2024ஆம் ஆண்டுக்கான பாலபுரஸ்கார் விருது தன்வியின் பிறந்த நாள் கதைத் தொகுப்புக்காக, யூமா வாசுகி அவர்களுக்குக் கிடைத்த செய்தியோடு நேராக இந்தப் புத்தகத்தைத் தேடி Kindle இல் கண்டடைந்தேன்.
ஒவ்வொரு கதையையும் படிக்கப் படிக்க என் பால்ய காலத்து உலகத்தில் இருந்துவிட்டு வந்தேன்.
அவ்வளவுக்கு எளிமையும், ஆங்கிலக் கலப்பற்ற அழகு தமிழுமாக இவரின் எழுத்துகள் திகழ்கின்றன.
எண்பதுகளில் சிறார் கதைகளோடு வாழ்ந்தவர்களுக்குத் தான் புரியும் இவ்விதமான சிறுவர் இலக்கியத்தையும் நாம் பேணுபவர்கள் என்று.
இந்தக் கதைத் தொகுப்பை 5 முதல் 18 வயது வரையான சிறார்களுக்கானது என்று Kindle வரையறுத்திருந்தாலும், எல்லா வயதினரும் படிக்க வேண்டியது என்றே சொல்வேன்.
இன்று திரைப்படங்களில் மித மிஞ்சிப் போன வன்முறைகள், காண் பகிர்வுகளில் கிடைக்கும் தேவையில்லாத அரட்டைகள் தான் சிறுவர்களுக்கான தீனியாக இருக்கும் சூழலில் இந்த மாதிரியான கதைகள் மனதைச் செழுமைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
மொத்தம் பத்துக் கதைகள். அனைத்துமே சிறுவர் உலகத்தில் நின்று பேசுகின்றன. அதுதான் பூமா அவர்கள் மீது பேராச்சரியம் கொள்ள வைக்கின்றன. ஒரு ஆற்றொழுக்கான மூத்த படைப்பாளி, சிறார் மொழியிலேயே சிந்தித்து அவர்களோடு உறவாடுவது என்பது இயல்பான காரியமல்ல. ஆனால் இந்தக் கதைத் தொகுப்பைப் படித்து முடித்ததும் இன்ப ஆச்சரியமே மேலோங்குகின்றது.
ஒவ்வொரு கதைகளிலும் ஒவ்வொரு நீதி பேசப்பட்டாலும் அது போதனையாக அன்றி கதைப் போக்கிலேயே சொல்லி விட்டுப் போகின்றது.
உதாரணத்துக்கு “தலைவர் ஜெய் செய்தது சரியா?” என்ற கதையில் ஊருக்கு உதவும் அந்தச் சிறுவனின் செயல் சரியா என்று வாசகரையே கிடுக்குப்பிடி போட்டு விடுகிறது.
மெல்லிய நகைச்சுவையையும் கலந்து எழுதும் நுட்பம் கூட இந்தக் கதைகளின் சுவாரஸ்யத்துக்கான பலம்.
சிறார் கதைகளின் சிறப்பு என்னவென்றால் பூனைக்குட்டியால், நாய்க் குட்டியால், குட்டி யானையால் இன்ன பிற மிருகங்களால் பேச முடியும். இங்கேயும் எழுத்தாளர் அவற்றைத் தன் கதைகளில் பொருத்தி எழுதியிருப்பது வெகு சிறப்பு.
“தன்வின் பிறந்த நாள்” கதையைப் படிக்கும் போதே அந்த உலகம் கற்பனையில் விரிந்து படமாக ஓடுகிறது.
“குட்டிநாய்க்குப் பெயர் கிடைத்தது எப்படி?” அந்த நாய்க்குட்டியின் தனிமையை, சோகத்தை நம்முள் இறக்கி விட்டு இறுதியில் ஒரு புன்சிரிப்பை வரவழைத்து விடுகிறார்.
தன்னுள் இருக்கும் கவிதைக்காரனையும் பொருத்தமான இடத்தில் அளவாகக் கொடுத்தது இன்னுஞ் சிறப்பு.
“உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்” என்பதன் சாரமாய் முந்திய கதை அமைந்தது போல “தன்வியின் பூந்தோட்டம்” கதையும் அமைகின்றது.
இன்றைய தலைமுறையில் எத்தனை பேர் பூந்தோட்டப் பராமரிப்பில் ஈடுபடுகிறார்கள் என்றொரு கேள்வியைப் பெரியவர்கள் எங்களிடம் மறைமுகமாகக் கேட்பது போலிருந்தது.
சிறார்களுக்கே உரித்தான கவனச் சிதறலை “எண்ணல்” நுட்பமாகக் காட்டுகின்றது.
“அன்பளிப்பு” கதை சற்றே பெரிய சிறார்களுக்கான நீண்ட விபரணங்களையும், கதைப் போக்கையும் கொண்டது. ஆடுகளுக்குத் தீனி வைத்த ஜெய், தன்வி சகோதரங்களுக்கு எதிர்பாராமல் கிடைக்கும் அன்பளிப்பை அது காட்டுகின்றது.
போலியோ என்று இன்று பரவலாகப் புழங்கும் சொற்பதத்தை நம் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய “இளம் பிள்ளை வாதம்” என்ற சொல் கொண்டே “குணசுந்தரி” என்ற பாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார்.
குணசுந்தரி என்ற அந்தப் பிள்ளை மீது அரச உயர் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முதற்கொண்டு எல்லா வகுப்பு மாணவர்களும் பிரியம் கொண்டிருப்பதும், அவளின் வாயில் வழியும் எச்சிலைக் கூடத் துடைத்து விடும் பரிவுமாக ஒரு அழகிய உலகைக் காட்டுகிறது.
இயலாமை என்று எதுவுமே இல்லை என்ற கோணத்தில் குணசுந்தரி அந்த நாள் முழுக்கப் பள்ளியில் செய்த வேலைகளை அடுக்கிக் காட்டி அவளின் உலகம் எவ்வளவு அழகானது என்று முடிக்கிறார் எழுத்தாளர்.
“எட்டாம் வகுப்பு தன்வி, குணாவைப் பிடித்து அணைத்து, தன் மேற்சட்டை விளிம்பால் அவள் எச்சிலைத் துடைத்து விட்டு அவசரமாகச் சென்றாள்”
இவ்விதம் குணா என்ற குணசுந்தரி கதையிலும் தன்வி என்ற பாத்திரம் மின்னி மறைகிறது.
பாடசாலையின் சுற்றாடலை ஒவ்வொரு மாணவரும் பொறுப்போடு கையாள வேண்டும் என்பதை வலுவிழந்த குழந்தை மூலம் மறைமுகமாகப் பாடம் எடுக்கிறது இக்கதை.
தன்னுடைய ஆசிரியர் எவ்வளவு கண்டிப்பானவராக இருந்தாலும் அவருடைய குடும்பத்துக்கு ஒரு இக்கட்டு நேரக்கூடாது என்ற சிந்தனை தன்னுடைய நெருக்கடியிலும் ஜெய் என்ற மாணவனுக்கு எழுந்ததால் தான் அவனுக்குக் கைமேல் பலன் கிடைத்ததை “சிறகுத்தேள்” விபரிக்கின்றது.
“குழிக்குள் விழுந்த கோழிக்குஞ்சு” அதைக் காப்பாற்ற ஜெய்யும், தன்வியும் எடுக்கும் முயற்சிகளும், அவர்களுக்கு உதவ முன் வரும் பாத்திரங்களும் மெலிதான நகைச்சுவை ஓட்டத்தோடு எழுதப்பட்டு முடிவில் அவர் கொடுக்கும் “சம்பவம்” தான் பகீரென்றிருக்கும்.
“அவர்நாண நன்னயம் செய்து விடல்” என்ற குறளின் அடி நாதமாய் “வலியினால் அல்ல” சிறுகதை விளங்குகிறது.
இதுவும் சற்றே பெரிய சிறுவர்களுக்கான கதை. ஏற்றத்தாழ்வு இல்லாத நட்பில் பொறாமை வந்து விழுவதால் எழும் மனச் சிக்கலைச் சிறுவர் உலகத்தில் நின்று பேசி நிறைவானதொரு கருத்தோடு முடிக்கின்றது இக்கதை.
பெரும்பாலும் ஜெய், தன்வி ஆகிய பாத்திரங்கள் வெவ்வேறு கதைகளில் வருகிறார்கள்.
ஒட்டு மொத்தமாக எல்லாக் கதைகளையும் படித்த பின்னர் அவர்களின் உலகில் நடந்த கதைகள் போன்றதொரு பிரமை தொனிக்கின்றது.
இந்தக் கதைகள் Tanvi’s Birthday என்ற பெயரில் சென்னை SIET மாணவிகள் S.பவானி, R.S.ரெஹானா சுல்தானா ஆகியோரால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தமிழ் நூலைப் பதிப்பித்த பாரதி புத்தகாலயமே வெளியிட்டிருக்கின்றது.
இந்த இடத்தில் சிறுவர் இலக்கியத்தில் இன்றுள்ள சூழலில் பாரதி புத்தகாலயத்தின் தொடர்ச்சியான பணி க்குத் தமிழுலகம் நன்றி கொள்ள வேண்டும்.
தன்வியின் பிறந்த நாள் கதைத் தொகுப்பு வெறும் விருதுக் கெளரவத்தோடு மட்டும் நின்று விடக்கூடாது. சிறார் பாட நூல்களில் இடம்பெற வேண்டும்.
குறிப்பாகப் புலம் பெயர் மண்ணில் தமிழ்ப் பாட நூல் ஆக்குவோருக்கு இந்தக் கதைத் தொகுதி மிகக் கச்சிதமான படைப்பு ஆகும்.
கானா பிரபா
19.06.2024
யூமா கணினி வரைகலை : வன்மி