“எந்த நேரம் பார் கொம்மாவின்ர
சீலைத் தலைப்பைப் பிடிச்சுக் கொண்டிருக்கிறாய்
நீயும் தாய்க்குடும்பம் போல வரப் போறியோ”
அம்மாவுடன் செல்லம் பொழிஞ்சு கொண்டிருக்கிறதைக் கண்டு ஆச்சி இப்பிடிச் சொல்லுவா எனக்கோ கெட்ட கோவம் வரும்.
“சும்மா போணை ஆச்சி தாய்க்குடும்பம் கீக்குடும்பம் எண்டு சொன்னீங்களெண்டால் பாக்குரலை எடுத்து ஒளிச்சு வச்சுடுவன் பாருங்கோ”
ஆச்சி பாக்கு உரலை இடித்து இடித்துப் பொக்கை வாய் கொள்ளாமல் சிரிப்பா.
கே.பி.சுந்தராம்பாள் போலப் பக்திப் பழமாக நெற்றியில் மூன்று குறி திருநீற்றுப் படை, அரைக்கை நீளும் பிளவுஸ், தோச்சுச் தோச்சுப் பிள்ளையார் கோயில் கொடிச் சீலை போல நைய்ந்து போன சேலை, காது இரண்டும் கல்லுப் போன கடுக்கன், அறுபதைக் கடந்த வயசு, இவற்றின் மொத்த உருவம் தாய் என்றால் மகன்காறன் வேற மாதிரி.
மேற் சட்டையே கண்டறியாத உடம்பின் இடுப்பில் வேட்டி மாதிரி ஒரு வஸ்திரம், அஞ்சு கிலோ கொள்ளக் கூடிய குண்டான் பாத்திரம் போல வீங்கி வெடித்த வயிறு, மூன்று குறி நீறும் வெள்ளத்தில் அடிபட்டது போலக் கலைந்த நெற்றி, தன் பாட்டுக்கு வளர்ந்த கேசம், எவ்வளவு துள்ளினாலும் விழாத செவ்வரத்தம் பூ வச்ச காது என்று மகன்காறன் ராசு. முகத் தாடை மட்டும் ஷேவிங் செய்து பழிச்சென்று தில்லானா மோகனாம்பாள் சிவாஜி மாதிரி இருக்கும். யாரோ பாவித்து எறிந்த பிக் றேசர் ஐ எடுத்து வந்து தாய் தான் மகன் காரனுக்கு முகச் சவரம் பண்ணி விடுவாள்.
பழைய பொண்ட்ஸ் பவுடர் டப்பாக்களும், கை, கால் உடைஞ்ச பொம்மைகளும், சில்லுப் போன விளையாட்டுக் கார்களுமாக ஒரு பழைய உரப் பை முழுக்கக் கொட்டிக் காவிக் கொண்டு, தாயிந் சேலைத் தலைப்பை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, தாய் போற தேசமெல்லாம் பின்னால் போவான் ராசு.
“டேய் தாய்க் குடும்பம் வருகுதடா
தாய்க் குடும்பம் வருகுதடா”
குச்சொழுங்கையில் குறுக்காக விளையாடிக் கொண்டிருக்கும் பெடியள் இவர்களைக் கண்டால் ஒரு எச்சரிக்கை ஒலி கொடுத்து விட்டு ஓடி ஒளித்து விடுவனம்.
“என்னடா தம்பி ஒழுங்கைப் பக்கம் சனம் சாதியில்லை” என்று தாய் முணு முணுக்க
“ஓமணை.... ஓமணை...” என்று அசட்டுச் சிரிப்போடு
உரப் பையை இழுத்துக் கொண்டு போவான் ராசு.
“பொடார்....” என்று ஒரு சத்தம் கேட்கும்.
பெடியள் ஓடி ஒளிச்சிருந்த மூலையில் இருந்து கல்லொன்று வந்து ராசுவைப் பதம் பார்க்கும். சில சமயம் அவன் காவிக் கொண்டு வரும் உரப் பையில் பொத்தொன்று பட்டு விழும்.
“ஐயோ...என்ரை அம்மய்ய்
என்னக் கொல்லுறாங்களணை....”
ராசு புழுதி நிலத்தில் விழுந்து கீச்சுக் குரலில் கத்தத் தொடங்குவான்.
“அழாதையடா தம்பி..
என்ர குஞ்செல்லே
இளந்தாரிப் பெடியன் நீ
இப்பிடிக் குழந்தை மாதிரி
அழுது கொண்டு...”
தாய்க்காறி தன் சேலைத் தலைப்பை எடுத்து அவன் கண்களைத் துடைத்து விடுவாள். வேலிப் பக்கம் இருந்து சிரிப்புச் சத்தம் கும்பலாகக் கேட்கும் இது நடக்குமென்று ஏற்கனவே திரைக்கதை எழுதி வைத்துக் காத்திருக்கும் வாண்டுக் கூட்டங்கள்.
சந்திப் பக்கம் மிதக்கும் போது இரண்டு பக்கமும் பார்த்துப் பார்த்து மிரண்டு மிரண்டு தாயும் மகனும் ஒவ்வொரு அடியாக மெல்ல மெல்ல வைத்தாலும்
அவர்கள் எதிர்பார்த்த விபரீதம் நடந்து விடும்.
சைக்கிளில் வரும் இளந்தாரிப் பெடியளில் பாரில் இருந்து பங்கு போட்டு வருபவன் ராசுவின் பின் பக்கமாகத் தொங்கிக் கொண்டு போகும் உரப் பையை இழுத்து விழுத்துவான், சிரித்துக் கொண்டே சைக்கிள் வேகமெடுக்கும்.
உடைந்த கை கால் இல்லாத பொம்மை, பவுடர் பேணி, சில் இல்லாத கார் எல்லாம் திக்கொன்றாய்ச் சிதறும்.
“ஐயோ என்ரை அம்மாய்ய்..
இஞ்சை பாரணை...”
விழுந்து குளறத் தொடங்குவான் ராசு.
தாய்க்குடும்பம், ஊரில் இருக்கும் நண்டு சிண்டுகளில் இருந்து இளந்தாரிப் பெடியள் வரை வேடிக்கை விளையாட்டுப் பொருளாகவும், ஊர்ச் சனம் சாதி ஒருவர் விடாமல் கேலிப் பொருளாகப் பார்க்கப்பட்டவர்கள்.
கந்தசாமி கோயிலின் முன் மடத்தின் ஒரு மூலையில் தான்உடு துணி ஈறாக ஒரு பையில் போட்டு வைத்திருக்கும்தாய்க்குடும்பம். யாரும் அதைச் சீண்ட மாட்டார்கள் என்றதுணிவு வேறு. அந்த ஒரு துண்டு நிலத்தடியில் தான் படுத்துறங்குவினம். தாயின் சேலைத் தலைப்பை எடுத்து முகத்தை மூடிக் கொண்டு செல்லம் பொழிந்து கொண்டு நித்திரைக்குப் போவான் ராசு.கோயில் துலாக்கிணறில் தாயும் மகனுமாக அள்ளிக் குளித்து விட்டு அதிலேயே உடுப்பையும்பிழிஞ்சு காயப் போட்டு மாற்றுவார்கள்.
கோயில் நைவேத்தியம் என்று ஐயரின் பங்கு போக ஏதாவது நேர்த்திக்கடன் நேரம் யாரும் கொடுக்கும் குழைசாதம் பெரு விருந்தாகக் கிட்டும். ஊரில் கலியாண வீடுபூசை வீடு நடந்ததாலோ மிஞ்சினது கிஞ்சினதுகிட்டினாலோ அதுவும் இவர்களின் கணக்கில் வரவுவைக்கப்படும்.
காலையில் நடக்கத் தொடங்கினால் ஒவ்வொரு குச்சொழுங்கை தாண்டி நாள் குறிச்சு வச்சது போல இடம் மாறி ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வீடு கணக்காக எட்டிப் பார்த்து விட்டு மீண்டும் கோயிலடிக்கு வருவினம் இரண்டு பேரும்.
இந்த உலகம் எவ்வளவு விசித்திரமானது பாருங்கள். சமூகத்தில் கேலிப் பொருளாகப் பார்க்கப்படும் சக மனிதர்கள் அதே சமயத்தில் ஆபத் பாந்தவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். தாய்க்குடும்பமும் அதே மாதிரித் தான்.
“இஞ்சை கூய்...கூய்.. தாய்க்குடும்பம்!
ஒருக்கால் வந்துட்டுப் போ”
என்று வரும் குரல் கேட்கும் திசையைப் பார்ப்பினம்.
“நான் ஒருக்கால் செத்த வீடு ஒண்டுக்கு எட்டிப் பார்த்துட்டு வாறன் உவள் பெரிய பிள்ளை வீட்டில இருந்து ஓ எல்லுக்குப் படிக்கிறாள் கொஞ்சம் காவல் நில்லணை” என்று வரும் ஆணைக்குக் கட்டுப்பட்டு குமருக்குக் காவலாக வெளிக் குந்தில் சம்மணம் போட்டு இருந்து யோசிச்சுக் கொண்டிருப்பினம் தாயும், மகனும்.
“இஞ்சை வா பெடி!
நாலு உலக்கை போட்டால் எள்ளுருண்டை தருவன்”
வீட்டு முற்றத்தில் உரலை இடிக்கும் குரலைக் கேட்டு ராசு ஓடுவான் தன் உரப்பையோடு.
இளைச்சு இளைச்சுத் தாய்க்காறியைப் பார்த்துச் சிரித்துச் சிரித்து உலக்கை போடுவான். தன் பிள்ளை உலக்கையை வச்சுச் செய்யும் வேடிக்கை விநோதங்களைப் பார்த்துக் கொக்கெட்டம் விட்டுச் சிரிப்பாள்.
“இஞ்சை கொண்டாணை நான் கல்லுப் பொறுக்கிறன்” என்று சுழகை உரிமையோடு பறித்துத் தாய் பங்கு போடுவாள்.
கொஞ்சம் தள்ளி நடந்தால்
“இஞ்சை வா தாய்க்குடும்பம்
என்ன புதினம் சொல்லு”
வீட்டுக் குந்தில் இருந்து பேன் ஈர் வலியால் இழுத்து இழுத்துப் பேன் பார்த்துக் குத்திக் கொண்டிருக்கும் பெண்டுகளுக்கும் கதை குடுக்கோணும்.
இந்தியன் ஆமிக்கும் பெடியளுக்கும் சண்டை மூண்டுட்டுதாம். சனமெல்லாம் அரக்கப் பரக்கக் கந்தசாமி கோயில் பக்கம் ஓடுது.
“தம்பீ! இஞ்சை வாடா இண்டைக்கு ஒரு இடமும் போகேலாது கோயிலுக்குத் தான் சனம் வருகுது அங்கை இங்கை போகாமல் என்னோட இரு”
தாயின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து குந்திக் கொண்டு வாற சனத்தை வேடிக்கை பார்த்தான் ராசு.
பின்னேரத்துக்குள் கோயில் நிரம்பி தாய்க்குடும்பத்தின் சின்னத்துண்டு நிலத்திலும் ஆக்கிரமித்து விட்டது ஒரு குடும்பம்.
“அங்காலை போய் இருங்கோ” என்று கேட்டுக் கேள்வி இல்லாமல் மூலையில் கிடந்த உடுதுணிப் பையையும் தடியால் தட்டி எறிந்து விட்டுப் போனான் ஒருத்தன்.
இரண்டு கிழமையாய் கோயிலே தஞ்சம். ஷெல்லடியும், துவக்குச் சத்தமுமாக மளார் மளார் சக்கு சக்கு என்று அடை மழையையும் தாண்டிச் சத்தம் வெடிக்குது. இன்னும் கிட்டக் கிட்டக் கேட்கிற மாதிரித் தெரியுது.
ஆமிக்காறர் இடத்தைப் பிடிச்சிட்டாங்கள். சுற்றி வளைப்பு நடக்குதாம். ஈபிக்காறரை வச்சுத் தலையாட்டி ஆட்களைப் பிடிக்கினமாம். சனம் குசு குசுக்குது.
இண்டைக்குப் பின்னேரம் இந்தியன் ஆமிக்காறர் கந்தசுவாமி கோயில் வந்து விசாரிக்கினமாம். ஐயோ என்ன நடக்கப் போகுதோ? பெடி பெண்டுகளைத் தங்கள் சேலைத் தலைப்புக்குள் சுற்றிக் குழந்தைகளாக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கினம் தாய்மார்.
தங்கள் சொந்த இடத்தில் இருந்து விரட்டப்பட்ட தாய்க்குடும்பம் ஆறுமுக சாமி வாசலில் இருந்து வேடிக்கை பார்க்குது.
வெள்ளைக் கொடி ஒன்றைக் கிளுவந்தடியில் கட்டி அதை ஒரு கையிலும், மகாத்மா காந்தி படத்தை இன்னொரு கையிலும் காட்டிக் கொண்டு ஆமிக்காறரை வரவேற்கிறார் சிற்றூரவைத் தலைவர் சிவலிங்கம்.
“எல்லா ஆம்பிளைப் பெடியளும் பெட்டையளும் இங்கை வாங்கோ”
லவுட்ஸ்பீக்கரில் அறிவிப்பு வருகுது. புதினம் பார்ப்பம் என்று ராசுவும் வெளிக்கிடத் தாய் தடுக்கிறாள்.
“தம்பி அங்கை போகாதை நீ சின்னப்பிள்ளை”
“சும்மா போணை நீதானே சொன்னனீ நான் இளந்தாரி எண்டு” என்று தாய்க்குப் போக்குக் காட்டி விட்டுப் எட்டிப் பார்க்கிறான்.
“டேய் இங்க வா” - தலையாட்டி
“நானோ ஐயா” - ராசு
“ஓமோம் நீ தான்
உனக்கு எல்ரீரீஈ ஆயுதங்களை எல்லாம்
எங்க ஒளிச்சு வச்சிருக்கிறாங்கள்
எண்டு தெரியுமோ?
“நான் நினைக்கிறன் வைரவ கோயில் கிணத்துக்குள்ளை காட்டினால் என்ன தருவியள்?”
“நீ காட்டு பிறகு பார்ப்பம்” தலையாட்டி அவனைக் காட்ட ஹிந்திக்காரும் சீக்கியரும் புடை சூழ வைரவர் கோயில் கிணத்தடிக்குப் போயாச்சு.
பாழ் கிணறு கழுவி எடுக்கிற மாதிரி கிணறை ஒட்ட இறைச்சுத் தேடித் தேடிப் பார்த்தாச்சு. வெறும் கஞ்சல் குப்பை தான் வருகுது. ஆத்திரத்தோட கயிற்றுப் பிடியில் மேலே வாறாங்கள் ஆமிக்காறர். வந்த வேகத்தில் ஒரு குத்து சட பிட சட பிட என்று அடி விழுகுது ராசுவுக்கு.
“பொய் சொல்றியா விசரா?” இந்தியன் ஆமியின் எடுபிடி தலையாட்டி தனக்கு வர வேண்டிய அடியை அவன் மீது திருப்பி விடுகிறான்
தார் ரோட்டில் நசுங்கீய தக்காளி மாதிரிச் சிதைந்து போனவன் அனுங்கி அனுங்கித் தாயிடம் போகிறான்.
“ஐயோ என்ரை குருத்தைச் சிதைச்சுட்டாங்களே”
தாய்க்காறி தலையில் அடிச்சுக் கொண்டு அழுதுதழுது
தன் சேலையைக் கிழித்து, வெளிப்பிரகாரத் தீப விளக்கில் ஒற்றி ஒற்றிக் கட்டினாள்.
“உன்னை எல்லோ அங்கை போகாதை எண்டு சொன்னனான் பாத்தியே தம்பி” அவனோடு சேர்ந்து அழுகிறாள்.
தாய்க்கு ஒரே வயித்தால அடி, அனுங்கிக் கொண்டு கிடக்கிறாள். சுகாதாரம் இல்லாமல் கோயில் பக்கமெல்லாம் சனம் தங்கட உயிர் பிழைச்சால் போதுமென்று கிடக்குது. தன்ர தாய்க்கு ஏதோ நடக்குது என்று மட்டும் ராசுவுக்குத் தெரியும் கேட்க நாதியில்லை.
“அம்மா எழும்பணை அம்மா எழும்பணை”
வழமையாகத் தாய்க்காறி தான் எழுப்புவாள். இண்டைக்கேன் இவ என்னை எழுப்பேல்லை என்று ராசுவுக்கு ஒரே புதினம். ராசு கத்துற கத்தில பனையேறுற தங்கன் தான் ஓடி வந்து எட்டிப் பார்க்கிறான்.
“கொம்மா செத்துப் போனாவெடா” தங்கன் ராசுவைக் அணைத்து ஆறுதல் படுத்தப் பார்த்தான்.
“ஐயோ என்ரை அம்மோய் உன்னோட தானே நான் எங்கையும் வாறனான் இப்ப தனியா என்ன செய்வனணை இனி நான் ஆமிக்காறரிட்டைப் போகமாட்டன் எழும்பணை எழும்பணை” என்று கத்திய அவனை ஓரமாகத் தள்ளி வைத்து விட்டுத் தங்கனும் மகனுமாகப் பிரேதத்தைப் பள்ளிக்கூடப் பக்கம் கொண்டு போய்ப் புதைக்கிற வேலையைப் பார்க்கினம்.
அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் ஏன் பிறகு ராசுவையே கோயில் பக்கம் காணேல்லை. அவனின்ர உரப்பையும் ஆறுமுகசாமி வாசலில் கொஞ்ச நாள் அப்படியே கிடந்தது. அதையும் தூர வீசி விட்டார்கள்.
ராசு எங்கே போனான் இன்னும் இருக்கிறானா இல்லைச் செத்துப் போனானோ ராசுவுக்குத் தான் தெரியும்.
📋
கானா பிரபா
09.08.2018
0 comments:
Post a Comment