என் சின்ன வயசுக்காலம் இப்போது நினைவில் பூக்கின்றது. குளித்து முடித்து விட்டுச் சுவாமி அறைக்குப் போய்த் தான் காலையும் மாலையும் மறுவேலை பார்க்க முடியும். திருநீற்றை அள்ளி நெற்றியில் படர விட்டுவிட்டு, நாலைந்து தேவாரங்களைச் சுவாமிப் படங்களை நோக்கிப் பாடி விட்டுக் கண்ணை மூடிக் கொண்டே
"அப்பூ சாமி! நான் சோதினையில் நல்ல மார்க்ஸ் வாங்க வேணும்"
" யூனிவர்சிற்றிக்கு எண்டர் பண்ண வேணும்"
"கார் வாங்க வேணும்" என்று முணுமுணுத்து வாய் மூல மகஜரைக் கடவுளுக்குச் சமர்ப்பித்து விட்டுத்தான் அங்கிருந்து நகர்வேன்.
எத்தனையோ சுயமுயற்சி இருந்தாலும் கடவுளுக்கு ஒரு வேண்டுகோளைக் கொடுத்து விட்டுத்தான் நம்மவர்கள் காரியம் பார்ப்பார்கள். அப்படியான ஒரு ஜீவன் தான் இந்த "பாலாமணி".
அதிகாலை எழுந்ததும் குருவாயூரப்பன் படத்துக்கு முன்னால் தன் ஆசைகளை ஏதோ ஒரு உயிருள்ள ஜீவனுடன் பேசுமாற்போல் ஒப்புவிப்பாள் இவள். அடுக்களையில் இருந்து "எடி பாலாமணி" என்று சக வேலைகாரப் பெண்களின் சத்தம் கேட்டுச் சலித்தவாறேத் தொடர்ந்து ஆரம்பிக்கும் அவளின் பம்பரமாகச் சுழலும் வீட்டுவேலைப் பணி அதிகாலை தொட்டு நள்ளிரவு வரை நகரும். மீண்டும் நடு நிசிவேளையில் தன் அறைக்கு வந்ததும் மீண்டும் படத்தில் மாட்டப்பட்டிருக்கும் குருவாயூரப்பனுடன் தன் ஆற்றாமையையும் ஆசைகளையும் சொல்லிவைத்து விட்டுத்தான் தூங்கப் போவாள் இந்த பாலாமணி.
பாலாமணியின் கனவில் ஒருநாள் செல்வந்தத் தோரணையில் ராஜகுமாரனாய் ஒருவன் அவளைக் குருவாயூர் சந்நிதியில் மாலை மாற்றி மணம் முடிப்பது போலவும் அந்தக் கனவு வந்து கலைகின்றது. உள்ளுரத் தோன்றிய உவகையை அவள் முகம் காட்ட, மீண்டும் குருவாயூரப்பனின் படத்தின் முன் தன் கனவைச் சொல்லிச் சிரிக்கின்றாள் இவள்.
வழக்கமான ஒருநாள், தன் எஜமானிக்குப் பணிவிடை செய்து திரும்பும் பாலாமணி அந்த வீட்டுக்குப் புதிதாய் வரும் விருந்தாளி யார் எனப் பார்க்கின்றாள். "அட! இது என் கனவில் வந்த அதே காதலனாயிற்றே" என்று அவள் வியப்பில் வாய்பிளக்க,
வந்தவன் தன் எஜமானியம்மா உன்னியம்மாவின் பேரப்பிள்ளை மானு தன் அமெரிக்கப் பயணத்துக்கு முன் தன் பாட்டியாரைப் பார்க்க வந்த விஷயம் தெரிகின்றது.
தன் கண்முன்னே உலாவும் கனவுக் காதலன் மானுவை இந்த வேலைக்காரி பாலாமணி குருவாயூரப்பன் சந்நிதியில் மாலை மாற்றிக் கொண்ட அந்தக் கனவு மெய்ப்பட்டதா? இதற்கு ஆண்டவன் குருவாயூரப்பன் எப்படி வந்து உதவி செய்தான்? இதுதான் நந்தனம் திரைப்படத்தில் கதை.
2002 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் தான் நடிகர் பிருதிவிராஜின் முதல் படமாகவும், நவ்யா நாயருக்கோ இரண்டாவது திரைப்படமாகவும் அமைந்தது. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த "நந்தனம்", அதே ஆண்டில் சிறந்த நடிகை (நவ்யா நாயர்), சிறந்த இசையமைப்பாளர் (ரவீந்திரன்),சிறந்த பாடகி (சித்ரா), சிறந்த பாடலாசிரியர் (கிரிஷ் புத்தன்சேரி)ஆகிய கேரள அரசின் விருதுகளையும் அதே ஆண்டு வெளிவந்த நல்ல தரமான படங்களோடு போட்டி போட்டு வென்றது. அதே போல் பிலிம்பேரின் மலையாள இயக்குனர் விருதை ரஞ்சித்தும், சிறந்த மலையாள நடிகை விருதை நவ்யா நாயரும் பெற்றுப் பெருமை சேர்த்தனர்.
வீட்டு எஜமானி உன்னியம்மாவாக வரும் கவியூர் பொன்னம்மா வழக்கமாகத் தன் வயசுக்கேற்ற பாத்திரத்தையே செய்தாலும் வேலைக்காரி பாலாமணியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஜீவனாக வந்து இறுதியில் அவரே கதையின் திருப்பத்துக்கும் வழி செய்கின்றார்.
மகனின் காதல் பெரிதா, தங்களின் குடும்ப கெளரவத்தைக் கட்டிக்காக்க தன் நண்பியின் மகளைத் தேர்ந்தெடுப்பதா என்று இடைவேளைக்குப் பின்னான காட்சிகளில் குழப்பத்தோடும் கவலையோடும் அவதிப்படும் விதவைத் தாயாக வருகின்றார் ரேவதி.
பிருதிவிராஜுக்கு இது முதல் படம் என்பது நன்றாகவே தெரிகின்றது. அடக்கி வாசிக்கின்றார். திரைக்கதையும் வேலைக்காரி பாலாமணியைச் சுற்றியே பயணிக்கின்றது என்பதால் பிருதிவிராஜ் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.
அமைதியான நதியாக ஓடும் திரைக்கதையில் நகைச்சுவை என்ற பெயரில் கலாபவன் மணி, இன்னசென்ட், ஜெகதி சிறீகுமார் கூட்டணி அடிக்கும் கும்மாளம் மட்டும் இப்படத்தின் கரும்புள்ளி.
நந்தனம் திரைப்படத்தின் ஒரே பலம் பாலாமணி இல்லை இல்லை நவ்யா நாயர். ஒரு சராசரி ஏழைக்கே உரித்தான கனவுகள், கற்பனைகள், ஆசைகள் அதே நேரம் தன் தகுதிக்கு மீறி ஆசைப்படுகின்றோமா என்று அடிக்கடி தோன்றும் அச்சவுணர்வு இவற்றின் மொத்தம் தான் இந்த பாலாமணி. குருவாயூரப்பனிடம் தன்னுடைய உள்ளக் கிடக்கையை அப்பாவித் தனமாகக் கொட்டித் தள்ளுவதாகட்டும், தன் கனவில் வந்தவன் நிஜத்தில் நிற்கும் போது காதலுக்கும் அச்ச உணர்வுக்கும் இடையில் மெல்லிய கம்பியில் நடக்கும் நடிப்பாகட்டும், பின்னர் தனக்குத் தானே சமாதானப்படுத்தி இயல்பாக வாழ எத்தனிப்பதாகட்டும், இந்த பாலாமணிக்கு ஒரு தேசிய விருதே கொடுக்கலாம். இவரின் கண்களும், முகபாவமும் ஒரு இளம் அநாதை ஏழைப்பெண் பாலாமணியைப் படம் முடிந்த பின்னரும் நினைப்பில் இருத்தி வைத்திருக்கின்றது.
படத்தின் இன்னொரு பலம் இசை. ஒரு நாட்டுப்புற வாழ்வில் நகரத்தின் சுவடே தெரியாத அந்தக் கிராமத்து பங்களாவோடு சாஸ்திரிய சங்கீதமாக நாகரீகமாகப் பயணிக்கின்றது ரவீந்திரனின் இசை. இந்தப் படத்தின் பாடல் "கார்முகில் வர்ண்ணண்டே" பாடலை சித்ரா பாடும் போது ஆரம்பத்தில் இழையோடும் வயலின் நம் நரம்புக்குள் ஊடுருவி இனியதொரு இசைவெள்ளம் பாய்ச்சுகின்றது. இந்தப் பாடலுக்குப் பின்னால் இருக்கும் சுவையான கதையை நம்ம நண்பர் "தல கோபி" சொல்லிவைத்தார். குறிப்பிட்ட இந்தப் பாடலைப் பாடச் சித்ராவே பொருத்தமானவர் என்று இசையமைப்பாளர் வற்புறுத்துகின்றார். ஆனால் நீண்டகாலம் பிள்ளைப் பாக்கியம் இல்லாமல் இருந்த சித்ராவோ அப்போது மகப்பேற்றுக்காகக் கருவுற்றிருந்த நேரம் அது. ரவீந்திரனின் வற்புறுத்தலை அடுத்து தவிர்க்கமுடியாமல் பாட ஒப்புக்கொள்கின்றார் சித்ரா. இந்தப் பாடல் ஒலிப்பதிவாகின்றது. இதே நாள் சித்ராவுக்கும் அழகிய பெண் குழந்தை ஒன்று வரமாய் உதிக்கின்றது. தன் பிள்ளைக்குச் சித்ரா வைத்த பெயர் "நந்தனா".
இந்தப் பாடலை கடந்த ஆண்டு சித்ரா சிட்னி வந்து இசைக்கச்சேரி நடத்திய நாள் பாடிய அந்தக் கணம், நிகழ்ச்சிக்கு வந்த மலையாள ரசிகர்கள் அனைவருமே எழுந்து நின்று ( ஒரு அம்மணி தன் கைக்குழந்தையோடு கூட) கரகோஷ மழை பொழிந்து கெளரவித்தார்கள்.
ஒரு வழமையான நிஜ உலக நடப்புக்குள் குருவாயூர்க் கோயிலை அண்மித்த ஒரு தரவாடு என்று சொல்லப்படும் மூதாதையர் அரண்மனையில் குருவாயூரான் கோயில் மணியொலி மட்டும் கேட்டு வாழும் பாலாமணிக்கு அதுவரை அவளுக்குக் கிட்டாத குருவாயூர் ஆண்டவன் கோயில் தரிசனமே தன் வாழ்நாள் குறிக்கோள். குருவாயூர் ஆண்டவனோ இந்த ஏழைக்குத் தன்னை எப்படி மாற்றி வந்து நல்ல வாழ்வையும், அதோடு தன் தரிசனத்தையும் கொடுத்தான் என்கின்ற அதி மீறிய கற்பனை உலகையும் இணைத்துக் கதை பயணிக்கின்றது. கேட்பதற்குச் சாதாரணமாக இருக்கும் இந்தப் படம் பார்த்தாலோ ஏதோ ஒரு திருப்தி மனதில் ஒட்டிக் கொள்கின்றது.
அதுவரை தன் கனவு நனவாகின்றதே என்று சந்தோஷ வெள்ளத்தில் மிதக்கும் பாலாமணியின் காதல், திடீரென முளைக்கும் முட்டுக் கட்டையால் திணறும் போது தனக்குத் தானே காதலைத் தியாகம் செய்யச் சமாதானம் சொல்லிக் கொள்கின்றாள். பக்கத்து வீட்டு ஜானகி அக்கா தான் பாலாமணியின் ஆறுதலுக்காக இருக்கும் இன்னொரு ஜீவன்.வெளியூரில் இருந்து அப்போது தான் வந்த ஜானகியின் மகன் உன்னி தொடர்ந்து பாலாமணிக்கு மனோதிடத்தையும் ஆறுதலையும் கொடுத்து இவள் கனவு நிறைவேறும் என்று அடிக்கடி சொல்லிக் கொள்கின்றான். இறுதியில் தன் திருமணம் முடித்த களிப்பை ஜானகியும் சொல்ல வரும் போது ஜானகி அப்போது தான் தன் மகன் உன்னி வந்ததாக அறிமுகப்படுத்துகின்றார். அங்கு உன்னியின் வடிவத்தில் வேறு யாரோ? அப்படியென்றால் இதுவரை நாளும் பாலாமணிக்கு ஆறுதல் கொடுத்த அந்த உன்னி யார்?
உடனேயே தன் கணவனை இழுத்துக் கொண்டு குருவாயூரப்பன் சந்நிதிக்கு ஓடும் பாலாமணி குருவாயூர் கோயில் மூலஸ்தானம் அருகே ஒருவனைக் காண்கின்றாள். அது அவளுக்கே தெரிகின்ற, இதுவரை நாளும் உன்னியின் உருவத்தில் வந்த அந்த உருவம்...
" ஞான் கண்டு, ஞானே கண்டுள்ளு, மாத்ரம் கண்டிடுள்ளு, அது உன்னியட்டா வேஷத்தில் வந்தது"
கணவன் மார்பில் புதைந்து கொண்டு அழ ஆரம்பிக்கின்றாள் பாலாமணி. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் எமது கண்கள் தானாகவே பனிக்கின்றன.
பாலாமணி என்ற இந்த வேலைக்காரியின் கதையைப் பார்த்தபோது நினைவுக்கு வந்தவள் அம்மம்மா வீட்டில் வேலைக்காரியாக இருந்த மகேஸ்வரி என்னும் மகேஸ். எனது பாட்டனார் முறையானவர் எங்களூரில் ஒரு நிலச்சுவாந்தராக இருந்த காலம் அது. பளை என்ர பிரதேசத்தில் இருக்கும் தன் தென்னந்தோப்புக்களையும், நெல்லைப் பிரித்து அரிசியாக்க்கும் ஆலைகள் பலவற்றுக்கும் என்று இலங்கையின் மலையகத்தில் இருந்து ஆட்களை வரவழைத்துத் தனக்குச் சொந்தமான காணியிலேயே அவர்களின் குடும்பத்துக்கும் இருப்பிட வசதியும் கொடுக்கப்பட்டிருந்தது. காம்பரா, கொச்சிக்காய் (மிளகாய்), கொல்லை என்று சொல்லிக் கொண்டே போகும் பல மலையகச் சொற்கள் அவர்களிடமிருந்தும் எங்களுக்குப் புகுந்தன. ஆனால் அவர்களைப் போலல்லாது வீட்டு வேலைகளுக்காகத் தன் சின்னவயதிலேயே குடும்பப் பாரமேற்று வந்தவள் இந்த மகேஸ்.
அம்மமா வீட்டில் மகேஸ் கிட்டத்தட்ட தனக்கென்று ஒரு உலகத்தை வரித்துக் கொண்டு ராஜகுமாரியாக வளைய வந்தாள். வீட்டில் உள்ளவர்களே சில வேளை மகேஸின் பேச்சை மீற முடியாது. சின்ன வயதிலேயே வந்து சேர்ந்து வாலிபம் எட்டிப்பார்க்கும் வயசு வரை மகேஸ்வரி என்னும் மகேஸுக்கான செல்வாக்கு அந்த வீட்டில் இருந்தது. என்ன சாப்பாட்டு என்பதில் இருந்து எப்போது சாப்பாடு, எவ்வளவு பேருக்கு சாப்பாடு என்பதுவும் கூட அவள் கட்டுப்பாட்டில் தான். அவள் கணிப்பில் பணக்கார வீட்டுப் பெண்ணில் தானும் ஒருத்தி என்பது தான். வீட்டுக்காரரும் வேலைக்காரி என்ற குறையைக் கிட்டத்தட்ட மறக்கடித்து வைத்தனர்.
வாலிபம் துளிர் விட மகேஸின் மனதில் காதலும் வந்தது. பக்கத்து பேக்கரியில் வேலை பார்க்கும் நிதக் குடிகாரன் சிறீ தான். மகேஸின் மனதில் வந்த ராஜகுமாரன். அப்போது தான் அவளுக்கு எழுதப்படிக்க ஆசையும் வந்தது. என் அம்மா ஆசிரியை என்பதால் ஓய்வு நேரத்தில் தனக்குப் பாடம் சொல்லித் தருமாறு மகேஸ் அன்புக்கட்டளள போட்டாள். சில மாதங்களிலேயே ஓரளவு எழுதவும் ஆரம்பித்து விட்டாள். தன் கொப்பியில் மகேஸ் - சிரி என்று பக்கங்களை அவள் நிரப்பினாள். "மகேஸ் - சிரி" என்பதில் எழுத்துப் பிழையாக வரும் "சிரி" இவள் காதலன் "சிறீ" என்பது இவர்களின் சந்திப்புக்கு ஒரே சாட்சியாக இருக்கும் அம்மம்மா வீட்டுக் குட்டை மதிலுக்கு மட்டும் தெரியும் போல.
மகேஸ் - சிறீ காதல் கொஞ்சக் காலத்தில் ஊருக்கு வெளிச்சமாகி விட்டது.
"ராசாத்தி மாதிரி இஙக இருக்கும் உனக்கு உந்தக் குடிகாரனே கிடைச்சான்?"
வீட்டுக்காரர், அயலவர் இவை எல்லோரது கரிசனையும் மகேசின் காதில் அப்போது ஏறவேயில்லை.
"வசந்த மாளிகையில் சிவாசி எவ்ளோ குடிச்சிருக்கு, அந்த வாணி சிறீ மாதிரி நான் பார்த்துப்பன்" மகேசுக்குக் கிடைத்த ஒரே உதாரணம் அது ஒன்று தான். வேறு வழி இன்றி மகேஸுக்கும் சிறிக்கும் கல்யாணம் என்ற பந்தம் இணைத்தது. காதல் பரிசாக ஒரு பெண் குழந்தையைக் கொடுத்து விட்டு அடுத்த ஆண்டே நிரந்தரமாகப் போய்விட்டான் சிறீ.
கல்யாணத்துக்கு முன்பு வரை அந்த வீட்டில் பஞ்சவர்ணக்கிளியாய் சுற்றிய மகேஸ் வெள்ளைப் புறாவாக வர விரும்பவில்லை. கொழும்பில் சில வீடுகளில் வேலை பார்த்து வயிற்றைக் கழுவினாள்.
போன வருஷம் ஊருக்குப் போன போது அம்மாவிடம் கேட்டேன்,
"அம்மா! மகேஸ் இப்ப எங்க இருக்கிறாள்?"
"அதை ஏன் பறைவான், காசு ஆசைப்பட்டு ஏமாத்துப் பட்டுப்போனாள், எதோ அரபு நாட்டுக்குப் போய் கூடாத இடங்களில் இருந்து பொல்லாத வருத்தம் எதையோ வாங்கிக் கொண்டு வந்தாளாம். முகம் முழுக்கப் புண்ணாம், கொஞ்ச நாளில் கடும் வருத்தம் வந்து செத்துப் போனாளாம்" அம்மா பெருங்கவலையை முகத்தில் வரித்துக் கொண்டு சொல்லி வருத்தம் கொட்டினார்.
மகேஸுன் பெண் குழந்தை நிறையக் கனவுகளோடு ஏதாவது ஒரு வீட்டு வேலைகாரியாய் இப்போது சேர்ந்திருக்கும்.
புகைப்படங்கள்: நந்தனம் திரைப்படத்தின் சீடியில் இருந்து இப்பதிவுக்காகப் பிரத்தியோகமாக உருவாக்கப்பட்டவை.
40 comments:
இந்தப் படம் ஆரம்பத்துல ரொம்ப ஸ்லோவா மூவ் பண்ணும்.. அது சிலருக்கு சலிப்பூட்டலாம்.. என்னை போல.. அதனால், ரொம்ப ஃப்ரீயா இருக்கும்போது பார்ட்த்துக்கலாம்ன்னு ஒரு ஓரத்தில் வச்சிருக்கேன். :-)
அப்படியே ப்ரித்திவீ, இந்திராஜீத் நடிச்ச போலிஸ் கதையும் எழுதிடுங்க.. பார்த்துட்டேன்.. நல்லா விருவிருப்பாதான் இருக்கு. அதூல ஒரு பாட்டு கூட சூப்பர்.. ப்ரித்திவி & பாவனா வரும் காட்சி.. ஆனால், அதைப் பற்றி நீங்க ஏற்கனவே எழுதிட்டீங்க. :-)
Prabha,
Did you get the mainn suumaintha meeneyaar drama?
பிரபா,
நன்றாக உள்ளது.
"நந்தனம்" பற்றி நீங்கள் கூறத் தொடங்கும் போது எனக்கு "ANJALIKA" (CHANNA PERERA & POOJA)படம் நினைவுக்கு வந்தது.
("அப்பூ சாமி! நான் சோதினையில் நல்ல மார்க்ஸ் வாங்க வேணும்"
" யூனிவர்சிற்றிக்கு எண்டர் பண்ண வேணும்"
"கார் வாங்க வேணும்" )
கடவுள் அருள் கிடைத்துவிட்டது என்ன?
பஹீமாஜஹான்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று "கார் குகில் வர்ணன்ற சுண்டில்" பாட்டு. அதில் நவ்யா நாயரின் முகபாவங்கள் மிகவும் உருக்கமாக இருக்கும்..
ஆஹா..ஆஹா..அருமை தல ;))
அழகாக விமர்சனம் செய்திருக்கிங்க..உங்கள் அனுபவம் கலந்த விமர்சனத்தை படித்தவுடன் மீண்டும் அந்த பாலாமணியை பார்க்க வேண்டும் போல் உள்ளது..;)
\\நந்தனம் திரைப்படத்தின் ஒரே பலம் பாலாமணி இல்லை இல்லை நவ்யா நாயர். \\
தான் காதபாத்திரத்தை உணர்ந்து அழகாக நடித்திருப்பார். அவள் வசனம் பேசும் அழகே அழகு தல :)
\\நந்தனம் திரைப்படத்தின் ஒரே பலம் பாலாமணி இல்லை இல்லை நவ்யா நாயர். \\
எனக்கு தெரிந்து சித்ராவுக்கும் விருது கிடைத்தது என்று நினைக்கிறேன் ;)
\\இந்தப் பாடலை கடந்த ஆண்டு சித்ரா சிட்னி வந்து இசைக்கச்சேரி நடத்திய நாள் பாடிய அந்தக் கணம், நிகழ்ச்சிக்கு வந்த மலையாள ரசிகர்கள் அனைவருமே எழுந்து நின்று ( ஒரு அம்மணி தன் கைக்குழந்தையோடு கூட) கரகோஷ மழை பொழிந்து கெளரவித்தார்கள்\\\
கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்...அருமையான பாடல் படத்தின் கடைசியில் வரும் பாடல் அது.அந்த பாட்டுக்காகவே என் அறை நண்பன் படத்தை சிடி தேய பார்த்தான் ..;))
பாடகர் ஜோசுதாஸ் அவர்களும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடித்திருப்பார்....;)
//.:: மை ஃபிரண்ட் ::. said...
இந்தப் படம் ஆரம்பத்துல ரொம்ப ஸ்லோவா மூவ் பண்ணும்.. அது சிலருக்கு சலிப்பூட்டலாம்.. என்னை போல..//
வாங்க சிஸ்டர்
பரபரப்பான வீச்சருவாப் படங்களைப் பார்த்துப் பழகிய நமக்கு இப்படியான படங்களோடு ஒன்றிப்போவது கொஞ்சம் கஷ்டம் தான், ஆனால் இப்படியான படங்களைப் பார்க்க ஒரு அமைதியான சூழ்நிலை இருந்தால் போதும், ஒவ்வொரு காட்சியின் பின்னால் உள்ள சுவையை ரசிக்கலாம் ;-)
போலீஸ் பாட்டு நான் போடல, ஆனா கேட்டிருக்கேன், "காணா கண்ணில் ஒரு நிழலா" அப்படி வரும் ஒரு இனிய பாட்டு, நிச்சயம் ஒரு பதிவை வீடியோஸ்பதியின் தருகின்றேன்.
Great posting! Very nice, thank you.
Happy New Year! And best wishes for a healthy and successful 2008
சுவாரஸ்யமான படமா இருக்கும் போல இருக்கே!!
நேரம் கிடைக்கும் போது பாத்துர வேண்டியதுதான்!! ;)
ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க..இதுக்காகவே, அந்தப் படத்த பாக்கணும்போல தோணுது.
//Anonymous said...
Prabha,
Did you get the mainn suumaintha meeneyaar drama?//
வணக்கம் நண்பரே
மண் சுமந்த மேனியர் இன்னமும் என் கைவசம் வந்து சேரவில்லை, ஆனால் அந்தப் படைப்பின் நெறியாளர் சிதம்பரநாதனை விரைவில் பேட்டி கண்டு தருகின்றேன்.
// Appaavi said...
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று "கார் குகில் வர்ணன்ற சுண்டில்" பாட்டு. அதில் நவ்யா நாயரின் முகபாவங்கள் மிகவும் உருக்கமாக இருக்கும்..//
வணக்கம் அப்பாவி
படம் முழுக்கவே நவ்யாவின் நடிப்பின் பரிமாணங்கள் தான் கொட்டியிருக்குது. இந்தப் பாட்டுக்குச் சம பங்கு பெருமை இசையமைப்பாளருக்கும் உண்டு.
//"நந்தனம்" பற்றி நீங்கள் கூறத் தொடங்கும் போது எனக்கு "ANJALIKA" (CHANNA PERERA & POOJA)படம் நினைவுக்கு வந்தது.
("அப்பூ சாமி! நான் சோதினையில் நல்ல மார்க்ஸ் வாங்க வேணும்"
" யூனிவர்சிற்றிக்கு எண்டர் பண்ண வேணும்"
"கார் வாங்க வேணும்" )
கடவுள் அருள் கிடைத்துவிட்டது என்ன?
பஹீமாஜஹான்//
வணக்கம் சகோதரி பஹீமாஜஹான்
கேட்டதுக்கு மேலாகவே ஆண்டவன் கொடுத்து விட்டான், ஆனால் அப்போது இருந்த எல்லாவற்றையும் பறித்து விட்டான், சுற்றம், சொந்தம் எல்லாமே.....
அஞ்சலிக்கா படத்தை சிட்னியிலும் காட்டினார்கள், சராசரி சிங்களப்படமாக்கும் என்று பாராமல் இருந்து விட்டேன், இப்போது நீங்கள் மேற்கோளிட்டபோது தான் நல்ல படத்தைத் தவறவிட்டு விட்டோமென்று தெரிகின்றது.
மிக்க நன்றி தங்கள் வருகைக்கு.
பிரபா,
நந்தனம் படக்கதையை விட, நீங்க சொன்ன நிஜக்கதை தான் நிறைய பாதிச்சது! நல்லா எழுதி இருக்கிங்க!! வாழ்த்துக்கள்!!
//கோபிநாத் said...
ஆஹா..ஆஹா..அருமை தல ;))
அழகாக விமர்சனம் செய்திருக்கிங்க..//
வணக்கம் தல
உண்மையைச் சொல்லப்போனா இந்தப் பதிவை எழுதத் தூண்டியதே நீங்க தான். அதுக்கு முதலில் என் நன்றி.
நீங்க சொன்னமாதிரி சித்ராவுக்கும் அந்த ஆண்டு கேரள விருது இப்படத்துக்குக் கிடைச்சுது. கூடவே சிறந்த பாடலாசிரியர் விருதும் இப்பாட்டுக்குக் கிட்டியது. அவற்றை இப்போது பதிந்திருக்கின்றேன். கே.ஜே.ஜேசுதாஸ் வரும் காட்சியை நினைப்பூட்டியதுக்கும் என் நன்றிகள்.
// david santos said...
Great posting! Very nice, thank you.//
வாங்கோ டேவிட் அண்ணை, உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள், மொழி தெரியாமலேயே என் பதிவை நீங்கள் படித்தது எனக்குப் புல்லரிக்குது ;)
//CVR said...
சுவாரஸ்யமான படமா இருக்கும் போல இருக்கே!!
நேரம் கிடைக்கும் போது பாத்துர வேண்டியதுதான்!! ;)//
கட்டாயம் பாருங்க கவிஞரே, நல்ல படம்.
wow,
kadhai vimarsanam paatha nalla irukumnu thoniuthu! paakanum :)
பிரபா
சராசரி சிங்களப் படத்திலிருந்து ANJALIKA வேறுபட்டுள்ளது.தோட்ட வேலைக் காரத் தம்பதியின் ஒரே மகளாக வரும் பூஜாவின் நடிப்பும் (CHANNA வின் நடிப்பும் தான்) காட்சிகளும் அருமையாக உள்ளன.
சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள்.
"ஆனால் அப்போது இருந்த எல்லாவற்றையும் பறித்து விட்டான், சுற்றம், சொந்தம் எல்லாமே....."
எல்லோருடைய வாழ்வின் கதையும் இது தான்.எதையாவது இழந்து தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் பொதுவாக அனைவருக்கும் இழக்க நேர்வதென்னவோ அதிகமாக நேசித்த ஒன்றைத்தான்
//தங்ஸ் said...
ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க..இதுக்காகவே, அந்தப் படத்த பாக்கணும்போல தோணுது.//
வணக்கம் தங்ஸ்
ஒரு அமைதியான, உணர்வுபூர்வமான படத்தைப் பார்க்கப் போகின்றோம் என்ற தயார்படுத்தலோடு பார்க்கும் போது நிச்சயம் உங்களுக்கும் இப்படம் பிடிக்கும்.
நல்ல அறிமுகம். கண்டிப்பா படத்தப் பாக்கனும்னு தோண வெச்சிட்டீங்க. பாத்துருவோம். :)
// குட்டிபிசாசு said...
பிரபா,
நந்தனம் படக்கதையை விட, நீங்க சொன்ன நிஜக்கதை தான் நிறைய பாதிச்சது! நல்லா எழுதி இருக்கிங்க!! வாழ்த்துக்கள்!!//
வாங்க அருண்
படத்தை விட இந்த நிஜ வேலைக்காரி குறித்த கருத்துக்களையே அதிகம் எதிர்பார்த்தேன், உங்கள் கருத்து நிறைவைத் தருகின்றது. மிக்க நன்றி
ஏன் மகேஸின்ர மகளையும் வேலைக்காரியாக்க நினைக்கிறீங்கள்?
பிருத்திவ் ஏன் இப்பிடி சோகமா இருக்கிறார்:-)
அடடா...என்ன ஒரு விமர்சனம்.இந்த படத்தை நான் பார்த்துட்டேன் :)
என்ன எனக்கு மலையாளம் அவ்வளவுவாக தெரியாது.அதுனால சில காட்சிகள் புரியவில்லை.
அண்ணா நீங்க மனுசனே இல்லை..நீங்க தெய்வம் :))
//Dreamzz said...
wow,
kadhai vimarsanam paatha nalla irukumnu thoniuthu! paakanum :)//
Dreamzz
வாசித்துத் தங்கள் கருத்தைப் பதிந்தமைக்கு மிக்க நன்றிகள்
//பிரபா
சராசரி சிங்களப் படத்திலிருந்து ANJALIKA வேறுபட்டுள்ளது.//
அஞ்சலிக்காவைத் தேடி இங்கே இருக்கும் சில கடைகளுக்குப் போனேன், ஏமாற்றம் தான் மிஞ்சியது. புதுப்படம் என்பதால் காத்திருக்க வேண்டும்.
சிங்களப் படங்களில் கொழும்பு வரை நான் வந்து தேடியது 'Golu Hadawatha'. இது தம்பி ஐயா தேவதாஸ் ஆல் "நெஞ்சில் ஒரு ரகசியம்" என்று வீரகேசரி பிரசுர நாவலாகவும் வந்து. சிங்களப் படம், தொலைக்காட்சி தொடர் இந்த இரண்டாக வந்ததையும் இன்னமும் தேடுகின்றேன், சாவதற்குள் பார்த்துவிட வேண்டும்.
//G.Ragavan said...
நல்ல அறிமுகம். கண்டிப்பா படத்தப் பாக்கனும்னு தோண வெச்சிட்டீங்க. பாத்துருவோம். :)//
வாங்க ராகவன்
இந்தப் படம் உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும், வருகைக்கு நன்றி
தரமான விமர்சனம். ரொம்ப ரசிச்சிருக்கீங்க போல?
//சினேகிதி said...
ஏன் மகேஸின்ர மகளையும் வேலைக்காரியாக்க நினைக்கிறீங்கள்?//
தங்கச்சி
மகேஸ் ஏமாற்றப்பட்டுச் சிலமாதங்களே அந்த நாட்டில் இருந்தவர், இப்போது எதிர்காலம் கேள்விக்குறியாகி எங்கோ இருக்கும் அந்தக் குழந்தைக்கு இதை விட்டால் வேறு வழி இருக்காது.
//பிருத்திவ் ஏன் இப்பிடி சோகமா இருக்கிறார்:-)//
பிரிதிவிராஜ்ஜுக்கு முதல் படம் எண்டதால டைரக்டர் அடிச்சிருப்பார் ;-)
// துர்கா|durga said...
அடடா...என்ன ஒரு விமர்சனம்.இந்த படத்தை நான் பார்த்துட்டேன் :)
என்ன எனக்கு மலையாளம் அவ்வளவுவாக தெரியாது.அதுனால சில காட்சிகள் புரியவில்லை.//
வாங்க தங்கச்சி, நீங்க பார்த்ததே பெரிய விஷயம் ;)
//அண்ணா நீங்க மனுசனே இல்லை..நீங்க தெய்வம் :))//
என்னைய வச்சு காமடி கீமடி ஒண்ணும் பண்ணிலியே?
பிரபா உங்களை மொக்கை பதிவு போட tag செய்திருக்கிறேன். பார்க்க http://nunippul.blogspot.com/2008/01/blog-post_12.html
//இறக்குவானை நிர்ஷன் said...
தரமான விமர்சனம். ரொம்ப ரசிச்சிருக்கீங்க போல?//
மிக்க நன்றி நிர்ஷான், ஆமாம் ரொம்பவே ரசித்துப் பார்த்தது.
// ramachandranusha(உஷா) said...
பிரபா உங்களை மொக்கை பதிவு போட tag செய்திருக்கிறேன். //
ஆஹா நன்றி உஷாக்கா;)
மொக்கைக்குத் தனியாவே பதிவு போடணுமா ;-) முயல்கின்றேன்
ஹூம், நானும் இந்தப்படத்தை சிலாக்கித்து எழுதியிருக்கிறேன். சுட சுட அட்டகாசமான மலையாள படங்கள் பார்த்த அனுபவம்
என்ன, இப்பொழுது அதுக்குக்கூட வழியில்லாமல், குஜ்ஜூ ஊரில் இருக்கிற்றேன்.
இந்த படத்தில் எனக்கு பிடித்த காட்சி, ஏழை வேலைக்காரிதானே, சும்மா ஆசை காட்டிவிட்டு பிறகு டாடா காட்டிவிட்டு போய்விட மாட்டாயே என்று கேட்கும் இடம். நவ்யாக்கு இப்படி எளிமையான வேடங்களே பொருத்தமாய் இருக்கு இல்லே பிரபா? ஓவர் மேக்கப்புடன் சேரனுடன் நடித்தாரே நல்லாவே இல்லை.
வாங்க உஷாக்கா
நல்ல மலையாளத் திரைப்படங்களைக் காலம் கடந்தும் தேடிப் பார்க்கின்றேன். உங்களுக்கு இப்போது அந்த அதிஷ்டம் இல்லை போல.
இப்போது நான் பார்த்துக் கொண்டிருக்கும் படம் சிறீநிவாசனின் "வடக்கும் நோக்கி யந்திரம்".
நந்தனம் போல பேர் சொல்லும் படங்களை நவ்யா நடித்தால் மலையாள சினிமாவின் காலம் உள்ளவரை நிலைத்திருக்கும் அவர் பெயர்.
பிரபா,
விமர்சனம்
நன்றாக உள்ளது.
உங்கள நல்ைல கந்தன் படங்கள்மிக நன்றாய் உள்ளன.
நன்றி
தேபாதரன்,
உப்சாலா, ஸ்வீடன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் தேபாதரன், உங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
சுவீடனில் இருந்து உங்களுடைய பின்னூட்டம் தான் எனக்குக் கிட்டிய முதல் பின்னூட்டல் என்று நினைக்கின்றேன்.
படத்தைப்போலவே அழகா எழுதியிருக்கீங்க.
"கார்முகில் வர்ணண்ட சுண்டில்" கேட்டுக் கொண்டிருக்கும்போதே என்னமோ உள்ளுக்குள்ளே கரையும்
பாலாமணி கிருஷ்ணன பாத்தப்போ நமக்கும் அப்டியே .... இருக்கும்
அந்த வருசத்தோட சிறந்த படமா மாநில அரசின் விருது பெற்ற படம்
வணக்கம் நண்பா
பதிவைப் படித்துக் கருத்தளித்ததற்கு நன்றி. இந்தப் படத்தை சுமார் 8 மாதம் முன் பார்த்தேன். இன்னும் அந்தப் பாதிப்பு இருக்கின்றது.
மிகவும் தரமான விமரிசனம் எழுதியிருக்கிறீர்கள்!
இந்தப் படத்தை திரையரங்கில் சில ஆண்டுகளுக்கு முன் பார்த்தேன். உடனே டிவிடி வாங்கி சேமித்து விட்டேன். தரமான ரசிகர்களுக்கு தவறாமல் போட்டுக் கண்பிக்கும் ஒரு படம் இது.
அந்த உண்ணி ஒரு நடனம் ஆடுவாரே இடைவேளைக்குப் பின்... அது படத்தின் ஒரு ஹைலைட்!
அவரைப் பற்றி இன்னும் சில வரிகள் எழுதியிருக்கலாம்.
நவ்யாவின் நடிப்புக்காகவே இப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
நன்றி!
வாங்க விஎஸ்கே
நந்தனத்தின் இன்னொரு ரசிகரைக் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு.
உன்னி பற்றி எழுதியிருக்கலாம், ஆனால் பதிவு நீண்டு கொண்டே போய்விட்டது, அதனால் என்ன உங்களைப் போன்ற ரசிகர்கள் அதைச் சிலாகிப்பதும் சிறப்புத் தானே.
விமர்சனம் அருமை.படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.பொதுவாகவே மலையாளப் படங்களில் தரமான கதையோடு,நல்ல நடிப்பையும் காணலாம்.இதுவரை எந்த மலையாளப் படத்தையும் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை.இணையத்தளத்தில் பார்க்கமுடியுமா பிரபா?
http://pathum2222.fileave.com/new%20temp%20web/sri%20lankan%20movies.html
அஞ்சலிகா படத்தை இவ்விணைப்பில் இலவசமாகப் பார்க்கலாம் நண்பரே.நல்ல கதை.ஒப்பனைகளேதுமற்ற பூஜாவின் நல்ல நடிப்பு.ஒருமுறை பாருங்கள்.
மேலுள்ள லின்கை கொபி பண்ணி அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்யுங்கள் நண்பரே.
Post a Comment