ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
வகுப்பறையில் வட்ட வடிமாகக் கதிரைகளை அடுக்கிவிட்டு நடுவில் நின்று ஆசிரியை ஒவ்வொரு அடியாகப் பாட, சுற்றிவர நின்று சொல்லிவைத்தாற்போல மாணவர் கூட்டம் பலமாக ஒலியெழுப்பிப் பாடும் சின்ன வகுப்புக் காலம் நினைவுக்கு வருகிறது. ஆடி மாதம் முதலாம் நாள் பிறக்கும் தமிழ் ஆடி மாதப்பிறப்பினை வரவேற்றுப் பாடுவோம் அப்போது. எல்லாப் பள்ளி மாணவர்களுக்கும் மறக்கமுடியாத தேசிய கீதமாகவும் இது இருந்ததற்கு இன்னொரு காரணம் அடுத்த நாள் வீட்டில் அம்மா ஆக்கித் தரவிருக்கும் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும் நினைப்பில் வந்து நாக்கு வாயினுள் ஜலக்கிரீடை செய்யும். ஈழத்தின் முக்கியமான பண்டிகைகளில் ஆடிப்பிறப்புக்கும் தனியிடம் உண்டு.
இப்படியாக ஆடிப்பிறப்பை தலைமுறை கடந்தும் நினைவில் வைத்திருக்கும் பாடலாக ஆக்கித் தந்தவர் எங்கள் ஈழத்தின் மூத்த கவி, யாழ்ப்பாணத்து நவாலியூர் சோமசுந்தரப்புலவர். பெரியோர் முதல் சிறியோர் வரை ஆசை தீர அவரை அழைக்கும் இன்னொரு செல்லப் பெயர"தங்கத் தாத்தா". அந்தப் பட்டப்பெயருக்கு அர்த்தம் விளைவித்தவை இவர் ஆக்கியளித்த ஏராளம் பாடல்கள், அவை எளிமையும் பொருட் செறிவும் நிறைந்தவை மட்டுமன்றி நமது ஈழத்தமிழ்த் தாயகத்தின் வளங்களையும் அவற்றின் பெருமையையும் ஆவணப்படுத்தியவை. அதற்கு உதாரணம் கற்பிக்க
"கோணிலைகள் மாறிமழை வாரி வந்தாலும்
கொடிய மிடி வந்துமிக வேவருத்தி னாலும்
தாணிழ லளித்துயர் கலாநிலைய மேபோல்
தந்து பல வேறுபொருள் தாங்கு பனையோங்கும்"
என்று பனையின் பெருமைதனைப் பாடுகின்றார் தலவிலாசம் என்ற நூலிலே.
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையவர்கள், தங்கத்தாத்தாவின் பெருமையை தனை இப்படிப் பகிர்கின்றார்,
"ஆடிப் பிறப்பொடு கத்தரித்தோட்டமும்
ஆக்கி யளித்த புலவர்பிரான்
தேட்க் கிடையாய தென்னிலங் கைவளன்
தேன் சொரியுந் தமிழ் மாந்துதுமே"
ஈழத் தமிழ்த்திருநாட்டின் கற்பகதருவாம் பனைமரம் செழித்த ஊர்களில் நவாலியும் ஒன்று. போரினால் காவு கொடுத்த வளங்களில் பனைவளமும் ஒன்றாயினும் இன்றும் நவாலி மண்ணில் பனைமரக் காடுகள் வாழ்ந்த எச்சங்களைக் காணலாம்.
நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பெருமைதனைத் தமிழகத்து அறிஞர் ஒளவை நடராசன் அவர்கள் "செந்தமிழ் அமுதம்" என்ற நூலிலே பகிர்கின்றார் இப்படி
"தேனோ அமுதோ தெஇவ்ட்டா நறும்பாகோ
யானோ உவமை சுலவல்லேன் - மானேநீ
நன்னர் நவாலியூர் நற்சோம சுந்தரனார்
பன்னு தமிழ் நிலத்தைப் பார்"
ஆடிப்பிறப்பு வரும் இவ்வேளை, நம் தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர், தமிழ்ச்சிறுவன் ஒருவன் தோழர்களை அழைத்துப் பாடும் பாடலாக அமையும் ஆடிப்பிறப்பு பாடலை இங்கே பகிர்கிறேன்.
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
ஆடிக்கூழ் செய்முறை
அரிசிமா - 1/2 கப்
பயறு - 1/4 கப்
தேங்காய்ப்பால் - 2 கப்
பனங்கட்டி - 3/4 கப்
தேங்காய்ச்சொட்டு - 3 மேசைக்கரண்டி
உப்பு
தண்ணீர்
- பயறு, அரிசிமாவை தனித்தனியாக வெறும் சட்டியில் போட்டு வறுக்கவும்.
- 2 கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதனுள் வறுத்த பயறை போட்டு அவிய விடவும்.
- பயறு ஓரளவு வெந்தவுடன் அரிசி மாவை தேங்காய்ப்பாலில் கரைத்து அதனுள் விடவும்.
- மா கட்டிபடாமல் இருக்குமாறு அடிக்கடி கிளறவும்.
- மா வெந்ததும் (கூழ் தடிப்பாகும்) அதனுள் பனங்கட்டி , உப்பு, தேங்காய்ச்சொட்டு சேர்த்து கிளறி இறக்கவும்.
- சுவையான ஆடிக்கூழ் தயார். சுடச்சுட அருந்தவும்.
குறிப்பு:
தேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டுவதுதான் தேங்காய்ச்சொட்டு. பனங்கட்டிக்கு பதில் கற்கண்டு சேர்க்கலாம் (கற்கண்டுக்கூழ்)
தேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டுவதுதான் தேங்காய்ச்சொட்டு. பனங்கட்டிக்கு பதில் கற்கண்டு சேர்க்கலாம் (கற்கண்டுக்கூழ்)
உசாத்துணை:
செந்தமிழ் அமுதம் வெளியீடு 2006
ஆடிக்கூழ் செய்முறை http://www.arusuvai.com