இலங்கை வானொலியை உயர்த்திய ஒலிபரப்புச் சிகரங்களில் ஒருவர், வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் கடந்த மார்ச் 23 ஆம் திகதி இவ்வுலகை விட்டுப் பறந்தார். இலங்கை வானொலியின் பொற்காலங்களில் ராஜேஸ்வரி சண்முகம் என்ற வானொலி நட்சத்திரத்தின் குரலினிமையைக் கேட்டு ரசித்த கோடானுகோடி ரசிகர்களுக்கு இந்தச் செய்தி பேரிடியாக அமைந்திருக்கும். மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பசுமை நிறைந்த வாழ்வின் சுவடுகளில் வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் குரலும் பதியப்பட்டிருக்கும். காலையிலே இரண்டுவரிக் கவிதை குழைத்துத் தரும் பொங்கும் பூம்புனலில் இருந்து பெண்களுக்காகவே இவர் கொடுத்த பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி என்ற படைப்பைப் பால் வேறுபாடின்றி ரசித்த காலமும் நினைவுக்கு வருகின்றது. ஒருகாலத்தில் எட்டாக் கனியாக இருந்த இன்றைக்கு வானொலிப் பணி என்பது இன்று கையில் கிட்டிய பூமாலையாக வாய்த்திருக்கும் சூழலில் ஒரு வானொலி நிகழ்ச்சியை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு அளவுகோலாகத் திகழ்ந்தவர்களில் இவரும் ஒருவர். சொல்லப்போனால் வானொலித்துறையின் இலட்சணம் என்பது இவர் போன்ற அறிவிப்பாளர்களால் தான் துலங்கியது.
நான்கு வருஷங்களுக்கு முன்னர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் அவர்களை சிட்னியில் கெளரவப்படுத்திய நிகழ்வில் அவரின் பாதம் தொட்டு வணங்கினேன். எங்களைப்போன்ற ஏகலைவர்களுக்கெல்லாம் இவர்கள் தானே காற்றலையில் குருவாக இருந்தவர்கள். அவரோடு தனிப்பட்ட முறையில் பேசும்போது உங்களின் வானொலிப்பணி குறித்த ஒலி ஆவணப்படுத்தல் செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தேன். அது கைகூடும் தருணத்துக்கு முன்னரேயே விடைபெற்றுச் சென்றுவிட்டார்.
வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் குறித்த நினைவுப்பகிர்வைச் செய்யவேண்டும் என்று நினைத்தபோது தானாகவே கிடைத்த பொக்கிஷமாக, நான் பெரிதும் நேசிக்கும் மூத்த ஊடகவியலாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் தன் எண்ண அலைகளைப் பதிவாக்கி மின்னஞ்சல் இட்டிருந்தார். அவரின் குரலிலேயே அதை ஒலிப்பகிர்வாகவும் கேட்டிருந்தேன். உடனே வஅனுப்பிவைத்தார்.
தினகரன் வாரமலரில் ஜீவிதன் எழுதிய "ஓய்ந்தது வானொலிக்குயில்" என்ற ஆக்கத்தையும் இணைத்து ஒரு அஞ்சலிப்பகிர்வைச் செய்து இவருக்குக் காணிக்கை ஆக்கினேன். இதோ அந்தப் பகிர்வு
தரவிறக்கிக் கேட்க
நேரடியாகக் கேட்க
இலங்கை கலையுலகின் துருவ நட்சத்திரம் ராஜேஸ்வரி சண்முகம்.
--------------------------------------------------------------------------------------------------------------------
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
------------------------------------------------------
அத்தனை பணிகளுக்கு மத்தியிலும் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் அனுப்பி
வைத்த கைபேசி குறுஞ்செய்தி - சகோதரி விசாலாக்ஷி ஹமீட் தேம்பி அழுத வண்ணைமும்.
சகோதரர் BH அப்துல் ஹமீட் குரல் கம்ம தொலைபேசி வாயிலாகத் தந்த அந்த சோகத் தகவல் என்னை
அதிர வைத்தது - பதற வைத்தது - துக்கத்தால் தொண்டையை இறுக வைத்தது.
ராஜேஸ்வரி சண்முகம் - இலங்கை கலை உலகின் துருவ நட்சத்திரம் - யாழ்ப்பாணம் சென்ற
இடத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதுதான் இதயத்தைக் கனக்கச் செய்த அந்த
சோகச் செய்தி.
ஒன்றா இரண்டா அறுபது ஆண்டுகாலப் பழக்கம் - கலை உலகில் இணைந்த பயணம். வர்த்தக
ஒலிபரப்பு பிரபல்யமாகு முன்பு, தேசிய ஒலிபரப் பொன்றே கலை உலக ஆக்கங்களுக்கு வடிகாலாய்
அமைந்த காலை, அமரர் “சானா” சண்முகநாதன் நெறியாழ்கையில் கொடி கட்டிப் பறந்த “நாடக
அரங்கில், அச்சாணி போல் திகழ்ந்த இரு அங்கங்கள் நானும் சகோதரி ராஜேஸ்வரி பிச்சாண்டியும்.
ஆண்களில் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் தந்தை டி.எஸ்.பிச்சையப்பா, “மாடசாமி” சோமசுந்தரம், தாசன்
பெர்னாண்டோ, ரொசாரியோ பீரிஸ், விக்டர், ”விதானையார்” கார்த்திகேசு சிவத்தம்பி, வீ.சுந்தரலிங்கம்
”ரேடியோ மாமா” சரவணமுத்து, எம்.எஸ்.ரத்னம், TPO நடராஜா என்று ஒரு ஜாம்பவான்கள் பட்டாளம்.
அவர்களுடன் நானும்..!
பெண்களில் ஃபிலோமினா சொலொமொன், பஞ்சவர்ணம் லக்ஷ்மணன், ஆனந்தி சுப்ரமண்யம் (சூர்யபிரகாஷ்),
சரசாம்பிகை சுப்ரமனியம், ஜோசஃபீன் ரொசாரியோ, ஜோசஃபீன் கோஸ்தா, பரிமளாதேவி விவேகானந்தா, தீரா
ஆறுமுகம் என்று திறமைசால் கலைஞிகள் என்றோர் கூட்டம், அவர்களுள் எழுத்தாளர் சண்முகத்தை மணந்து
கொண்டதால் திருமதி சண்முகமாகிவிட்ட ராஜேஸ்வரியும்..!
எழுத்தாளர்களில் கலாநிதி கைலாசபதி, இலங்கையர்கோன், தாளையடி சபாரத்னம். ஸக்கரியா சிமியோன்,
சண்முகம், நஸ்ருத்தீன், NSM ராமையா, சில்லையூர் செல்வராசன், காவலூர் ராசதுரை, “எஸ்போ” என்ற
அற்புதமான ஆற்றல் மிக்கவர்களின் படைப்புகளை கூர்த்த மதியுடனும், தேர்ந்த ஞானத்துடன், மேற்சொன்ன
கலைஞர்களுடைய அபாரத் திறமையாலும் மெருகுசேர் நாடங்களை உருவாக்கி இலங்கை வானொலி
நிகழ்ச்சிகளிலேயெ “நாடக அரங்கை” தனித்வத்துடன் திகழச செய்தவர் அந்த மாபெரும் கலைஞர் “சானா”
சண்முகநாதன்...!
.
சானாவுக்கு யாரும் - எந்தக் கலைஞரும் தென்னிந்திய நட்சத்திரங்களின் பிரதிபலிப்பு என்று சொல்வது
கட்டோடு பிடிக்காது. அதனால் தன்னை இலங்கை சிவாஜி, இலங்கை MR ராதா என்று சொல்லிக் கொண்டு
வந்தவர்கள் ‘ஒடிசன்’ கட்டத்திலேயே கழற்றி விடப்பட்டு விடுவார்கள்.
ஆனால் இதில் ஒரு நகை முரண் உண்டு. என்னை சிவாஜியாகவும், ராஜேஸ்வரியை நடிகை பத்மினியாகவும்,
விசாலாக்ஷியை நடிகை சாவித்திரியாகவும் வர்ணித்து நேயர்கள் எழுதும் கடிதங்களை தனியாக எடுத்து வைத்து
பிறகு எங்களிடம் ரகசியமாகக் காண்பித்து தானும் குதூகலிப்பார். அத்துடனில்லை, “நீங்கள் நீங்களாக இருக்க
வேண்டும் வேறு யாராகவும் இருக்கக்கூடாது என்பதற்கு ரசிகர்கள் உங்களுக்கு விடும் எச்சரிக்கை இது” என்று அதற்கு
ஒரு புது அர்த்தமும் சொல்வார். ஆனால் நாங்கள் யாரும் யாரையும் ‘கொப்பி’ அடிப்பதில்லை என்பது அவருக்கும்
தெரியும் எங்களுக்கும் நன்றாகத் தெரியும்.
ஒரு முறை ஒரு விருந்தில் என்னை பாடச் சொன்னார்கள். நான் குரலை மாற்றி ஜெயராமன் போலவே “ஈடற்ற
பத்தியின்...” பாடிக் கொண்டிருந்தேன். திடீரென்று, உச்ச ஸ்தாயியில் ஒரு வீறிட்ட அலறல், பிறகு உணர்ச்சிப்
பிழம்பாய், அந்தப் படத்தில் பத்மினி பேசிய வசனம், கைங்கர்யம் ராஜேஸ்வரி..!. சற்று நேரம் அரண்டு அந்தரப்
பட்டுப்போன கூடியிருந்தவர்-களிடமிருந்து கிளம்பிய ஆரவார கோஷம் அந்தக் கட்டிடத்தையே கிடுகிடுக்க வைத்தது.
நானும் ராஜேஸ்வரியும் நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களில் நடித்திருக்கிறோம். ஆனால் மேடை நாடகம்
என்பது ஒன்றே ஒன்றுதான். அது “ லண்டன் கந்தையா “ இந்த நாடகத்துக்கு தொடக்கம் குறித்தவர் இலங்கையர்கோன்
ஆனால் தொடர்ந்து எழுதியவர் சண்முகம்.
நான் நாடக அரங்குக்கு ‘ஒடிசன்’ இல்லாமலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட போது ‘அரைக் களிசான் போட்ட ஒரு 12 வயதுப்
பொடியன். ராஜேஸ்வரி எனக்குப் பிறகுதான் உள்ளே வந்தார். என்னை விட பல வயது மூத்தவர். இலங்கையில் நீ,
நான் என்று பேசும் வழக்கமில்லை. ஆனால் என்னை அவர் அப்படித்தான் அழைப்பார். கேட்டால், “இந்தப் பொடிப்பயல்
என் உடன் பிறவா தம்பி, வேறு எப்படிக் கூப்பிடுவது என்பார். நானும், “சரிதான்... போ.. கிழவி” என்பேன்.
ஆனால் நாடகங்களில், காதல் காட்சிகளில், உருகி வழிவதுண்டு. நாடகங்களை தொடர்ந்து கேட்கும் ஒருவர், “உங்கள்
மகனுடைய போக்கு சரி இல்லை’ என்று என் தந்தையிடம் ‘போட்டுக் கொடுக்க” என் தந்தை மெல்ல ரொசாரியோ
பீரிசிடம் விசாரிக்க, அவரோ, “ ஐயோ, உங்க பையன் பச்சக் குழந்த, அதனாலே நாங்க குழந்தைகளுடைய பால் மாவின்
பெயரான “ கவ் & கேட்” (Cow & Gate) என்று சொல்லித்தான் அவரை செல்லமாக அழைப்போம் என்று சொல்ல, உடனிருந்த
ராஜேஸ்வரி, “ஐயா இது போன்ற ஒரு பிள்ளையைப் பெற நீங்களும் ஜபாரின் அம்மாவும் பெருமைப் பட வேண்டும்”
என்றிருக்கிறார். அதற்கு என் தந்தை, “அவனுக்கு தாயார் இல்லை அம்மா” என்று கண்கலங்க , அதுவரை அது பற்றித்
தெரியாதிருந்த ராஜேஸ்வரி அழுதே விட்டாராம். அதன் பிறகும் ராஜேஸ்வரி என் மீது செலுத்திய பாசமும் பரியும்
உண்மையில் ஒரு தாயுடையது.
சமீபத்தில் கொழும்பு வந்திருந்த போது அவரை தொலை பேசியில் அழைத்தேன். CALLER TUNE என்ன என்கிறீர்கள், தனுஷின்
“கொலவெறி..டி..”. “ கிழவிகளுக்கெல்லாம் ஏன் இந்தக் கொலவெறி..? என்று நான் கேட்ட போது, மறுமுனையில் கேட்ட
கணீர் வெடிச் சிரிப்பு ராஜேஸ்வரியின் ‘ட்ரேட்-மார்க்’. அது இன்னும் என் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ரஸ்மினின் ‘ சமூக வானொலி” நூல் வெளியீட்டு விழாவில், அங்கு வந்திருந்த
பிரமுகர்களிடமெல்லாம், அவர்களது கை எழுத்துக்களை திரட்டி அதை ராஜேஸ்வரியக் கொண்டு என்னிடம் கொடுக்கச்
செய்து எங்கள் இருவரையும் வித்தியாசமான முறையில் கௌரவித்தார்கள்.அப்போது சிவாஜிக்கு பத்மினி அளிக்கும்
கௌரவம் என்றார் அவருக்கே உரிய வாஞ்சையுடன்..!
ராஜேஸ்வரிக்கு அழகான கணீரென்ற குரல் - தெளிவான அட்சர சுத்தமான உச்சரிப்பு - கையாளும் பாத்திரத்தின் மீது பரிபூரண
ஆளுமை - அற்புதமான நடிப்பு. இவை அத்தனையும் ராஜேஸ்வரியின் தனிச் சிறப்புகள் - முத்திரைகள். பிற்காலத்தில்
வர்த்தக ஒலிபரப்பில் ராஜேஸ்வரியும் விசாலாக்ஷியும் கொடி கட்டிப் பறந்ததற்கு அவர்களது சொந்தத் திறமை போக
“நாடக அரங்கு” என்ற பயிற்சிப்பட்டறையில் பெற்ற பட்டறிவும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.
அடக்கத்துடன் ஒன்று சொல்வேன். உலகிலேயே மூத்த தமிழ் ஒலிபரப்பாளர்களாக ஆண்களில் நானும், பெண்களில்
ராஜேஸ்வரியும் இருந்தோம். இன்று அதில் ஒரு பாதி இல்லை. காலம் புதுப் புது கலைஞர்களை தோற்றுவித்துக் கொண்டே
இருக்கும் ஆனால் இழந்தவைகளை ஈடு செய்ய அதனால் இயலாது - முடியாது. அந்த வகையில் ராஜேஸ்வரியினுடையது
ஈடு செய்ய முடியாத பேரிழப்பே.
மூத்த ஒலிபரப்பாளன் என்கிற முறையில் சில நண்பர்கள் சேர்ந்து ஒரு விழா எடுக்க என்னை அணுகினார்கள். அப்படி ஒன்று
நிகழ்வதாயின் ராஜேஸ்வரியையும் இந்தியாவுக்கு அழைத்து அந்த விழாவில் கௌரவிக்கச் செய்ய வேண்டும் என்று அவாக்
கொண்டேன்.
ஆனால், இறைவன் இந்த சாமான்யனை முந்திக் கொண்டு மரணம் என்னும் மஹா பெரிய மகத்தான விருதை - கௌரவத்தை
ராஜேஸ்வரிக்கு வழங்கி விட்டான்.
உள்ளத்து உணர்வுகளை எல்லாம் ஒன்று திரட்டி ஒன்று சொல்கிறேன்... போ கிழவி போ...எங்கள் உணர்வுகளில் என்றென்றும்
கலந்திருப்பாய்....இதயங்களில் நிறைந்திருப்பாய்....கலாபிமானிகளின் நெஞ்சங்களில் கண்னியத்துடன் கொலு வீற்றிருப்பாய்...
கடந்த கால நினைவுகள் எண்னத் திரையில் பயணிக்க... கண்ணீர் கண்களை நிறைக்க பிரியா விடை தருகிறோம்... போ கிழவி..போ.
ஓய்ந்தது வானொலிக்குயில் - ஜீவிதன் (தினகரன் வாரமஞ்சரி)
ஒலிபரப்பு வரலாற்றில் ஒரு சகாப்தத்தை நிறைவு செய்த வானொலிக் குயில் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் வெள்ளிக்கிழமையுடன் நேயர்களிடம் இருந்து நிரந்தரமாக விடைபெற்றுச் சென்றுவிட்டார். வர்த்தக ஒலிபரப்பின் உன்னத இடத்தைப் பிடித்திருந்த அவர் நேயர்கள் மத்தியில் மட்டுமன்றி சக அறிவிப்பாளர்களிடமும் நெருங்கிய பிணைப்பைக் கொண்டிருந்தவர். யாழ்ப்பாணத்தில் அவர் மறைந்த செய்தி உள்நாட்டில் மட்டுமன்றி தமிழகத்திலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் பரவியதும் அனைவரும் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். உண்மையில் பலர் செத்துப்போகிறார்கள், சிலர்தான் காலமாகிறார்கள். உண்மைக் கலைஞர்கள் என்றுமே அழிவதில்லை. அவர்கள் நிரந்தரமானவர்கள் என்று கவியரசர் கண்ணதாசன் அப்போதே சொல்லிவிட்டார். அந்த வகையில் தமிழர் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பவர்தான் ராஜேஸ்வரி சண்முகம்.
அறிவிப்புத்துறைக்கு வருபவர்களின் வரலாறு ஒருவருக்கொருவர் வித்தியாசப்படும். ஆனால் பெரும்பாலானவர்களின் வரலாறு வானொலி சிறுவர் மலருடன்தான் ஆரம்பமாகிறது. அவ்வாறே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குப் பிரவேசித்த அவர், நாடகத்துறையில் பிரகாசித்து அறிவிப்பிலும் நிகரற்றவராக விளங்கினார். பெண் அறிவிப்பாளர்களில் கம்பீரமானவராகத் திகழ்ந்து உலகத் தமிழர் நெஞ்சங்களில் இடம்பிடித்துவிட்டார் என்றால் மிகையில்லை. அறிவிப்புத்துறைக்குள் வருபவர்கள் தாம் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதை எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளிக்காட்டக்கூடாது. அப்படியொரு எண்ணத்தை நேயர்களுக்கு ஏற்படுத்தாதவாறு அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று மூத்த ஒலிபரப்பாளர்கள் சொல்வார்கள். அவ்வாறு அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒலிபரப்புத்துறையில் அனைவரையும் தமக்குள் கட்டிப் போட்டவர் ராஜேஸ்வரி சண்முகம். 1969 ஆம் ஆண்டு பகுதி நேர அறிவிப்பாளராகக் கடமையேற்று 1971 இல் தயாரிப்பாளராகி 1974 ஆம் ஆண்டு நிரந்தர அறிவிப்பளராக நியமனம் பெற்றவர். 1982 ஆம் ஆண்டு முதற்தர அறிவிப்பாளராகவும் 1985இல் அதி உயர்தர அறிவிப்பாளராகவும் உயர்ந்துசென்று வானலைகளைச் சிறப்பித்தவர். தமிழ் ஒலிபரப்புத்துறையில் என்னதான் போட்டி பொறாமைகள் நிறைந்து காணப்பட்டாலும் ராஜேஸ்வரி சண்முகம் எதனையும் அலட்டிக்கொள்ளாமல் ஏனையவர்களையும் தட்டிக்கொடுத்து ஒரு தனியிடத்தைப் பிடித்து வைத்திருக்கிறார் என்பதை தற்போதைய அறிவிப்பாளர்கள் அவரது பெருமைகளைச் சொல்லி நெகிழ்ந்துபோவதிலிருந்து அறிய முடிகிறது. ஆண் அறிவிப்பாளர்களில் கே.எஸ்.ராஜா எவ்வாறு நேயர் நெஞ்சங்களில் நிரந்தரமாய் குடிகொண்டிருக்கிறாரோ அதேபோன்று பெண் அறிவிப்பாளர்களில் ராஜேஸ்வரி சண்முகம் மக்கள் மனங்களில் நிரந்தரமாய் அமர்ந்திருக்கிறார்.
1938ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் திகதி பிறந்த அவர் 74ஆவது வயதில் இறக்கும் வரை ஒலிவாங்கியைப் பிடித்து அறிவிப்புச் செய்தவர். தாம் பிறந்த பிரதேசத்தையோ வயதையோ அறிந்துகொள்ள முடியாத வகையில் அறிவிப்பைத் தமது முழு மூச்சாகக் கொண்டு பணியாற்றியவர் ராஜேஸ்வரி சண்முகம். அனைவருடனும் இன்முகத்துடன் பழகுவதால் அவரது அறிவிப்புக்கு அடுத்தபடியாக அவரின் பெருந்தன்மையான குணத்தின் பெருமை போற்றப்படுகிறது. வாரமஞ்சரிக்காக ஒரு நேர்காணலைத் தாருங்கள் அக்கா என்றால், அதவிடுடா, நான் நிறைய கவிதைகள் எழுதி வைத்திருக்கிறேன். அதனைப் பிரசுரிக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்பவர். யாழ்ப்பாணத்தில் இறப்பதற்கு முன்னரும்கூட அங்கிருந்து தொலைபேசியில் வாரமஞ்சரியுடன் தொடர்புகொண்டு பேசியிருந்தார். தாம் ஓர் ஒலிபரப்பாளர் என்றாலும் எழுத்துத் துறையில் அவர் தனித்திறமையுடன் திகழ்ந்தார். அதனால் ஏனைய ஊடகவியலாளர்க ளுடனும் மிகவும் பண்பானவராகப் பழகிவந்தார். இலங்கை வானொலியில் மிக நீண்டகாலமாக ஒலிபரப்பாகி வரும் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியை அவர் தொகுத்தளித்த பாணி தனித்துவமானது. பேர் கேட்ட அனைவரையும் நீராட்ட வரும் பொங்கும் பூம்புனல் என்று இரண்டு வரிக் கவிதையுடன் அவர் பாடலை ஒலிபரப்பிய விதம் நேயர்களை நிகழ்ச்சி நிறைவுபெறும் வரை கட்டிப்போட்டுவிடும். தவிரவும் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி, வீட்டுக்கு வீடு முதலான நிகழ்ச்சிகளையும் வர்த்தக ஒலிபரப்புகளையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவ்வாறான பெருமைக்கும் திறமைக்கும் உரிய அவரை பல விருதுகள் தேடிவந்திருக்கின்றன. என்றாலும் கவியரசு வைரமுத்து வழங்கிய வானொலிக் குயில் பட்டம்தான் அவர் பெயருடன் நிரந்தரமாய் ஒட்டிக்கொண்டிருக்கிறது. காற்ற லையில் அந்தக் குயில் வரும் வரை காத்திருப்போம் நாம்.
நன்றி: திரு.அப்துல் ஜப்பார் அவர்கள்
தினகரன் வார மஞ்சரி
திருமதி ராஜேஸ்வரி சண்முகம் குரல் பகிர்வின் சில துளிகள் நன்றி யாழ் சுதாகர் அவர்கள்
Monday, March 26, 2012
ராஜேஸ்வரி சண்முகம் என்றதோர் வானொலிக்குயில் ஓய்ந்தது
Posted by
கானா பிரபா
at
10:17 PM
11
comments
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Thursday, March 01, 2012
ஏ எல் எடுத்துட்டு வீட்டில சும்மா இருக்கிறன்
"சொல்லுங்க, நீங்க இப்ப என்ன பண்ணீட்டிருக்கீங்க"
"ஏ எல் எடுத்து வீட்டில சும்மா இருக்கிறன் அக்கா"
மேற்சொன்ன சம்பாஷணையை வழக்கமாக இலங்கையின் வானொலிகளைக் கேட்பவர்கள் நிதமும் கேட்கும் அம்சமாக இருக்கும். ஆண்டாண்டுகள் கடந்தாலும் அறிவிப்பாளர்களும் இந்தச் சம்பிரதாயபூர்வமான கேள்வியை விடமாட்டார்கள், கலந்து கொள்ளும் நேயர்களில் மேற்குறிப்பிட்ட தரப்பினரும் இதே மாமூல் பதிலையே பெரும்பாலும் உதிர்ப்பார்கள். இப்படித்தான் அன்று ஒரு தனியார் வானொலியில் வந்த சம்பாஷணையைக் கேட்டபோது தாயகத்தின் அந்த ஏ.ஏல் எடுத்துட்டு வீட்டில சும்மா இருந்த நினைவுகள் கிளர்ந்தெழுந்தன.
ஏ.எல் (Advanced Level) என்பது பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுக்கான கல்லூரிப்பருவம். ஓ.எல் (Ordinary Level) வரைக்கும் நீல நிறக் கட்டைக்கழுசானும், அந்தக் கழுசானுக்குள் செருகிய அரைக்கை வெள்ளைச் சேர்ட்டோடும் கடந்த பதினோரு ஆண்டுப் பள்ளிப்பருவத்தின் பின்னான ஏ.எல் என்ற அடுத்த இரண்டு வருஷங்களும் வாழ்க்கையையே தீர்மானிக்கும் காலம். விரும்பிய துறையை எடுத்துப் படித்துப் பல்கலைக்கழகத்துக்குப் போவதற்கான வெட்டுப்புள்ளியையும் கடந்தால் தப்பலாம். அதில் தோற்றால் விரும்பாத துறைகளில் ஏதாவது ஒன்றைப் பிடித்துக் காலம் முழுவதும் தள்ளவேண்டும் என்ற கொடுப்பினை. அதனாலேயே இந்த ஏ.எல் என்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலமாக அமைந்து விடும்.
ஓ.எல் எடுத்த கையோட,றிசல்ட்ஸ் வருகுதோ இல்லையோ நான் சயன்ஸ் தான் படிப்பன் எனக்கு பயோ (Bio Science) தான் படிப்பன் என்று பெண் பிள்ளைகளும், "நான்தான் பொயிலைக் கண்டுகளுக்குள்ள மல்லாடுறன் நீயாவது இஞ்சினியரா வரப்பார்" என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக தேப்பன்காரன் சொன்ன வேதவாக்கில் கணிதபாடத்துறையில் பெரும்பான்மை ஆண் சமூகம் முடிவெடுத்துவிடும். இலக்கியவெறி கொண்டு நளவெண்பாவைப் பாடமாக்கியும் (பின்னாளில் காதலுக்கு உதவும் எண்டு தான்) சுஜாதா, செங்கை ஆழியானைக் கடவுளர்களாகக் கொண்டாடி அலைந்த எங்களுக்கு இருக்கவே இருக்கு கொமேர்ஸ் அல்லது ஆர்ட்ஸ்.
ரியூஷன்காரர்களுக்கும் கொண்டாட்டம் தான்.
"ஓ.எல் எடுத்த மாணவர்களே உங்களுக்கான வாசல் திறந்திருக்கிறது, ஏ.எல் புகுமுக வகுப்புக்கள் ஆரம்பம்" என்று ஊரில் ஒரு மதில் விடாமல் ஒட்டித் தீர்த்துவிடுவினம்.
சத்தீஸ் மாஸ்டரிட்ட கெமிஸ்ரி கிளாஸ் என்ன கிழமை, எத்தினை மணிக்கு என்றெல்லாம் மனப்பாடம் செய்து சைக்கிளில் சுழற்றியது தனிக்கதை. கொமேர்ஸ் படிக்கப்போறவனுக்கு கெமிஸ்ட்ரி கிளாஸ் ரைம்ரேபிள் எல்லாம் ஏன் தெரியோணும் எண்டு குறுக்கால கேக்கக்கூடாது கண்டியளோ. "என்ன தம்பி உம்மை பிறவுண் றோட், நீராவியடிப் பக்கம் அடிக்கடி காணுறனான்" என்று சி.ஐ.டி.வேலை செய்பவருக்கெல்லாம் புதுசு புதுசாகக் கதை எல்லாம் ரெடியாக்கவேண்டி அதுவே ஒரு இலக்கியக்காரன் ஆக்கிவிடும்.
இந்தத் தேனிலவு எல்லாம் றிசல்ட்ஸ் வரும் வரைக்கும் தான். ஓ.எல் பரீட்சை முடிவுகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடும். அதுவரை ஃபீலா காட்டி பயோ படிச்சவ பாலா மாஸ்டரிடம் சிந்துவெளி நாகரீகம் படிச்சுக் கொண்டிருப்பா, இஞ்சினியர் கனவோடு சயன்ஸ் அக்கடமிப்பக்கம் போறவர் விக்னாவில் வன்னியசிங்கம் மாஸ்டரின் தொங்கல் கணக்குக்கு விடை தேடிக்கொண்டிருப்பார். சத்தமில்லாமல் செஞ்சரி அடிச்சுப்போட்டு கணிதத்துறையில் கைவைப்பவரைப் பார்த்து "என்ன இருந்தாலும் அவனுக்கு லக் அடிச்சிருக்கப்பா" என்று அதிஷ்டலாபக்கணக்குப் போடுவார்கள். ஓ.எல் இல் நல்ல பெறுபேறு எடுத்துப் பாஸ் பண்ணியர்வர்களுக்குப் பெரும்பாலும் ஆண்டவன் ஏனோ ஏ.எல் இல் அனுக்கிரகம் கொடுப்பதில்லை என்பது
எழுதப்படாத விதி. "ஓ.எல் வரைக்கும் மாய்ஞ்சு மாய்ஞ்ச்சு படிச்சவன் பிறகு விளையாட்டா எடுத்துப்போட்டான்" என்று பெற்றாரின் புலம்பல்கள் ஒருபுறம்.
இரண்டு வருஷப் பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வை நோக்கிய படிப்பு ஒரு தவம். கிடைக்கிறதைச் சாப்பிட்டுவிட்டு, ரீவி, றேடியோப் பக்கம் கண், காது போகாமல், ராணி வார இதழைக்கூடச் சீண்டாமல் படிப்பு படிப்பு படிப்பு. ஒரு வாத்தி காணாதெண்டு ஸ்பெஷல் கிளாசுக்கும் வேற. அங்கினை இங்கினை அரக்கினாலும் தம்பி பிராக்குப் பாராமல் படியுங்கோ என்று எல்லா இடமும் சி.ஐ.டிக்கள். ரியூஷன் செண்டரின் ரிவிஷன் வகுப்பு எல்லாம் முடிந்த கையோடு, சோதினை வரும் நாளை எண்ணிக்கொண்டு கோயில் குளம் எல்லாம் கூடப் போகாமல், வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்து, ஷேவும் எடுக்காமல், இசைஞானி இளையராஜா அளவுக்குப் பொச்சுத் தாடி எல்லாம் வளர்ந்து என்னையே எனக்குக் கண்ணாடியில் அடையாளம் காணமுடியாமல் போய்விட்டது. ஒருநாள் வீட்டுக்கு வந்த சுப்பையா குஞ்சியப்பு, "தம்பி! நீர் ஆற்றை பெடி" என்று என்று கேட்குமளவுக்கு.
எப்படா ஏ.எல் சோதினை எல்லாம் முடியும் என்றிருந்து, கடைசிச் சோதனை முடிச்சதுக்குப் பிறகு பூஸா முகாமில் இருந்து வெளியேறின குஷி தான். அதுவரை விட்டுவச்ச படங்களை எல்லாம் வீடியோக்கடையில் எடுத்து, இருநூறு ரூவாக்கு ஒரு லீட்டர் என்ற கணக்கில் ஆளாளாளுக்குப் பங்கு போட்டு ஜெனரேட்டர்காரனுக்கும் காசு குடுத்து, சாமம் சாமமா நாலைஞ்சு படத்தை ஒரே இரவில் பார்த்து முடித்து விடியக்காத்தாலை இரை மீட்கும் போது, அஞ்சலி படத்தில சின்னத்தம்பி குஷ்பு போவோமா ஊர்கோலம் பாடுற மாதிரியும், கிழக்கு வாசல் படத்திலை ரேவதி வந்து "எந்திரு அஞ்சலி எந்திரு" என்பது போலவும் ஒரே கலவையாகக் குழப்பி அடிக்கும். பிறகு நாள் முழுக்க முதல் நாள் பார்த்த படங்களை விகடன் விமர்சனக்குழு ரேஞ்சில் அக்குவேறு ஆணிவேறாகப் பிரிச்சு மோய்வோம். மாலை ஆனால் இருக்கவே இருக்கு மடத்துவாசல் பிள்ளையாரடி. ஆறு மணிப்பூசை முடிச்சு ஐயர் நடை சாத்திய பின்பு தான் எங்கட அர்த்த ஜாமப் பூஜை ஆரம்பமாகும். பிரபு, குஷ்புவில் ஆரம்பித்து உள்ளூர்ப் பிரபு, குஷ்பு, ரேவதி எல்லாரையும் பற்றிக் கதைச்சு முடிக்க ஒரு மணி இரண்டு மணியாகும். ஒரு பக்கம் ஆட்லறி ஷெல்லடியும், ஆங்காங்காங்கே ஹெலிகொப்டரும், பொம்பரும் தாளப்பறந்து குண்டு போட, மணிக்கூட்டுக் கோபுரப்பக்கம் ஓடி ஒளிந்து விட்டு மீண்டும் பேச்சுக்கச்சேரி விட்ட இடத்தில் இருந்து போகும். இரண்டு வருஷங்கள் பேசாததை எல்லாம் பேசித் தீர்க்கவேணும் எண்ட கெடுவோ என்னவோ.
இந்த மாமூல் வாழ்க்கை கொஞ்சக்காலத்தில் அலுப்படிக்கத் தொடங்கிவிடும்.
"உங்கட காலத்தில திலீபன் எண்டெல்லாம் தியாகி இருந்தினம் நீங்கள் என்ன செஞ்சனீங்கள் அப்பா எண்டு உன்ர பிள்ளை கேட்டால், கொம்மாவுக்குப் பின்னால சைக்கிள்ள திரிஞ்சனான் எண்டோ சொல்லுவியள்" புதுவை இரத்தினதுரை ஒருமுறை பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது.
"யூனிவேர்சிற்றிக்குப் போனா இங்கிலீஸ் தெரியோணுமாம்" என்று ஏ.எல் பரீட்சை எடுக்கமுன்னரேயே ஒரு பகுதி ஸ்போக்கின் இங்கிலீஷ் கிளாசுக்குப் போய்விடும்.
"தம்பி சும்மாதானே இருக்கிறாய் உந்த மிளகாய்த்தூளை அரைச்சுக் கொண்டுவா" - அம்மா
"தம்பி உன்ரை சைக்கிளை ஒருக்கால் தா, உதிலை ஒருக்காப் போட்டு வாறன், நீ வீட்டில தானே இருக்கிறாய்" - அப்பா
"மேனை, என்னை ஒருக்கால் பிள்ளையாரடியில இறக்கிவிடுறியோ?, உனக்கு இப்ப அவசரம் இல்லைத் தானே" - அம்ம்மா
"முத்ததிலை வடகம் காயப்போட்டனான், கோழி, கீழி தின்னாமல் ஒருக்கால் பார்த்துக் கொண்டிருக்கிறியா?" - பக்கத்து வீட்டுக்காரர்
இப்படியாகத் தன்மானத்தை உரசிப்பார்க்கும் செயல்களோடு கொஞ்சம் கொஞ்சமாக அதுவரை கட்டிக்காத்த, இஞ்சினியர், எக்கவுண்டண்ட், டாக்குத்தர் கனவுகளுக்குத் தற்காலிக ஓய்வு கிடைக்கும்.
அதுவும் ஏ.எல் றிசல்ட்ஸ் வந்து வாழ்க்கையே திருப்பிப் போட்டுவிட்டால் சொல்லவே வேண்டாம். அடுத்த முறை அண்ணன் லண்டனில் இருந்தோ, பிரான்ஸில் இருந்தோ, அல்லது கனடாவில் இருந்தோ (அவர் எங்கை இருப்பார் என்று தீர்மானிப்பது அந்தந்த நாட்டு இமிக்கிறேசன் ஆச்சே) அழைக்கும் போது,
"தம்பி, உவன் ஏ.ஏல் எடுத்திட்டான் பேராதனைக்குப் போற கொடுப்பினை இல்லை, அங்கை எடன்"
அம்மாவின் நினைப்பு அண்ணன்தான் ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வச்சிருக்கிறார் என்று. ஊர்க்காரர்களுக்கு ஓப்பிண் விசாவில இருந்து எந்த நாட்டுக்கு ஸ்ருடண்ட் விசாவில் போகலாம் என்று வீரகேசரி வாரமலரைப் பார்த்தாவது புதுப்பித்துக் கொள்ளுவினம்.
"அப்ப செக்கண்ட் சை ட்ரை பண்ணேல்லையோ" தன்னுடைய மகன் ஓ.எல் இல் குண்டடிபட்ட கவலையில் இரண்டு வருஷகாலம் காட்டுத்தீயை மனசுக்குள் வச்சிருந்து கொட்டித்தீர்ப்பார் ஒரு உறவுக்காரர்.
ஆண்களின் நிலை இதுவென்றால் பெண்டுகள் பாடு சொல்லவே வேண்டாம்.
"ரியூசனுக்குக் காசைக் கரியாக்கினது போதும் உந்தக் காசை வச்சிருந்தால் கொழுத்த சீதனத்தோட நல்ல டொக்டர் மாப்பிளைக்குக் கட்டிவைக்கலாம்" என்று சின்னத்திரை வில்லிகளாக அம்மாக்கள் மாறி அந்தக் குமருகளைக் கரை சேர்க்க பிரபல திருமண புறோக்கரைத் தேடுவினம்.
எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு மனம் போன போக்கில், "போவோமா ஊர்கோலம்" பாடிக்கொண்டு உள்ளுக்குள் ஆயிரம் கனவுகளோடு உயரப்பறக்கும் அந்தக் காலத்து இளமை, அதில் தன்னந்தனியானாக நாடுகள் எல்லாம் களவு களவாகப் பயணித்து, ஈற்றில் அகதி அந்தஸ்து என்ற முகவரியோடு தன்னைத் தொலைத்து வாழும் எதிர்காலம் அப்போது தெரியாது.