“பூத்த கொடி பூக்களின்றித் தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது
ஆலமரம் வேர்கள் இன்றி அலைகின்றது
அந்திமத்தில் யாருமின்றி அழுகின்றது”
அவலச் செய்திகள், அழுகுரல்கள், அதுவரை உறுதியோடிருந்தவர்களின் உடைந்த குரல்கள் என்று இரண்டாயிரத்து ஒன்பதில் தாயகத்தில் இருந்து வந்து கொண்டிருந்த செய்திகளை மன அவஸ்தையோடு உள்வாங்கி அதை வானலை வழியே கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய இக்கட்டான சூழலில் இந்த “பூத்த கொடி பூக்களின்றித் தவிக்கின்றது”
https://youtu.be/k3uI17kOiFk
பாடல் தான் வானொலி அறிவிப்புகள் ஓயும் போது ஓலமாக எழும். இந்தப் பாடல் அதுவரை வந்து கொண்டிருக்கும் செய்திகளையும், எதிர்வரப் போகும் அநர்த்தம் மிகுந்த நிகழ்வுகளையும் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. இந்தப் பாடலைத் தவிர வேறெதையுமே அந்தச் சூழலில் கொடுக்க முடியாது திரும்பத் திரும்பச் சுழன்று இதே பாடலில் மையம் கொண்டு பாடிக் கொண்டிருந்தது.
இதோ இந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்தவரும் நேற்றோடு காற்றாய்ப் போனார்.
அப்படி என்ன அவசரம் என்று மனசுக்குள் திட்டிக் கொள்வேன் உற்றார் உடன் பிறந்தோர், நண்பர் என்று மிக நெருக்கமான உறவுகள் நம்மை விட்டு நிரந்தரப் பிரியாவிடை கொடுக்கும் போது. பாடகர் சாந்தன் இறந்த போதும் அப்படித்தான் திட்டினேன் இதோ இப்பொழுது யாழ் ரமணன்.
அதுவும் ஆறாம் திகதி பிறந்த நாள் கொண்டாடி விட்டு மூன்று நாள் கழித்து இறந்து போவதில் அப்படி என்ன பிரியம்?
என்னுடைய நண்பர் ஒருவர் சொல்வார் “எங்களுடைய ஈழத்துக் கலைஞர்களுக்குத் தங்களை விற்கத் தெரியாது” என்று. அதனால் தான் எம்மவர் அதிகம் கலைத்துறையையே தம் முழு நேரத் தொழிலாகக் கொண்டதில்லை. ஆனால் தாம் கொண்ட கலை மீதான பயபக்தி அது தொழில் பக்தியையும் மீறி ஆட்கொண்டிருக்கும். அப்படியானதொரு கலைஞன் தான் யாழ் ரமணன். இவர்கள் வாத்திய வாசிப்பில் மூலப்பாடலின் அச்சொட்டான நகலே அவர் தம் பெருமையைச் சொல்லி வைக்கும். அதுதான் இந்தக் கலைஞருக்குக் கிட்டும் ஆகக் கூடிய விளம்பரம்.
“ஓ மரணத்த வீரனே
உன் சீருடைகளை
எனக்குத் தா
உன் ஆயுதங்களை
எனக்குத் தா...”
சிறு பையன்களாக இருந்த காலத்தில் இயக்க அண்ணாமாரின் அறிமுகத்தோடு இந்தப் பாடலும் புழக்கமானது. இந்தப் பாடல் எங்கள் தமிழின
விடுதலைப் பாடல்களின் ஆதிப் பாடல்களில் ஒன்று. பின்னாளில் நவீன தொழில் நுட்பத்தில் இதே பாடல் மீளிசைக்கப்பட்ட போது இரண்டாவது வடிவம் பிறந்தது. முன்னது சற்று வேகம் கூடியது https://youtu.be/3ZeLlcvUMBw
பின்னது நிதானமாக போர்க்களத்தில் சரிந்திருக்கும் தன் சகாவின் இழப்பில் இடிந்து போய் ஆனால் நிலை தளராமல் மீண்டெழுந்து பாடுவது போல
https://youtu.be/DbjeN8yZseM
மாறியிருக்கும். இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே அந்த “ஓஓஓஓ” எனும் நிலை தளரா ஒலி அசரீரியாகக் கேட்பது போல ஒரு பிரமை.
இது நாள் வரை மாவீரர் பாடலாக ஒலித்தது இன்றிலிருந்து மேலதிகமாக ராஜனையும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கப் போகிறது.
“ராஜன்ஸ் இசைக்குழு” என்று மெல்லிசை மேடைக் கச்சேரிகள், பாட்டுக்குப் பாட்டு இசைப் போட்டிகள், தமிழீழத் திரைப்படங்கள், எழுச்சிப் பாடல்களின் இசையமைப்பாளர் என்று மக்கள் இசைக் கலைஞனாக வலம் வந்தவரும் போய் விட்டார்.
ஆற்றினிலே நீருமில்லை
ஆதரிப்பார் யாருமில்லை
நேற்றிருந்த சொந்தமெல்லாம்
நேரினிலே இன்று இல்லை
கானா பிரபா
10.08.2018
0 comments:
Post a Comment