![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjE1MWb8lcUoxusD_038cKelSEfH5vLLN18ui7I2bSHvQoWc1W4sGmYn1MUwHRgQraud3JZQ5JiIlxZcgnuVcMvpJr7n_FGWLgaQjsaU2OQHH2xJFXmpZCdk_JgW09fJRdxZr7h/s400/al.jpg)
"சொல்லுங்க, நீங்க இப்ப என்ன பண்ணீட்டிருக்கீங்க"
"ஏ எல் எடுத்து வீட்டில சும்மா இருக்கிறன் அக்கா"
மேற்சொன்ன சம்பாஷணையை வழக்கமாக இலங்கையின் வானொலிகளைக் கேட்பவர்கள் நிதமும் கேட்கும் அம்சமாக இருக்கும். ஆண்டாண்டுகள் கடந்தாலும் அறிவிப்பாளர்களும் இந்தச் சம்பிரதாயபூர்வமான கேள்வியை விடமாட்டார்கள், கலந்து கொள்ளும் நேயர்களில் மேற்குறிப்பிட்ட தரப்பினரும் இதே மாமூல் பதிலையே பெரும்பாலும் உதிர்ப்பார்கள். இப்படித்தான் அன்று ஒரு தனியார் வானொலியில் வந்த சம்பாஷணையைக் கேட்டபோது தாயகத்தின் அந்த ஏ.ஏல் எடுத்துட்டு வீட்டில சும்மா இருந்த நினைவுகள் கிளர்ந்தெழுந்தன.
ஏ.எல் (Advanced Level) என்பது பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுக்கான கல்லூரிப்பருவம். ஓ.எல் (Ordinary Level) வரைக்கும் நீல நிறக் கட்டைக்கழுசானும், அந்தக் கழுசானுக்குள் செருகிய அரைக்கை வெள்ளைச் சேர்ட்டோடும் கடந்த பதினோரு ஆண்டுப் பள்ளிப்பருவத்தின் பின்னான ஏ.எல் என்ற அடுத்த இரண்டு வருஷங்களும் வாழ்க்கையையே தீர்மானிக்கும் காலம். விரும்பிய துறையை எடுத்துப் படித்துப் பல்கலைக்கழகத்துக்குப் போவதற்கான வெட்டுப்புள்ளியையும் கடந்தால் தப்பலாம். அதில் தோற்றால் விரும்பாத துறைகளில் ஏதாவது ஒன்றைப் பிடித்துக் காலம் முழுவதும் தள்ளவேண்டும் என்ற கொடுப்பினை. அதனாலேயே இந்த ஏ.எல் என்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலமாக அமைந்து விடும்.
ஓ.எல் எடுத்த கையோட,றிசல்ட்ஸ் வருகுதோ இல்லையோ நான் சயன்ஸ் தான் படிப்பன் எனக்கு பயோ (Bio Science) தான் படிப்பன் என்று பெண் பிள்ளைகளும், "நான்தான் பொயிலைக் கண்டுகளுக்குள்ள மல்லாடுறன் நீயாவது இஞ்சினியரா வரப்பார்" என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக தேப்பன்காரன் சொன்ன வேதவாக்கில் கணிதபாடத்துறையில் பெரும்பான்மை ஆண் சமூகம் முடிவெடுத்துவிடும். இலக்கியவெறி கொண்டு நளவெண்பாவைப் பாடமாக்கியும் (பின்னாளில் காதலுக்கு உதவும் எண்டு தான்) சுஜாதா, செங்கை ஆழியானைக் கடவுளர்களாகக் கொண்டாடி அலைந்த எங்களுக்கு இருக்கவே இருக்கு கொமேர்ஸ் அல்லது ஆர்ட்ஸ்.
ரியூஷன்காரர்களுக்கும் கொண்டாட்டம் தான்.
"ஓ.எல் எடுத்த மாணவர்களே உங்களுக்கான வாசல் திறந்திருக்கிறது, ஏ.எல் புகுமுக வகுப்புக்கள் ஆரம்பம்" என்று ஊரில் ஒரு மதில் விடாமல் ஒட்டித் தீர்த்துவிடுவினம்.
சத்தீஸ் மாஸ்டரிட்ட கெமிஸ்ரி கிளாஸ் என்ன கிழமை, எத்தினை மணிக்கு என்றெல்லாம் மனப்பாடம் செய்து சைக்கிளில் சுழற்றியது தனிக்கதை. கொமேர்ஸ் படிக்கப்போறவனுக்கு கெமிஸ்ட்ரி கிளாஸ் ரைம்ரேபிள் எல்லாம் ஏன் தெரியோணும் எண்டு குறுக்கால கேக்கக்கூடாது கண்டியளோ. "என்ன தம்பி உம்மை பிறவுண் றோட், நீராவியடிப் பக்கம் அடிக்கடி காணுறனான்" என்று சி.ஐ.டி.வேலை செய்பவருக்கெல்லாம் புதுசு புதுசாகக் கதை எல்லாம் ரெடியாக்கவேண்டி அதுவே ஒரு இலக்கியக்காரன் ஆக்கிவிடும்.
இந்தத் தேனிலவு எல்லாம் றிசல்ட்ஸ் வரும் வரைக்கும் தான். ஓ.எல் பரீட்சை முடிவுகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடும். அதுவரை ஃபீலா காட்டி பயோ படிச்சவ பாலா மாஸ்டரிடம் சிந்துவெளி நாகரீகம் படிச்சுக் கொண்டிருப்பா, இஞ்சினியர் கனவோடு சயன்ஸ் அக்கடமிப்பக்கம் போறவர் விக்னாவில் வன்னியசிங்கம் மாஸ்டரின் தொங்கல் கணக்குக்கு விடை தேடிக்கொண்டிருப்பார். சத்தமில்லாமல் செஞ்சரி அடிச்சுப்போட்டு கணிதத்துறையில் கைவைப்பவரைப் பார்த்து "என்ன இருந்தாலும் அவனுக்கு லக் அடிச்சிருக்கப்பா" என்று அதிஷ்டலாபக்கணக்குப் போடுவார்கள். ஓ.எல் இல் நல்ல பெறுபேறு எடுத்துப் பாஸ் பண்ணியர்வர்களுக்குப் பெரும்பாலும் ஆண்டவன் ஏனோ ஏ.எல் இல் அனுக்கிரகம் கொடுப்பதில்லை என்பது
எழுதப்படாத விதி. "ஓ.எல் வரைக்கும் மாய்ஞ்சு மாய்ஞ்ச்சு படிச்சவன் பிறகு விளையாட்டா எடுத்துப்போட்டான்" என்று பெற்றாரின் புலம்பல்கள் ஒருபுறம்.
இரண்டு வருஷப் பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வை நோக்கிய படிப்பு ஒரு தவம். கிடைக்கிறதைச் சாப்பிட்டுவிட்டு, ரீவி, றேடியோப் பக்கம் கண், காது போகாமல், ராணி வார இதழைக்கூடச் சீண்டாமல் படிப்பு படிப்பு படிப்பு. ஒரு வாத்தி காணாதெண்டு ஸ்பெஷல் கிளாசுக்கும் வேற. அங்கினை இங்கினை அரக்கினாலும் தம்பி பிராக்குப் பாராமல் படியுங்கோ என்று எல்லா இடமும் சி.ஐ.டிக்கள். ரியூஷன் செண்டரின் ரிவிஷன் வகுப்பு எல்லாம் முடிந்த கையோடு, சோதினை வரும் நாளை எண்ணிக்கொண்டு கோயில் குளம் எல்லாம் கூடப் போகாமல், வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்து, ஷேவும் எடுக்காமல், இசைஞானி இளையராஜா அளவுக்குப் பொச்சுத் தாடி எல்லாம் வளர்ந்து என்னையே எனக்குக் கண்ணாடியில் அடையாளம் காணமுடியாமல் போய்விட்டது. ஒருநாள் வீட்டுக்கு வந்த சுப்பையா குஞ்சியப்பு, "தம்பி! நீர் ஆற்றை பெடி" என்று என்று கேட்குமளவுக்கு.
எப்படா ஏ.எல் சோதினை எல்லாம் முடியும் என்றிருந்து, கடைசிச் சோதனை முடிச்சதுக்குப் பிறகு பூஸா முகாமில் இருந்து வெளியேறின குஷி தான். அதுவரை விட்டுவச்ச படங்களை எல்லாம் வீடியோக்கடையில் எடுத்து, இருநூறு ரூவாக்கு ஒரு லீட்டர் என்ற கணக்கில் ஆளாளாளுக்குப் பங்கு போட்டு ஜெனரேட்டர்காரனுக்கும் காசு குடுத்து, சாமம் சாமமா நாலைஞ்சு படத்தை ஒரே இரவில் பார்த்து முடித்து விடியக்காத்தாலை இரை மீட்கும் போது, அஞ்சலி படத்தில சின்னத்தம்பி குஷ்பு போவோமா ஊர்கோலம் பாடுற மாதிரியும், கிழக்கு வாசல் படத்திலை ரேவதி வந்து "எந்திரு அஞ்சலி எந்திரு" என்பது போலவும் ஒரே கலவையாகக் குழப்பி அடிக்கும். பிறகு நாள் முழுக்க முதல் நாள் பார்த்த படங்களை விகடன் விமர்சனக்குழு ரேஞ்சில் அக்குவேறு ஆணிவேறாகப் பிரிச்சு மோய்வோம். மாலை ஆனால் இருக்கவே இருக்கு மடத்துவாசல் பிள்ளையாரடி. ஆறு மணிப்பூசை முடிச்சு ஐயர் நடை சாத்திய பின்பு தான் எங்கட அர்த்த ஜாமப் பூஜை ஆரம்பமாகும். பிரபு, குஷ்புவில் ஆரம்பித்து உள்ளூர்ப் பிரபு, குஷ்பு, ரேவதி எல்லாரையும் பற்றிக் கதைச்சு முடிக்க ஒரு மணி இரண்டு மணியாகும். ஒரு பக்கம் ஆட்லறி ஷெல்லடியும், ஆங்காங்காங்கே ஹெலிகொப்டரும், பொம்பரும் தாளப்பறந்து குண்டு போட, மணிக்கூட்டுக் கோபுரப்பக்கம் ஓடி ஒளிந்து விட்டு மீண்டும் பேச்சுக்கச்சேரி விட்ட இடத்தில் இருந்து போகும். இரண்டு வருஷங்கள் பேசாததை எல்லாம் பேசித் தீர்க்கவேணும் எண்ட கெடுவோ என்னவோ.
இந்த மாமூல் வாழ்க்கை கொஞ்சக்காலத்தில் அலுப்படிக்கத் தொடங்கிவிடும்.
"உங்கட காலத்தில திலீபன் எண்டெல்லாம் தியாகி இருந்தினம் நீங்கள் என்ன செஞ்சனீங்கள் அப்பா எண்டு உன்ர பிள்ளை கேட்டால், கொம்மாவுக்குப் பின்னால சைக்கிள்ள திரிஞ்சனான் எண்டோ சொல்லுவியள்" புதுவை இரத்தினதுரை ஒருமுறை பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது.
"யூனிவேர்சிற்றிக்குப் போனா இங்கிலீஸ் தெரியோணுமாம்" என்று ஏ.எல் பரீட்சை எடுக்கமுன்னரேயே ஒரு பகுதி ஸ்போக்கின் இங்கிலீஷ் கிளாசுக்குப் போய்விடும்.
"தம்பி சும்மாதானே இருக்கிறாய் உந்த மிளகாய்த்தூளை அரைச்சுக் கொண்டுவா" - அம்மா
"தம்பி உன்ரை சைக்கிளை ஒருக்கால் தா, உதிலை ஒருக்காப் போட்டு வாறன், நீ வீட்டில தானே இருக்கிறாய்" - அப்பா
"மேனை, என்னை ஒருக்கால் பிள்ளையாரடியில இறக்கிவிடுறியோ?, உனக்கு இப்ப அவசரம் இல்லைத் தானே" - அம்ம்மா
"முத்ததிலை வடகம் காயப்போட்டனான், கோழி, கீழி தின்னாமல் ஒருக்கால் பார்த்துக் கொண்டிருக்கிறியா?" - பக்கத்து வீட்டுக்காரர்
இப்படியாகத் தன்மானத்தை உரசிப்பார்க்கும் செயல்களோடு கொஞ்சம் கொஞ்சமாக அதுவரை கட்டிக்காத்த, இஞ்சினியர், எக்கவுண்டண்ட், டாக்குத்தர் கனவுகளுக்குத் தற்காலிக ஓய்வு கிடைக்கும்.
அதுவும் ஏ.எல் றிசல்ட்ஸ் வந்து வாழ்க்கையே திருப்பிப் போட்டுவிட்டால் சொல்லவே வேண்டாம். அடுத்த முறை அண்ணன் லண்டனில் இருந்தோ, பிரான்ஸில் இருந்தோ, அல்லது கனடாவில் இருந்தோ (அவர் எங்கை இருப்பார் என்று தீர்மானிப்பது அந்தந்த நாட்டு இமிக்கிறேசன் ஆச்சே) அழைக்கும் போது,
"தம்பி, உவன் ஏ.ஏல் எடுத்திட்டான் பேராதனைக்குப் போற கொடுப்பினை இல்லை, அங்கை எடன்"
அம்மாவின் நினைப்பு அண்ணன்தான் ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வச்சிருக்கிறார் என்று. ஊர்க்காரர்களுக்கு ஓப்பிண் விசாவில இருந்து எந்த நாட்டுக்கு ஸ்ருடண்ட் விசாவில் போகலாம் என்று வீரகேசரி வாரமலரைப் பார்த்தாவது புதுப்பித்துக் கொள்ளுவினம்.
"அப்ப செக்கண்ட் சை ட்ரை பண்ணேல்லையோ" தன்னுடைய மகன் ஓ.எல் இல் குண்டடிபட்ட கவலையில் இரண்டு வருஷகாலம் காட்டுத்தீயை மனசுக்குள் வச்சிருந்து கொட்டித்தீர்ப்பார் ஒரு உறவுக்காரர்.
ஆண்களின் நிலை இதுவென்றால் பெண்டுகள் பாடு சொல்லவே வேண்டாம்.
"ரியூசனுக்குக் காசைக் கரியாக்கினது போதும் உந்தக் காசை வச்சிருந்தால் கொழுத்த சீதனத்தோட நல்ல டொக்டர் மாப்பிளைக்குக் கட்டிவைக்கலாம்" என்று சின்னத்திரை வில்லிகளாக அம்மாக்கள் மாறி அந்தக் குமருகளைக் கரை சேர்க்க பிரபல திருமண புறோக்கரைத் தேடுவினம்.
எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு மனம் போன போக்கில், "போவோமா ஊர்கோலம்" பாடிக்கொண்டு உள்ளுக்குள் ஆயிரம் கனவுகளோடு உயரப்பறக்கும் அந்தக் காலத்து இளமை, அதில் தன்னந்தனியானாக நாடுகள் எல்லாம் களவு களவாகப் பயணித்து, ஈற்றில் அகதி அந்தஸ்து என்ற முகவரியோடு தன்னைத் தொலைத்து வாழும் எதிர்காலம் அப்போது தெரியாது.
19 comments:
\\அம்மாவின் நினைப்பு அண்ணன்தான் ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வச்சிருக்கிறார் என்று. \\
;-))))) குசும்பு ;-))
படு சுவாரஸ்யம். நேரேஷனில் இந்தியத் தமிழும், உரையாடலில் இலங்கைத் தமிழுமாக விளையாடுகிறீர்கள்.
http://kgjawarlal.wordpress.com
...அஞ்சலி படத்தில சின்னத்தம்பி குஷ்பு போவோமா ஊர்கோலம் பாடுற மாதிரியும், கிழக்கு வாசல் படத்திலை ரேவதி வந்து "எந்திரு அஞ்சலி எந்திரு" என்பது போலவும் ஒரே கலவையாகக் குழப்பி அடிக்கும்..... இளமை பருவமே குழப்பியடிக்கும் பருவம் தானே..!
நீங்க சொன்ன அந்த கால.... பருவம்.. உண்மையிலே குழப்பியடித்தது.., எல்லோருக்கும் அதான் நிலை. மொழி நாடு இனம் கடந்து..!
அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள். அந்த உங்களின் சைக்கிள் பற்றி எதாவது எழுதுவீர்கள் என நானும் கடந்த பத்து மாசமாக வேய்டிங் ..!
டெலிவரி ஆயிடுமா.., உங்களிடமிருந்து..??!!!!
அந்தக் கால நினைவுச் சுருளில் நுழைந்து மகிழ்ந்திருக்கும்போது, திடீரென்று நிகழ்கால சோகத்தில் இழுத்து வந்து விட்டீர்கள்.
//ஓ.எல் எடுத்த மாணவர்களே உங்களுக்கான வாசல் திறந்திருக்கிறது, ஏ.எல் புகுமுக வகுப்புக்கள் ஆரம்பம்" //
பிரபல ஆசிரியர் என்ற முக்கிய பதத்தை விட்டுவிட்டியள்
சில விடயங்கள் விட்டுவிட்டியள் பெரியப்பு
சதீஸ் மாஸ்டரின் கிளாஸ் டைம் டேபிள் மனப்பாடமோ இல்லையோ எங்கடை ஆள் வேறை பட்ச் என்றால் அவவின் டைம் டேபிள் கரையல் பாடமாக இருந்த காலம் அது.
மட்ஸ் படித்த பொடியள் பயோகாரிகளை லவ் பண்ணுவதிலை உள்ள ஒரே ஒரு நன்மை பிசிக்ஸ் கெமிஸ்ரி கிளாஸ்களீலை ஒன்றாக இருக்கலாம்.
கொம்மாவின்ரை கொய்யகத்தை பிடித்துக்கொண்டு திரியிறியள் என ஆஞ்சி அடிக்கடி சொல்றவர்.
"பயோ" (Biography)- அண்ணா இது "BIO SCIENCE " எண்டு வரோணும் எண்டு நினைக்கிறன்..
Paa..
"பயோ" (Biography)- அண்ணா இது "BIO SCIENCE " எண்டு வரோணும் எண்டு நினைக்கிறன்..
Paa..//
ஓமோம், திருத்திவிட்டேன் :) நன்றி
antha nal gnapakam vanthathe....
great!!
- chandra
தல கோபி
;)
அன்பின் Jawahar
மிக்க நன்றி
//அஞ்சலி படத்தில சின்னத்தம்பி குஷ்பு போவோமா ஊர்கோலம் பாடுற மாதிரியும், கிழக்கு வாசல் படத்திலை ரேவதி வந்து "எந்திரு அஞ்சலி எந்திரு" என்பது போலவும்
லொல்லு:)))))
அந்தா கார்ஷெட்டாண்ட மறைஞ்சிகிட்டிருக்கற மூஞ்சி தெரியாதா பொடியன்ல ஒருத்தரு நீங்கதானே பாஸ்? வகுப்புல உக்காராம இப்படி திரிஞ்சிக்கிட்டிருந்தா படிப்பும் ரோட்லதான் நிக்கும்! :)))
//ஈற்றில் அகதி அந்தஸ்து என்ற முகவரியோடு தன்னைத் தொலைத்து வாழும் எதிர்காலம் அப்போது தெரியாது.
:((
a/l எடுத்த பின் இருக்கும் கனவுகளும்,கற்பனைகளும் ஒரு மாயைதான் அதில் எத்தனை சுகமானசுமையான காலம் என்பதைச் சொல்லி வந்துவிட்டு இறுதியில் அகதியின் நிலையில் முடித்த போது அதே இடிதான் எனக்கும் மனதுள்ளே!ம் என்ன செய்வது காலத்தின் கோலம்.
வெளிநாட்டுத்துறை அமைச்சர் என்று அங்கலாய்த்த கனவு செமகடி அண்ணா.ஹீ ஹீ
எத்தனை அடிபாட்டுக்குள்ளும் அரட்டை அடித்த விடயங்கள் இன்றும் மனதில் ஆனால் புலம்பெயர் வாழ்வில் ஒரு நிமிடம் உரையாட நேரம் ஒதுக்கமுடியாமல் ஓடும் வாழ்க்கை.ம்ம்ம்
மனிதன் படம் பார்க்க மனோகராவில் முண்டியடித்தது ஒரு காலம்.
ஆனந்தராஜ்
சைக்கிள் பதிவு வரும் :)
நிஜாம்தீன்
வருகைக்கு மிக்க நன்றி
பிளெட்சர்
அதைத்தான் சாடையாச் சொல்லியிருக்கிறம் :)
தங்களின் பள்ளிப் பருவத்து நினைவுகளை இலங்கை தமிழில் படிக்க ஆகா...ஆகா...அற்புதம் பிரபா.
போன கிழமை தான் யாழ்ப்பாணம் போய் மெல்போர்ன் திரும்பியிருந்தேன் , உங்கட வலைப்பதிவ வாசிக்க எதோ திரும்பி அங்க போக வேணும் போல இருக்குது அண்ணை......!!!!!!!!
பார்த்திபன்
தண்டச்சோத்து கோஷ்டிக்கு என்ன பேச்சு வேண்டிக்கிடக்குன்னேன்?
Post a Comment