கரு மட்டுமே இது நாள் வரை என் நினைவில் இருந்தது. நேற்றைய மீள் வாசிப்புத் தான் மீண்டும் எனக்குப் பழைய வாசிப்பைப் புதுப்பித்துத் தந்தது.
செங்கை ஆழியானின் படைப்புக்கள், அவை நாவலாகட்டும் அல்லது சிறுகதைகளாகட்டும் அந்தந்தக் காலகட்டத்து ஈழச் சமூகத்தின் காலப்பதிவுகளாக இருக்கின்றன. அதற்குப் பல உதாரணங்களை இவரின் படைப்புக்களை வைத்தே கூறலாம். அதாவது இவரின் ஒரு படைப்பை வாசிக்கும் ஒரு வாசகனுக்கு வரலாற்றின் எந்தக் காலகட்டத்தில் எந்த வகையான வாழ்வியல் அமைப்பில் ஈழத்தமிழன் இருந்தான் என்பதை அது காட்டி நிற்கும்,பொதுவாக ஒரு குடும்பச் சிக்கலைச் சொல்லுவதாக அவை அமைந்து நிற்கா. ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றுப் பின்னணியில் ஏராளமான ஆய்வு நூல்கள் வந்திருக்கின்றன. ஆனால் ஈழத்தமிழரின் அலைக்கழிக்கப்பட்ட் வாழ்வியல வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் செங்கை ஆழியான் போன்றோரின் தேர்ந்தெடுத்த நாவல்களைப் படிக்க ஆரம்பித்தாலே போதும். அந்தவகையில் கிடுகுவேலி நாவல் பேசும் காலம் 1980 களின் காலகட்டத்து யாழ்ப்பாணத்து வாழ்வியல் அமைப்பு.
ஈழத்தில் இருந்து ஆரம்பகாலத்தில், அதாவது அறுபதுகளுக்குப் பிந்திய காலம் முதல் பொருளாதார வலுவை ஏற்படுத்திக் கொள்வதற்காகப் பலர் தமது வீடு, காணி போன்றவற்றை ஈடுவைத்து வெளிநாடுகளுக்குப் போக ஆரம்பித்தார்கள். தமது பெற்றோர் இறக்கிவைத்த பாரங்களாக எஞ்சி நிற்கும் நாலைந்து சகோதரிகளோடு பிறந்த ஒருவன் இவர்களுக்குச் சீதனம், சீர் செய்ய உள்ளூர் உழைப்பை நம்பியிருக்கமுடியாது. ஆயிரத்துக்கும் குறைவான சம்பளம் வாங்கிக்கொண்டு நாளாந்த சீவியத்தை நடத்துவதே பெரிய காரியம். இதனால் தான் கெளரவமான உத்தியோகத்தில் இருந்தவர்கள் கூடத் தம் பதிவையை உதறிவிட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணித்தார்கள். அதாவது தாயகம் கொடுக்கும் சின்னச் சின்னச் சந்தோஷங்களையும் அடவு வைத்துத் தம் குடும்பத்துக்காக உழைத்து உழத்து நரை தட்டி, வழுக்கை விழுந்து அரைக்கிழவனாகி, கல்யாண வயது தாண்டி கல்யாணமே கட்டாமல் வாழும் பலரை நான் பார்த்திருக்கின்றேன், அறிந்திருக்கின்றேன்.
இப்போது அகதியாக ஓடும் தலைமுறைக்கு முந்திய காலம் அப்படியிருந்தது. இப்போது எல்லாமும் கலந்த ஒரு இடப்பெயர்வாகிவிட்டது.
"கிடுகு வேலி" நாயகன் சண்முகம் கூட அன்றைய யாழ்ப்பாணத்துச் சராசரி இளைஞன். அதாவது கிராமத்தின் மதகு, ஆலமரத்தடி வாசிகசாலை, மருதனாமடச் சந்தி என்று சுற்றும் இருக்க, சைக்கிளில் ஏறி மண் ஒழுங்கையில் ஓடி, மதகில் ஏறி உட்கார்ந்து, நண்பர்களுடன் அரட்டை அடித்து, கீரிமலைக்குச் சென்று கூவில் கள் குடித்து.... என்று தன் எல்லாச் சந்தோஷங்களையும் அடகுவைத்து விட்டு குவைத்துக்குப் போய் ஊருக்குத் திரும்பாமல் ஐந்து வருடங்கள் மாடாய் உழைத்து தன் குடும்பம் கரைசேர நினைத்தான்.
புதிதாகக் கல்யாணமாகி மூன்றே மாதங்களில் மனைவி நிர்மலாவையும் பிரிந்து மூன்று தங்கைகளையும், ஒரு தம்பியையும் கரை சேர்க்கவேண்டும் என்ற முனைப்பில் நாடு விட்டு ஓடும் சண்முகம் தன்னுடைய உழைப்பின் பலாபலன்கள் எப்படி இருக்கின்றன என்பதைக் காணும் போது அவனுக்குக் கொடுக்கும் ஏமாற்றங்கள் தான் இக்கதையின் களன்.
கிடுகுவேலி என்பது யாழ்ப்பாணத்தின் ஒரு குறியீட்டுப் பெயர், அந்தக் கிடுகுவேலியின் நேர்த்தியில் தான் யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுப் பாரம்பரியங்கள் இருக்கின்றன. ஆனால் திடீர் வெளிநாட்டுப் பணமும், அதீத நாகரீக மோகமும் எப்படியெல்லாமோ இந்தக் கிடுகுவேலிக் கலாச்சாரத்தைச் சிதைத்துவிடுகின்றன. வெளிநாட்டில் அரைவயிறு கால் வயிறு நிரம்ப, இரண்டொரு மணி நேரத் தூக்கத்தோடு இரண்டு மூன்று வேலை செய்து ஒருவன் தான் வாழ்வை இழந்து கொண்டு போகின்றான். மறுபுறத்தின் அவன் உடன்பிறப்புக்கள் இரண்டு மடங்கு உச்சபட்ச வாழ்வுக்குள் போகின்றார்கள். இப்படியான சண்முகங்களின் குடும்பங்கள் பல இன்னும் நம் நாட்டில்.
இந்த நாவலுக்கு முன்னுரை அளித்த பேராசிரியர் சிவலிங்கராஜா சொல்லுவது போல்
"பணம் வந்ததும் குணம் மாறித் தனது மைத்துனனை இழக்கும் கிளிகளையும், மற்றவனையும் ஒரு மாதிரி வெளியே அனுப்பி மற்ற மகளுக்கும் மாப்பிளை வேட்டையாட நினைக்கும் சண்முகத்தின் தாயும் இன்றைய சமூகத்தின் வகைமாதிரியான பாத்திரங்களாகும். இவை மாறலாம், மாற வேண்டும். ஆனால் இப்படியானதொரு சூழ்நிலை யாழ்ப்பாணத்திலேயே நிலவுகிறது என்பதைப் படம் பிடிக்கக் கிடுகுவேலி போன்ற நாவல்கள் தேவைப்படுகின்றன".
வெளிநாடு போன சண்முகத்தின் கோணத்தில் நாவலை நகர்த்தி வாசகனை, சண்முகத்தின் பார்வையில் நாவலோட்டத்தை அனுபவிக்க வைக்கின்றார் நாவலாசிரியர். தன் குடும்பம் தானே, நான் தானே காப்பாற்றவேண்டும் என்ற அவனின் மனோபாவம், தொடர்ந்து அவன் சந்திக்கும் நிகழ்வுகளால் தவறாகிப் போகின்றது. அதுபோல் ஆரம்பத்தில் திமிர்பிடித்தவள் போலச் சித்தரிக்கப்படும் சண்முகத்தின் மனைவி நிர்மலா, திருமணமான மூன்றாம் மாதமே தன்னைத் தவிக்கவிட்டும், ஐந்து வருடங்களாக பிள்ளையின் முகத்தைப் பார்க்காத தந்தையாக சண்முகம் இருப்பதையும், தன்னையும் பழைய காதலன் பகீரதனையும் இணைத்து ஊரார் பேசும் குசுகுசுப்புக்களையும் தாங்கி வாழவேண்டியவள் என்று காட்டும் போது அனுதாபத்துக்குரிய பாத்திரமாக மாறுகின்றாள். எனவே ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில் கதையை நகர்த்தாமல், காட்சிகளும் சம்பவங்களும் ஒரு பொதுவான தளத்தில் இருந்து பார்க்கும் வண்ணம் நாவலை எடுத்துச் சென்றிருக்கின்றார் செங்கை ஆழியான்.
ஐந்து வருடங்கள் கழித்து ஊருக்கு வரும் சண்முகத்தின் பார்வையில் கிடுகுவேலிகள் தொலைந்த மதில்களும், கல்வீடுகளும், வீடுகள் தோறும் முளைத்திருக்கும் ரீவி அன்ரெனாக்களும் என்று வெளிநாட்டுப் பணத்தின் சித்துவிளையாட்டுக்கள் பேசப்படுகின்றன.
தன் வீட்டுக்காரர்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள், கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தைச் சேமித்து வைத்திருப்பார்கள் என்ற நினைப்பில் இருக்கும் சண்முகம் காணும் நாகரீக மாற்றங்கள் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. எந்த நோக்கத்துக்காகத் தன்னையே அவன் இழந்தானோ அவனின் கனவுகள் எல்லாம் பொடிப் பொடியாகின்றன.
மச்சாள் பவளம், மற்றும் நிர்மலா போன்ற பாத்திரங்கள் இந்தச் சமூக அமைப்புக்குள் இருந்து வெளியே வரமுடியாதவர்களாக தாம் விரும்பியவனையே திருமணம் செய்துகொள்ள முடியாத அபலைகளாக காட்டப்படுகின்றார்கள்.
அதுபோல் அத்தான் சீராளனையே மனதில் வரிந்துகொண்டிருக்கும் சண்முகத்தின் தங்கை கிளி, திடீர் வெளிநாட்டுப் பணம் கொடுக்கும் மாயையில் அவனை ஒதுக்குவதும் கூட கசப்பான நிஜவாழ்வில் குறியீடுகளே.
குவைத்தில் தன்னோடு வேலைபார்க்கும் சுப்பிரமணியம் வருடத்தில் பதினைந்து நாளாவது ஊருக்குப் போய் தன் குடும்பத்துடன் விடுமுறையக் கழித்து வருவதும் சண்முகத்துக்கு ஏளனமாகப்படுகின்றது.
"எப்படித்தான் வாழ்ந்தாலும் மனைவியுடன் வாழ்வது போல் எதுவுமில்லை. உணர்வுகளையெல்லாம் ஒடுக்கி அடக்கி எனக்காகக் காத்திருக்கும் அவளுடன் வருடத்தில் ஒரு சில நாட்களாவது வாழாவிட்டால் பிறகெதுக்கடா சண்முகம் பணம்?..."
சுப்பிரமணியத்தின் அந்த வார்த்தைகள் ஊருக்குத் திரும்பியபின் தான் சண்முகத்தைச் சுடும் நிஜங்களாகின்றன. திருமணம் முடித்து மூன்றே மாதங்களில் மனைவியைப் பிரிந்து, அவளின் அபிலாஷைகளை ஒதுக்கித் தன் குடும்பத்தைக் கரைசேர்க்க ஓடியதை நினைத்து வருந்துகின்றான்.
கிரைண்டர், ரேப் ரெக்கோடர், ரீ, ரெக் என்று பட்டியல் போடும் தங்கைகள், தன் உழைப்பைச் சேமிக்காமல் ஆடம்பரமான வீட்டைக் கட்டிய அம்மா, "தம்பி எப்ப வந்தது? இனி எப்ப போறது?" (பக்கத்து வீட்டு செல்லப்பர்), "ஊரெல்லாம் மாப்பிளை இருக்குது தம்பி, ஆனா அவங்களை வாங்க முடியாது, ஒவ்வொருத்தனின்ர றேற்றும் வானத்தை எட்டுத்து" (வேலுப்பிள்ளை அம்மான்), இவர்கள் எல்லாம் நம் சமூகத்தில் வாழும் குறியீடுகள். சேமித்த காசெல்லாம் கரைந்து போய் இன்னொரு வெளிநாட்டுப் பயணம் தான் தன்னுடைய இன்னொரு தங்கையைக் கரைசேர்க்கும் என்ற நிலையில் இருக்கும் சண்முகத்துக்கு ஆறுதலாக, சீதனமில்லா மாப்பிளையாக வரும் முருகானந்தம் போலவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
1983 இல் திருநெல்வேலியில் நடந்த இராணுவ டிறக் மீதான தாக்குதலோடு கதைக்களின் இறுதி முடிவு நகர்வதும், செங்கை ஆழியான் கதைகளில் பெரும்பாலான முடிவாக இருக்கும் அவலச் சுவையும் இந்த நாவலின் திருப்பத்துக்கும், முடிவுக்கும் கைகொடுத்திருக்கின்றனவே ஒழிய மற்றப்படி இவை செயற்கையான உள்ளீடுகளாகவே இருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசத்தில் வாழும் மக்கள் வாழும் மக்களின் பேச்சுவழக்கில் நுணுக்கமான வித்தியாசம் இருக்கும். ஆனால் அதீத இலக்கணத் தமிழ் இருக்காது. ஆனால் செங்கை ஆழியான் நாவல்களில் இந்த பேச்சு வழக்கை பாத்திரங்கள் வாயிலாகச் சொல்லும் போது இலக்கணத்தமிழை விடுத்து முழுமையான பேச்சு வழக்கிலேயே நகர்த்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதைத் தான் கிடுகு வேலிக்கும் சொல்லிக் கொள்ள வேண்டும்.
1984 ஆம் ஆண்டு ஜூனில் முதற்பதிப்பாக ரஜனி பதிப்பகம் வெளியிட்ட இந்த நாவல் நான்காம் பதிப்பாக ஏப்ரல் 2003 இல் கமலம் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது. 1983-1985 ஆண்டுகளில் இலங்கையில் வெளியாகிய குறுநாவல்களுள் சிறந்ததாகக் "கிடுகுவேலி"யைத் தேர்ந்தெடுத்து தமிழ்க் கலைஞர் வட்டம் (தகவம்) பரிசும் சான்றிதழும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாவல் என்றால் முன்னூறு நானூறு பக்கங்களில் இருக்கவேண்டும் என்ற சிலரின் எழுதப்படாத விதிகளை மீறி, 96 பக்கங்களோடு அங்கிங்கு அலைந்து திரிந்து போகும் தொடராக அல்லாது "கிடுகு வேலி" சொல்ல வந்ததைச் சொல்லி நிற்கின்றது.
கிடுகுவேலி நாவலில் வரும் நிர்மலாவைப் போலத் தான் ஒரே கடலில் வரும் தீப்தி. நிர்மலாவுக்குத் தேவை தன் அபிலாஷைகளைப் புரிந்து தன்னோடு இருந்து வாழக்கூடிய அன்பான கணவன். தீப்தியும் கூட தன் ஆசாபாசங்களைப் புரிந்துகொள்ளாமல் வேலையில்லாக் கணவனின் பிள்ளை மெஷினாகவும், சாப்பாட்டு இயந்திரமாகவும் இருக்கும் நிலையில் ஒரு மேதாவி ஆணொருவனின் புத்திசாலித்தனமும், பரிவும் இவளை ஈர்க்கையில் தன்னையே இழக்கத் தயாராகிறாள். எதிர்பாராத சமயத்தில் ஆபத்பாந்தவனாகத் தன் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்த நாதன் என்ற அந்தப் பொருளாதார மேதையின் காருண்யம் தீப்தியை நாதன் மேல் காதல் கொள்ளவைக்கின்றது. மத்தியதரக் குடும்பத்து பெண்ணின் அடையாளமாகத் தன் ஆசாபாசங்களை ஒடுக்கி, பதிவிரதையாக இருக்க திப்தியால் முடியவில்லை. தன்னை ஆழமாக நேசிக்கும், தன்மேல் பரிவைக் கொடுக்கும் ஒரு துணையாக பேராசிரியர் நாதனைப் பார்க்கின்றார். இப்படியான மீறல்கள் எல்லாம் நடைமுறை வாழ்விலுக்குச் சரிப்பட்டு வருமா? குடும்ப வாழ்வின் ஒழுக்க விதிகள் என்னாவது? இந்தக் கேள்விக்கெல்லாம் நேர்கோட்டில் பதில் இல்லை. இந்த ஒழுக்க விதிகளை எந்த எல்லையில் வைத்துத் தீர்மானிப்பது? யார் இதைத் தீர்மானிப்பது. இப்படியும் சிலர் வாழத்தான் செய்கின்றார்கள். அதைத் தான் தீப்தியும் செய்தாள்.
டாக்டர் நாதன் உலகமே போற்றும் ஒரு பொருளாதார மேதை. அவருடைய சித்தாந்தமெல்லாம் "இந்த உலகமே பொருளாதார அடிப்படையில் தான் இயங்குகின்றது, உணர்ச்சிகளின் குவியலில் அல்ல" என்பது. அவர் இருக்கும் அதே அப்பார்ட்மெண்டில் வேலையில்லாப் பட்டதாரி ஜயன் மற்றும் அவள் மனைவி தீப்தி . ஒரு சமயம் கணவன் ஊரில் இல்லாத வேளை குழந்தை ஆபத்தான நிலையில் இருக்கையில் பண வடிவில் நாதனின் உதவி தீப்திக்குக் கிடைக்கின்றது. தொடர்ந்து தன் கணவன் ஜயனுக்கும் ஒரு வேலைவாய்ப்பு நாதன் சிபார்சில் கிடைக்கின்றது.சதா வீட்டில் முடங்கிக் கிடக்கும் தீப்திக்கு நாதன் என்ற பெரும் மேதையின் அறிவாற்றலும், பரிவும் அவன் மேல் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றது. நாதனிடம் தன்னை இழக்கின்றாள். டாக்டர் நாதனின் எச்சத்தத் தன் கருவாகத் தாங்குகின்றாள். அதைக் கூட ஒரு பெருமையான விடயமாகவே இவள் எடுத்துக்கொள்கிறாள். டாக்டர் நாதன் தான் இனித் தன் உலகம் என்று முடிவெடுக்கின்றாள்.ஆனால் டாக்டர் நாதனோ தன் கொள்கையில் இருந்து விலகுபவர் அல்லவே. தீப்தியின் கைமாற்றுக்கூட பொருளாதார ரீதியான சமப்படுத்தல் என்று வரையறுத்துக் கொள்கின்றார்.பொருளாதார ரீதியில் இருக்கும் இந்த உலகத்தில் நான் மட்டும் என்ன விதிவிலக்கு என்று தீப்தியை அவர் ஒதுக்குகின்றார். இந்த முரண்பட்ட வாழ்வில் சிக்கித் தவித்த தீப்திக்கு மனப்பிறழ்வு ஏற்படுகின்றது. தொடர்ந்து தீப்தியின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களும், டாக்டர் நாதனின் பொருளாதாரச் சித்தாந்தங்கள் நடைமுறை வாழ்வில் எவ்வளவு தூரம் பொருந்தக் கூடியவை என்பதையும் பேசுகின்றது இந்த ஒரே கடல் (The Sea Within) என்னும் மலையாள சினிமா.
இந்தப் படம் வந்து (ஆகஸ்ட் 2007),ஒரு சில மாதங்களுக்குள் பார்த்துவிட்டேன் என்றாலும் இப்படம் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை மாறவில்லை. Hirak Deepthi என்ற பெயரில் பெங்காலி எழுத்தாளர் Sunil Gangopadhyay எழுதிய நாவலே இயக்குனர் ஷியாம பிரசாத் இயக்கத்தில் வெளியாகியிருக்கின்றது. இதே நாவலை சத்யஜித் ரே கூடப் படமாக்க முனைந்ததாகவும் செய்தி உண்டு. ஒரே கடலைப் பார்த்து முடித்ததுமே நாவலை எவ்வளவு தூரம் சிதைக்காமல் கொண்டு வந்திருக்கின்றார் என்பதை நாவலை வாசிக்காமலேயே உணரமுடிகின்றது. காரணம் குறிப்பிட்ட நான்கு பாத்திரங்களினூடாக நுட்பமான மன உணர்வுகளைக் கீற்றாகக் கொண்டே இப்படம் நகர்கின்றது. வேறு எந்த சினிமாவுலக வர்த்தக சமாச்சாரங்களுமே இல்லை. இயக்குனர் ஷியாம பிரசாத்தின் முன்னைய படங்கள் கூட இதே அளவுகோலில் இருப்பதாக அவரின் பிரத்தியோக இணையத்தளம் மூலமே அறிய முடிகின்றது.
டாக்டர் நாதனாக மம்முட்டி, நடுத்தரக் குடும்பத் தலைவி தீப்தியாக மீரா ஜாஸ்மின், அவளின் கணவன் ஜயனாக (அஞ்சாதே) நரேன், மற்றும் மம்முட்டியின் தோழி பெல்லாவாக ரம்யா கிருஷ்ணன் என்று இந்த நால்வருமே ஒரே கடலைத் தாங்கும் பாத்திரங்கள். பொருத்தமான தேர்ந்தெடுப்புகளும் கூட.ஒசப்பச்சனின் இசை படத்தில் பேசும் நுட்பமான உணர்வுகளை வாத்தியத்தில் காட்டியிருக்கின்றது. சிறந்த நடிகைக்காக மீரா ஜாஸ்மினுக்கும், சிறந்த இசையமைப்பாளருக்காக ஒசப்பச்சனுக்கும், சிறந்த எடிட்டராக வினோத் சுகுமாரனுக்கும் கடந்த ஆண்டின் கேரள அரசின் விருது இப்படத்திற்காகக் கிடைத்திருக்கின்றது.
மிகப் பெரும் பொருளாதார மேதையாகத் தன் பேச்சிலும் மிடுக்கிலும் மம்முட்டி வாழ்ந்து காட்டியிருக்கின்றார். இந்த உணர்ச்சிபூர்வமான பந்த பாசங்களெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது என்ற எடுத்தெறிந்த தோரணையில் நடப்பது, காலமாற்றங்களில் தன் பொருளாதாரச் சித்தாந்தங்களை பிரயோகிக்க முடியாத யதார்த்த வாழ்வில் வாழ நினைத்துக் கஷ்டப்படுவது, தன் நிலை இறங்கித் தறிகெட்டுப் போவது என்று மம்முட்டிக்கு இன்னொரு சொல்லக் கூடிய பாத்திரப் படைப்பு இப்படத்தின் மூலம் கிடைத்திருக்கின்றது.
தியேட்டரில் விசில் அடித்துப் படம் பார்க்கவும், கதாநாயகனை டாய் போட்டுக் கூப்பிடவும் தமிழ் சினிமாவில் அதிகம் பயன்படும் மீரா ஜாஸ்மின் ஒரே கடலில் மிகப்பெரும் நடிப்புக் கடலாக இருக்கின்றார். தன் தரப்பு நியாயங்களையும், கனவுகளையும் பக்கம் பக்கமாக வசனம் பேசி நிரப்பாமல் தன் முகபாவங்களாலேயே காட்டிச் சிறப்பித்திருக்கின்றார். வாடகை, குடும்பச் செலவு, குழந்தைக்கு மருத்துவச் செலவு என்று பாறங்கல்லாய் அழுத்தும் செலவினங்களுக்கு வேலையில்லாக் கணவனிடம் கையேந்துவது, டாக்டர் நாதனிடம் அசட்டுச் சிரிப்போடு பணம் கேட்டு நிற்பது, டாக்டர் நாதனின் ஆசைக்கு முடிவெடுக்க முடியாமல் திணறுவது, டாக்டர் நாதனையே பின்னர் தன் வாழ்வாக வரித்துக் கொண்டு கனவுலகில் வாழ்வது, புத்தி பேதலித்து முரண்பட்ட வாழ்வில் திணறுவது என்று தன் நடிப்பில் வித்தியாசமான பரிமாணங்களைக் காட்டியிருக்க மீராவுக்கு இப்படம் பெரும் தீனி.
தவறு செய்தவள் திருந்தி வாழ்வது, அல்லது செத்துப் போவது இந்தமாதிரியான இந்திய சினிமா இலக்கணத்தைக் கூட உடைத்திருக்கின்றது இப்படத்தின் எதிர்பாராத முடிவு. சரி-பிழை, குடும்ப விசுவாசம் - நம்பிக்கைத் துரோகம் இந்த எல்லைகளைக் கடந்து பரிவும், நேசமும் தேவைப்படும் யாருமே இணைந்து வாழ இந்த சமூகக் கட்டுக்களும், சம்பிரதாயங்களும் தேவையில்லை என்பதை "ஒரே கடல்" சொல்லி நிற்கின்றது. ஆனால் இந்தக் கரு சரியா, பிழையா, டாக்டர் நாதன், தீப்தியின் உறவு ஏற்றுக்கொள்ளத் தக்கதா? என்பதற்கான தர்க்கங்களை இப்படம் பேசவில்லை. பார்வையாளனிடமே அந்தப் பொறுப்பைக் கொடுக்கின்றது. அதுதான் இப்படத்தின்/படைப்பின் நேர்மை.
"நல்லாப் போங்க.....இப்பவே போங்க.... உங்கள் கடமைகளையெல்லாம் முடிச்சிட்டு வாங்க. அதுவரை நான் காத்திருக்கிறன். ஐந்து வருஷமாகக் காத்திருக்கிறன். இனி எத்தனை வருடமானாலும் காத்திருக்கிறன். இனி எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருக்கிறன். எப்ப நீங்கள் எனக்காகவும், குழந்தைகளுக்காகவும் வாழ வருகிறீர்களோ, உங்கட மனதில் நாங்கள் இருவரும் முழுமையாக எப்போது வாழ முடியுமோ அப்போது தான் நான் இந்தக் கட்டிலில் படுப்பன்...."(கிடுகுவேலி நாவலில் நிர்மலா)
ஒரு பெண்ணின் உணர்வுகளையும், ஆசாபாசங்களையும் புரிந்து கொள்ளாமல் வாழத்தலைப்படும் ஆண் சமூகத்துக்கு இரண்டு வேறு தண்டனைகளைக் கொடுத்திருக்கின்றார்கள் "கிடுகுவேலி" நிர்மலாவும், "ஒரே கடல்" தீப்தியும்.
ஷியாம பிரசாத்தின் இணையத்தளம்
Saturday, May 24, 2008
Saturday, May 03, 2008
My Daughter the Terrorist - மூன்று பெண்களின் சாட்சியங்கள்
அப்ப தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு, எங்கள் கல்லூரி விளையாட்டு மைதானமே களை கட்டுத்து. பின்னை என்ன, நாலு வருஷத்துக்குப் பொதுவிலை, கன காலத்துக்குப் பிறகு எங்கட பள்ளிக்கூடத்தில் நடக்கிற விளையாட்டுப் போட்டி எல்லோ.ஒரு பக்கம் செல்லையா இல்லம், இன்னொரு பக்கம் சபாபதி, கார்த்திகேசு இல்லங்கள், அங்காலை சபாரட்ணம் இல்லம் எண்டு மைதானத்தின்ர ஒவ்வொரு மூலையில் இருக்கும் பெரிய மரங்களுக்குக் கீழ நிண்டு ஒவ்வொரு விளையாட்டு இல்லக்காரரும் தங்கட அணியில் விளையாடுற ஆட்களை எடுத்துக் கொண்டு நிற்கினம். இஞ்சாலை கடந்த நாலு வருஷமா விளையாட்டுப் போட்டி நடக்காததால மானம் காப்பாற்றுப்பட்ட தெம்பில் நாகலிங்கம் இல்லக்காரர் இருக்கிறம்.
முந்தி நடந்த போட்டிகளில் எல்லாம் எங்கட இல்லக்காரர் பெருந்தன்மையோட விளையாட்டுக் கேடயங்களையும், கப்புகளையும் மற்ற இல்லக்காரருக்குக் கொடுத்து விடுவினம். இந்த முறை எப்படியாவது சாதிக்கவேணும் எண்ட துடிப்பும் வெறியும் எல்லாரின் மனசிலையும் இருந்தது. ஒரு ஓரமாக நிண்டு இல்லக்காரரோட வேடிக்கை பார்க்கிறன். பெண்களுக்கான தேர்வு நடக்குது. முதலில் உயரம் பாய்தல், பிறகு நீளம் பாய்தல் இரண்டிலும் அவள் தான் அதி உச்ச இலக்கை அடைஞ்சு தெரிவு செய்யப்படுகிறாள். ஆளை எனக்குத் தெரியும், எங்கட வயசு சீ வகுப்பில படிக்கிற மாதினியின்ர தங்கச்சி தான் அவள். நல்ல மா நிறமும் களையான தோற்றமுமாக ஒரு ஐயர் பொம்பிளை மாதிரி இருப்பாள். இவள் தான் எங்கட இல்லத்தின்ர மானத்தைக் காப்பாற்றுவாள் மச்சான், பக்கத்தில் நின்ற மணிகரன் சொல்லுறான் என்ர காதுக்குள்ள. அடுத்த நாள் அதே நேரம் விளையாட்டுப் பயிற்சி நடக்குது, ஆனா அவள் வரேல்லை. இயக்கத்துக்குப் போட்டாளாம், அவள் வகுப்புப் பெண் ஒருத்தி சொன்னாள்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
இன்று My Daughter the Terrorist ஆவணப்படம் பார்க்கும் போது மாதினியின் தங்கை தான் நினைவுக்குள் வந்தாள்.
"எங்கட உண்மை முகம் வந்து வெளியில இருக்கிறவைக்குத் தெரியாது, அதால தான் எங்கள வந்து பயங்கரவாதிகள் எண்டு சொல்லுகினம்"
அடந்த காட்டில் மழை வெள்ளச் சக்தியிலே பாய்ந்தோடிக் கொண்டு வேவு பார்க்கும் போராளி புகழ்ச்சுடர் இப்படிச் சொல்வதில் இருந்து இந்த ஆவணப்படம் ஆரம்பிக்கின்றது.
போராளிகள் புகழ்ச்சுடர், தர்சிகா மற்றும் தர்சிகாவின் தாய் அன்ரனியா இந்த மூன்று நிஜப்பாத்திரங்கள் தான் படம் முழுக்கப் பேசுகின்றன. புகழ்சுடரும் தர்சிகாவும் மாலதி படையணியில் ஏழு வருஷமாக இருக்கும் கரும்புலிப் போராளிகள். போராளிகளின் வாழ்வியல், போராளிகளைக் களத்துக்கு அனுப்பிவிட்டிருக்கும் பெற்றோர் இந்த இரண்டு பக்கத்தையும் மாறி மாறி போரியல் வரலாற்றாடோடு பிணைத்தவாறே நிஜமான காட்சிகளின் தொகுப்பாக ஒத்திகை இல்லாத படைப்பாக அமைகின்றது இது.
"வீட்டை இழந்தம், வீட்டுக்காரரை இழந்து, பிள்ளையளுக்குப் படிப்பில்லை, நாங்கள் நினைச்சது வேற, பிள்ளையள் வளர்ந்த விதம் வேற, எல்லாரும் ஆளுக்கொரு பக்கம்"
தர்சிகாவின் தாய் தன் கோணத்தில் தன் குடும்பத்தின் நிலையைச் சொல்கிறார்.
தர்சிகாவின் தாய் தன் கோணத்தில் சொல்லும் நியாயங்களும், தர்க்கங்களும் நாட்டின் பொதுவான இனப்பிரச்சனையின் குரலாக ஒலிக்கின்றது. மறுபக்கம் போராளிகள் தர்சிகாவும், புகழ்ச்சுடரும் சொல்லும் நியாயங்களும் தர்க்கங்களும் இதுதான் இன்று எமக்கு விதிக்கப்பட்ட ஒரே விதி/வழி என்ற பக்கமாகக் காட்டப்படுகின்றது. இடைக்கிடை ஒலிக்கும் சிறு சிறு துண்டங்களாலான இவர்களின் பேச்சோட்டத்தோடு இதுவரை நாள் நடந்த தாக்குதல் நிகழ்வுகளில் சிலவும், பேரினவாதத்தின் கோர அனர்த்தத்தின் விளைவால் அடுக்கி வைக்கப்பட்ட அப்பாவிகளின் சடலங்கள், இடிபாடுகளுக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் சிறுவன், துணிக்கொட்டகைக்குள் இடம் பெயர்ந்த குடும்பம், பொத்தல் குடிசைக்குள் வாழ்க்கை நடத்தும் இளம் குடும்பம் என்று போரின் சுவடுகள் காட்சிகளாகவும், சம்பவங்களாகவும் விரிகின்றன.
இந்தப் படம் நோர்வே நாட்டின் Beate Arnestad இயக்கத்தில் Morten Daae இன் படத்தொகுப்பு மற்றும் தயாரிப்பில் 2007 இல் வெளியான 60 நிமிட ஆவணப்படம் (Documentary). இந்தப் படத் தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டலும் போயிருக்கின்றது. இங்கே செய்தி
ஆங்கிலம், பிரெஞ்சு, நோர்வேஜியன் subtitle உடன் முழுமையாக தமிழில் ஒலியமைப்போடும் தான் இது படமாக்கப்பட்டிருக்கின்றது. உரையாடலையும், சம்பவங்களையும் கோர்த்த நேர்த்தி, சுருக்கமான ஆனால் சுருக் ஆன பேச்சாடல்,Frank Alvegg இன் ஒளிப்பதிவு என்று எல்லாவற்றிலும் ஒரு சீரமைப்பு இருக்கின்றது இப்படத்தில்.
இயக்குனர் Beate Arnestad பற்றி Norwegian Film Institute இல், Beate Arnestad worked for many years and in many different positions at Norwegian broadcaster NRK, mainly in the divisions of culture and entertainment. Her first documentary was "Where the waves sing" (2002), tracing the life of a former painter and governor in the forgotten Danish-Norwegian colony Tranquebar in India.
While living in Sri Lanka from 2003 to 2006, she started exploring the concept of women in war, which turned into the film "My daughter the terrorist."She is currently starting work on a new documentary, this time based on recent African history.
Man International Film Festival இல் Best International Feature-length Document என்ற பிரிவில் இப்படத்திற்காக இயக்குனருக்கு விருது கிடைத்திருக்கின்றது. Norwegian Short Films Festival இல் Best Norwegian Documentary என்ற விருதும் இப்படத்திற்கு எட்டியிருக்கின்றது. மேலதிக விபரங்களுக்கு Snitt Film Production
ஏற்கனவே நடந்த கள நிலவரங்கள், யுத்த அனர்த்தங்கள் போன்றவற்றின் காட்சித் தொகுப்புக்களை வைத்துக் கொண்டு, களத்தின் சாட்சியங்களாக மூன்று பெண்களை வைத்துக் கொண்டு நம் தரப்பு நியாயங்களைக் கோடிட்டுக் காட்டுகின்றது. அதற்குப் பக்கம் பக்கமான வசனங்களோ, செயற்கையான காட்சிகளோ தேவை இருக்கவில்லை. நமது நிஜ வாழ்வில் நம் தமிழ் சமூகத்துக்கு அளிக்கப்பட்ட, அளித்து வரும் மோசமான பேரினவாத யுத்தமும் அதனால் பாதிக்கப்பட்ட இந்த மூன்று பெண்களுமே சாட்சியங்களாக அமைகின்றன.
"அவை சொல்றது, நல்ல ஒரு பிள்ளை, உங்கட பிள்ளை நல்ல ஒரு கெட்டிக்காரி எண்டு சொல்லிக் கொண்டிருக்கிறாங்கள்" பேசிக்கொண்டிருக்கும் தர்சிகாவின் தாய் முகத்தில் வெள்ளாந்தியான களை ஒட்டிக் கொள்ள, பார்க்கும் நமக்கு கண்கள் பனிக்கிறன. எமது தாய்மாருக்குத் தான் தம் பிள்ளைகளை மற்றவர்கள் உயர்த்திப் பேசும் போது அது கொடுக்கும் இன்பம் எவ்வளவு பெரியது என்பதை இந்தக் காட்சியின் களத்தையும் நெகிழ வைக்கின்றது.
"அவள் சேர்ச்சுக்குப் போவாளோ தெரியாது" என்று ஒரு காட்சியில் தர்சிகாவின் தாய் சொல்ல
பிறிதொரு காட்சியில்
"இப்ப மாதா இவ்வளவுக்காவது இப்பிடி இருக்கினம், ஆனா யுத்த காலத்தில வந்து மேரி மாதா வந்து இப்பிடி இருக்கேல்லை. தூள் தூளாத் தான் இருந்தவ, அப்படித்தான் எங்கட உறவுகளும் தூள் தூளாப் பிரிஞ்சிருந்தவை. இந்த நேரத்திலை நாங்களும் தனியத்தான் பிரிஞ்சிருக்கிறம், அதே நேரம் அவையளோட (தேவாலயத் திருவுருவச்சிலைகள்) நான் பேசிக் கொண்டிருப்பன், மனம் விட்டுக் கதைச்சுக் கொண்டிருப்பன். உங்களுக்கு நான் தொண்டு செய்ய நான் வரப்போறன் என்னை நீங்கள் ஏற்றுக் கொள்வீரா எண்டு நான் அவையளோட கதைச்சுக் கொண்டிருப்பன்"
யுத்த இடிபாடுகளுளோடு இருக்கும் தேவாலய முன்றலில் திருவுருவங்களுக்கு மத்தியில் தர்சிகா பேசிக்கொண்டிருக்கிறார். கை லேஞ்சியிலால் பொங்கும் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டே மடிக்கணினியின் திரையில் தன் மகள் பேசும் அந்தக் காட்சியை அவரின் தாய் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு நாள் இரவில் ஊரிழந்து நிர்க்கதியாகி இடம்பெயர்ந்த காலத்தில் இருந்து போராளியாக மாறிய நினைவுகளை மீட்கின்றார் போராளிப் பெண் புகழ்ச்சுடர்.
"பிறண்ட்ஷிப் எண்டிறத விட ஒராளின்ர இன்ப துன்பங்களில மற்ற ஆள் பங்கெடுப்பம், இந்த அணிக்குள்ளை இருக்கேக்க ஆளுக்காள் உதவியா இருப்பம், வேற ஒரு அணிக்குப் பிரிஞ்சு போறதுக்கும் பிரச்சனை இல்லை, போவம்" போராளிகளுக்கு இடையில் இருக்கும் நட்புறவுகள், களத்தில் நிகழும் விடங்கள் என்று காட்சிகள் மாறுகின்றன.
"சின்னப்பிள்ளையா இருக்கேக்க பள்ளிக்கூடம் போகேலாது, சேர்ச்சுக்குப் போகேலாது, எண்டேக்கை பிள்ளை வீட்டுக்கை தானே அடைபட்டுக் கிடக்குது அதல பிள்ளைக்கு விரக்தி, எனக்கு சுதந்திரமா எங்கேனும் இருக்கோணும் எண்டு" தன் பிள்ளையைக் களத்துக்கு அனுப்பிய பிரிவுத்துயர் இருந்தாலும் தர்சிகாவை நியாயப்படுத்துகின்றாள் தாய்.
"எத்தினையோ இழப்புகளுக்கு மத்தியில் தான் என்ர பிள்ளை இருக்குது, ஒரு தர்சிகா இல்லை ஆயிரம் தர்சிகாகள் இருக்கிறாங்கள் இருக்கிறாங்கள் எல்லாத்தையும் இழந்து கொண்டு
என்ர பிள்ளையைப் போல எத்தனையோ பிள்ளையள் கை காலை இழந்து, கண்களை இழந்து....
"பெரிய நன்றி..பெரிய சந்தோஷமாவும்... நேரடியாக கண்டமாதிரி இருக்கு
தர்சிகா, பழைய சம்பவங்களைச் சொல்லுறா........."
படப்பிடிப்பாளரின் மடிக்கணினியில் தோன்றிப் பேசிய தர்சிகாவைக் கண்ட அவரின் தாய் அன்ரனியாவின் கண்களில் நீராக நன்றிப்பெருக்கைக் காட்டியவாறே பேசுறா. ஆவணப்படம் முடியுது.
எங்கள் வீட்டில் காத்திருக்கும் எம் பிள்ளைகள்
அமிலி, டானியல், ஜோனாஸ், டட்விக், மிக்கெல் ஆகியோருக்கும்....
இலங்கையில் வீடே இல்லாத பிள்ளைகளுக்கும்...
இந்தப் படம் சமர்ப்பணம் என்று நிறைகின்றது. மனதில் பெரிய பாரம் ஏறிக்கொள்கின்றது.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்......
படங்கள் நன்றி: My Daughter the Terrorist திரைப்படத்தின் காணொளியில் இருந்து எடுக்கப்பட்டவை