அந்தா அந்த பொந்துக்குள்ளை
ஓடிப் போய் ஒளிச்சிடுவார் எங்கட அப்பா"
அண்ணன் காட்டிய திசை கீரிமலைக் கேணிக்குள் இருக்கும் ஒரு பகுதி.
2019 செப்டெம்பரில் அப்பா எங்களை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விட்ட பிறகு நானும், அண்ணாவும், உறவினர்களுமாகக் கீரிமலைக் கடற்கரைக்கு வந்து அப்பாவின் அஸ்தியைக் கரைக்க வந்து, அப்பாவுக்கான கிரியைகளை அங்கே செய்த பின்னர் அந்தக் கேணிக்குள் குளிக்கும் போது தான் அண்ணா அந்தக் கேணிப்பக்கம் உள்ள பொந்தைக் காட்டிச் சொன்னார்.
கீரிமலைக் கடற்கரைக்கு எத்தனையோ தடவை குளிக்க வந்தாலும் இந்த அனுபவம் எங்களுக்கு முதன்முதல் கிடைத்த போது அண்ணாவைப் பார்த்துச் சிரித்து விட்டு உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தேன்.
“பயப்பிடப் பிடாது ஐயா, மனம் தான் பேய்”
என்று அப்பா அந்தக் கேணிக்குள் என்னை இழுத்துப் போய்த் தன் மேல் கிடத்தி விட்டு நீட்டி நிமிர்ந்து நீச்சல் சாகசம் செய்த என் குழந்தைப் பருவத்துக்குப் போனது போல இருந்தது அந்த நேரம்.
அப்பா ஒரு நீச்சல் வீரர். அயலில் ஒரு வீட்டில் வேலை செய்த பெண் விரக்தியால் கிணற்றில் குதித்த போது, எல்லோரும் திக்கற்றுப் போய் நிக்க, அந்த வழியால் வந்த அப்பா பொத்தென்று கிணற்றில் பாய்ந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றிய கதையை அப்பாவின் மரண வீட்டில் யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஒருகாலத்தில் கீரிமலை பஸ் என்று இலங்கைப் போக்குவரத்துக் கழகத்தின் சிவப்பு பஸ் சனி, ஞாயிறு தினங்களில் யாழ்ப்பாணத்தின் மற்றைய பாகங்களில் இருந்து சனத்தை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து கீரிமலையில் வந்து கொட்டும். சனம் எல்லாம் குழந்தைகளாக மாறிக் கேணிப் பக்கம் ஓடுவதும் கடலில் பாய்வதுமாக ஒரே கொண்டாட்டம் தான். அந்தக் காலத்தில் எங்கள் ஊருக்கு இருந்த நீச்சல் குளியல்களில் ஒன்று கீரிமலை மற்றது கசூரினா கடற்கரை. கீரிமலையில் குளித்து விட்டு மண்டபத்தில் வறுத்த கச்சானைக் கொறித்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம். கூவில் பனங்கள்ளுத் தேடிப் போகும் இன்னொரு பகுதி.
"எங்கட அப்பா தன்ர இடுப்புப்பக்கமா முன்னுக்கு இருத்தி நீச்சல் பழக்கிக் காட்டுவார்" அண்ணன் பழைய நினைவில் மூழ்கிப்போனார்.
கீரிமலை, சுற்றுலாப்பயணிகளுக்கான ஸ்தலமாக மட்டுமன்றி இறந்தவர்களுக்குப் பிதிர்க்கடன் தீர்க்கும் பெரும் தலமாகவும் விளங்கிவருகின்றது. எங்கள் ஊரில் இறந்த ஒருவரின் பிதிர்க்கடன் தீர்க்கவெண்ணிக் கீரிமலை புறப்பட்டு சுனாமியால் ஐந்து பேர் காவு வாங்கப்பட்ட செய்தியும் உண்டு.
திருமூலரால் சிவபூமி என்று சிறப்பிக்கப்பட்டது ஈழத் தாயகம்.
வடக்கே யாழ்ப்பாணத்தின் கீரிமலையில் நகுலேஸ்வரம், வட மேற்கே மன்னாரில் திருக்கேதீச்சரம், கிழக்கில் திருகோணமலையில் திருக்கோணேச்சரம், மேற்கே சிலாபத்தில் முன்னேஸ்வரம், தெற்கே காலியில் தொண்டீச்சரம் என்று ஈழத்தின் ஐந்து முனையங்களிலும சிவாலயங்கள் தொன்ம காலத்தில் நிறுவப்பட்டு விளங்கி வருகின்றன.
ஜமத்த முனிவர் தன் முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்ய முடிவு செய்து அதைச் சிறப்பாக நடத்தித் தரும்படி தன் குருநாதர் பிருகு முனிவரிடம் கேட்டார். சிரார்த்த தினத்தன்று எதிர்பாராதவாறு வியாசமுனிவர் ஜமத்த முனிவரின் ஆசிரமத்துக்குப் போனார். ஆசாரியார்களில் முதன்மையான வியாசமுனிவருக்கு முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டுமே என்று ஜமத்த முனிவர் குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டார். சிரார்த்தம் தாமதமாகியது. சீடன் தன்னை அழைத்துச் செல்ல வராததைக் கண்ட பிருகு முனிவர் கீரி உருவம் எடுத்து ஜமத்த முனிவரின் ஆசிரமத்துக்குள் புகுந்தார். அங்கு தன்னிலும் உயர்ந்த வியாச முனிவர் இருப்பதைக் கண்டார். சிரார்த்தத்திற்காகச் சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப்பதார்த்தங்கள் அனைத்தையும் கீரிமுகத்தில் இருந்த பிருகு முனிவர் எச்சில்படுத்திய பின் "இனி உனக்குக் கீரி முகம் உண்டாகட்டும்" என்று ஜமத்த முனிவரைச் சபித்தார். பின்னர் கோபம் தணிந்த நிலையில் கீரிமலையில் உள்ள வாவியில் மூழ்கித் தம்பேஸ்வரப் பெருமானை வழிபட்டால் உன் கீரிமுகம் நீங்கும்" என்று சாப விமோசனம் கொடுத்தார். பிதிர்க்கடனுக்கான உணவுப்பதார்த்தங்கள் எச்சில்படுத்தப்பட்ட நிலை கண்ட வியாசரும் ஜமத்த முனிவருக்கு "உனது குலம் இனி இல்லாமல் போகும்" என்று சாபமிட அவர் கீரி முகம் கொண்ட முனியாக அதாவது நகுல (கீரி) முனியாக மாறிப்போனார். (வரலாற்றுக் குறிப்புக்கள் உதவி: கோபுர தரிசனம் கோடி புண்ணியம் நூலில் இருந்து).
கீரிமலையில் இப்போது யாத்திரீகர் மடத்தை நிறுவி அரும்பணி ஆற்றி வருகின்றார் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்கள். 2017 ஆம் ஆண்டில் நான் தாயகம் போன போது என்னை அங்கு அழைத்துப் போய் ஆசையாக சிவபூமித் தொண்டு நிறுவனத்தின் அருஞ்செயல்கள். ஒவ்வொன்றாகக் காட்டிக் காட்டிப் பேசிய போது இதுவும் ஒன்றாக இருந்தது.
தமிழகத்தில் இராமேஸ்வரம் போன்று இலங்கையில் இறந்தோருக்குப் பிதிர்க்கடன் செய்யும் புண்ணியத் தலங்களில் வடக்கே கீரிமலை போன்று, கிழக்கில் அமிர்தகழி மாமங்கேஸ்வரர் கோயில் சிறப்பாகக் கொள்ளப்படுவது.
இன்று காலை காரில் பயணிக்கும் போது கனேடிய வானொலியில் இன்றைய ஆடி அமாவாசையில் தன் தந்தையை நினைத்து இந்தப் பாடலைக் கேட்டார். கேட்ட நேயர் ஒரு கிறீஸ்தவப் பெண்மணி.
மீண்டும் உள்ளுக்குள் அழுதேன் அப்பாவை நினைத்து.
நூறு கோவில் தேவை இல்லை
தாயும் தந்தையும் போதுமே
ஊரில் உள்ள தெய்வம் எல்லாம்
எங்கள் வீட்டில் வாழுமே
https://www.youtube.com/watch?v=bRKPHd8Oous
அப்பா! நீங்கள் எந்த உலகத்தில் இருந்தாலும்
எங்களோடு தான் இருக்கிறீர்கள்.
ஆழ் உறக்கத்தின் கனவுகளில் அடிக்கடி நீங்கள் வருவீர்கள்
இன்னும் வாருங்கள்
உங்கள் பட்சமுள்ள
பிரபு
கானா பிரபா
28.07.2022
0 comments:
Post a Comment