From "Peninsula Indiae citra Gangem, hoc est Orae Celeberrimae Malabar & Coromandel. Cum Adjacente Insula non Minus Celebratissima Ceylon," by Homann Heirs, 1733
முத்திரைச் சந்தியில் சிறீ சங்கபோதி புவனேகபாகுவினால் குருக்கள் வளவில் அழிக்கப்பட்டு முத்திரைச் சந்தையில் அமைத்த நல்லூர்க் கந்தசுவாமி கோயில் ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின் 1621 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி, இருந்தவிடம் தெரியாமல் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு, கத்தோலிக்க கிறீஸ்தவ தேவாலயம் நிறுவப்படுகின்றது.
போர்த்துக்கேயரின் ஆட்சி இலங்கையில் நிலவி வரும் காலத்தில் ஒல்லாந்தரின் வருகை இவர்களுக்குக் கேடுகாலமாகின்றது. இலங்கை அரசனோடு ஒப்பந்தம் செய்து கொட்டியாரத்தில் ஒல்லாந்தர் கோட்டை கட்டப்படுகின்றது.
பின்னர் மட்டக்களப்புக் கோட்டையை 1639 ஆம் ஆண்டில் வெஸ்தர்வால்டு என்ற ஒல்லாந்துத் தளபதி கைப்பற்றிக் கண்டியரசனோடு துணை உடன்படிக்கை செய்துகொண்டான்.
பின்னர் திருகோணமலை, காலி, நீர்கொழும்பு என்று இவர்களின் நிலக் கைப்பற்றல் தொடர்ந்தது. பின்னர் 1656 இல் ஒல்லாந்தர் கொழும்புக் கோட்டையைக் கைப்பற்றி, பின்னர் தொடர்ந்து மன்னார், ஊர்காவற்துறையையும் பிடிக்கின்றார்கள்.
பின்னர் 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டையையும் மூன்றரை மாசம் மதிலிடைத்து வளைத்திருந்து யூன் மாதம் 22 ஆம் நாள் யாழ்ப்பாண இராச்சியம் ஒல்லாந்தர் வசமாகின்றது. அவர்கள் தமது புரட்டஸ்தாந்து மதத்தைப் பரப்புவதில் தீவிரமாகவிருந்தனர். முன்பிருந்த கத்தோலிக்க கோயில்களை இடித்தும், சிலவிடத்தில் புதுக்கியுந்திருத்தியும் தமது மதத் தேவாலயங்களை ஆக்கினர்.
ஒல்லாந்தர் ஆட்சியின் போது முன்பிருந்த போர்த்துக்கேயர் போல் அல்லாது பிறசமயங்களின் மீது தமது வன் கண்மையைக் குறைத்துக் கொண்டனர் என்று கூறப்படுகின்றது. முந்திய நல்லூர்க் கோயிலின் அர்ச்சக சந்ததியின் வழித் தோன்றலாக இருந்த கிருஷ்ணயர் சுப்பையர் என்ற பிராமணர், புராதன கந்தசுவாமி கோயில் இருந்த இடத்துக்கு அண்மையில் மடாலயம் ஒன்றினை நிறுவி வேலினைப் பிரதிஷ்டை செய்து வழிபாட்டியற்றக் காரணமாகவிருந்தார். இது கந்தபுராணம் படிக்கும் மடமாகவே பெரிதும் பயன்பட்டது.
பெரிய கோபுரம் தூபி முதலியனவிருந்தால் ஒல்லாந்தர் அதனை மீண்டும் தரைமட்டமாக்கிவிடக்கூடும் என்றெண்ணி அமைதியான வழிபாட்டிடமாக இதனை ஆக்கினர் என்று கொள்ள இடமுண்டு.
உசாவ உதவியவை:
1. "யாழ்ப்பாணச் சரித்திரம்", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
2. "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா
3. "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்
டச்சு (ஒல்லாந்து) இலட்சணை : International Civic Heraldry தளம
சித்திரம்:
Map by Homann Heirs- Columbia University வரலாற்றுத் தளம்
டச்சு (ஒல்லாந்து) இலட்சணை : International Civic Heraldry தளம
சித்திரம்:
Map by Homann Heirs- Columbia University வரலாற்றுத் தளம்
4 comments:
பிரபா!
இந்த பனையுடன் கூடிய இலச்சினை யார் அறிமுகம் செய்தது.
வணக்கம் அண்ணா
உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பின்னர் தான் இந்த இலச்சினையின் விளக்கத்தைக் கொடுத்தால் நல்லது என்று அடுத்த பதிவில் கொடுத்திருக்கின்றேன். இது டச்சு (ஒல்லாந்தரின்) இலச்சினையாகும்.
கந்தமடாலயம் இருந்த இடம் தான் பின்னர் கந்தர் மடமாயிற்று.
கந்தர் மடத்திற்கு அருகிலுள்ள வீதி இன்னமும் கந்தபுராணவீதி என்றே அழைக்கப்படுகிறது.
வணக்கம் தீவண்ணை
கந்தர்மடத்துக்குப் பின்னால் உள்ள கதையை இப்போது தான் அறிந்தேன், மிக்க நன்றிகள்
Post a Comment