ஈழத்தின் பெறுமதி மிக்க கல்வியாளராகவும், கனேடிய மண்ணில் சமூகச் செயற்பாட்டாளராகவும், எழுத்தாளராகவும் பன்முக ஆளுமை கொண்டு விளங்கிய திரு பொ.கனகசபாபதி அவர்கள் கடந்த டிசெம்பர் 24, 2014 ஆம் ஆண்டு தன் வாழ்வை நிறைவு செய்து கொண்டார்.
இந்த 2014 ஆம் ஆண்டில் ஈழத்தமிழ்க் கல்விச் சமூகத்தில் திரு செல்வா கனகநாயகம் அவர்களைத் தொடர்ந்தும், ஈழத்து இலக்கிய ஆளுமைகளில் திரு காவலூர் இராசதுரை, திரு எஸ்.பொ ஆகியோரைத் தொடர்ந்தும் இவரின் இழப்பு பேரிழப்பாகவே கருத வேண்டியுள்ளது.
விலங்கியல் ஆசிரியராகவும் யாழ் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூயிரின் அதிபராகவும் ஈழத்தில் இயங்கிய போது அவரின் வளர்ப்பில் உயர்ந்து கடல் கடந்தும் கல்விப் பெறும் பேற்றில் உயர் பதவிகளை அடைந்தோரும், நற்பிரசையானோரும் ஆகப் பலரை வளர்த்தெடுத்த பெருமை இவரைச் சாரும்.
தன்னுடைய கால் நூற்றாண்டுப் புலம்பெயர் வாழ்வைக் கனடா மண்ணில் தக்க வைத்த போது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இவர் முன்னெடுத்த பல சமூகச் செயற்பாடுகளின் அறுவடையை இன்றைய தலைமுறையும் அனுபவிக்கின்றது.
கல்வியாளர் பொ.கனகசபாபதி அவர்கள் குறித்த நினைவுப் பகிர்வைக் கடந்த டிசெம்பர் 26 ஆம் திகதி, நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வழங்கியிருந்தேன்.
நிகழ்ச்சி ஒருங்கமைப்பு திரு வை.ஈழலிங்கம் அவர்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஈழத்தில் வெளிவந்த "முரசொலி"பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக இயங்கியவரும், தற்போது கனேடிய மண்ணில் பல்லாண்டுகளாக இயங்கி வரும் "தமிழர் தகவல்" இதழின் முதன்மை ஆசிரியருமான திரு.எஸ்.திருச்செல்வம் அவர்கள் நீண்டதொரு பெறுமதி மிக்க நினைவுப் பகிர்வை வழங்கியிருந்தார்.
புலம்பெயர் சூழலில் "பெற்றோரியம்" (Parenting) என்ற சொல்லைத் தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தியதோடு கனடாவில் தமிழ்ப் பெற்றோர் சங்கம் உருவாகக் கால்கோள் இட்டவர் பொ.கனகசபாபதி அவர்கள்.
எஸ்.திருச்செல்வம் அவர்களின் பகிர்வில் மேற்குறிப்பிட்ட சமூகச் செயற்பாட்டோடு, அமரர் பொ.கனகசபாபதி அவர்கள் எழுத ஆரம்பித்த கதையையும், அவரின் எழுத்துப் பணியையும் விலாவாரியாகப் பேசுகின்றார்.
Download பண்ணிக் கேட்க
http://radio.kanapraba.com/kanagscanada/Thiruchelvam.mp3
சிட்னி மண்ணில் வாழ்ந்து வரும் எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் கலாநிதி ஆ.சி.கந்தராசா அவர்கள், அமரர் பொ.கனகசபாபதி அவர்களின் மாணவன். ஒரு ஆசிரியராக பொ.கனகசபாபதி அவர்களின் ஆளுமைத் திறன் குறித்துப் பேசுகின்றார் இந்த நினைவுப் பகிர்வில்.
Download பண்ணிக் கேட்க
http://radio.kanapraba.com/kanagscanada/kandaraja.mp3
நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் இயக்குநர்களில் ஒருவரும், அமரர் பொ.கனகசபாபதி அவர்களின் உறவினருமான திரு வை.ஈழலிங்கம் அவர்கள் வழங்கும் நினைவுப் பகிர்வு.
Download பண்ணிக் கேட்க
http://radio.kanapraba.com/kanagscanada/elalingam.mp3
00000000000000000000000000000000000000000000000000000
கல்வியாளர் பொ. கனகசபாபதி அவர்களுடனான நேர்காணல்
http://thoaranam.blogspot.fr/2013/06/blog-post_15.html
நன்றி தோரணம் இணையத்தளம், நண்பர் க.முகுந்தன்
000000000000000000000000000000000000000000000000000000000
திருமதி.பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள் அதிபர் அவர்களுக்கு எழுதிய பதிவிலே இவ்வாறு பகிர்ந்திருந்தார்.
"எம்மை வாழ வைத்தவர்கள்"
கல்வி வரலாற்றில் எம்மை வாழ வைத்த இருபத்து மூன்று அதிபர்களின் மகோன்னத பணிகளைக் கூறும் நூல் இது, ஒவ்வொருவருடைய வரலாறும் சுவை மிகுந்த செய்திகளால் நிரம்பியுள்ளது. சுவாமி விபுலானந்தர், திரு.சபாரத்தினம், செல்வி.தில்லைஅம்பலம், தம்பு மாஸ்டர்,பூரணம்பிள்ளை, மாஸ்டர், REV J.T.அருளானந்தம், சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார், அருட்தந்தை லோங் அடிகளார் யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னெல் பாதிரியார், அதிபர் கந்தசாமி ஆகியோரின் கல்வித்தொண்டு,தம்பர் மாஸ்டர் Orator சுப்பிரமணியம் Handy பேரின்பநாயகம் போன்றோரின் Youth Congress செயற்பாடுகள், CW கனங்கராவின் இலவசக் கல்வி தாய்மொழிக்கல்விக்கொள்கை என்று இன்னும் பல செய்திகள்.
உங்களுடைய ஆராய்ச்சி பிரமிக்கவைக்கிறது - இப்படி எவ்வளவோ எழுதிக்கொண்டு போகலாம் ! நீங்கள் புகழும் இந்த இருபத்திமூன்று பெருந்தகைகளும் இருபத்திமூன்று தூண்களாக நின்று தமிழினத்தின் கல்விச் சாம்ராஜ்யத்தைத் தாங்கி இருக்கிறார்கள் !! தம்பர் மாஸ்டர் பற்றிய குறிப்புகளிலே 'தம்பர் என்பது ஒரு மனிதரைக் குறிக்கும் சொல் என்ற நிலை மாறி பல்வேறு நற்குணங்கள் ஒருங்கே குடிகொண்ட கொள்கலம் என்று 'கூறுவதே பொருத்தமானது ' என்று பண்டிதர் சச்சிதானந்தம் கூறியிருப்பது மிக ஆழமான கருத்து - பெரிய பெரிய மேதைகளாக விளங்கிய இந்த ஆளுமைகள் பழகுவதற்கு மிகவும் எளியவர்களாகவும் இருந்தது அதிசயமே !
கலாநிதி இரகுபதி தனது அணிந்துரையிலே கூறுவதுபோல ''இந்த அதிபர்களின் தலைமுறையினர் கல்வி வணிகமயமாக்கப்பட்ட காலத்திற்கு முந்தியவர்கள்' எந்தக் கைமாறும் கருதாத தருமசிந்தையும் பொதுநோக்கும் அர்ப்பணிப்பும் மனிதநேயமும் நிறைந்தவர்கள் ..மாணவர்களை ,படித்த காலத்திலும் அதற்குப் பின்பும் சொந்தப் பிள்ளைகளாகப் பார்த்தவர்கள் '' ''இந்த அணிந்துரை இந்த நூலுக்கு ஒரு மகுடம் ! அதிபர் கனகசபாபதியின் காலத்தில் மகாஜன கல்லூரி முன்னணியில் இருந்தது என்பதை எல்லோருமே அறிவோம் இன்றும் அந்த அதிபரோடு மாணவரும் மாணவரோடு அதிபரும் இணைந்து உலா வருவது கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய விருந்து கனடாவிலே உங்கள் பாடசாலை அனுபவம் எனது இந்திய வாழ்க்கையை நினைவூட்டியது இருபது வருடம் இந்தியாவிலே வாழ்ந்தகாலத்திலே பொருளாதாரப் பிரச்சினை இருந்தபோதும் அங்கே நான் ஆசிரியப்பணியை ஏற்றுக்கொள்ளமுடியாததற்கும் இதுவே காரணம் எங்களுடைய விழுமியங்கள் வேறு !
நீங்கள் எழுதிய சில தொடர்களை தினக்குரலில் வாசித்திருந்தேன் அவை ஏன் பின்னர் தொடரவில்லை என்றும் யோசித்தேன். நீங்கள் விளக்கம் தந்திருக்கிறீர்கள் உங்களுடைய ஆழ்ந்த அறிவும் எழுத்தாற்றலும் அனுபவமும் மனித நேயப் பண்பும் உங்கள் எழுத்தில் பிரகாசிப்பதுதான் உங்களுடைய பெரிய கொடை '' உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.'' ''அரசரோடு எம்மை சரியாசனம் வைத்த சான்றோருக்கு''' ---- ''எம்மை வாழ வைத்தவர்கள் ''என்று-சரியாகத்தான் பெயர் சூட்டிவிட்டீர்கள் !
உங்களிடம் ஒரு வேண்டுகோள் -இதற்கு ஒரு இரண்டாம் பாகமாக அல்லது மறுபதிப்பிலே மேலும் சில கல்விமான்களைப்பற்றியும் சேர்ப்பது காலத்தின் கட்டாயம். மிஸ் தம்பையா, மிஸ் ராமநாதன், மிஸ் காசிப்பிள்ளை போன்றோர் கல்வியையே தமது வாழ்வாக மாற்றிக்கொண்டவர்கள் THEY WERE WEDDED TO EDUCATION இப்படி இன்னும் பலர் இலைமறைகாயாக தொண்டாற்றியிருப்பார்கள் இந்தத் தூண்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். அதிபர்களின் நல்ல படங்களையும் இணைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது
குறை ஒன்றும் இல்லை.
***************************************************************
"மரம் மாந்தர் மிருகம் "
என்னை மிகவும் வசீகரித்த நூல்.
நிகழ்வுகள் யாவும் எமது வீட்டிலும் அயலிலும் ஊரிலும் அப்படியே நடந்தவைபோல மிகவும் யதார்த்தமாக இருக்கின்றன பெரிய காணி என்று சொல்ல முடியாவிட்டாலும் எங்களுடைய வீட்டிலும் வேப்பமரமும் மாமரமும் நாவல் பலா புளி இலுப்பை தென்னை பனை கறிவேப்பிலை முருங்கை பூவரசு கிணற்றடியில் கமுகும் -இருந்தன பக்கத்து வீட்டிலே ---எல்லோரும் ஒரே வீடுபோலப் பழகிய காலம் அன்று -- செம்பருத்தியும் வாழையும் விளாத்தியும் நெல்லியும் அன்னமுன்னாவும் ஈரப்பலாவும் -இப்படி எல்லாமுமே எங்கள் ஒவ்வொருவரோடும் பிரிக்கமுடியாதபடி இணைந்திருந்தன.
அரிக்கன் ஆடு பசுமாடு நாய் பூனை கோழி குயில் குருவி எலி புராணம் என்று நீங்கள் ஒன்றையுமே விடவில்லை ! ஆச்சரியம் என்னவென்றால் -துள்ளித் துள்ளித் தண்ணி அள்ளிய எனது தம்பி கிணற்றுக்குள் கொடியோடு போய்விட சத்தம் கேட்டு உங்கள் அம்மாவைப்போலவே நானும் ஓடிப்போய் அவனைத் துலாக்கொடியோடு இழுத்துக் காப்பாற்றிவிட்டேன் ஆனால் எங்கள் அம்மம்மா ஐயோ என்ர பிள்ளை என்றபடி அந்த மாரிக் கிணற்றுக்குள் குதித்துவிட்டா பிறகென்ன நாங்கள் போட்ட கூச்சலில் நல்ல மனிதர் ஒருவர் உடனே கிணற்றுக்குள் குதித்துக் காப்பாற்றிவிட்டார் இவற்றையெல்லாம் நேரிலே பார்த்ததுபோலவல்லவா எழுதியிருக்கிறீர்கள் !!!!!!!
சின்னமேளம் திருவிழா போட்டித் திருவிழா சாதீயம் மூடநம்பிகைக்குப் பின்னாலும் சில நல்ல கருத்து என்று எத்தனை எத்தனை விஷயம் ! (பாலுள்ள மரங்களிலேதான் நச்சுக்கொடியைக் கட்டுவார்கள் அப்பொழுதுதான் மடியிலே பால் சுரக்கும் என்பது நம்பிக்கை ! நீங்கள் கேள்வி எழுப்பியிருந்தீர்கள் ---இது நான் அறிந்த செய்தி ) ''கட்டுரைகள் எல்லாம் வித்தியாசமானவையாகவே உள்ளனவென நான் உணர்கிறேன் தாவரவியல் கொஞ்சம் இலக்கியம் ஆங்காங்கே உடல்நலமருத்துவக்குறிப்புகள் இடையிடையே சுவாரஸ்யம் இருக்கவேண்டும் என்பதற்காக கதைபோல வசதிக்கேற்ற சிறு நிகழ்சிகளையும் சேர்த்துள்ளேன் அவை நிசமல்ல ''என்று நீங்கள் சொல்வதற்கு ஒரு திருத்தம் ------- அவை நிசமல்ல -என்று நீங்கள் சொன்னாலும் இவைதான் இந்நூலின் இலக்கிய பலம் --வளம் ! ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை --யதார்த்த வாழ்வு - அன்பு ஆதரவு கோபம் தாபம் காதல் காமம் நட்பு துரோகம் மானம் என்று எல்லாமுமே வருகிறது மனிதர்களிலேதான் எத்தனை வகையானவர்கள் !
உங்களுடைய கூர்ந்த அவதானிப்பை உங்கள் எழுத்தில் உணரமுடிகிறது தாவரம் பற்றிய குறிப்புகள் இலகுதமிழில் விளக்கமாக இருக்கின்றன. ஓவியங்கள் தத்ரூபமாக உள்ளன -வீட்டுக்கைவைத்தியம் எல்லோருக்கும் பரிச்சயமான கலை மீட்டுப்பார்ப்பதிலேதான் எவ்வளவு சுகம் !!!! -இலக்கியமேற்கோள்கள் பொருத்தமான இடங்களில் ஒன்றிவிடுகின்றன கோடாலிச்சாமியார் MILKWHITE கனகராசா என்னும் பண்பாளர் எல்லோரையும் அறிந்திருக்கிறோம்.
"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே"
என்ற பாரதிபோல எங்களையும் ஏங்க வைத்துவிட்டது உங்கள் எழுத்து பெண் சாமர்த்தியசாலியாகவும் இருக்க வேண்டும் அதே வேளை மனிதநேயப் பண்போடும் வாழவேண்டும் என்பதற்கு உங்கள் அம்மா நல்லதொரு உதாரணம் அப்பாவும் மனைவியோடு புரிந்துணர்வோடு நடப்பவர் என்பது குடும்ப உறவுக்கு எவ்வளவு அவசியம் -- இவைதான் எங்கள் சொத்து - 'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்று சும்மாவா பாடினான் கவிஞன் ! பேராசிரியர்கள் இரகுபதி சண்முகலிங்கன் சிவகடாட்சம் சிவயோகநாதன் மற்றும் சிவநாதன் போன்ற கல்விமான்கள் எழுதியதற்குமேல் எழுதுவதற்கு என்ன உள்ளது !
" BREATHES THERE THE MAN WITH SOUL SO DEAD WHO NEVER TO HIMSELF HATH SAID THIS IS MY OWN MY NATIVE LAND WHOSE HEART HATH NEVER WITHIN HIM BURNED FROM WANDERING ON A FOREIGN STRAND ........................"
என்று SIR WALTER SCOTT என்னும் கவிஞன் மண்பற்று அற்றவரைப்பற்றிக்கூறுவது நினைவுக்கு வருகிறது ஆனால் உங்களின் ஆழமான மண்பற்றோ எனில் எங்கள் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் அழியாச்சுடராக ஒளிவீசும்படி செய்து விட்டது -நாங்கள் கொடுத்துவைத்தவர்கள் !
0000000000000000000000000000000000000000000000000000000000000000000
அமரர் பொ.கனகசபாபதி அவர்களது ஆத்மா சாந்தியடைவதாக.
அமரர் பொ.கனகசபாபதி புகைப்படம் நன்றி: வல்லினம் இணைய சஞ்சிகை http://www.vallinam.com.my/