ஈழத்து பிரபல எழுத்தாளர் செ.யோகநாதன் மாரடைப்பால் 28-01-08 திங்கள் யாழ்ப்பாணத்தில் காலமானார். முன்னர் உதவி அரசாங்க அதிபராக பணி புரிந்தவர் என்பதோடு ஈழத்து இலக்கியத்துறையில் முன்னோகளில் ஒருவராகவும் விளங்கியவர். சிறுகதை,நாவல், நாடகம், சினிமா என பல்துறையிலும் ஈடுபாடுகொண்டு கட்டுரைகள், நேர்காணல்கள், விமர்சனங்கள் என பல பத்திரிகைகளிலும் எழுதி வந்தவர். ஈழத்தில்
மட்டுமல்லாது தமிழகத்திலும் பல ஆண்டுகள் கலைப்பணியாற்றியவர்.
தழிழ்த்தேசியத்திலும் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் கொண்ட இவர். ஐந்து தடவைகள்
இலங்கை அரசின் சாகித்திய மண்டல பரிசு பெற்றவர். தமிழகத்திலும் தழிழக அரசின் பல விருதுகளைப் பெற்றதோடு முதல்வர் கலைஞர் கருணாநிதியாலும் பாராட்டும் பரிசும்
பெற்றவர். இதுவரை எண்பத்திநான்கு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.
செ.யோகநாதன் நூல்கள்
யோகநாதன் கதைகள் (சிறுகதைகள், 1964)
ஒளி நமக்கு வேண்டும் (ஐந்து குறுநாவல்கள், 1973)
காவியத்தின் மறுபக்கம் (மூன்று குறுநாவல்கள், 1977)
வீழ்வேன் என்று நினைத்தாயோ? (சிறுகதைகள், 1990)
அன்னைவீடு (சிறுகதைகள், 1995)
கண்ணில் தெரிகின்ற வானம் (சிறுகதைகள், 1996)
அசோகவனம் (சிறுகதைகள், 1998)
செ.யோகநாதன் அவர்களின் திடீர் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் அடைந்தேன். எமது மாணவப் பருவத்தில் கல்லூரி நூலகங்களின் மூலம் எமக்கு இலக்கியப் பசியைத் தணித்தவர்களில் ஒருவர் அல்லவா அவர்.
நேற்று (ஜனவரி 30, 2008) செ.யோகநாதன் அவர்களின் இறுதிக்கிரியைகள் நடைபெற்றதோடு அன்னாரின் இலக்கிய நினைவு நிகழ்வும், யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
செ.யோகநாதன் குறித்து இரண்டு நினைவுப்பகிர்வுகளை, செ.யோகநாதன் அவர்களின் அஞ்சலிக்கூட்டத்தினைத் தொடர்ந்து எடுத்திருந்தேன். அவற்றின் ஒலியும் வடிவையும், செங்கை ஆழியான் வழங்கும் கருத்துக்களின் எழுத்து வடிவையும் இங்கே தருகின்றேன்.
கவிஞர் சோ.பத்மநாதன் வழங்கும் நினைவுப்பகிர்வு
எழுத்தாளர் செங்கை ஆழியான் வழங்கும் "அமரர் செ.யோகநாதனின் இலக்கியப் பங்களிப்பு"
ஒலி வடிவில்
எழுத்து வடிவில்
ஈழத்தமிழுலகு நன்கு தெரிந்த படைப்பாளி செ.யோகநாதன் கடந்த திங்களன்று காலமானார். அவருடைய இறுதிச் சடங்குகள் இன்று (ஜனவரி 30) யாழ்ப்பாணம் மூத்த விநாயகர் கோயில் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அங்கே அவருக்கான அஞ்சலி நிகழ்வும், தொடர்ந்து அஞ்சலிக் கூட்டமும் நடைபெற்றது. அந்த அஞ்சலிக் கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன். கவிஞர் சோ.பத்மநாதன், பேராசிரியர் சிவலிங்கராஜா, தாயகம் ஆசிரியர் தணிகாசலம், கல்விக்கந்தோரில் பணியாற்றிய அவரது நெருக்கமான நண்பர் தேவராஜா, தினக்குரல் பணிமனையில் பணியாற்றும் ஐயா சச்சிதானந்தன் இன்னும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். ஏராளமான மக்களும் கலந்து கொண்டார்கள். அவருடைய பூதவுடல் இன்று அக்கினியுடன் சங்கமமாகியது.
உண்மையிலேயே தமிழுலகம் நன்கு அறிந்த படைப்பாளி செ.யோகநாதன். அவர் ஆயிரத்து தொழாயிரத்து அறுபதுகளில் ஆற்றல் மிக்க இளம் எழுத்தாளனாக உருவெடுத்தது எல்லோருக்கும் தெரிந்ததே. அவரை உருவாக்கிய பெருமை பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு உரியது. அவருடைய சமகாலத்தவர்களாக செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், கதிர்காம நாதன், குந்தவை, பரராஜசிங்கம், அங்கையன், கைலாசநாதன், சிதம்பரவர்த்தினி, போன்ற சிறுகதைப்படைப்பாளிகள் அந்தக்காலத்திலே பேராதனைப் பல்கலைக்கழகத்திலே இருந்தார்கள்.
அவர்களோடு மெளனகுரு, சண்முகதாஸ், தளையசிங்கம் போன்றோர்களும் அங்கு இருந்தார்கள். அந்தக் காலத்தில் கைலாசபதி அவர்கள், வித்தியானந்தன் அவர்கள் ஆகியோர் இலக்கியத்தினுடைய செல்நெறிகளை நன்கு தெரிந்தவர்களாக இருந்தார்கள்.
யோகநாதன் அவர்கள் கைலாசபதி அவர்களோடு மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அவர் பல்கலைக்கழகத்திற்கு வந்த காலத்தில் இருந்தே அங்கு ஒரு புதிய இலக்கியக் குரல் ஒலிக்கத் தொடங்கியது. இவ்வாறு பல்கலைக் கழகத்தில் இருந்தோரோடு, பல்கலைக்கழகத்துக்கு வெளியே தெணியான், தெளிவத்தை யோசப், பெனடிக்ட் பாலன் போன்ற எழுத்தாளர்களும் ஈழத்து சிறுகதை இலக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றனர் என்பது முக்கியமான சங்கதியாகும். பல்கலைக்கழகத்தில் இருந்தபோது பல்கலைக் கழக வெளியீடாக வந்த கதைப்பூங்கா, விண்ணும் மண்ணும், காலத்தின் குரல்கள், யுகம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளில் செ.யோகநாதன் அவர்களுடைய கதைகள் வெளிவந்திருக்கின்றன. பேராதனைப் பல்கலைக்கழகம் 1960, 64 களில் வெளிக்கொண்ர்ந்த முக்கிய படைப்பாளிகளில் யோகநாதனும் ஒருவர் என்பதை எவரும் மறுக்கமுடியாது.
தென்னிந்தியத் தமிழுலகமும் நன்கு அறிந்த எழுத்தாளர்களில் செ.யோகநாதன் மிக முக்கியமானவர். நான் நினைக்கின்றேன் 1962 இல் தான் யோகநாதனின் முதற் சிறுகதையான "மனக்கோலம்" கலைச்செல்வி சஞ்சிகையிலே பிரசுரமாகியது. கலைச்செல்வி, கந்தரோடையில் சிற்பி சரவணபவன் அவர்களால் நடாத்தப்பட்ட ஒரு இலக்கியச் சஞ்சிகை. அதனையடுத்து சோளகம், வடு, கலைஞன், மலரும் கொடியும், நிறங்கள், புதிய நட்சத்திரம் போன்ற சிறுகதைகள் அவராலே படைக்கப்பட்டன. இவை ஒருவருடைய சிறுகதைகளைப் படித்த பிறகு எஞ்சி நிற்கின்ற நினைவுகளோடு கூடிய சிறுகதைகள். இச்சிறுகதைகள் அவ்வளவு அற்புதமானவை. யோகநாதனின் சிறுகதைகள் வெளிவராத ஈழத்துப் பத்திரிகைகளும் கிடையாது, தமிழக பத்திரிகைகளும் கிடையாது. யோகநாதனின் சிறுகதைத் தொகுதி, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் என் 1964 ஆம் ஆண்டு அவர் மாணவ நிலையில் இருந்த போதே வெளிவந்தது. யோகநாதனை விட நான் பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் மூத்தவன்.
யோகநாதன் அவர்கள் ஆரம்பத்திலே இன உணர்வு, மொழி உணர்வு மிக்கவராக தமிழரசுக் கட்சியின் பால் கவரப்பட்டவர். தன்னுடைய இரத்தத்தை எடுத்து கூட்டத்திலே தேவராஜா என்பவரைக் கூப்பிட்டுக் கொடுத்து தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்குப் பொட்டு வைத்த தொண்டராகவும் அவர் இருந்திருக்கின்றார். ஆனால் பின்னர் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் ஈடுபடத்தொடங்கியதும் ஒரு மார்க்சிய முற்போக்குவாதியாகி தேசியம், மண்வாசனை, யதார்த்தம் ஆகிய கரிசனைகளுக்கு உட்பட்டிருந்தார். அவர் மார்க்சிய முற்போக்குவாதியாகக் கடைசிவரை வாழ்ந்திருக்கின்றார். 1983 இலே தமிழ்த் தேசியவாதம் இவரின் கதைகளில் ஆழவே வேரூன்றி உள்ளதைக் காணலாம். இதில் மூன்று நிலை அவரிடம் இருந்திருக்கின்றது. முதலில் சமஷ்டி நிலையில் இருந்திருக்கின்றார், பிறகு கொம்யூனிஸ்ட் கட்சி முற்போக்கு எழுத்தாளராக இருந்திருக்கின்றார், பிற்காலத்திலே தமிழ்த் தேசியம் அவரது கதைகளிலே ஆழவே வேரூன்றி இருப்பதைக் காணலாம்.
எவ்வாறாயினும் யோகநாதனின் கதைகள் சமூக வாழ்க்கை விமர்சனங்களாக விளங்குகின்றன. தமிழ்த் தேசிய உணர்வுக் காலகட்டத்தில் ஈழத்துச் சிறுகதை உலகிற்கு காத்திரமான பங்களிப்பாக அமைவன யோகநாதனின் கதைகளாகும். ஈழத்து வாழ்க்கைப் பிரச்சனைகளின் மையங்களை இனங்கண்டு வார்த்தைகளில் உணர்வோடு பதிய வைத்திருக்கின்றார்.
தமிழகப் பத்திரிகைகளில் படைப்புகளால் அரசோச்சிய காலத்தில் எழுதிய "என்று தணியும்", "அகதி", "வீழ்வேனென்று நினைத்தாயோ", "அன்னையின் குரல்", "தேடுதல்", "சரணபாலாவும் சின்னக்குட்டியும்", "இன்னொரு மனிதன்", "அவர்களின் மகன்" , "அடிமைகள் இல்லாத இடத்தில்", "பூ முதிரை" முதலான சிறுகதைகளின் சிருஷ்டிகர்த்தாவாக, தமிழீழப் போராட்ட காலத்தில் இந்திய அமைதி காக்கும் படை நடாத்திய நடவடிக்கைகளையும், இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்களையும், போராளிகளின் தியாகங்களையும், அரச பயங்கரவாதப் போக்குகளையும், தமிழ் மக்களின் அகதி வாழ்வின் அவலங்களையும் இன ஒடுக்கல் நடவடிக்கைகளையும், சாதிப்பிரச்சனைகளையும் யோகநாதன் சிறுகதைகளாக உள்ளடக்கிக் கொண்டுள்ளார்.
அவர் இலங்கை நிர்வாக சேவையிலே சேர்ந்து உதவி அரசாங்க அதிபராக பூநகரியிலே கடமையாற்றியவர். பிறகு எழுத்துலகில் ஈடுபாடு கொண்டதனால் தமிழகம் சென்று குறைந்தது பத்து வருடங்கள் தமிழகத்திலே இருந்தவர். தமிழகத்திலே அவர் அப்போது எழுதாத பத்திரிகைகளே கிடையாது. எழுத்தாளர் அமரர் தி.ஜானகிராமன் அவர்கள் நினைவாக கணையாழி பத்திரிகை நடாத்திய குறுநாவல் போட்டியிலே "இரவல் தாய்நாடு" என்ற படைப்பை எழுதினார். உண்மையிலேயே எழுத்துலகில் அற்புதமான ஒரு குறுநாவல் இது.
அதற்குப் பிறகு தான் தமிழகமே விழித்துக் கொண்டு, ஒரு அற்புதமான படைப்பாளி இலங்கையில் இருந்து தமிழகம் வந்து தம்மிடையே இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட காலகட்டம் அதுதான். அந்த இரவல் தாய்நாடு என்ற குறுநாவலைப் படித்துவிட்டுத்தான் கலைஞர் கருணாநிதி கூட அவரோடு தொடர்பு கொண்டார். கலைஞர் கருணாநிதி எழுதிய "பாயும் புலி பண்டகரவன்னியன்" என்ற கதையைக் கூட யோகநாதன் தான் தேவையான ஆவணங்களை எடுத்துக் கொடுத்தார் என்பது அவர் எழுதிய கடிதத்தில் இருந்து புரியக் கூடியதாக இருக்கின்றது. பாயும் புலி பண்டகரவன்னியன் ஓர் அற்புதமான நாவலாக உருவாகுவதற்கு யோகநாதன் மூல காரணமாக இருந்திருக்கின்றார்.
யோகநாதன் எழுதிய "கண்ணீர் விட்டோ வளர்த்தோம்" என்பது மிக முக்கியமான ஒரு சிறுகதைத் தொகுதி. அது இந்தியாவிலே வெளிவந்தது. இந்திய இலக்கியச் சிந்தனை, எழுத்தாளர் பேரவை எல்லாம் அவருக்கு பரிசளித்துக் கெளரவித்தன. ஈழத்துச் சிறுகதைத் துறையிலே செ.யோகநாதனின் பாரிய பங்களிப்பாக விளங்குவது, அவர் தமிழகத்திலே வாழ்ந்த காலத்திலே "இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள்" என்ற இரண்டு பெரிய சிறுகதைத் தொகுதிகளை ஈழத்தின் பலதரப்பட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கொண்டு வெளியிட்டார். ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இரண்டு பெரிய சிறுகதைத் தொகுதிகளாக, அவர் தமிழகத்தில் இருந்தபோது வெளியிட்டிருக்கின்றார். தான் மட்டும் வாழ்ந்தால் போதுமென்று நிற்காது, ஈழத்திலே மறந்து கிடந்த எழுத்துலகச் சிற்பிகளை எல்லாம் அதிலே அவர் அறிமுகப்படுத்தியிருக்கின்றார். "வெள்ளிப்பாதரசம்" ஒரு தொகுதி, "ஒரு கூடைக் கொழுந்து" இன்னொரு தொகுதி இந்த இரண்டு தொகுதிகள் மூலம் ஈழத்தைச் சேர்ந்த குறைந்தது ஐம்பது எழுத்தாளர்களையாவது அவர் தமிழகத்திலே அறிமுகம் செய்திருக்கின்றார். இதன் மூலம் ஒரு சிறந்த ஒரு படைப்பாளியாக அவர் தொழிற்பட்டிருக்கின்றார் என்பதாகவே நான் சொல்லுவேன்.
யோகநாதனின் எழுத்துலக வாழ்க்கை என்பது தங்கப் பதக்கங்களைப் பரிசில்களாகப் பெறுவதில் இருந்து தான் ஆரம்பமானது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நாடத்திய எல்லாப் போட்டிகளிலும் முதற்பரிசு யோகநாதனுக்குரியதாகத் தான் இருந்திருக்கின்றது. அவர் தான் அப்போது தங்கப் பதக்கங்களைச் சுவீகரித்துக் கொண்டிருந்த ஒரு இளம் எழுத்தாளராக இருந்திருக்கின்றார். அவர் பல்கலைக்கழகத்தில் இருந்த போது இளம் எழுத்தாளர் சங்கம், பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம், ஆகியவர்றின் இலக்கியப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றவர். அவர் "வசந்தம்" என்ற ஒரு பத்திரிகையை தனது மாணவக்காலத்திலே நடாத்தியிருக்கின்றார். அது ஒரு முக்கியமானது, ஈழத்து சஞ்சிகை வரலாற்றில் வசந்தம் என்ற சஞ்சிகை முக்கிய இடத்தைப் பெறுகின்றது.
"ஒளி நமக்கு வேண்டும்" என்ற சிறுகதைத் தொகுதிக்காக இலங்கை சாஹித்ய மண்டலத்தின் பரிசைப் பெற்றவர். சாஹித்ய மண்டலப் பரிசினைப் பெற்ற இந்த நூல் யுனெஸ்கோ மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்டது. சிரித்திரன் நடாத்திய போட்டியிலே "காவித்தின் மறுபக்கம்" என்ற குறுநாவலுக்காக முதற்பரிசினைப் பெற்றவர். யோகநாதனின் குறுநாவல்கள் நவீன இலக்கியத்திற்காக வழங்கியிருக்கும் சேவை முக்கியமானது. "இரவல் தாய்நாடு", "கனவுகள் ஆயிரம்", "காணி நிலம் வேண்டும்", "தலைவர்கள்", "கேட்டிருப்பாய் காற்றே", "சுந்தரியின் முகங்கள்", "இனி வரும் வசந்தங்கள்" இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஏராளமான குறுநாவல்களை அவர் எழுதியிருக்கின்றார். இவர் நிறைவாக எழுத விரும்பியது "நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே" என்ற ஒரு பகுதி வெளிவந்திருந்தது. மிகுதியும் வெளிவர அவர் விரும்பினார். ஈழத்துத் தமிழர்களுடைய பிரச்சனைகளை முழுமையாக ஆரம்பத்திலே இருந்து எழுத விரும்பிய நாவலாக அது வந்திருக்கும்.
யோகநாதன் தமிழகத்தில் இருந்து வந்து குணசேனா புத்தக நிலையத்தில் தமிழ்ப்பிரிவுக்குப் பொறுப்பாக இருந்து பிறகு ஓய்வு பெற்று, அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்து கடைசிக்காலங்களிலே எங்களோடு இருந்தார். ஒரு முற்போக்குவாதியாக, முற்போக்கு சிந்தனையாளராக கடைசிவரை வாழ்ந்து ஒரு நிறை வாழ்வை முடித்திருக்கின்றார் என்றே நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
5 comments:
இவர் ஒரு சில கதைகள் படித்த ஞாபகம்; குறிப்பிடும்படியான எழுத்துப் பாணி இவரது, புலம் பெயர் வாழ்வில் மீள்வாசிப்புக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய் விட்டது.
உங்களிடம் இருந்தால் உங்களுக்கு மிகப்பிடித்ததை பதிவாக்கவும்.என்போன்றோருக்கு சந்தர்ப்பமாக அமையும்.
தொகுப்புக்கு நன்றி
அன்னார் ஆத்மா சாந்தியடையட்டும்.
பதிவுக்கு நன்றிகள்
கானா,
செ.யோகநாதனின் மறைவு , எழுத்துலகிற்கு பெரும் இழப்பே, ஆழ்ந்த வருத்தங்களும் அஞ்சலியும்.
அவரது படைப்புகள் முன்னர் சோவியத் இருந்த போது வந்த மொழிப்பெயர்ப்பு வடிவிலும் வந்துள்ளது, நியு செஞ்சுரி பதிப்பகம் மூலம்.சிலது படித்தும் உள்ளேன்.
வணக்கம் யோகன் அண்ணா
செ.யோகநாதனின் சிறுகதை ஒன்றை இந்த வார இறுதிக்குள் இட முயற்சிக்கின்றேன்.
சின்னக்குட்டி வருகைக்கு நன்றி
//வவ்வால் said...
கானா,
செ.யோகநாதனின் மறைவு , எழுத்துலகிற்கு பெரும் இழப்பே, ஆழ்ந்த வருத்தங்களும் அஞ்சலியும்.//
வருகைக்கு நன்றிகள் நண்பா
Post a Comment