கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி இணுவில் கிராமமே விழாக் கோலம் பூண்டு 40 ஆண்டுகள் கல்விச் சேவையை வழங்கி வரும் எம் அன்புக்குரிய ஆசிரியர் இரா அருட்செல்வம் அவர்களுக்குத் தன் நன்றியறிதலைப் பாராட்டு விழாவாக எடுத்துக் கெளரவித்தது. தன் கல்விச் செயற்பாட்டில்
அருட்செல்வம் மாஸ்டர் தலைமுறைகளை உருவாக்கியவர் அவருக்கான விழா மலருக்காக நான் பகிர்ந்த கட்டுரை இது
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இணுவில் கிராமத்தைத் தனித்துவத்தோடு அடையாளப்படுத்த ஆலயங்களும், தோட்ட நிலங்களும், தொழிற்சாலைகளும் இருக்குமாற் போல அருட்செல்வம் மாஸ்டர் வீடும் அதில் ஒன்றாகி விட்டது. அது போலவே இன்று நான்கு தசாப்தங்களாக அருட்செல்வம் மாஸ்டரும் பலருக்கு அடையாளத்தைக் கொடுத்தவர், இணுவிலின் அடையாளங்களில் ஒருவராக ஆகி நிற்கிறார்.
அருட்செல்வம் மாஸ்டரை எப்போது நினைத்தாலும் கண்ணுக்குள்ளை அவரின் சிரித்த முகமும், சோக்கட்டிகையின் சோக் தூள் படாத புறங்கையால் தலைமயிரை அவ்வப்போது வாரும் ஸ்ரைலும் தான் ஞாபகத்துக்கு வரும். கணித பாடத்தையும், விஞ்ஞான பாடத்தையும் சொல்லிக் கொடுப்பார். அது க.பொ.த.சாதாரண வகுப்பு வரை போகும். சோக்கட்டியால் அவர் கீறி விளக்கும் மனித உறுப்புக்களை கரும்பலகையில் பார்த்தால் ஏதோ ஓவியக் கண்காட்சி மாதிரி இருக்கும் அவ்வளவு அழகு.
அருட்செல்வம் மாஸ்டர் வீட்டு ரியூட்டறிக்கு A.T.C (Arul Tution Club)என்று என்னதான் பெயர்வச்சாலும் சனம் அந்தப் பெயரை எல்லாம் நினைப்பில் வச்சிருக்கவில்லை, அருட்செல்வம் மாஸ்டர் வீடு என்று தான் உச்சரிப்பார்கள். அருட்செல்வம் மாஸ்டர் அயற்கிராமங்களான மானிப்பாய், கொக்குவில் போன்ற பகுதிகளில் உள்ள ரியூட்டறிகளிலும் பாடம் சொல்லிக் கொடுத்தவர்.
அருட்செல்வம் மாஸ்டரின் ரியூட்டரியில் கொண்டாடும் வாணி விழா மறக்கமுடியாதது. ஒவ்வொரு வாணிவிழாவும் ஏற்படுத்திப் போன ஞாபகப்பதிவுகள் மிக அதிகம். சரஸ்வதி பூசைக்காலத்துக்கு ஒரு மாதம் முன்பே அருட்செல்வம் மாஸ்டர் ஆறாம் ஆண்டுமுதல் பதினொராம் ஆண்டு மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களில் பரீட்சை வைத்து முதன்மைப் புள்ளி பெறும் மாணவருக்கு வாணி விழாவில் பரிசு கொடுப்பார்.
ஒவ்வொரு தடவை ஊருக்குப் போனாலும் முதல் நாளிலேயே அவரின் தரிசனம் கிடைத்து விடும். “ஒருக்கால் எங்கட ரியூஷன் சென்ரர் பக்கம் வாரும்” என்பார். தகர ஓலையால் வேயப்பட்ட கட்டடங்களுக்குள் நீளப்பலகை வாங்குகளில் கொட்டமடித்துக் கொண்டிருக்கும் மாணவக் குருத்துகளைப் பார்க்கும் போது அந்த அழகிய பழைய காலத்துக்குப் போய் விடும் மனசு. அருட்செல்வம் மாஸ்டர் புதிது புதிதாகத் தன் ரியூஷனுக்குச் செய்த அபிவிருத்திகளைக் காட்டி மகிழ்வார். தன்னுடைய கல்விநிறுவனத்தை இத்தனை ஆண்டுகளும் தனி ஆளாகக் கட்டி எழுப்பியதோடு அதைத் தன் பிள்ளை போலப் பெருமை பேசும் பூரிப்பு அவர் முகத்தில் தொனிக்கும்.
கடந்த தடவை ஊருக்குப் போன போது, ஒவ்வொரு மாதமும் போயா விடுமுறை தினத்தில் மாணவருக்கான கலைத்திறன், பொது அறிவுத் திறனை வளர்க்கும் பாங்கில் அவர்களை வைத்து நிகழ்த்தப்படும் ஒன்றுகூடலின் பூர்வாங்க நிகழ்ச்சிக்குப் போனேன். ஒரு விடுமுறை தினத்தைக் கூடத் தன் மாணவர்களுக்காகவே ஒதுக்கும் இவ்வளவு தன்னலமற்ற சிந்தனையை மனசுக்குள் பாராட்டினேன்.
பகல் முழுதும் ஆடி ஓடிப் படிப்பித்த களைப்பைத் தாண்டித் தன் இரவு நேரத்தையும் ஒதுக்கி விடுவார் பாடத்தில் ஏதும் சந்தேகம் இருந்தால்அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அவரைத் தேடி வரும் மாணவர்களுக்காக.
ஆசிரியத் தொழில் கடவுள் பணிக்கு நிகரானது என்பதை அனுபவ ரீதியாகக்கண்டது அருட்செல்வம் மாஸ்டரிடம் தான். தன்னுடைய வாழ்நாளில் மாணவர் நலனைப் பற்றிச் சிந்திக்காத நாளில்லை எனலாம்.
இன்று மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக, கணினித்துறை வல்லுநர்களாக, கணக்கியலாளர்களாக அடையாளப்பட்டோர்களைத் தாண்டி“மனிதர்களாக” அவர்களை வளர்த்தெடுத்தவர் எங்கள் அருட்செல்வம் மாஸ்டர்.
எங்கள் அருட்செல்வம் மாஸ்டர் என்றென்றும் தன் தனித்துவமான வாழ்க்கை நெறியிலும், ஆசிரியப் பணியிலும் எந்த விதமான இடையூறும் இன்றித் தொடர, அவர் ஒவ்வொருநாளும் தன் கடமைக்கு முன் வணங்கித் தொழும் எல்லாம் வல்ல ஶ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் பெருமானை வேண்டுகிறேன்.
என்றும் பாசத்துக்குரிய
பிரபு (கானா பிரபா)
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இந்த நிகழ்வில் அருட்செல்வம் மாஸ்டரின் வீட்டில் இருந்து இணுவில் பொது நூலகம் வரையான நடை பவனியைச் சுடச் சுடப் பகிர்ந்த சகோதரன் Arulmurugan Sabesan இன் பேஸ்புக் இல் காணக் கிடைக்கும் படங்கள்.
https://www.facebook.com/100009870542216/posts/721425918196420/
இரா.அருட்செல்வம் ஆசிரியரின் விழா நிகழ்வை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கும் சகோதரன் Vathsangan Piraba பகிர்ந்த படங்கள்
https://www.facebook.com/100002386153079/posts/1849992365090284/