இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உலகளாவிய புகழ் கொண்டு முன்னணி வானொலி நிலையமாகத் திகழ்ந்த போது அதனைக் கட்டியெழுப்பிய சிற்பிகள் பலர் நம் காதுகளுக்குள் உறவாடும் குரல்களாகவும், வானொலியின் இயக்கத்துக்குப் பின்னணியில் இயங்கியவர்களாகவும் அமைந்து விளங்கினர்.
இவர்களில் பெரும்பாலானோர் 83 இனக் கலவரத்துக்குப் பின்னர் மெல்ல மெல்ல நாடு தாண்டி உலகின் பல்வேறு கரைகளைத் தொட்ட போது அவுஸ்திரேலியாவும் சில ஆளுமைகளை வாரிக் கொண்டது.
அந்த வகையில் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் அமரர் சுந்தா சுந்தரலிங்கம், அமரர் காவலூர் இராசதுரை, அமரர் பொன்மணி குலசிங்கம் மற்றும் நம்மிடையே வாழ்ந்து வரும் திருமதி பாலம் லஷ்மணன் அம்மா, எஸ்.எழில்வேந்தன் ஆகியோரோடு இன்னொரு மூத்த ஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் அம்மாவையும் குறிப்பிட வேண்டும்.
எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களின் தலைமையில் சிட்னியில் ஒரு இலக்கியச் சந்திப்பை ஏப்ரல் 7 ஆம் திகதி 2007 இல் நடத்தினோம். அந்தச் சந்திப்பின் முக்கிய நிகழ்வாக அந்த ஆண்டு 75 வது அகவையை திரு காவலூர் ராசதுரை அவர்கள் பூர்த்தி செய்யும் தருணம் கெளரவிக்க வேண்டும் என்று அவருக்கே தெரியாமல் இரகசிய ஒழுங்குகளை திரு முருகபூபதி அவர்கள் செய்து வைத்திருந்தார்.
அந்த நிகழ்வில் கலந்து கொண்டு வானொலிக்கால இனிய நினைவுகளை மீட்டினார். http://www.madathuvaasal.com/2014/10/blog-post_15.html
2007 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் திகதி திருமதி ஞானம் இரத்தினம் அவர்களைச் சந்திக்க்கிறேன். நீண்டதொரு உரையாடலின் பின் தன்னுடைய அனுபவப் பகிர்வு நூலான “The Green Light” ஐயும் அன்போடு தந்து வழியனுப்பினார்.
திருமதி ஞானம் அவர்கள் ஒரு வழிகாட்டி அறிவிப்பாளராகவும், மக்கள் சேவையாளராகவும் தன்னுடைய வானொலிப் பணியை முன்னெடுத்தவர் என்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முதன்மைத் தலைவர் மற்றும் இயக்குநர் நாயகம் (chairman) பொறுப்பேற்ற திரு நெவில் ஜெயவீர குறிப்பிட்டிருக்கிறார்.
ஏராளம் அரிய தகவல்கள், புகைப்படங்களோடி தன் வானொலி வாழ்வியலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வரலாற்றோடு இணைத்து திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் எழுதியிருக்கிறார். படிக்கும் போது இது சுய புராணமாக அன்றி இலங்கை வானொலியின் வரலாற்றுப் பதிவாகவே அமைகின்றது.
“The Green Light” நூலைத் தான் உருவாக்க ஏதுவாக 1998 இல் இலங்கை வானொலியில் ஊடகர் திரு இளையதம்பி தயானந்தா அவர்கள் தன்னிடம் எடுத்த வானொலிப் பேட்டியைத் தொடர்ந்து இந்த அனுபவங்களை ஆவணமாக்குங்கள் என்று தன்னை வேண்டியதாகத் திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். “The Green Light” நூல் குறித்த முழுமையான பகிர்வைப் பின்னர் பகிர்கிறேன்.
திருமதி ஞானம் இரத்தினம் குறித்து பெருமதிப்புக்குரிய ஊடகர் பி.விக்னேஸ்வரன் P Wikneswaran Paramananthan அண்ணாவின் பகிர்வையும் இங்கே தருகிறேன்.
இலங்கை வானொலி பல திறமைமிக்க ஒலிபரப்பாளர்களின் கடின உழைப்பால் புகழ்பெற்ற ஒரு ஸ்தாபனம். இலங்கை வானொலி தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய சேவையும் அதனால் அது அடைந்த பிரபல்யமும் கௌரவமும் மிகப் பெரியது. இதில் ஆண்களின் பங்கு அதிகமென்றாலும் சில பெண்களும் மிக முக்கிய பதவிகளிலிருந்து அரும்பணியாற்றியிருக்கிறார்கள். எண்ணிக்கையில் மிகக் குறைவென்றாலும் இவர்கள் இலங்கை ஒலிபரப்பு வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அந்த மிகக்குறைந்தளவான அதிகாரிகளில் திருமதி. ஞானம் இரத்தினமும் ஒருவர்.
பட்டப்படிப்பின் பின்னர் இலங்கை வானொலியின் கல்விச்சேவையில் தயாரிப்பாளராகச் சேர்ந்த ஞானம் இரத்தினம் அவர்கள், நான் பணிக்குச் சேர்ந்த 1970ஆம் ஆண்டில் வானொலி மஞ்சரிக்குப் பொறுப்பான ஆசிரியராக இருந்தார். பின்னர் தேசியசேவையின் தமிழ்ப்பிரிவுத் தலைமைப் பொறுப்பையேற்ற அவர், ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிர்வாகக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டபோது இயல், நாடகப் பிரிவின் கட்டுப்பாட்டாளராகப் பதவியேற்றார். தொடர்ந்து, தமிழ்ச்சேவை ஒன்றுக்குப் பொறுப்பான மேலதிக இயக்குனராப் பதவிவகிக்கும்போது, இலங்கையில் தேசிய தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட, மலேஷியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புப் பயிற்சிபெற்ற அவர், ரூபவாஹினியின் அனைத்துப் பொது நிகழ்ச்சிகளுக்கும் பொறுப்பான இயக்குனராகப் பதவியேற்றார். தமிழ்ப்பிரிவு இவரது நேரடிக் கண்காணிப்பில் இருந்தது. அப்போது அவரின் நெறிப்படுத்தலிலும் ஆலோசனைகளுக்கமையவும் நான் பணியாற்றினேன்.
அவர் எந்தப்பிரச்சினைகளையும் கையாளும் விதம் எனக்கு வியப்பூட்டும். சிந்தனைத் தெளிவுமிக்க பெண்மணி. தாயுள்ளம்கொண்ட அவர் கடிந்து பேசமாட்டார். தமிழிலும் ஆங்கிலத்தலும் மிகுந்த புலமைபெற்ற அவர், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும்போது, ஆங்கிலம் ஓர் இலகுவான மொழிபோல் எமக்குத் தோன்றும். தமிழ்போலவே ஆங்கிலத்திலும் இலகுவான நடையில், தங்குதடை ஏதுமின்றிப் பேசும் அவர், 1983ஆம் ஆண்டுக் கலவரத்தின் பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து சிட்னியில் வசித்து வந்தார்.
ஜுலை மாதம் 17ஆம் திகதி,2021 அவருக்கு 92ஆவது பிறந்தநாள் நிகழ்வை அவரோடு இணைந்து பணியாறிய ஊடகர்களோடு அதே நாளில் கொண்டாடி மகிழ்ந்தோம். அதன் காணொளி
https://www.youtube.com/watch?v=iRIaKfQwl9I
திருமதி ஞானம் இரத்தினம் அவர்களின் ஆன்மா சாந்தியடையவதாக.
புகைப்படம் நன்றி: மூத்த ஊடகர் பி.விக்னேஸ்வரன் அவர்கள்.
கானா பிரபா
26.03.2022