அடுத்த வாரம் சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என்று கணக்குப் போட்டிருக்க, கணக்காக சிட்னியில் பொது முடக்கமும் வந்து சென்றது. ஒற்றைப் படை இரட்டைப்படை, முப்படை, நாலிலக்கம் என்று கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்க, அந்தா இந்தா என்று நான்கு மாதம் கடந்து இன்று தான் சிட்னியைத் திறந்திருக்கிறார்கள். மொத்தமாக ஐந்து மாதங்கள் கத்தரி படாத தலை.
இடைப்பட்ட காலத்தில் என் தலை முடியும் கிசு கிசுவென்று எல்லாப் பக்கமும் வளர்ந்து விட்டது. கிரீமிலிருந்து, கழிவு ஒயில் தவிர மீதி எல்லா எண்ணெயும் போட்டுத் தலையைத் தடவித் தடவினாலும் அதுவோ சுருட்டினாலும் வளைந்து நெளிந்து கெம்பிக் கிடக்கும் ஓலைப் பாய் பொல எல்லாப் பக்கமும் தோகை விரித்துக் கொண்டிருக்கும். அந்தக் காலத்துப் பட்டிக்காடா பட்டணமா காலத்துச் சிவாஜியின் தலை போல, அல்லது இன்னும் கொஞ்சம் தள்ளி வந்து தொண்ணூறுகளில் உத்தமராசா பிரபுவின் தலைமுடி போலக் கெம்பிக் கொண்டு கிடக்கும். செல்ல மகளும் தன்னிடம் இருக்கும் தலையலங்காரக் கிரீடம், ரப்பர் பாண்ட் எல்லாம் அப்பாவின் தலையில் இறுகக் கட்டி ஒரு விளையாட்டு மைதானம் ஆக்கி விட்டார்.
எப்படியப்பா தலை முடியை இப்படி வளர்த்துத் தொலைக்கிறார்கள் என்ற ஆச்சரியமும், எரிச்சலும் வந்து முளைத்தது. காரணம் இல்லாமலில்லை, தொட்டிலில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பது போல நினைவு தெரிந்த நாளில் இருந்தே
“பெடியனுக்கு நேவிக் குறொஸ் வெட்டி விடுங்கோ”
என்ற அப்பாவின் அன்புக் கட்டளையை மந்திரமாக நெஞ்சில் பதித்து, நான் சலூன் போகும் போதெல்லாம் சபா அண்ணை தொடங்கி அவரின் கடைசித் தம்பி வரை ஏன் அவர்களின் கத்தரிக்கோல் வரை என் தலைக்கு என்ன தேவை என்றே தீர்மானித்தார்கள். தலை நன்றாக மழிக்கப்பட்ட தேங்காய்ச் சிரட்டை போல இருக்கும்.
அதுவே யாழ்ப்பாணம் கடந்து கொழும்புக்கும், கொழும்பு கடந்து மெல்பர்னுக்கும், மெல்பேர்னில் இருந்து இப்போது சிட்னிக்குமாகக் கூடவே ஒட்டிக் கொண்ட சிகையலங்காரமாகி விட்டது.
“கன்னப்பாட்டுக்குத் தானே தலை சீவுவியள்” என்று என் தலையைப் பார்க்கும் புது ஆளே கேட்குமளவுக்கு அச்சடித்த சிகையலங்காரமாகி விட்டது.
அந்தக் காலத்தில் பள்ளிக்கூடம் போகும் போது காதை மூடி எல்லாம் தலைமயிர் வளர்த்தால் தன் மூங்கில் பிரம்பாலேயே தேவராஜா மாஸ்டர் நோண்டி
என்னடா புறாக்கூடோ?”
என்று சகபாடி விக்னேஸ்வரனைக் கேட்டதெல்லாம் மின்னி மறைந்தது.
“கிளாலிப் பாதை திறந்தாச்சாம்”
என்ற காலம் தொட்டு எல்லா வித போர்க்கால அனுபவங்களையும் கண்டு “கழித்த” எனக்கு இந்தப் பொது முடக்கம் ஒன்றும் புதிதல்ல. அதை விட சிட்னியைத் திறந்து விடும் இன்றைய நாளில் வகை, தொகையில்லாமல் கொரோனா கேஸ் கூடப் போகுதோ என்ற அச்சமும் இருந்தது. ஆனாலும் “தலைக்கு மேல்” இருக்கும் காரியமோ எரிச்சல் பண்ணிக் கொண்டிருந்தது.
விடிய வெள்ளணவே நான் வழக்கமாகப் போகும் சிகையலங்கார நிபுணருக்கு அழைத்தால்,
“இங்கே இப்போதே நான்கு பேர் நிற்கிறார்கள்
நீங்கள் வரும் போது எட்டு ஆகிவிடும்,
ஒரு டோக்கன் தருவோம் காத்திருங்கள்”
என்று விட்டு டொக்கென்று வைத்தார் அம்மணி.
வேலை முடிந்த பின் போவோம் என்று நினைத்து விட்டு ஐந்தரை மணிக்கு அங்கே போனால் பத்துப் பேர் நின்றார்கள். கடை பூட்டும் நேரமாம். இந்தப் பத்தைக் கரை சேர்க்கவே பத்தரை ஆகி விடுமே.
சரி மீண்டும் என் வழிப் பயணத்தில் இன்னொரு சிகையலங்கார நிலையத்துக்கு அழைத்தால்
“இந்தத் தொலைபேசி எண்ணே உபயோகத்தில் இல்லை” என்று
பதிலுரைக் கருவி சொல்லி விட்டு ஓய்ந்தது.
ஆபத்து அந்தரத்துக்குப் போகும் துருக்கிக்காரனின் சிகையலங்கார நிலையத்துக்குப் போவோமா என்று மனம் சொல்லிப் பார்த்தது.
ஆனால் அவன் சுடுதண்ணி,
“மாதம் ஒரு தடவை தலை முடி வெட்ட வேண்டும்
இந்தக் காட்டை எல்லாம் என்னால் அழிக்க முடியாது”
என்று அவன் சினந்து கொண்டே என் சிரச்சேதம் செய்த அனுபவத்தை இடது பக்க மனம் சுட்டிக் காட்டியது.
வரும் வழியில் இன்னும் தள்ளி ஒரு வட இந்தியரின் கடை, அது முட்டி வழிந்து ஊர்க் கூப்பன் (ரேஷன்) கடை கணக்காக இருந்தது.
மாதக்கணக்கில் அடைபட்ட குருவிகளைத் திறந்து விட்டது போல.
“ஆ நம்முடைய தமிழர் கடைகள் இருக்கும் இடம் போய்ப் பார்ப்போம் அங்கே மூன்று கடை இருக்கு அதில் இரண்டில் சனம் குவிஞ்சிருக்கும், மூன்றாவது ஒரு மூலையில் இருக்கு அவனின் கெட்ட நேரம் சிட்னிப் பொது முடக்கத்துக்குச் சில மாதம் முன் தான் திறப்பு விழாவே நடந்தது, சரி அங்கே போவோம்”
என்று அங்கு போனால் அங்கும் ஐந்து பேர் காத்திருக்கிறார்கள் இரண்டு பேரின் சிர(ம) தானம் நடக்கிறது.
அந்தச் சிறு கடையில் ஐந்து பேரைத் தாண்டி உள்ளே களஞ்சிய அறைக்குப் போகச் சொன்னார்கள். ஆறாவதாக இன்னொரு சீனர் அங்கே இருந்தார்.
சரியாப் போச்சு என்று விட்டு அங்கிருந்தே எட்டிப் பார்த்தால்
மேலே அகலத் திரையில் “கண்ணும் கொள்ளையடித்தால்” படம் ஓடுது. அதன் ஒலி அமுக்கப்பட்டு
“என் உச்சி மண்டேல சுர்ருங்குது”
சத்தமாகத் தமிழ்ப் பாட்டு ஓடுது. அங்கே இருக்கும் சீனருக்கும், வட இந்தியப் பெருமக்களுக்கும் கண்ணுக்கும் விருந்தில்லை, காதுக்கும் மருந்தில்லை. முகமூடி மனிதர்களோடு நானும் ஒரு முகமூடியாக.
நினைவு ஒரு பக்கம் ஊர்ப்பக்கம் போனது.
இணுவிலில் ரஜினி’ஸ் சலூன் என்று சபா அண்ணை புதிய சலூன் கட்டடத்தை அப்போது கட்டி முடித்திருந்தார். கன்ன வகிடு எடுத்த “தர்மயுத்தம்” காலத்து கண்ணாடி ரஜினிகாந்த் தான் அந்த சலூனின் கண்ணாடிச் சட்டத்தில் முழுமையாக ஆக்கிரமித்திருந்தார்.
நாவிதர்கள் வீடு வீடாய்ப் போய் கடமையாற்ற முடியாது. முன்பு போல முகச்சவரம் செய்யக் கூட விடியக் காத்தாலை பண்ணக்கார வீடுகளுக்குப் போக ஏலாது.
எல்லோரும் சமன், சலூனுக்குப் போய்த் தான் சிகையலங்காரம் செய்ய வேண்டும்”
இப்படி ஒரு நடைமுறையையும் அந்த நேரம் விடுதலைப் புலிகள் கொண்டு வந்தார்கள்.
சபா அண்ணரின் கடையில் கூட்டம் அலை மோதும்.
“ஈழ நாடு” பேப்பர் பார்க்க வருபவர்கள் ஒரு பக்கம், வாடிக்கையாளர் ஒரு பக்கம் என்று ஒரு பேப்பரின் பக்கங்கள் தனித்தனியாக ஒவ்வொருவர் கையிலும் இருக்கும்.
ஒருவர் “இப்படியும் நடக்கிறது” படித்துச் சிரிப்பார்.
இன்னொருத்தர் அரசியலில், அப்படியே அரசியல் விமர்சனமும் சூடு பிடிக்க, சபா அண்ணை மெல்ல றேடியோவின் சத்தத்தைக் கூட்டி விடுவார்.
“தலையைக் குனியும் தாமரையே
உன்னை எதிர் பார்த்து வந்த பின்பு வேர்த்து”
எஸ்.ராஜேஸ்வரியும், எஸ்பிபியும் இளையராஜா காலத்தில் பாட தொடை தட்டிக் கண் மூடித் தாளம் போடுவார் தியாகராஜ பாகவதர் காலத்து பொன்னுத்துரைப் பெரியப்பா.
“தம்பி ! இன்னும் எத்தினை பேர் இருக்கினம்
தலைமயிர் வெட்ட?”
ஒரு சத்தம் கேட்டு என் நினைவு கலைந்து வெளியே எட்டிப் பார்த்தேன். இரண்டு பிள்ளைகளுடன் ஒருத்தர் வந்திருக்கிறார்.
“ஏன் பார்க்கத் தெரியேல்லையோ” என்று மனம் எரிச்சல் பட்டது.
பெடியனுக்கு ஒரு ஐந்து வயசிருக்கும், பெண்ணுக்கு இரண்டு வயசைக் கூட்டிப் பார்க்கலாம், வூல்வேர்த்ஸ் இன் பச்சைத் துணிப் பைக்குள் ஏதோ அடைத்துக் கையில் வைத்துக் கொண்டு அந்தத் தந்தையார். அப்போது தான் உழைத்துக் களைத்து விட்டு ஓடி வந்ததை முகம் காட்டிக் கொடுத்தது. சட்டையின் முன் பொத்தானும் போடாது ஏதோ கூடையில் மாட்டுப் பட்டது போல தோற்றம்.
இடையில் ஒருவர் எழும்ப நானும் பின்னறையில் இருந்து ஓடிப் போய் அந்தக் கூடத்தில் அந்த இடத்தில் இருந்து கொண்டேன்.
“ஆ ! அந்த அறைக்குள்ளையும் ஆட்களோ”
இன்னும் உரத்துப் பேசிக் கொண்டே
“தம்பி நீ அதில போய் இரு
தங்கச்சி நீ வா”
என்று ஓர இருக்கைப் பக்கம் தகப்பன் இழுத்துப் போகவும்
பையனோ அடம் பிடித்துக் கொண்டு அக்காக்காரிக்குப் பின்னால் ஓடினான். அவளும் தம்பின் தலையை வாரி விட்டாள்.
“தம்பி ! இந்த ஸ்ரைலில் பெடியனுக்கு வெட்டி விடும்”
தன் செல்போனில் இருந்த படத்தைக் காட்டவும், இன்னொருவருக்குப் பரபரப்பாக முடி வெட்டிக் கொண்டே
“ஓமண்ணை ஓமண்ணை” என்று சிரித்து தலையாட்டினான் அந்த இளைஞன்.
இன்னும் கொஞ்சம் தள்ளிப் போய் தன் வயதை ஒத்த அடுத்த சிகையலங்கார நிபுணரோடு பேச்சுக் கொடுக்கிறார். அவரும்
“சிக் சிக்” என்ற கத்தரி வேகத்தோடு பேசிக் கொண்டே தன் கடமையைச் செய்கிறார்.
“இந்தாள் ஏன் குசுகுசுக்குது? எங்களுக்கு முன்னம் தானே இடம் பிடிப்பமென்றோ?”
என்று அற்ப மனம் கூவியது.
“இருந்துட்டுப் போகட்டுமே? அடுத்த கிழமை பள்ளிக்கூடம் தொடங்குது பாவம் அதுதான் பிள்ளைக்கு வெட்டி விட வந்திருக்கிறார், சின்னப் பிள்ளை தானே? எங்களுக்கு முன்னம் போனால் என்ன?”
இன்னொரு மனம் சொல்லியது.
நாணயத்துக்கு இரண்டு பக்கம் போல மனச்சாட்சிக்கும் இரண்டு போல.
எப்படா தலை முடியை வெட்டி விட்டு வீட்டுக்கு ஓடுவோம் என்ற பதைபதைப்பில் இருக்கையில் இந்தாள் கதைச்சு வேற எரிச்சல் படுத்துது என்று மனம் புழுங்கியது. மறுபடியும் வேதாள மனம்.
இன்னும் என்ன அப்பிடிக் குசுகுசுப்பு அவையளை வேலை செய்ய விடாமல்? என்று எரிச்சல் எரிச்சலாக வந்தது அந்தாள் மேல்.
திடீரென்று
“என்ன?
விடியத் தொடங்கிச் சாப்பிடாம
வேலை செய்யிறளோ?
கொஞ்சம் உரக்கவே கத்திப் பேசுது மனுசன். பிறகு சத்தத்தைக் காணவில்லை.
சரி என் முறையும் வந்து விட்டது. நான் ஆசனத்தில் உட்கார்ந்து விட்டுத் தலையைக் கொடுக்கிறேன். என் தலைக்காடு அழிக்கப்பட்டுக்க் கொண்டிருக்கும் மும்முரத்தில் அதே குரல் மீண்டும்
“இந்தாரும் தம்பி!
அதை விட்டுட்டு இந்தக் கோப்பியைக்
குடிச்சுப் போட்டு வேலையைச் செய்யும்”
திரும்பிப் பார்க்கிறேன். வாசலடியில் இரண்டு கையில் கோப்பிப் பானம். பச்சைப் பை கீழே வைக்கவும் இடமில்லாமல் கைப்பக்கம் ஓடி விளையாடுது. அந்த இருவரும் சாப்பிடாமல் வேலை செய்கிறார்கள் என்று உறைத்ததும் ஓடிப் போய் நீராகாரமாவது குடிக்கட்டும் என்று கொண்டு வந்திருக்கிறார்.
“ஓமண்ணை”
என்றுவிட்டுச் சிரித்துக் கொண்டே வேலையில் இருந்த பெடியனை இழுக்காத குறையாகக் கூப்பிட்டுக் குடிக்க வைக்கிறார்.
“வெறு வைத்தோட வேலை செய்யப்படாது கண்டியளோ”
முடி வெட்டத் தலையைக் குனிந்திருந்தவன் வெட்கத்தில் குறுகிப் போனேன்.
இரண்டு குவளையையும் கை மாற்றி விட்டுத் தன் கைப் பையைக் கையடியில் கொழுவிக் கொண்டே தாண்டித் தாண்டி ஒரு தும்புத் தடியை எடுத்துச் சிதறிப் பரவியிருந்த தலை மயிர் துகள்களை கூட்டி ஒருக்களித்து கூட்டமாக்குகிறார்.
“தம்பி ! வயசாளி ஒருத்தர் வாறார் எழும்பி இடம் குடுங்கோ”
தன் ஐந்து வயசு மகனை அதட்டி எழுப்பி விட்டு வந்தவருக்கு இடம் கொடுக்கிறார்.
என் தலை முடி வேலை முடிந்தது. ஆசனத்தில் இருந்து நிலம் பதிக்கிறேன். என் பாதணிகளை ஊடுருவி முள் முடிகள் குத்துவது போல வலித்தது.
அவரைப் பார்த்து அப்போது தான் சினேகமாகச் சிரித்தேன்.
“ஓம் ஓம் நல்லது நல்லது”
என்று தலையாட்டி விட்டு நிலத்தில் மீதியிருக்கும் தலைமயிர்க் கற்றைகளை ஓரம் கட்டுகிறார் அந்த மனிதர்.
“யாவும் உண்மை கலந்த கதை”
கானா பிரபா
11.10.2021
0 comments:
Post a Comment