Wednesday, August 22, 2007
நல்லைக் கந்தனுக்கு முதல் ஆலயம் - ஐந்தாம் திருவிழா
நல்லை நகர் கந்தனுக்கு முதலில் கோயில் கட்டப்பட்டது கி.பி.948 ஆம் ஆண்டிலா அல்லது கி.பி 1248 ஆம் ஆண்டிலா என்பது முடிவு செய்யப்படவேண்டியதொன்றாகும். முதலாவது ஆலயம் கி.பி 948 ஆம் ஆண்டிலே கட்டப்பட்டதெனக் கொண்டால் அது இராசப் பிரதிநிதியாக விளங்கிய புவனேகபாகுவினால் பூநகரி நல்லூரிலே கட்டப்பட்டதாகும். அவ்வாறன்றி முதலாவது ஆலயம் கி.பி.1248 ஆம் ஆண்டு காலிங்க ஆரியச் சக்கரவர்த்தியின் மந்திரியாகவிருந்த புவனேகபாகுவினால் கட்டப்பட்டதாயின் யாழ்ப்பாண நல்லூரிலே அமைக்கப்பட்டிருக்கவேண்டும். இவ்விரு கருத்துக்களிலே பின்னதே சாத்தியமானதும் ஏற்றதுமாகவுள்ளது. இந்த ஆலயம் இருந்த இடத்திலேயே தற்போதுள்ள நல்லைக்கந்தன் ஆலயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகின்றனர்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை முதன்முதலாகக் கட்டிய புவனேகபாகு என்ற பெயர் கொண்டவர் யார்?
கல்வெட்டாதாரங்களும், செப்பேட்டாதாரங்களும் இவர் குறித்துக் கிடையாவிடினும், நூலாதாரங்களும் பதிவேட்டுக் குறிப்பாதாரங்களும் உள்ளன. அவை:
"சிங்கையாரியன் சந்தோஷத்திடனிசைந்து கலைவல்ல சிகாமணியாகிய புவனேகவாகு வென்னும் மந்திரியையும் காசி நகர்க் குலோத்துங்கனாகிய கெங்காதர ஐயரெனுங் குருவையும் அழைத்துக் கொண்டு, தனது பரிவாரங்களுடன் யாழ்ப்பாணம் வந்திறங்கினான்" என்று யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற நூலில் ஜோன் கூறுகிறார். (ஜோன் எஸ் 1882)
சிங்கையாரிய மகாராசன் இப்படியே அரசாட்சியைக் கைப்பற்றி நடாத்தி வருகையில் புறமதில் வேலையுங் கந்தசுவாமி கோயிலையும் சாலிவாகன சகாப்தம் 870 ஆம் வருஷத்தில் புவனேகவாகு என்னும் மந்திரி நிறைவேற்றினான்" என யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூல் கூறுகின்றது. (வைபவ மாலை 1949)
"சிறீமான் மஹாராஜாதிராஜ
அகண்ட பூமண்டலப்ர
தியதிகந்தர விச்றாந்த கீர்த்தி
சிறீ கஜவல்லி மகாவல்லி
சமேத சுப்பிரமண்ய
பாதார விந்த ஜநாதிருட சோடக
மகாதான சூர்யகுல
வம்சோத்பவ சிறீசங்க
போதி புவனேகவாகு"
நல்லூர்க் கோயிலைக் கட்டிய புவனேக பாகு கோயிற் கட்டியத்தில் இன்றும் இவ்வாறு போற்றப்படுகின்றார். இக்கட்டியத்தின் அர்த்தம் வருமாறு:
திருவருட் சக்திகளான வள்ளியம்மனும், தெய்வயானையம்மனும் ஒருங்கே பொருந்த வீற்றிருக்கும் சுப்பிரமணியப் பெருமானின் திருவடித் தாமரைகளை வணங்குபவனும், மன்னர்களுள் மன்னனும், செல்வங்களை உடையவனும், மிகப் பரந்த பூமியடங்கலுமுள்ள
திசைகள் எல்லாவற்றிலும் பரவிய புகழுடையவனும், மக்களுடைய தலைவனும், முதலாம் பெரிய தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்திலே தோன்றியவனும், சிறீ சங்கபோதி என்னும் விருதுப் பெயர் தரித்தவனுமாகிய புவனேகவாகு.
யாழ்ப்பாணக் கச்சேரியில் 1882 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சைவசமயக் கோயில்கள் பதிவேட்டில் பின்வருமாறு காணப்படுகின்றது.
"கந்தசுவாமி கோயில், குருக்கள் வளவு என்ற காணியிற் கட்டப்பெற்றுள்ளது. இது தமிழ் அரசன் ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகவாகரால் 884 ஆம் ஆண்டளவிற் கட்டப்பெற்றது. (குலசபாநாதன் 1971) நல்லூர்க் கந்தசுவாமி கோயில் பிரதம குருக்களாகவிருந்த சுப்பையா என்பார் 1811 இல் ஆள்வோருக்கு அழுதிய முறைப்பாடு ஒன்றில், கோயிலைக் கட்டியவர் பெயர் புவனேகன்கோ (Pooveneageangoo) எனக் குறிப்பிட்டுள்ளார். (Jhonson Alexander - 1916/17)
தகவற் குறிப்புக்கள் ஆதாரம்:
"ஈழத்தவர் வரலாறு"
இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000
ஆக்கியோன்- கலாநிதி க.குணராசா
புகைப்பட உதவி:
Virutal tourist சுற்றுலாத் தளம்
12 comments:
////கந்தசுவாமி கோயில், குருக்கள் வளவு என்ற காணியிற் கட்டப்பெற்றுள்ளது. இது தமிழ் அரசன் ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகவாகரால் 884 ஆம் ஆண்டளவிற் கட்டப்பெற்றது. (குலசபாநாதன் 1971) நல்லூர்க் கந்தசுவாமி கோயில் பிரதம குருக்களாகவிருந்த சுப்பையா என்பார் 1811 இல் ஆள்வோருக்கு அழுதிய முறைப்பாடு ஒன்றில், கோயிலைக் கட்டியவர் பெயர் புவனேகன்கோ (Pooveneageangoo) எனக் குறிப்பிட்டுள்ளார். (Jhonson Alexander - 1916/17)////
இந்த ஆரியச்சக்ரவர்த்தி இலங்கையை ஆண்டவரா அல்லது தமிழகத்தையா ? தமிழகம் என்றால் அப்படி ஒரு சக்ரவர்த்தி இருந்ததாக எனக்கு தெரியவில்லையே ? மேல் விளக்கம் தரமுடியுமா ?
வணக்கம் ரவி
வரலாற்றுக் குறிப்புக்களின் படி யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகளின் வம்சம் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் கலிங்க தேசத்திலிருந்து வந்த உக்கிர சிங்கனின் வம்சத்துடன் ஆரம்பமாகின்றது.
அவர்களில் ஒருவருக்கே புவனேகபாகு முதன் மந்திரியாக இருந்தான் என்று சொல்லப்படுகின்றது.
கலிஙக தேசம் என்பது தென் கிழக்கு இந்தியாவின் பிரதேசங்களை, குறிப்பாக ஒரிஸ்ஸாவின் பகுதிகளையும் ஆந்திராவின் வட எல்லைப் புறத்தையும் உள்ளடக்கும்.
முற்காலத்தில் இந்தியாவின் வட பிரதேசங்களைச் சார்ந்த அரசர்களும் வாணிபம், ஆளுகை எல்லை விருத்திக்காக இப்படி வந்து போனவர்களே.
நல்ல அரிய கருத்துகளை தொடர்ந்து தருவதற்க்கு நன்றிகள். எமது வரலாறு இல்லமல் போய்விடுமா? என்ற பயத்திற்க்கு முற்று புள்ளி இட்டுள்ளிர்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தாசன்
வரலாற்று ஆசிரியர்கள் பலர் செய்த தேடர் பிரகாரம் பதியப்பட்ட ஆய்வுகளை நுகர்ந்து இப்பதிவுகளுக்குப் பொருத்தமானவற்றை மட்டும் எடுத்துத் தரும் சிறு பங்களிப்பு தொடரும்.
பிரபா!!
இவற்றைப் பார்க்கும் போது; அருணகிரியார் (15 ம் நூற்றாண்டு௧ 1400 - 1500) சிந்தனைக்குரியதாக உள்ளது. தொடருங்கள்.
வணக்கம் யோகன் அண்ணா
நீங்கள் ஆண்டைச் சுட்டும் போது அருணகிரி நாதர் காலத்துக்குள் உள்ளடங்குவது புலனாகின்றது. இன்னும் தேடிப் பார்க்கின்றேன், பாடல் இருந்தால் அறியத் தருகின்றேன்.
//கஜவல்லி மகாவல்லி
சமேத சுப்பிரமண்ய
//
முதலில் இதைப் படித்தவுடன் ஒரு நொடி திகைத்தேன். வள்ளி தெய்வயானையை வடமொழிப் படுத்தியிருக்கிறார்கள் என்று அப்புறம் புரிந்தது. பின்னர் மொழிபெயர்த்து நீங்கள் தந்ததிலும் அது உறுதியானது. தெய்வ'யானை' - 'கஜ'வல்லி; வள்ளியம்மை - மகா'வல்லி'. ஏதோ அரைகுறை மொழிபெயர்ப்பாகத் தோன்றுகிறது.
வடமொழியில் ளகர லகர வேறுபாடு கிடையாது என்பதால் வள்ளி வல்லியானது பரவாயில்லை. ஆனால் மகாவல்லி ஆனது எப்படி? யானை கஜம் ஆனது சரி ஆனால் தெய்வயானை கஜவல்லி ஆனது எப்படி? புரியவில்லை.
:-)
வணக்கம் குமரன்
நீஙகள் குறிப்பிட்ட பின்னர் தான் அவதானித்தேன், மொழிபெயர்ப்பில் தெய்வயானையை முன்னுக்குக் கொண்டு வந்து விட்டார்கள் போலும் ;-).
எதுவுமே சொல்லுறதுக்கில்லை
மிக நன்றாயிருக்கிறது
வருகைக்கு நன்றிகள் மாயா
கஜ என்றால் யானை என்று பொருள்படுமென நினைக்கின்றேன் அதுவே தெய்வ யானை = தெய்வானை என்று பொருள் போலும்... முன்னுக்குப் பின் மொழிபெயர்ப்பில் போட்டுவிட்டதாகவே தெரிகிறது...
வாங்கோ தம்பி ஹரன்
குமரன் சுட்டியதும் திருத்திய மொழிபெயர்ப்பை ஏற்கனவே கொடுத்திருக்கின்றேன்.
Post a Comment