எனக்குக் கிரிக்கெட் பார்ப்பதை விட, கிரிக்கெட்டைப் பார்ப்பவர்களைப் பிடிக்கும். பால்ய நாட்களில் அப்படியான வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்களோடு தான் வாழ்ந்தேன். ஒரு கையடக்க வானொலியைக் (Pocket Radio) காதுக்கு அருகே வைத்து, இன்னும் அதை உள்ளே தள்ளிக் கொண்டு உன்னிப்பாகக் கிரிக்கெட் போட்டியை அணுஅணுவாக ரசிக்கும் அண்ணன்மார்கள். அதுவும் எங்கோ பல மைல் தொலைவில் நடக்கும் விளையாட்டின் விறுவிறுப்பைத் தங்கள் உடலில் அப்படியே இறக்கிக் கொண்டு, இருப்புக் கொள்ளாது வீட்டு முற்றத்தின் எல்லாப் பரப்புகளையும் அளந்து கொண்டே நடந்தும், குதித்தும் ஸ்கோர் விபரங்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் அவர்களைப் பார்ப்பதே புதினமாக இருக்கும்.
தூரதர்ஷனை நம்பி அன்டெனாவைத் திருப்பித் திருப்பிப் பாயாச அலைகளுக்குள் புள்ளியாய் தெரியும் வீரகளை உன்னி உன்னிப் பார்த்துச் சலித்து விட்டு மீண்டும் ட்ரான்சிஸ்டரே கதி என்று அடைக்கலமாகிவிடுவார்கள் அந்த அண்ணன்மார்கள்.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ஒரு நடிகன், நடிகை போஸ்டரை அந்த அண்ணன்மாரின் வீடுகளில் பார்க்க முடியாது. புத்தம் புதிய Sportstar magazine ஐ வாங்கிய கையோடு அதை அப்படியே கொஞ்சி விட்டு முழுக்க முழுக்க எழுத்துக் கூட்டிப் படித்து விட்டு நண்பர் வட்டாரத்தில் ஒரு சுழற்சிக்கு வாசிக்கக் கொடுத்து விட்டு அந்த அட்டைப் படத்தில் இருக்கும் தம் நாயகர்களை அப்படியே சுவற்றில் ஒட்டி விடுவார்கள். இந்த சஞ்சிகைக்காரரும் தனி நீள வர்ணப்படங்களை இதற்காகவே இணைத்தும் விடுவார்கள். சுவர் முழுக்க கபில்தேவ் வகையறாக்காள் தான். அந்த எண்பதுகளின் இறுதிப் பகுதிக்கு முந்திய காலகட்டம் எல்லாம் இலங்கையின் தமிழர் பகுதி என்றால் இந்திய அணி ஆதரவளர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டிருந்தது.
அதனால் தான் இந்தியா தோற்றால் “உங்கள் அணி தோற்று விட்டது” என்ற எள்ளலையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது.
முதற் பத்தியில் சொன்னது போலவே கிரிக்கெட் பார்ப்பதை விட பார்ப்பவர்களைப் பிடிக்கும் என்ற அதே மனோநிலையோடு
83 என்ற படத்தைப் பார்த்தேன்.
உலகக் கிண்ண கிரிக்கெட் 1983 இல் இந்தியா வெற்றிக்கனியைப் பறித்த அந்த மையப்புள்ளியை நோக்கியதான படைப்பு இது. ஆகவே தெரிந்த வரலாற்றை மீள ஒப்புவிக்கும் சவாலான முயற்சி. அதில் பாதியை அல்ல முழுவதையுமே கடந்து விட்டதையே படம் பார்த்து முடிந்ததும் உணர்ந்து கொண்டேன். அதுவும் அந்த இறுதிக் காட்சியில் எழும் கலவையான உணர்வலைகளால் நெகிழ்ந்து கரைந்து விட்டேன்.
இந்தப் படத்தை இரண்டு பரிமாணங்களில் தரிசிக்கலாம்.
ஒன்று, இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள் மீண்டும் ஒன்று கூடித் தம் பழைய நினைவை மீட்டிப் பார்ப்பது போலவும்,
இன்னொன்று, மறு அந்தத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ஒன்று கூடி அந்தக் கணங்களைத் தரிசித்த காலத்தைத் தனித்தனியாக நினைத்துப் பார்ப்பதும் போலவும் தோன்றியது.
இந்தப் படைப்பும் அவ்விதமே வீரர்களினதும், ரசிர்களதும் கோணத்தில் மாற்றி மாற்றிக் காட்டப்பட்டிருப்பது வெகு சிறப்பு.
இந்தியா என்ற அகண்ட தேசத்தின் பல்லின, மொழி, மத பேதங்கள் எல்லாம் கரைந்து போவது இந்தக் கிரிக்கெட் என்ற விளையாட்டால் தான் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.
காட்சி ஓட்டத்தில் ஒரு கட்டத்தில் நாட்டில் நிலவும் பதட்ட நிலைக்கு எதிராக இந்திரா காந்தி அவர்களின் அமைச்சரவைப் பேச்சும் அப்படியே முன் சொன்னதை அடியொற்றியது.
நாற்பது வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் யஷ்பால் சர்மா என்ற ஒருவரை தவிர மீதி எல்லோருமே நிகழ்காலத்தில் இருப்பவர்கள். கூடவே அவர்களின் ரசிகர்களும். இவ்விதமானதொரு சூழலில் இவ்விதமான நிகழ் வரலாற்றுச் சித்திரத்தை எடுக்கும் போது காட்சியோட்டம் மட்டுமல்ல, ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் மிக நுணுக்கமாக அமைந்திருக்க வேண்டும். அதையே கபில்தேவ் ஆக அமைந்த ரன்வீர் சிங் இலிருந்து ஶ்ரீகாந்த் (ஜீவா) என்று ஒருவர் விடாமல் அவர்களின் குணாதிசியங்கள் முதற்கொண்டு முக அமைப்பு வரை மிகக் கச்சிதமாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள். அதுவே இப்படைப்பின் பெருவெற்றி.
அது மட்டுமல்ல மேற்கிந்திய அணி வீரர்களைக் கூட இவ்விதமே பொருந்திப் போக அமைத்தது பெரு வியப்பு.
அந்த வர்ணனையாளர் பொம்மன் இரானி சும்மாவே தனக்குக் கொடுத்த பாத்திரமாக வாழ்ந்து விட்டுப் போகும் மனுஷன் இங்கே மட்டும் விட்டு வைப்பாரா என்ன? அந்த வர்ணனைக் குரல் அப்பட்டமான 80களின் வர்ணனையாளர் தோரணை.
காட்சிகளை உணர்ச்சித் தூண்டலாக அமைக்காமல் அதன் போக்கில் அமைத்து விடுவதால் எல்லாமே இயல்பாகவே மனதில் பதிகிறது. அதுவும் லண்டனில் இறங்கி பஸ்ஸுக்குக் காத்திருக்கும் இந்திய வீரர்களுக்கு முன்னே மிடுக்கோடு நகரும் மேற்கிந்திய அணி வீரர்களின் அந்த நாயகத் தனம் இருக்கிறதே அப்பப்பா.....
கிரிக்கெட் விளையாட்டில் நிகழ்த்தப்படும் மாற்று அணியின் உளவியல் யுத்தம் முதற்கொண்டு நுணுக்கமாகப் பதிய வைத்திருப்பது இன்னொரு சிறப்பு.
வெற்றியின் இலக்கு என்பது நாம் குறைவாகப் பெற்றிருந்தாலும், அதை விடக் குறைவாக எதிராளியை இறக்கி வைப்பதே என்ற சூத்திரத்தைப் போதிப்பதும் அதை நடைமுறைப்படுத்துவதுமாக அமையும் இறுதிச் சுற்று வாழ்க்கைக்கு ஒரு படிப்பினையும் கூட.
இன்றைக்கு கிரிக்கெட் உலகில் எத்தனையோ சாதனையாளர் அதற்குப் பின் வந்து விட்டாலும், இன்னும் பலர் வரக் காத்திருந்தாலும் இவர்களுக்கெல்லாம் விதையாக இருந்தவர்கள் அவர்கள் காட்டிய உத்தியும், தன்னம்பிக்கையும் தான்.
கிரிக்கெட் விளையாட்டின் இன்னொரு தனித்துவமும் அதுதான். முன்னோர்கள் கற்பித்ததை வைத்து அதைப் பாடங்களாக வைத்து இன்னும் மெருகேற்றுவது. இதையே திரையிசையிலும் இசையமைப்பாளர்கள் பின்பற்றியிருந்தால் எவ்வளவு மேம்பட்டிருக்கும் என்று நினைப்பதுண்டு.
படத்தின் ஓட்டத்தோடு வாஞ்சையோடு தடவும் இசையும், பாடல்களும் (இசை ப்ரீத்தம்) . அதனால் தான் “கொடியேற்று” https://youtu.be/x1hyDdgsFN4 வரும் போது நெகிழ்வோடு அது காட்சியை ஆரத் தழுவுகிறது.
83 படத்தைப் பார்த்து முடித்த பின்னர் எண்பதுகளின் அண்ணன்மாரோடு பேசி முடித்த திருப்தி.
முழங்கால் வரை மடித்த கிப்ஸ் மார்க் சாரம் கட்டிய அந்த அண்ணன்மார் நீட்டிய அன்டெனா கொண்ட கையடக்க வானொலியைக் காதுக்குள் வைத்துக் கொண்டே பதட்டத்தோடு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பது நிழலாக மனதில் விரிகின்றது.
கானா பிரபா
26.03.2022
0 comments:
Post a Comment