"டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா மெல்பர்ன் மலர் போல் மெல்லிய மகளா"
பாடல் வந்த காலத்தில் நான் மெல்பர்னில் பல்கலைக்கழகப்படிப்பில் இருந்தேன்.
அப்போது தான் எனக்கும் ஒரு சொந்த செல்போன் வாய்த்தது. பல்கலைக்கழகத்தில்
என் சக நண்பன் ஆனந்த் விடாப்பிடியாக என்னை இழுத்துக் கொண்டு ஒரு செல்போன்
விற்பனை நிலையத்தில் என் பெயரில் ஒரு போனை வாங்க வைத்தான். அதுவரை எங்காவது
வீதியில் இருக்கும் பொதுத்தொலைபேசிக்கு
நாணயம் போட்டுப் பேசும் வழக்கம் தான் இருந்தது. எனக்கு முதலில் கிடைத்த
செல்போன் இன்று வைத்திருக்கும் iPhone 5S ஐ விட பல மடங்கு பாரமான
கிட்டத்தட்ட ஒரு கொள்ளிக்கட்டை அளவில் இருந்த நோக்கியா, கூடவே அதன் தலையில்
ஒரு நீட்டுக் கம்பி வேறு. அதையெல்லாம் நம்முடைய ஜீன்ஸில் வைத்தால் பிதுங்கி வெளியே தலையும், கொம்பும் தெரியும்.
90 களிலேயே செல்போன் வாங்கினாலும் அது ஒரு ஆடம்பரப் பொருளாகத் தான் காட்சிப்படுத்தப்படுத்த உதவியது. தீவிரமாகப்
பாவிக்கத் தொடங்கியதென்னவோ 2000 இன் இறுதியில் தான். ஒரு காலத்தில் போனில்
ஏன் காமெரா, இண்டர் நெட் இருக்க வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் கொடுத்த
என்னையே மாற்றிவிட்டது தொழில் நுட்பம். இப்போதெல்லாம் தொலைபேசி அழைப்பை
நாளொன்றுக்கு அதிகபட்சம் இரண்டோ மூன்றோ எடுத்தாலே அதிகம். இயக்குனர் சேரன் தன் படப்பிடிப்பு முடியும் வரை யாரும் செல்போன் பாவிக்கக்கூடாது என்றெல்லாம் கட்டளை போடுவாராம்.
"நான் செல்போன் பாவிப்பதில்லை" என்ற சுயவிளக்கம் சார்ந்த மிஷ்கினின்
பேட்டியைப் படித்த போது அவர் போலவே செல்போனை தலையைச் சுத்தி மூன்று சுற்று
சுற்றிவிட்டு எறிந்தால் என்ன என்றும் தோன்றும்.
Karthik Calling Karthik என்றொரு அட்டகாசமான மர்மப்படம் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஹிந்தியில் வந்திருந்தது. பர்ஹான் அக்தர் அதில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தார். அந்தப் படத்தில் மனச்சிதைவு ஏற்பட்ட நாயகனுக்கும் தொலைபேசிக்குமிடையில் உளவியல் சார்ந்த முடிச்சு அழகாகக் காண்பிக்கப்பட்டிருக்கும்.பர்ஹான் அக்தர் நடிப்பில் பின்னியிருப்பார், படத்தின் திரைக்கதையும் விறுவிறுப்பாகச் செதுக்கப்பட்டிருக்கும்.
கடந்த வாரம் நம்முடைய அலுவலகத்திலிருந்து நான்கு பேர் வேலைத்திட்டமொன்றுக்காகப் பயணித்தோம். சில மணி நேரங்கள் கழிந்த நிலையில், நேரத்தைப் பார்ப்பதற்காக ஒவ்வொருவரும் செல்போனைத் தேடுகிறார்கள். என்னைத் தவிர யாருடைய கையிலும் கைக்கடிகாரம் இல்லை என்பதை அப்போது தான் கண்டேன். இன்று ஒரு செல்போனுக்குள் வானொலி, ஒளிப்பட, வீடியோ காமெரா என்று எல்லாவற்றையுமே நிரப்பிவிட்டது. போனின் அடிப்படை நோக்கத்திலிருந்து அதன் பயன்பாடும் மாறிவிட்டது.
இப்போது Viber போன்ற இணையத் தொடர்பு தொலைபேசி அழைப்புமுறை
வந்துவிட்டதால் போன் கம்பனிக்காரனுக்கு வீணாக கட்டும்
தொலைபேசிக்கட்டணத்தையும் மறுபரிசீலனை செய்ய வைத்துவிட்டது தொழில் நுட்பம்.
15 வருடங்களுக்கு மேலாக Post paid என்னும் முறைமையின் கீழ் தொலைபேசி
நிறுவனத்துடன் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் ஒப்பந்தந்தத்தை
நேற்றோடு தலை முழுகிவிட்டு Pre-Paid யுகத்துக்குள் வந்தாச்சு. அதிலும் ஒரு
வேடிக்கையான வேதனையை அனுபவிக்கவேண்டி நேர்ந்தது.
எனது செல்போன்
பாவனை இலக்கத்தை புதிய தொலைபேசி நிறுவனத்துக்கு மாற்றிய பின்னர் முதல்
வேலையாக இணைய வசதி இருக்கா என்று பார்த்தால் அவுட் என்று காட்டியது. அந்த
நிறுவனத்துக்கு அழைத்தால் அம்மணி ஒருத்தி தேனொழுகப் பேசினார். என்
பிரச்சனையைச் சொன்னால் "ஓ நம்ம கம்பனி இணைய வசதிக்கு முக்கியத்துவம்
கொடுக்காது உங்களது iPhone 5S வேறு எனவே பேசாம iOS 7 ஐ போடுங்க" என்று பதில்
வந்தது. கவுண்டர் குரலில் "பிச்சுப்புடுவேன் பிச்சு" என்று கத்தணும் போல
இருந்தது. அடக்கிக் கொண்டு அம்மிணி ஐயோயெஸ் எல்லாம் போட்டாச்சு இந்த போன்
வாங்கியே நாலு வாரம் என்றேன். அப்படியென்றால் சிம் கார்ட் ஐ கழற்றி விட்டு
மீண்டும் iOS 7 ஐ போடுங்கள்" என்றாள். இது ஆவுறதில்லை என்று நான் மீண்டும்
போராட அவளோ தனக்குத் தெரிந்த 64 கலைகளையும் செல்போன் செட்டிங்ஸ் இல்
பிரயோகிக்கச் சொன்னாள். அரைமணி நேரம் கடந்து பொறுமை டாட்டா காட்ட நானும்
நன்றி தாயி உன் சேவைக்கு என்று கட் பண்ணிவிட்டு மீண்டும் அழைத்தேன், வேறு
யாராவது புத்திசாலி அகப்படும் என்று. இப்படிப் பலமுறை பல காரியங்களுக்குச்
செய்து வெற்றியும் கண்டிருக்கிறேன் சில தடவை அதே கஷ்டமர் சேர்விஸ்காரரிடம்
அகப்படுவதுமுண்டு.
"அதான் சொன்னோம்ல" என்ற தோரணையில் மீண்டும் அதே குரல் வருவதுண்டு.
என் கஷ்ட காலம் மீண்டும் இன்னொரு அம்மிணி
மீண்டும் 64 கலை. பேசாமல் போனை கடாசிவிடுவோமா போனை என்று நினைத்தவாறே
setting சென்று mobile data என்று பச்சையாகச் சிரித்த பொத்தானை அழுத்தி
மீண்டும் அழுத்தினால் அட இணையத்தில் கூகுளான் சிரிக்கிறார் சிரிக்கிறார்
சிரித்துக் கொண்டே இருக்கிறார்.
Cisco networking முதல் வகுப்பில்
பாடமெடுத்து விட்டு செயன்முறைக்கு ஆசிரியர் பணிக்கிறார். ஒவ்வொருத்தரும்
Router ஐ நீண்ட நேரமாகக் கிண்டிக் கொண்டிருக்கிறோம்.
"அதிருக்கட்டும் முதலில் ஸ்விட்ச் ஐ
போட்டீர்களா" என்று கேட்டார் ஆசிரியர்.
பிரச்சனையை பெரிதாகவே சிந்திக்கப் பழகிவிட்டோம் இப்போதெல்லாம்.
Wednesday, October 30, 2013
Tuesday, October 22, 2013
இடப்பெயர்வுகள் முற்றுப்புள்ளியல்ல,
என் பெற்றோர் வேலை நிமித்தம் சில ஆண்டுகள் மலையகத்தில் தங்கி ஆசிரியர்களாகப் பணி புரிந்து நம் சொந்த ஊர் திரும்பிய காலம் என்பது மங்கலான பால்ய நினைவுகளிலேயே தங்கிவிட்டது. 83 ஆம் ஆண்டு கொழும்பிலே இனக்கலவரம் ஏற்பட்ட போது தம் சொந்த வீடுகளில் நிலை கொண்டிருந்தோரின் கண்ணுக்கு முன்னாலேயே அவர்களின் சொத்துக்களைச் சூறையாடிப் பின்னர் அங்கேயே அகோரமாகக் கொன்று குவிக்கப்பட்ட போது எஞ்சித் தப்பியோர்களில் எங்கள் சித்தி குடும்பமும் ஒன்று. அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குப் போவதென்றால் ஏதோ சீமைக்குப் போகும் உற்சாகம். யாழ்தேவி ரயிலில் ஆறு, அருவி எல்லாம் கண்டுகொண்டு போகலாம், கொழும்பிலே பென்னாம்பெரிய கட்டிடங்களைக் காணலாம் என்ற உற்சாகம் தொற்றிக்கொள்ளும் சின்ன வயதுக் காலம் அது. சித்தி வீட்டுக்கார் அப்போது யாழ்ப்பாணத்துக்கு வந்தது ஒரு புதினமாக இருந்தது. அவர்களைப் போலவே குடும்பம் குடும்பமாக நிறையப் பேர் வந்துகொண்டிருந்தார்கள். செம்பாட்டு மண் அப்பிய காற்சட்டையோடு திரியும் எமக்கு, ஸ்ரைலாக உடுப்புப் போட்டுக்கொண்டு சின்னப்பெடியளும் இங்கிலீஷ் கதைக்கிறதை ஆச்சரியமாகப் பார்ப்பதுண்டு. எங்கட பள்ளிக்கூடத்துக்கும் சில பெடியள் படிக்க வந்தவை. இனிக் கொழும்பு வேண்டாம், யாழ்ப்பாணத்திலேயே இருப்பம் என்று நினைத்த சித்தி குடும்பமும், வீடுகட்ட அறுத்த சீமெந்துக் கல் ஈரம் காயும் முன்பே வெளிக்கிட்டு விட்டார்கள். அப்படித்தான் மீண்டும் கொஞ்சம் பயம் தெளிந்ததும் கொழும்புக்குக் கிளம்பிவிட்டார்கள் அயலில் இருந்த ஒரு சில குடும்பமும். அப்பவும் எனக்கு இந்த இடப்பெயர்வின் தாக்கம் அதிகம் தெரியவில்லை.
1987 ஆம் ஆண்டு ஒபரேசன் லிபரேசன் என்று பெயரிட்டு அப்போதைய இலங்கை ராசா ஜெயவர்த்தனா தீவிர இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட நேரம் அது. "பலாலி றோட்டால ஆமிக்காறன் வாறான் ஓடுங்கோ ஓடுங்கோ என்று" அம்மம்மா வீட்டில் இருந்த எல்லாரையும் எச்சரித்து விட்டு சுதுமலைப் பக்கமாக ஓடத்தொடங்கினார் தருமர் மாமா. அந்த நேரம் இப்படி அடிக்கடி ஓட்டப்பந்தயம் நடக்கும். வடமாராட்சியில் இருந்து அதைத் தாண்டியும் மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். ஆனால் எங்கட ஊருக்கு ஆமிக்காறரின் கால் பதியும் முன்பே, நெல்லியடியில் கப்டன் மில்லரின் முதலாவது கரும்புலித் தாக்குதலோடு அந்த முழு இராணுவ நடவடிக்கையும் முடங்கிப் போனது.
ஆனால் சில மாதங்களில் இந்திய இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையில் போர் மூண்ட போதுதான் எங்கள் வாழ்வில் இடப்பெயர்வின் வலியை நேரே உணர முடிந்தது. வீட்டில் போட்டது போட்டபடி கிடக்க, எல்லோரும் அண்ணா தொழிலகம் என்ற உள்ளூரில் இயங்கிய தொழிற்சாலையில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தோம். எங்கள் ஊரிலேயே ஒரே ஒரு மாடிக்கட்டிடம் அதுதான். ஆமிக்காறன் அடிக்கிற ஷெல் அந்தக் கட்டிடத்தைப் பாதிக்காது என்ற மூட நம்பிக்கை வேறு. அந்தத் தொழிற்சாலைக்குள்ளேயே நூற்றுக்கணக்கில் குடும்பங்கள் அடைபட்டுக் கிடக்க, இருப்பில் இருந்த அரிசி தான் கஞ்சி போட்டது. ஒரு சுபயோக சுப தினத்தில் ஆமிக்காறர் அடிச்ச ஷெல் நாங்கள் இருந்த கட்டிடத்தையும் பதம் பார்க்க, ஒரு சிலர் காயத்தோடு தப்ப, மிச்சப்பேர் இனி ஆண்டவன் சந்நிதி தான் ஒரே வழி என்று மடத்துவாசல் பிள்ளையாரடி நோக்கி ஓடினர், நாங்கள் உட்பட. தற்காலிக முகாம்களில் இருந்து வீடு பார்க்கப் போவோர் பெரும்பாலும் திரும்பி வரார். அவர்களைத் தேடிச் சென்றவர்கள் பிணத்தோடு வருவர். கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள நெல் உமி எரிக்கும் வளவுக்குள் எரித்து விட்டு குளிப்பதோடு சரி. சிட்னியில் இருக்கும் ஒரு நண்பரின் வாழ்க்கையில் நடந்தது இது. வல்வெட்டித்துறையில் வீடு பார்க்கச் சென்றவர், தனக்கு முன்பே வீடு பார்க்க வந்த அங்கே தனது தமையன் வீட்டு முற்றத்தில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் காண்கிறார். தூரத்தில் ஆமிக்காறன் வரும் சல சலப்புக் கேட்கிறது. உடனே தன்னுடைய தமையனின் உடம்பில் வழிந்த இரத்ததை உடம்பெல்லாம் தடவிச் செத்தது மாதிரிக் கிடந்து தப்பித்தாராம். இப்படி நிறைய இடப்பெயர்வுக் கதைகள்.
இந்திய இராணுவ முற்றுகைக்குப் பின்னர் பல இடப்பெயர்வுகளை எங்கட சனம் சந்தித்து விட்டது.
1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தெல்லிப்பழை தாண்டி ஒரு பெரும்பாகமே காடு வளர்த்து விட்ட பூமியாகிவிட்டது. பலாலியில் இருந்து இலங்கை இராணுவத்தின் வலிகாமம் மீதான முற்றுகையில் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அந்தப் பகுதியெல்லாம் கொஞ்சமாக மெல்லத் திறந்து விடப்பட்டது. வீடு எங்கே வீதி எங்கே என்றே தெரியாத அளவுக்கு அடர்ந்த காட்டுப்பகுதியாக அந்த இருபது வருடங்கள் மாற்றிவிட்டிருந்தது இந்த ஊர்களை. இந்த ஊர்களை இருபது வருடங்களுக்கு முன்னர் பார்க்கச் சென்றவர்களில் பலரும் இன்னும் திரும்பவில்லை.
வீடும் காணியும் சடப்பொருட்கள் என்றாலும் அவற்றை உதறித்தள்ளிவிட்டு எங்கட சனத்தால் வரமுடியவில்லை. அந்த வீட்டு வளவில் கொண்டாடிய சொந்தங்களும், உறவுகளும் செத்து மடிந்தாலும் கூட.
தொண்ணூறுகளுக்குப் பின்னரான தீவிர யுத்தத்தில் இப்போது யார் எந்த ஊரில் இருக்கிறார் என்பதை விட நான் சொந்த ஊரில் இருக்கிறேனா என்பதே பெரிய கேள்வி. தொடர்ந்த இடப்பெயர்வுகள் பலரின் ஊரையே மாற்றி வேறோர் ஊரில் சொந்தம் கொண்டாட வைத்து விட்டது. ஆசையாக வீட்டைப் பார்க்கப் போனவர் மாண்டது போக, இன்று அநாதைகளாக இருக்கும் பல வீடுகளுக்கும் சொந்தம் கொண்டாட யாருமே இல்லை. வெளிநாட்டுக்குப் போயிருக்கலாம் அல்லது குடும்பமாகவே செத்துப் போயிருக்கலாம். தெல்லிப்பழை தாண்டி இருபக்கமும் இடிபாடுடைய வீடுகளைப் பார்க்கும் போது, தலை விரி கோலமாக நிற்கும் வாழ்வைத் தொலைத்தவள் நிலையில் தான் இருக்கும்.
ஊருக்கு ஒரு இடப்பெயர்வு என்ற காலம் போய், முழு யாழ்ப்பாணமே இடம்பெயர்ந்த 1995 கள் கடந்து, 2009 ஆம் ஆண்டில் இறுதிக்கட்ட யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது மணிக்கொரு ஊராய் அலைந்து உயிரைப் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது வானொலிக் கலையகத்தில் இருந்து தாயக நடப்புகளை எடுத்து வரும்போது முதல் நாள் பேசியவர் காணாமல் போயிருப்பார், பின்னர் அவர் இறந்த செய்தியை இன்னொருவர் எடுத்து வருவார். உடமைகளோடு இடம்பெயர்ந்த காலம் போய், ஒவ்வொரு ஷெல் அடிக்கும், விமானக் குண்டுவீச்சுக்கும் காணும் பக்கமெல்லாம் ஓடித் தப்ப முடிந்தோர் தப்பினார்கள். அந்த நேரத்தில் இடப்பெயர்வு என்பது நிமிடத்துளிக் கணக்கிலும் மாறிக் கொண்டிருந்தது.
இந்த கால் நூற்றாண்டு கடந்த யுத்தத்தில் இடப்பெயர்வுகளின் வடிவங்கள் வேறு, ஆனால் வலி ஒன்று தான்.
" சிறு நண்டு கடலோரம் படம் ஒன்று கீறும் சிலவேளை அதை வந்து அலை கொண்டு போகும்" -மகாகவி உருத்திரமூர்த்தி