போரிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் வாழ்வியலில் புலப்பெயர்வு கடந்தும் இந்தப் போரின் எச்சங்கள் எந்தவகையிலும் களைந்தெறிய முடியாத உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதை ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் இந்த மனிதர்கள் ஒவ்வொருவரினதும் தீர்க்கப்படாத கணக்கையும் வைத்துப் பின்னப்பட்டிருக்கிறது. தாயகத்திலிருந்து புலம்பெயர் வாழ்வு வரையான இருவேறுபட்ட வாழ்வியலை இணைத்து, வெவ்வேறு திசைகளிலிருந்து பயணிக்கும் பல்வேறு மனிதர்களை இணைக்கும் புள்ளியாக அமையும் சிக்கலான திரைக்கதையை அமைப்பது ஒன்றும் அவ்வளவு இலேசான பணியுமல்ல. இந்தப் படம் பார்த்து முடித்து இரண்டு வாரங்கள் கழித்தும் குறித்த கதை மாந்தர்கள் கண்ணுக்கு முன்னால் உலாவிக் கொண்டிருக்கிறார்கள், இதைவிட வேறெந்த வெற்றியை ஒரு படைப்பாளன் ஈட்டமுடியும்? அந்த வகையில் ஈழத்துத் தமிழ் சினிமாவைப் பேர் சொல்ல வைத்த வகையில் இயக்குனர் லெனின் எம்.சிவம் அவர்களுக்கு ஒரு கம்பீரமான கைகுலுக்கலை வைக்கலாம். அதையும் தாண்டி, நம்மவர் சினிமா தொழில் நுட்ப நேர்த்தியில் மட்டுமல்ல , கச்சிதமாகவும் விறுவிறுப்பாகவும் திரைக்கதை அமைப்பதிலும் கூடத் தன்னை நிலை நிறுத்த முடியும் என்பதைப் பெருமிதத்தோடு சொல்லி வைக்க இந்தப் படம் மிக முக்கியமானதொரு உதாரணமாகப்படுகின்றது.
லெனின் எம்.சிவம் அவர்கள் 1999 என்ற திரைப்படத்தின் மூலமாகப் பரவலாக அறியப்பட்ட இயக்குனர். 1999 திரைப்படத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் இளைஞர்கள் சிலர் இலக்கற்ற, வன்முறை சார்ந்த வாழ்வியலைத் தேர்ந்தெடுக்கும் போது அவர் தம் பெற்றோருக்கும், தாம் இயங்கும் சமூகத்துக்கும் கொடுக்கும் விலை என்ன என்பதை மையப்படுத்தி எடுத்திருந்திருந்தார். இந்தமுறை மீண்டும் புலம்பெயர் வாழ்வியலின் தரிசனங்களை இன்னொரு புதிய களத்தை எடுத்துக் கையாண்டிருக்கிறார்.
நமது புலம்பெயர் சமூகத்தின் சினிமா மீதான காதல் பெரும்பாலும் தமிழகத்தின் கோடம்பாக்கத்து திசை நோக்கியே இருக்கும். தனியே புலம்பெயர் வாழ்வியல் என்று எடுத்துக் கொண்டாலேயே ஏராளம் வாழ்வனுபவங்களைக் காட்டும் கதைக் கருக்கள் கிட்டும். குறும்பட முயற்சிகளிலே நம்பிக்கை தரும் இளைய படைப்பாளிகள் தவிர அதிகம் தாயகம், புலம்பெயர் வாழ்வியல் பேசும் கதைப்பின்னணியை நேர்த்தியாகக் கையாண்டது மிகவும் சொற்பம்.
இன்றைக்கு புலம்பெயர் சமூகத்தில்
இயங்கும் சினிமா சார்ந்த படைப்பாளிகளிடம் இருக்கும் தொழில் நுட்பம் சார்ந்த
அறிவு, நவீன சினிமாக்கருவிகள், அதையும் தாண்டி தான் சொல்லவந்த கருத்தைச்
சுதந்தரமாக பகிரக்கூடிய வல்லமையை ஒரு படைப்பாளிக்கு வழங்கும் ஊடக நடைமுறை
இருந்தும் அதை முறையாகப் பயன்படுத்தத் தவறிவிட்டோமா போன்ற
கேள்விகளுக்கெல்லாம் விடையாக அமைகின்றது இந்தப் படம்.
தமிழகத்து,
ஈழத்து மொழி வழக்கு என்று குழப்பியடிக்கும் வசன அமைப்பு, ஏதாவது ஒரு
பூங்காவையோ ஆற்றைச் சுற்றியோ ஆடும் நாயகன், நாயகி, தோழியர், பக்கம் பக்கமாக
வசனங்கள், அதீத நாடகப்பாணி நடிப்பு இவையெல்லாம் ஒவ்வாத நம் புலம்பெயர்
தமிழ் சினிமாக்களின் பொது ஒற்றுமை. இங்கே தான் இந்தப் படமும் தன்
தனித்துவத்தைக் காட்டி நிற்கின்றது.
படத்தில் அளவான வசனங்கள்,
முக்கியமாக ஈழத்தமிழ் பேசும் பாத்திரங்கள் மற்றும் வெள்ளைக்கார காவல்துறை
அதிகாரிகள் இவர்களின் மொழியில் அந்நியமில்லை. ஈழத்தமிழ் பாத்திரங்களின்
உரையாடலில் சரளமாகவும் இயல்பாகவும் குந்தி நிற்கிறது பிரதேச வழக்கு.
குறித்த காட்சிக்கு எவ்வளவு தூரம் வசனம் தேவையோ அங்கு மட்டும் பேனா
திறக்கப்படுகிறது. மீதி எல்லாமே ஒளிப்பதிவாளரின் கையில் போய்ச்
சேர்கின்றது.
கனேடியத் தமிழர்கள் பங்கெடுத்த, அந்தச் சூழலில் எடுக்கப்பட்ட
படமாக இருந்தாலும் இது புலம்பெயர் சமூகத்தின் பொதுவான சமூகப் பிரச்சனைகளின்
கலவையாகவே பார்க்கமுடிகின்றது. படம் முழுதும் பார்த்து முடித்த பின்னரும்
இந்தப் படத்தை கனடா மட்டுமே சொந்தம் கொண்டாடமுடியும் என்று தோன்றவில்லை.
படைப்பைக் கொடுத்த விதத்தில், இது உலக சினிமாவுக்கான இலட்சணங்கள்
பொருந்திருப்பதாலேயே சீனாவில் நிகழ்ந்த உலகப் பட விழாவிலும்
அமெரிக்காவிலும் கலந்து கொண்டு அந்த அங்கீகாரத்தை மெய்ப்பிக்கின்றது.
வதை முகாமிலிருந்து தப்பியோடி கனடாவுக்கு ஓடும் போராளி இளைஞனின் பயணத்தை
படத்தின் எழுத்தோட்டத்துக்கு முந்திய காட்சி தொடக்கி வைக்கிறது. எடுத்த
எடுப்பிலேயே ஒரு தற்கொலை இந்த இரண்டு வெவ்வேறு பட்ட நிகழ்வுகளின் முடிவு
அல்லது தீர்வு நோக்கிய பயணம் படத்தின் முடிவில் வெளிப்படுகின்றது. இதற்குள்
வெவ்வேறு கதை மாந்தரின் வாழ்வியல் தரிசனங்களை ஒரு மோதிரம், ஒரு துப்பாக்கி
இந்த இரண்டும் இணைக்கின்றன, இந்த இரண்டுமே படத்தின் தீர்வு நோக்கிய
துருப்புச் சீட்டுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
வதை
முகாமில் பட்ட சித்திரவதைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகித் தன் மண வாழ்வைத்
தொலைத்த இளைஞன், வெள்ளை
வானால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட மனைவியின் நினைவில் வாழும் தந்தையும்
சிறுமியும், மணவாழ்வை எதிர் நோக்கி கனடாவுக்கு ஸ்பொன்சர் கிடைத்தும் தன்
வாழ்வைத் தொலைத்த பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் அவளைப்போலவே உள்நாட்டு
யுத்தத்தால் தன் குடும்பத்த்தைக் காவு கொடுத்த சூடானிய அகதி ஒருவனும்,
தமிழ்ச் சிறுமி எதிர்நோக்கவிருக்கும் பாலியல்
துஷ்பிரயோகத்தை கையும் களவுமாகப் பிடித்தால் குறித்த குற்றவாளியை
நிரந்தமாகக் கூண்டிலேற்றமுடியும் என்ற முனைப்போடு தருணம் பார்க்கும்
வெள்ளையினத்துக் காவல்துறை அதிகாரி, தம் ஒரே மகனின் தற்கொலை குறித்த
மர்மத்தைத் தேடமுனையும் தாயும் தகப்பனும், சுய நலத் தந்தையும் தன்
சகபாடியின் மரணத்துக்குத்
தீர்வைத் தேடமுனையும் இளைஞன் இவர்கள தான் இந்தப் படத்தின் முக்கியமான
பாத்திரங்கள். இவர்களின் கதைகள் வேறாயினும் அங்கே ஏதோவொரு மர்மமுடிச்சு கூடவே பயணிக்கிறது. அதுதான் படத்தின் முடிவில் மெல்ல அவிழ்கின்றது.
இங்கே
யார் நல்லவன், கெட்டவன், எது நீதி எது அநீதி என்ற பாடங்களெல்லாம்
போதிக்கப்படவில்லை. உள்ளதை உள்ளபடி நம்முன்னே உலாவும் மனிதர்களை, ஏன்
நம்மையே காட்டுமாற்போலத்தான் இயங்குகின்றது கதையோட்டம். இது வெறும் கதையல்ல
உளவியல் ரீதியான மன ஓட்டங்களின் ஒருமித்த கலவையே திரையில் பிம்பங்களாகப்
பரிணமிக்கின்றன.
இப்படியான
சிக்கலான கதைப்புலத்தை எடுத்துக்கொள்ளும் தேர்ந்த ஒரு இயக்குனருக்கு
தொழில் நுட்ப ரீதியான சவால்களைத் தாண்டி, நடிகர்கள் எவ்வளவு தூரம் தம்
பாத்திரப்படைப்பை உள்வாங்கி அதைப் பிரதிபலிக்கிறார்களோ அதுவே பார்வையாளன்
கொடுக்கும் அங்கீகாரத்தை முந்திக் கொண்டு இயக்குனர் பெறும் வெற்றியாக
அமைகின்றது. அந்த வகையில் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த நடிகர் குழுவே
பாத்திரமுணர்ந்து பாரம் சுமந்திருகிறார்கள். வசன உச்சரிப்பாகட்டும், உடல்
மொழியாகட்டும் நடிகரைத் திரையில் தரிசிக்கின்றோம் என்ற சிந்தை இம்மியளவும்
ஏற்படவில்லை. இத்தனைக்கும் ஒவ்வொரு பாத்திரங்களின் குணாம்சங்கள்
வேறுபட்டவை, வளர்ந்த சூழலும் வேறு.
இந்தப்
படத்தில் நாயகன் அல்லது நாயகி என்று யாரைச் சொல்வது? ஆனால் அந்த முன்னாள்
போராளி இளைஞனே கதையின் முதுகெலும்பு, அவனின் கோபம், இயலாமை, அழுகை எல்லாமே
போலித்தனமில்லாது வெளிப்படுகின்றது.
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த இளைஞனில் இருந்து, கனடாவில்
இரண்டாவது தலைமுறையாக (அங்கேயே பிறந்திருக்கவும் கூடும்) வாழும் சிறுமி,
இளைஞன், யுவதி, அந்த வெள்ளைக்காரக் காவல் துறை அதிகாரி உள்ளிட்ட நடிகர்
தேர்வு கனகச்சிதம். இவர்கள் எல்லோரையும் தாண்டி, படத்தின் முடிவில் யாருமே
எதிர்பாராத ஒரு பாத்திரத்தின் கோரமுகம் வெளியாகும் போது, இப்போதும் அந்த வல்லூறுக்கண்கள் நினைவில் தேங்கிப் பயமூட்டுகின்றது.
இந்தப் படத்தின் இசையை வழங்கியிருப்பவர் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக
அறியப்பட்ட இசையமைப்பாளர் ப்ரவீன்மணி. இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின்
ஆரம்பப் படங்களில் இருந்து பங்களித்ததோடு தனியாகவும் பல படங்களில்
இயங்கியிருந்தவர். பாடல்கள் தேவையற்று ஆரம்பம் முதல் முடிவிடம் வரை
விறுவிறுப்பாக நகரும் கதையோட்டத்தில் இசை என்பது இன்னொரு கவச குண்டலமாக
அமைந்திருக்க வேண்டும். படத்தில் பயணிக்கும் பல்வேறு மனிதர்களின் நுட்பமான
உணர்வுகளுக்கு மொழியாக இந்தப் பின்னணி இசை அமைந்திருக்கவேண்டும். படத்தின்
ஆரம்பத்தில் கச்சிதமாக அமைந்த இசை சில முக்கிய காட்சிகளில் இன்னும்
உழைத்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது. அதற்காக ஏகப்பட்ட வாத்தியங்களை
ஏகத்துக்கும் உருட்டிப் போட்டு படத்தையே காலி பண்ணும் இ(ம்)சையிலிருந்து
விலகியே நிற்கின்றது. அடுத்த படத்தில் லெனின் எம்.சிவம் சிரத்தையோடு
கவனிக்கவேண்டியது இது ஒன்றாகத் தான் இருக்கும்.
ஒவ்வொரு காட்சிகளிலும் நியாயம் கற்பிக்கும் திரைக்கதையோட்டத்தில் அந்த சுயநலத் தந்தையும், நண்பனைப் பறிகொடுத்த இளைஞனும் சார்ந்த பகுதி இன்னமும் தெளிவாக அமைக்கப்பட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது. அந்த இளைஞன் இறுதியில் எடுக்கும் முடிவுக்கும் அது மேலும் வலுச்சேர்த்திருக்கும்.
தாயை இழந்து பூங்காவில் விளையாடப்போகும் சிறுமி, வக்கிரம் படைத்த வெள்ளைக்காரன் சார்ந்த காட்சிகளில் ஒளியோட்டத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அந்தக் காட்சிகளில் தொலைக்காட்சிப் படம் பார்த்த உணர்வை இலேசாக எட்டவைக்கிறது.

A Gun and A Ring திரைப்படத்தின் மூளையாக இயங்கிருக்கிறது படத்தொகுப்பு.
1999 படத்தின் காட்சியமைப்பை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு காட்சிகளையும் தனித்தனியாக எடுத்து அவற்றை முன் பின்னாகப் பொருத்தி அந்தத் தொழில் நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தியிருந்தனர்.
இந்தப் படத்தின் காட்சியமைப்பை எடுத்துக் கொண்டால் வெவ்வேறு கதைப்பின்னணியில் இயங்கும் திரைக்கதையில் மாறி மாறி அந்தந்தக் கதைகளின் சம்பவக் கோர்வைகளை சம தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆனால் அந்தக் கதைகளைப் பொருத்தும் சம்பவக் கோர்வை படம் முடியும் திசை நோக்கி நகரும் போதும் மெல்ல மெல்ல அவிழும் போது ஒவ்வொரு சம்பவங்களில் ஒளிந்திருக்கும் காட்சிகளை மீளக் கொணரும் போது முன்னர் பார்த்த காட்சிகளில் ஒளிந்திருக்கும் இரகசிய முடிச்சைக் காட்டும், அப்போது அந்தக் காட்சி இன்னொரு புதிய சாயத்தில் புலப்படும்.உண்மையில் இப்படியானதொரு சிந்தனையோட்டத்தில் படத்தொகுப்பில் ஒரு புதுமை பண்ணிக் கொணர்ந்த நமது தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்த அனுபவம் எனக்கில்லை. அந்த வகையில் இந்தப் படத்தின் முதுகெலும்பாக காட்சியமைப்பும், படத்தொகுப்பும் நமது சினிமாவை அடுத்த தளத்தில் நகர்த்துகின்றது என்பேன்.
சுமார் ஒரு லட்சம் டாலர்களுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டிருக்கிறது அந்தச் செலவின் தேவையைப் படத்தின் தொழில்நுட்பத் தரம் மெய்ப்பிக்கிறது. விஷ்ணு முரளி என்ற அந்த இளம் தயாரிப்பாளருக்கு சினிமா மீதான வேட்கை காரணமாக ஒரு படத்தையாவது தயாரிக்கவேண்டும் என்ற எண்ணம் கருப்பெற்றிருந்த நிலையில், லெனின் எம்.சிவம் அவர்களின் 1999 படத்தைப் பார்த்த பின்னர் இந்தப் படத்தில் முதலீடு செய்திருக்கின்றார். A Gun and A Ring படம் உலகத்தமிழரை எட்டிப் பிடிக்கவேண்டும், போட்ட முதலீடு விஷ்ணு முரளியின் கையில் கிட்டவேண்டும். அதன் மூலம் அவரும் அவரைப் போலவே இயங்கும் தயாரிப்பாளர்களுக்கும் இது போன்ற முயற்சிகளில் இறங்குவதற்கு அது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஆனாலும் துணிச்சலோடு முதலீட்டைப் போட்டு நம்மவரின் இந்தப் படைப்பைக் கொண்டு வந்த அவருக்கு இந்த நேரத்தில் பாராட்டை வழங்குவது பொருத்தமாக அமையும்.

இந்தப் படத்திற்கு உலகத் திரைப்பட விழா அரங்கங்களில் கிட்டிய அங்கீகாரம், லெனின் எம்.சிவம் குழுவினர் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதோடு நம்மவர் என்ற ரீதியில் பெருமையும் கொள்ள வைக்கின்றது.
A Gun and A Ring படத்துக்குக் கிட்டிய கெளரவங்களில் குறிப்பிடத்தகுந்தவை.
- Golden Goblet Award Nominee, Shanghai International Film Festival in June, 2013
- Official Selection, Montreal World Film Festival in August, 2013
- Official Selection, Louisville's International Festival of Film in October, 2013
- Official Selection, American CineRockom International Film Festival in October, 2013
- Best Film Award Nominee, Hamilton Film Festival in November, 2013
படத்தின் தொழில் நுட்பக் குழு
இயக்குனர் மற்றும் கதாசிரியர் - லெனின் எம்.சிவம்
தயாரிப்பாளர் - விஷ்ணு முரளி
இசையமைப்பு - பிரவீண் மணி
ஒளிப்பதிவு - சுரேஷ் ரோகின்
படத்தொகுப்பு - ப்ராஷ் லிங்கம், லெனின் எம்.சிவம்
யுத்தக்களங்களில் சுடுகுழல்கள் அணைந்திருக்கலாம், ஆனால் அவை நேரடியாகவும், உள ரீதியாகவும் ஏற்படுத்தி விட்ட வடுக்களைச் சுமந்து கொண்டுதான் இந்தத் தலைமுறை பயணப்படுகின்றது. இந்தப் படத்தில் சொன்ன ஆறு கதைகளைத் தாண்டி சொல்லப்படாத கதைகள் ஏராளம். அந்தக் கதைகளைச் சுமந்து திரிவோர் நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள். அந்தப் பதிவுகள் படமாக்கப்படும் போது நல்ல சினிமா மட்டுமல்ல போர் தின்ற சமூகத்தின் அவலத்தை உலக அரங்கில் கொண்டுவர ஏதுவாக இருக்கும். அதை லெனின் எம்.சிவம் குழுவினர் கச்சிதமாகச் செய்து காட்டிய அளவில், இதே தளத்தில் இயங்கும் படைப்பாளிகளும் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்னும் மிக முக்கியமாக, இந்தப் படத்தை நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டாடவேண்டிய படைப்பும் கூட.
இந்தத் திரைப்படம் வரும் நவம்பர் 30 மற்றும் டிசெம்பர் 1 ஆம் திகதிகளில் சிட்னியில் சிறப்புக் காட்சிகளாகக் கண்பிக்கப்படவிருக்கின்றது. சிட்னி வாழ் தமிழர்கள் இந்த முயற்சிக்குத் தம் ஆதரவை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.
0 comments:
Post a Comment