
ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டில்
யாழ்ப்பாணத்துச் சைவசமயிகளே என்று விளித்து எழுதப்பட்ட குறிப்புக்களில் சில பாகங்களின் முக்கிய பகுதிகளை மட்டும் இங்கே தருகின்றேன்.
குறிப்பு 4. இவ்யாழ்ப்பாணத்திலே முக்கியமாகிய கோயில் நல்லூர்க்கந்தசுவாமி கோயிலிலே நீங்கள் உங்கள் வழிபாட்டை அங்கே செய்கின்றீர்கள். உங்கள் பொருளை மிகுதியாக அங்கே செலவழிக்கின்றீர்கள். அக்கோயிலும், அங்கே நடக்கும் பூசை திருவிழா முதலியனவும் சிவாகமங்களுக்கும், குமார தந்திரத்திற்கும் முழு விரோதம். அவ்வாகம விரோதங்களையே மற்றைய கோயில்களுக்கும் நீங்கள் பிரமாணமாகக் கொள்ளுகின்றீர்கள்.
குறிப்பு 7
இக்கோயிலுக்குப் பெயர் யாது? கந்தசுவாமி கோயில். இங்கிருக்கின்ற மூர்த்தி கந்தசுவாமியா? இல்லை வேலாயுதம்.
கந்தசுவாமிக்கு வடிவம் வேலாயுதமா?
அது அவர் கைப்படைக்கலம். அவரேவல் செய்யும் அடிமை அவ்வுண்மை.
குறிப்பு 10
எந்தக் கோயிலுக்கும் சண்டேசுரர் கோயில் வேண்டுமே இங்கே சண்டேசுரர் கோயில் இருக்கின்றதா?
குறிப்பு 11
வைரவர் கோயில் இருக்க வேண்டிய தானம் எது? வைரவர் எந்தத் திக்குமுகமாகப் பிரதிஷ்டை செய்யப்படல் வேண்டும்? வைரவர் பொருட்டு விக்கிரகம் தாபியாது சூலாயுதந் தாபிக்க விதி என்னை?
குறிப்பு 12
இக்கோயிலார் விக்னேசுர விக்கிரகம் தாபித்தது என்னையோ?
சுப்பிரமணியர் பொருட்டு அவர்கை வேலாயுதமும், வைரவர் பொருட்டு அவர்கைச் சூலாயுதமும் தாபித்துவிட்ட தம்முன்னோர் கருத்துக்கொப்ப, இவரும் விக்னேசுரர் பொருட்டு அவர் கைத்தோட்டு தாபித்து விடலாமே?
குறிப்பு 14
சுப்பிரமணிய சுவாமிக்கு மகோற்சவம் மூன்று நாள், ஐந்து நாள், ஏழு நாள், ஒன்பது நாள், பன்னிரண்டு நாள் நடத்துக என்று குமார தந்திரம் விதித்திருக்க இங்கே இருபத்து நான்கு நாள் மகோறசவம் நடத்துவதென்னையோ?
இவ்வாறாகத் தன் முதற்பத்திரிகை வேண்டுகோளை ஆறுமுக நாவலர், யுக வருசம் ஆடிமாதம் 1875 ஆம் ஆண்டு முன் வைக்கின்றார்.
தொடர்ந்து இவரால் நல்லூர்க் கந்தசாமி கோயில் குறித்து இரண்டாம் பத்திரிகையும் முப்பத்தேழு குறிப்புக்களுடன் வெளியிடப்படுகின்றது.
கி.பி 1873 இல் கந்தையா மாப்பாணர் அதிகாரியாக இருந்த காலத்தில் ஆறுமுக நாவலர் அவர்கள் அக்கோயிற் திருப்பணியைக் கருங்கல்லாற் கட்டும் பணியை மேற்கொண்டு மேற்கொண்டு 6000 வரையில் பணமும் கையொப்பமுஞ் சேர்த்தார். ரூ 3000 வரைடயிற் செலவு செய்து கருங்கற்களும் எடுக்கப்பட்டன. இந்தியாவிலிருந்து முருகன், வள்ளி, தெய்வயானை விக்கிரகங்கள் வரவழைக்கப்பட்டன. ஆனால் இடையில் நடந்த மாற்றங்களால் அவ்விக்கிரகங்கள் நல்லையில் இடம்பெறாமல், தென்மராட்சி விடற்றற்பளை வயற்கரைக் கந்தசுவாமி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
மேலும் தேர்திருவிழாவுக்கு முதல்நாள் செய்து வரும் ஆட்டுக் கொலையைச் செய்யமாட்டோம் என்ற வாக்கினை மீறிச் செயற்பட்டமையால் 1876 ஆம் ஆண்டு அம்மேலதிகாரியை விலக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. அது விளக்கத்துக்கு வருமுன் நாவலரவர்கள் தேவகவியோகமாயினார்.
இந்தக் குறிப்புக்களின் பிரகாரம் நாவலருக்கும் மாப்பாணர்களுக்கும் விரோதம் இருந்துள்ளதை அறியமுடிகின்றது. ஒரு கட்டத்தில் இருபத்தைந்து வருடகாலம் நாவலர் நல்லூர்க் கோயிலுக்குப் போகாதிருந்திருக்கின்றார்.
கி.பி 1248 ஆம் ஆண்டிற் அமைக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில், சைவ மக்களின் வழிபாட்டிடமாகவும், தமிழ்மக்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த பெருங்கோயிலாகவும் கடந்த பல நூறு ஆண்டுகளாக விளங்கி வருகின்றது. யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆயிரமாயிரமாண்டுகள் நீண்டபாதையில் கந்தவேள் ஆலயம் வரலாறு படைத்துள்ளது.
வரலாற்றுக் குறிப்புக்கள் மூலம்:
1. "ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு", மூன்றாம் பதிபின் மீள் பிரசுரம் மார்கழி 1996 - தொகுப்பாசிரியர் நல்லூர் த.கைலாசபிள்ளை
2. "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா
புகைப்பட உதவி: http://www.vajee4u.com/
8 comments:
"'எப்படியாயினும் ஆகட்டும். இங்கே (நல்லூர் ஆலயத்தில்) அருள் விளக்கம் இருக்கிறது' என்பதை நாவலரும் ஏற்றுக் கொண்டார்" என்று செங்கை ஆழியான் தனது "நல்லை நகர் நூல்" எனற ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கானா பிரபா, தங்கள் கட்டுரைகளை ஆறுதலாக வாசித்து பின்னர் பின்னூட்டமிடுகிறேன்.
வணக்கம் சிறீ அண்ணா
நாவலருக்கு நல்லூர் முருகன் மேல் இவ்வளவு உரிமையெடுத்துச் சில காரியங்களைச் செய்தார் என்று எண்ணத் தோன்றுகின்றது. நாவலர் அவர்கள் நல்லைக் கந்தன் மேல் பாடிய பாசுரங்களை நாளைய பதிவில் தரவிருக்கின்றேன்.
உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கின்றேன்.
இவ்வளவு விடயம் நல்லூரில் உள்ளதா?
சர்ச்சை தமிழன் உடன் பிறந்ததே!!
சுவையான தகவல்கள்.
ஒன்று சொல்வேன்.... இன்று நாடு நல்ல நிலையில் இருந்தால் 50 நாள் உற்சவம் நடந்தாலும் ஆச்சரியமில்லை.
வணக்கம் யோகன் அண்ணா
முடிந்தால் நாவலர் தன் கைப்பட எழுதிய கட்டுரைகளைத் தாங்கிய நாவலர் மான்மியத்தைத் தேடியெடுத்துப் படித்தீர்கள் என்றால் இன்னும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அங்கே கிடைக்கும்.
இந்தப் பதிவுக்காக நான் மிகச் சுருக்கமாகவும், சில எடுகோள்களையும் மட்டுமே காட்டியிருக்கின்றேன்.
இந்தப் பதிவின் மூலம் நாவலருக்கும் நல்லூர் அறங்காவலருக்கும் இடையிலான சர்ச்சை என்ற பார்வையை விட, நாவலர் நல்லூர் முருகன் மேல் கொண்ட அதீத பக்தி காரணமாகவே உரிமையெடுத்துச் செயற்பட்டார் என்று எண்ணத் தோன்றுகின்றது.
nanragavea ulathu.
maelirunthu kilthan padithen
why appadi post chethirkal
sivaraman
isivraman@hotmail.com
வணக்கம் சிவராமன்
வருகைக்கு நன்றிகள். புது புளாக்கர் பண்ணிய உருப்படாத வேலைகளில் ஒன்று தான் இந்த மேலிருந்து கீழ் நோக்கி நகர்த்தும் பதிவு, இன்னும் சில தினங்களில் நான் ஒரு தொகுப்பைத் தரவிருக்கின்றேன், அது வாசிக்க இலகுவாக இருக்கும்.
கலையக ஒலிபரப்பு பணிகளுக்கிடையில் இவ்வளவு தகவல்களையும் தேடித்தருகிறீர்கள்.விசாலமான வாசிப்பு தேடலுக்கு பாராட்டுக்கள். நல்லை கந்தன் அருள் கிட்டட்டும்.
வணக்கம்
நாவலர் அவர்கள் தமிழுக்குச் சிறப்பான பணிகளைச் செய்திருக்கிறார். மாற்றுக்கருத்தில்லை. குறிப்பாக அவரது வசன நடை மற்றுமு எழுத்துப் பணிகளைக் குறிப்பிடலாம்.
திருக்கேதீச்சர ஆலயத்தை மீள மக்களுக்கு நினைவூட்டினார்.. சிறப்பு.
ஆனால் அவரது ஒரு பணி தொடர்பில் எனக்குக் கோபம் உள்ளது.
அதுதான் இந்த ஆலயங்களை மக்களிடமிருந்து பிரித்து பிராமணர் கைகளில் கொடுத்தது.
மக்களால் மக்களுக்காக வழிபாடாற்றப்பட்ட இடங்களை சிதைக்கும் பணிகளை கச்சிதமாக செய்தார். கண்ணகி வழிபாட்டை ஆகமத்துள் செருகி முத்துமாரி அம்மன் ஆலயங்களாக பிராமணரிடம் தாரை வாரத்தார். அதை அடியொற்றிய செயல்தான் அண்மையில் சுட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயத்தில் பிராமணர் சிலையைத் திருடி ஒளித்தது வரை தொடர்கிறது.
இன்னொன்று, மடாலய அமைப்பில், குறியிட்டு வழிபாட்டு மரபாக திகழும் நல்லூரில் கைவைக்க முனைந்து தோற்றும் போனார்.
எல்லா ஆலயங்களையும் வழிபாட்டு முறைகளையும் பிராமண ஆதிக்கத்துள் விட்டுவிட முடியாது. அப்புறம் தைப்பொங்கலை வீட்டில் பொங்கிவிட்டு ஐயர் வரும்வரை காத்திருக்க வேண்டிய நிலைக்கு வந்துவிடுவோம். வெள்ளிக்கிழமைகளில் வீட்டில சுவாமிப்படத்திற்கு விளக்கேற்றவும் ஐயரிடம் கையேந்தவேண்டிய நிலை வந்துவிடும்.
எந்த ஒரு ஆலயமும் தெய்வ சித்தம் இல்லாமல பூர்த்தியடையாது. பல ஆலயங்கள் பாதியிலேயே பலஅ ண்டுகளாக பூர்த்தியடையாமல் இருப்பது இதற்கு சான்று. நல்லூரின் கருங்கற் திருப்பணிகள் நிறைவேறாமல் போனதுகூட கந்தனின் விருப்பம் அதுவல்ல என்பதற்கு எடுத்துக்காட்டு.
Post a Comment