
நல்லூர்க் கந்தசாமி கோவிலின் மஹோற்சவம் இன்று 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.தொடர்ந்து 25 தினங்கள் திருவிழா நடைபெறும்.
யாழ்.குடாநாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை சுவாமி வெளிவீதியில் இடம்பெறாது. இரவுத் திருவிழாவும் மாலை 5மணிக்கு நடைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
வருடாந்த மஹோற்சவத்தை சிவ சிறீ யோகீஸ்வரக் குருக்கள் தலைமை வகித்து நடத்தி வைப்பார். இம்மாதம் 27 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் அடுத்தமாதம் 9 ஆம் திகதி சப்பறத் திருவிழாவும் 10 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்த திருவிழாவும்
12 ஆம் திகதி பூங்காவனம் இடம்பெறும்.
உற்சவ தினங்களில் வழமைபோல் அடி யார்கள் பக்திபூர்வமாக கலந்து முருகப் பெருமானை வழிபடுவதுடன் அங்கபிரதட்சை செய்வதும் அடி அழித்தும் கற்பூரச் சட்டி எடுத்தும் தூக்குகாவடி, ஆட்டக்காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறை வேற்றுவார்கள். வழமைபோல் இம்முறையும் உற்சவ தினங்களில் குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக் கான அடியார்கள் ஆலயத்துக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த வருஷம் நல்லூர்த் திருவிழா வேளையில் சிறப்பாக ஒரு பதிவை இடலாம் என்று நான் எண்ணிடயிருந்த வேளை யுத்தமேகங்கள் முழுவதுமாகக் கருக்கட்டி தாயகத்தில் முழு அளவிலான யுத்தம் கோரத்தாண்டவமாடிக் கொண்டிருந்தது. A9 பாதை மூடல் என்று பொருளாதார ரீதியிலும் , செஞ்சோலைப் படுகொலைகள் என்று இன அழிப்பு ரீதியிலும் அங்கே எம் உறவுகள் சிறீலங்கன் பாஸ்போர்ட்டை தொலைத்துக் கொண்டிருக்கும் வேளை திருவிழா பற்றிய பதிவை மறக்கடித்து விட்டது. இன்றும் அந்த நிலை தொடர்கின்றது. இருப்பினும் சோகங்கள் தொடர்கதையாகிப்போன நம்மவர் வாழ்வில் இறையருள் கைகூடவேண்டும் என்று இறைஞ்சி, இன்று ஆரம்பித்த நல்லைக் கந்தன் மகோற்சவ காலத்தில் தொடர்ச்சியாக 25 நாட்கள் நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பையும், இந்தத் திருவிழா நம் தாயகத்து மக்களுக்கு ஒரு ஆன்மீக மற்றும் சமூக ஒன்று கூடலுக்கான நிகழ்வாக இருந்து வருவதையும் வரலாற்று மற்றும் நனவிடை தோய்தல் மூலம் பதிவுகளாக்க முயல்கின்றேன்.
மாதத்துக்கு இரண்டு பதிவுகள் மட்டுமே எழுதும் எனக்கு 25 நாட்கள் தொடர்ந்து 25 பதிவுகள் இடுவது என்பது கொஞ்சம் அதிகப்படியானது.ஆனாலும் துணிந்து இறங்கி விட்டேன்.இப்பதிவுகள் மூலம் நம் ஆன்மீக நிலைக்களனைக் குறித்த விபரங்களை நம் தமிழகச் சகோதரர்களுக்கும், தெரியாத தகவல்களை அறியாத ஈழத்து உறவுகளுக்குமாக, நல்லை நகர் மற்றும் நல்லூர்க் கந்தன் ஆலய வரலாறு, பாடல்கள், புகைப்படங்கள், கழிந்த நம் திருவிழாக் கால நினைவுகளாகக் கொடுக்க எண்ணியுள்ளேன்.
என்னுடைய இப்பதிவுகளுக்கு உசத்துணை உதவியாக இருந்து உதவும் நூல்கள்
1. "யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு", ஐப்பசி 1993 - கலாநிதி சி.க.சிற்றம்பலம்
2. "யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்து நிலை" ஆவணி 2000 - கார்த்திகேசு சிவத்தம்பி
3. "யாழ்ப்பாணச் சரித்திரம்", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
4. "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா
5. "நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் (வரலாறு)", ஆடி 2005 - கலாநிதி க.குணராசா
6. "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்
இப்பதிவுகளை எழுதும் போது மேலும் சில உசாத்துணை உதவிகள் பெறப்படும் போது அவை இங்கே பதியப்படும்.
"பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே!
ஆறுமுகன் தஞ்சமெடி" - யோகர் சுவாமிகள்
17 comments:
துன்பம் தீர
இன்பம் சேர
நல்வினை சிறக்க
தீவினை மறக்க
கந்தன் குடிகொள்ளும்
நல்லூரே
நாமெல்லாம் செல்லூர்
அருள் மணக்கும்
தமிழைச் சொல்லூர்
என்றைக்காவது நல்லூரானைக் கண்ணால் கண்டு மகிழும் அந்த நாளும் வரும். கண்டிப்பாக வரும்.
கந்தா! முருகா! உன்னை வேண்டி வேண்டிக் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். உலகம் முழுவதும் உன்பிள்ளைகள்தான். இந்தப் பிள்ளைகளுக்கு மட்டும் அடியுதை ஏன்! வாழ வையப்பா!
பிரபா, ஆன்மீக ஈழம் பற்றித் தொடருங்கள். தெரியவும் அறியவும் ஆவலாக உள்ளோம். தேவாரத் திருப்புகழ் வழியாகக் கொஞ்சம் தெரிவோம். இருந்தாலும் ஈழ மணத்தில் கேட்கவும் படிக்கவும் ஆவலாக உள்ளோம்.
ராகவன் சொன்ன மாதிரி, நல்லூர் கந்தனைக் காண எனக்கும் ஆசயாத்தான் இருக்கு...
உலகெல்லாம் உள்ள தமிழ் மக்களை, எம்பெருமான் காத்தருள மனசார நானு, வேண்டுகிறேன்...
பிரபா இந்த திருப்பணி மேலும் தொடரட்டும்...
நல்லூர் முருகனருள் முன்னிற்கும், என்றும் துணை நிற்கும். வென்றிடுவீர் துயரெல்லாம்.
அவனே வழி நடத்துவான். வெற்று ஆட்சி மோகத்தை அகற்றுவான். அமைதியை நிலை நிறுத்துவான்.
போற்றுக அவன் அடி!
நல்ல முயற்சி பிரபா. தொடருங்கள்.
//G.Ragavan said...
பிரபா, ஆன்மீக ஈழம் பற்றித் தொடருங்கள். தெரியவும் அறியவும் ஆவலாக உள்ளோம். //
வணக்கம் ராகவன்
முருகனருள் வேண்டிச் சிறப்பானதொரு கவிவரிகளையும் தந்து பதிவைச் சிறப்பித்தமைக்கு மிக்க நன்றிகள். என்னால் முடிந்த அளவிற்குச் சிறப்பாக இந்த வரலாற்றுத் தொடரைத் தரவிருக்கின்றேன்.
//நெல்லைக் கிறுக்கன் said...
ராகவன் சொன்ன மாதிரி, நல்லூர் கந்தனைக் காண எனக்கும் ஆசயாத்தான் இருக்கு...//
நெல்லைக் கிறுக்கரே
ராகவன், உங்களைப் போன்ற நண்பர்களை யுத்தம் ஓய்ந்த என் தாயகம் அழைத்துச் சென்று இவ்விடங்களைக் காட்டும் நாள் வெகு சீக்கிரமே வரவேண்டும் என்பதே என் அவாவும் கூட. தங்கள் இறைஞ்சுதலுக்கும் என் நன்றிகள்.
ஒவ்வொருநாளும் வருவன்.
என்றைக்காவது நல்லூரானைக் கண்ணால் கண்டு மகிழும் அந்த நாளும் வரும். கண்டிப்பாக வரும்.
\இப்பதிவுகள் மூலம் நம் ஆன்மீக நிலைக்களனைக் குறித்த விபரங்களை நம் தமிழகச் சகோதரர்களுக்கும், தெரியாத தகவல்களை அறியாத ஈழத்து உறவுகளுக்குமாக, நல்லை நகர் மற்றும் நல்லூர்க் கந்தன் ஆலய வரலாறு, பாடல்கள், புகைப்படங்கள், கழிந்த நம் திருவிழாக் கால நினைவுகளாகக் கொடுக்க எண்ணியுள்ளேன்.\\
அருமையான முயற்சி...அந்த முருகன் துணையுடன் எல்லோர் கனவுகளும் விரைவில் நினைவாகும்.
எழுதுங்கள் தல ;-)
பிரபா!
நானும் வருகிறேன்.
நல்லது நடக்கட்டும்,நல்லூரான் அருளால்
//ஜீவா (Jeeva Venkataraman) said...
நல்லூர் முருகனருள் முன்னிற்கும், என்றும் துணை நிற்கும். வென்றிடுவீர் துயரெல்லாம். //
வணக்கம் சகோதரனே
தங்கள் பிரார்த்தனை கை கூடவேண்டும், நம்மக்கள் சுபீட்சமானதொரு இலக்கை அடையவேண்டும். மிக்க நன்றிகள்
// Kanags said...
நல்ல முயற்சி பிரபா. தொடருங்கள்.//
வருகைக்கு நன்றிகள் அண்ணா
அவ்வப்போது உங்கள் உதவியும் தேவைப்படும் ;-)
நல்லூர் கந்தசாமி கோவிலைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன் பிரபா. உங்கள் இடுகைகளின் மூலம் இன்னும் நிறைய தெரிந்து கொள்வேன். நன்றி.
kanaprabaவணக்கம் குமரன்
நான் சேகரித்த வரலாற்று மூலாதாரங்களைக் கொண்டு தொடர்ந்து தருகின்றேன். குறிப்பாக உங்களைப் போன்ற தமிழகத்துச் சகோதர்களுக்காகவே இம்முயற்சி எடுத்துள்ளேன்.
வருகைக்கும் மிக்க நன்றிகள்
நன்றி அண்ணா !!!
பகீ ஒவ்வோரு நாளும் வந்தால்போதாது நீங்கள் நல்லூர் பற்றின புகைப்படங்களை(தற்போதய திருவிழா பற்றிய) உங்கள் பதிவில் பதிந்தால் நல்லாயிருக்கும்
கோவிலுக்கும் போனமாதிரி இருக்கும்
//பகீ said...
ஒவ்வொருநாளும் வருவன்.//
கட்டாயம் வாங்கோ, முடிந்தால் படங்களும் தாங்கோ
//theshanth said...
என்றைக்காவது நல்லூரானைக் கண்ணால் கண்டு மகிழும் அந்த நாளும் வரும். கண்டிப்பாக வரும். //
வணக்கம் சகோதரனே
அந்த நன்னாளில் உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களைக் கொண்டு சென்று காட்ட எனக்கும் ஆசை.
//கோபிநாத் said...
அருமையான முயற்சி...அந்த முருகன் துணையுடன் எல்லோர் கனவுகளும் விரைவில் நினைவாகும்.//
மிக்க நன்றி தல
//மாயா said...
நன்றி அண்ணா !!!
பகீ ஒவ்வோரு நாளும் வந்தால்போதாது நீங்கள் நல்லூர் பற்றின புகைப்படங்களை(தற்போதய திருவிழா பற்றிய) உங்கள் பதிவில் பதிந்தால் நல்லாயிருக்கும்
கோவிலுக்கும் போனமாதிரி இருக்கும் //
இதனை நான் வழிமொழிகின்றேன் ;-)
/* ஆனாலும் துணிந்து இறங்கி விட்டேன்.இப்பதிவுகள் மூலம் நம் ஆன்மீக நிலைக்களனைக் குறித்த விபரங்களை நம் தமிழகச் சகோதரர்களுக்கும், தெரியாத தகவல்களை அறியாத ஈழத்து உறவுகளுக்குமாக, நல்லை நகர் மற்றும் நல்லூர்க் கந்தன் ஆலய வரலாறு, பாடல்கள், புகைப்படங்கள், கழிந்த நம் திருவிழாக் கால நினைவுகளாகக் கொடுக்க எண்ணியுள்ளேன். */
நல்ல முயற்சி பிரபா.
தொடருங்கள். உங்களின் இத் தொடரைத் தமிழ்மண முகப்பில் பார்த்திருப்பினும், இன்றுதான் வாசித்தேன்.
மற்றைய பதிவுகளையும் வாசிக்க வேணும். தொடருங்கள்.
வெற்றி அண்ணை
அடிக்கடி திருவிழாவுக்கு வாங்கோ
Post a Comment