இவர் கந்தப்பிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். மிகச் சிறுவயதிலேயே அஞ்ச நெஞ்சத்துடன் நகைச்சுவையாகவும் சிலேடையாகவும் பேசுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இவற்றைக் கண்ணுற்ற அவரின் ஆசிரியர்கள் " வரும் காலத்தில் இவன் பெரும் புலவனாக வருவான்" என்றனர். அவர்கள் வாக்கும் பலித்தது.
ஆசுகவி என்னும் பட்டத்திற்கு உரியவரான இவர் கவிஞர் மட்டுமல்ல; சிறந்த உரை நடை வசனகர்த்தா.அஞ்சாமை மிக்க பத்திரிகையாளர். சிறந்த சரித்திர ஆய்வாளர். உயர்ந்த சைவத்தொண்டர். ஈழத்தில் மட்டுமல்ல இந்தியா, மலேயா போன்ற தேசத்துப் பெரியார்களாலும் " வித்தகர்" எனப் பாராட்டப்பட்டவர்.
"சுதேச நாட்டியம்" என்னும் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து தன் சொந்த அச்சகத்திலேயே நடாத்தி வந்த இவர் எழுதிய " யாழ்ப்பாண வைபவ கெளமுதி" என்ற நூல் மிக அரிதாகவே கிடைக்கின்றது. கதிரமலை பேரின்பக் காதல், மேலைத் தேய மதுபான வேடிக்கைக் கும்மி, உரும்பிராய் கருணாகர விநாயகர் தோத்திரப் பாமாலை ஆகியன அவர் எழுதிய நூல்களாகும்.
திரு வேலுப்பிள்ளை எழுதிய நூல்கள் கொழும்பு, யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நூல்நிலையங்களில் மட்டுமல்ல சென்னைப் பல்கலைக்கழக நூல் நிலையத்திலும் மக்கள் பாவனைக்காக இன்றும் பேணிக் காக்கப்படுகின்றன. எழுதுவதில் மட்டுமன்றி தமிழில் எங்கு பிழையிருப்பினும் அதைத் திருத்தம் செய்யவும் தயங்கமாட்டார். இதனால் "கண்டனத்தில் வல்லோன்" கல்லடியான் எனக்கூறி அவரின் நண்பர்கள் மகிழ்வார்களாம். கல்லடி வேலரின் வாழ்வில் இடம்பெற்ற அச்சுவையான சம்பவங்கள் இங்கே தொகுப்பாகப் பதியப்படுகின்றன.
பூங்காக்குளத்தில் மீன் பிடித்த கதை
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் ஓர் குளம். அதில் அழகிய மீன்கள் துள்ளி விளையாடும். இம்மீன்கள் அழிந்து போகாவண்ணம் பாதுகாக்கும் பொறுப்பு மாநகரசபைப் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
"இக்குளத்தில் உள்ள மீன்களை ஒருவராலும் பிடிக்க முடியாது" என்று பெரிய அட்டை ஒன்றில் எழுதி குளத்தருகே நின்ற மரம் ஒன்றில் அதை மாட்டியதுடன், தம் பொறுப்பைச் செவ்வனே செய்தோம் என்ற மனநிறைவில் காவலர்கள் இறுமாந்திருந்தனர்.
ஒருநாள் அவ்வழியே போய்க்கொண்டிருந்த கல்லடி வேலர் மரத்தில் என்ன அறிவித்தல் போடப்பட்டிருக்கின்றதென்பதை அறியும் ஆவலுடன் அருகில் சென்று வாசித்தார். வேதனையுடன் "நம் தமிழை நம்மவரே கொலை செய்கிறார்களே" இவர்களுக்கு நல்ல புத்தி புகட்டவேண்டும் என யோசித்தவர் வந்த தன் காரியத்தையும் மறந்தார்.
கடைக்குச் சென்று மீன் பிடிக்கும் தூண்டில் ஒன்றை வாங்கி வந்து குளத்திலுள்ள மீன்கள் சிலவற்றைப் பிடிக்கத் தொடங்கினார். விஷயம் அறிந்த காவலர்கள் ஓடோடி அவ்விடம் வந்தனர். " ஏய்!, ஏய் ! நீ யார் படிக்காத முட்டாளா? மரத்தில் உள்ள அறிவித்தலைப் பார்க்கவில்லையா? மடத்தனமான வேலை செய்கிறாயே" என அதட்டினர்.
"அவ்வறிவித்தலைப் பார்த்தபடியால் தானே மீன்களைப் பிடிக்கின்றேன்; என்னால் முடியும்" எனச் சொல்லிவிட்டுக்கருமமே கண்ணாயினார்.
காவலர்களுக்கோ சினம் தலைக்கேறியது. தொடர்ந்து ஏசியதுடன் அவரைக் கைது செய்யவும் முயன்றனர். தான் கூறியதன் அர்த்தம் அவர்களின் மரமண்டைகளுக்குப் புரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டவர், அவர்கள் "மீன் பிடிக்க முடியாது என எழுதிப் போடப்பட்டிருப்பது தவறெனவும் "மீன் பிடிக்கக் கூடாது" என எழுதிப் போடும்படியும் விளக்கமாக எடுத்துக் கூறினார். காவலர்கள் தம் பிழையை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் அவர் முன்னிலையிலேயே திருத்தமும் செய்தனர். தம் தொண்டைச் செவ்வனே செய்த திருப்தியுடன் கல்லடி வேலர் வீடு போய்ச் சேர்ந்தார்.
தட்டியுண்ணும் செட்டி
ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை கண்டனத்திற்கு வல்லோன் என்பதோடு சிலேடையாகப் பேசுவதிலும் திறமை கொண்டவர். இதற்கு உதாரணமாக அவர் வாழ்வில் நடந்த கதை ஒன்று.
செல்வம் கொழிக்கும் சிங்கப்பூரில் தர்மலிங்கம் என்று ஒரு செட்டியார் இருந்தார். இவர் ஒரு தவில் வித்துவானும் கூட. கலைவாணி தன் கருணைக் கடாட்சத்தை இவர்பால் தாராளமாக வீசியதால் இந்நிலையில் இவர் திறமையாக விளங்கினார். பல கச்சேரிகள் ஓய்வின்றிச் செய்தார். இதனால் கலைச்செல்வத்துடன் பொருட் செல்வத்தையும் சேர்த்துக்கொண்டார் செட்டியார். ஆனால தான தருமம் செய்வது செட்டியரைப் பொறுத்தவரைக் கசப்பான காரியமாக இருந்தது.ஏழை எளியவர்களுக்கு உதவுவது வெறுப்பை ஊட்டியது. இதனால் "கலைவாணன், "தவில் மேதை" என்று புகழ்ந்த மக்கள் "கர்மி", "உலோபி" என இகழவும் தவறவில்லை.
"தண்ட வருவோரைக் கண்டிக்க தளரா மனம் அருள்வாய் பராபரமே" என ஓர் அட்டையை எழுதி தன்னிடம் தர்மமோ நன்கொடையோ உதவி கேட்டு வருபவர்களிடம் காட்டி அவர்களை அனுப்பிவிடுமாறு செட்டியார் தன் பணியாளரிடம் பணித்திருந்தார்.
சிறப்பு மிக்க சிங்கப்பூரின் அழகைக் கண்டு ரசிக்கவும் தன் உற்றார், உறவினரைப் பார்த்து வரும் ஆவலிலும் வேலுப்பிள்ளை சிங்கப்பூர் போயிருந்தார். அவர் நடாத்திய சுதேச நாட்டியம் என்ற பத்திரிகையை சிங்கப்பூரிலுள்ள அனேக தமிழர்கள் மாதச் சந்தா, வருடச் சந்தா எனப் பணங் கட்டி வரவழைத்துப் படித்தார்கள். இவர்களில் தர்மலிங்கம் செட்டியாரும் ஒருவர். செட்டியார் ஒருவருச காலமாகச் சந்தாவை அனுப்பவில்லை. வந்த இடத்தில் அவரிடம் பேசலாம், பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என யோசித்த பிள்ளை செட்டியார் வீட்டுக்குப் போனார்.
அழைப்பு மணியை அழுத்தினார். பணியாள் என்ன வேண்டுமென வினவினான். " உன் எசமானரைக் காண வந்தேன்" என்றார். "அவர் இப்போ இங்கு இல்லை, உமக்கு என்ன வேண்டும்" எனக் கேட்டான். " என் பத்திரிகைக்குப் பணம் வாங்க வந்தேன்" எனப் பதில் கூறினார். பணம் வாங்க வந்தேன் என்ற சொல் கேட்டதும் பணியாள் மிகவும் சுறுசுறுப்புற்றான். விரைந்து சென்றவன் வேகமாக அறிவித்தல் பலகையைக் கொண்டு வந்தான். அதைப் பிள்ளையிடம் கொடுத்து வாசித்துவிட்டு உடனே போய்வரும்படி பணித்தான். வாசித்தவர் மிகவும் வெட்கமும் வேதனையும் அடைந்தார். செட்டியாரின் கர்வத்தை அவர் பாணியிலேயே அடக்க எண்ணினார்.
"தட்டியுண்ணும் செட்டியிடம்
தண்டுபவர் இங்கிருந்தால்
மட்டி அவர் என்றல்லோ
மதிப்பேன் பராபரமே"
என அவர் அறிவித்தலின் அடியிலே எழுதி , " உன் துரை வந்ததும் மறவாமல் கொடுத்துவிடு" எனக்கூறிவிட்டுப் போய்விட்டார். செட்டியார் வீடு திரும்பியதும் " இலங்கையில் இருந்து வேலுப்பிள்ளை என்பவர் பணம் வாங்க வந்தார், அறிவித்தலைக் காண்பித்தேன்,எதோ எழுதித் தந்துவிட்டுப் போய்விட்டார்" எனக்கூறிய பணியாள் பணிவுடன் கொடுத்தான்.
வாசித்தவரின் உள்ளம் கொதித்தது. வழக்கறிஞரை வரவழைத்துக் கல்லடி வேலர் மீது மான நஷ்ட வழக்குப் போடுமாறு பணித்தார்.கல்லடி வேலர் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டார். வந்த இடத்தில் இவருக்கு இப்படியான நிலை ஏற்பட்டுவிட்டதே என்று இவரின்
உற்றார் உறவினர் கலங்க, எதிரி மிக்க புத்தி சாதுர்யம் மிக்கவராமே என்ற ஆவலில் மக்கள் கூட்டம் நீதிமன்றதில் வழிந்தது. செட்டியாரின் சட்டத்தரணி, தன் கட்சிக்காரரைப் பிள்ளையவர்கள் அவர் வீட்டிலேயே தட்டித் தின்னி என்று இகழ்வாக எழுதி வைத்துவிட்டதாவும், இதற்கு மானநஷ்டமாக 2000 வெள்ளிகளை செட்டியாருக்குக் கொடுப்பதுடன் மன்னிப்பும் கேட்கவேண்டும் என்று வேண்டினார்.
கல்லடி வேலரிடம் கேட்டபோது தான் வந்த இடத்தில் இப்படியான ஓர் நிலைமை ஏற்பட்டு விட்டது, சட்டத்தரணி ஒருவரை வைத்து வழக்காடத் தன்னிடம் போதிய பணமில்லாததால் தானே தம் வழக்கில் வாதம் செய்ய அனுமதி கேட்டுப் பெற்றுக் கொண்டார்.
எல்லோரையும் சுற்றிப் பார்த்துச் சிறு புன்னகையுடம் " நீதிபதி அவர்களே ! நான் திரு. தர்மலிங்கத்தை இகழ்ந்தோ, கேலியாகவோ எதையும் எழுதவில்லை. " தட்டி உண்ணும் செட்டி" எனக் குறிப்பிட்டது தவிலைத் தட்டி அதனால் வரும் வருமானத்தில் உண்பது. செட்டியார் தவில் தட்டித்தானே உழைக்கிறார். அத்துடன் "தண்ட வருவோரைத் தண்டிப்பேன்" எனவும் அறிவித்தலில் எழுதியிருந்தார். என் பத்திரிகையின் ஒரு வருஷப் பணம் என்னும் செட்டியாரிடம் பாக்கியுள்ளது. இவரிடம் யாரும் தண்டப்போவார்களா? அப்படிப் போவோரை மட்டிகள் என்றே மதிப்பிட்டேன், இதில் என்ன தவறு? ஏதோ நான் தகாததை எழுதிவிட்டேன் என்று என் மேல் கோபிக்கவோ, நீதிமன்றம் வரை என்னை இழுத்தடித்து தேவையற்ற சிரமம் தரவோ எக்காரணமும் இல்லையே " என்று மிகவும் வினயமாகக் கூறினார்.
கூடியிருந்த மக்களின் ஆரவாரமும் சிரிப்பொலியும் அடங்கியபின் திரு. வேலுப்பிள்ளையின் விளக்கத்தைப் பரிசீலனை செய்தபின் அவர் வாதம் சரியெனவும் , அவரின் பத்திரிகைப் பணத்தையும் திரு.தர்மலிங்கம் கொடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். தர்மலிங்கம் வெட்கித் தலை குனிந்தார்.
கதிரைக்குக் காசு
கல்லடி வேலர் ஒருமுறை கூத்துப் பார்க்க கொட்டகை ஒன்றுக்குச் சென்றார். அங்கே வாசலில்
கதிரைக்கு ஒரு குறிப்பிட்ட அணா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் திரும்பிப் போய் பத்துப் பேருடன் வந்தார். பத்துப் பேருக்கான கட்டணத்தைக் கட்டி உள்ளே நுழைந்து கூத்துப் பார்த்தனர். கூத்து முடிந்ததும் புலவரும் கூட வந்த 10 பேரும் தம் கதிரைகளையும் எடுத்துக் கொண்டு வெளியேற ஆரம்பித்தனர். அப்போது ஓடி வந்த கொட்டகை உரிமையாளர்,
"ஐயா! ஏன் கதிரைகளை எடுத்துச் செல்கின்றீர்கள் எனக் கேட்கவும்;
கல்லடி வேலரும் "நீங்கள் தானே கதிரைக்கு விலை குறித்திருக்கின்றீர்கள் " என்று வேடிக்கையாகக் கேட்டாராம்.கொட்டகை உரிமையாளரும் தன் தமிழ் குழப்பத்துக்கு வருந்தி
"நுழைவுச் சீட்டு விபரம், கதிரைக்கு இத்தனை அணா" என்று
மாற்றி விட்டாராம்.
தலைக்குச் சட்டி
கல்லடி வேலர் வாழ்ந்த ஊரில் சிறு சிறு குற்றங்கள் அவருடைய தலைமையில் பஞ்சாயத்து செய்யப்பட்டுத் தீர்க்கப்பட்டனவாம்.(பின்னர் அந்தப் பொறுப்பு அவரின் மூத்த மகன் சுப்பிரமணியத்திற்குப் போனது) பெரிய வழக்குகள் மட்டும் நகரத்தின் நீதிமன்றுக்குச்
செல்லும் போது கல்லடி வேலர் தன் புத்திசாதுர்யத்தால் சிலரை வழக்கிலிருந்து தப்ப வைத்துவிடுவாராம். ஏனெனில், அடிக்கடி பல வழக்குகளுக்கும் இவரே வந்து புத்தி சதுர்யமாக வழக்காடியும் வென்று வந்த கல்லடி வேலரைக் கண்டால் அந்த நீதிமன்றின் நீதிபதிக்குச் சிம்ம சொப்பனம் தான். ஒருநாள் நீதிபதி கல்லடி வேலரைப் பார்த்து " இனிமேல் நீதிமன்றில் உம்முடைய தலைக்கறுப்புத் தெரியக் கூடாது என்று சொன்னாராம். அடுத்த நாள் கல்லடி வேலர் அதே நீதிமன்றுக்கு வழக்காட வந்தார். கல்லடி வேலரின் தலையை பார்த்து ஆச்சரியம் பொங்க எல்லோரும் சிரித்தார்கள். காரணம் அவரின் தலையில் சட்டி ஒன்றைக் கவிழ்த்தவாறே நீதிமன்றுக்குள் நுளைந்தார்.
காரணம் கேட்ட நீதிபதிக்கு கல்லடி வேலன் சொன்ன பதில் "நீங்கள் தானே சொன்னீர்கள், இனிமேல் நீதிமன்றில் உம்முடைய தலைக்கறுப்புத் தெரியக்கூடாது " என்றாராம்.
கொண்டாடினான் ஒடியற் கூழ்
கல்லடி வேலுப்பிள்ளையின் வீட்டுக்குப் பக்கத்தில் பெரிய கல் ஒன்று இருந்தது அதனால் எல்லோரும் அவரைக் கல்லடி வேலன் என்று செல்லமாக அழைத்தனர்.
சுப்பையா என்பவர் புலவரின் அருமை நண்பர். அவர் நிவிற்றிக்கொல்லை என்னும் ஊரிலுள்ள மருத்துவசாலையில் வைத்தியராகப் பணிபுரிந்தார். நிவிற்றிக்கொல்லை இரத்தினபுரிக்கு அண்மையில் உள்ளது. ஒரு நாள் புலவர் தம் நண்பரைப் பார்க்கப்
புறப்பட்டார்; பல அல்லைதொல்லைப்பட்டு இரத்தினபுரியை அடைந்தார். அப்பால், நிவிற்றிக்கொல்லைக்குக் கால் நடையாகவே போனார். நேரமோ பட்டப்பகல். வெயில் நெருப்பாக எறித்தது. புலவர் மிழவும் களைத்துவிட்டார். பசி வயிற்றைக் கிள்ளியது. அவர் இடைவழியிலே தங்காது நடந்தார்; அவ்வாறு நடந்து நண்பரின் வீட்டை அடைந்தார்.
புலவரை எதிர்பாராது கண்ட நண்பரையும் மனவியாரும் அவரை வரவேற்று உபசரித்தனர்.; புலவரின் சுகநலங்களை விசாரித்தனர். வைத்தியரின் மனைவியார் புலவர் களைப்பாக இருந்ததை உணர்ந்தார். எனவே, அவர் புலவருடைய களைப்பைப் போக்க எண்ணினார். உடம்பு அலுப்புக்கு உவப்பான உணவு ஒடியற் கூழ் என்பது அவருக்குத் தெரியும். மேலும் புலவருக்கு ஒடியற் கூழில் மிக்க பிரியம் உண்டு என்பதும் அவருக்குத் தெரியும்.
வைத்தியரின் மனைவியார் கூழ் காய்ச்சத் தொடங்கினார். அவர் பானையில் நீரைக்கொதிக்க வைத்தார்; அதனுள் ஒரு சிறங்கை அளவு அரிசியைப் போட்டு வேக வைத்தார். பின்பு மரவள்ளிக்கிழங்கு, பயற்றங்காய் பயறு, பலாச்சுளை, பலாக்கொட்டை, முதலியவற்றையும் போட்டார்.; உப்பையும், புளியையும், அரைத்த மிளகாய்க்கூட்டையும், அளவாய்ப் போட்டார்; ஒடியல் மாவைக் கரைத்து அதனுள் சேர்த்தார்.; இவ்வாறாகக் கூழ் காய்ச்சினார்; பதமாய் இறக்கிய கூழுக்குள் வாழைக்காய்ப் பொரியலையும் இட்டுக் கலக்கினார்.
புலவரும் நண்பரும் கூழ் குடிக்க அமர்ந்தனர்; பலா இலையை மடித்துக் கோலினர்; கூழை அள்ளி ஊதி ஊதிக்குடித்தனர். அந்தக்கூழ் மிகவும் சுவையாக இருந்தது. " என்ன அருமையான் கூழ்" என்று வியந்தார் புலவர். புலவரின் பசியும் பறந்தது; களைப்பும் நீங்கியது. அப்போது புலவரால் பாடாமல் இருக்க முடியவில்லை. ஆசுகவி பாடினார் இப்படி,
"அல்லையுற்று இரத்தினபுரி அண்டி
அப்பாலே நிவிற்றிக்கொல்லை
அடைந்த அலுப்புக் கொண்டதற்கு
கல்லடியான், வண்டாரும் மாலை அணி
மற்புயற் சுப்பையனுடன்
கொண்டாடினான் ஒடியற் கூழ்"
ஆசுகவி கல்லடி வேலனின் மேற்குறித்த "கொண்டாடினான் ஒடியற்கூழ்" கதைப் பகுதி இலஙகைப் பாட நூலாக்கத்தில் ஆண்டு 4 வகுப்பு பாடமாக இருக்கின்றது. ஆனால் இறுதியில் புலவர் பாடும் பாடல் மட்டும் அப்புத்தகத்தில் இல்லை. எனவே ஆசுகவியின் பேத்தியார் திருமதி ராணி தங்கராஜாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு இப்பாடலைப் பெற்றேன். மேலும், திருமதி ராணி தங்கராஜா அவர்கள் கடந்த 2004, மெல்பர்ன் எழுத்தாளர் விழாவில் ஒரு அமர்வாக இடம்பெற்ற ஒடியற் கூழ்விருந்தில் கூழின் சிறப்பையும் ஆசுகவியின் கூழ் குறித்த போற்றுதலையும் நினைவு கூர்ந்து தான் வடித்த கவிதையையும் குறிப்பிட்டார். அதை ஒலிவடிவில் அப்படியே ஒலிப்பதிவு செய்து இங்கே தருகின்றேன். திருமதி ராணி தங்கராஜாவும் தன் பாட்டனார் வழியில் கவிபடைத்தும் இலக்கியப் பணியும் ஆற்றி வருகின்றார். இதோ அவர் எழுதிய கூழ்க்கவி எழுத்திலும், ஒலியிலும்;
PRABU.mp3 |
ஒன்று கூடி ஒடியற்கூழ் சுவைப்போம்
வளம் நிறைந்து வாழ்ந்திருந்த
மண்விட்டுப் புலம்பெயர்ந்தோம்.
முன்னதை இழந்தோம்.
எங்கு தான் சென்றாலும் எதைத்தான் இழந்தாலும்
தங்கத் தமிழ் மறவா தனிக்குணத்தை இழந்தோமா?
சென்ற இடமெல்லாம் செந்தமிழை மேம்படுத்தும்
சிந்தை உடையோராய் சீவித்துப் பண் பாடும்
என்றும் அழியாத இன் தமிழும் கலைகளும்
இன்னும் மேலோங்க உழைக்கின்றார் நம் தமிழர்.
ஈழத்தில் தமிழ் வளர்த்தோர், இனிய தமிழ்க் கவி புனைந்தோர்
ஞாலத்தில் உயர்ந்து நின்றார் நமக்கெல்லாம் பெருமை தந்தார்.
கூழுக்குக் கவி பாடும் புலவோர்கள் களை திருந்த
கூழுக்கு நன்றி சொன்ன புலவர் நீரும் பிள்ளை அன்றோ
ஆசுகவி கல்லடியார் வாய்திறந்தால்
நூறு கவி வீசி வரும் தென்றலாய் அவர் ஒருவரே அன்றோ
வாசமிகு ஒடியற்கூழ் வாழ்கவென்று நன்றி சொல்லி
பேசு தமிழில் கவிதை பிறப்பித்தார், பெருமை சேர்த்தார்.
கடல் கடந்து வாழ்ந்தாலும் தாயகத்தை மறவாமல்
நெடிததுயர்ந்த பனை மரத்தின் நினைவழிந்து போகாமல்
ஒடியற்கூழ் காய்ச்சுதற்கும் ஒன்று கூடிச் சுவைப்பதற்கும்
முடிவு செய்தோர் வாழ்கவென்று முக்காலும் நன்றி சொல்வேன்.
மெல்பேர்னில் தமிழ் வளர்க்கும் எழுத்தாளர் மாநாட்டில்
கல்லடியார் புகைப்படத்தைக் காட்சி வைத்துப் பெருமை சேர்த்த
நல்லவர்கள் எல்லோர்க்கும் நன்றியுடன் வாழ்த்துரைத்து
கல்லடியார் பேர்த்தி நான் கை கூப்பி அமைகின்றேன்.
பாரிஸ் யோகன் பதிவில்: கோச்சி வரும் கவனம்....கொப்பரும் வருவார் கவனம்...!
கனக சிறீதரன் பதிவில்: ஆசுகவியின் இலக்கியப் பணி
பிற்குறிப்பு:
இந்தக் கட்டுரையை எழுத உசாவிய பாரிஸ் யோகன் அண்ணாவிற்கும்,
அவரின் பதிவில் கூழ் குறித்த கதையைக் கோடு காட்டிய சயந்தனுக்கும் நன்றிகள்.
மேலே இடம் பெற்ற ஆசுகவி குறித்த அறிமுகம் போன்ற கட்டுரைப் பகுதிகள் பிரான்சில் வாழும் ஒலிபரப்பாளர், எழுத்தாளர்,வண்ணை தெய்வம் அவர்கள் எழுதியும் தொகுத்தும் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட "யாழ்ப்பாணத்து மண் வாசனை" என்ற நூலில் இடம் பெற்றிருந்தன. கடந்த ஆண்டு நான் தாயகம் சென்ற போது அதை வாங்கியிருந்தேன். இக்கட்டுரையில் இடம்பெற்ற பெரும்பாலான பகுதிகளை மீளப் பிரசுரம் செய்யும் உரிமையைப் பெற நண்பர் மூலம் வண்ணை தெய்வம் அவர்களின் தொலைபேசி இலக்கம் பெற்றுத் தயங்கியவாறே இதைக் கேட்டேன்.
" எங்கட ஆட்களின்ர வரலாறு எல்லாருக்கும் போய்ச் சேரவேணும், நீங்கள் தாராளமாகப் பயன்படுத்துங்கள் என்று தன் தமிழ் குறித்த தாராள சிந்தையை வெளிப்படுத்திய வண்ணை தெய்வம் அவர்களுக்கும் என் நன்றிகள்.
இலங்கைப் பாடவிதானத்தின் ஆண்டு 4 பாடப்புத்தகத்தைத் தேடிப் பெற உதவிய சிட்னி தமிழ் அறிவகம் என்ற நூலகத்துக்கும் நன்றிகள்.
இறுதியாக ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேர்த்தி, திருமதி ராணி தங்கராஜா அவர்கள் நான் ஆசுகவியின் கூழ்ப் பாடலைக் கேட்டு எழுத உதவினார். கூடவே கதிரைக் கதை, நீதிமன்றத்தில் நடந்த வேடிக்கை, மற்றும் தான் இயற்றிய கூழ்ப்பாடலையும் தந்ததோடு,
"தம்பி! ஒலிப்பதிவு சரியாக வந்ததே ? " என்று கரிசனையோடு கேட்டு, இரண்டாவது முறையும் பொறுமையோடு கவி தந்தார்.
அவருக்கும் என் மேலான நன்றிகள்.