Sunday, June 27, 2021
"மல்லிகை" டொமினிக் ஜீவாவுக்கு அகவை 94 .
Saturday, June 26, 2021
மேதகு 🔥 🔥 பட அனுபவம்
“பிரபாகரன்”
ஏந்திய குழந்தைக்குப் பெயர் வைக்கும் காட்சியில் சிலிர்த்துப் போய்க் கண் மடை திறக்க, மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றதொரு பரவச அனுபவம். இப்படியாக “மேதகு” படத்தில் பயணத்து விட்டு வந்திருக்கிறேன்.
எண்பதுகளில் ஈழப்போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் சின்னஞ் சிறுவர்களாக நாம் இருந்த அந்தக் காலத்தில், இரவு கழிக்கும் நேரத்தில் அந்த அமைதியை ஊடறுத்து ஒரு பறையொலி கிளம்பும்.
எல்லோரும் வீதிக்கு ஓடுவோம்.
சொல்லி வைத்தாற் போல வட்டம் போல நாமெல்லோரும் சூழ, அங்கே வந்திருக்கும் “தெருக்கூத்துக் குழு” நம் இன விடுதலையையும், நம் தமிழினம் எப்படி அடக்கி ஒடுக்கப்படுகிறது என்பதையும் பாட்டோடும், நிகழ் வரலாறுகளோடும் பாடிக் காட்டும்.
“இன்னார் மகன் இயக்கத்துக்குப் போய் விட்டாராம்” என்று அடுத்தடுத்த நாட்களில் வரும் ஊரார் பேச்சு. இதெல்லாம் நாம் வாழ்ந்த காலத்தில் தேங்கிய வாழ்வியல் நினைவுகள். வரலாற்று நாயகர்களின் அடிச்சுவடுகள் முகிழ்ந்த காலங்கள்.
இங்கே “மேதகு” திரைப்படத்தின் திரைகதையோட்டத்தின் அடிநாதமாகக், கதை சொல்லியாக “மதுரை அடைக்கலம் தெருக்கூத்துக் குழு” துவக்கப் புள்ளியில் இருந்து சேதி பறைய, “தம்பி”யின் கதையோடு, ஒரு இனம் அடக்கி ஒடுக்கப்பட்ட வரலாறு பதியப்படுகிறது. இந்த உத்தி எப்படி இவர்கள் மனதில் தோன்றியதோ என்ற பேராச்சரியம் எழுகிறது. நாம் வாழ்ந்த அந்த ஈழப் போராட்ட ஆரம்ப கால நிஜங்களின் தரிசனமாக இந்தத் தெருக் கூத்துக் “கதை சொல்லிகள்” நுட்பமாகப் பயன்பட்டிருக்கிறார்கள்.
“மேதகு” படம் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்வின் ஆரம்ப காலப் பதிவு என்ற அடையாளமே தவிர, இந்தப் படைப்பில் ஈழத் தமிழினம் சுதந்திரத்துக்குப் பின் எவ்விதமாகச் சிங்களப் பேரினவாதத்திற்கு இரையாக்கப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றின் பதிவாகவே இருக்கின்றது.
அப்போது இலங்கையின் பிரதமராக இருந்த பண்டார நாயக்கா கொண்டு வந்த தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள் தொடங்கிய அறப்போராடம், அதனைத் தொடர்ந்து சிங்களப் பேரினவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட படுகொலை அரங்கேற்றங்கள் என்று கலவரபூமியாக அமைந்த சூழலில் தந்தை செல்வாவின் தலைமையிலான தமிழரசுக் கட்சிக்கும், பிரதமர் பண்டரநாயக்கவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தம். அந்தச் சமரசத்தை ஏற்காத பேரினவாதிகளின் முடுக்கி விடப்பட்ட வன்முறைகளின் உச்சமாக 1958 கலவரம், பிக்குவால் கொல்லப்படும் பிரதமர் பண்டாரநாயக்க என்ற வரலாற்றுப் பதிவுகளோடு பயணப்படுகிறது.
ஒரு பக்கம் தமிழ் இன உணர்வாளர்கள் தம்மினத்தின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக அதுவரை கொண்டிருந்த சாத்வீக நெறிமுறைகளை விமர்சனத்துக்கு உட்படுத்தும் வேளை,
இன்னோர் புறம் சிங்கள ஆட்சியாளரால் தமிழினத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட கல்வி தரப்படுத்தல் பாகுபாட்டால் மாணவர் சமூகத்தில் இருந்து எழும் கலகக் குரல்கள், அறவழியில் போராடும் மாணவர்களுக்கு எதிரான சிறீமா அரச படையின் சித்திரவதை அதன் விளைவாக மாணவர் தம் ஆயுதமாகத் “திருப்பி அடி” என்ற வன்முறைப் பாதையைத் தொடக்கும் புள்ளி என்று இரண்டு விதமான வரலாற்றுப் பரிமாணங்களைப் பதிவு செய்கின்றது.
இது வெறும் வரலாற்றுப் பதிவாக மட்டுமன்றி அந்தக் கோரத் தாண்டவங்களின் கண்ணாடியாயாகக் காட்சியமைப்புகள்.
தலைவர் பிரபாகரன் பிறந்த ஊரின் தோற்றப்பாடுகள், அந்த அந்தக் கடற்கரை மணல் திட்டில் தொடங்கும் நேர்த்தியில் இருந்து ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்துப் பதிய வைத்திருக்கின்றார்கள்.
இனக் கலவரம் முகிழ்த்த சூழலைக் கொஞ்சம் அழுத்தமாகக் காட்டியிருக்கலாம் என்று நினைக்கும் போதே அடுக்கடுக்காத் தொடரும் காட்சிகள் அந்த எண்ணப்பாட்டை நீர்த்துப் போகச் செய்து நிகழ்வுகளை வலுவாக்குகின்றன
பண்டார நாயக்கா, செல்வா பேச்சு, சிங்களப் பிக்குகளின் உரையாடல், தமிழ்ச் சூழலில் நகரும் காட்சிகளுக்கான உரையாடல் போக்கு என்று வித்தியாசமான பரிமாணங்கள், எல்லாமே வெகு நேர்த்தி.
நாம் ஊரில் அந்தக் காலத்தில் பாவித்த இரட்டை யானை மார்க் நெருப்புப் பெட்டி. சிங்கள வீடுகளில் இருக்கும் மரச்செதுக்கு வேலைகள், தளபாடங்கள், அந்தந்தக் காலகட்டங்களில் இருந்த பொருட்கள், காட்சியமைப்புகல் என்று கலை இயக்கத்துக்காகவே பெருமளவில் உழைத்திருப்பர்கள் போல. கலை இயக்குநர் செ.க.முஜிபுர் ரஹ்மான் இற்கும் அவருக்குத் துணை போந்தவர்களுக்கும் மகா கனம் பண்ண வேண்டும்.
அது போலவே காட்சி ஒளிப்பதிவுக்கான நிறக்கலவை தொட்டு, ஒவ்வொரு நிகழ்தலுக்குமான பார்வைக் கோணங்கள் என்று திரைக்கதை எழுத்தை அப்படியே மொழி பெயர்த்திருக்கும் ஒளிப்பதிவு. திரை வண்ணம் கொடுத்த விநாயகம், காட்சி உறுதி கொடுத்த பிராசிஸ் சேவியர், ஒளிப்பதிவாளர் ரியாஸ் இந்த உழைப்பின் பெறுமதியைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.
ஒரு மணி நேரம் 40 நிமிடம் தொடும் இந்தப் படத்தை எந்த விதமான அலுப்புத்தட்டலும் இல்லாது கோத்த விதத்தின் பெறுமானத்தை உதாரணப்படுத்த ஒரு சோறு பதமாகச் சொல்கிறேன் இதை
“யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவிடம் தமிழாராய்ச்சி மாநாட்டுக் குழு விடை பெறும் போது, சமதளத்தில் விரியும் தமிழாராய்ச்சி மாநாட்டு மேள தாள ஒலியும், நடனமும் தொடர் காட்சியின் வீரியத்தைப் பதிப்பிக்கிறது. படத்தொகுப்பாளர் சி.மு.இளங்கோவன்
இயக்குநரின் செயல் வடிவத்தின் ஆன்மாவாக இயங்கியிருக்கின்றார்.
தலைவர் பிரபாகரனின் இள வயதுத் தோற்றம் கொண்ட பாத்திரம், தந்தை செல்வா, பண்டாரநாயக்கா என்று நிஜங்களோடு ஓரளவு பொருந்திப் போன முகச் சாயல்கள். அது மட்டும் போதாதென்று இந்தப் படைப்பில் பயணித்த அனைவருமே நாடகத் தன்மை விலத்திய யதார்த்த நடிப்புக்காரர்களாகவே தொனிக்கிறார்கள். அவர்களுக்கான ஒலிப்பதிவு கச்சிதம்.
தெருக்கூத்து ராஜவேல், பெருமாள் ஆகியோரின் பாடலும், கதையாடலும் நெகிழ்வும், வீறாப்புமாகச் சிதறிப் பதிகின்றன.
பாடல்கள் ஒவ்வொரு முக்கிய திருப்பங்களிலும் கைலாகு கொடுத்து அழைத்துப் போகின்றன.
எங்கள் தமிழீழத் தேசியக் கவி புதுவை இரத்தினதுரை இதைப் பாத்திருந்தால் எவ்வளவு நெகிழ்ந்துருகியிருப்பார் என்னுமாற் போல அவரினதும், தமிழ்த் திரு திருக்குமரன், இயக்குநர் தி.கிட்டு ஆகியோரின் பாடல்கள் பதித்த இடங்கள்.
நீள் காட்சிகள் கொண்டு வரும் தாக்கத்தை ஒரு சில நிமிடப் பாடலே விதைக்கிறது.
“தமிழுக்கு அமுதென்று பேர்” என்று வரும் அந்த மா நாட்டுப் பாடலில் தான் என்னவொரு ஆர்ப்பரிப்பும், எழுச்சியும். இசையமைப்பாளர் அ.பிரவீன்குமார் மிகக் கச்சிதமான தேர்வு.
எந்தவித வெத்துவேட்டு சினிமாத்தன, நாயகத்தனம் இல்லை,
பேச்சு வழக்கு, உச்சரிப்பில் முக்கிய பாத்திரங்கள் சமரசமில்லால் இயங்குகின்ற விதத்தில் பயிற்றப்பட்டிருக்கின்றார்கள் இல்லையில்லை “வாழ்ந்திருக்கின்றார்கள்”.
“பயம் ஒன்று மட்டுமே அடிமைத்தனத்தை
இன்னொருவர் மனதில் ஆழமாய்ப் பதியச் செய்யும்”
அந்தப் புத்த பிக்கு சொல்லும் பேச்சு ஓருதாரணம் இந்தப் படத்தில் வசனப் பங்களிப்பின் நேர்த்தியும், கூர்மையும். இக்குறிப்பிட்ட வசனம் தானே பின்னால் நாம் கண்ட வரலாற்றின் போதனை?
ஈழத் தமிழர் பிரச்சனையைக் கையாண்ட ஈழப் படைப்பாளிகளின் நேரடிப் படங்கள் தவிர்ந்த படைப்புகள் இதுவரை
1. அதீத உணர்ச்சிப் போக்குக் கொடுத்து அடிப்படைக் கருத்தை வலுவிழக்க வைத்ததாக (காற்றுக்கென்ன வேலி),
2. குழம்பிய குட்டையில் மீன் பிடித்ததாகவும் (ஏராளம் படங்கள்),
3. இன ஒடுக்கலைத் திரிவுபடுத்திய புனைவுகளாகவும்,
4. புலம் பெயர் வியாபாரச் சரக்குக்கு ஊறுகாயாகவும் (இன்னும் ஏராளம்),
இருக்கும் சூழலில் ஈழப் பிரச்சனைக்கான கச்சிதமான ஊடகப் பரிமாணத்தின் விதைத் தமிழகத்தார் துணையோடு கொடுத்த படம் என்ற வகையில் “மேதமை” தான் தொடக்கப் புள்ளி.
கோடி கோடியாய்க் கொட்டவில்லை, அதீத உணர்ச்சிக் கொட்டல் இல்லை, ஆனால் பெரும் தாக்கம் கொடுக்கிறது இப்படம்,
தமிழாராய்ச்சி மாநாட்டில் கட்டவிழ்த்த ஆயுதப் படைகளின் அடக்குமுறைச் செய்தி பறையும் காட்சியில் தந்தை செல்வாவுக்குப் பின்னால் காந்தி படம் தொங்கிக் கொண்டிருக்கின்றது.
வன்முறை எம் மீது திணிக்கப்பட்டது என்பதைத் தலைவர் சொன்னதைத் தான் படமும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
“மேதகு” படைத்த இயக்குநர் தி.கிட்டு (எழுத்து & இயக்கம்) வழி சமைத்த தமிழீழத் திரைக்களம் உங்கள் பணி மிகவும் பெறுமதியானது, நேர்மையின் விதை இது.
வரலாற்று எனது வழிகாட்டி என்றார்
“மேதகு” வே.பிரபாகரன்
நம் தலைவரின் தொடக்க வரலாறின்
வழிகாட்டி நிற்கின்றது “மேதகு”
"மேதகு"திரைப்படத்தைக் காண
,
BSvalue app
android
https://play.google.com/store/apps/details...
iOS
https://apps.apple.com/us/app/bs-value/id1537233387
இணையத் தளம் வழி
https://bsvalue.com/auth?fromActivate=false
#மேதகு
#Methagu_in_Bsvalue
கானா பிரபா
Monday, June 14, 2021
திரு. பொன்னையா விவேகானந்தன் சிறப்பு நேர்காணல்
ஈழத் தாயகத்தில் தொடங்கி, தமிழகத்தில் மேற் கல்வி வரையும் அதன் நீட்சியாகத் தற்போது புலம் பெயர் கனேடிய மண்ணிலும் தன்னுடைய தமிழியல் செயற்பாடுகளை வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை வழியாகவும், கல்விச் சமூகத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு இயங்கி வரும் இவரைத் தனது 60 வது அகவையில் (ஜூன் 12, 2021) சந்தித்த பகிர்வு
YouTube இணைப்பு
Friday, June 11, 2021
ஈழத்துப் படைப்பாளி டென்மார்க் சண் கலைத்துறையில் 50 ஆண்டுகள்
சிங்களத் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய காமினி பொன்சேகா, தமிழகத்தின் தியாகராஜன், தீபா, ஸ்வப்னா ஆகியோரோடு, ஈழத்துக் கலைஞர்களையும் இணைத்து அவரே தயாரித்து, இசையமைத்து இயக்கிய “இளைய நிலா” திரைப்படம் துரதிஷ்டவசமாக 1983 இனக் கலவரச் சூழலில் திரையிடாமல் முடங்கிப் போனதோடு ஆக்கிய அவரே அப்படத்தின் முழுமையான வடிவத்தைப் பார்க்க முடியாமல் போன அவலம் நிகழ்ந்தது.
இதில் ஷண் அவர்களின் இசையில் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் முதல் தடவையாக இலங்கையில் நிகழ்த்திய பாடல் ஒலிப்பதிவு அது.
பின்னர் “வசந்த கீதங்கள்” என்ற பாடல் தொகுப்பில் ஏழு பாடலக்ளைத் தானும், தன் சகோதரி எஸ்.பி.சைலஜாவுடனும் பாடிய போதும் ஒரு சதமேனும் அதற்கான பணமாகப் பெறாது மறுத்த பண்பாளர் எஸ்பிபி என்று வியக்கிறார்.
இன்னும் பல அந்தக் காலத்துச் சுவையான நனவிடை தோய்தலோடு
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நான் நிகழ்த்தும் “யாதும் ஊரே” நிகழ்ச்சியில் இன்று ஒலிபரப்பானது.
இதன் YouTube காணொளித் தொடுப்பு
https://www.youtube.com/watch?
Tuesday, June 01, 2021
தென்னாசியாவின் மிகப்பெரும் நூலகம் யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள்
"எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்?"
கலங்கிய கண்களோடு யாழ் பொது நூலகர் திருமதி நடராஜா அப்போது கேட்கின்றார்.
முதல் நாள் இரவு யூன் 1, 1981
"பொலிஸ்மா அதிபரும், பிரிகேடியர் வீரதுங்காவும் யாழ்ப்பாணத்தில் இருக்கத்தக்கதாக, யூன் 1 ஆம் திகதி 1981 இரவு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் வியப்பானவையாகும். அதே பொலிசார் அன்று இரவு யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்குத் தீயிட்டனர். ஏறத்தாழ 97000 பெறுமதி மிக்க நூல்கள் எரிந்து கருகிப் போயின. உலகில் எங்கிருந்தும் இனிமேல் பெறுவதற்ககரிய நூல்கள் பல எரிந்து போயின.
உசாத்துணைப் பிரிவின் சிறப்பு நூற் தொகுதிகளில் அழிந்தவைகளில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:
1) கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி
2) திரு.சி.வன்னியசிங்கம் நூற்தொகுதி (சுமார் 100 நூல்கள்)
3) திரு ஐசாக் தம்பையா நூற்தொகுதி (சமயம், தத்துவம் பற்றிய நூல்கள் சுமார் 850)
4) திரு.கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி (சுமார் 600 நூல்கள்)
5) ஏட்டுச் சுவடித் தொகுதி
6) அமெரிக்க நூலகத்திலிருந்து அன்பளிப்பு செய்யப்பட்ட உசாத்துணை நூற் தொகுதி
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு எதிரே 700 யார் தூரத்தில் யாழ் பொதுசன நூலகம் அமைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகத் தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த விஷேஷ பொலிசார் தங்கியிருந்த துரையப்பா விளையாட்டு அரங்கும் யாழ் நூலகத்திற்கு எதிரே தான் இருந்தது. இவ்வளவு "பாதுகாப்பு" இருந்தும் திங்கள் இரவு பொது சன நூலகம் தீப்பிடித்து எரிந்தது.
அன்று இரவு 10 மணி போல, நூலகத்துக்குள் நுழைந்த கொடியவர்கள், காவலாளியைத் துரத்திவிட்டு நூலகக் கதவைக் கொத்தித் திறந்து, உள்ளே நுழைந்து 97 ஆயிரம் கிடைத்தற்கரிய மருத்துவம், இலக்கியம், ஜோதிடம் உள்ளிட்ட ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் உட்பட எல்லாமே பெற்றோல் ஊற்றித் தீக்கிரையாக்கப்பட்டன. சுவர்கள் வெப்பத்தினால் வெடித்து உதிர்ந்தன. யன்னல்கள் சிதறிப்போயின. நூலகத்துக்குள்ளே சாம்பல் குவியல்களே எஞ்சிக்கிடந்தன.
சுவாமி ஞானப்பிரகாச சுவாமிகளின் மாணவர், பன்மொழிப் புலவர் சங்.பிதா கலாநிதி டேவிட் அவர்கள் (தாவீது அடிகளார்) அந்தச் செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியாதவராய் மனவதிர்ச்சியினால் தம்முயிரை நீத்தார்.
யாழ்ப்பாண நூலகத்தில் ஊழியராக வேலை செய்துவரும் திரு பற்குணம் என்பவர் நூல் நிலையம் எரிந்த நிலையைக் கண்டு பிரமை பிடித்தவரானார். அவர் ஒரு நாடகக் கலைஞர் ஆவார். மூன்று நான்கு நாட்கள் சித்தம் குழம்பிய நிலையில் காணப்பட்டார்.
நூல் நிலையம் தீப்பற்றி எரிவதாக அன்றிரவு 10.15 மணியளவில் மாநகரசபை ஆணையாளர் சி.வி.கே.சிவஞானத்திற்கு செய்தி கிடைக்க, உடனேயே மாநகரசபை தீயணைப்பு பவுசர்களையும், மாநகரசபை ஊழியர்களையும் அனுப்பி தீயை பரவாது தடுக்க முனைகின்றார். அவர்களை நூலகத்திற்கு அருகிருந்த துரையப்பா விளையாட்டரங்கில் இருந்த பொலிசார் தடுக்கின்றார்கள். விசேஷ பொலிஸ் விசாரணைக் குழுவிற்கு சாட்சியமளித்த சி.வி.கே.சிவஞானம் இவ்வாறு சாட்சியமளிக்கின்றார்.
யாழ் பொது நூலகம் சில வரலாற்றுத் துளிகள்
1934 ஆம் ஆண்டு யூன் மாதம் 9 ஆம் திகதி ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டமே ஆரம்ப கால நூலகத்தை உருவாக்க வழிகோலியது. இக்கூட்டக் காரியதரிசி க.மு.செல்லப்பா அவர்கள் சிரமப்பட்டுத் திரட்டிய 1184 ரூபா 22 சதம் மூலதனமாகக் கொண்டு ஆஸ்பத்திரி வீதியில் வாடகை அறை ஒன்றில் 844 நூல்களுடனும் 36பருவ வெளியீடுகளுடனும் 1934 ஆவணி 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
1935 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி யாழ் பட்டின சபையால் பொறுப்பேற்கப்பட்டு வாடி வீட்டுக்குத் தெற்கே உள்ள மேல் மாடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
1952 ஆம் ஆண்டு நவீன பொது நூலகம் அமைப்பதற்கான முயற்சிகளள சாம் ஏ.சபாபதி தலைமையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. புதிய நூலகத்தை அமைப்பதில் அதி.வண பிதா லோங் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வந்தார்.சென்னை கட்டிடக்கலை நிபுணர் கே.எஸ்.நரசிம்மன் வரைபடங்களைத் தயாரித்தார். நூலகத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ்.ஆர்.ரங்கநாதனின் ஆதரவும் கிடைத்தது.
1953 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டது.
1959 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் நாள் நூலகம் திறக்கப்பட்டது.
1981 ஆம் ஆண்டு யூன் 1 ஆம் நாள் இன வெறிக் காடையர்களால் நூலகம் அழித்தொழிப்பு.
2001 ஆம் ஆண்டு மீள எழுந்தது யாழ் பொது நூலகம்.
📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖
சோமிதரன் படைத்த “எரியும் நினைவுகள்” ஆவணப்படம்
https://youtu.be/e21mnFWgL2A
“எரியும் நினைவுகள்” சோமிதரன் படைத்த ஆவணப்படம் சார்ந்த பேட்டி அவரோடு
http://www.madathuvaasal.com/2008/06/blog-post_25.html
ஈழத்தின் பிரபல கட்டிடக்கலை நிபுணர் திரு. வி.எஸ்.துரைராஜாவினால் "The Jaffna Public Library Rises From Its Ashes" என்ற நூல் வெளியிடப்பட்ட போது அது குறித்த என் பகிர்வு
http://www.madathuvaasal.com/2008/01/blog-post_21.html
கானா பிரபா
📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖
தகவல் மூலம்:
1. "யாழ்ப்பாண நூல் நிலையம் - ஓர் ஆவணம்", மூதறிஞர் க.சி.குலரத்தினம்,
மித்ர வெளியீடு, 1997
2. "மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது", நீலவண்ணன், முதற்பதிப்பு ஜீலை 1981,
மூன்றாம் பதிப்பு கமலம் பதிப்பகம் மார்ச் 2003.