தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்திடும் உன் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்
பாசமுடன் நான் அழைக்க நல்ல வழி காட்டு - உந்தன்
பத்தினிகளோடெனக்கு வந்து முகம் காட்டு
வாசலெங்கும் எரியுதையா உந்தன் விழி காட்டு
இப்போ வள்ளி தெய்வயானையுடன் என்ன விளையாட்டு
நீயிருக்கும் வீதியிலே பேய்கள் இருக்காது
நல்லூர் வீடு தொழுவோர்களுக்கு துன்பம் இருக்காது
வாயிருக்கும் வரையுனையே பாடி ஆடுவேன் -தினம்
வாசலிலே வந்திருந்து உன்னை தேடுவேன்
சந்நிதியில் உந்தனது தேரை எரித்தார்கள் -தமிழ்
தந்தவனே எங்களுக்கு சாவை விதைத்தார்கள்
விண்ணதிரக் குண்டு மழை இன்று பொழிவார்கள் -எங்கள்
வேலவனே அன்னவர்கள் என்று விழுவார்கள்?
செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்தி வரும் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்"
பாடலை இயற்றியவர்: புதுவை இரத்தினதுரை
பாடியவர்: வர்ணராமேஸ்வரன்
இசை: இசைவாணர் கண்ணன்
|
யாழ்ப்பாணத்துக் கலாச்சாரத்தைக் கந்தபுராணக் கலாச்சாரம் என்பார் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை.அவரின் கூற்றுக்கமைய, யாழ்ப்பாணத்தின் எல்லாத் திசைகளிலும் முருகன் ஆலயங்கள் பல பழமைச் சிறப்பும்,பக்திச் சிறப்பும் ஒருங்கே கொண்டவை. கந்த சஷ்டி என்னும் முருக விரதத்தை மிகவும் அனுட்டானத்துடன் நம் ஈழத்தவர்
வெகு சிரத்தையோடு ஓவ்வோர் ஆண்டும் கைக்கொள்வதும் குறிப்பிடத்தக்கது. செல்வச்சந்நிதி முருகனை "அன்னதானக் கந்தன்",என்றும் நல்லூர் முருகனை " அலங்காரக் கந்தன்" என்றும் சிறப்பித்துப் போற்றி நாம் வணங்கி வருகின்றோம்.
தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து புலம் பெயர் வாழ்வில் இருந்து வரும் எனக்கு அதற்கு முற்பட்ட காலத்தில் கலந்து கொண்ட நல்லூர்த் திருவிழாக் காலங்கள் இன்னும் பசுமரத்தாணி போல் இருக்கின்றன. காரணம் இந்த ஆலய மகோற்சவம் என்பது
எமது பிரதேசத்தைப் பொறுத்தவரையில் வெறும் ஆன்மீகத் தேடலுக்கான நிலைக்களனாக மட்டுமன்றி வருஷா வருஷம் நிகழும் பெரும் எடுப்பிலான சமூக ஒன்றுகூடலாகவே அமைகின்றது.
என் சின்னஞ்சிறு வயதில் அயலட்டை உறவினர் சகிதம் அம்மாவின் கைப்பிடித்துக் கோண்டாவில் பஸ் பிடித்துத் தட்டாதெருச் சந்தி இறங்கித் தொடர்ந்து நடை ராஜாவில் நல்லூர்க் கந்தனைக் கண்டது ஒரு காலம்.
அப்பாவின் சைக்கிளின் முன் பாரில் ஏறி, பெடலை வலித்துக் கொண்டே அவர் சொல்லும் கதைகளைக் கேட்டுக்கொண்டே பரமேஸ்வராச் சந்தி வழியாகப் போய் எம் பெருமானை வழிபட்டது ஒரு காலம்.
பதின்ம வயதுகளில் கூட்டாளிமாருடன் காதல் கதைகள் பேசி நல்லூரைக் கடந்து யாழ்ப்பாண நகர் வரை சென்று பின் திரும்ப நல்லூருக்கு வந்து கோயிலுக்குப் போன நீண்ட சுற்றுப் பயணத்துக்கும் காரணம் இருக்கின்றது.
இவையில்லாம் தொலைத்து இப்போது கணினித் திரைக்கு முன் என் மனத்திரையில் நிழலாக ஓடும் காட்சிகளைப் பதிவாக்க முனைகின்றேன். என் நினைவுச் சுழல் எண்பதுகளின் நடுப்பகுதிக்குப் போகின்றது.
1986 ஆவணி மாதம் ஒரு நல்லூர்த் திருவிழாக் காலம் அது
முதல் கிழமையே என் அம்மா குசினிப் (அடுக்களை) பக்கம் பெரும் எடுப்பிலான இராணுவ நடவடிக்கை எடுத்து சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாகக் குதித்து விட்டார். காஸ் அடுப்புக்களோ, மின்சார அடுப்புக்களோ எங்கள் வீட்டில் இல்லை. சூட்டடுப்புக்களை இணைத்துச் செம்மண்ணால் ஒன்றிணைத்த அடுப்படி அது. அந்தச் செம்மண் அடுப்புப் பகுதிக்கு மாட்டுச் சாணத்தைக் கரைத்து அப்பி நன்றாக வருடி விட்டுப் புது மெருகைக் கொடுக்கின்றார். வீட்டுக்குள் இருந்த அசைவப் பாத்திரங்கள், அவை மச்சப் பார்த்திரங்கள் சாம்பல் கொண்டு கழுவிச் சுத்தம் செய்யப்பட்டு கொல்லையில் இருக்கும் காம்பரா என்று சொல்லப்படும் அறைக்குள் நகர்கின்றன. (என் பெற்றோர் மலையகப் பகுதியில் ஆசிரியர்களாக இருந்த காலத்தில் அந்த மலையகப் பகுதிக்குத் தனித்துவமாக சொல்லான "காம்பரா" வையும் யாழ்ப்பாணத்துக்குக் கடத்திக் கொண்டு வந்துவிட்டார்கள். காம்பரா என்றால் தேயிலைத் தேட்டத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் குடியிருக்கும் தொடர் குடியிருப்புக்கள். அவை ஒன்றாக இணைந்திருந்தாலும் தனித்தனிக் குடும்பங்களுக்கான குடியிருப்பாக இருக்கும்.)
வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்து கிணற்றடியில் பெரிய வாளி கட்டி முக்குளித்து அள்ளிய தண்ணீரை அப்பா கொண்டு வரவும், ஓவ்வொரு அறையாகக் குளிப்பாட்டிப் பெருக்கி நீரை வளித்துத் துடைப்பதும் அண்ணனின் வேலை.கூடவே அணில் போல் என் பங்கும்
இருக்கும். வீடே சுத்தமான சைவப்பழமாக மாறிவிட்டது. இனி ஒரு மாதத்திற்கு அசைவச் சாப்பாட்டுக்கும் தடா அல்லது பொடா. மீன் விற்கும் மணி அண்ணனுக்கு ஒரு மாத உழைப்புப் படுத்து விடும்.
எல்லோரும் எதிர்பார்த்த அந்த நல்லூர்த் திருவிழா வந்துவிட்டது.
அதிகாலையில் வழக்கம் போல் துயில் எழுந்து தலை முழுகிச் சுவாமி அறையில் தேவாரம் பாடி முடித்து, யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைகளை அப்பா பாடவும், நானும் எழுந்து கோயிலுக்கு அப்பாவுடன் போக ஆயத்தமாகவும் சரியாக இருக்கின்றது.
அம்மா, பக்கத்து வீட்டு மாமி மாருடன் மினி பஸ் மூலம் வரப் போகிறார். அண்ணன் தன் கூட்டாளிமாருடன் கோயிலுக்குப் போய்விடுவார். வெறும் மேலும் வெள்ளைச் வேட்டியும், கழுத்தைச் சுற்றிய சால்வையுமாக வெளியே வந்த அப்பா ஓரமாக நிறுத்தியிருந்த பி.எஸ்.ஏ (BSA) சைக்கிளை நகர்த்தி, நடுமுற்றத்துக் கொண்டு வருகின்றார். இணுவில் கந்தசுவாமி கோயில் கடாய் வாகனம் போல பெரிய சைக்கிள் அது. "ஐம்பதுகளில் நாற்பது ரூபாய்க்கு வாங்கினது, பார் இன்னும் உழைக்குது" என்று பெருமை பட அப்பா தன் தேரைப் பற்றி அடிக்கடி தானே புகழ்ந்து கொள்வார். அரைக்காற்சட்டைப் பையனான நான் அப்பாவின் சைக்கிள் ஏறி முன் பாரில் அமர்ந்து கொள்கின்றேன். ஒடுக்கமான ஒழுங்கைக்குள்ளால் சைக்கிள் ஊர்கின்றது.
கொஞ்ச தூரம் சென்றதும் பயணக் களைப்புத் தெரியாமல் இருக்க எனக்குக் கதை சொல்ல ஆரம்பிப்பார் அப்பா என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் நானே முந்திக் கொண்டு,
"அப்பா! இண்டைக்கு எனக்கு நல்லூர்க் கோயில் வரலாற்றைச் சொல்லுங்கோவன்"
என்று ஆவலோடு நான் அடியெடுத்துக் கொடுக்கிறேன்.
தன் சைக்கிளோட்டத்தை நிதானப்படுத்தியவாறே, ஒரு செருமலை உதிர்த்துவிட்டு நல்லூர்க் கோயில் வரலாற்றைச் சொல்ல ஆரம்பிக்கின்றார் அப்பா.
14 comments:
பிரபா!
காலம் காலமாக சொல்லப் போறீர்கள் போல தெரிகிறது.
வரலாறு கொஞ்சமறிவேன். எனினும் மீண்டும் கேட்போம்.
பாடல் முதற்தடவையாகக் கேட்கிறேன்.இனிது
மற்றும் மலையக தொடர்குடியிருப்பை 'லயன்' எனக்கூறக் கேட்டுள்ளேன்.
இந்த'காம்பரா' என்பது, சிங்களத்தில் அறையைக் குறிப்பிடும் சொல்.
மலையகத் தமிழர் மத்தியில் புழங்கும் சிங்களச் சொல்.
அது போத்துக்கீசரின் 'chambre' எனும் சொல்லின் மருவல்.
நம் குசினி போல்.
அருணகிரிநாதரும் நல்லூர் கந்தனைப் பாடியதாக கேட்ட ஞாபகம். இருந்தால் இக்காலத்தில் தேடித் தரவும்.
நல்லூரோடு உங்கள் தொடர்புகள் அறியக் காத்திருக்கிறோம். நல்ல தொடக்கம்.
எங்கள் சிறுவயதில் தூத்துக்குடியில் இருந்தாலும் ஊருக்குப் போனால் அங்கு விறகடுப்புதான். செம்மண்னையும் களிமண்ணையும் குழப்பிச் செய்த பெரிய பெரிய அடுப்புகள். மூன்று குமிழ்களோடு சாணி மெழுகப்பட்டு அழகாக இருக்கும். பெரிய பெரிய அடுப்புகள். அதில் விளையாட ஆசை பிறந்தாலும் திட்டு விழுகும். ஒரு அடுப்பிற்கு விறகு கூட்டும் வழி இருக்காது. ஆனால் பக்கத்து அடுப்பிலிருந்து வரும் நெருப்பு உள்ளே நுழையும் வகையில் இருக்கும். அவையெல்லாம் நினைவு படுத்தி விட்டது உங்கள் பதிவு. ஒருமுறை பாட்டி ஒருவர் அடுப்பில் சமைத்துக் கொண்டிருக்கையில் அடுப்பிற்குள் பொட்டு வெடிகளைக் கொட்டி விட்டு பிறகு திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டதும் நினைவிற்கு வருகிறது.
கந்தனின் பாடலையும் படித்தேன். கேட்டேன். அருமை. அருமை.
வணக்கம் யோகன் அண்ணா
பல்வேறு வரலாற்றுத் தகவல்களைத் தொகுத்துச் சுருக்கமாகப் பகுதி பகுதியாகக் கொடுக்கவுள்ளேன்.
அருணகிரிநாதர் பாடிய தகவல்கள் இருந்தால் நூல்களில் தேடித் தரமுயற்சிக்கின்றேன்.
காம்பரா என்ற விளக்கத்துக்கு நன்றி, எங்கள் வீட்டில் இப்படியான சொற்கள் புழக்கத்தில் இருக்கும்.
வணக்கம் ராகவன்
எங்களூரில் எப்பாவது சண்டை ஓயும் போது தான் மின்சார அடுப்புக்கு மவுசு வரும். இப்போதும் எங்கள் தாயக வீட்டில் சூட்டடுப்பில் தான் சமையல்.
நீஙகள் சொன்ன அதே அடுப்புக்கள் தான் எங்கள் வீட்டிலும் புழக்கத்தில் இருக்கின்ரன. மூன்று அடுப்புக்கள் இணைக்கப்பட்டு, மூன்றுக்கும் தொடுப்பு இருக்கும். ஒரு அடுப்பு நெருப்பைக் கூட்டணி ஆட்சியாகப் பங்கெடுத்துக் கொள்வார்கள் மற்றைய அடுப்புக்காரர்.
சூட்டடுப்புச் சமையலின் ருசியே தனி.
கந்தன் பாடலை எழுதியவர், இசையமைத்தவர், பாடியவர் மூவருமே தனிச் சிறப்பு மிக்கவர்கள்
பிரபா படித்துக் கொண்டு இருக்கிறேன். உங்களிடமும் யோகனிடமும்- தவறாய் நினைக்க மாட்டீர்கள்
என்ற தைரியத்தில், ஒரு கேள்வி. உங்கள் அடுத்த தலைமுறைக்கு இந்த ஏக்கம் இருக்குமா?
வணக்கம் உஷா
உங்கள் கேள்வியில் தவறேதும் இல்லை.
பொதுவாக புலம்பெயர்ந்த எல்லோருமே எதிர்னோக்கும் சவால் இது.
நான் 21 வருஷ வாழ்வைத் தாயகத்திலேயே கழித்ததால் இப்போது இப்படியான பண்பாட்டுச் சூழலில் இருந்து மீளமுடியாமல் உள்ளது. இதுவே இங்கே பிறந்து வளர்ந்த ஈழ/இந்தியப் பிள்ளையிடம் எதிர்பார்க்கும் போது பெரும்பான்மையான இளம் சமூகம் தம் தாய், தந்தையின் அரவணைப்பில் இருக்கும் போது தான் ஓரளவு பிந்தொடர்கின்றது.
தொடர்ந்து வாசிப்பதற்கு மிக்க நன்றிகள்
ஆஹா...அருமையான தொடக்கம் ;-)
பாடல் அருமை, பழைய நினைவுகளும் கலக்கல் ;-)
உங்களுக்கு நல்லூர் முருகனின் நினைவு. எனக்கு திருத்தணி முருகனின் நினைவு.
\\ஓவ்வொரு அறையாகக் குளிப்பாட்டிப் பெருக்கி நீரை வளித்துத் துடைப்பதும் அண்ணனின் வேலை. கூடவே அணில் போல் என் பங்கும்
இருக்கும்.\\
அண்ணன் எங்கு எல்லாம் சரியாக செய்யவில்லைன்னு பார்ப்பது தானே அந்த அணிலின் வேலை ;)))
பாடலைக் கேட்டேன் பிரபா. நல்லூர் கந்தசாமி கோவில் வரலாற்றையும் கேட்கக் காத்திருக்கிறேன்.
//கோபிநாத் said...
அண்ணன் எங்கு எல்லாம் சரியாக செய்யவில்லைன்னு பார்ப்பது தானே அந்த அணிலின் வேலை ;))) //
வாங்க தல
நான் அப்போது ரொம்ப சின்னப் பையன், நம்ம வேலை மும்முரமாக வேலை செய்யும் அண்ணனைச் சீண்டுவதும், காற்சட்டையை ஈர நிலத்தில் நனைத்து விளையாடுவதும் தான் ;-)
//குமரன் (Kumaran) said...
பாடலைக் கேட்டேன் பிரபா. நல்லூர் கந்தசாமி கோவில் வரலாற்றையும் கேட்கக் காத்திருக்கிறேன். //
மிக்க நன்றி குமரன்
கானா பிரபா
பழையதை மீட்டிய பதிவுக்கு நன்றி. சிறுவயதில் அதாவது அரைகாற்சட்டை போட்ட வயதில் அதிகம் நல்லூர் போனதில்லை. பின்னர் போய் இருக்கிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்........
விஜே
தொடர்ந்து வாருங்கள், அரைக்காற்சட்டை காலத்திலிருந்து ரீன் ஏஜ் காலம் வரை வரும் ;-)
கா.பி,
நல்ல பதிவு.
2005ம் ஆண்டு நல்லூரானின் தரிசனம், மற்றும் செல்வச் சந்நிதி முருகன் தரிசனம் கிடைக்கும் பாக்கியம் பெற்றிருந்தேன்.
மிகவும் சிறுவனாக [6 அல்லது 7 வயது] ஒரு தடவை நல்லூர் சென்ற ஞாபகம்.
ஆனால் 2005ல் நல்லூர் சென்றிருந்த போது அங்குள்ள நடைமுறைகளைப் பார்த்து அதிசயத்துப் போனேன்.
பண்டைய காலத்தில் எப்படிப் பூசைகள் நடந்ததோ அதே போலத்தான்
இப்போதும் பூசை நடக்கிறது.
அத்துடன், அருச்சனை ஒரு ரூபாய்தான். மற்ற ஆலயங்களில் எல்லாம் அரிச்சனை பல விலை.
ஆனால் இங்கு ஒரு ரூபாய்தான்.
ஏழை எளியவர்களும் அருச்சனை செய்ய முடியும்.
/* செல்வச்சந்நிதி முருகனை "அன்னதானக் கந்தன்",என்றும் நல்லூர் முருகனை " அலங்காரக் கந்தன்" என்றும் சிறப்பித்துப் போற்றி நாம் வணங்கி வருகின்றோம். */
எனது ஊர் முருகனை இந்தப் பட்டியலில் இணைக்காததை வன்மையாகக் கண்டிக்கிறேன். :-))
கதிர்காமக் கந்தன் -> கற்பூரக் கந்தன்
நல்லூர் முருகன் -> அலங்காரக் கந்தன்
செல்வச் சந்நிதி முருகன் -> அன்னதானக் கந்தன்
மாதகல் நுணசைக் கடம்பன்[கந்தன்] -> காவடிக் கந்தன்
ஈழத்திலேயே கடம்ப மரத்தின் கீழ் எழுந்தருளியிருக்கும் முருகன் ஆலயம் மாதகல் நுணசைக் கடம்பன் தான்.
வெற்றி அண்ணை
தப்புத்தான் ஒப்புக்கொள்கிறேன் ;-) ஆனால் தவற விட்டதால் மேலதிக தகவலை உங்களிடமிருந்து எடுத்தாச்சு
Post a Comment