" உதேன், கட்டிவச்ச குழையெல்லாம் அப்பிடியே கிடக்குது?
,ஏன் சாப்பிடேல்லை?
இல்லாட்டால் இந்தா, இந்தக் கஞ்சியைக் குடி"
அப்பா தன் வளர்ப்பு ஆட்டுடன் கதைத்துக் கொண்டிப்பார்.
" அப்பா! வயசு போன காலத்தில ஏன் உந்த ஆடு வளர்ப்பு?" அங்கலாய்ப்போடு நான்.
" தம்பி! நீங்களெல்லாம் இங்கை இல்லாத குறைக்கு ஒரு ஆறுதலுமாச்சு"
என்று மெல்லச் சிரிப்போடு என் அப்பா சொல்வார்.
குடும்பத்தில் எல்லாப் பிள்ளைகளும் வெளியேறிய வெறுஞ் சூழலில் இதுவொன்றும் புதிதல்ல எங்கள் ஊர்ப்பக்ம்.
ஒவ்வொருவரின் வளர்ப்புப் பிராணிகளும் வளர்ப்புப் பிள்ளைகள் போலே ஆகிவிடுவதுமுண்டு.
நேற்று 777 Charlie படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது என் நினைவோட்டம் ஈழத்தில் தனிமையில் இருக்கும் அந்த ஜீவன்களையும் தொட்டு விட்டு வந்தது.
ரூபவாஹினியின் ஆரம்ப காலத்துத் தொடரில் வந்த Lassie வீரதீர நாயும் நினைவுக்கு வந்து போனது.
எதிலும் பிடிமானம் இல்லாத, தன்னைப் பற்றிக் கூடக் கவலைப்படாதவன் வாழ்க்கையிலும் ஈரம் பொசியும் என்பதை மனிதனுக்கும், நாய்க்கும் இடையிலான பந்தம் வழியாக வெளிப்படுத்துகின்றது இந்தப் படைப்பு.
முரட்டுத்தனமான இளைஞன், அவனைப் பயத்தோடும், சில சமயம் வெறுப்போடும் பார்க்கும் சுற்றம் என்று ஆரம்பிக்கும் போதே ஏதோ மாமூல் சினிமாவுக்குத் தானே தாவப்போகிறது என்ற தீர்மானங்களைச் சில நிமிடங்களிலேயே பொடியாக்கி விட்டு,
தர்மா என்ற அந்தத் தனியனோடும், அவனோடு வந்து சேரும் சார்லி என்ற நாயோடும் எம் மனம் ஒட்டியுறவாடுகின்றது.
அதனால் தான் பட ஓட்டத்தின் இறுதியில் அந்தப் பனி மழையில் நாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டே அவன் கதறும் போது நம் மனமும் ஓலமிட்டு அழுகின்றது.
777 Charlie வெறும் கன்னட சினிமாவாகவோ, அல்லது அதைச் சற்றே விரித்து இந்திய சினிமாகவோ கொள்ளக் கூடாது, இன்னும் பரந்து விரிந்த உலக சினிமா என்ற பொது இலக்கணத்தில் அமையக் கூடிய சர்வ இலட்சணமும் நிரம்பியது. தர்மாவும், அவனைச் சுற்றிய சூழலும், அவன் புழங்கும் மனிதர்களுமாக எல்லாமே பொதுத்தளத்தில் வைத்துப் பார்க்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இங்கே வலிந்திழுத்த சண்டித்தனங்களோ, காதல் ஊடல்களோ, நரகச் சுவைகளோ அன்றி காட்சிகளில் படிமானங்கள் வழியே இயல்பாகக் கடத்தப்படும் ஆக்ரோஷம், மனிதாபிமானம், எள்ளல்கள் என்று அது படைப்பைச் சுற்றியே தேவையோடு பயணிக்கின்றது.
உணர்வோட்டம் என்பதன் அர்த்தத்தைப் படம் தொடங்கி அதன் முடிவு எல்லை வரை அனுபவிக்க முடிகிறது.
தன் சிறு வயதிலேயே குடும்பமே விபத்தில் பலியாக, தனியன் ஆகும் தர்மாவுக்குத் தொழிற்சாலை வேலை முடிந்தால் அந்தச் சிறு தொலைக்காட்சிப் பெட்டியில் சார்லி சாப்ளின் படம், பியர், சிகரெட், இரண்டு இட்லி. அதைத் தவிர யாரையும் தன்னிடம் அண்டவிடாத ஒரு வளையத்தோடு இருப்பவன். இவனிடம் எதிர்பாராதவிதமாக வந்து சேரும் நாயை வெறுப்போடு விரட்டியடிக்கிறான். ஆனால் சந்தர்ப்பங்களும், சூழலும் அந்த நாயை அவனோடேயே வைத்திருக்க வேண்டி வருகிறது. ஒரு கட்டத்தில் அவனிடமிருந்து அது விலகிப் போக வேண்டிய நேரம் அவன் மனதில் மாறுதல் எழும் காரணி உருவாகின்றது.
மெல்ல மெல்ல பிரிக்க முடியாத பந்தம் அந்த இரு ஜீவனுக்குள்ளும் தேங்கி விடுகிறது. தொலைக்காட்சியில் பார்த்து ஆசைப்படும் பனிப் பொழிவைத் தன் சார்லியும் காண வேண்டும் என்று அதனைச் சுமந்து கொண்டு இமாசலப் பிரதேசம் வரை பயணிக்கின்றான்.
அதுநாள் வரை அவன் வாழ்க்கையில் கண்டிராத அனுபவங்களை சார்லி வழியாக தர்மாவின் வாழ்க்கையை மாற்றி விடுகின்றது என்ற உணர்வுமிக்க காவியம் இந்தப் படம்.
அந்த இட்லிக் கடைத் தாத்தா. பாட்டிகேட்ட இரண்டு இட்லிக்கும் மேலாக ஒன்றை ஆசையாகத் திணித்து வைக்கும் பாட்டி, ஆனால் அந்த மிச்ச ஒன்றை அவன் தூர வீசும் போது அது அந்த நாய்க்குப் பசியாற்றி விளைவிக்கும் நேசம். பின்னர் தன் முரட்டுத்தனத்தை எல்லாம் ஒழித்து விட்டு தாத்தாவுக்கு ஆசையோடு பிரம்பு வாங்கிக் கொண்டு போவது, எங்கோ தூர தேசத்தில் இருந்து பாட்டியின் குரலைக் கேட்க ஆசைப்பட்டு தொலைபேசி அழைப்பெடுப்பது,
புதிய விருந்தாளி நாய்க்காக அவனோடு ஒட்டியுறவாடும் பக்கத்து வீட்டுச் சிறுமியின் நேசம், சிரிப்பு மூட்டிக் காரியம் சாதிக்கும் மிருக வைத்தியர், பிராணிகள் மீதான நேசத்தைக் காட்டும் அந்தப் பெண்ணும் குழுவினரும் என்று 777 Charlie கதையோட்டத்தில் கவிதை மாதிரியான காட்சிகளோடு இணையும் கதாபாத்திரங்களும், நிகழ்வுகளும்.
இந்த மாதிரியான நேர்த்தியான படைப்புக்குத் துணை நிற்கும் பெரும் பலமாக நொபின் பால் இசை, அரவிந்த் காஷ்யாப் ஒளிப்பதிவு கூடவே நச்சென்ற படத்தொகுப்பும். அதுவும் இரவு நேரங்களிலும், வட இந்திய தேசங்களிலும், பனிமலைகளிலும் தாவும் கேமரா அப்படியே நம்மையும் கூடவே இழுத்துப் போகும் பிரமை.
விரக்தி மனநிலையோடு இருப்பதில் இருந்து மெல்ல மெல்லக் கரைந்து சரணாகதி அடையும் ஒரு மனிதனின் உணர்வை அப்பட்டமாகப் பிரதிபலிக்கும் ரஷித் ரெட்டி படம் முழுக்க மிக நடிப்பே இல்லாமல் நம்மை ஈர்க்கிறார். அதுவும் சார்லிக்கு நோய் வந்ததைக் கேட்டுத் துடிதுடிப்பதும் அந்த உயிரினத்துக்காத் தன்னையே ஒப்படைப்பதுமாக மனுஷர் வாழ்ந்திருக்கிறார்.
தேவர் பிலிம்ஸ், இராம நாராயணன் காலத்து ஆளாக இல்லாமல் ஏதோ ஒளித்து வைத்த காமராவுக்கு முன்னே நிகழ்வோட்டம் காட்டும் யதார்த்த நாய்க்குட்டி.
விலங்கு நலச் சேவகி சங்கீதா ஶ்ரீஹரி, விலங்கு வைத்தியர் ராஜ் பி.ஷெட்டி ஆகிய முக்கிய கதாபாத்திரங்களின் தேர்வு தான் இந்தப் படத்தை மிக நெருக்கமாக இன்னும் வைத்திருக்கின்றது.
கொஞ்ச நேரமே வந்தாலும் நெஞ்சை அள்ளும் தமிழுக்கு அந்நியோன்யமான பாபி சின்ஹா
தன்னைக் காக்க வந்த அந்த உயிரினத்துக்காக, அது ஆசைப்பட்ட பனிப்பொழிவு வரை அவன் அழைத்துப் போகும் காட்சியில் நெகிழ்ந்து நெக்குருகி விடும் நம் மனம்.
“சார்லி மாதிரி எத்தனையோ ஜீவன்கள் காத்திட்டிருக்கு,
ஒரு நல்ல மனுஷன் கிடைக்க, அரவணைப்புக்காக”
என்ற செய்தியோடு 777 Charlie நிறைவுறுகின்றது.
இந்தப் படம் பார்த்த பின்னர் சார்லியும், தர்மாவும் நம்மில் ஒருத்தர் ஆகிவிடுவார்கள்.
“அழகானதே பூம்பாதையில் நம் பயணம்
விழியோரம் விதை பூக்கும் அழகான தருணமே
அன்பைச் சொல்லும் பேராலயம் உறவே....”
https://www.youtube.com/watch?v=VaKaGckKY9w
கானா பிரபா