கடந்த வாரம் என் அலுவலகத்தில் பணிபுரியும் சக வெள்ளை இனப் பெண்மணி சொன்னாள்
"பிரபா!, The Kite Runner படம் பார்த்தேன், நீ இந்த நாட்டில் இருப்பது எவ்வளவு பெரிய அதிஷ்டம்" என்று சொல்லி அந்தப் படத்தில் தான் ஒன்றிப் போனதை இப்படி வெளிப்படுத்தினாள்.
நேற்று இந்தப் படத்தைப் பார்த்தேன். காட்சிகள் திரையில் விரிய என் இளமைக் காலத்து மாலை நேரப்பொழுது போக்குகளை நினைப்பூட்டி விட்டது The Kite runner திரைப்படம்.பள்ளிக்கூடம் மாலை மூன்று மணி வாக்கில் முடிந்ததும் நேரே வீடு சென்று புத்தகப் பையை எறிந்து விட்டு தாவடிச் சுடலைப் பக்கம் இருக்கும் தோட்டக் காணிக்கு ஓடுவேன். எங்களின் சித்தி வீட்டுக்குப் பின் காணியை ஒட்டிய தோட்டப்புறம் என்பதால் வீட்டிலும் அதிக கெடுபிடிகள் இருக்காது. நான் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்தோடித் தோட்டக் காணிகளுக்குள் பாயவும், வேகத் தடையாகக் காலில் சுறுக்கென்று பாயும் தோட்டத்தில் விரவியிருக்கும் முட்கள். பிறகு நிதானமெடுத்து, கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்திருக்கும் நீண்ட நெடிய தோட்டக்காணிகளை ஒரு முறை கண்களால் அளவெடுத்து விட்டு, மரவள்ளி மரக்கன்றுப் பாத்திகளுக்குள் நிறைந்திருக்கும் நீர்ச்சகதிக்குள் காலை நனைக்காமல், மெல்லப் பாய்ந்து வாய்க்கால் ஓரமாய் இருக்கும் மண் திட்டியில் தடம் பதித்துத் தூரத் தெரியும் செம்பாட்டு வெறும் நிலப்பரப்பை நோக்கி நடப்பேன். அங்கு ஏற்கனவே மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு வந்து அவற்றைத் தோட்டக் காணிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்டிருக்கும் தடிகளில் கட்டி விட்டு விளையாடிக் கொண்டிருக்கும் அயல் வீட்டுப் பெடியன்கள் நிறைந்திருப்பார்கள். மாடுகள் தம்பாட்டுக்கு ஏற்கனவே விளைந்த பயிர் எச்சங்களை மென்று கொண்டிருக்கும்.
இடுப்பை விட்டு நழுவும் காற்சட்டையை மெல்ல மேலே இழுத்து விட்டு நானும் இந்தப் பெடியன்களுடன் மாலை நேர விளையாட்டில் ஐக்கியமாவேன். அந்த விளையாட்டுக்களில் ஒன்று தான், சோளகக் காலத்து பட்டம் பறக்கவிடுதல். அவரவர் தம் அதி வீர பராக்கிரமங்களைத் தம் பட்டங்களைப் பறக்க விடுதலில் காட்டுவார்கள். மூங்கில் கழிகளை வளைத்துச் செய்யப்பட்ட கொக்குப் பட்டம், நாலு மூலைப் பட்டம், எட்டு மூலைப் பட்டம், வெளிச்சக்கூடு என்று வானத்தில் அணிவகுக்கும் பட்டக் கூட்டம். குமாரசாமி மாமாவின் பெடியள் ஒரு புறம், அங்காலை நாகதீபனின் தமையன்மார் இன்னொரு பக்கம், தாமோதரம் மாமாவின் மகன் தன்ர வீட்டுக் காணிப்பக்கம், தாவடிப் பக்கமிருந்து மேய்ச்சலுக்கு வந்த பெயர் தெரியாத பெடியள் அங்காலிப் பக்கம், கூடவே தோட்டத்துக்குப் பட்டம் விடவென்றே வந்த சில பெடியள் என்று அந்தப் பெரிய செம்பாட்டு மண் தோட்டக் காணியை நிறைத்திருப்பார்கள். கையிலே மாப்பசை போட்டு முறுக்கேறிய கொடி நூற் பந்தைக் கிழுவந்தடித் துண்டமொன்றில் சுற்றித் தயாராக ஒருவர் வைத்திருக்க, இன்னொருவர் விண் பூட்டிய பட்டமொன்றை அந்த நூலிலே பொருத்தி விட்டு பட்டத்தை விரித்த படி, காற்றடிக்கும் திசைக்குக் கொஞ்சத் தூரம் ஓடிப் போய் மெல்லக் கையை விட, மேலே, மேலே, இன்னும் மேலே பட்டம் பறக்கத் தொடங்கிவிடும். "கொங்ய்ய்ய்ய்" என்று பட்டத்தில் பூட்டியிருக்கும் பனையோலை விண் ஒலி எழுப்பும். ஒன்று, இரண்டாகி, மூன்று, நாலாகி வானத்தில் பரந்திருக்கும் பட்டங்களில் ஒலியெல்லாம் சேர்ந்து கலவையாக இருக்கும். "ஆரின்ர பட்டம் உயரமாப் பறக்குது?" ஆவென்று வாய் பிளந்து மேலே கலர் பார்க்கத் தொடங்கி விடுவேன். அதிக உயரத்தில் பட்டம் விடுபவருக்குப் பக்கத்தில் போய் நிற்பதே பெருமை. அந்த ஆளும் ரைட் சகோதரர்கள் கணக்கில் பெருமை பிடிபடாமல் கருமமே கண்ணாக இருப்பார். சில பட்டங்கள் அற்ப ஆயுசில் வானத்தில் ஒருமுறை வட்டமடித்து விட்டுக் கீழே விழுந்து செத்துப் போகும். கானமயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி கணக்காய் நானும் வீட்டில் தென்னங்குச்சிகளை வளைத்து இதயம் போல வடிவமாக உடுப்புக்குத் தைக்கிற நூலைக் கொண்டு வளைத்துக் கட்டி, கோபால பிள்ளை மாமா வீட்டில் வாங்கிய கலர் திசூப் பேப்பரை மாப்பசையால் இந்த எலும்புக்கூட்டுப் பட்டத்துக்கு ஒட்டி விட்டு, தோட்டத்துக்கு வந்து சித்தி மகன் நூலைப் பிடிக்கப் பட்டத்தோடு தோட்டக் காணியிலேயே நேராக ஓடியது தான் மிச்சம். நான் கையை விட முதலேயே பட்டம் என்ர காலுக்குள் விழுந்து "என்னால ஓட முடியாது என்று மன்னிப்புக் கேட்கும்".
1986 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தன்னுடைய இன்னொரு அவதாரமாக விமானக் குண்டு வீச்சில் தமிழரை அழிக்கத் தீர்மானிக்க, அதற்கு ஒத்திகை பார்த்த முதல் இடம் நாங்கள் விளையாடி அந்தத் தோட்டக் காணி தான். அந்த நாள் ஏனோ தெரியாது, நான் தோட்டப் பக்கம் போகவில்லை. இரண்டு பிளேன்கள் வானத்தை வட்டமிடுவதை ஆவென்று பார்த்திருக்கின்றது தோட்டக் காணியில் இருந்த கூட்டம். பிளேன்கள் தோட்டக்காணிகளைத் தாண்டி சில யார் தொலைவில் இருந்த தம்பாபிள்ளை மகேஸ்வரனின் தமிழ் தேசிய இராணுவம் இயக்கக் காம்பை தான் இலக்கு வைத்திருக்கின்றன. ஆனால் முன்பின் விமானக் குண்டு வீச்சைக் கண்டிராத சனம், பிளேனைக் கிட்டப் பார்க்கும் அதிஷ்டத்தை எண்ணி வியந்திருக்க, முதற் குண்டை ஒரு விமானம் கக்கியது. சிவராசா அண்ணையின் வீட்டை ஒன்றிய தோட்டப் புறம் இரண்டு சின்னப் பெடியள் விளையாடிக் கொண்டிருந்தவை. அந்தச் சின்னனுகள் தான் இந்த முதற் குண்டின் பலி கடாக்கள். உடல் சிதறி அங்கேயே செத்துப் போயின அந்தப் பிள்ளைகள். அதுக்குப் பிறகு அந்தத் தோட்டவெளிப் பக்கம் மாடு மேய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. ஆடு, மாடுகளுக்கு அவர்கள் வீட்டில் வைத்தே வெட்டிக் கொண்டு வந்த பலாக் குழைகளும், புல்லுக் கட்டுக்களும் கிடைத்தன. மாலை நேரக் காற்றாடலும் விளையாடும் உரிமையும், மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் மறுக்கப்பட்டது. "தோட்ட வெளிப்பக்கம் நிண்டால் பிளேன்கள் கண்டு குண்டு போட்டு விடும்" அந்தப் பக்கம் ஆரும் போகக் கூடாது" என்று எல்லார் வீடுகளிலும் தடா. ஒரு சில வீம்பு பிடிச்ச பெடியள் மட்டுமே தோட்டக் களத்தில் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிப் போனார்கள். எமது இளமைக் காலச் சந்தோசங்களில் ஒன்றான பட்டம் விடுதலும் வெகுவாகக் குறைந்து போயிற்று. (பட்டத்தைக் கண்டு பிளேன்கள் ஏவுகணை எண்டு நினைக்குமாம் - உபயம் : சுப்பையா குஞ்சி ஐயா)
இப்போது "The Kite Runner" இற்குத் தாவுகின்றேன்.
1975 களில் ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யப் படைகள் ஆப்கானிஸ்தான் மீது முற்றுகை நடத்த முன்னர் இருந்த வசந்த காலத்தில் "காபூல்" நகரில் கதை ஆரம்பமாகின்றது. அமீர் என்ற சிறுவனின் தகப்பன் பாபா அவ்வூர் பெரும்பணக்காரர். இவர்கள் வீட்டில் Hazara என்ற இனத்தைத் சேர்ந்த அலி என்ற வேலையாளும் அமீரின் வயதை ஒத்த ஹசன் என்ற சிறுவனும் பணியாளர்களாக இருக்கின்றார்கள். ஆனால் அமீரோ அவன் தகப்பனோ ஹசனை ஒரு வேலையாளின் மகன் என்ற அந்தஸ்தை தாண்டி மிகவும் நேசத்தோடு பழகுகின்றார்கள். அமீருக்கு இயல்பாகவே கதைகள் புனையும் திறமை இருக்கின்றது. இதை இவனின் தகப்பன் பாபா ஒரு பொருட்டாக எடுக்காவிட்டாலும் தந்தையின் நண்பர் ரஹீம் கான் அமீரை மிகவும் ஊக்கப்படுத்தி இன்னும் கதைகளை எழுத உற்சாகப்படுத்துகின்றார். படிக்காத ஹசனும் பணக்கார அமீரும் இணைந்து விளையாடுவதும், அமீர் தான் புனைந்த கதைகளை ஹசனுக்குச் சொல்லி மகிழ்வதுமாக இவர்களின் நட்பு தெளிந்த நீரோடையாகப் போய்க்கொண்டிருக்கின்றது. தான் பிறந்த போது தன் அம்மா இறந்த காரணத்தினால் தன் தந்தை பாபா தன்னை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்ற கவலையும் ஏக்கமும் மட்டும் அமீரின் மனதில் எப்போது ஒட்டிக்கொண்டிருக்கின்றது.
அப்போது அவ்வூரில் பட்டம் விடும் போட்டி ஆரம்பமாகின்றது. அந்தச் சுற்றுப் போட்டியில் தன் எஜமானர் பாபா வங்கித் தந்த பட்டத்தோடு தன் சின்ன எஜமான் அமீருடன் இந்தப் போட்டியின் தானும் களம் இறங்குகின்றான் ஹசன். தன்னுடைய இலாவகமான பட்டம் விடும் திறன், எதிராளியின் பட்டத்தை அறுத்து விழுத்தும் திறமை இவை எல்லாம் சேர்த்து ஹசனுக்கும் அமீருக்கும் அந்தப் பட்டப் போட்டியில் வெற்றியைக் கொடுக்கின்றது. தன் தந்தை மனதில் இந்த வேலைக்காரச் சிறுவன் இன்னும் இடம் பிடித்து விடுவானோ என்ற கவலை பொறாமையாக அமீரின் மனதில் உருவெடுக்கின்றது. ஊர்ச்சிறுவர்கள் ஹசனின் சாதியைத் தாழ்த்தி இகழ்ந்து, அவனை அடித்துத் துன்புறுத்துவதையும் கண்டும் காணாமல் நகர்கின்றான் அமீர். இணை பிரியா நண்பனாக இருந்த ஹசனை அவமானப்படுத்தியும், ஏசியும் விலக்குகின்றான் அமீர். தன் தந்தையை ஏமாற்றி நாடகமாடி ஹசனைத் திருட்டுப் பட்டம் கட்டி வீட்டை விட்டு வெளியேற்றுகின்றான்.
தொடர்ந்து சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுளையவும், வீடு வாசல் இழந்து பெரும் பணக்காரர் பாபாவும், மகன் அமீரும் பாகிஸ்தானுக்கு கள்ளப் பாதையால் பயணித்துப் போய் பின்னர் அமெரிக்காவில் அகதியாக அடைக்கலமாகுகின்றார்கள். 2000 ஆம் ஆண்டுக்கு நகர்கின்றது கதை. தன் தகப்பனின் மனதில் இடம் பிடிக்கும் அமீர் ஒரு பெரிய எழுத்தாளனாகவும் ஆகின்றான். இப்போது அமீர் ஒரு பரந்த உள்ளம் கொண்ட மனிதன். இந்த வேளை பாகிஸ்தானில் இருந்து தந்தையின் நண்பர் ரஹீம் கான் அவசரமாக அமீரை அங்கு வரும்படி அழைக்கின்றார். திருட்டுப் பட்டம் கட்டித் தொலைந்து போன தன் பால்யகால நண்பன் ஹசன் இப்போது உயிருடன் இல்லை என்ற தகவலையும், ஹசன் குறித்த இன்னொரு அதிர்ச்சிகரமான உண்மையையும் சொல்லி, ஹசனின் பிள்ளை ஏதோ ஒரு அனாதை விடுதியில் இருக்கலாம் என்றும் ரஹீம்கான் கூறி ஹசனின் படத்தையும், பழைய கடிதத்தையும் ஒப்புவிக்கின்றார். அமீர் இளம் பிராயத்தில் செய்த தவறத் திருத்தும் வாய்ப்பாக போல் அமைகின்றது இது. தலிபான் போராளிகளின் ஆட்சியில் இருக்கும் காபூலை நோக்கி அமீர் பயணித்து பல இன்னல்களைச் சந்தித்து அநாதையாகிப் போன ஹசனின் மகன் சொஹாப்பை காப்பாற்றித் தன்னுடன் அமெரிக்காவுக்கு அழைத்துப் போகின்றான். உளரீதியாகப் பாதிக்கப்பட்டு நொந்து ஒடுங்கிப் போய் இருக்கின்றான் அந்தச் சிறுவன். தன்னுடைய நண்பன் ஹசன் கைக்கொண்ட வித்தையைப் பயன்படுத்திப் பட்டத்தை ஓட்டிக் காட்டி ஹசனின் மகனின் மனதில் இடம் பிடித்து அவனின் நட்பைப் பெறுகின்றான் அமீர்.
"The Kite Runner" என்பது Khaled Hosseini என்ற ஆப்கானிய எழுத்தாளரால் எழுதப்பட்ட நாவல். 2003 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நாவல் உலகளாவிய ரீதியில் மிகச்சிறந்த விற்பனையில் இருந்த நாவல்களில் ஒன்று, இது 34 நாடுகளில் பதிப்பிக்கப்பட்டு வெளியானது. இந்த நாவல் கூட கதாசிரியன் வாழ்க்கையில் நடந்த கதையோ என்ற எண்ணமும் வருகின்றது. நாவலின் களம் கூட இந்த எழுத்தாளரின் வாழ்க்கையோடு இணைந்து நிற்கின்றது. Khaled Hosseini காபூல் நகரில் பிறந்து 1980 ஆக் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர். 2007 ஆம் ஆண்டு இவர் எழுதிய A Thousand Splendid Suns" என்ற நாவல் கூட முதற்தர விற்பனையில் இருக்கின்றது. இந்த நாவலைத் திரைக்கதை வடிவமாக்கியவர் David Benioff, இயக்கிவர் Marc Forster . இப்படத்தைப் பற்றிய மேலதிக செய்திகளை அறிய: http://www.kiterunnermovie.com/
நேற்று The Kite Runner படத்தைப் பார்த்த கணமே வரும் போது இந்த நாவலை வாங்கிக் கொண்டேன். "இந்தப் படம் அருமை, ஆனால் நாவலை வாசிக்கும் சுகம் அதை விட அருமை" என்று முறுவலோடு சொன்னாள் புத்தக விற்பனைப் பிரதிநிதி. ஆற அமர இருந்து வாசிக்க வேண்டும் இதை.
The Kite Runner திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துப் பதிவுகள் மிக அழகாகக் காட்டப்படுகின்றன. படத்தின் ஆரம்பத்திலிருந்து நிறைவு வரை இழையோடும் பின்னணி இசை கூட ஆப்கானிய கலாச்சாரத்தோடு இணைந்த சுகத்தைக் கொடுக்கின்றது. மரத்துண்டத்தில் தம் பெயர் பொறித்து மகிழந்தும், பட்டம் விட்டும் கதைகள் பேசியும் வாழ்ந்த அந்தப் பால்ய நட்புக்காலம், அமீர் வெறுத்து ஒதுக்கும் போது நேசமாக இரும் ஹசனின் பண்பு, சோவியத் படைகளின் படையெடுப்பு, தலிபான் போராளிகளின் ஆட்சிக்காலம், தொலைந்த நட்பின் சுவடுகளாய் எஞ்சி நிற்கும் இடங்களைத் தேடிப் போதல் என்று பல இடங்களைக் காட்சிப்படுத்துகின்றது இப்படம். கூடவே ஹொலிவூட் படமென்பதால் ரஷ்யா மீதான சீண்டல்களும், தலிபான் போராளிகளை மிக மோசமானவர்களாகக் காட்டும் காட்சிகளும் இன்னும் அழுத்தம் கொடுத்தே காட்சியாக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு நாவலைப் படமாக்கும் போது ஏற்படும் சிக்கலைச் சில காட்சிகளின் வேகம் புலப்படுத்துகின்றது. உண்மையில் இந்த நாவலை வாசித்து விட்டுப் படம் பார்ப்பவர்களுக்கு இன்னும் ஒருபடி மேல் போய், படத்தோடு ஒன்றக் கூடிய வாய்ப்புக் கிடைக்கும். இருபது ஆண்டுகளுக்கு முந்திய பூமி சோகம் களைந்த சுதந்திரமான பிரதேசமாகவும், பின்னர் சமீபத்திய காபூல் நகர் நொண்டிச் சிறுவர்கள் ஓடியாடி விளையாடும் பூமியாகவும் காட்டப்படுவது எம் ஊரோடு பொருத்திப் பார்க்கவேண்டிய மனது வலிக்கும் காட்சிகள். எங்கள் கதைகள் இப்படிப் படமாவது எப்போது? நம்மவர் இப்படியான படைப்புக்களை இன்னும் வலிமையான எழுத்துக்களோடு உலகளாவிய ரீதியில் ஆங்கில மொழிப்படைப்பாக எழுதினால் இப்படி இரு சந்தர்ப்பம் வாய்க்குமோ?
கடந்த பொங்கலுக்கு வானொலி நிகழ்ச்சி செய்யும் போது சில வடமராட்சியில் வாழ்ந்த நேயர்கள் கலந்து கொண்டு, தைப்பொங்கல் தினத்தில் தம்மூர் கடற்கரையில் வைத்து பட்டங்களைப் பறக்க விடும் போட்டியெல்லாம் ஒரு காலத்தில் நடந்திருக்கிறதாம். எனக்கு அது புதுமையாக இருந்தது.
செங்கை ஆழியான் எழுதிய தலை சிறந்த நாவல்களில் ஒன்று "முற்றத்து ஒற்றைப் பனை" . சிரித்திரன் வெளியீடாக வந்த இந்த நாவல் .
தன் வாழ்வில் பட்டம் விடுதலையே சாதனையாகக் கொண்டு வாழ்ந்த "கொக்கர் மாரிமுத்து" என்னும் மாரிமுத்தர் அம்மானின் வாழ்க்கையோடு நம்மூரின் வாழ்வியலில் ஒரு அங்கமாகியிருந்த பட்டம் பறக்கவிடும் நிகழ்வினை இந்த நாவல் சுவை பட விபரிக்கின்றது.
நூலகத் திட்டத்தில் இந்த "முற்றத்து ஒற்றைப் பனை" இணையத்திலேயே வாசிக்கக் கிடைப்பதும் ஒரு வரம்.
என் சக வேலைத் தோழி சொன்னதை மீண்டும் நினைத்துப் பார்க்கின்றேன். போரின் கொடுமைக்கு முகம் கொடுக்க முடியாமல், ஊரையும் உறவையும் தொலைத்து எங்கோ ஒரு தொலைவில் இருக்கும் அந்நிய தேசம் வந்து பாதுகாப்பாக மட்டும் இருந்து, இங்கிருந்து அந்தப் பழைய வாழ்வு மீண்டும் வராதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நான் அதிஷ்டக்காரனா?
விடையைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.