புதுவருசம் பிறக்கப் போகுதெண்டா ஊரிலை இருக்கிற குஞ்சு குருமானுகளுக்கு மட்டுமே கொண்டாட்டம், பெரியாக்களுக்கும் தானே. வருசப்பிறப்பிறப்புக்கு முதல் இரண்டு மூண்டு நாட்களுக்கு முன்னமே எங்கட வீட்டிலை குசினி (அடுக்களை) அடுப்பு எல்லாம் சாணத்தாலை மெழுகி, மச்சப்பாத்திரமெல்லாம் மீன் வெடுக்குப் போக சாம்பலால் தேச்சுக் கழுவி பின் பக்கம் இருக்கிற அறைப்பக்கமா கவுட்டு வச்சிடுவா அம்மா. அப்பாவின்ர வேலை தூசி தட்டி, எல்லா அறையும் கழுவி வச்சிடுவார். வீடு காயும் மட்டும் அறையளுக்குள்ளை போகேலாது எண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போட்டு விடுவினம். வெளியில முத்தத்தில இருக்கிற வேப்பமர நிழலில் கதிரை போட்டு சாப்பாடு தருவினம். பள்ளிக்கூட லீவும் விட்டுவிடுவினம் என்பதாலை ஊரிலை இருக்கிற குஞ்சு, குமர் எல்லாம் இப்பிடித்தான் இருக்க வேண்டிய நிலை பாருங்கோ.
வரியப்பிறப்புக்கு முதல் நாள் கோயிலடிக்குப் போய் ஐயர் வீட்டுப் படலையைத் தட்டி ஒரு ருவா குடுத்தா, கொண்டு போன பிளாஸ்டிக் போத்தலுக்குள்ளை,அல்லது சருவசட்டிக்குள்ளை நிறைய மருத்து நீரை அள்ளி இறைப்பார். மருத்து நீர் எண்டா என்ன எண்டு ஆவெண்டு வாயைப் பிளக்காதேங்கோ, மாட்டின் கோசலத்தோட இன்ன பிற திரவியங்களும் கலந்து, அறுகம்புல்லையும் நிறைச்சு ஒரு பெரிய கிடாரத்துக்குள்ளை ஐயர் கலக்கி வச்சிருப்பார்.
நித்திரை வந்தாத் தானே, நாளைக்கு வரியம் பிறக்கும் எண்டு மனசுக்குள்ளை ஒரே புழுகம்.
அந்த நாளும் வந்திட்டுது. வருசம் பிறக்கிறதுக்கு முன்னமேயே முதல் நாள் வாங்கி வச்ச மருத்து நீரை எல்லாற்றை தலையிலும் தடவி விடுவார் அப்பா, கடைசியா தன்ர தலையில் மிச்சத்தை ஒற்றி விட்டுட்டு கிணத்தடிப் பக்கம் அனுப்புவார். ஏற்கனவே அயலட்டைச் சனமும் பங்குக் கிணற்றுக்கு இரண்டு பக்கமும் நிண்டு தண்ணி அள்ளித் தோஞ்சு கொண்டு நிக்கும் பாருங்கோ. நாங்களும் அதுக்குள்ளை ஒருமாதிரி இடம்பிடிச்சு சலவைக் கல்லுக்கு மேலை குந்திக் கொண்டிருப்பம். துலாவாலை அள்ளின தண்ணீரை அப்படியே சளார் எண்டு பாய்ச்சுவார் அப்பா.
தோஞ்சு போட்டு தலை எல்லாம் ஈரம் போகத் துவட்டி விட்டு சாமியறைப்பக்கம் போவம். அங்கை எங்களுக்கு முன்னமே அப்பா நிண்டு தேவாரம் படிச்சுக் கொண்டிருப்பார். எங்கட கண் போறது வெத்திலைக்குள்ளை மடிச்சு வச்சிருக்கிற காசுப் பக்கம். ஆனா அது உடனை கிட்டாது.
"வருசம் பிறக்கேக்கை கோயிலடியில் நிக்கோணும், வாருங்கோ பிள்ளையள்" கும்பிட்டுக் கொண்டு நிண்ட அப்பா திருநீற்றை எங்கட நெத்தியிலையும் ஒரு இழுப்பு இழுத்து விட்டு சைக்கிளில் ஏத்திக் கொண்டு போவார் மடத்துவாசல் பிள்ளையாரடிக்கு.
கோயில் மணிக்கூட்டுக் கோபுரத்தில கட்டியிருக்கிற லவுட்ஸ்பீக்கரில் செளந்தர்ராஜன் குந்தி இருந்து
"உச்சிப்பிள்ளையார் கோயில் கொண்ட இடம் திருச்சியின் மலையினிலே" பாடிக்கொண்டிருக்கிறார்.
அண்டைக்கு வாற சனமெண்டா சொல்லி மாளாது. கோயிலின்ர சந்து பொந்தெல்லாம் சனம் சனம் தான். வருசப்பிறப்பு மத்தியானம் ஒரு மணிக்குப் பிறந்தால் என்ன, விடியக்காத்தாலை இரண்டு மணிக்குப் பிறந்தால் என்ன இப்பிடித்தான் ஒரு கூட்டம் இருக்கும். பிள்ளையார் புதுப்பட்டு கட்டி அந்த மாதிரி இருப்பார். கோயில் மேளமும் நாதஸ்வரமும் பலமான ஒரு உச்சஸ்தாயியில் முழங்கும்போது ஐயர் மூலஸ்தானத்தில் பஞ்சாராத்தி காட்டிக்கொண்டிருப்பார். வருசம் பிறந்திட்டுதாம். புது வெள்ளை நோட்டை அருச்சனைத் தட்டில் வச்சு கியூவில் நிண்டு அருச்சனை செய்வம்.
எப்படா வீட்டை போவம் எண்டு உள்ளுக்கை இருக்கிற வேதாளம் அடிக்கடி கேட்கும்.
வீட்டை வந்தாச்சு. சாமியறையில் இருந்து அப்பா கூப்பிடுறார். முதலில் அம்மா, அடுத்தது பெரியண்ணா, அடுத்தது சின்னண்ணா, பிறகு நான் ஒவ்வொருவருக்கும் சாமிப்படத்துக்கு முன்னாலை இருக்கிற தட்டிலை வெத்திலையில் மடிச்சு வச்ச புதுத்தாளைக் கைவியளமாகத் தருவார் அப்பா.
அப்பர் ஒரு கிழமைக்கு முன்னமே பாங்க் ஒவ் சிலோனுக்குப் போய் தன்ரை பழைய நோட்டுக்களைக் கொடுத்து புதுசாக்கி வச்சிருந்தவர். ஒவ்வொருவரின் வயசுக்கு ஏற்ப கைவியளம் கொடுக்கிற காசின் பெறுமதியும் வித்தியாசப்படும். அம்மாவுக்கு தான் நூறு ருவா தாள், நான் தான் கடைசி, இரண்டு ருவா தாள் :(
அப்பாவுக்கு ஆர் கைவியளம் கொடுப்பினம் எண்டு அப்ப நான் என்னையே கேட்பன்.
"வாத்தியார்! நான் மார்க்கண்டன் வந்திருக்கிறன்" தோட்டத்திலை வேலை செய்யிற மார்க்கண்டனும் ஒரு நாளும் இல்லாத திருநாளா புது வேட்டி கட்டி வந்திருக்கிறான், வழமையா செம்பாட்டு மண் எல்லாம் அப்பி ஒரே சிவத்த நிற அழுக்கு வேட்டி தானே கட்டியிருப்பான். மார்க்கண்டனோட அவன்ர மேள்காறியும் வந்திருக்கு.
"இரு மார்க்கண்டன் வாறன்" அப்பா உள்ளுக்கை நிண்டு சொல்லுறார். அம்மா அரியதரத்தட்டை மார்க்கண்டனுக்கும் மகளுக்கும் நீட்டுறா. மார்க்கண்டன் மகள் அரியதரத்தை வாங்கிக் கொறிச்சுக் கொண்டு முற்றத்திலை நிண்டு விடுப்புப் பார்க்குது. இங்கேயும் சீனியாரிட்டி படி மார்க்கண்டனுக்கு அம்பது ருவா தாளும், மகளுக்கு ஒரு ருவா குத்தியும் கொடுக்கிறார் அப்பா. நான் களவு களவா நான் என்ர ரண்டு ருவா தாளை காட்டி காட்டி பாசாங்கு செய்யிறன் அவளுக்கு.
ஹீரோ சைக்கிளில் சித்தப்பா வாறது தெரியுது. சைக்கிளை ஸ்ராண்டிலை நிப்பாட்டுக்கையே "பிள்ளை! ஒரு எல்லுப்போல தண்ணி தா, போதும்" அம்மாவிடம் கேட்கிறார். புதுவருசம் பிறந்ததும் சொந்தக்காரர் வீட்டிலை நாளுக்கு தேத்தண்ணியாதல் வாங்கிக் குடிக்கவேணும் எண்டது இன்னொரு சடங்கு. சித்தப்பா தன் சேர்ட் பொக்கற்றுக்கை கை விட்டு ஒவ்வொருவரா கைவியளம் தாறான். வாங்கின காசையெல்லாம் மடிப்பு குலையாமல் பொத்தி வைச்சிருக்கிறன்.
"அப்பு வீட்டை போகோணும், மினக்கடாம வாருங்கோ எல்லாரும்" அம்மாவுக்கு தன்ர இனசனம் வீட்டை போறதெண்டா டபிள் மடங்கு சந்தோசம். எனக்கும் அப்பு வீட்டை போகப் பிடிக்கும். ஊரில் பெரும் பணக்காரர் அவர். ரவுணில் ரண்டு கடை, பளையில தென்னந்தோப்பு, இப்ப புதுசா பவர் லூம் எல்லாம் வாங்கிப் போட்டிருக்கிறார். அப்பு வீட்டுப்பக்கம் போனால் ரஜினிகாந்தின்ர வீட்டு முகப்பு மாதிரி ஒரே சனக்கூட்டம். அப்புவிடம் வேலை செய்பவர்கள், அயலவர்கள் என்று குழுமி இருந்தார்கள். எல்லாருக்கும் ஒரு பெரிய நோட்டும் ஒரு ருவாயும் வச்சு வெத்திலையிலை குடுத்துக் கொண்டிருக்கிறார். நூறு ரூவா தாள் குடுக்கக்கூடாது, நூற்றி ஒண்டாத்தான் குடுக்கோணும்.
அப்பு வீட்டிலை மத்தியானச் சாப்பாடு அறுசுவையோடு கிடைக்கிது. வடிவாச் சாப்பிட்டாத் தான் தட்டில இருக்கிற கறுத்தக்கொழும்பான் மாம்பழம் கிடைக்குமாம், சித்தி சொல்லுறா.
சாப்பிட்டு முடிச்ச கையோட, விறாந்தையில் இருந்து சித்தி மகளோடையும், மாமான்ர பிள்ளையளோடையும் இருந்து எங்கள் ஒவ்வொருவருக்கும் சேர்ந்த காசை எண்ணிக்கொண்டிருக்கிறம்.
பச்சை, மண்ணிறத்தாளில் தமிழ் எழுத்துக்களில் அச்சொட்டாக எழுதியிருக்கு. சிங்கள எழுத்தை வளைச்சு வளைச்சுப் பார்க்கிறம். பராக்கிரமபாகுவின்ர படம் போட்டிருக்கு.
நியூவிக்ரேசில் எடுத்த படக்கொப்பியோட அண்ணர் வாறார். றஜனியும், கமலும் நடிச்ச ஆடுபுலி ஆட்டமாம். றஜனி எத்தினை தரம் சிகரட்டை இழுக்கிற சீன் வந்தாலும் பார்க்க அலுக்காது. பழைய படம் எண்டாலும் இண்டைக்கு நித்திரை கொள்ளாமல் பார்த்து முடிக்கோணும்.
000000000000000000000000000
ஏப்ரல் 13 திகதி, 1994
மடத்துவாசல் பிள்ளையாரடியின் தேர் முட்டிக்கு கீழை இருந்து ஐயர் வீட்டுப் பக்கமா மருத்து நீர் வாங்கப் போறவாற சனத்தை வேடிக்கை பாத்துக் கொண்டு இருக்கிறம். பழைய கோக் போத்தலில் இருந்து, யானை மார்க் சோடாப் போத்தல் ஈறாக ஆளாளுக்கு ஐயர் வீட்டுப் பக்கம் போய் போத்தல் ஒரு ரூவாய் கணக்கில் வாங்கிக் கொண்டு வருகினம். எல்லாருக்கும் முதல் நாங்கள் இந்த வேலையைச் செய்து முடிச்சதுக்கு சாட்சியமாக எங்கட காலுக்கை மருத்து நீர் போத்தல்கள் இருக்கினம். செம்மஞ்சள் அடிச்ச வானம் கொஞ்சம் கொஞ்சமா கறுப்புக் கலருக்கு மாறுது. ஐயர் வீட்டுப் பக்கம் போகும் கூட்டமும் மெல்ல மெல்லக் குறையுது. பிள்ளையார் கோயில் கதவும் மூடுப்படுகுது. அருட்செல்வம் மாஸ்டர் வீட்டில் கடைசி வகுப்பு முடிஞ்சு சுதுமலை, மானிப்பாய் பக்கம் பெட்டையள் சைக்கிளில் போகினம். கொஞ்சம் கொஞ்சமா சைக்கிளில் வரும் பெடியள் கூட்டம் பிள்ளையாருக்கு எட்டி நின்று கும்புடு போட்டு விட்டு எங்கட அரட்டைக் கச்சேரியில் வந்து சேருகினம். ஆறு மணிக்கு தொடங்கினால் சாமம் சாமமாக அலட்டல் கச்சேரி தான் தான். சுத்துமுத்தும் கரண்ட் காணாத கும்மிருட்டு, அயலட்டை வீடுகளில் இருக்கிற குப்பி விளக்குகள் பெருங்கிழவனின் பொக்கை வாய் மாதிரி தெல்லுத் தெல்லா தெரியினம்.
ஐயர் வீட்டிலை மருத்து நீரை வாங்கிக் கொண்டு வாறம்.
"மச்சான், நாளைக்கு ஒரு புதுமையா எல்லாக் கோயில் பக்கமும் போயிட்டு வருவம்" இது சுதா.
வருசப்பிறப்பு நாள் அதிகாலை ஐந்து மணிக்கே எழும்பி குளிச்சு முழுகி நிற்கிறேன். சுதா லுமாலாவில் வந்து என்னை ஏத்துறான். அரவிந்தன், சந்திரகுமார், கிரி, இன்னொரு சுதா எல்லாரும் கோயில் பக்கம் வெளிக்கிடுறம். முதலில் பிள்ளையார் கோயில், பிறகு பக்கத்திலை இருக்கிற இணுவில் கந்தசாமி கோயில், நல்லூர் எல்லாம் கண்டு, தாவடிப்பிள்ளையாரடிக்கு வந்து அங்கே அன்று ஓட இருக்கும் வெள்ளை, சிவப்புத் துணியால் அலங்கரிச்ச கட்டுத்தேரைப் பார்த்துக் கொண்டே மருதடிப்பிள்ளையார் கோயிலடிக்கு மானிப்பாய் றோட்டால் சைக்கிள்களை வலிக்கிறோம்.
பலாலிப்பக்கமா ஒரு பொம்மர் போகுது, இண்டைக்கு அவங்களுக்கும் கொண்டாட்ட நாள் தானே.
நான்கு வருசங்களுக்குப் பின்னால் ஆமிக்காறனிடம் தப்ப நாட்டை விட்டு ஓடி, ரஷ்யாவின் பனி வனாந்தரத்தில் ஏஜென்சிக்காறனால் கைவிடப்பட்டு அனாதையாய் செத்துப் போவோம் என்ற தன் விதியை உணராத சுதா என்னை சைக்கிள் பாறில் வைத்துக் கொண்டே பெடலை வலிக்கிறான். எதிர்காத்து மூஞ்சையிலை அடிக்குது.
அன்று நாங்கள் நிறையச் சிரித்துக் கொண்டிருந்தோம்,மிச்சம் ஏதும் வைக்காமல்........
4 comments:
ஹாஹா.... நேரத்தில எல்லாத்தையும் முடிக்க அப்பாக்கள் காட்டுற அவசரம் இந்த "திருநீற்றை எங்கட நெத்தியிலையும் ஒரு இழுப்பு இழுத்து விட்டு"..!!
வியப்பாக இருக்கிறது மனுஷனுக்கு மட்டும் இந்த ஞாபக சக்தி இல்லேன்னா என்னவாகியிருப்பான் என..!
நினைவுகளின் தொகுப்பு அருமை... அதும் பேச்சு வழக்கில் இன்னும் புதுமை.
சித்திரைக்கனி நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும்
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தல ;)
Very moving article. Last paragraph literally broke me into tears. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Post a Comment