Wednesday, September 12, 2007
நிறைவான நல்லூர்ப் பயணம்
இன்றோடு என் நல்லைக் கந்தனின் மகோற்சவ காலப் பதிவுகள் ஒரு நிறைவை நாடுகின்றன. இருபத்தைந்து நாட்களுக்கு முன், எம் பெருமான் முருகக்கடவுளை நினைந்தவாறே நல்லூர்த் திருவிழாக் காலத்தில் ஒவ்வொரு நாளும் பதிவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டேன். மாதத்துக்கு இரண்டு பதிவுகள் இடும் எனக்கு இது அசாதாரண முயற்சியாகவே ஆரம்பத்தில் தோன்றியது. ஆனால் பதிவுக்காக எமது ஈழவரலாற்றாசிரியர்களின் நூல்களை நுகர்ந்து பொருத்தமான பதிவுகளாக்கும் போது சுமை பருத்திப் பஞ்சாய் ஆனது. அத்தோடு என் இந்தப் பதிவுப் பயணத்தில் கூடவே பயணித்து எப்போதும் ஊக்கமளித்த பதிவுலக நண்பர்களுக்கும் பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றேன்.
இந்த நல்லூர்க்காலத்தில் என் நனவிடை தேய்தலாகப் பல பதிவுகளைத் தரவிருந்தேன். ஆனால் வரலாற்று, ஆன்மீக விடங்களோடு இயன்றளவும் உங்களை இருத்தி வைப்பதற்காக அவற்றைத் தவிர்த்து விட்டேன். அவை பிந்திய காலத்தின் பதிவுகளாக வரும்.
எனது இந்தப் பயணத்தில் உதவிய ஈழ வரலாற்றாசிரியர்கள், புகைப்படக் கலைஞர்கள், நல்லைக்கந்தன் மற்றும் நற்சிந்தனைப் பாடல்களையும், சங்கீத கதப்பிரசங்கத்தையும் வெளியிட்டுதவிய அமைப்புக்களுக்கும், யோகர் சுவாமிகளின் ஆக்கத்தை அளித்த அன்பர், மற்றும் பதிவுலக அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்.
ஈழ வரலாறு குறித்த மேலதிக வாசிப்பினைத் தருமாறு தமிழகச் சகோதரர்கள் கேட்டிருந்தீர்கள். எமது சகோதர வலைப்பதிவர் ஈழநாதன் பின்னூட்ட மூலம் மேலதிக தகவல்களை அளித்திருந்தார். நன்றியோடு அந்த இணைப்பையும் கீழே தருகின்றேன்.
நல்லூர் இராசதானி: வ.ந.கிரிதரன்
நல்லைக் கந்தன் பற்றிய வரலாற்று நூலில் நான் வாசித்தபடி ஜமுனா ஏரிக்கு அண்மையில் தான் முன்னைய கோயில் இருந்தது என்றும்.தற்போதைய இடம் முஸ்லிம்கள் குடியிருந்த இடமென்றும் ஞாபகமிருக்கிறது.தவிர நல்லூர் கோவில் ஞானியொருவரின் சமாதி மேல் கட்டப்பட்டிருப்பதால் ஆரம்பத்தில் மடாலயம் என்றே அழைக்கப்பட்டது
இதே நேரம் நல்லூரோடு யாழ்ப்பாணச் சரித்திரத்தையும் அறிந்து கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு நூலகத்திலிருந்து தொடர்புடைய நூல்களுக்கான சுட்டிகள்:
யாழ்ப்பாணச் சரித்திரம்: ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை - PDF வடிவில்
யாழ்ப்பாண வைபவ மாலை: முதலியார் குல.சபாநாதன் - PDF வடிவில்
இதுவரை நாளும் நல்லை நகர்க் கந்தனாலயத்தின் மகோற்சவ காலப் பதிவுகளாக அணி செய்த பதிவுகளின் தொகுப்பை உங்கள் வசதிக்காக இங்கே தருகின்றேன்.
முதலாந் திருவிழா - நல்லூர்க் கந்தனிட்டைப் போவோம்
இன்று ஆரம்பித்த நல்லைக் கந்தன் மகோற்சவ காலத்தில் தொடர்ச்சியாக 25 நாட்கள் நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பையும், இந்தத் திருவிழா நம் தாயகத்து மக்களுக்கு ஒரு ஆன்மீக மற்றும் சமூக ஒன்று கூடலுக்கான நிகழ்வாக இருந்து வருவதையும் வரலாற்று மற்றும் நனவிடை தோய்தல் மூலம் பதிவுகளாக்க முயல்கின்றேன்.
இரண்டாந் திருவிழா - கோயிலுக்கு வெளிக்கிட்டாச்சு
கொஞ்ச தூரம் சென்றதும் பயணக் களைப்புத் தெரியாமல் இருக்க எனக்குக் கதை சொல்ல ஆரம்பிப்பார் அப்பா என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் நானே முந்திக் கொண்டு,
"அப்பா! இண்டைக்கு எனக்கு நல்லூர்க் கோயில் வரலாற்றைச் சொல்லுங்கோவன்"
என்று ஆவலோடு நான் அடியெடுத்துக் கொடுக்கிறேன்.
நல்லூர் இராசதானி - மூன்றாந் திருவிழா
இவ்வாறு பலதிறப்பட்ட மூலாதாரங்களைப் பயன்படுத்தியே யாழ்ப்பாண அரசு குறிப்பாக அதன் தலைநகர் நல்லூர் பற்றி ஓரளவாவது அறியக்கூடியதாகவுள்ளது. ஏற்கனவே முக்கியத்துவம் வாய்ந்த ஒருபகுதியாயிருந்து சோழப் பேரரசு தொடர்ந்து ஏற்பட்ட பாண்டியப் பேரரசு ஆட்சிக் காலங்களிலே முக்கியத்துவம் பெற்ற நல்லூர், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் உதயம் பெற்ற தமிழரசின் தலைநகராகச் சுமார் நான்கு
நூற்றாண்டுகளாக விளங்கியுள்ளது.
அழிவுற்ற நல்லூர் இராசதானி - நாலாந் திருவிழா
யாழ்ப்பாண இராசதானியின் தலைநகராக விளங்கிய நல்லூரைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் இங்கிருந்த கோட்டையையும், ஆலயங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆ.முத்துத் தம்பிப் பிள்ளை தமது யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில் நல்லூர் இராசதானிக்குரிய கற்சாசனங்களும், கற்றூண்களும் யாழ்ப்பாணக் கோட்டையில் வைத்துக் கட்டியிருப்பதாகச் சொல்கின்றார்.
நல்லைக் கந்தனுக்கு முதல் ஆலயம் - ஐந்தாம் திருவிழா
நல்லை நகர் கந்தனுக்கு முதலில் கோயில் கட்டப்பட்டது கி.பி.948 ஆம் ஆண்டிலா அல்லது கி.பி 1248 ஆம் ஆண்டிலா என்பது முடிவு செய்யப்படவேண்டியதொன்றாகும். முதலாவது ஆலயம் கி.பி 948 ஆம் ஆண்டிலே கட்டப்பட்டதெனக் கொண்டால் அது இராசப் பிரதிநிதியாக விளங்கிய புவனேகபாகுவினால் பூநகரி நல்லூரிலே கட்டப்பட்டதாகும். அவ்வாறன்றி முதலாவது ஆலயம் கி.பி.1248 ஆம் ஆண்டு காலிங்க ஆரியச் சக்கரவர்த்தியின் மந்திரியாகவிருந்த புவனேகபாகுவினால் கட்டப்பட்டதாயின் யாழ்ப்பாண நல்லூரிலே அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.
யார் இந்த செண்பகப் பெருமாள்? - ஆறாந் திருவிழா
ஆறாம் பராக்கிரமபாகு கோட்டையில் கி.பி 1415 இல் அரசனாகிய பொழுது பல நூற்றாண்டுகளாகப் பலவீனமுற்றிருந்த சிங்கள இராச்சியம் மீண்டும் வலுப்பெற்றது. மலைப் பிரதேசத்தையும் வன்னிகள் பலவற்றையும் கைப்பற்றிக் கொண்ட பின் பராக்கிரமபாகு யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது கவனஞ் செலுத்தினான். அக்காலத்திலே கனக சூரிய சிங்கையாரியானின் ஆட்சி யாழ்ப்பாண இராச்சியத்திலே விளங்கி வந்தது.
உயிர்த்தெழுந்த இரண்டாம் ஆலயம் - ஏழாந் திருவிழா
கி.பி 1248 ஆம் ஆண்டு புவனேகபாகு எனும் அமைச்சரால் முதன்முதலாகக் கட்டப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கி.பி 1450 ஆம் ஆண்டு, சப்புமல் குமரயாவின் படையெடுப்பால் தகர்த்தழிக்கப்பட்டது. தான் புரிந்த பாவத்துக்குப் பரிகாரம் தேடுவான் போன்று குருக்கள் வளவு என்ற இடத்தில் அழிக்கப்பட்ட நல்லூர்க் கோயிலை மீண்டும் புதிதாகக் கட்டுவித்தான்.
போர்த்துக்கேயர் வருகை - எட்டாந் திருவிழா
கி.பி 1505 ல் போர்த்துக்கல் தேசவாசிகள் சிலர், பிராஞ்சிஸ்கோ தே அல்மேதா என்பவைத் தலைவனாகக் கொண்டு காலித்துறைமுகத்தை அடைந்தனர். காலித் துறைமுகம் இலங்கையின் தென் மேற்குப் பிராந்தியத்தில் உள்ளது. அப்போது தர்மபராக்கிரமவாகு என்பவன் தென் இலங்கை அரசனாய் கோட்டைக்காடு என்னும் நகரத்திலிருந்து அரசாட்சி செய்தான். போர்த்துக்கேயர் அவனிடம் அனுமதி பெற்று பண்டசாலை ஒன்றைக் கட்டினர். போர்த்துக்கேயரைப் பறங்கியர் என்பது அக்காலம் தொட்ட வழக்கு.
சங்கிலி மன்னன் அரசாங்கம் - ஒன்பதாந் திருவிழா
பரராசன் இறக்கும் வரை அவன் பொருட்டு கீரிமலை திருத்தம்பலேஸ்வரன் கோயிலையும் நல்லூர்க் கந்தசாமி கோயிலையும் மாத்திரம் இடியாது விட்டிருந்தனர். அவன் இறந்த பின்னர் அவற்றையும் இடித்தொழித்தார்கள். அவர்கள் நல்லூர்க் கந்தசாமி இடிக்கும் முன்னே அதன் மெய்க்காப்பாளனாக இருந்த சங்கிலி என்பவன் அக்கோயில் விதானங்கள் வரையப்பெற்ற செப்பேடு, செப்பாசனங்களையும், திருவாபரணங்களையும் கொண்டு மட்டக்களப்புக்கு ஓடினான்.
கந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் - பத்தாந் திருவிழா
இக்கோயிலைத் தமது கட்டுப்பாட்டில் போர்த்துக்கேயர் வைத்திருக்கும் காலத்தில் தஞ்சாவூரில் இருந்து படையெடுப்புக்கள் இரண்டை எதிர்கொண்டதாகவும் , மூன்றாம் தடவை மேற்கொண்ட படையெடுப்பில் அப்படைத்தலைவனுக்கு இக்கோயிலில் வைத்தே தண்டனை கொடுத்ததாகவும் சுவாமி ஞானப்பிரகாசர் கூறுகின்றார். இவ்வாறு சில காலம் அரணாகப் பயன்படுத்தப்பட்ட இக்கோயில் 2.2.1621 இல் அழிக்கப்பட்டதாக குவேறோஸ் கூறுகின்றார்.
கந்தமடாலயம் அமைந்த கதை - பதினோராந் திருவிழா
ஒல்லாந்தர் ஆட்சியின் போது முன்பிருந்த போர்த்துக்கேயர் போல் அல்லாது பிறசமயங்களின் மீது தமது வன் கண்மையைக் குறைத்துக் கொண்டனர் என்று கூறப்படுகின்றது. முந்திய நல்லூர்க் கோயிலின் அர்ச்சக சந்ததியின் வழித் தோன்றலாக இருந்த கிருஷ்ணயர் சுப்பையர் என்ற பிராமணர், புராதன கந்தசுவாமி கோயில் இருந்த இடத்துக்கு அண்மையில் மடாலயம் ஒன்றினை நிறுவி வேலினைப் பிரதிஷ்டை செய்து வழிபாட்டியற்றக் காரணமாகவிருந்தார்.
குருக்கள் வளவில் எழுந்த கந்தவேள் கோட்டம் - பன்னிரண்டாந் திருவிழா
பொதுமக்களிடமிருந்து பெற்ற நிதியில் ஆலயத் திருப்பணி நிறைவேற்றப்பட்டு இரகுநாத மாப்பாண முதலியாரின் நிர்வாகத்தில் கிருஷ்ணையர் சுப்பரே அக்கோயிலின் முதற் பூசகராகவிருந்து ஆலயக் கிரியைகளை ஆச்சாரத்தோடு நடாத்திவந்தார்கள்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் மகாமண்டபத்துக்கு கீழைச் சுவரிலே மேற்கு முகமாக இக்கோயில் தாபகராகிய இரகுநாத மாப்பாண முதலியார் பிரதிமையும், அவர் மனைவி பிரதிமையும் வைக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியர் காலத்து நல்லூர் - பதின்மூன்றாந் திருவிழா
கந்தசுவாமி கோயில் ஆலய நிர்வாகத்தில், பிரதம அர்ச்சகர் சுப்பையருக்கும், தர்மகர்த்தா ஆறுமுக மாப்பாணருக்கும் இடையில் பிரச்சனைகள் முதன்முதலாகத் தோன்றின. ஆலய நிதியைத் தனது சுயதேவைகளுக்காக ஆறுமுக மாப்பாணர் பயன்படுத்துவதாக வழக்கு ஒன்று சுப்பையரால் தாக்கல் செய்யப்பட்டது. பிரதம நீதியரசர் சேர்.அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்ரன் என்பவர் விசாரித்துத் தனது தீர்ப்பில் "ஆலய நிர்வாகத்தை இருவரும் இணைந்தே நிர்வகிக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தார்.
நல்லூரும் நாவலரும் - பதின்னான்காம் திருவிழா
நல்லை நகர்க் கந்தனைப் பற்றிச் சொல்லும் போது நல்லை நகர் ஆறுமுக நாவலரைத் தவிர்த்து எழுதமுடியாத அளவிற்கு இவரின் பந்தம் இருக்கின்றது. நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை சிவாகமங்களுக்கும், குமார தந்திரத்திற்கும் இணக்க அவர் விரும்பினார்.
பொப் இசையில் மால் மருகன் - பதினைந்தாம் திருவிழா
கடந்த பதிவுகளில் நல்லூர் முருகன் ஆலயம் தொடர்பில் வரலாற்றுப் பதிவுகள் அமைந்திருந்தன. தொடர்ந்து வரும் நல்லைக் கந்தன் திருவிழாக் காலத்தில் மேலும் சில படையல்களோடு அமைய இருக்கும் இவ்விசேட பதிவுகளில் இன்று நான் தருவது, நல்லூர்க் கந்தன் புகழ் பாடும் பொப்பிசைப் பாடல்.
எந்நாளும் நல்லூரை வலம் வந்து....! - பதினாறாந் திருவிழா
நல்லூர் விழாக் காலப் பதிவுகளில் இன்றைய படையலாக வருவது சிவயோக சுவாமிகளின் இரண்டு நற்சிந்தனைப் பாடல்களின் ஒலி வடிவமும், அவற்றின் எழுத்து வடிவமும். முதலில் வரும் "எந்நாளும் நல்லூரை" என்ற பாடலைத் தாங்கிய இசைப் பேழை யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் சிவதொண்டன் நிலையத்தினரால் வெளியிடப்பட்டது.
நல்லைக் கந்தசுவாமி மீது வாழி விருத்தம் - பதினேழாந் திருவிழா
நல்லை நகர் நாயகன் கந்தப் பெருமானின் பதினேழாந் திருவிழாவில் இரண்டு பகிர்வுகளைத் தருகின்றேன். முதலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் அருளிச் செய்த நல்லைக் கந்தசுவாமி மீது வாழி விருத்தம் இடம் பெறுகின்றது.
நல்லை நகர்க் கந்தரகவல் - பதினெட்டாந் திருவிழா
இஃது ஆறுமுக நாவலரவர்கள் தமையன்மாருளொருவரும் கதிரையத்திரை விளக்கத்திலுள்ள பல கீர்த்தனங்கள் செய்தவருமாகிய பரமானந்தப் புலவர் செய்தது
உந்தன் அருள் வேண்டுமடா முருகா - பத்தொன்பதாந் திருவிழா
பத்தொன்பதாந் திருவிழாப் பதிவில் இரண்டு நல்லை முருகன் பாடல்கள் ஒலியிலும், எழுத்திலுமாக வருகின்றன. பாடலாசிரியர் தாயகக் கவி புதுவை இரத்தினதுரை, இசை வழங்கியவர் இசைவாணர் கண்ணன், பாடல்களைப் பாடுகின்றார் இசைக்கலைமணி ஸ்ரீ வர்ணராமேஸ்வரன்.
எங்கள் குருநாதன் - இருபதாந் திருவிழா
யோகர் சுவாமிகளைப் பற்றி நினைக்கும் போது “நிலந்தன் மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி” என்ற சிவபுராண அடிகள் எனக்கு எப்பொழுதும் நினைவுக்கு வரும்.
ஈசனே நல்லூர் வாசனே - இருபத்தியோராந் திருவிழா
இன்றைய திருவிழாப் பதிவில் சிவயோக சுவாமிகள் அருளிச்செய்த இரண்டு நற்சிந்தனைப் பாடல்கள் இடம்பெறுகின்றன. அத்தோடு இந்த ஆண்டு நல்லைக் கந்தனாலயத்தில் நிகழ்ந்த திருமஞ்சத் திருவிழாப் படங்களும் அலங்கரிக்கின்றன.
"சும்மா இரு" - இருபத்தியிரண்டாந் திருவிழா
இன்றைய திருவிழாப் பதிவில், சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த "நல்லூரான் திருவடியை என்ற பாடலை" இன்னிசை வேந்தர் பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடக் கேட்கலாம். தொடர்ந்து பெயர் குறிப்பிட விரும்பாத சிட்னி அன்பர் எழுதித் தந்த "சும்மா இரு" என்ற ஆக்கமும் இடம் பெறுகின்றது.
"முருகோதயம்" சங்கீதக் கதாப் பிரசங்கம் - சப்பரத் திருவிழா
"முருகோதயம்" என்னும் இச்சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள்.
தேர் காண வாருங்கள்....கந்தனைத் தேரினில் பாருங்கள்...! - இருபத்துநான்காந் திருவிழா
இன்று நிகழ்ந்த இந்தச் சிறப்பான நாளின் நிகழ்வுகளை நீங்களும் காது குளிரக் கேட்க வேண்டும் என்ற ஆவலில், இடம்பெற்ற சில படையல்களை இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன். அத்துடன் இப்பதிவில் இடம்பெறும் நிகழ்வுப் படங்கள் 2005 இல் நல்லைக் கந்தனாலயத் தேர்த் திருவிழாவில் எடுக்கப்பட்டவையாகும்.
நல்லூரான் தீர்த்தோற்சவம் - இருபததைந்தாந் திருவிழா
இன்றைய நல்லை நகர் நாதன் தீர்த்தோற்சவ நன் நாளில் ஒரு இனிய ஈழத்து மெல்லிசையில் நல்லைக் கந்தன் பாடல் வருகின்றது. பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் யாத்த "நல்லை முருகன்" பாடலை, மோகன்ராஜ் இசையமைப்பில் ரகுநாதன் பாடுகின்றார்.
விசேட பதிவுகள்
மஞ்சத் திருவிழாவில் தங்கரதம் வந்தது வீதியிலே....!
2007 நல்லைக்கந்தனின் சப்பரத் திருவிழாப் படங்கள்
2007 நல்லைக்கந்தனின் ரதோற்சவப் படங்கள்
15 comments:
நல்லூர் திருவிழா உற்சவம்
காணமுடியாத நிலையிலிருக்கும்
ஈழத்தமிழர்களுக்காக நான் செய்த உதவி தங்களின் பதிவுகளை
இங்கு வாழும் ஈழத்து நண்பர்களுக்கு சுட்டி காட்டி,அவர்கள் மகிழ, நானும் மகிழ்ந்தேன்!
வரலாற்று பதிவாக்கியமைக்கு நன்றிகளுடன்!
நாளும் வழிபடுவோம், நல்லூர் முருகனை!
நிறைவான பதிவு.. படித்த எங்களுக்கு.
மிக்க நன்றி.
//ஆயில்யன் said...
நல்லூர் திருவிழா உற்சவம்
காணமுடியாத நிலையிலிருக்கும்
ஈழத்தமிழர்களுக்காக நான் செய்த உதவி தங்களின் பதிவுகளை
இங்கு வாழும் ஈழத்து நண்பர்களுக்கு சுட்டி காட்டி,அவர்கள் மகிழ, நானும் மகிழ்ந்தேன்!//
வணக்கம் ஆயில்யன்
தங்களின் பின்னூட்டம் பார்த்து உண்மையிலேயே நெகிழ்ந்து போனேன். கடல் கடந்து வாழும் எம்முறவுகளுக்கு எங்களால் முடிந்த பணியைச் செய்ய வைத்ததற்கு அந்த நல்லூரானை நன்றியுடன் நினைக்கின்றேன்.
பிரபா!
இன்னும் அனைத்துப் பதிவுகளையும் வாசிக்கவில்லை. ஆயினும் தொடர்பதிவொன்றினைத் தடையின்றித் தந்தமைக்காகப் பாராட்டுக்கள். பதிவுகள் குறித்துப் பின்னர்...
நல்லூர்
வேண்டியன பெற்றுத் தரும் நல்லூர்
தமிழ்க் கூட்டம் நாடிச் செல்லூர்
அந்த நல்லூரில் குடிகொண்ட கந்தப் பெருமானின் அருளை ஒவ்வொரு நாளும் வாறி வாறி வழங்கிப் பதிவுலகில் தானொரு பாரி என்று நின்ற கானா பிரபாவிற்கு நன்றி. நெல்லிக்கனி ஒன்றுதான் கொடுத்தான் அதியமான். நாளொன்றுக்கும் பதிவுகள் கொடுத்தான் இந்த அதிகமான். முருகனருள் முன்னின்று வாழ்க. நல்லதொரு தொகுப்பாக இந்தப் பதிவுகள் நின்று நிலைக்க விரும்புகிறேன்.
பிரபா!
எனக்குக இவ்வருடம் கோவிலில் நானும் நின்றது போல் இருந்தது.
நாளும் காலை கணனியைத் திறந்து,நல்லூரானைக் கண்ணில் வைத்து விட்டு அடுத்த அலுவல் பார்க்கும் படி இருந்தது.
சுடச் சுடப் படமனுப்பிய செந்தூரன் மற்றும் அனைவருக்கும் நன்றி!
அடுத்த வருடம் நேரில் பார்க்க அழைக்கட்டும்.
//வடுவூர் குமார் said...
நிறைவான பதிவு.. படித்த எங்களுக்கு.
மிக்க நன்றி. //
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வடுவூர் குமார்
அருமையான பணி தலைவா :)
அருமையான பாடல்கள், புகைப்படங்கள், வராலற்று தகவல்கள் என ஒவ்வொரு நாளும் சிறந்த பதிவுகளை இட்டமைக்கு மிக்க நன்றிகள் :)
//மலைநாடான் said...
பிரபா!
இன்னும் அனைத்துப் பதிவுகளையும் வாசிக்கவில்லை. ஆயினும் தொடர்பதிவொன்றினைத் தடையின்றித் தந்தமைக்காகப் பாராட்டுக்கள். பதிவுகள் குறித்துப் பின்னர்... //
மிக்க நன்றி மலைநாடான், மற்றைய பதிவுகளையும் வாசித்து முடிந்தால் அபிப்பிராயம் சொல்லுங்கள்
// G.Ragavan said...
முருகனருள் முன்னின்று வாழ்க. நல்லதொரு தொகுப்பாக இந்தப் பதிவுகள் நின்று நிலைக்க விரும்புகிறேன். //
வணக்கம் ராகவன்
தமிழ் வன்மையினாலேயே பின்னூட்டத்தைச் சிறப்பித்து விட்டீர்கள். தங்கள் அன்புக்கு நன்றி
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
எனக்குக இவ்வருடம் கோவிலில் நானும் நின்றது போல் இருந்தது.//
வணக்கம் யோகன் அண்ணா
இந்தப் பெரும் பணிக்கு நீங்கள் ஓவ்வொரு பதிவிலும் தந்த ஊக்கமும் ஒரு பெரும் உதவியளித்தது. என்னோடு பயணித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
//கோபிநாத் said...
அருமையான பணி தலைவா :)//
மிக்க நன்றி தலைவா
பிரபா
நல்லூர்க் கந்தன் பொப் இசைப் பாடல் சிங்களவர் மத்தியில் வெகு பிரசித்தமானது.
எல்லோரையும் கவரக் கூடிய பாடல் அது.
சுமார் ஒரு மாதகாலமாகத் தொடர்ந்த உங்களது பணி இனிதே நிறைவு பெற்றுவிட்டது.வாழ்த்துக்கள்.
பஹீமாஜஹான்
வணக்கம் சகோதரி பஹீமாஜஹான்
உங்கள் வரவு மகிழ்ச்சியளிக்கின்றது.
ஏ.ஈ.மனோகரனின் பரவலாக அறியப்பட்ட சிறந்த பொப் இசையில் இதுவுமொன்று.
இன்று தான் உங்கள் கவிதைகளை ஆனந்த விகடனில் வாசித்து மகிழ்ந்தேன். உங்களின் கவிதைகள் பரவலான வாசகர் வட்டத்தைச் சென்றதையிட்டு மகிழ்ச்சியடைவதுடன் என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஈழத்துக் கலைஞர்கள், வரலாறு போன்றவற்றை அவ்வப்போது எடுத்து வருகிறீர்கள். உங்கள் ஆக்கங்கள் மிகவும் எளிமையான முறையில் பல பழைய நினைவுகள மீட்டி வருகின்றது. உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி ஒரு கோர்வையாக தருவதில் உங்கள் எழுத்து திறனின் வலிமை தெரிகின்றது. உங்கள் முயற்சிகள் மேலும் வளர வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் காரூரன்
Post a Comment