Monday, July 10, 2006
நட்சத்திர அனுபவம்
தமிழ் மண நட்சத்திர வாரத்துக்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டேன். வழக்கமாக மாதம் இரண்டு பதிவுகள் படி என் ஊர் பற்றிய நினைவுகளோடு மடத்துவாசல் பிள்ளையாரடியில் எழுதிவந்த எனக்கு, நாளொன்றுக்குக் குறைந்தது ஒரு பதிவு வீதம் நட்சத்திர வாரம் பூராவும் நிரப்பவேண்டும் என்பது எனக்கு ஒரு வகையில் சவாலாக இருந்தது.
நீண்ட கால அவகாசம் இருந்ததால் என் மனப்பதிவில் சில பதிவுகள் உருக்கொண்டு கருக்கட்டியிருந்தன. ஆனால் நினைத்தது ஒன்று, நடந்தது வேறொன்று என்பது போல் எழுத உட்காரும் போது வந்து குதித்த சில விடயங்கள் என்னை வேறு பாதைக்கு இட்டுச்சென்று புதிய சில பதிவுகளை ஏற்படுத்த வாய்ப்பு ஏற்படுத்திவிட்டன.
நான் தமிழ் மண வாரத்தில் எழுதவேண்டும் என்று நினைத்த பதிவுகளில் எழுத முடிந்தது, "வாடைக்காற்று" மற்றும் "வாழைமரக்காலம்" மட்டுமே.
பரந்தளவிலான வாசகர் வட்டத்திற்குத் தீனி போடவே "ரசதந்திரம்" மற்றும் "திரையில் புகுந்த கதைகள்" பதிவுகள் வந்தன. என் காதலர் கீதங்கள் தொகுப்பின் ஒரு பகுதியைக் கொடுக்கலாம் என்று முதல் நாள் தீர்மானித்துவிட்டு என் வானொலிக்களஞ்சியத் தொகுப்பின் பிரதியை எடுத்து வைத்தேன். மறுநாள் எழுத ஆரம்பித்தபோது மலரக்காவின் நினைவு தான் வந்தது. தீர்மானித்த விடயத்தை ஒதுக்கிவிட்டு மலரக்காவின் நினைவுகளை என் மனது இரைமீட்க, கைவிரல்கள் தானாகவே தட்டச்சிக்கொண்டு போயின.
மடத்துவாசல் பிள்ளையாரடியில் என் ஊர் நினைவுகள் மட்டும் பதியப்பட்டு வந்தவேளை நட்சத்திர வாரத்திற்காக மட்டும் சில சமரசங்களைச் செய்துகொண்டேன். அனுபவம்/நிகழ்வுகள் என்ற ஒரே தெரிவை வழக்கமாகத் தேர்ந்தெடுக்கும் நான், பதிவர் வட்டம், சினிமா/பொழுதுபோக்கு, நூல்நயம்/இதழியல், ஆன்மீகம்/இலக்கியம், சிறுகதை ஆகிய தெரிவுகளையும் இந்த நட்சத்திரவாரத்தில் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். ஆனால் பிஞ்சுமனம் என்ற குறும்பட அனுபவத்தையும், காழ்ச்சாவையும் சினிமா/பொழுதுபோக்கு என்ற வட்டத்துக்குள் சுருக்கவிரும்பாமல் அனுபவம்/நிகழ்வுகள் ஆக அளித்திருக்கின்றேன்.
என் நீண்ட பதிவுகளை ஒரு வழி பண்ணுமாறு கேட்ட ராமச்சந்திரன் உஷாவின் கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற முடியவில்லை:-)
எதையும் எழுதிவைத்து மீண்டும் தட்டச்சும் பழக்கமில்லாத எனக்கு வந்து விழும் வார்த்தைகளுக்கு அணை போட விரும்பவில்லை. இது என் பலவீனமும் கூட. எனக்கு விரும்பிய விஷயத்தைப் பேச ஆரம்பித்தால் ஒரு வழி பண்ணிவிடுவேன். எனவே என் எழுத்துக் குழந்தையைச் சிதைக்க நான் விரும்பவில்லை.
கடந்த வாரத்தில் என் பதிவுகளை வாசித்து, உலகெலாம் பரந்து வாழும் சகோதர சகோதரிகளிடமிருந்து வந்த பின்னூட்டங்கள், தனி மடல்கள் கணக்கிலடங்கா. இவை எனக்கு ஓராண்டில் பெறும் அனுபவங்கள். மலரக்காவின் நினைவில் அழுதவர்களின் மடல்களை என் கண்களில் கண்ணீர் நிரப்ப வாசித்தேன். வெறும் வார்த்தை ஜாலம் அல்ல இது.
உதாரணம் இந்தப் பின்னூட்டம்:
//At July 08, 2006 7:35 PM, aravin சொன்னவர் இப்பிடி...
HI I CANT TYPE STILL IM IN TEARS .WHAT A HUMAN .MANASU VALIKUTHU PAA .U R NARATION IS ALSO NICE//
தமிழ்மணம் எனக்கு வழங்கிய இந்த அனுபவம் என் வாழ்க்கையில் ஒரு மைல்கல், இதற்காகத் தமிழ்மணத்திற்கு நான் நிறையவே அன்புக்கடன் பட்டிருக்கிறேன்.
சரி, நீங்கள் சொல்லுங்களேன், கடந்த என் பதிவுகளில் உங்களைப் பாதித்தவை, பிடித்தவை, பிடிக்காதவை, எதிர்ப்பவை, எதிர்பார்ப்பவை இவை பற்றி....
இறுதியாக அன்புச் சகோதரி மங்கை தந்த பின்னூட்டத்தை மீண்டும் சமர்ப்பிக்கின்றேன், அவர் குறிப்பிட்ட மனித நேயம் என்பது தான் என் நட்சத்திரவாரத்தில் பெரும்பாலான பதிவுகளில் தொனிப்பொருளாக அமைந்ததும் கூட.
அரவணைப்பு(compassion) நமக்கு ஞானத்தை கொடுக்கும்.
ஞானம் ,அமைதியை கொடுக்கும்.
இந்த அமைதி நாம் இருக்கும் போதும் இறந்த பின்னும்
நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கும்.
இதற்கு பெரிய தியாகம் செய்ய தேவை இல்லை,
பாதிக்கப்பட்டவர்களை நாம் ஆதரவாக அரவணைத்தால் போதும்.
மீண்டும் சந்திப்போம்
நேசம் கலந்த நட்புடன்
கானா.பிரபா
32 comments:
இனிய வாரம் பிரபா... பின்னூட்டப் பதிவு செய்யா விட்டாலும் உங்கள் எல்லா பதிவையும் இந்தவாரம் படித்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான உணர்வு..
அதிக தாக்கம் ஏற்படுத்தியவர்கள், மலரக்காவும் தேவராசண்ணன் வீடும் (வாழை மரக் காலம்)...
சம்பவங்களின் அழுத்தம் ஒரு புறம் இருந்தாலும், உங்கள் விவரணை மிக அருமை..
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
அன்பின் பொன்ஸ்
தங்கள் வரவுக்கும் என் பதிவுகளை வாசித்தமைக்கும் என் நன்றிகள்.
கானா பிரபா,
கடந்த வாரம் மிகுந்த வேலைப்பளுக்கள் காரணமாக உங்களின் எல்லாப் பதிவுகளையும் படிக்க முடியவில்லை. வாழைமரக் காலம், மலரக்காவின் பதிவு, மற்றும் திரையில் புகுந்த கதைகள் ஆகிய பதிவுகளைப் படித்து இரசித்தேன்.மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் சொல்ல வந்த சங்கதியைச் சொல்லியிருந்தீர்கள். மிகுதிப் பதிவுகளை படித்துவிட்டு கருத்துச் சொல்லுகிறேன். நட்சத்திர வாரம் முடிந்தாலும் , நீங்கள் தொடர்ந்து நல்ல பல சங்கதிகளைத் தர வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
வணக்கம் வெற்றி
தங்கள் அன்புக்கும் பாராட்டுதல்களுக்கும் என் நன்றிகள்.
சிலரின் எழுத்தில் மொழியின் அழகும் அனுபவமும் மனதை கொண்டு செல்லும். இத்தகைய அழகு இந்த மொழிக்கு உண்டா என்பது போல இனிமையாகவும் சிந்தனையை தூண்டுவது போலவும் இருந்தது பதிவுகள் அனைத்தும். நன்றி
அருமையான வாசிப்பனுபவம் நிறைந்த அருமையான வாரம் பிரபா.
ரொம்ப நல்லா இருந்தது.
வாழ்த்து(க்)கள்.
நல்லா இருங்க.
வணக்கம் தேன் துளி
தங்கள் அன்பு மடலுக்கு என் நன்றிகள்.
வணக்கம் துளசிம்மா
தங்கள் பரிவான வார்த்தைகளுக்கு என் நன்றிகள்
பிரபா
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றுமே சுவையாக, ரசிக்கக் கூடியதாக, மனதைத் தொடுவதாக.. என்று ஏதோ ஒரு வகையில் எம்மைக் கவர்ந்தன. குறிப்பாக மலரக்காவின் பதிவு மனசைத் தொட்ட பதிவு.
அழகான நேர்த்தியான எழுத்துக்கள்.
நீட்டி எழுதியிருந்தாலும் இடை நிறுத்தி விடாமல் வாசிக்க வைக்கும் சுவாரஸ்யம் கலந்த எழுத்து.
வாழ்த்துக்கள். தொடருங்கள்.
பிரபா!
கனதியான பதிவுகளுடன், மிக நிறைவான வாரமாக அமைந்திருந்தது. பாராட்டுக்கள்
வணக்கம் சந்திரவதனா அக்கா
தொடர்ந்தும் என் பதிவுகளை வாசித்துத் தங்கள் அபிப்பிராயத்தைத் தருவதற்கு என் நன்றிகள்.
வணக்கம் மலைநாடான்
தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.
பிரபா, நட்சத்திர வாரத்தை வெற்றிகரமாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள். நான் முன்னரே சொன்ன மாதிரி உங்கள் பதிவுகள் அனைத்துமே சும்மா சொல்லப்படாது, நட்சத்திரப் பதிவுகள் தான்.
அனைத்துக்குமே பொருத்தமான படங்கள் இன்னும் மெருகூட்டின. ஏன், இன்றைய பதிவிலும் முதல் படத்தில் இருக்கும் குழந்தை அசத்துகிறாள். அந்தப் பின்னல் கதிரை யாழ்ப்பாணத்துக்கே ஒரு முத்திரை தான். எங்கள் வீட்டிலும் இதே மாதிரியான ஒரு பழைய கதிரை கொழும்பு, யாழ்ப்பாணம், கொழும்பு என்று நாலைந்து தடவை ஏறி இறங்கி இன்னமும் கம்பீரமாக நிற்கிறது.
பொன்ஸ் குறிப்பிட்டது போல் மலரக்காவின் பதிவு என்னை அதிகம் தாக்கம் ஏற்படுத்தியது.
தொடர்ந்து உங்கள் முத்தான பதிவுகளைத் தாருங்கள்.
வணக்கம் சிறீ அண்ணா
தொட்ர்ந்தும் என் பதிவுகளை வாசித்து ஊக்கப்படுத்துவதற்கு என் நன்றிகள்.
அந்தப் பின்னல் கதிரை எமது ஈழத்துப் பாரம்பரியங்களில் ஒன்றாகிவிட்டது:-)
படத்தில் இருக்கும் குழந்தை என் நண்பனுடையது.
நட்சத்திர வாரத்தில் வித்தியாசமான பதிவுகளை தந்து... அதை வெற்றிகரமாக நிறைவு செய்த .. கானபிரபாவுக்கு இந்த சின்னக்குட்டியின் வாழ்த்துக்கள்..
தொடர்ந்தும் என்னை ஊக்குவிக்கும் சின்னக்குட்டியருக்கு என் நன்றிகள்
பிரபா நாம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு இருப்பதே நமக்கான
அடையாளம் அது உங்களின் இந்த வாரத்தின் சுவையான படைப்பில்
தெரிகிறது. தொடருங்கள் (மேலும் தொடர வாழ்த்துக்கள்)
செல்வா
toronto
வணக்கம் செல்வா
தங்களைப் போன்றவர்களின் நட்புக் கிடைத்தது இந்த நட்சத்திரவாரத்தின் இன்னொரு சிறப்பு எனக்கு.
பொதுவாக வலைப் பதிவாளர்கள் நிறைய பேர் இருப்பதால் அனைவருடைய வலைப் பதிவுகளையும் படிக்க முடிவதில்லை உங்கள் பதிவுகளை இதே காரணத்தால் அதிகம் படித்ததில்லை. இந்த நட்சத்திர வாரம் ஒரு நல்ல வலைப் பதிவாளரை எங்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தது அதற்காகவும் தமிழ் மணத்திற்கு நன்றிகள்.
வணக்கம் குமரன்
இதற்காக நானும் தமிழ்மணத்திற்கும் உங்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
பிரபா
மிக்க மகிழ்ச்சி....மனம் நெகிழ்ந்து போனேன்
நான் தமிழ்மணத்தில் நுழையவும், இந்த அளவிற்க்காகவாவது எழுத காரணமாக இருக்கும், மனித நேயத்தை " தனது குணமாக" கொண்டிருக்கும் என் நன்பருக்கு இந்த பின்னூட்டம் மூலம் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..
நீங்கள் தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்..
மங்கை
வணக்கம் மங்கை
தங்கள் வருகைக்கு மீண்டும் என் நன்றிகள்.
கானாபிரபா, உங்களது நட்சத்திர வாரம் சிறப்பாகவே இருந்தது என நினைக்கிறேன். நம்புகிறேன்.
உங்கள் எழுத்தின் வலிமை அதன் எளிமையிலும் சொல்லும் விடயங்களிலும் இருக்கிறது. தொடரட்டும். மலரட்டும்.
அன்புடன்,
கோ.இராகவன்
மிகவும் நன்றிகள் ராகவன்
வணக்கம் கானா பிரபா,
தங்கள் வலைப்பதிவினை கடந்த சில வாரங்களாக ஆர்வமுடன் படித்தேன். சில அனுபவங்களை கண் கொண்டு பார்த்தது போல் இருந்தது. விமர்சனம் உடனுக்குடன் பதியமுடியவில்லை. தமிழில் தட்டச்சுவதும் எனக்குப் புதிதாகயால் கிடைக்கும் சொற்ப நேரத்தில் வாசித்து விட்டு போய் விடுவேன்.
நீங்கள் வித்தியாசம் விதியாசமான் பதிவுகளை இட்டு உள்ளீர்கள். மலரக்கக்கா பற்றிய குறிப்பு மனதில் ஆழப்பதிந்தது. அதே சமயம் 'தேரடியில் தேசிகனைக் கண்டேன்! ' பதிவு பழைய சமய பாட ஞாபகங்களை கிளறிவிட்டது.
ஊரில் சொற்ப அளவு தூரத்தில் இருந்திருந்தாலும் உங்களூர் வராத குறையை போக்குகின்றது உங்கள் பதிவுகளில் சில.
நட்புடன்
மூர்த்தி
வணக்கம் மூர்த்தி
தங்களைப் போன்றவர்களின் தொடர்பு கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நட்சத்திர வாரத்தில்
நட்சத்திரங்கள் மின்னின.
அற்புதமான எழுத்து நடை....
வசீகரிக்கும் வார்த்தைகள்.......
அறிந்திருந்தும் அறியாத தகவல்கள்.........
வாழ்த்துகள் பிரபா.
உங்கள் நட்சத்திர வாரத்துக்குள்
எமது பிஞ்சுமனமும்
இடம்பிடித்ததில்
மட்டற்ற மகிழ்ச்சி.........
வாழ்த்துகளும் நன்றியும்.......
நட்புடன்
அஜீவன்
பிரபா...இப்போதுதான் படிக்க முடிந்தது..அனைத்துபதிவுகளும் அருமை...ஒவ்வொன்றாக விமர்சனம் செய்தால் பக்கம் காணாது...
அனைவரும் உங்களை அறிந்துகொண்டது நட்சத்திர வாரத்தில்தான் என்றாலும் - உங்கள் எழுத்துக்கள் தான் எனக்கு முன்பே பரிச்சயமாச்சே...
சரி நாம பெங்களூரில் சந்தித்ததை எப்போ உலாத்தலில் போடப்போறீங்க..? இல்லை நான் போட்டுடவா ?
வணக்கம் அஜீவன்
தங்களைப் போன்ற கலைஞர்களின் படைப்புக்களை அறிந்து, அறிமுகப்படுத்தியதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு.
வணக்கம் ரவி
நீங்க தான் நமக்கு நிரந்தர வாடிக்கையாளராச்சே:-)
என் பதிவுகளைப் படித்துக் கருத்துச் சொன்னமைக்கு மிகவும் நன்றிகள்.
நம்ம பெங்களூர் சந்திப்பு அனுபவத்தை நீங்களே போடுங்களேன், சிறப்பாக இருக்கும்.
நன்றாக முடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் கானா
வணக்கம் ennar
தங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றிகள்.
Post a Comment