இவ்வாறே ஒல்லாந்தர் 138 வருடமாகக் கட்டியாண்டு வந்த கரைத்துறை நாடுகள் எல்லாம் ஒருங்கே ஆங்கிலேயர் கைக்கு மாறுகின்றது.
அப்பால் அவன் Genaral Steward ஒரு படையோடு யாழ்ப்பாணம் சென்று அதனையும் எதிர்ப்பாராருமின்றிக் கவர்ந்தான்.
குடிகளும் தத்தமது வருணாசாரத்தையும், சமயாசாரத்தையும் சுயேற்சையாகக் கைக்கொண்டு ஒழுகும் சுயாதீனம் ஆங்கிலவரசால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. முன்னர் போலல்லாது கொட்டில் போல இலைமறைவிற் கிடந்த கோயில்களெல்லாம் வெளிப்படத் தொடங்கின.
அக்காலவேளையில் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் அர்ச்சகராக, கிருஷ்ணையர் சுப்பையரின் பேரர் சுப்பையர் என்ற வால சுப்பிரமணிய ஐயர் இருந்தார். ஆலயத் தர்மகர்த்தாவாக ஆறுமுக மாப்பாண முதலியார் இருந்தார்.
கந்தசுவாமி கோயில் ஆலய நிர்வாகத்தில், பிரதம அர்ச்சகர் சுப்பையருக்கும், தர்மகர்த்தா ஆறுமுக மாப்பாணருக்கும் இடையில் பிரச்சனைகள் முதன்முதலாகத் தோன்றின. ஆலய நிதியைத் தனது சுயதேவைகளுக்காக ஆறுமுக மாப்பாணர் பயன்படுத்துவதாக வழக்கு ஒன்று சுப்பையரால் தாக்கல் செய்யப்பட்டது. பிரதம நீதியரசர் சேர்.அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்ரன் என்பவர் விசாரித்துத் தனது தீர்ப்பில் "ஆலய நிர்வாகத்தை இருவரும் இணைந்தே நிர்வகிக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தார்.
இத்தீர்ப்பு ஆறுமுக மாப்பாண முதலியாருக்குத் திருப்தியைக் கொடுக்காது போகவே 1809 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசுக்குப் பெட்டிசம் ஒன்றைச் சமர்ப்பித்தார். அப்பெட்டிசம் 1811 ஆம் ஆண்டு கறிங்டன் யாழ்ப்பாணக் கலெக்டரால் விசாரணை செய்யப்பட்டு, மாப்பாண முதலியாரின் தகப்பனாரே இக்கோயிலைக் கட்ட முக்கிய காரணராகவிருந்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்டு குருக்களிடம் இருந்த பண்டகசாலையின் ஒரு திறப்பு மீளப்பெறப்பட்டு மாப்பாணரிடம் கையளிக்கப்பட்டது. எனவே யாழ்ப்பாணக் கலெக்டரின் இச்செயலால் கிருஷ்ணையர் சுப்பையரின் பரம்பரையினர் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய உரிமையை இழந்தனர். மாப்பாண குடும்பத்தினர் ஆலயத்தில் ஏகபோக உரிமையைப் பெற்றனர்.
இன்றைய மந்திரி மனைக்குள் கறையான் புற்று
உசாவ உதவியது:
ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா
புகைப்படம்:
1. கறுப்பு வெள்ளை: www.postmancard.net
2. மந்திரிமனைக்குள் கறையான் புற்று: ஊடகவியலாளர் துஷ்யந்தி கனகசபாபதிப் பிள்ளை
4 comments:
ஆங்கிலேயர் குடிகள் தங்கள் தங்கள் வருணாசாரத்தையும் சமயாசாரத்தையும் சுயாதீனமாக பின்பற்றி வரும்படி செய்தனர் - இது இந்தியாவிலும் அப்படியே நடந்ததாக அறிகிறேன். ஒரு பக்கம் சமயப்பரப்பினைச் செய்ய வந்த பாதிரியாருக்கு ஆதரவு தந்தாலும் மறுபக்கம் நிர்வாகத்தில் குழப்பம் இல்லாமல் இருக்க சமயப்பரப்பினைத் தள்ளிவைத்தே வந்திருக்கிறார்களோ ஆங்கிலேயர்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
ஒல்லாந்தர் கையில் இருந்து இலங்கையின் பகுதிகள் எப்படி ஆங்கிலேயர் வசம் ஆனது என்பதை இந்த இடுகையின் மூலம் அறிந்தேன். இதற்கு முந்தைய நல்லூர் இடுகைகளையும் படித்து விட்டேன் பிரபா. பின்னூட்டங்கள் தான் இடவில்லை.
என்ன தான் சுவாதீனமாக சமயத்தையும் ஆசாரத்தையும் பின்பற்ற அனுமதித்தாலும் பிணக்குகளைத் தீர்ப்பதை நிர்வாகத்தின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர் எண்ணியிருந்திருக்கிறார்கள் என்பது இந்தியாவில் நடந்ததாக அறிந்த வழக்குகளிலிருந்தும் இங்கே நீங்கள் சொன்ன நிகழ்ச்சிகளிலிருந்தும் புரிகிறது.
வணக்கம் குமரன்
தொடர்ந்து இப்பகுதிகளை வாசித்து வருவதற்கு மிக்க நன்றிகள்.
எமது சமயத்துக்கு இப்படியான சவால்கள் காலத்துக்குக் காலம் வந்து கொண்டேயிருக்கின்றன.
மந்திரியின் மனைக்குள் கறையான் புற்ற? பாதுகாக் யாரும் இல்லையா? யார் அங்கே என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்கள். துடிக்கின்றது மீசை.
தாசன்
மீசை துடிக்கிறதா? உடனே மீசையை மழித்து விடுங்கள், வேற வழியில்லை ;)
Post a Comment