
இலக்கமற்ற பிரைவேட் நம்பர் ஒன்றின் மூலம் என் கைத் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகின்றது. "கொட்டி (புலி)" என்று ஆரம்பித்து ஏதேதோ சிங்களத்தில் வசவு வார்த்தைகளாக வந்து விழுகின்றது. நான் நிதானிப்பதற்குள் அந்தத் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டு விடுகின்றது.
இது நடந்து அடுத்த ஞாயிறு காலை உடற்பயிற்சி நிலையத்துக்குக் காலை செல்லும் போது அதுவரை அணைத்திருந்த கைத் தொலைபேசியை விழிக்க வைக்கிறேன். முந்திய சனி இரவு 11.09 இற்கு என் கைத் தொலைபேசியில் ஒரு மெஜேச் பதிவாகியிருக்கிறது, அதுவும் சிங்களத்தில். நேரே சிங்களம் தெரிந்த நண்பர் வீட்டுக்கு என் காரைச் செலுத்தி, அவர் முன் அந்த கைத் தொலைபேசியில் பதிவான தகவலை ஒலிக்க விடுகின்றேன்.
"உங்களை எல்லாம் கொல்லாமல் விட மாட்டோம், சரியா?" இது தான் அந்தச் சிங்களப் பேச்சின் சாராம்சம்.
எனது கைத் தொலைபேசியின் நிறுவனத்துக்கு அழைக்கிறேன். எல்லாவற்றையும் விபரமாகக் கேட்ட மறுமுனை வாடிக்கையாளர் சேவைக்காரர் "இந்தப் பிரச்சனைக்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால்" என்று தொடங்கி ஏற்கனவே பாடமாக்கியிருந்ததை கிளிப்பிள்ளை போல ஒப்புவிக்கிறார்,
1. உங்கள் தொலைபேசி இலக்கத்தை மாற்றுங்கள் (இலக்கத்தை மாற்றினால் மட்டும் என் புது இலக்கத்தைத் தேடி எடுப்பது அவ்வளவு கஷ்டமா என்ன?)
2. பொலிசாருக்கு ஒரு புகார் கொடுத்தால் அவர்களுக்கு இந்த அனாமோதய அச்சுறுத்தல் யாரால் வந்தது என்ற விபரங்களைக் கொடுப்போம்.
இதை விட வேறு ஏதாவது உதவி தேவையா என்று தேனாகப் பேசுகிறது மறுமுனை. இதுவே போதும் என்று வெறுப்போடு தொலைபேசியின் வாயை மூடுகிறேன்.
ஆற்றாமை, கோபம் எல்லாம் கிளப்ப நேரே எங்கள் பிராந்தியப் பொலிஸ் நிலையத்துக்குக் காரைச் செலுத்துகின்றேன்.
ஒரேயொரு இளம் பொலிஸ்காரர் அங்கே கடமையில் இருந்தார்.
இதுவரை வந்த அநாமோதய அழைப்புக்களைப் பற்றிய விபரங்களையும் சொல்லி, ஏற்கனவே பதிவான அந்தத் தகவலையும் ஒலிக்க விடுகிறேன். எல்லாவற்றையும் கேட்ட அந்த பொலிஸ்காரர்,
"சரி நான் ஒரு புகாரைப் போடுகிறேன் ஆனால் என் மேலதிகாரி தான் ஏதாவது செய்யவேணும், ஆனால் இது மாதிரி புகாருக்கெல்லாம் நடவடிக்கை எடுப்பாரா என்பது சந்தேகமே" என்று சொல்லி வைத்தார்.
"தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், இந்த நாட்டில் இப்படியான கேவலமான காரியங்களைச் செய்பவர்களைக் கண்டித்து வையுங்கள், எனக்கு இந்த நபர் யார் என்று சொல்லத் தேவையில்லை" என்று இறைஞ்சுகிறேன்.
"ஒகே பார்க்கலாம்" என்று என் நேரம் முடிந்ததாகக் குறிப்பால் உணர்த்துகிறார் அந்தப் பொலிஸ்காரர்.
வீட்டுக்கு வந்து இரு மணி நேரம் கழித்து மீண்டும் அந்த பொலிஸ் நிலையத்துக்கு போனில் அழைக்கிறேன். அதே பொலிஸ்காரர் தான் மறுமுனையில்
"என் புகாரில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா சேர்" என்று வினவுகிறேன்.
"என் மேலதிகாரி சொல்லிவிட்டார் இதுக்கெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாதாம்"
"ஏன் என்று அறியலாமா"
"இது மாதிரி ஒரு நாளைக்கு நூறுக்கு மேல் புகார் வருது, இதுக்கெல்லாம் நாங்கள் எங்கள் நேரத்தை செலவிட முடியாது"
"ஆனால் எனக்கு இரண்டாவதாக வந்தது கொலைப் பயமுறுத்தல் ஆயிற்றே"
"இப்படி போனில் பேசுபவன் எல்லாம் கொலை செய்ய மாட்டான்"
"ஒருக்கால் அடுத்த முறை அவன் சொன்னதை செய்து காட்டினால் என்னவாகும்?"
"திரும்பவும் சொல்கிறேன், சொல்பவன் எல்லாம் செய்ய மாட்டான்"
"சேர்! நான் கடந்த 12 வருஷகாலமாக இந்த நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட குடிமகன், என்னைக் காப்பது இந்த நாட்டின் காவலர்கள் உங்கள் வேலை இல்லையா"
"லுக்! என் நேரத்தை விரயமாக்க வேண்டாம், பயமாக இருந்தால் வந்து எங்கள் பொலிஸ் ஸ்ரேசனில் வந்து தங்கு"
"சரி! நான் கொடுத்த புகார் மனுவின் விபர இலக்கத்தை எடுக்கலாமா?"
ஒரு ஐந்து நிமிடம் கழித்து "இதோ எழுதிக் கொள்" என்று அப்போது தான் புகாரைத் தயார் பண்ணியது போலச் சொல்லி முடிக்கிறார்.
எனது ஆற்றாமை ஓயவில்லை. எமது பிரதேசத்தைக் கட்டுப்படுத்தும் காவல்துறை கண்காணிப்பு மேலிடத்துக்கு தொலைபேசுகிறேன். மறுமுனையில் இன்னொரு பொலிஸ்காரர்.
மீண்டும் ஆரம்பத்தில் இருந்து எல்லாம் சொல்லி முடிக்கிறேன். எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டு விட்டு அவர் சொல்கிறார் இப்படி,
"உனக்கு முதலில் அந்த பொலிஸ்காரர் சொன்னாரோ அதுதான் எங்கள் பதிலும்"
"உங்கள் மேலதிகாரி யாருடனாவது பேசமுடியுமா சேர்?"
"காத்திரு"
மீண்டும் ஒரு சுழற்சிக்குப் பின் என் தொலைபேசி போய்ச் சேர்ந்த இடம் அந்த ஆரம்பத்தில் புகார் கொடுத்த பொலிஸ்காரருக்கே மாற்றப்படுகிறது. என் குரலைக் கண்டு கொண்ட அவர்
"முதல் என்ன சொன்னேனோ அவ்வளவு தான், இந்தப் புகாருக்கெல்லாம் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு நேரமில்லை".
மேலே சொன்ன சம்பவம் எல்லாம் இப்போது தாயகத்தில் நடக்கும் நிகழ்வுகளோடு ஒப்பிடும் போது கால் தூசி பெறும். ஆனால் சிறீலங்கா இனவாதம் இப்போது நகர்ந்திருப்பது சிறீலங்காவுக்கு வெளியே என்பது போல இதை விட எத்தனையோ சம்பவங்கள் அரங்கேற ஆரம்பித்து விட்டன. மெல்பனில் கார்ப்பவனியில் போன தமிழர்களை நோக்கி சிங்கள இளைஞர்கள், யுவதிகள் நடத்திய காடைத்தனம், சென்ற வாரம் மெல்பனில் ஒரு இந்தியத் தமிழரை ஈழத்தமிழர் என்று நினைத்து சிங்களவர்கள் தாக்கிய கொடூரம், சிட்னியில் உணர்வெழுச்சி நிகழ்வுக்குப் பயணித்த இளைஞர்களை சிஙகளக் காடையர் தாக்கியது (ஆதாரம்), சிங்களவர் கடைகளை சிங்களவர்களே உடைத்து விட்டு பழியை ஏதிலித் தமிழன் மீது போடுவது என்று இப்போது இந்த எல்லை தாண்டிய இனவாதம் கனகச்சிதமாக ஆரம்பித்திருக்கிறது.
ஈழத்தமிழன் அவுஸ்திரேலியப் பிரஜை என்றால் என்ன, அமெரிக்க பிரஜை என்றால் என்ன நீ பூனையை விடக் கேவலம், அதுக்கும் ஒரு சம்பவம் இருக்கே.
2005 ஆம் ஆண்டில் ஒரு நாள், நான் இருக்கும் நகரத்துக்கு அடுத்த நகரமான செவன் ஹில்சில் நான்கு விடலைப் பையன்கள் சேர்ந்து ஒரு பூனையைத் துன்புறுத்தியதற்காக $22,000 அவுஸ்திரேலிய வெள்ளிகள் தண்டப்பணமும், 2 வருஷ சிறைத் தண்டனையும் கிடைத்தது. ஆதாரம்
ஆண்டவா! அடுத்த பிறவியிலாவது என்னைப் பூனையாகப் பிறக்க வை.
000000000000000000000000000000000000000000000000000000000000000000
1995 ஆம் ஆண்டின் சித்திரை மாதத்தில் ஒரு நாள். இருபதுகளின் ஆரம்பத்தில் என் வயது அப்போது. அவுஸ்திரேலியா வந்து ஒரு சில வாரங்கள் கடந்திருக்கும். அதுவரை அண்ணன் அனுப்பிய பணத்தில் படிக்க ஆரம்பித்துப் பின் குற்றவுணர்வு உறைக்க ஆரம்பித்த நாள் அது. அப்போது இங்கே வேலை தேடித் தர அரசாங்கத்தின் முகவர் நிறுவனமாக C.E.S என்ற அமைப்பே இருந்தது. அந்த அமைப்புக்குப் போய் வேலைவாய்ப்புப் பட்டியலைப் பார்க்கின்றேன். எல்லா வேலைகளுக்குமே "experience required" என்று அடியில் ஆப்பு வைக்கப்பட்டிருந்தது. தேடிச் சலித்த என் கண்களுக்கு ஒரு வேலை விபரம் கண்களைக் குளிர வைத்தது.
"ஒரு சிறீலங்கன் மளிகைக் கடைக்கு ஆள் தேவை, சிறீலங்கனாக இருப்பது விரும்பத்தக்கது"
அவ்வளவு தான் பக்கென்று அந்தக் கடை குறித்த விபரங்களை வேலைவாய்ப்பு அலுவலகரிடம் பெற்றுக் கொண்டு அடுத்த நாள் அந்தக் கடைக்குப் போகின்றேன்.
நான் வருவது குறித்து ஏற்கனவே அந்த வேலைவாய்ப்புப் பணியகம் அந்தக் கடைக்காரரிடம் சொல்லி வைத்தது போல. கல்லாப் பெட்டிக்குப் பக்கத்தில் நின்ற அந்த நபர் தான் கடை முதலாளி என்று எழுதி ஒட்டாமலே தெரிந்தது. கையோடு கொண்டு போன என் விபரத்தைக் கொடுக்கிறேன்.
என் விபரங்கள் எல்லாவற்றையும் முழுசாகப் பார்த்து முடித்து விட்டு
"அதோ அங்கே நிற்கிறாரே அவர் தான் முதலாளி என்று ஆங்கிலத்தில் பேசி கடையின் உட்புறம் மூட்டைகளை அடுக்கிக் கொண்டு நின்ற ஒரு வயதான பெனியன் மட்டும் அணிந்த கிழவரைக் காட்டுகிறார்.
நான் போய் அவர் முன்னால் நிற்க, அந்தக் கிழவரோ ஏன் இவன் எனக்குப் பக்கத்தில் நிற்கிறான் என்று தெரியாமல் விழிக்க, நான் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கிறேன். அவர் விழுந்து விழுந்து சிரித்து விட்டு குறும்பாக, முன்னே கல்லாப்பெட்டிக்குப் பக்கத்தில் நின்ற அந்த முதலாளியைப் பார்த்து முறுவலிக்கிறார்.
நான் அதை உணர்ந்தது போல அசட்டுச் சிரிப்புடன் மீண்டும் அவரை நோக்கிப் போகின்றேன்.
"நான் சிறீலங்கன் விரும்பத்தக்கது என்று அந்த விளம்பரத்தில் போட்டது சிங்களவராக கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் தான்" என்று சொல்லிச் சிரித்து வழியனுப்பாமல் அனுப்புகிறார் அந்தக் சிங்களக் கடைமுதலாளி.
"ஓ சிறீலங்கன் எண்டா சிங்களவன் மட்டுமாம், சரி" மனசுக்குள் சொல்லியவாறே மீண்டும் வேலைவாய்ப்புப் பணியகம் நோக்கி நடையில் பயணிக்கிறேன்.
மேலே இருந்து சூரியன் சிரித்துக் கொண்டிருந்தான்.
(மேலே சொன்ன சம்பவங்கள் யாவும் உண்மையே)