இன்று ஈழத்தின் முக்கியமானதொரு நாடக நெறியாளர் க.பாலேந்திரா அவர்களது 70 வது பிறந்த தினம். ஈழத்து மேடை நாடக இயக்கத்தின் மிக முக்கியமானதொரு செயற்பாடாக 48 ஆண்டுகளாக நிலைத்திருப்பவர். தமிழ் அவைக்காற்றுக் கழகத்தை நிறுவிய வழியே இந்த நாடக இயக்கம் இன்று புலம் பெயர் சமூகத்திலும் அவர் குழுவோடு பல்வேறு நாடுகளுக்கும் சென்று நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கின்றது.
தமிழ் அவைக்காற்றுக் கழகத்தின் 30 வது ஆண்டு நிறைவில் திரு, பாலேந்திரா அவர்களை ஒரு சிறப்பு வானொலி நேர்காணல் கண்டிருந்திருந்தேன். ஆனால் அதனைத் தற்சமயம் எடுக்க முடியாத சூழல்.
இருந்த போதும், கனடா தாய்வீடு பத்திரிகையில் செப்டெம்பர் 2010 இல் ப.ஶ்ரீஸ்கந்தன் அவர்கள் பகிர்ந்த இடுகையை இன்று மீள் பகிர்வாகத் தருகின்றேன்.
“க.பாலேந்திரா – ஒரு நாடக இயக்கம்” – ப.ஶ்ரீஸ்கந்தன்
தமிழ் நாடகம் உலகத் தரத்திற்கு உயர வேண்டும் என்றும், தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும் என்ற ரீதியிலும் தொடர்ச்சியாக நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றங்கள் செய்து வரும் ஒரு நாடக இயக்கம் க. பாலேந்திரா அவர்- களைப் பதிவு செய்வது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
தன் கல்வி சார்ந்த பொறியியல் துறையில் முழு நேரத் தொழில் செய்துகொண்டு, எந்த அமைப்புகளிடமிருந்தும் நன்கொடை பெற்றுக் கொள்ளாமல், நாடகமே மூச்சாக இயங்கி, இத்தனை வருட காலம் இடைவிடாது நாட- கங்களை நிகழ்த்துவது உலகத் தமிழ் நாடக அரங்கில் நான் அறிந்தவரை இவர் ஒருவராகத் தான் இருக்க முடியும்.
யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பாலேந்திராவிற்கு அங்கு வருடா வருடம் நிகழ்ந்து வரும் சுதேசிய விழா நாடகங்களே ஆரம்ப அனுபவங்களாக இருந்தன. ஆயினும், 1972 கட்டுப்பெத்தை பல்கலைக் களகத்தில் பயிலும் நாட்களில், பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான நுட்பம் சஞ்சிகையின் ஆசிரியராகவும், சங்கத் தலைவராகவும் இருந்தபோது கலைஞர்கள், அறிஞர் களுடன் ஏற்பட்ட தொடர்புகள் ஒரு சீரிய நாடகக் கலைப் பயணத்துக்கு அடிகோலின
இவரை, முதன் முதல் அறியச் செய்தது இவர் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த சுகைர் ஹமீட் அவர்களின் ‘ஏணிப்படிகள்’ என்ற நாடகமாகும். அப்போதைய அரசியல் கூட்டணிகளின் எதிர் பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும் குறியீட்டு முறையில் வெளிப்படுத்தியது. 01.07.1973ல் இராமகிருஷ்ண மண்டபத்தில் மேடையேறிய இந்நாடகம் 74ல் யாழ்ப்பாண தமிழாராய்ச்சி மாநாட்டிலும் மேடையேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
74ல் தாசீசியஸ் அவர்களின் நெறியாள்கையில் அலெக்சி அபுசோவின் ‘பிச்சை வேண்டாம்’, மற்றும் ‘கந்தன்கருணை’ போன்ற நாடகங்- களில் பங்குகொண்ட இவர் கலைவிழா நாடகங்களாக ‘இவர்களுக்கு வேடிக்கை’, ‘கிரகங்கள் மாறுகின்றன’, ‘தூரத்து இடிமுழக்கம்’ போன்றவற்றின் பிரதிகளை ஆக்கி நெறியாள்- கையும் செய்திருந்தார். ஆயினும் 27.10.1976ல் கொழும்பு லயனல்வென்ற் அரங்கில் மேடையேறிய இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை’ நாடகமே இவர் முதன்முதல் தயாரித்து நெறியாள்கை செய்த நாடகமாகும். இதில் இவரும் ஆனந்தராணி அவர்களும் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தனர்.
இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும், உலகில் ஈழத்தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் மேடையேறிய இந் நாடகம் 22.07.2010 அன்று கூத்துப்பட்டறை, மூன்றாம் அரங்கு ஆதரவில் சென்னையில் மேடை- யேறியது நினைவு கொள்ளத்தக்கது. இம் மேடையேற்றத்திலும் பாலேந்திரா. ஆனந்தராணி ஆகியோர் அதேபாத்திரங்களை ஏற்று நடித் தமை அவர்களது கலைவாழ்வின் அர்ப்பணிப்பைச் சிறப்பாகச் சொல்லும்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், இலக்கிய மன்றங்கள் போன்றவற்றிற்காக நாடகங்களை மேடையேற்றி வந்த இவர், தொடர்ந்து நாடக இயக்கத்துக்கு ஒரு அமைப்புத் தேவையெனக் கருதி தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தை 1978இல் ஆரம்பித்தார். இதன் மூலமாக ஈழத்து, தமிழகத்து, மற்றும் இந்தியப் பிறமொழி நாடகாசிரியர்கள், மேலும் பல நல்ல மேற்குலக நாடகாசிரியர்களின் நாடகங்களையும் நேர்த்தியாக மேடையேற்றி வருகிறார்.
குறிப்பாக ஈழத்து நாடகாசிரியர்கள் குழந்தை ம.சண்முகலிங்கம், மாவை நித்தியானந்தன், சி.சிவசேகரம், சி.மௌனகுரு, தர்மு சிவராம், சேரன், செழியன், ச.வாசுதேவன் ஆகியோரின் நாடகங்களையும், தமிழக நாடகாசிரியர்கள் இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை’, ‘பசி’, ந.முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்’, ‘சுவரொட்டிகள்’, ஞான ராஜசேகரனின் ‘மரபு’ அம்பையின் ‘ஆற்றைக்கடத்தல்’, மற்றும் பாதல் சர்க்காரின் ‘ஏவம் இந்திரஜித்’, மோகன் ராகேஷின் ‘அரையும் குறையும்’, கிரிஷ் கர்னாட்டின் ‘துக்ளக்’, ரஞ்சித்ராய் சௌத்திரியின் ‘பாரத தர்மம்’ போன்ற நாடகங்களை தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் மூலமாகத் தயாரித்து நெறிப்படுத்தியுள்ளர்.
இது தவிர, மொழிபெயர்ப்பு மற்றும் தழுவல் நாடகங்களாக டென்னசி வில்லியம்சின் ‘கண்ணாடி வார்ப்புகள்’, ரெக்டின் ‘யுகதர்மம்’, கார்சியா லோர்காவின் ‘ஒரு பாலை வீடு’, செக்கோவின் ‘சம்பந்தம்’, வஸ்லோ காவலின் ‘பிரத்தியேகக் காட்சி + தரிசனம்’, பெக்கற்றின் ‘எப்போ வருவாரோ’ ஏரியல் டோப்மனின் ‘மரணத்துள் வாழ்வு’, இயூன் ஐயனஸ்கோவின் ‘இடைவெளி’, ஹரோல் பின்டரின் ‘போகிற
வழிக்கு ஒன்று’ என்பவற்றை பாலேந்திரா தயாரித்து நெறியாள்கை செய்துள்ளார்.
பாலேந்திராவின் நாடகங்களில், மனித குலத்தின் பொது அவலங்களைச் சொல்லும் பிரெக்டின் ‘யுகதர்மம்’ என்ற நாடகம் யாழ்.கண்ணனின் இசையில் மிளிர்ந்த புதுமையான பாடல்களுடனும் மற்றும் கூத்துவகை ஆட்டத்துடனும் கூடியது. இந்நாடகம் 79 – 80 இல் இலங்கையில் மட்டும் 30 தடவைகள் மேடையேறியது.
‘இயக்கவிதி – 3’, ‘துக்ளக்’ ஆகிய நாடகங்கள் இலங்கை அரசின் தணிக்கைக்கு உள்ளாகின. ‘கண்ணாடி வர்ப்புகள்’ நாடகம் ஆறு நாடகங்- கள் என்ற நூல் அச்சுச் செலவிற்காக யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் பகல், இரவுக் காட்சிகளாக சிறப்பான காட்சி அமைப்புடன் மேடையேறியது. ‘மழை’, ‘அரையும் குறையும்’, ‘கண்ணாடி வார்ப்புகள்’ இலங்கை வானொலியில் ஒலிபரப்பானது மட்டுமல்லாமல் ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகம் இலங்கை ரூபவாகினித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
83 ஆடிக்கலவரத்தின் பின்னர் இங்கிலாந்தில் குடியேறிய இவர் அந்நியச் சூழலில் வாழும் எமது சிறுவர்கள் தமது சுய அடையாளத்தை இனம் காணவும், தன்னம்பிக்கையுடன் ஒரு பலமான அத்திவாரத்தைக் கட்டியெழுப்பவும், தமிழ் மொழியைச் சரளமாகப் பேசிப் பயிலவும் சிறுவர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடாத்தி, தொடர்ச்சியாக சிறுவர் நாடகங்களை மேடையேற்றி வருகிறார். சி.மௌனகுருவின் ‘வேடரை உச்சிய வெள்ளைப்புறாக்கள்’ முதல் இவ்வருட நாடகவிழாவில் மேடை- யேறிய மாவையின் ‘இது ஒரு நாடகம்’ என்று சிறுவர் நாடகங்கள் தொடர்கின்றன.
பிரெக்ற் என்ற பிறமொழி நாடகாசிரியரை ‘யுகதர்மம்’ மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்- தது போல் பல தரமான பிறமொழி நாடகங்களை எமக்கு அனுபவமாக அறியத்தந்தார். எனினும் பாலேந்திரா சுயமொழி நாடகங்களையே அதிகமாக மேடையேற்றினார். மேலும் ஈழத்தவரின் போர்ச் சூழல் குறித்த ‘எரிகின்ற தேசம்’, ‘பாரத தர்மம்’, ‘துன்பக் கேணியிலே’, ‘பெயர்வு’, ‘போகிற வழிக்கு ஒன்று’, ‘மரணத்துள் வாழ்வு’ போன்றன பார்வையாளர்களை நெருடிய நாடகங்களாகும்.
இவரது தமிழ் அவைக்காற்றுக் கழகத்தின் நாடக விழாக்கள் இலங்கை, இலண்டன், நோர்வே, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ்- லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலும் இடம் பெற்றுள்ளன.
கொள்கை என்று எந்தக் குழுவுடனும் இணையாமல் சுதந்திரமாகவும், நேர்மையா- கவும், தனித்துவமாகவும் இயங்கி, எந்நாளும் நாடகத்துக்கான தேடலை யாசித்து நிற்கின்ற இந்தக் கலைஞனின் சக்தி அதீதமானது.
பாலேந்திராவின் ஆரம்ப நாடகமான ‘ஏணிப் படிகள்’ இலிருந்து பெரும்பாலான நாடகங்களை நேரிடையாகவும், பல சிறுவர் நாடகங்களை வீடியோவிலும் பார்த்தவன் என்ற ரீதியில் ஒரு குறிப்பைச் சுருக்கமாகச் சொல்லமுடியும். “இவரது நாடகங்கள் எனது மனவெளியில் என்றும் ஜீவிதமாக இருப்பவை”.
பாலேந்திராவின் நாடகங்களில் பார்வையாளர்களுக்கும் நடிகர்களுக்குமான உறவு பலமாக இருந்து கொண்டிருக்கும். எப்போதும் ஒரு உயிர்நிலை பேணப்படும். ஒரு கணம் சரிந்தாலே வீழ்ந்து போகக் கூடிய “மழை” என்ற நாடகத்துடன் இரு மணி நேரமாக எங்களைக் கட்டிப்போட்டு வைப்பதை உதார- ணமாகக் குறிப்பிடலாம். ‘கண்ணாடி வார்புகள்’ - டொம், மழை – அண்ணன் பாத்திரங்கள் இவரது நடிப்புக்குப் புகழ் சேர்த்தவை. ஆயினும் ‘பசி’யில் இவரது நடிப்பு அபாரமாக இருக்கும். இவரது நாடகங்களில் இசை, ஒளி என்பன முக்கிய பாத்திரங்களாக அமையும்.
‘முகமில்லாத மனிதர்கள்’, ‘யுகதர்மம்’ மற்றும் அனைத்துச் சிறுவர் நாடகங்களிலும் இசையும், பாடல்களும் நிறைந்து காணப்படும். ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தின் பிற்பகுதியில் இவர் கையாண்ட ஒளி அமைப்பும், இளையோடிய இசையும் பார்வையாளர்களை அவ்விரு நாடகப்பாத்திரங்களின் உலகிற்கு அழைத்துச் சென்றதை மறக்கமுடியாது.
எல்லாவற்றுக்கும் மேலாக மனிதநேயத்துடன் மனித அவலங்களைச் சொல்கிற, எமது வாழ்க்கை அனுபவங்களோடு ஒட்டியதான இவரது நாடகத் தெரிவுகள் பிரசித்தமானவை.
இவ்வாறு நாடகக் கலையின் சகல பக்கங்களிலும் ஆற்றல் பதித்த இந்த மாபெரும் கலைஞன் “நாடகம் என்பது கூட்டு முயற்சி. தனது துணைவியார் ஆனந்தராணி மற்றும் சக நடிகர்கள், இசைக் கலைஞர்கள், காட்சி அமைப்பு உதவியாளர்கள், நாடக ஆசிரியர்கள் என்பவர்களால் தான் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் இயங்கமுடிகிறது” என்று சொல்லும் எளிமையான மனிதர். பழகுவதற்கு மென்மையானவர்.
பாலேந்திரா, அவரது நாடகங்கள், அவர் சார்ந்த கலைஞர்கள் என்று ஒரு புத்தகமே எழுதலாம். இப்பக்கத்தில் இவை மட்டுமே எனக்குச் சாத்தியமாயிற்று.
க.பாலேந்திரா நெறிப்படுத்திய நாடகங்கள்
இலங்கையில் (1-23) புலத்தில் (24-62)
01 இவர்களுக்கு வேடிக்கை 1974
02 கிரகங்கள் மாறுகின்றன 1974
03 தூரத்து இடி முழக்கம் 1976
04 மழை 1976
05 பலி 1978
06 நட்சத்திரவாசி 1978
07 ஒரு யுகத்தின் விம்மல் 1978
08 கண்ணாடி வார்ப்புகள் 1978
09 பசி 1978
10 புதிய உலகம் பழைய இருவர் 1978
11 ஒரு பாலை வீடு 1979
12 இடைவெளி 1979
13 யுகதர்மம் 1979
14 நாற்காலிக்காரர் 1979
15 முகமில்லாத மனிதர்கள் 1980
16 திக்கு தெரியாத காட்டில் 1980
17 இயக்க விதி -3 1980
18 சுவரொடடி; கள் 1980
19 சம்பந்தம் 1980
20 அரையும் குறையும் 1981
21 மூன்று பண்டிதர்களும் காலம்-
சென்ற ஒரு சிங்கமும் 1981
22 துக்ளக் 1982
23 மரபு 1982
24 வார்த்தையில்லா நாடகம் 1983
25 பார்வையாளர்கள் 1985
26 எரிகின்ற எங்கள் தேசம் 1986
27 வேடரை உச்சிய-
வெள்ளைப்புறாக்கள் 1991
28 பாரத தர்மம் 1991
29 பிரத்தியேகக்காட்சி 1991
30 தரிசனம் 1991
31 தப்பி வந்த தாடி ஆடு 1992
32 துன்பக் கேணியிலே 1992
33 நம்மைப் பிடித்த பிசாசுகள் 1993
34 இரு துயரங்கள் 1993
35 ஐயா இலெக்சன் கேட்கிறார் 1994
36 போகிற வழிக்கு ஒன்று 1994
37 மலைகளை-
அகற்றிய மூடக்கிழவன் 1996
38 ஆற்றைக் கடத்தல் 1996
39 எப்போ வருவாரோ 1997
40 அயலார் தீர்ப்பு 1997
41 அவசரக்காரர்கள் 1997
42 மெய்ச்சுடரே 1997
43 பெயர்வு 1998
44 ஒரு பயணத்தின் கதை 1998
45 பரமார்த்த குருவும் சீடர்களும் 1999
46 பார்வைக் கோளாறு 2000
47 காத்திருப்பு 2001
48 வேருக்குள் பெய்யும் மழை 2002
49 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 2003
50 அவன்.அவள் 2003
51 திக்கற்ற ஓலம் 2003
52 பெருங்கதையாடல் 2004
53 அரசனின் புத்தாடை 2004
54 சர்ச்சை 2006
55 மலைகள் வழிமறித்தால் 2006
56 பாவி 2007
57 எல்லாம் தெரிந்தவர்கள் 2008
58 மரணத்துள் வாழ்வு 2009
59 படிக்க ஒரு பாடம் 2009
60 ஒற்றுமை 2010
61 இது ஒரு நாடகம் 2010
62 தர்மம் 2010
மேலதிக வாசிப்புக்கு
மல்லிகை அட்டைப்பட ஆளுமை
ஈழத்து தீவிர நாடகத்துறையின் கணிப்புக்குரிய நெறியாளர் திரு.க. பாலேந்திரா
நுட்பம் 1973
நாடகவிழா 1991.06.22
யுகதர்மம்: நாடகமும் பதிவுகளும்
நன்றி :
ப.ஶ்ரீஸ்கந்தன் , தாய்வீடு பத்திரிகை (கனடா)
நூலகம்.கொம்.
க.பாலேந்திரா ஃபேஸ்புக் தளம் (படங்கள்)
ஈழத்து நாடக நெறியாளர் திரு. க.பாலேந்திரா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
0 comments:
Post a Comment