இன்று காலை என் மின்னஞ்சலுக்கு GTV தொலைக்காட்சியில் பணிபுரியும் நண்பர் மூலம் பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இன்று காலமான செய்தியைக் கண்டு பெருந்துயருற்றேன். ஈழத்திற்கு அப்பால் தமிழகத்திலும் பரவலாக அறியப்பட்ட ஏற்றுக்கொள்ள எம் புலமைச் சொத்துக்களில் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் பல்கலைக்கழகத்தில் நடக்கும் சிறப்பு ஆய்வரங்கள் சிலவற்றில் இவரின் பகிர்வுகளைத் தூர இருந்து கேட்டதோடு சரி. அவுஸ்திரேலியாவுக்கு வந்து வானொலிப்பணியில் என்னை ஈடுபடுத்தியபோது ஏ.ஜே.கனகரட்ணாவின் இழப்புச் செய்தியை வானொலியில் ஒரு அஞ்சலிப்பகிர்வாகச் செய்ய விழைந்த போது வானொலியாளர் அமரர் சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் மனைவியார் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள், பேராசரியர் சிவத்தம்பி அவர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தந்தார். அன்றிலிருந்து கவிஞர் முருகையன் இழப்பு வரை பேராசிரியர் சிவத்தம்பி அவர்களோடு பல சந்தர்ப்பங்களில் உரையாடவும் அவரின் பகிர்வுகளை வானொலியில் எடுத்துவரவும் உதவினார். "தம்பி! இப்பிடிச் செஞ்சா நல்லா இருக்கும் மேனை" என்பது வரை அவரது அக்கறை இருந்தது. இவ்வளவு பெரிய ஆளுமை இந்தச் சிறியோனின் பணிகளுக்குக் கேட்டமாத்திரத்தில் ஓம் தம்பி செய்வம் என்று ஒத்துழைத்தது அவரின் இன்னொரு எளிய பண்பிற்கு அடையாளமாக அமைந்தது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் எழுபத்தைந்தாவது அகவையை ஒலி ஆவணப்படுத்தலாக அமைக்க முனைந்தபோது பிரான்சில் வாழும் சகோதரர் கி.பி.அரவிந்தன் மற்றும் முகம் காட்ட மறுக்கும் நண்பர்கள் பேருதவி அளித்தார்கள். அந்த ஆவணத்தை நூலுருவில் கொண்டுவரவேண்டும் என்று பலசந்தர்ப்பங்களில் எண்ணியிருந்தேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குப் பேர் சேர்த்த சிவத்தம்பி அவர்களைத் துணைவேந்தராக மகுடம் சூட்டிப் தன்னைப் பெருமைகொள்ளவைக்கவில்லையே என்ற ஆதங்கம் சிவத்தம்பி அவர்கள் எம்மைக் கடந்து போனபின்னும் ஆதங்க இருப்பாய் உழன்றுகொண்டிருக்கின்றது.
சிவத்தம்பி ஐயா! இப்போது தான் உங்களின் இளைப்பாறும் நேரம் என்று நினைத்து அமைதி கொள்வோம்.
எழுபத்தைந்தில் பேராசான் கா.சிவத்தம்பி
தமிழ்த்துறை அறிஞர், ஆய்வாளர், பன்னெறிப்புலமையாளர், தலை சிறந்த விமர்சகர், சமூகவியலாளர், அரசியற் சிந்தனையாளர் எனப் பல்வேறு வகைப்பட்ட ஆளுமைப்பண்புகளைக் கொண்ட பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இந்த ஆண்டு தனது எழுபத்தைந்தாவது அகவையில் காலடி வைத்திருக்கின்றார்.
ஊரும், உறவும், சொத்தும் இழந்த ஈழத்தமிழ் இனத்திற்கு கல்வியே நிரந்தரச் சொத்தாக இன்னும் இருக்கும் காலத்தில், எமது கல்விச் சொத்தின் அடையாளமாக, ஆலமரமாக இருக்கின்றார் பேராசான் சிவத்தம்பி அவர்கள். இந்த ஆலமரத்தின் விழுதுகள் போல் அவரின் பெருமையைச் சேர்க்கும் மாணவ சமூகம் உலகெங்கும் பரந்து வாழ்கின்றது.
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களது பவள விழாவினை அவருக்கு உலகெங்கும் வாழும் தமிழினம் நடாத்துகின்றது. கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு முன்னர் துறைசார் அறிஞர்களையும் , பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களிடம் கல்வி கற்ற மாணாக்கரில் சிலரையும் கொண்டு ஒலிப்பகிர்வு மூலம் ஒரு வானொலிப் பெட்டக நிகழ்ச்சி செய்யக் கங்கணம் கட்டியிருந்தேன்.
இந்த வருஷமும் முடியப் போகின்றது ஆனால் எடுத்திருந்த ஒலிப்பகிர்வுகளை முறையாகக் கோர்த்து வெளியிடுவதில் நேரமும் காலமும் பிடிக்கிறதே என்ற கவலை வந்தாலும் முழு மூச்சோடு போனவாரம் இந்தப் படைப்பை 1 மணி நேரம் 42 நிமிடங்கள் ஓடும் ஒலிப்பெட்டக நிகழ்ச்சியாகச் செய்து முடித்தேன். கடந்த நவம்பர் 21 ஆம் திகதி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானலைகளிலும் அரங்கேறியது. ஆசைக்கு அளவில்லை என்பது போல, இந்த ஒலிப்பெட்டக நிகழ்ச்சியில் இடம்பெற்ற தேர்ந்தெடுத்த பகிர்வுகளைத் தட்டச்சியும் பாதுகாத்து உங்களுக்கும், எதிர்காலத்துக்கும் தர வேண்டும் என்றும் ஒரு ஆசை. அதுவும் இப்பதிவோடு நிறைவேறுகின்றது.
இப்பெருமுயற்சிக்கு எனக்கு ஒத்துழைப்பு அளித்து ஒலிப்பகிர்வை வழாங்கிய கல்விச் சமூகத்திற்கும், ஒலிபரப்ப உதவிய அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும், ஒருங்கிணைப்பில் உதவிய கி.பி அரவிந்தன் அவர்கட்கும், ஒலிப்பதிவில் உதவிய நண்பருக்கும், உசாத்துணையில் உதவிய பல்வேறு நூல்கள், குறிப்பாக வீ.ஏ.திருஞானசுந்தரம் அவர்கள் பதிப்பித்த "கரவையூற்று" என்னும் பேராசிரியர் சிவத்தம்பி குறித்த பல்முக நோக்கு நூலிற்கும் பதிவுக்கான படங்களை உதவிய யூ.எஸ்.தமிழ்ச்சங்க இணையத்துக்கும், சுந்தாவின் "மன ஓசை" நூலிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இப்பதிவினை முழுமையாகவோ பகுதியாகவோ மீள் பிரசுரம் செய்ய விரும்புவோர் தயவு செய்து kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஒரு மடல் இட்டு உறுதிப்படுத்த வேண்டுகின்றேன்.
ஒலிப்பெட்டகம்
பாகம் 1
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை முதனிலை விரிவுரையாளரும்,கலை கலாசார பீடத்தின் பட்டப்படிப்பின் இணைப்பாளருமான பேராசிரியர் அம்மங்கிளி முருகதாஸ் அவர்கள் வழங்கிய பேராசிரியர் சிவத்தம்பியின் கல்விப்புலமைப் பயணத்தைப் பற்றிப் பேசுகின்றார். தொடர்ந்து பிரபல எழுத்தாளர், விமர்சகர், கலைஞர் திரு இரவி அருணாசலம் அவர்கள் தனது குருவுக்கும் தனக்கும் இடையிலான ஆசிரிய மாணவ உறவைக் கடந்த அனுபவங்களைப் பகிர்கின்றார். அடுத்து " தமிழ் கலை இலக்கியப் பரப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் இடம்" குறித்து முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் பாலசுகுமார் அவர்கள் வழங்கும் பகிர்வு.
பாகம் 2
பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் , ஏறக்குறைய 2300 ஆண்டு தொன்மை மிக்க தமிழின் வரலாறு பண்பாடு குறித்து மேற்கொண்ட ஆய்வுப்பணிகளைச் சிலாகின்றார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. அரசு அவர்கள். தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தின் முதல் தொகுதி மாணவியரில் ஒருவரான திருமதி சுமத்திரி.பிரான்சிஸ் அவர்கள் தன் ஆசான் பேராசிரியர் சிவத்தம்பியின் கற்பித்தல் அனுபவங்களைப் பகிர்கின்றார். அடுத்து கிழக்குப் பல்கலைக்கழத்தில் பேராசிரியரின் செயற்பாடுகள் குறித்து முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் பாலசுகுமார் அவர்கள் வழங்கும் கருத்துரை.
பாகம் 3
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண் கலைத்துறை தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள், பேராசிரியர் சிவத்தம்பிக்குள் இருந்த நடிகனையும், நாடகத் தயாரிப்பாளரையும், புதிய நாடக வடிவங்களை ஏற்படுத்த ஏதுகோலாக இருந்த செயற்பாட்டையும் தன் வாழ்வியல் அனுபவத்தினூடே விளக்குகின்றார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண் கலைத்துறை தலைவர் பேராசிரியர் சி.மௌனகுருவின் பகிர்வு
பேராசிரியர் சிவத்தம்பிக்கு 75 வயது ஆகிவிட்டது. இன்று ஓய்வு பெற்ற நிலையிலே இன்று அவர் ஓய்வு பெறாதவராக இயங்கிக் கொண்டிருக்கிறார். ஆய்வாளராக, விமர்சகராக, கவிஞராக, சிந்தனையாளராக அவர் மதிக்கப்படுகிறார்.
இவற்றிற்கும் அப்பால் இவர் மிகச்சிறந்த நாடக எழுத்தாளராகவும் நாடக நடிகராகவும், நாடக நெறியாளராகவும் இருப்பதும் ஈழத்து நாடக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக திகழ்வதும் சிலர் அறியாத விடயமாகும்.
நான் இங்கு பேராசிரியரின் நாடக விடயங்களையும் அவருடன் எனக்கிருந்த உறவுகளையும் அழுத்திக் கூற விரும்புகிறேன். எனக்கும் பேராசிரியர் சிவத்தம்பிக்குமான உறவு ஏறத்தாழ 45 வருடகால உறவாகும். இதை அரை நூற்றாண்டு உறவு எனலாம்.
ஈழத்தின் வடபால் பிறந்த ஒருவர் பேராசிரியர் சிவத்தம்பி. ஈழத்தின் கிழக்கிலே பிறந்தவன் நான் . இந்த இரண்டையும் இணைத்து வைத்த பெருமை நாடக கலைக்கு இருப்£தை நான் இப்போது சிந்தித்துப் பார்க்கின்றேன்.
1959ஆம் ஆண்டு பேராசிரியர் சிவத்தம்பியை சந்தித்தேன். அப்போது நான் 16-17 வயது மாணவனாக வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலே பயின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு கூத்து அரங்கேற்றப்பட்டது. பேராசிரியர் நித்தியானந்தனும் பேராசிரியர் சிவத்தம்பியும் அந்த கூத்தை பார்வையிட வந்திருந்தனர்.
இரண்டு பெரிய ஆகிருதிகளும் அந்த கூத்தை வெகுவாக இரசித்தார்கள். கூத்து முடிந்த பின்னர் அவர்கள் இருவரும் கூத்தாடிய எல்லா மாணவர்களுக்கும் உச்சி முகர்ந்து கன்னம் தடவி வாஞ்சையுடன் எமமை வாழ்த்தினார்கள். அந்தப் பார்வை , அந்த நெருக்கம் , அந்த உறவுதான் எனக்கும் போராசிரியர் சிவத்தம்பிக்கும் ஏற்பட்ட முதலாவது உறவாக அமைந்தது.
அதன் பின்பு அந்த கூத்தை பேராதனைப் பல்கலைக்கழக மேடையில் அரங்கேற்றினார்கள். அப்போது நிறைந்த ஆதரவு எங்களுக்கு கிடைத்தது. அதை மேடை ஏற்றும்படி கூறியிருந்தவர்கூட பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தான்.
1961 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. கிழக்கு மாகாணத்திலிருந்து மிகக்குறைந்தோரே அப்பொழுது பல்கலைக்கழகத்திற்கு செல்வார்கள். அந்த காலப்பகுதியில் சரத் சந்திரா அவர்கள் சிங்கள நாடக உலகிலே கொடி கட்டிப்பறந்து கொண்டிருந்தார். சிங்கள மரபு வழி நாடகங்களை அடிப்படையாக வைத்து அவர் "மனமே சிங்கபாகு" அவர் போன்ற சிறந்த நாடகங்களை தயாரித்திருந்தார். அவை தனித்துவம் கொண்ட சிங்கள நாடகங்களாக அறியப்பட்டிருந்தன. அதனால் அவை நல்ல வரவேற்பை பெற்றன. பேராசிரியர் சரத் சந்திரா ஒரு நல்ல மனிதர், மிகவும் இன செளஜன்யத்தை விரும்புகின்ற ஒரு நல்ல புத்திஜீவி.தனது நாடகங்களுக்காக தமிழ்க்கூத்திலிருந்தும் சில அம்சங்களை தான் "மனமே சிங்கபாகு" போன்ற நாடகங்களுக்கு எடுத்துக் கொண்டதாக அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தார்.
இவற்றைப் பார்த்தபோது தான் பேராசிரியர் வித்தியானந்தனுக்கு ஈழத்துக் கூத்து மரபில் இருந்து ஈழத்து தமிழ் நடன நாடக வடிவத்தை உருவாக்க முடியாதா என்ற சிந்தனை ஏற்பட்டது. அதற்கு அடித்தளமாக மட்டக்களப்புக் கூத்துக்கள் அமைந்திருந்தன. மட்டக்களப்பு கூத்துக்களில் தான் தாளக்கட்டுக்களும் ஆடல்களும் நிறைந்திருந்தன. அவற்றை அடிப்படையாகக்கொண்டு பேராசிரியர் நித்தியானந்தன் இத்தகைய நாடகங்களை தயாரிக்க வேண்டும் என்று அவாக் கொண்டிருந்தார். இதற்கு பின்பலமாக இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.
நாங்கள் பேராதனைக்கு சென்றபோது பேராசிரியர் நித்தியானந்தன் அவர்கள் கூத்துக்களைப் போட ஆரம்பித்திருந்தார். எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது, பின்னோக்கிப் பார்க்கின்ற பொழுது 61 ஆம் ஆண்டிலே கர்ணன் போர், 62 ஆம் ஆண்டிலே நொண்டி நாடகம், 64 இலே இராவணேசன், 65 இலே வாலி வதை என்று மட்டக்களப்பின் தென்மோடி, வடமோடி நாடகங்களை செழுமைப்படுத்தி பேராசிரியர் சரத் சந்திரா பாணியிலே வித்தியானந்தன் தயாரிக்க ஆரம்பித்திருந்த காலம் அது. காலனித்துவ சிந்தனைகளாலும் மேற்கு மோகத்தாலும் சூழ்ந்திருந்த அந்த பேராதனை மண்ணிலே கூத்துக்கள் மத்தள ஒலியும் சலங்கை ஒலியும் கேட்க ஆரம்பித்தன.
கிராமிய சூழலிலமைந்த கூத்துக்கள் ஆட ஆரம்பித்தன. அந்த நாடகங்களை தமிழ் மாணவர்கள் வியப்போடு பார்த்தார்கள். அப்போது ஒரு கலக்கு கலக்கியது பேராதனைப் பல்கலைக்கழகம். எப்படி சிங்கள மாணவர்கள் மத்தியிலே பேராசிரியர் சரத்சந்திரா அவர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாரோ வகித்தாரோ அதே தாக்கத்தை பேராசிரியர் நித்தியானந்தன் பேராசிரியர் சிவத்தம்பியின் உதவியுடன் தமிழ் மாணவர்கள் மத்தியிலே ஏற்படுத்தினார்.
அந்த அருமையான காலங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. அப்போது தான் பேராசிரியர் சிவத்தம்பி பற்றி மெல்ல மெல்ல அறிய ஆரம்பித்தேன். அவர் அதற்கு முன்னரேயே பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களில் நடித்திருக்கிறார். அவர் மாத்திரமல்ல பேராசிரியர் கைலாசபதியும் நடித்திருக்கிறார். பேராசிரியர் சிவத்தம்பி ஒரு மேடை நடிகராகவும் வானொலி நடிகராகவும் இருந்திருக்கிறார்.
அவருடைய விதானையார் வீடு என்ற நாடகத்திலே அவர் பாத்திரம் மிகவும் பிரபல்யமானது.
( விதானையார் வீடு நாடகம் ஒலிப்பதிவில், இடமிருந்து வலம் கணபதிப்பிள்ளை விதானையா (கா.சிவத்தம்பி), வைரமுத்துச் சட்டம்பியார் (சரவணமுத்து), செளந்தரவல்லி ( பத்மா சோமசுந்தரம்), விசாலாட்சி (பரிமளாதேவி விவேகானந்தா), சின்னத்துரை விதானையார் ( வீ.சுந்தரலிங்கம்), ஆறுமுகம் (வி.என்.பாலசுப்ரமணியம்).
இதைவிட அவர் நாடக எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார். இவ்வண்ணமாக இந்த ஆய்வுத்துறைக்கு வர முதல் ஒரு நாடக கலைஞர் ஆகத் தான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் அறிமுகமாகியிருக்கிறார்.
இதைப்பற்றி கனக செந்திநாதன் தனது ஈழத்து இலக்கிய வளர்ச்சியிலே குறிப்பிடுகின்ற பொழுது இவர் நடிப்பிலே சிறந்தவராக இருந்தவர் என குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வருகிறது. மட்டக்களப்பு மரபுவழி நாடகங்களை எப்படி சுருக்கலாம் என்ற ஆலோசனைகளை தந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி. இந்தக் காலகட்டத்திலே தான் பேராசிரியர் சிவத்தம்பியினுடைய நாடகப் படைப்பாற்றல் பணிகளை நான் அருகிலிருந்து அவதானித்தது மாத்திரமல்ல, அவரிடமிருந்து அதிகம் பெறவும் கூடியதாக இருந்தது.
இந்தக் கூத்துக்களை எப்படிச் சுருக்கலாம் என்பதை எனக்கு அவர் மிகவும் அதிகமாக விளங்கப்படுத்தினார். கர்ணம் போர், நெண்டி நாடகம், போன்ற நாடகங்களை மட்டக்களப்பு மரபு வழி நாடகங்களில் இருந்து நாங்கள் சுருக்கினோம். ஏற்கனவே கூத்தில் கொஞ்சம் பரிச்சயம் என்றபடியால் என்னைத்தான் அவற்றைச் சுருக்குவதற்குக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் முழு ஆலோசனைகளையும் தந்தவர்கள் பேராசிரியர் சிவத்தம்பியும் , பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களும்.
பிறகு அந்தக் கூத்துக்கள் மேடையேற்றுகின்ற போது கூத்தின் வீரியம் கெடாமல் ஒரு வட்டக்களரியில் ஆடப்பட்ட கூத்தினை எப்படிப் படச்சட்ட மேடைக்குள் போடலாம் என்பதை அதனுடைய வீரியமும் அதனுடைய தன்மையும் கெடாமல் அதனுடைய தாற்பரியங்களைப் புரிந்து கொண்டு மேடையிலே போடவைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.
இராவணேசன் மட்டக்களப்பு கூத்துப் பாணியில் இருந்து வித்தியாசமாக உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாடகம். காரணம் மட்டக்களப்பு கூத்துக்களிலே ஒரு எடுத்துரை அரங்காகத் தான் அது இருக்கும். ஆனால் அதில் பாத்திரப் பண்புகள் வராது. இராவணேசனை பாத்திர குணாம்சம் பொருந்தியவராக மாற்றுவதற்கு பேராசிரியர் சிவத்தம்பி விரும்பினார். துன்பியல் நாயகனாக அவனைப் படைக்கவேணும் என்று அவர் கூறினார். துன்பியல் நாயகனை கிரேக்க நாடகங்களில் காணலாம்.
கிரேக்க நாடகத்திலே விதிக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கின்ற போட்டியிலே மனிதன் விழுவான். அந்த வீழ்ச்சி ஒரு துன்பியலாக இருக்கும். பல நல்ல குணங்கள் இருந்தும் ஒரு தீய குணத்தால் தன் வீழ்ச்சியை தானே தேடிக் கொள்பவன் தான் துன்பியல் நாயகன். இராவணேசனை அப்படியொரு துன்பியல் நாயகனாக மாற்றவேண்டுமென சிவத்தம்பி அவர்கள் கூறினார். அதன்படி அவர் கம்பராமாயணத்தில் யுத்தகாண்டத்தை எனக்குப் படிப்பித்தார்கள். இதைத்தான் எழுதும் படி கேட்டுக் கொண்டார். எப்படி இராவணன் சிந்தித்தான், எப்படிப் போனான், எப்படி துன்பியலுக்கான அடித்தளம் போடப்படுகின்றது என்பதை யுத்தகாண்டத்தினை படிப்பிப்பதனூடாக கூறி அந்த பாத்திரத்தை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார். இதன் விளைவாகத் தான் இராவணேசன் உருவாகியது.
இந்த இராவணேசன் நாடகத்தில் ஒரு கூத்தை நாடகமாக மாற்றுவதற்கு பேராசிரியர் நித்தியானந்தனுக்கு பேராசிரியர் சிவத்தம்பி நிறைய உதவியாக இருந்தார். அவர் சொல்லுவார் பாட்டை எப்படி நடிப்பாக வைரமுத்து அவர்கள் மாறினார்களோ அதோ போல ஆட்டம் நடிப்பாக மாறவேண்டும் என்று அடிக்கடி சிவத்தம்பி அவர்கள் கூறுவார்.
முக்கியமாக இராவணேசனின் பிரதியாக்கம் பெற உதவியாக இருந்தார். அது மாத்திரம் இல்லை கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன் போன்ற நாடகங்களுக்கு உதவித்தயாரிப்பாளராகவும் இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கர்ணம் போரில் தயாரிப்பாளர் அதாவது நெறியாளர் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள்.உதவியாளர்கள் பேராசிரியர் கைலாசபதியும், பேராசிரியர் சிவத்தம்பியும். பிறகு வந்த நாடகங்களுக்கெல்லாம் உதவியாளராக இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். பாடல்களைத் தெளிவாகப் பாடுதல், உணர்ச்சி படப்பாடுதல், சொற்களை எடுத்து சில சொற்களைப் படுத்தும் பாடுதல் என்று பாடும் முறைமையினைக் காட்டித் தந்ததோடு, ஒரு வட்டக்களரியிலே ஆடும் ஆட்டத்தை படச்சட்ட மேடையில் ஆடும் முறைமையினையும் எமக்கு விளக்கியவர் சிவத்தம்பி அவர்கள்.
உதாரணமாக இராவணேசனில் ஒரு காட்சி எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றது. இராவணேசன் தன் படையை அனுப்புகின்ற கட்டம். நான் தான் இராவணனாக நடித்தேன். மிகுந்த பயிற்சியை எனக்கு அவர்கள் தந்தார்கள்.அவன் நீலன், சிங்கன், மகரற்கண்ணன், குருதிக்கண்ணன் என்று அணியணியாக அரக்கர்களை இராமனுக்கு எதிராக ஏவுகின்றான்.அதற்கு பின்னணியாக அப்போது விரிவுரையாளராக இருந்த பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் கணீரென்று
"போவதோ எனது வீரம் வீழ்வதோ புகழென்றெண்ணி அடி சூழ் சேனையோடு சிங்கனை அனுப்பி வைத்தான்"
என்று பாடலைப் பாடியவுடன் அந்த இராணவனாக நடித்த நான் அபிநயத்து, மெல்ல நடந்து, மத்தள ஓசைக்குத் தக்க திரும்பி ஆடி, வேகமாக ஆடி மேடையின் வலது கீழ் மேடைக்கு வந்து இரண்டு கைகளையும் தூக்கி படைகளை அனுப்பி வைப்பேன். தொடர்ந்து ஒலிக்கும் பறையும் உடுக்கும், மத்தளமும், சங்கும் படை போவது போன்ற பிரமையை ஏற்படுத்தும். திடீரென்று அவை நின்றதும் இராவணன் உடலிலே சோர்வு தோன்றும். மேடையில் அமைதி நிலவும். படைகள் அழிந்து போகின்ற உணர்வு வரும். பிறகு மீண்டும் படைகளை அனுப்புவதற்கான பாடலை சண்முகதாஸ் அவர்கள் பாடுவார்கள். இவ்வண்ணமாக கூத்திலே இல்லாத ஆனால் கூத்தை அடிநாதமாகக் கொண்ட காட்சியமைப்புக்களை மிக அற்புதமாக உருவாக்கினார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். அதே போல் இராவணனும் இராமனும் போரிடுகின்ற கட்டத்தை அவரே படைத்தார். கூத்திலே அப்படி ஆடுவதில்லை. மிக இலாவகமாக, மிக வேகமாக ஆடி அந்தக் களரி ஆட்டத்தை முடிப்பார்.
எனக்கு ஒரு ஞாபகம் வருகின்றது.
ஒரு நாள் ஒத்திகை நடந்து கொண்டிருக்கின்றது. இராவணேசன் நாடகம், இராவணேசனாக நான், நீலன், மகரன், குருதிக்கண்ணன் எல்லாரையும் அனுப்பி, இந்திரஜித்தையும் அனுப்பி, உறவுகளையும் இழந்து, எல்லாரும் போய் விட்டார்கள், இனி யுத்தத்திலே வெல்ல முடியாது என்கின்ற நிலையிலே இராவணன் நிற்கின்றான். அவனுடைய சோர்வு, துக்கம், துயரம், வெட்கம், கோபம், எல்லாவற்றையும் முகத்திலே கொண்டு வர வேண்டும். பயிற்சியின் போது முயற்சி எடுத்து நடிக்கின்றேன். சிவத்தம்பி அவர்கள் தலையாட்டிப் போட்டுச் சொல்கின்றார் போதாது என்று. அருகிலே சுங்கானோடு பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் நிற்கின்றார். உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கின்றார். மீண்டும் நடிக்கின்றேன். வித்தியானந்தனும் திருப்தியின்றித் தலையசைக்கின்றார். இருவர் முகத்திலும் திருப்தியில்லை. என்னால் இனிமேல் நடிக்கமுடியவில்லை. சோர்ந்து போனேன், அப்போது எனக்கு வயது 21 இருக்கும். சிவத்தம்பி அவர்கள் என்னை அழைக்கின்றார்கள். யுத்த காண்டத்தில் இராவணேசனின் தோல்வியை விளக்கி கம்பன் பாடல் ஒன்ரையும் கூறி விளக்குகிறார். தோல்வி மேல் தோல்வி பெற்ற இராவணன், வாளினைப் பார்க்கிறான், தன் தோளினைப் பார்க்கிறான், வலிய தன் கைகளைப் பார்க்கிறான், இறுதியில் நாணத்தால் குறுகிச் சிரிக்கிறான், அழுகிறான், கோவிக்கிறான், வெட்கப்படுகின்றான். இதற்கான கம்பனுடைய பாடலைக் கூறி கம்பன் கடைசி அடியிலே நகும், அழும், முனியும், நாணும் என்று கூறுகின்றார். "எங்கே சிரியும், அழும், கோபியும், நாணப்படும், இந்த உணர்வுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் முகத்திலே கொண்டுவாரும்" என்று அவர் கேட்கவும், அவர் கூற்றை உள்வாங்கிக் கொண்டேன். "எனக்கு கொஞ்ச நேரம் தாருங்கள்" என்றேன். ஒரு சின்ன இடைவேளை. நாங்கள் பழகிக் கொண்டிருந்த விரிவுரை மண்டபத்துக்கு அருகிலே தான் பாத்றூம் இருந்தது. சுற்றி வர நிலைக்கண்ணாடி. போய் நடித்துப் பார்க்கின்றேன். திருப்பி திருப்பி நடித்துப் பார்க்கின்றேன். திருப்தி ஓரளவுக்கு வருகின்றது. மீண்டும் அவர்களுக்கு முன்னால் வந்து ஒத்திகை ஆரம்பமாகின்றது. நானும் காட்சியைச் செய்தபோது வித்தியானந்தனின் முகமும், சிவத்தம்பியின் முகமும் மலர்ந்ததும், ஒத்திகை முடிய அவர்கள் வந்து பாராட்டியதும் என் வாழ்வில் மறக்க முடியாத கணப்பொழுதுகள். இன்றும் அதை நினைத்து நினைத்து மகிழ்வேன், நெகிழ்வேன். செதுக்கிய அந்தச் சிற்பிகள் மீது மிகுந்த மரியாதை இருக்கின்றது.
கூத்தை நாடகமாக்கிய அந்தக் காலகட்டங்களிலே தான் கிழக்கத்தேய நடிப்பு முறை என்ற உண்டு என்பது எனக்கு பொருள்பட விளங்கியது. இத்தனை சிக்கலான ஆக்கங்களும், தாளக்கட்டுக்களும், செழுமையான பாடல்களும் கொண்ட இக்கூத்து எப்படி ஒரு கிராமிய நாடகமாக இருக்க முடியும் என்று எம்மிடம் கேட்பார் சிவத்தம்பி அவர்கள். அக்கினிக் குஞ்சாக என் மனதுக்குள் புகுந்த அவரது கருத்துத் தான், எனது "மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள்" என்ற பி.எச்.டி ஆய்வாக விரிந்தது. 660 பக்கங்களிலே அது வந்திருக்கின்றது. அதில் தமிழர்களுடைய தொன்மை பொருந்திய மரபில் ஒன்று கூத்து என்று நான் எழுதியிருக்கின்றேன்.
டைனோசரின் எலும்பை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி டைனோசரை உருவாக்கினார்களோ அதேபோல் இந்த கூத்தை வைத்து கொண்டு செழுமை பொருந்திய பழைய நாடகமரபை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தை விதைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.
உலகளாவிய பல விடயங்களை வயதுக்கு மீறி திணித்து சிந்திக்க வைத்து செதுக்கிய பெருமை முக்கியமானவர்கள் பேராசிரியர்கள் சிவத்தம்பியும், வித்தியானந்தனுமே. அந்த உறவு பின்னர் நன்றாக விரிந்தது. கொழும்பிலே அவர் அப்போது நாடகக்குழு தலைவராக இருந்தார். ஈழத்தின் தமிழர் வாழ் பிரதேசங்களுக்கெல்லாம் சென்று அந்தக் கூத்து மரபுகளை அறிகின்ற பணியிலே எங்களை ஊக்குவித்தார்.நானும்; சண்முக சுந்தரமும் எல்லா இடங்களுக்கும் பேராசிரியர் சிவத்தம்பியின் பிரதி நிதிகளாகச் சென்றோம். வன்னியிலே 1971/ 72 இலே ஒரு பெரிய மாநாட்டை கூட்டுவதற்கு ஒழுங்கு செய்தார் சிவத்தம்பி. வன்னிக்கலைகளை வெளியுலகுக்கு கொண்டு வருகின்ற முயற்சி தான் அது. வன்னி மாநிலத்திலே இருக்கின்ற கூத்து, கரகம் கோவலன் கூத்து சிலம்பு கூறல் குடக்கூத்து போன்ற பல்வ்வேறு கலைகளை வன்னி மாநிலத்திற்க வெளியே கொண்டு வருகின்ற முயற்சி தான் இது.
அந்தக் காலகட்டத்திலே தான் கொழும்பிலே தாசீசியஸ், சுந்தரலிங்கம் ஆகியோர் கொழும்பிலே நாடகங்களைப் போடுகின்றார்கள்.
சுந்தா என்று அறியப்பட்ட பி.பி.சி சுந்தரலிங்கம் அவர்களின் வீட்டில் நான் குடியிருந்தேன். அந்த வீட்டு மொட்டை மாடியில் இந்த வகையான நாடகங்கள் பழகப்பட்டன. அந்த மொட்டை மாடியில் இருந்து சுந்தா, கைலாசபதி, சிவத்தம்பி, எல்லோரும் சூழ்ந்திருக்க தாசீசியஸ், நான், சுந்தரலிங்கம் போன்றோர் இந்த நாடகங்களைப் பழகிய அற்புதமான காலங்கள், கொழும்பில் இருந்த காலங்கள்.
பிறகு 80 களுக்கு பிறகு நான் யாழ்ப்பாணம் வந்து விடுகின்றேன். அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் நுண்கலைத் துறைத் தலைவராக இருக்கின்றார். அவருக்கு கீழே நுண்கலைத் துறை விரிவுரையாளராக இருந்தேன்.
யாழ்ப்பாணத்திலே புதிய நாடக மரபு ஒன்று உருவாக ஆரம்பிக்கின்றது. அந்த நாடக மரபுக்குப் பின்புலமாக இருந்து ஊக்க சக்தி கொடுத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். நான் அப்போது தயாரித்த எல்லா நாடகங்களுக்கும் அவர் ஆலோசகராக இருந்தார்.
முக்கியமாக புதியதொரு வீடு நாடகம் தயாரிக்கப்பட்ட போது அவர் ஸ்ரனிஸ்லவஸ்கியின் மெதேட்டை எப்படி கொண்டு வரலாம் என்பதை அன்று நடிக்கப் பழக்கினார். அதிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். இராவணேசன் மூலம் கீழத்தேய மரபை சிவத்தம்பி மூலம் கற்ற நான் யாழ்ப்பாணத்தில் ஸ்ரனிஸ்லவஸ்கியின் நாடக மரபை கற்கக் கூடியதாக இருந்தது.
அவர் ஓய்வு பெற்ற பின் கிழக்குப் பல்கலைகழகத்திற்கு இரண்டாண்டுகள் வந்து, லயம், இராவணேசன், கிழக்கிசை அவருடைய வழிகாட்டலில் நுண்கலைத்துறை செய்கின்றது.
ஒன்றை மட்டும் நிறைவாகச் சொல்லி வைக்கின்றேன். சிவத்தம்பி அவர்களை தந்தை போன்று உரிமையோடு சண்டை இட்டுக்கொள்வோம், சண்டை வரும், சமாதானம் வரும், தந்தைக்கும் மகனுக்குமுரிய எல்லா மோதல்களும் அதிலே வரும்.
ஆனால் அடி நாதமாக ஓடுவது ஒரு பாசம் தான். அந்த உறவு தான் ஸ்தாயிபாவமாக எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.
ஆரம்ப காலத்திலே தத்துவத்தின் அடியாகத்தான் எல்லாவற்றையும் விளக்க முயன்றார். நடந்து கொண்ட எல்லா விடயத்தையும், நடைமுறைகளையும் தத்துவமாக உருவாக்க முயன்றார். அதை எப்படிக் கூறலாம் என்று சொன்னால் விளக்க முயன்ற காலம் பழைய காலமானால் விளங்கமுயன்ற காலம் பிற்காலமாக காணப்படுகின்றது.
நாடகத்துக்கூடாக மக்களை அறிய முயன்றார், தமிழர்களை அறிய முயன்றார், பண்பாட்டை அறிய முயன்றார். பண்பாட்டில் வலிமையிலே அவர் மிகவும் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். ஆனபடியால் தான் அவர் பொருளாதாரக் கட்டுமானத்துக்கும் அப்பால் சென்று பண்பாட்டடியாக தமிழ் மக்களைப் புரிந்து கொள்ள அவர் முயன்றார்.
சிவத்தம்பி அவர்கள் ஆய்வாளர் , விமர்சகர் , கவிஞர் , சிந்தனையாளர். இவற்றுக்கும் அப்பால் ஒரு நடிகர் நாடக எழுத்தாளர். நாடக நெறியாளர். மரபு வழி நாடகங்களை செழுமைப்படுத்தியவர். நாடகங்களையும் அரங்கியலையும் உருவாக்கியவர். ஒரு பாரம்பரியத்தை தனக்கு பின்னால் உருவாக்கி சென்றவர். இந்த பகுதி இன்னும் விரிவாக எழுதப்படுகின்ற பொழுது பேராசிரியர் சிவத்தம்பியின் இன்னொரு ஆளுமையின் முகம் வெளியே தெரிய வரும் என்றார் பேராசிரியர் சி.மெனகுரு.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. அரசு அவர்களின் பகிர்வு
பேராசிரியர் சிவத்தம்பியின் எழுபத்தைந்தாவது அகவையில் அவர் குறித்துப் பேசுவதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய ஆய்வுகள் குறித்து 2005 டிசெம்பர் மாதத்தில் சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறையும், ரொறொண்டோ பல்கலைக் கழக தென்னாசிய ஆய்வு மையமும் இணைந்து ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கை நடாத்தினோம்.
அந்தக் கருத்தரங்கில் தமிழ் நாட்டிலுள்ள மிக முக்கியமான ஆய்வாளர்கள் பெரும்பகுதியானோர் பங்கேற்று பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் தமிழியல் ஆய்வும் அவரது வகிபாகமும் திசை வழிகளும் என்ற கருத்தரங்கு மூன்று நாள் சென்னைப் பல்கலைக்கழக சஙக இலக்கியத்துறையில் நடைபெற்றது.
தமிழர்களுடைய வரலாறு என்பது 2300 ஆண்டுகளைக் கொண்டது என்பது வரையறுக்கப்பட்டு விட்டது. அதற்கு முன் இருக்கலாம்.ஆனால் சான்றுகளின் படி 2300 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தமிழ் மொழி பேசும் இனக்குழு இருந்திருக்கின்றது என்பது உறுதி பெற்றிருக்கின்றது. இந்தப் பின்புலத்தில் 2300 ஆண்டுகளுக்கான நீண்ட நெடிய வரலாற்றை பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தங்களுடைய ஆய்வின் மூலமாக எப்படியெல்லாம் பதிவு செய்திருக்கின்றார் என்பதை உங்களோடு நான் பகிர விரும்புகின்றேன்.
பேராசிரியர் சிவத்தம்பியின் ஆய்வுகள் கி.பி 2000 இற்கு முற்பட்ட காலம் பற்றிய தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ்ச்சமூகம் என்ரு ஒரு பிரிவாகச் சொல்லலாம். கி.பி 7 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 19 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவான தமிழ் இலக்கியம், கல்வெட்டுக்கள், அது சார்ந்த ஆய்வுகளையும் இன்னொன்றாகச் சொல்லலாம். மூன்றாவதாக 20 ஆம் நூற்றாண்டு பற்றி பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் செய்த ஆய்வுகள் என்று சொல்லலாம்.
இந்த முதல் நிலையில் அதாவது தொல்பழங்காலம் பற்றிய, தமிழர்கள் பற்றிய ஆய்வு என்பது மிக முக்கியமான ஒரு ஆய்வாக இருக்கின்றது. குறிப்பாக பிரித்தானியர்கள் தெற்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் இன்றைக்கு இந்தியா என்று அழைக்கப்படும் இந்துஸ்தான் என்ற நிலப்பகுதியில் அவர்கள் ஆட்சி அதிகாரம் செலுத்திய பொழுது அவர்கள் செயத முக்கிய ஆய்வு கல்கத்தாவை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் உருவாக்கிய ஏஷியாட்டிக் சொசைட்டி என்ற நிறுவனத்தின் மூலமாக இந்தியவியல் ஆய்வுகளைத் தொடங்கினார்கள். அந்த ஆய்வில் இந்தியா என்ற நாடு சமஸ்கிருத மொழியை முதன்மையாகக் கொண்டதாகவும், ஆரியர் என்ற தேசிய இனத்தைக் கொண்டதாகவும் அவர்களது ஆய்வுகள் நடைபெற்றன. வில்லியம் ஜோன்ஸ் தொடங்கி பிறகு வில்சன், பேராசிரியர் மாக்ஸ்முல்லர் வரை இந்த ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. இவர்கள் எல்லோரும் இந்தோ ஆரியம் சார்ந்த சமஸ்கிருதம் தான் இந்தியாவின் முதன்மையான மொழி என்றும், முதன்மையான பண்பாடு அந்த சமஸ்கிருத மொழியைச் சார்ந்த வேதகாலப் பண்பாடு என்ற வகையில் தான் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.
மாறாக 1900 தொடக்கம் 1924 வரை தொடர்ச்சியாக மேற்கொண்ட ஆய்வின் விளைவாக சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலங்களில் பெரியவர்கள், குறிப்பாக சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களும், பின்னர் உ.வே.சாமிநாத ஐயரும் சேர்ந்து தமிழ்ச் சுவடிகளில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத மிக அரிய தொல் பழந்தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்தார்கள். அவற்றைப் பதிப்பித்து வெளியுலகுக்கு கொண்டு வந்தார்கள்.இந்த இரண்டு நிகழ்வும் ஐரோப்பியர்களால் இந்தியா என்று கருதப்படும் நிலப்பகுதியில் சமஸ்கிருத மொழிக்கு மாற்றான இன்னொரு மொழிக்குடும்பம் இருக்கிறது என்பதையும், அந்த மொழிக்குடும்பத்துக்கென தொன்மையான பண்பாட்டு மரபுகள் தொடர்ச்சியாக இருக்கின்றன என்பதையும் உலகத்துக்குத் தெரிவிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.
இந்தப் பின்புலத்தில் தான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய 1965, 75 ஆண்டுகளில் அவர் நிகழ்த்திய ஆய்வுகளின் மூலமாக இவ்விதம் இந்தியா என்ற நிலப்பகுதி சமஸ்கிருதம் என்ற மரபுக்கு அமைய ஒருபக்கம் இருக்கும் அதேவேளை மறுபக்கம் திராவிட மரபு எனப்படும் தமிழை முதன்மைப்படுத்திய ஒரு செம்மொழி இலக்கிய மரபும், ஒரு பழமையான தொல்காப்பிய இலக்கண மரபும் இருந்தது என்பதைச் சார்ந்த ஒரு அங்கீகாரம் இருந்தது.
அதில் பேராசிரியர் செய்த ஆய்வுகளில் அவரின் கலாநிதிப்பட்டத்துக்காக மேற்கொண்ட ஆய்வில், "பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் நாடகம்" என்ற ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் மூலமாக கிரேக்கச் சமூகத்தில் இருக்கக் கூடிய பண்டை இன மரபுகள் சார்ந்த ஒரு இனக்குழுவைப் போலவே தமிழ் பேசக்கூடிய ஒரு இனக்குழு இங்கிருந்திருக்கிறது எனவும், அதில் ஒரு சமச்சீரற்ற சமூக அமைப்பு செயற்பட்டதென்பதும், அதில் பல்வேறு வகையான மரபுகளைக் கொண்ட கலைஞர்களும், குறிப்பாகப் பாணர்கள், புலவர்கள், விரலியர்கள் இப்படிப் பலர் வாழ்ந்தனர் என்றும், அவர்களுடைய கலை வடிவங்கள் செழுமையானவையாக நடைமுறையில் இருந்தன என்பதையும் தனது ஆய்வின் மூலமாக வெளிக்கொண்டு வந்தார்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இக்காலகட்டத்தில் எழுதிய மேலும் முக்கியமான சில ஆய்வுகளில் குறிப்பிடத்தக்கது பண்டைத் தமிழ் சமூகத்தினுடைய திணைக்கோட்பாடு பற்றிய ஆய்வாகும். அதைப் போலவே பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் உருவான மேட்டிமை சார்ந்த தன்மை பற்றிய The development of aristocracy means in Tamil Nadu என்ற அவருடைய ஆங்கிலக் கட்டுரை. அதைப்போலவே திணைக்கோட்பாடு சார்ந்து உருவான உளவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்டுரைகள். ஏறக்குறைய அவருடைய கலாநிதி ஆய்வுப் பட்டமும் அதைச் சார்ந்த இந்த சங்க இலக்கியம் தொடர்பான பிற ஆய்வுகளும் ஒரு உண்மையை வெளிக்கொண்டு வந்தன, என்னவென்று சொன்னால் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைப் போலவே திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த தமிழ் என்பது தொன்மையான நாகரிகம் என்றும் அந்த நாகரிகத்தைச் சார்ந்து ஒரு தொன்மையான கிரேக்க இலக்கியத்தோடு ஒப்பிடக்கூடிய ஒரு தொல் பழந்தமிழ் இலக்கியமும் உண்டு என்பதற்கான தர்க்கபூர்வமான, அறிவியல்பூர்வமான சான்றுகளை இவருடைய இந்த ஆய்வுகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டன என்று சொல்லமுடியும்.
ஏனென்று சொன்னால் இக்காலங்களில் தமிழ் நாட்டைச் சேர்ர்ந்த தமிழ் தேசிய இனத்தை முதன்மைப்படுத்திய பலரும் குறிப்பாக தேவநேயப் பாவாணர், இலக்குவணார், இப்படியான பல பெருந்தகைகளும் இந்தக் கருத்தாக்கத்தை முதன்மைப்படுத்தினாலும் அதற்கு அவர்கள் அறிவியல்பூர்வமான சான்றுகளைத் தந்தார்களா என்று சொல்லமுடியாது. ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய இந்த ஆய்வுகள் மூலமாக, குறிப்பாக பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் இருந்த நிலவியல் அமைப்பு, அங்கு வாழ்ந்த மக்கள் தன்மை, அதன் மூலமாக அவர்கள் உருவாக்கிய தமிழ் இலக்கியம், வரலாறு தொடர்பான ஒரு இலக்கிய எடுகோளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மானுடவியல் ஆய்வை அவர் செய்தார் என்று சொல்லமுடியும். இந்த ஆய்வு இந்தியாவைப் பொறுத்தவரை மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியர்களால் வட இந்தியாவைப் பற்றிக் கொண்டிருந்த அளவிற்கான ஒரு மிகப்பெரிய மதிப்பீட்டை தென்னிந்தியா அல்லது தென்னிந்தியாவில் இன்றைக்கு வாழக்கூடிய தமிழ் இனத்தின் முந்திய வரலாற்றை உறுதிப்படுத்துவனவாக அமைந்தன. இதை பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மிக முக்கியமான பங்களிப்பாக நான் கருதுகிறேன். இப்பங்களிப்பை வரலாற்றுப் பேராசிரியரான செண்பகலட்சுமி, பேராசிரியர் பணிக்கர் போன்ற பலர் அங்கீகரித்திருக்கின்றார்கள் என்பதையும் நான் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய இரண்டாவது மிக முக்கியமான பங்களிப்பு குறிப்பாக ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிய உள்ள, தமிழின் மிக அதிகமான பங்களிப்பாக உள்ள சமய இலக்கியங்கள் தொடர்பாக அவர் செய்த ஆய்வுகள். இதில் குறிப்பாக அவர் சைவ இலக்கியத்தைப் பற்றி ஆய்வு செய்த பொழுது திருமுறைகள் தொடங்கி, மெய்கண்ட சாஸ்திரம் வரையான வளர்ச்சியப் பற்றி அவர் சொல்கின்ற பொழுது ஒரு பாசுர மரபில் உருவான ஒரு மனித நேய மரபு என்பதை ஒரு தத்துவ உரையாடலாக உருவாக்கியது தான் மெய்கண்ட சாஸ்திரங்கள் என்று அவர் எழுதியிருக்கின்றார்.
அதைப்போலவே பிற்காலங்களில் தமிழ்ச்சூழலில் உருவான மிக முக்கியமான சமய மரபைச் சார்ந்த திருமூலர், குமரகுருபரர், அருணகிரிநாதர், வள்ளலார் குறிப்பாக தாயுமானவர் இவர்களைப் பற்றி இவர் ஆய்வு செய்த பொழுது இரண்டாவது யுகம் என்று குறிப்பிடுகின்றார். இந்த இரண்டாவது பக்தி யுகம் என்று இவர் குறிப்பிடுகின்ற பொழுது கி.பி ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் பத்தாம் நூற்றாண்டு வரை உருவான ஒரு பக்தி இலக்கிய மரபிலிருந்து ஒரு வேற்றான தமிழ் மரபு உருவானதென்றும் இந்த மரபு என்பது மனிதாபிமானத்தை முதன்மைப்படுத்தி மனித நேயத்தை முதன்மைப்படுத்திய ஒரு தமிழக சமய இலக்கியமரபாக உருவானதாக அவர் பதிவு செய்கிறார். ஒரு மாக்ஸிய முறையியலை முதன்மைப்படுத்திய பேராசிரியர் அவர்கள் மாக்ஸிய இயங்கியல் சார்ந்து சமூக வரலாற்றை எழுதக்கூடிய அவர் இவ்விதம் சமயத்தையும் மனித நேயத்தையும், இணைத்துக்காணக் கூடிய ஒரு மானுடவியல் துறை சார்ந்த சொல்லாட்சிகளால் அவர் செயற்பட்டிருப்பதைக் காணமுடியும்.
இதில் சில விஷயங்களை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் குறிப்பாக சமயம் என்பது மனிதநேயத்துக்காக செயற்படக்கூடிய ஒரு நிறுவனம் என்பதும், அது சார்ந்துதான் நாம் அவற்றின் பல்வேறு கூறுகளைப் பார்க்க வேண்டும் என்பதை அவருடைய பயிற்சியின் மூலமாக உருவான மானுடவியல் துறை சார்ந்த சொல்லாடல்கள் மூலமாக அவர் விரிவாகப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். நிறுவனமாக உருப்பெற்ற ஒரு சமயத்தின் மூலம் இவ்விதமான சாத்தியப்பாடுகள் உண்டா என்ற விமர்சனம் ஒரு பக்கம் இருக்க, ஒரு சமயத்தை மானுடவியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்ததில் பேராசியர் சிவத்தம்பி அவர்களுக்கே மிக முக்கியமான பங்களிப்பு உண்டென்று நான் கருதுகின்றேன். இது அவருடைய பண்டைத் தமிழ்ச்சமூகத்தைப் பற்றிய ஆராய்ச்சி அளவிற்கு இருக்கும் அவருடைய சிறந்த ஆய்வென்று நான் கருதுவேன்.
இறுதியாக பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் 20 ஆம் நூற்றாண்டு பற்றிச் செய்த ஆய்வுகள் மிக முக்கியமானவை. குறிப்பாக் 20 ஆம் நூற்றாண்டில் உருவான இயக்கங்களைப் பற்றிய ஆராய்ச்சி, 20 ஆம் நூற்றாண்டில் உருவான புதிய ஊடகங்கள் பற்றிய ஆராய்ச்சி என்று நாம் சொல்ல முடியும். குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் திராவிட இயக்கம் என்ற அமைப்பு ஏன் உருவாகிறது, தனித்தமிழ் இயக்கம் என்ற அமைப்பு ஏன் உருவாகிறது, இதனுடைய மூலத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது, என்பதான பல கேள்விகளுக்கான விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுக்கு மிக முக்கியமான இடம் உள்ளதாக நான் கருதுகிறேன்.
சிவத்தம்பி அவர்கள் பேசுகிறார், சைவ சமய மரபின் தொடர்ச்சியாகவே தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் போன்றவை உருப்பெற்றிருக்கக் கூடும் என்பதற்கான ஒரு தொடர்ச்சியான வரலாற்றுப் போக்குகள் குறித்த விரிவான இலக்கிய மற்றும் பல்வேறுவிதமான பண்பாட்டுத் தரவுகள அவர் முன்வைக்கிறார். இதை அவ்வளவு எளிதாக புறந்தள்ள இயலாது. குறிப்பாக மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை முதல் மறைமலை அடிகள் வழியாக, திரு வி.க வழியாக ஒரு தொடர்ச்சியான சைவ மரபு சார்ந்த உரையாடல் என்பது தமிழ்ச்சூழலில் நடைபெற்றிருக்கின்றது.
இந்த உரையாடல் மரபில் 20 ஆம் நூற்றாண்டில் உருவான இயக்கங்கள், குறிப்பாக தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம், தமிழிசை இயக்கம் ஆகியவற்றுக்கான பண்புகளோடு பேராசிரியர் இணைத்துப் பார்க்கும் இந்த ஆய்வு முறை மிகமுக்கியமான ஒரு பதிவாகும். அதைப்போலவே 20 ஆம் நூற்றாண்டில் உருவான ஊடகங்கள் குறிப்பாக வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகம் போன்ற பல குறித்து பேராசிரியருடை ஆய்வுகள் மிக விரிவானவை. புனைகதைகள், நாவல்கள், சிறுகதைகள் இவை உருவாக்கத்தை ஒரு சமூகவியலோடு எப்படிப் புரிந்துகொள்வது என்பது பற்றிய ஆய்வுகள் மிகச்சிறப்பானவை. வழக்கமாக இவ்வாறான புனைகதைகள் அது சார்ந்த ஊடகங்கள் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் ஒரு தன்முனைப்பு சார்ந்தும் தர்க்கபூர்வமின்றியும் ஒரு தொடர்ச்சியான மரபின் வளர்ச்சியென்று கருதுகின்ற அதே நேரத்தில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் புதிதாக உருவான அச்சு ஊடகப் பண்புகளையும், அதன் மூலமாக உருவான வாசிப்புப் பழக்கத்தையும் அந்தப் பழக்கத்தினூடாக உருவான புதிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய அச்சுப் பண்பாடு உருவாக்கமென்றும் அந்த அச்சுப் பண்பாடு உருவாக்கத்தை 20 ஆம் நூற்றாண்டில் உருவான புனைகதைகளினூடாக நாம் கண்டுகொள்ளலாமெனவும் பேராசிரியர் அவர்கள் விரிவாக ஆய்வு செய்து நமக்குத் தந்திருக்கிறார்கள்.
இந்த வகையில் ஒரு 2300 ஆண்டு கால தமிழ்ச்சமூகத்தின் நீண்ட தொடர்ச்சியான வரலாற்றை கி.பி 6 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பண்டைத் தமிழ்ச்சமூகம் குறித்த ஒரு விரிவான ஆய்வைத் தனது ஆய்வாகவும் , பின்னர் வந்த காலத்தில் சமய மேலாதிக்கம் மிக்க சூழலில் சமயத்தை எப்படி எதிர்கொள்வது, எப்படிப்புரிந்து கொள்வது என்பது பற்றிய ஆய்வாகவும், புதிய மறுமலர்ச்சி சார்ந்து, புதிய தன்மையில் உருவான 20 ஆம் நூற்றாண்டில் நிலவிய பண்புகளை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் செய்துள்ள ஆய்வுகள் அவரது இந்த 75 ஆண்டு நிறைவு பவழ விழாக்காலத்தில், 1956 தொடக்கம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக தமிழியல் ஆய்வு மேற்கொண்ட அவருடைய ஆய்வுப் புலமைப் பாரம்பரியம் தமிழ்ச்சமூகம் விதந்து பாராட்ட வேண்டிய ஒரு மிக முக்கியமான செயல் என்று கருதுகிறேன். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து இன்னும் பல மேல் ஆய்வுகளைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப் பீடாதிபதி பாலசுகுமாரின் பகிர்வு
1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1981 ஆம் ஆண்டு வரை நான் என்னுடைய பட்டப்படிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டபோது அவர் என்னுடைய ஆசானாக இருந்தார். அவருக்கு கீழ் நான் படித்ததையிட்டு பெருமைப்படுகின்றேன். அவர் எங்களுக்கு பல விஷயங்களை அந்தக் காலகட்டத்திலே அந்த நான்கு வருடங்கள் பட்டப்படிப்பை மேற்கொண்டபோது பெற்றுக்
கொள்ளக்கூடியதாக இருந்தது. நான் தமிழை சிறப்பு பாடமாகப் படித்த பொழுது நான்கு வருசமும் அவர் எனக்கு விரிவுரையாளராக,ஆசானாக இருந்திருக்கின்றார். இந்த நான்கு வருசங்களிலே தமிழ் பற்றியதான ஒரு ஆழமான தேடுதலை மேற்கொள்வதற்கு ஒரு ஊக்கசக்தியாக பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இருந்திருக்கின்றார்.
நான் அந்தக் காலத்திலே பல்கலைக்கழகத்திலே படிக்கின்றபொழுது வாசி, வாசி என்று என்னை வாசிப்பதற்கு தூண்டியவர் அவர். நான் லைபிரரியிலே போய் லைபிரரியின் கடைசி மணி அடிக்கும் வரை இருந்து வாசிப்பேன். அந்தக் காலகட்டத்தில் தான் நான் முற்று முழுதாக தமிழ் நாவல் இலக்கியம் என்பது ஒரு தனிப்பாடமாக இருந்தது. அந்தப் பாடத்தை அவர் தனியாகவே எனக்கு அவர் படிப்பித்தார். அதேபோல சங்ககால அகத்திணை மரபை நான் தனியே அவரிடம் படித்தேன். அதோடு சேர்த்து தொல்காப்பியத்தின் அகத்திணை மரபு, நாடகமும் அரங்கியலும் எனக்கு சிறப்பாகப் படிப்பிக்கப்பட்ட பாடம். இதோடு சேர்ந்து பொதுவாக மற்றமாணவர்களோடு சேர்ந்து தமிழ் சிறப்புப் பாடத்திலே பல விசயங்களை நான் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். குறிப்பாகச் சொல்லப்போனால் அவருடைய படிப்பித்தல் என்பது விரிவுரைகள் மிக ஆழமானதாக இருக்கும்.சிலபேருடைய விரிவுரைகளைக் கேட்கும் போது எப்போது அவை முடியும் என்று நாங்கள் நினைப்பதுண்டு.
ஆனால் அவருடைய விரிவுரைகள் அப்படியல்ல.சலிக்காமல் அலுக்காமல் எத்தனை மணித்தியாலமும் கேட்கக் கூடியதாக, நாங்கள் புரிந்து கொள்ளக் கூடியதாக அந்த விரிவுரைகள் அமைந்திருக்கும். நான் தனியே அவரிடம் படித்தபோது சிலவேளைகளில் அவர் பன்னிரண்டு மணிக்கு விரிவுரையைத் தொடங்கினால் கிட்டத்தட்ட நாலரை மணித்தியாலங்கள், ஐந்து மணித்தியாலங்கள் அந்த விரிவுரைகள் நீண்டு கொண்டே போகும். அந்த விரிவுரைகள் நடத்தப்படுகின்ற பொழுது அது ஒரு விரிவுரையாக இல்லாமல் ஒரு பகிர்தலாக, ஒரு உரையாடலாகவே அது அமைந்திருக்கும். அப்போது தான் பல விஷயங்களை, சிலவேளைகளில் பாடத்துக்கு அப்பாலும் கூட கற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. தனியே அந்தப் பாடப் பரப்போடு மாத்திரம் நில்லாமல் அந்தப் பாடத்தோடு தொடர்புடைய பல விஷயங்களை உலகளாவித் தழுவி வருகின்ற போது பரந்த அறிவைத் தரக்கூடியதாக அவருடைய விரிவுரைகள் அமைந்திருந்தன.
குறிப்பாக இன்னும் நான் சொல்லப் போனால் நான் அவரிடம் சிறப்பாகப் பயின்ற பாடங்கள் என்று சொல்லுகின்ற பொழுது நாடகமும் அரங்கியலும் என்ற பாடம். இந்த நாடகமும் அரங்கியலும் என்ற பாடம் அந்தக் காலத்திலே பல்கலைக்கழகத்துக்கு ஒரு தனிப்பாடமாக இருக்கவில்லை. அத்தோடு க.பொ.த உயர்தரத்திலும் கூட தனி ஒரு பாடமாக இருக்கவில்லை. அதன் பிற்பாடுதான் 1980 களுக்கு பின்னர் தான் தனி ஒரு பாடமாக க.பொ.த உயர்தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போல பல்கலைக் கழகத்திலே தமிழ் மொழி மூலமாக இந்தப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பாடத்தை க.பொ.த உயர்தரவகுப்பில் அறிமுகப்படுத்தியதில் பேராசிரியர் சிவத்தம்பியின் பங்கு மிக முக்கியமானது.
தமிழ் கலை இலக்கியப்பரப்பிலே அவருடைய இடம் மிகப் பெரிய இடம். அதை யாரும் மறுக்க முடியாது. பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் கூட அதையெல்லாம் தாண்டி, அவற்றுக்கெல்லாம் அப்பால் ஒரு மிகப்பெரிய மலையாக தமிழ் கலை இலக்கியப் உலகிலே அவர் இயங்கியிருக்கிறார். அப்படிப் பார்க்கின்ற பொழுது முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கூடாக அவர் ஆற்றிய பணிகளும், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒரு காலகட்டத்திலே மிகப்பெரிய சக்தியாக வளர்வதற்கான பல விஷயங்கள் இவரூடாகவே வெளிப்பட்டது.
அத்தோடு தமிழ் நாடக ஆராய்ச்சி என்று பார்க்கின்ற பொழுது, தமிழ் நாடகம் பற்றிய ஆராய்ச்சியை முதன்முதலில் தொடக்கிவைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி என்று சொல்லலாம். சுவாமி விபுலானந்தர் ஆரம்பத்திலே தமிழ் நாடகங்கள் பற்றி விசயங்களை மதங்க சூளாமணி மூலமாகக் குறிப்பிட்டாலும் அதைத் தொடர்ந்து நாங்கள் பார்க்கின்ற பொழுது பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய கலாநிதிப்பட்ட ஆய்வு அது இப்போது தமிழில் வந்திருக்கின்றது, "பண்டைத் தமிழ் சமூகத்தில் நாடகம்" சென்ற ஆண்டு என்று நினைக்கின்றேன், அது மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது. அவர் இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்திலே கலாநிதிப்பட்ட ஆய்வினை மேற்கொண்டார். தமிழ் நாடகத்தையும் கிரேக்க நாடகத்தையும் ஒப்பு நோக்கி பண்டைத் தமிழ்ச் சமூகத்திலே இந்த நாடக மரபுகளை சிலப்பதிகாரத்தினூடு அவர் வெளிப்படுத்திய விதம் மிக முக்கியமானது. இன்றைக்கு கூத்துப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக கிழக்கு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலே மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் நாட்டிலே பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவற்றுக்கெல்லாம் வழிகாட்டியாக, சிவத்தம்பி அவர்களுடைய கலாநிதிப்பட்ட ஆய்வு அடிப்படையாக அமைகின்றது. இந்த ஆய்வின் பின்புலம் தான் பலரை தமிழ் நாடகம் பால் இழுக்கச் செய்தது.
பிற்காலத்திலே நீங்கள் பார்த்தீர்களேயானால் தமிழ் நாட்டிலே சக்தி பெருமாள், ஏ,என் பெருமாள் போன்ற பலர் இத்தகைய தமிழ் நாடக ஆய்விலே ஈடுபடுகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக பேராசிரியர் சிவத்தம்பியத் தான் தமிழ் நாடக ஆராய்ச்சியில் முக்கியமானவராகக் கருத முடியும். அதே போல அவர் இலங்கை கலைக்கழகத்திலே பணியாற்றிய பொழுது, ஈழத்து நாட்டாரியர் குறித்த அவரது ஈடுபாடு மிக முக்கியமானது. குறிப்பாக அவர் முல்லைத்தீவிலே செய்த நாட்டாரியல் விழா, இன்றைக்கும் பலர் நினைவு கூர்ந்து பேசக்கூடிய நிகழ்வாக இருக்கின்றது. இதை விட அவர் பேராசிரியர் வித்தியானந்தனோடு பணியாற்றிய போது, பேராசிரியர் வித்தியானந்தன் கூத்து மீள் கண்டுபிடிப்பு செயத போது அதாவது ஈழத்தமிழர்களுக்கான ஒரு அரங்க வடிவம் பற்றி சிந்தித்த பொழுது கிழக்கிலங்கையிலே பிரபல்யம் பெற்ற தென்மோடி வடமோடி நாடகங்களை அவர் மீளுருவாக்கம் செய்து மேடையேற்றினார் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள்.
பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் இவற்றை மேடையேற்றியபோது அதற்குப் பக்கத்துணையாக இருந்தவர்கள் பேராசிரியர் சிவத்தம்பியும், பேராசிரியர் கைலாசபதியும். அந்தக் காலத்திலே செய்யப்பட்ட கர்ணன் போர், நொண்டி நாடகம், வாலி வதை, இராவணேசன் போன்ற நாடகங்கள் மிக முக்கியமான நாடகங்கள். ஆகவே இன்றைக்கு நாங்கள் பேசுகின்றோமே ஈழத்து தமிழர்களுக்கான அரங்க வடிவம், ஈழத்து தமிழர்களுக்கான நடனவடிவம், ஈழத்துத் தமிழர்களுக்கான இசை வடிவம் என்று பேசுகின்ற பொழுது அதற்கான அடிப்படைகளை இத்தகைய கூத்து மீள் கண்டுபிடிப்பு என்கிற அந்த விசயத்திலிருந்து தான் தொடங்குகின்றது. ஆகவே அதற்கும் கூட அந்தக் காலத்தில் மிகக் காத்திரமாகச் செயற்பட்டவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.
இன்றைக்கு தமிழ் நாட்டில் கூட நாடகமும் அரங்கியலும் என்ற கற்கை பிளஸ்டு வில் இல்லை. எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இருக்கின்ற தமிழகத்திலே பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், தஞ்சைப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களில் தான் தமிழிலே நாடகம் ஒரு பாடமாக இருக்கின்றது. அதே போல் இந்தியா முழுவதிலும் எடுத்துக் கொண்டாலும் ஒரு சில பல்கலைக்கழகங்களில் மாத்திரம் தான். ஆனால் சிறிய ஒரு நாடான நம் நாட்டில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களில் நாடகம் ஒரு பாடமாக இருக்கின்றது. அதன் மூலமாக பல கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் உருவாகியிருக்கின்றார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் சிங்களத்தில் நாடகமும் அரங்கியலும் பல்கலைக்கழகத்திலே ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகவே அந்த வகையில் பார்க்கின்ற பொழுது ஈழத்திலே நாடகம் தொடர்ப்பான விஷயங்களிலே, ஆராய்ய்சிகளிலே, படிப்புக்களிலே பேராசிரியர் சிவத்தம்பியின் இடம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது.
கிழக்குப் பல்கலைக் கழகத்திலே அவர் வந்து பணியாற்றிய காலத்தை நான் இங்கு குறிப்பிடவேண்டும். கிழக்குப் பல்கலைக்கழகத்திலே அவர் 2 வருடங்கள் பணியாற்றியிருந்தார். அவர் பணியாற்றிய காலங்களிலே கிழக்குப் பல்கலைக் கழகத்திலே முக்கியமான பட விஷயங்களைத் தொடங்குவதற்கு அவர் காரணகர்த்தாவாக இருந்தார் என்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும்.குறிப்பாகக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள், குறிப்பாக கலைமாணி, முதுமாணி, முதுதத்துவமாணி , தத்துவமாணி அதாவது எம்.ஏ.எம்.பிஎல், பி.எச்.டி ஆகிய கற்கைநெறிகளைத் தொடங்குவதற்கான பாடத்திட்ட வரைபை பேராசியர் சிவத்தம்பி அவர்கள் இருந்து அந்தப் பணியைச் செய்தார்கள். அவரோடு சேர்ந்து பேராசிரியர் மெளனகுரு, சித்திரலேகா மெளனகுரு போன்றவர்களும் இணைந்து அந்த வேலகளை செய்தார்கள். ஆனால் அதற்கான திட்டவரைபை உருவாக்குவதற்கு சிவத்தம்பி அவர்கள் தான் அடிப்படையாக இருந்தார்.
அதுமாத்திரமல்லாமல் அந்த உயர்பட்டப்படிப்புக்களை நடாத்துவதற்கான விரிவுரைகளைக்கூடப் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் செய்தார்கள். அந்தவகையிலே நாடகமும் அரங்கியலும், நுண்கலை ஆகிய பாடங்களிலே இன்றைக்கு கிழக்குப் பல்கலைக் கழகத்திலே முதுமாணி, முதுதத்துவமாணி, தத்துவமாணி ஆகிய துறைகளைச் செய்வதற்குரிய வாய்ப்புக்கள் அங்கே இருக்கின்றன. அந்த வகையிலே
அவர் கிழக்குப் பல்கலைக்கழகத்திலே முக்கியமான காரியத்தைச் செய்வதற்குக் காரணகர்த்தாவாக இருந்திருக்கின்றார்.அதாவது நான் அவருடைய மாணவனாக இருந்தது ஒரு பக்கம், பின்னர் அவரோடு இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது இரண்டாவது கட்டம்.
அடுத்து கிழக்கு பல்கலைக்கழகத்தோடு சுவாமி விபுலாந்தா இசை நடனக் கல்லூரியை இணைக்கின்ற முயற்சியிலே திட்ட முன்வரைபு ஒன்று அதற்குத் தேவைப்பட்டது. அந்தத் திட்டமுன்வரைபைத் தயாரிப்பதற்கு பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் மிக முக்கியமானவராக இருந்தார். பலரும் அதனோடு இணைந்து பணியாற்றினாலும் கூட, சிவத்தம்பி அவர்கள் தான் அடிப்படையாக நின்று செயற்பட்டார்.
மூன்றாவதாக கிழக்குப் பல்கலைக்கழகத்திலே எங்களுடைய சிறப்பு மாணவர்களுக்கு, தமிழ் சிறப்பு மாணவர்கள், நுண்கலை சிறப்பு மாணவர்கள், நாடகமும் அரங்கியலும் படிக்கின்ற சிறப்பு மாணவர்களுக்கு அவர் விரிவுரைகளை நிகழ்த்தினார். இவ்வாறு மூன்று வகையான பணிகளை அவர் கிழக்குப் பல்கலைக்கழகத்திலே இரண்டு வருடங்கள் பணியாற்றிய போது செய்ததை நாங்கள் அதை மிகப் பெருமையாகக் கருதுகின்றோம். பின்னாளிலே நான் பீடாதிபதியாக வந்த பொழுது பல விசயங்களை நான் கேட்டு தெரிந்து கொள்ள அவருடைய ஆலோசனைகள் மிகுந்த வழிகாட்டியாக அமைந்தன.
அதாவது சில ஆராய்ச்சி முயற்சிகளைச் செய்வதற்கும், சில கருத்தரங்குகளை நிகழ்த்துவதற்கும், ஆகவே ஒரு academic என்ற வகையிலே ஒரு கல்விசார் பேராசிரியர் என்ற வகையிலே, ஒரு பல்கலைக்கழக புத்திஜீவி என்ற வகையிலே கிழக்குப் பல்கலைக்கழகத்தோடு அவருக்கிருந்த தொடர்பு என்பது, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தை மேலும் ஆளுமை உள்ளதாக, ஆளுமை உள்ள பட்டதாரிகளை உருவாக்குவதற்குரிய ஒரு பின்புலத்தை அவர் எங்களுக்கு அளித்தார். கூடவே அவரால் வரமுடியாத காலகட்டத்தில் நாங்கள் எங்கள் மாணவர்களை கொழும்புக்கு அனுப்பி அவரிடம் கற்கை பெறுவதற்கான வசதிகளைச் செய்துகொடுத்தோம். இப்படி கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் அவருக்குமிடையிலான தொடர்புகள் முக்கியமானவை. அதை விட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உலக நாடகவிழா நடைபெற்ற பொழுது அவர் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றார். இப்படியாக கிழக்குப் பல்கலைக் கழகத்துக்கும் அவருக்குமிடையிலான தொடர்பு இன்று வரை தொடர்கின்ற உறவாகவே இருந்து வருகின்றது.
கவிஞர் முருகையன் காலமானபோது பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தந்த வானொலிப்பகிர்வு
7 comments:
அன்னாரது ஆன்மா சாந்தியடைட்டும், அவரது குடும்பத்தாருக்கு என் ஆறுதல்கள்
மீள் பதிவிற்கு நன்றி கா.பி
அங்கே இட்டது, இங்கே....
--------------------------
தமிழ்ப் பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு இரம் கரம் கூப்பி, என் சார்பிலும், தோழன் இராகவன் சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலி!
பொதுவாகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழகம் மட்டுமே பேசப்படும்! ஈழத்தின் தமிழ்த் தொண்டு அதிகம் இடம்பெறாது!
இந்தக் குறையை நீக்கி, பேரா.சிவத்தம்பி எழுதிய தமிழிலக்கிய வரலாற்றில் ஈழமும் சேர்த்து, ஒரு ஒட்டுமொத்த பார்வை கிடைக்கும்!
வரலாற்றோடு ஒட்டிய இலக்கிய வாசிப்பை, பெரிதும் பிரபலம் ஆக்கியவர் பேராசிரியர்! முருகனைப் போலவே, "திருமாலும் தமிழ்க் கடவுளே" என்ற தமிழ்த் தொன்மம் ஆய்விலே ஐயா சிவத்தம்பியும் முக்கியமானவர்!
அருமையான தரவுகளை முன் வைத்து, ஏதோ மேம்போக்காக நம்பிய கருத்துகளை எல்லாம் தயவு தாட்சணியம் இன்றி, பின்னுக்குத் தள்ளிய சான்றாண்மைக் குணம் ஐயாவிடத்திலே உண்டு!
கட்டுரைகள் மட்டுமல்லாது, அன்னாரின் இசை-நாடகப் பங்களிப்புகளும், தமிழ்த் தாயின் திருவடிக்கு தீஞ்சிலம்பு!
வாழ்க சிவத்தம்பி! வாழ்க சிவத்தம்பியின் தமிழ்!!
//யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குப் பேர் சேர்த்த சிவத்தம்பி அவர்களைத் துணைவேந்தராக மகுடம் சூட்டிப் தன்னைப் பெருமை கொள்ள வைக்கவில்லையே என்ற ஆதங்கம்//
பேரா. சிவத்தம்பி நினைவாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், ஒரு தமிழ் விருதினையும், ஆய்வு மையத்தையும் நிறுவி, தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ள வேணும்! தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
ஈழப் படைப்பிலக்கியங்கள், தமிழகத்தின் தமிழ் ஆக்கங்களோடு, ஒருங்கிணைந்து செயல்பட, இது போன்ற மையம் பேருதவியாக இருக்கும் என்பது என் பணிவான கருத்து!
கனத்த மனதுடன் கருத்திடுகின்றேன்.. தமிழ் கடலின் ஆத்மா சாந்தியடைய வேண்டி....
என் ஆழ்ந்த வருத்தங்கள் அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்!
அவரிடம் ஒரு வருடம் தமிழ் படிக்கும் சந்தர்ப்பம் 1985ம் ஆண்டு எனக்குக் கிட்டியது.அவரிடம் நான் கண்டு வியந்த அம்சம் என்னவென்றால் அவரிடம் இருந்து ஊற்றெடுக்கும் புதிய தமிழ் சொல்லாக்கங்கள்.
மிக அநாயாசமாக வாயிலிருந்து உதிரும் அச் சொற்கள்.வேறெங்கும் இதற்கு முன் பாவிக்கப் படாத வசீகரமான தமிழ் சொற்களாக அவை இருக்கும். அது தான் அதன் சிறப்பு.
அந்தச் சொற்களில் மயங்கி,என் குறிப்புக் கொப்பியின் பின் பக்கங்கள் அச் சொற்களால் நிறைந்ததும்;என்னிடம் கேள்வி கேட்ட போது பதில் சொல்ல முடியாமல் தயங்கி நின்றதும் மறக்க முடியாத பல்கலைக்கழக நினைவுகள்.
கொஞ்சம் கொஞ்சமாய் முத்து முத்தாகச் சேர்த்த அச் சொற்கள் 1995ம் ஆண்டோடு போயொழிந்தன.
பல்கலை விற்பன்னராய் விளங்கிய அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக!
அவருடய பன்முக ஆழுமையை அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். தேவையறிந்த சேவை.வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
Thank you my friend. fine documentation on Prof K Sivathamby.Appreciate your contribution.
Post a Comment