Wednesday, August 29, 2007
குருக்கள் வளவில் எழுந்த கந்தவேள் கோட்டம் - பன்னிரண்டாந் திருவிழா
சிங்கை ஆரியச் சக்கரவர்த்தியின் முதன் மந்திரியாகவிருந்த புவனேகபாகு முதன் முதலில் அமைத்த கந்தசுவாமி கோயில் இருந்த இடத்தில் மீளவும் ஆலயம் அமைக்க கிருஷ்ண சுப்பையர் விண்ணப்பித்தார். அதற்கு ஒல்லாந்தர் ஆட்சிககாலத்தில் சிறாப்பராகவிருந்த தொன்யுவான் மாப்பாண முதலியார் தமது பதவி காரணமான செல்வாக்கைப் பயன்படுத்தி, நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை மீண்டும் கட்டுவதற்கு உத்தரவு பெற்றார் என்று குலசபாநாதன் தனது நூலில் குறிப்பிடுகின்றார். ஒல்லாந்த ஆட்சியாளர்களை இதனை அனுமதிக்க இரண்டு காரணங்கள் இருந்துள்ளன என ஊகிக்கலாம்.
ஒன்று,
கிறீஸ்தவ தேவாலயத்துக்கு அருகிலிருக்கும் கந்த மடாலயத்தை அவ்விடத்தினின்றும் அகற்றும் நோக்கம்
இரண்டு,
தமது வர்த்தகப் போட்டியாளராகவிருந்த முஸ்லீம்களைக் குருக்கள் வளவிலிருந்தும் அகற்றும் நோக்கம்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை மீள நிறுவுவதில் கிருஷ்ண சுப்பையரும் இரகுநாத மாப்பாண முதலியாரும் முனைப்பாகவிருந்து ஊர் ஊராகச் சென்று நிதி திரட்டினர். கோயிலை மீள அமைப்பதற்குரிய குருக்கள் வளவில் முஸ்லீம்கள் அப்போது குடியிருந்தார்கள்.
அந்நிலத்திற்குப் பெரும் விலை தருவதாகச் சொல்லி முஸ்லீம்களை இறஞ்சியபோது அவர்கள் தங்கள் நிலத்தை விற்றுவிட்டு, நாவாந்துறைக்குக் கிழக்கேயுள்ள இடத்தை வாங்கிக்கொண்டு அங்கே குடியேறினார்கள் என்று ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை தன் யாழ்ப்பாணச் சரித்திரத்தில் குறிப்பிடுகின்றார்.
Origin/Meaning:
The arms show the very typical Palmyra palm, an important tree for the local economy at the time. A Tamil poem describes the 801 uses of the tree... The helmet was also used by the city of Jaffna and indicates that these cities were of high importance to the colony (after Colombo).
When the above arms were adopted is not known. The above image dates from a manuscript dating from 1717/1720.
இந்த டச்சுக்காலத்து (ஒல்லாந்து) இலட்சணையின் தமிழ் விளக்கம் யாதெனில்
இது யாழ்ப்பாணப் பிரதேசத்தின் முக்கிய உள்நாட்டு வருவாயைத் தரக்கூடிய பனைமரம் தாங்கியது. ஒரு தமிழ்ப்பாடலின் படி இந்த மரத்தின் மூலம் 801 வகையான பயன்பாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விலட்சணையில் பொருந்தியிருக்கும் தலைப்பாகை, கொழும்புப் பிரதேசத்துக்கு ( கோட்டை இராச்சியம்) அடுத்து யாழ்ப்ப்பாணப் பிரதேசம் காலணித்துவ ஆட்சியில் முக்கியமானதொரு இடத்தை வகித்திருப்பதைக் குறிக்கின்றது. இவ்விலட்சணையின் பகுதிகள் எப்போது அறிமுகப்படுப்படுத்தப்பட்டது என்ற விளக்கம் அறியப்படவில்லை. இவ்விலட்சணை 1717/1720 காலப்பகுதியில் பதியப்பட்ட எழுத்துப் பிரதியில் எடுக்கப்பட்டது.
நான்காவது தடவையாக அமைக்கப்பட்ட ஆலயம் அவ்விடத்தில் அமைந்திருந்த யோகியாரின் சமாதிக்கு அருகில் நிறுவப்பட்டது. யோகியாரின் பெயர் சிக்கிந்தர் என்பர், இவரை அக்காலத்தில் வாழ்ந்த முஸ்லீம்களும் போற்றினர். இரு மத மக்களும் அவரை வழிபட்டனர். போர்த்துக்கேயருக்கும், தமிழ்ப்படை வீரர்களுக்கும் குருக்கள் வளவில் நிகழ்ந்த யுத்தத்தில் இவர் இறக்க நேர்ந்தது. குருக்கள் வளவுச் சுற்றாடலில் அக்காலத்தில் வாழ்ந்த முஸ்லீம்கள் அந்த யோகியாருக்கு ஒரு சமாதி கட்டி வழிபட்டனர். மீள அமைக்கப்பட்ட கோயிலின் உள்வீதியில் இச்சமாதி அகப்பட்டபடியால் சமாதியை வழிபட முஸ்லீம்கள் அனுமதி கேட்டார்கள். அவர்கள் கலகம் செய்யாதிருக்கக் கோயிலின் மேற்கு வீதியில் வாயில் வைத்து அவர்கள் வணங்கிவர இடம் கொடுத்தனர்.இதற்குச் சாட்சியாக இவ்வாயிற் கதவு இன்றுமுள்ளது.
பொதுமக்களிடமிருந்து பெற்ற நிதியில் ஆலயத் திருப்பணி நிறைவேற்றப்பட்டு இரகுநாத மாப்பாண முதலியாரின் நிர்வாகத்தில் கிருஷ்ணையர் சுப்பரே அக்கோயிலின் முதற் பூசகராகவிருந்து ஆலயக் கிரியைகளை ஆச்சாரத்தோடு நடாத்திவந்தார்கள்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் மகாமண்டபத்துக்கு கீழைச் சுவரிலே மேற்கு முகமாக இக்கோயில் தாபகராகிய இரகுநாத மாப்பாண முதலியார் பிரதிமையும், அவர் மனைவி பிரதிமையும் வைக்கப்பட்டுள்ளன.
திருவிழாக்காலங்களில், கந்தசுவாமி கோயிலின் ஒரு தாபகராகிய புவனேகபாகுவின் பெயரை முன்னும், இக்கோயிற் தாபகராகிய இரகுநாத மாப்பாண முதலியாரைப் பின்னும் கட்டியத்தில் கூறிவருகின்றார்கள்.
"சிறீமான் மகாராஜாதிராஜ
அகண்ட பூமண்டல
ரத்தியதிகிந்த விஸ்ராந்த கீர்த்தி
சிறீ கஜவல்லி மகா வல்லி
ஸமேத சிறீ சுப்ரிமண்ய
பாதாரவிந்த ஜாந்திருட
சிவகோத்திரேற்பவஹா
இரகுநாத மாப்பாண
முதலியார் சமூகா"
உசாவியது: "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா
டச்சு (ஒல்லாந்து) இலட்சணை : International Civic Heraldry தளம்
15 comments:
அண்ணா படங்களுக்கு Effect சேர்க்காமல் பதிவேற்றலாமே
வணக்கம் மாயா
இங்கே தந்திருக்கும் படம் ஏற்கனவே பலரும் பார்த்தது என்பதால் இப்படித் தந்திருக்கின்றேன். மூலப் படத்தைப் பின்னர் ஒரு தடவையும் உபயோகிக்க இருக்கின்றேன்.
//யோகியாரின் பெயர் சிக்கிந்தர் என்பர், இவரை அக்காலத்தில் வாழ்ந்த முஸ்லீம்களும் போற்றினர். இரு மத மக்களும் அவரை வழிபட்டனர்.//
இன்று ஏன் இந்தப் பெருந்தன்மை அகன்றே போனது.
இந்தச் செய்தியை அறிந்திருந்த போதும்; வெறும் கட்டுக்கதையோ எனத் தான் நினைத்தேன்.
என் முஸ்லீம் நண்பர் ஒருவர் சொன்னார். ஒட்டிசுட்டான் தான் தோன்றீஸ்வரர் கோவிலில் தங்கள்
பாட்டனாருக்கு ஒரு திருவிழா இருந்ததாக ; அவை உண்மைகள் தான் போலும் உள்ளது.
வணக்கம் யோகன் அண்ணா
கடந்த சில பதிவுகளுக்கு முன்னர் சின்னக்குட்டியும் முஸ்லீம்கள் வந்து சமாதிக்குத் தொழுகை நடாத்திச் சென்றதை மேற்கோள் காட்டியிருந்தார்.
அனேகரின் வேண்டுகோளுக்கிணங்க முதற்படம் மாற்றப்பட்டிருக்கின்றது
;-)
வணக்கம் கானா பிரபா அண்ணா...
//அந்நிலத்திற்குப் பெரும் விலை தருவதாகச் சொல்லி முஸ்லீம்களை இறஞ்சியபோது அவர்கள் தங்கள் நிலத்தை விற்றுவிட்டு நாவாந்துறைக்குக் கிழக்கேயுள்ள இடத்தை வாங்கிக்கொண்டு அங்கே குடியேறினார்கள்//
நான் அறிந்தேன்
முஸ்லீம்கள் நிலத்தை விற்க மறுக்க,அவர்களது பொதுக் கிணற்றில் பன்றியை வெட்டி போட்டதாகவும் பின்னர் முஸ்லீம்கள் விலகிச்சென்றதாகவும்.
எது உண்மை?
பின் குறிப்பு:-
யோகி சிக்கிந்தர் இரு மதமும்(இஸ்லாம்,இந்து) நன்கு அறிந்தவர்.
நன்றி அண்ணா . . .
ஆனா
அந்நிலத்திற்குப் பெரும் விலை தருவதாகச் சொல்லி முஸ்லீம்களை இறஞ்சியபோது அவர்கள் தங்கள் நிலத்தை விற்றுவிட்டு, நாவாந்துறைக்குக் கிழக்கேயுள்ள இடத்தை வாங்கிக்கொண்டு அங்கே குடியேறினார்கள் என்று ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை தன் யாழ்ப்பாணச் சரித்திரத்தில் குறிப்பிடுகின்றார்.
நான் வேறமாதிரிப்படித்ததாய் நினைவு
பிரபா மற்றும் யோகன் "புவனேகபாகு" இந்த பெயர் தமிழர் அல்லாதவர் என்று தோன்றுகிறது. தமிழர் அல்லாத சிங்களத்தவர் அனைவருமே புத்தமதத்தைச் சார்ந்தவர்கள்தானா? சிங்களம் தாய்மொழியாய் பேசுபவர்களில் இந்துமதத்தை சேர்ந்தவர்கள்
இலங்கையில் இல்லையா? இலங்கையின் பூர்வீக வரலாறு அறிய என்ன புத்தகம் பரிந்துரைப்பீர்கள்? எங்கு கிடைக்கும்
என்றும் சொல்லிடுங்க :-)
வணக்கம் காண்டீபன் மற்றும் மாயா
நீங்கள் கேள்விப்பட்ட விடயங்களை நானும் அறிந்திருந்தேன். இங்கே நான் உசாவிய நூல்களில் இருந்தே இந்தப் பதிவு எழுதப்பட்டிருக்கின்றது. பல்வேறு வரலாற்றாசிரியர்கள் இப்படிப் பல இடங்களில் வேறுபட்டிருக்கின்றார்கள்.
//முன்னர் சின்னக்குட்டியும் முஸ்லீம்கள் வந்து சமாதிக்குத் தொழுகை நடாத்திச் சென்றதை மேற்கோள் காட்டியிருந்தார்.//
அதற்குரிய காரணம் இந்த பதிவு மூலம் விபரமாக தெரிந்து கொண்டேன் நன்றிகள்
//ramachandranusha(உஷா) said...
பிரபா மற்றும் யோகன் "புவனேகபாகு" இந்த பெயர் தமிழர் அல்லாதவர் என்று தோன்றுகிறது. தமிழர் அல்லாத சிங்களத்தவர் அனைவருமே புத்தமதத்தைச் சார்ந்தவர்கள்தானா?//
வணக்கம் உஷா
சிங்களவர்களில் தற்போது கிறீஸ்தவமதத்தைப் பின்பற்றுபவர்களும் சிறுபான்மையாக இருக்கின்றார்கள். புவனேகபாகு முன்னர் இந்திய வட மானிலப் படையெடுப்பு நிகழ்ந்தபோது வந்த பெயராக இருக்கலாம். பூரண விபரம் கிடைக்கும் போது அறியத் தருக்கின்றேன்.
இணையமூலம் ஈழ வரலாறு படிக்கத்தகுந்த சுட்டிகளை இன்னும் சில பதிவுகள் கழித்துச் சொல்கின்றேன்.
வணக்கம் பிரபா அண்ணா...
ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை(யாழ்ப்பாணச் சரித்திரம்),மயில்வாகனப் புலவர்(யாழ்ப்பாண வைபவமாலை)இருவரும் கூறுவதும் ஒன்றே அதாவது"//முஸ்லீம்கள் நிலத்தை விற்க மறுக்க,அவர்களது பொதுக் கிணற்றில் பன்றியை வெட்டி போட்டதாகவும் பின்னர் முஸ்லீம்கள் விலகிச்சென்றதாகவும்//"இவர்களை பின்பற்றி எழுதிய அதாவது நீங்கள் உசாவிய கலாநிதி க.குணராசாவின்(செங்கை ஆழியான்) நூல் கூட இதை ஏற்றுக்கொண்டது.பிரபா அண்ணா தயவு செய்து நடந்ததை நடந்தவாறு கூறுங்கள்.
பின் குறிப்பு:-
//ramachandranusha(உஷா) said...
சிங்களம் தாய்மொழியாய் பேசுபவர்களில் இந்துமதத்தை சேர்ந்தவர்கள்
இலங்கையில் இல்லையா?//
ஒரு சிலர் உள்ளனர் அவர்கள் புத்தமதத்தையும் சேர்த்து வழிபடுபவர்கள் எனக்கு தெரிந்த சிங்களவர் "அம்மன்" தெய்வத்தை மட்டும் வழிபடுபவர்(புத்தமதத்தைச் சார்ந்தவர் அல்ல).இலங்கையில் புத்தமதத்தைச் சார்ந்தவர்கள் புத்தருக்கு அடுத்தபடியாக முருகனை வழிபடுகின்றனர்.அதனால் தான் கதிர்காமம் தமிழரிடமிருந்து சிங்களவர் கைக்கு சென்றது.
வணக்கம் காண்டீபன்
என்னுடைய முந்திய பின்னூட்டத்திலேயே தெளிவாக சொல்லிவிட்டேன், அந்தத் தகவல்களை அறிந்திருந்தேன், ஆனால் ஒவ்வொரு வரலாற்றாசிரியர்களிடமும் வித்தியாசமான பார்வை இருக்கின்றது. குணராசாவின் நூலும் வரலாற்று நூலே, முத்துத் தம்பிப் பிள்ளையின் நூலும் வரலாற்று நூலே.
உசாத்துணையில் பாவிக்கும் நூல்களில்
இந்தப் பதிவுக்குத் தேவையானவற்றைக் கொடுத்திருக்கின்றேன்.
இப்படியான விடயங்களை மேலும் சேர்த்துப் பதிவை இன்னொரு திசையில் கொண்டுபோவது இந்தப் பதிவுகளைத் திசை திருப்பிவிடும் என்று எண்ணுகின்றேன்.
ஆகா! எவ்வளவு தகவல்கள். எவ்வளவு செய்திகள். நன்றி பிரபா. இந்தத் தொடரைத் தொடங்கிய பொழுது படித்தது...நடுவில் விடுபட்டுப் போனது. அனைத்தையும் தொடர்ந்து படிக்கிறேன். :)
வணக்கம் ராகவன்
தொடர்ந்தும் விட்ட பதிவுகளைப் படியுங்கள், உங்களைப் போன்ற நண்பர்களுக்காகத் தான் இந்த முயற்சியில் இறங்கினேன் ;-)
Post a Comment