கடந்த ஆண்டு தாயகத்துக்குப் போனபோது வழக்கமான விடிகாலை, அடுக்களையில் இருந்து அம்மா எழுப்பும் சத்தம் கேட்டு விழித்து மெல்ல அந்தப்பக்கம் போகிறேன். ஜாம் போத்தலுக்குள் சம்பிரதாயத்துக்குச் சொட்டு எண்ணையும், பஞ்சுமாக, மேலே ஒரு துண்டியில் சுடர் விட்டுக்கொண்டிருந்தது அந்த விளக்கிலிருந்து கிளம்பிய ஒளி. இந்தக் குப்பி விளக்கின் வயசு இருபது இருக்கும். இன்றும் தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இப்போது மின்சார வசதி முழுமையாகச் செய்து கொடுக்கப்பட்ட நிலையில் அவ்வப்போது ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ மின்சாரம் நின்றால் உலகமே அழிந்துவிடுமாற்போல இயங்கும் நிலை இன்று. ஆனாலும் அம்மா அதிகாலை இந்தக் குப்பிவிளக்கை மறக்காமல் தன் சேவகனாக வைத்திருந்தது வியப்பைத் தந்திருந்து. "லைற் போட்டா நித்திரை குழம்பிவிடும் ஐயா" என்று நான் எதிர்பார்த்த அதே பதில் அவரின் பதில் வரும் என்பதால் கேட்காமல் விட்டிருந்தேன். ஆனால் எனக்குத் தெரியும் இயன்றவரை தான் சிக்கனமாக இயங்கவேண்டும் என்ற முனைப்பு அம்மாவின் ரத்தத்தில் ஊறியது என.
தமிழகத்தில் மின்சாரத் தட்டுபாடு சமீப காலமாகத் தலை போகும் விஷயமாக இயங்கும் சூழலில், நினைத்துப் பார்க்கிறேன் அந்த நாட்களை, இற்றைக்கு இருபது வருஷங்களுக்கு முன்னர் ஐந்து ஆண்டுகளாக முழுமையாக இந்தக் குப்பி விளக்கில் தான் கழிந்திருக்கிறது இந்திய இராணுவம் ஈழத்தில் இருந்து விலகிய பின்னர், மீண்டும் தேனிலவு கசந்து தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பிரேமதாசா காலத்தில யுத்தம் ஆரம்பமான நேரம் அது, எங்களூரில் இருபத்து மணி நேரமும் மின்சாரம் இருந்தது. ஆனால் யுத்தச் சூழல் நெருங்க நெருங்க, அதுவும் சவாலாகிப் போனது. அதுநாள் வரை எங்கள் அயலூரான சுன்னாகம் என்ற இடத்தில் இருந்தே பிரதான மின்வழங்கியில இருந்து அயலூர்களுக்கு மின்சாரம் வந்து கொண்டிருந்தது. அதை இலக்குவைத்தெல்லாம் இலங்கை விமானப்படையின் விமானங்கள் குண்டு போட்டுப் பார்த்தார்கள், அதிலிருந்தும் ஓரளவு தப்பி ஒரு சில மாதங்கள் கடும் நெருக்கடியிலும் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அங்கிருந்து வழங்கப்படும் மின்சாரம் கடத்தப்படும் உப மின்வழங்கிகளை இலக்கு வைத்து விஷமிகள் இயங்க ஆரம்பித்துவிட்டார்கள். இரவு நேரங்களில் சில விஷமிகள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் உபமின்வழங்கிகளை இலக்குவைத்து அந்த மின்வழங்கியில் இருக்கும் ஒயிலைத் திருடுவதற்காக அவற்றை உடைத்துத் திடுடி விடுவார்கள். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு பகுதியாக மின் இழப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இலங்கை அரசாங்கம் சாதிக்கா முடியாத வேலையை நம்மூரில் இருக்கும் விஷமிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கச்சிதமாகச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அந்தச் சூழலில் எங்கள் ஊரில் இருந்த இளைஞர்கள் ஒன்றுதிரண்டு "விழிப்புக்குழு" அமைத்து இரவிரவாக நம்மூரில் இருக்கும் உப மின்வழங்கியைச் சுற்றிக் காவல் இருந்தார்கள். ஊருக்கு வெளிச்சம் கிடைக்கவேண்டும் என்ற ஒரே முனைப்பில் இயங்கிய அவர்களுக்குக் கிடைத்தது சுழற்சி முறையில் எங்கள் கிராமத்து வீடுகளில் இருந்து சூடான தேத்தண்ணியும் வடையும் தான். கொஞ்சக் காலம் கழிந்த பின் சுன்னாகம் மின்வழங்கி நிலையம் இலங்கை அரசாங்கத்தின் குண்டுகள் முற்றாகத் தாக்கியபின் உப மின்வழங்கிகளும் செயல் இழந்தன. கோயிலடி நண்பர்களின் விழிப்புக் குழுவுக்கும் வேலையில்லாமல் போனது.
"நான் உழைச்சுச் சம்பாதிச்ச காசில இந்த ஒழுங்கைக்கு (சிறு தெரு) முதன்முதலில் லைட் போஸ்ட் போட்டனான்" என்று எங்கள் அப்பா பெருமையாகச் சொன்னது ஒரு காலம். அப்போது செல்வந்தர்களாக இருந்தவர்களும் நடுத்தெருவுக்கு வந்து விட்ட சூழலில், இருந்த ஒரு சில ஜெனரேட்டர்கள் தான் அவர்களின் வயிற்றைக் கழுவ வாடகைக்குப் போய் வந்தன. ஏதாவது அத்தியாவசியமான தினத்துக்கோ, கொண்டாட்டத்துக்கோ ஒரு சில மணி நேரம் வாடகை ஜெனரேட்டர் மூலம் மின் குமிழ்கள் சிரித்துப் பார்க்கும். ஒரு லீட்டர் மண்ணெண்ணை (கெரசின்) இருநூறு, முன்னூறு ரூபாயில் விற்கும் போது வாடகை மின்சாரமும் கெளரவமான பொருளாகிவிட்டது. கோண்டாவிலில் விடுதலைப்புலிகளின் "படிப்பகம்" என்ற இடத்தில் ஜெனரேற்றர் மூலம் அப்போது உயர்வகுப்பு மாணவர்களின் படிப்புக்கு உதவுமாற்போல இரவில் மின்சாரம் வழங்கி வந்தார்கள். அங்கு போய் படித்தவர்களும் உண்டு. புதுசாக லாந்தர் விளக்கெல்லாம் அப்போது வாங்க முடியாது கொழும்பிலிருந்து அத்தியாவசிய உணவுப்பொருட்களே வருவதற்கு மாதக்கணக்காக இருக்கும் நிலையில் லாந்தர் விளக்காவது. எப்போதோ பாவித்துச் சீண்டாத லாந்தர் விளக்குளை, அநாத ரட்சகா என்று தேடிப் போய் எண்ணெயை நிரப்பினால் பழிவாங்குமாற்போல அதன் அடிவயிற்றிலிருந்து எண்ணையைப் பீய்ச்சும். இனியென்ன எறியவேண்டியதுதான்.
யுத்த நெருக்கடிகள் ஒவ்வொரு விதமாக நம்மவரைப் பதம்பார்த்தபோது, நாங்களும் விடாப்பிடியாக ஒவ்வொரு இழப்பையும் ஈடு செய்யுமாற்போல புதுப்புதுக் கண்டுபிடிப்புக்களோடு வாழத் தலைப்பட்டோம். மின்சாரத்துக்கு மாற்றுவழிமுறைகள் நீர் இறக்கும் இயந்திரத்தை ஜெனரேட்டராக மாற்றியியதில் இருந்து, சைக்கிள் டைனமோவைச் சுழற்றி வானொலி கேட்பது வரையும் இருக்க, இரவுச் சூரியனாய்க் கிட்டியதுதான் இந்த ஜாம் போத்தல் விளக்குகள். எறிவதற்குத் தயாராக இருந்த பாவித்த ஜாம்போத்தல்களை, தட்டுப்பாடான சூழலில் சிறு கொள்கலன்களில் நிரப்பி விற்கும் தேங்காய் எண்ணையை வாங்கி மருந்து போல அந்தப் போத்தல்களில் சிறிதளவு ஊற்றி, அந்த எண்ணெய் வேகமாகப் பாவனையடைந்துவிடாமல் பஞ்சையும் திணித்து,திரியைப் பட்டும்படாமல் நடுவில் செருகினால் விளக்கு தயார். மணிக்கணக்கில் நம் சிக்கனம் உணர்ந்து செயற்படுவதில் சூரன் இவன்.
இது ஒருபுறமிருக்க ஊரே இருளில் மூழ்கி, குட்டி ஜாம்போத்தல் விளக்கில் முழுவீடும் இயங்கும் போது வானத்தில் இருந்து வட்டமிடும் இயந்திரக்கழுகார் இலங்கை விமானப்படையின் விமானங்களுக்கு ஊரே இருட்டுகாடாய் இருக்கும். அதைச் சமாளிக்க, வெளிச்சக் குண்டை முதலில் போட்டு விட்டு அந்த வெளிச்சத்தில் பொதுமக்களின் வீடுகளை இலக்கு வைத்துக் குண்டு போட்டதையும் சொல்லி வைக்கவேண்டும்.
90 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளின் இரவுகள் குப்பி விளக்கிலும், பகலில் சூரிய விளக்கிலும் கழிந்த நாட்கள் அவை. வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சை எல்லாமே குப்பி விளக்கில் தான் படித்து முடித்தோம். ஆபிரகாம் லிங்கன் தெரு விளக்கில் படித்துப் பட்டம் பெற்றதற்கு நிகரான பெருமை அது. இன்றைக்குப் புலம்பெயர்ந்த சூழலில் மின்சாரம் ஒரு நிமிடம் நின்றாலே அதிசயமாக இருக்கும் சூழலிலும், என் வீட்டில் தேவையில்லாமல் மின் விளக்குகள் எரியாது, இந்த ஜாம்போத்தல் விளக்கு போதித்த பாடம் அது.
குப்பிவிளக்குப் படம் நன்றி: குளக்காட்டான் (வசந்தன் பதிவு வழியாக)
6 comments:
இலங்கை வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள எனக்கு எப்பவுமே ஒரு தூண்டுதல் உண்டு. என்னை எப்பொழுதும் வியக்கச்செய்வது, குண்டடி படுவது பற்றியோ, அல்லது மின்சாரம் இல்லாமல் வாழ்ந்தது பற்றியோ, ஏமாற்றப்படுவது பற்றியோ, எந்த சலனமும் இல்லாமல் அதையும் சாதாரணமாக ஏற்றுக்கொண்டு இவர்கள் பேசுவது தான். மிக்க நன்றி இயல்பாய் குடும்ப வாழ்க்கையையும் தொட்டு, அரசியலையும் தொட்டு, நிகழ்வாழ்க்கையையும் அறிய தந்ததற்கு.
நல்ல பகிர்வு தல ;)
praba did u studied at kokuvil hindu college
தயாளன்,
ஆமாம், நான் கொக்குவில் இந்துவில் தான் படித்தேன்
நாங்களும் அக்காலத்தில் அங்கு வாழ்ந்தவர்கள்தான்.
ஜாம் போத்தல் குப்பி விளக்கு எங்கள் வீட்டிலும் இருந்தது.
\\அதிகாலையிலேயே எழும்பி, காலைச்சாப்பாடாகப் பிட்டோ, இடியப்பமோ அவித்து விட்டு குறைந்தது மூன்று கறிகளோடு சோறும் ஆக்கிவிட்டு அவர் நிமிரும்போது மடத்துவாசல் பிள்ளையார் கோயிலில் இருந்து ஒலிக்கும் காலைப்பூசைக்கான மணி ஒலிக்கும்.மாலை வீடு திரும்பியதும் மீண்டும் குடும்பத்தலைவி அரிதாரம், இரவுச்சாப்பாட்டுக்கு ஏதாவது பலகாரம் ஆக்க குசினிக்குள் (அடுக்களை) முகாமிட்டுவிடுவார்.//
என் அனுபவத்தில் உலக அளவில் உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்து குடும்பத்தார் ருசிக்கேற்ப சமைப்பதில் தங்களை பெரிதும் வருத்திக் கொளவது தமிழினத் தாய்களே.. இந்த வகையில் நாமெல்லாம் மிகவும் கொடுத்து வைத்தவர்களே...
Post a Comment