Saturday, April 21, 2007
உயரப் பறக்கும் ஊர்க்குருவிகள்
மலையாளத் திரைப்படத்தைத் தியேட்டர் சென்று பார்க்கும் அனுபவம் எனக்கு மூன்றாவது முறையாகப் போன வாரம் வாய்த்தது. முன்னர் கேரள நகரான ஆலப்புழாவில் "ரசதந்திரம்", பின்னர் பெங்களூரில் "வடக்கும் நாதன்" இம்முறை சிட்னியில் "பலுங்கு". இங்கே இருக்ககூடிய மலையாளிகளின் எண்ணிக்கைக்கெல்லாம் தியேட்டர் வைத்துப் படம் போடமுடியாது. அவர்களின் வசதிக்கேற்ப திரையிடும் தமிழ், ஹிந்திப் படங்களைப் பார்த்தால் ஒழிய. என் ஞாபகத்தில் சிட்னியில் திரையிடும் மூன்றாவது மலையாளத் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும். எனவே ஒரு புது அனுபவத்தைப் பெறவேண்டி தியேட்டருக்குப் போனேன். முதல் நாள் மாயக்கண்ணாடி ரிலீஸ் ஆகியிருந்தது. ஏற்கனவே சேரனின் புது கெட்டப்பை ஸ்டில்ஸில் பார்த்து "இது நமக்கு ஆவறதில்லை, இவர் போக்கே சரியில்லை" என்று நினைத்துப் (வரவனை அகராதிப்படி சொந்த செலவில் சூனியம் வைக்காமல்) போகாமல் இருந்தேன். நினைத்தது போல் மாயக்கண்ணாடி குறித்து வரும் விமர்சனங்கள் மெய்ப்பிக்கின்றன.
நூற்றுச் சொச்சம் மலையாளிகள், ஒரு ஈழத்தமிழனுடன் திரைப்படம் ஆரம்பமாகியது. பலுங்கு திரைப்படம் ஏற்கனவே "மம்முட்டியின் "காழ்ச்சா" (இங்கே என் விமர்சனம்), மோகன்லாலின் "தன்மத்ரா" போன்ற அழுத்தமான படங்களைக் கொடுத்து மலையாள சினிமாவில் திறமையான இளம் இயக்குனர்களும் இருக்கிறார்கள் என்று மெய்ப்பித்த பிளெஸ்ஸியின் இயக்கத்தில் வந்திருந்தது. தியேட்டருக்கு என்னை இழுத்துப் போக அதுவும் ஒரு காரணம். பிளஸ்ஸிக்கும் தமிழ் சினிமாவுக்கும் என்ன பொருத்தமோ தெரியவில்லை, இவரின் காழ்ச்சா திரைப்படம் , அநாதைப் பிள்ளையை எடுத்து வளர்க்கும் கதைப்பின்னணியில் வந்தபோது சமகாலத்தில் தமிழில் "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படம் வந்திருந்தது. இப்போது "இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது" என்ற மையப் பொருளில் வந்திருக்கும் பலுங்கு வந்தபோது தமிழில் சேரனின் "மாயக்கண்ணாடி" வந்திருக்கிறது.
பலுங்கு என்றால் ஆங்கிலத்தில் crystal. தற்போது வேகமாக அதிகரித்து வரும் நுகர்வுப் போக்கு, அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் மத்திய தர அல்லது கீழ்த்தட்டு மக்களின் இயல்பு வாழ்வை எப்படிச் சீரழிக்கின்றது என்பதே இந்தத் திரைப்படம் சொல்லும் சேதி. அதாவது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு என்ற அடிப்படைத் தேவை, ஒரு கட்டத்தில் உண்ண இன்னென்ன உணவு, உடை, இருப்பிடம் தான் வேண்டும், வாழ்க்கை இப்படித்தான் அமையவேண்டும் என்று ஆசைப்படும் போது இயல்பை மீறி அமைக்கப்படும் வாழ்க்கை, அது கொண்டுவரும் தேடல்களும், தேவைகளும் தொடர்ந்த முறையற்ற வாழ்வியல் அமைப்புமே இப்படத்தில் தொட்டுச் செல்லும் களங்கள்.
மம்முட்டி, பிளெளஸ்ஸியோடு காழ்ச்சாவிற்குப் பின் இரண்டாவதாக இணைகின்றனார். சொல்லப் போனால் மம்முட்டி ஏற்ற பாத்திரத்திற்க்கு இவர் தான் அளவான சட்டை. கன்னட உலகத்திலிருந்து லக்ஷ்மி சர்மா, காழ்ச்சாவில் கலக்கிய குட்டிப்பெண் நிவேதிதா, மற்றும் ஜெகதி, நெடுமுடி வேணுவும் இருக்கிறார்கள்.
ரப்பர் தோட்டத்தில் உழைத்துப் பிழைக்கும் சாதாரண தொழிலாளி மொனிச்சன் (மம்முட்டி), அவனுடைய தாய், மனைவி, இரண்டு குட்டிப் பெண்களாக இனிமையான குட்டி உலகம் அவர்களுடையது. தான் வாழும் கிராமத்தில் இங்கிலீஷ் மீடியத்தில் கற்றுக்கொடுக்க எந்தப் பாடசாலையும் இல்லையே என்ற ஆதங்கத்தில் நகரத்து ஆங்கிலப் பாடசாலையில் பிள்ளைகளைச் சேர்க்கின்றான். ஒவ்வொரு நாளும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு கொண்டுபோய், மீண்டும் கொண்டுவரும் பொறுப்பும் அவனுக்கு. நகரத்து தொடர்பில் அவனுக்கு கிடைக்கின்றது லாட்டரி தொழில் செய்து நடாத்தும் சோமன் பிள்ளையின் (ஜெகதி) நட்பு. சோமன் பிள்ளையின் தவறான வழி நடத்தலால் கிராம வாழ்வைத் தொலைத்து முழுமையாக நகரத்து வாழ்வில் குடியேறுகின்றது மொனிச்சன் குடும்பம்.
நகர வாழ்க்கை, சொல்லவா வேண்டும். ஆரம்பத்தில் தொலைக்காட்சிப் பெட்டியில் ஆரம்பித்து வாஷிங் மெஷின் வரை அத்தியாவசியமான ஆடம்பரத்தேவைகள் ஒவ்வொன்றாக எழும்புகின்றன. இருக்கவே இருக்கின்றார் சோமன் பிள்ளை (கெட்ட) வழிகாட்ட. கட்டைப் பஞ்சாயத்து, கள்ள நோட்டு புழக்கம் என்று மொனிச்சனின் நடத்தை மாறுகின்றது. இறுதியில் எந்த மகளின் ஆங்கிலப் படிப்புக்காக நகரம் தேடி வந்தார்களோ, அவளையும் தொலைத்து தம் வாழ்வையும் தொலைத்துப் போகின்றது மொனிச்சன் குடும்பம். பளிங்குக் கண்ணாடி பாதரசம் தொலைத்து நிற்கின்றது.
தமிழ் சினிமா இயக்குனர் வி.சேகர் போன்றோர் "வரவு எட்டணா, செலவு எட்டணா" பாணியில் எடுக்கும் படங்களுக்கு மிக அருகில் இந்தக் கதைக்களம் இருந்தாலும் சொல்ல வந்த விஷயத்தை வித்தியாசமாகச் சொல்லமுற்பட்டிருக்கிறார் பிளெஸ்ஸி. ஆனால் ஏற்கனவே நடுத்தர மக்களின் நாகரீக மோகம் பற்றி விலாவாரியாக ஆளுக்கொரு இயக்குனர்கள் பிரித்து மேய்ந்திருப்பதால், இயக்குனர் பிளெஸ்ஸி படத்தில் சொல்லும் விஷயங்கள் அதிகம் ஆட்கொள்ளவில்லை. ஏற்கனவே இப்படியான கதைக்கருவை மிகைப்படுத்தல்களோடு பார்த்துப் பழகிய கண்களுக்கு, இயல்பாகச் சொல்ல முற்படும் விடயங்களும் எடுபடமுடியாமல் போகும் அபாயம் இப்படத்தில் இருக்கிறது.
சுமாராகப் போய்க்கொண்டிருக்கும் இப்படத்தில் அவ்வப்போது வந்து விழும் காட்சித் துளிகள் தான் ஒத்தடம். உதாரணமாக மொனிச்சனின் அப்பாவித்தனமான வாழ்க்கையும், குடும்பத்தினரின் நேசமும்.அடிப்படை வசதியற்ற தன் கிராமத்தில் இருந்தபோது மனைவியின் அருகாமை உணர்வு, பட்டணத்து வாழ்வில் சின்னத்திரையோடு தொலைந்த விதம் காட்டிய விதம், மம்முட்டி எழுத வாசிக்கத் தெரியும் முறை போன்ற காட்சிப்படுத்தல்கள் அழகு.
ரப்பர் மரத்தொழிலாளியாக வாழ்ந்துகாட்டுவதிலும் சரி, விபச்சார விடுதி ஏறி, கள்ள நோட்டடித்து என்று ஒவ்வொரு தப்பாகச் செய்யும் போது மனம் புழுங்குவதிலும் சரி மம்முட்டிக்கு நிகர் எவருமில்லைப் போல. ஆனால் குளேசப்பில் அவரின் முகத்தைக் காட்டும் போது போது வெளிப்படும் தோற்ற முதிர்ச்சி, இந்தக்கலைஞனின் எதிர்காலப் பாத்திரத் தேர்வுகளுக்கு எல்லை போட்டுவிடுமோ என்ற கவலையும் பிறக்கின்றது. இவரின் மனைவியாக வரும் லக்ஷ்மி சர்மாவின் நடிப்பும் அளவு சாப்பாடு.
காழ்ச்சாவில் வந்த பேபி நிவேதிதா, மம்முட்டியின் இரண்டாவது பெண்ணாக வந்து வயதுக்கேற்ற குறும்புத்தனம் செய்வதும் இயல்பு. தன் சகோதரியைத் தொலைத்து அழும் இரவில் சாப்பிடக் கூப்பிடும் போது, "என் அக்காவோடு சேர்ந்து தானே சாப்பிடுவேன்" என்று குமுறும் போது நமக்கும் குமுறல் வருகிறது.
வில்லத்தனமான நகைச்சுவைக்கு ஜெகதியும் பொருத்தமான தேர்வு. ஒரு கட்டம் வரை " நீங்க நல்லவரா? கெட்டவரா? என்று வாய்விட்டுக் கேட்க வேண்டும் போல, பார்ப்பவர் மனதில் குழப்பத்தை உண்டு பண்ணும் பாத்திரத்தை உணர்ந்தே செய்திருகிறார். நகைச்சுவை தனி ட்ராக்கில் பயணிக்காமல் படத்தின் மையவோட்டத்தோடே பயணிக்கிறது.
பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு மம்முட்டி தானும் முதியோர் கல்வியில் சேரும் காட்சிப்படுத்தல் புதுசு. பசு என்ன தரும்? பால் தரும் என்கிறது ஒரு வயசாளி, இன்னொருவர் சொல்கிறார் பசு சாணி தரும்.
இந்தப் படத்தில் இயக்குனரின் எண்ணவோட்டத்திற்குச் சமானமாக உழைத்திருக்கவேண்டியவை ஒளிப்பதிவும் இசையும். ஆனால் படம் பார்த்த அனுபவத்தில் ஒளிப்பதிவாளர் நடுத்தர உழைப்பையே இதில் கொடுத்திருக்கிறார். பல காட்சிகளில் ஒளியமைப்பு ராமநாராயணன் படங்களைப் பார்த்த உணர்வு வருகின்றது.
காழ்ச்சாவிலிருந்து இயக்குனர் பிளெஸ்ஸியின் கூட்டணி இசையமைப்பாளர் மோகன் சித்தாராவும் மூன்று பாடல்களோடு படத்தின் டைட்டிலில் இருந்து ஒரே பின்னணி இசைக்கலவையை மட்டும் கொடுத்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகளுக்கு ஒரே மாதிரியான இசை வந்து விழுகின்றது. இளையராஜாவிடம் கொடுத்திருந்தால் , பல முக்கிய காட்சிகளைப் பேசவைத்திருப்பார் தன் இசையால்.
சில இயக்குனர்களுக்கு ஒரு வியாதி இருக்கும், காட்சிப்படுத்தல்களுக்கான பின்னணி இசையோ, அல்லது பாடல்களோ ஒரே பாணியில் இருக்கவேண்டும் என்பதே அது. பிளெஸ்ஸியும் விதிவிலக்கல்ல. முன்னய படங்களின் சாயலில் பாடல் தெரிவு இருக்கின்றது. ஆனாலும் "பொட்டு தொட்ட சுந்தரி" பாடலின் அமைப்பு ரசிக்க வைக்கின்றது. லாட்டரி வண்டியில் ஆரம்பிக்கும் அந்தப் பாடல் மெல்ல மொனிச்சன் குடும்பத்துப் பாடலாக மாறுவது இனிமை. பாடலைக் கேட்க
சுய புத்தியுள்ள, ஒரு நேர்மையான குடியானவனான மொனிச்சன் தான் தவறு செய்கின்ற சந்தர்ப்பங்களை விட்டு விலகிப் போக ஏன் முடியவில்லை என்பதற்கும், ஆரம்பத்தில் அவனுடைய தாயாக வந்த மூதாட்டிக்கு என்ன நடந்தது என்பதற்கும் படத்தில் நேர்மையான விளக்கமில்லை. மூன்று பாட்டு மட்டும் போதும் என்று அடம்பிடித்த இயக்குனர், படத்தின் காட்சியமைப்பிலும் கத்திரி வைத்திருந்தால் பலுங்கு உண்மையில் பளிங்காயிருக்கும். எடுத்துக்கொண்ட கதைக்கருவை இரண்டு மணி நேரம் சுமாராக எடுத்துவிட்டு இறுதியில் அந்தக் குடும்பத்தில் பலி ஒன்றை கொடுத்து ரசிகர்களிடம் அனுதாபம் தேடும் இயக்குனராக பிளெஸ்ஸி இனியும் இருக்கக் கூடாது. காழ்ச்சா போன்ற படைப்பை எடுத்த எடுப்பில் தந்த உங்களால் முடியும். அடுத்த படம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.
கடந்த 2006 என் தாயகப் பயணத்தில், ஒருநாள் பேச்சுவாக்கில் என் சினேகிதன் சொன்னான், "மச்சான் வெளிநாட்டுக் காசு கிடைத்த சுகம், நிறையச் சனம் இப்ப தோட்டம் செய்யிறதில்லை. முந்தியெல்லாம் தோட்டம் செய்யேக்கை, உரம், எரிபொருள் தட்டுப்பாடு எண்டு ஆயிரம் பிரச்சனை, இப்ப அதெல்லாம் கிடைச்சாலும் தோட்டத்திலை இறங்கி வேலை செய்ய ஆளில்லை" என்று தன் உள்ளக்கிடக்கையைச் சொன்னான்.
புலம்பெயர்ந்து வந்து விட்டு தாயத்தில் இருக்கும் நம்மவரின் போக்கு மீதான விமர்சனம் எவ்வளவு தூரம் எமக்குப் பொருந்தும் என்ற கேள்வி எழுந்தாலும், சில விஷயங்களைப் பேசாமல் இருக்கவும் முடியவில்லை. தம் பிள்ளைகள் இராணுவத்தின் சங்காரத்தில் இருந்து தப்பிப் பிழைக்கவேண்டும் என்ற முனைப்பில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் பெற்றோரில் ஒரு சாரார் முழுமையாகவே அந்த இளைஞனின் சம்பாத்தியத்தில் சார்ந்து போய் சோம்பல் முறிக்கும் சமுதாயம் ஒன்றும் உருவானதைப் பார்க்க முடிகின்றது.
புலம் பெயரும் வரை பயிர்ச்செய்கை பார்த்த தோட்டக்காணி இப்போது தரிசாய் (2006 இல் எடுத்தது)
எனக்குத் தெரிந்த சிலரின் குடும்பத்தில் உடலில் வலுவும், ஆட்களை வைத்து தோட்ட வேலை செய்யக்கூடிய வல்லமையும் இருந்தும் வெளிநாட்டு உண்டியல் பணத்தில் சார்ந்திருக்கும் நிலை. மகன் குளிரில் விறைத்து வெயிலில் வதங்கி, காருக்குள் தூங்கி Drive through வில் சாப்பிட்டு இரண்டு ஷிப்ட் வேலையில் இளமை தொலைக்க, நம் தாயகத்தில் இடம்பெறும் சில தேவையற்ற களியாட்டத்தில் டொலரும் , யூரோவும் கரைகின்றது. போன வார வீரகேசரியில் "அக்சய திருதைக்கு நகை வாங்கலாம்" என்ற ஒரு பக்க விளம்பரம் வந்திருந்தது என் தாயக வாழ்வியல் அனுபவத்தில் முன்னர் அறிந்திராத புதுமையாக இருந்தது இந்த நவீன சடங்கு. வெளிநாட்டுப் பணப்புழக்கம் அதிகரிக்க அதிகரிக்கத் தேவையற்ற சடங்குகளும் நம்மவர்களிடம் ஒட்டிக் கொள்கின்றன.
"யாழ்ப்பாணத்தில் பயிர்ச்செய்கை செய்யப்படாத காணிகளில் கவனமெடுத்து ஏதாவது பயிரை நட்டிருந்தால் இப்போது எதிர் நோக்கும் உணவுத்தட்டுப்பாட்டை ஓரளவு சமாளித்திருக்க முடியும்" என்று சொல்லி வைத்தார் நண்பர் ஒருவர்.
Palunku படங்கள் உதவி: Musicindiaonline.com
20 comments:
//ஒரு ஈழத்தமிழனுடன் திரைப்படம் ஆரம்பமாகியது.//
தனியத் தான் திரியிறியள்.. கொடுத்து வைச்சனியள்..
வந்துட்டாருயா வத்தி வைக்க ;-))
அன்பின் பிரபா,
திரைப்பட விமர்சனத்தின் மொழியை இந்தியத் தொலைக்காட்சிகளின் மொழிச் சாயலில் எழுதுவது ஏன்?
யாழ்ப்பாண மொழியில் எழுதியுள்ள வரிகளைத் தேடியே மனது தாவிச் செல்கிறது.
உங்கள் கட்டுமானப் பணி எப்போது பூர்த்தியாகும்?
ஃபஹீமாஜஹான்
அக்சய திருதைக்கு????
//மகன் குளிரில் விறைத்தை வெயிலில் வதங்கி, காருக்குள் தூங்கி Drive through வில் சாப்பிட்டு இரண்டு ஷிப்ட் வேலையில் இளமை தொலைக்க, நம் தாயகத்தில் இடம்பெறும் சில தேவையற்ற களியாட்டத்தில் டொலரும் , யூரோவும் கரைகின்றது. //
இந்தச் சூழல் தமிழகத்துக்கும் பொருந்தும். புதுகை போன்ற மாவட்டங்களில் இருந்து பெருவாரியான இளைஞர்கள் சிங்கப்பூர் போன்ற நகரங்களில் தங்கள் இளமையைத் தொலைக்க அதன் அருமை தெரியாத குடும்பத்தார், உறவினர் வெற்றுச் செலவுகள், ஆடம்பரங்கள் என்று வாழ்வது வருந்தத் தக்க ஒன்றாகும். எனினும் விவசாயம் குறைவதை முழுதும் வெளிநாட்டுக் காசு வருவதுடன் ஒற்றிப் பார்க்க முடியாது. மாறி வரும் பொருளாதாரச் சூழலில் எளிய விவசாயிகள், பிற வாழ்வாதரங்கள் இருக்கும் நிலையில், விவசாயம் செய்யாமல் இருப்பதே நட்டம் வராமல் இருக்க நல்ல வழியாக இருக்கிறது.
//ஃபஹீமாஜஹான் said...
அன்பின் பிரபா,
திரைப்பட விமர்சனத்தின் மொழியை இந்தியத் தொலைக்காட்சிகளின் மொழிச் சாயலில் எழுதுவது ஏன்//
வணக்கம் சகோதரி
நம்மூர் விஷயங்களைப் பெரும்பாலும் நம்மூர் மொழிவழக்கிலும், சினிமா/பொழுதுபோக்கு போன்றவற்றை இந்தியமொழி வழக்கிலும் எழுதிவருகிறேன்.
காரணம் எடுத்துக் கொண்ட விடயத்தைக் கொடுக்கும் விதம் மூலம் வாசகரை எட்டமுடியும் என்ற காரணமே. இயன்றவரை இனிப் பொதுவான மொழியில் தருகிறேன்.
கட்டட வேலைகள் மே மாதம் 3 ஆம் வாரம் தான் ஆரம்பமாகி முழுமை பெறும், காரணம் வேலைப் பழு ;-)
//சின்னக்குட்டி said...
அக்சய திருதைக்கு???? //
ஓம் சின்னக்குட்டியர், தமிழகத்துக்கு இது வழமையான ஒரு நிகழ்வு என்றாலும், எமக்கென்னவோ வெளிநாட்டுப் பணத்துக்குப் பின் தான் இப்படியான விஷயங்கள் நுளைந்திருக்கின்றன :-(
கானா பிரபா படத்தின் அறிமுகத்துக்கு நன்றி. நீங்கள் சொன்னதன் படி கதை பழங்கதை தான்:) எடுத்த விதம், சந்தர்ப்பங்கிடைத்தால் பார்ப்போம்.
அடுத்தது நீங்கள் சொன்ன யாழ் விவசாயம்.
வெளி நாட்டு பணம் ஒரு காரணம்.
அதற்கப்பாலும் சில பல காரணங்கள் உண்டு.
எமது வியாபாரிகள் செய்யும் அழுங்கு தனமான வியாபார உத்தி ஒரு காரணம்.
அடுத்தது திடமிடல் இன்மை.
கரட், பீற்றூட், கிலோ 10 ரூபாவுக்கும் விற்கமுடியாமல் மாட்டுக்கு வெட்டி போட்ட, அல்லது அறுவடை செய்யாதது அப்படியே விட்ட விவசாயிகளின் கதைகளும் உண்டு. பாடு பட்டு நட்டமடைவதை விட சும்மா இருப்பதே நல்லது.
அடுத்த ஒரு உதாரணம்
உருளை கிழங்கு செய்கை. இங்கு தான் வியாபாரிகள் மோசம் செய்வார்கள். யாழில் உருளை கிழங்கு அறுவடை தொடங்க, தாரளாமாக இறக்குமதி செய்து சந்தையில் விட்டு, விவசாயிகள் வயிற்றில் அடிப்பார்கள். அதன் பின் யார் உருளை கிழங்கு நடுவர்.??? அறுவடை முடிய இறக்குவதையும் குறைத்து விலை பழையபடி ஏறும்
இப்படி நிறைய சொல்லலாம்.
//ரவிசங்கர் said...
எனினும் விவசாயம் குறைவதை முழுதும் வெளிநாட்டுக் காசு வருவதுடன் ஒற்றிப் பார்க்க முடியாது. மாறி வரும் பொருளாதாரச் சூழலில் எளிய விவசாயிகள், பிற வாழ்வாதரங்கள் இருக்கும் நிலையில், விவசாயம் செய்யாமல் இருப்பதே நட்டம் வராமல் இருக்க நல்ல வழியாக இருக்கிறது.//
வணக்கம் ரவிசங்கர்
உங்கள் கருத்தை ஏற்கிறேன், தற்போதைய சூழலில் ஒன்றுக்கு மேற்பட்ட தெரிவுகள் இருப்பவர்களுக்கு விவசாயமே உயிர்நாடி அல்ல.
கூடவே வெளிநாட்டுப் பணப்புழக்கமும் ஒரு காரணியாகவும் அமைகின்றது.
Tanglishil type pannuvathukku mannikkavum.
antha pictureskalai paarkkumpothe padam nandraaga amainthirukkum ena oru feelings. athukku ungge vimarsanam vegu poruththam. Mayakkannadiyai nerrythaan parthen. middle class familyle varum aasaikal endra pazhaiya karuththai konjam viththiyaasamaana baaniyil koduththathu paaraaddakkoodiya vishayamthaan..
intha malayaala padanggalai ingke paarkkurathukku no chance. ungge vimarsam athukku eedu kaddi viddathu. :-)
அருமையாக படத்தின் விமர்சனத்தையும், நிகழ்காலத்தில் நடக்கும் விஷயத்தையும் சேர்த்து பதிவாக போட்டு விட்டிர்களா தலைவா ;)
இன்னும் படம் பார்க்கவில்லை ;)
//வி. ஜெ. சந்திரன் said...
வெளி நாட்டு பணம் ஒரு காரணம்.
அதற்கப்பாலும் சில பல காரணங்கள் உண்டு.
எமது வியாபாரிகள் செய்யும் அழுங்கு தனமான வியாபார உத்தி ஒரு காரணம்.//
வி.ஜே
நீங்கள் குறிப்பிட்ட காரணியும் ஏற்றுக்கொள்ள முடிகின்றது. கூடவே இந்த வியாபாரத்தந்திரத்திற்குத் துணை போவது, திடீர்ப்பணப்புழக்கம்.
//.:: மை ஃபிரண்ட் ::. said...
தங்லிஷில் டைப் பண்ணுவதுக்கு மன்னிக்கவும்.
அந்த பிக்சர்களைப் பார்க்கும்போதே படம் நன்றாக அமைந்திருக்கும் என ஒரு பீலிங்.
அதுக்கு உங்க விமர்சனம் வெகு பொருத்தம். மாயக்கண்ணடியை நேற்றுத்தான் பார்த்தேன். மிட்டில் கிளாஸ் பமிலிலே வரும் ஆசைகள் என்ற பழைய கருத்தை கொஞ்சம் வித்தியாசமான பாணியில் கொடுத்தது பாராட்டக்கூடிய விஷயம்தான்..
இந்த மலையாளப் படங்களை இங்கே பார்க்குறதுக்கு நோ சான்ஸ். உங்க விமர்சனம் அதுக்கு ஈடு கட்டி விட்டது. :-) //
ஒரு மாதிரி உங்க தமிங்கிஷைத் தமிழாக்கிவிட்டாச்சு ;-)
கருத்துக்கு நன்றி, மலேசியாவில் மலையாளப் படங்கள் எடுக்கமுடியாதா? மலேசியத் தமிழ் வானொலியில் மலையாளப் பாடல்கள், மற்றும் ஓணம் சிறப்பு நிகழ்ச்சிகளைக் கேட்டிருக்கிறேன். முயன்று பாருங்கள், கட்டாயம் படங்களை எடுத்துப் பார்க்கலாம்.
படத்தின் ஸ்டிஸ் நன்றாக இருந்ததால் அவ்வளவற்றையுமே எடுத்துப் பதிவில் போட்டுவிட்டேன்.
//கோபிநாத் said...
அருமையாக படத்தின் விமர்சனத்தையும், நிகழ்காலத்தில் நடக்கும் விஷயத்தையும் சேர்த்து பதிவாக போட்டு விட்டிர்களா தலைவா ;)
இன்னும் படம் பார்க்கவில்லை ;) //
வாங்க தல
நீங்க இருக்கும் நாட்டில மலையாளப் படத்துக்கா பஞ்சம். சமயம் கிடைக்கும் போது பார்த்திட்டு எழுதுங்க.
பிளஸ்ஸியின் தன்மந்த்ராவைப் பார்த்துவிட்டுத் தமிழ்ச் சினிமாவைப் பார்த்து வயிற்றெரிச்சல் பட்டேன்.. காரணம் இப்படியொரு கதையைத் தேர்வு செய்யும் பொறுப்பு தமிழ்ச் சினிமா இயக்குநர்களுக்கு மட்டும் ஏன் வருவதே இல்லை என்று.. பிளஸ்ஸியின் திரைப்படங்கள் குழந்தைகள், படிப்பு, வாழ்க்கை என்ற சூழலிலேயே சுற்றுகிறது. இது இயக்குநர்களிடையே அபூர்வம்.. தன்மந்த்ராவைப் போல எடுக்கப்படவில்லையென்பதற்கு காரணம் இரண்டிற்குமே அடிப்படைத் தளங்கள் வேறு வேறு.. அப்பாவியான ஒரு மனிதன் எவ்வாறு சமூகச் சூழலில் சிக்கி பின்னடைகிறான் என்பதைத்தான் பிளஸ்ஸி சொல்ல வந்தார். அதைச் சரியாகவே சொல்லியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். நண்பர் கானா பிரபாவே ஒரு நல்ல சினிமாவின் ரசிகன் என்ற முறையில் தங்களது இந்தப் பதிவு முக்கியமானது. தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..
வாங்க உண்மைத்தமிழன்
பிளெஸ்ஸியின் படங்கள் பார்க்கும் இன்னொரு நண்பரைச் சந்தித்து மகிழ்ச்சி. விரிவான தங்கள் கருத்துக்கும் நன்றிகள்.
வணக்கம்..
உங்கள் இடத்தில் மலயாளப்
படம் எல்லம் வருமா? ம்ம்
விமர்சனத்துக்கு நன்றி
யாழ் விவசாயம்..!!
ம் இப்படி எல்லாம் நடக்குமா?
நேசமுடன்..
-நித்தியா
கானா பிரபா said...
வாங்கோ நித்தியா
நாங்கள் இருக்கிற இடத்தில எல்லாவிதமான படங்களும் வரும் ;-)
யாழ்ப்பாணத்து விவசாயம் பட்டுப் போகக்கூடாது இல்லையா.
வரவுக்கு மிக்க நன்றி
/* எனக்குத் தெரிந்த சிலரின் குடும்பத்தில் உடலில் வலுவும், ஆட்களை வைத்து தேட்டவேலை செய்யக்கூடிய வல்லமையும் இருந்தும் வெளிநாட்டு உண்டியல் பணத்தில் சார்ந்திருக்கும் நிலை. மகன் குளிரில் விறைத்து வெயிலில் வதங்கி, காருக்குள் தூங்கி Drive through வில் சாப்பிட்டு இரண்டு ஷிப்ட் வேலையில் இளமை தொலைக்க, நம் தாயகத்தில் இடம்பெறும் சில தேவையற்ற களியாட்டத்தில் டொலரும் , யூரோவும் கரைகின்றது * /
இதைப் பற்றி ஒரு தனிகட்டுரை வரையலாம். தனிமையில் வாடும் ஈழத்தவர்கள் புலம்பெயர் நாடுகளில் அதிகம்.அந்த கலாச்சாரத்திற்கும் தங்கள் வாழ்க்கையை ஈடுபடுத்த முடியாமல் தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்காய் தம் இளமையை விரையமாக்கிக் கொண்டு தனிமையில் வாடும் எம் இனத்தவருக்கு எப்போது தான் விடிவு வருமோ?
வணக்கம் மதுலா
பதிவை வாசித்து உங்கள் கருத்தை அறியத் தந்தமைக்கும் மிக்க நன்றிகள்.
Post a Comment