|
ராகம்: பிலஹரி
தாளம்: ரூபகம்
பல்லவி
எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே
அனுபல்லவி
அந்நாளில் ஆசான் அருந்தவஞ் செய்த இடம்
அது ஆதலாலே அதிசயம் மெத்தவுண்டு
(எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)
சரணம்
வேதாந்தம் சித்தாந்தம் கற்றதனால் என்ன
வேடிக்கைக் கதைகள் பேசினால் என்ன
வீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால்
வில்லங்கம் எல்லாம் இல்லாமல் போமே
(எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)
சத்தியம், பொறுமை, சாந்தம், அடக்கம்
நித்தியா நித்தியம் பெறினும் - நிபுண
பக்தி செய் உத்தமர் பரவும் நல்லூரில்
நித்தியம் வந்து பார்த்தால் முத்தி நிச்சயமே
(எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)
0000000000000000000000000000000000000000000000000000000000000000
சிட்னியில் இயங்கும் யோகர் சுவாமி நிலையம் யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைப் பாடல்கள், மற்றும் சொற்பொழிவுப் பகிர்வுகளை தொடர்ந்து மாதாந்தோறும் நடாத்தி வருகின்றது. அது குறித்த இன்னும் மேலதிகத் தகவல்களை அடுத்து வரும் பதிவொன்றில் தருகின்றேன். இன்றைய பதிவிலே அக்கூட்டுப் பிரார்த்தனையில் பாடப்பெற்ற "நல்லூரான் திருவடியை" என்ற பாடலின் ஒலிப்பதிவையும், எழுத்து வடிவையும் தருகின்றேன். ஒலிப்பதிவின் இறுதியில் சில அடிகள் மட்டும் பதியப்படாமைக்கு மனம் வருந்துகின்றேன்.
|
நல்லூரான் திருவடியை
நான்நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனெடி - கிளியே!
இரவுபகல் காணேனெடி.
ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி
நான்மறந்து போவேனோடி - கிளியே!
நல்லூரான் தஞ்சமெடி.
தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எனக்காமெடி - கிளியே!
கவலையெல்லாம் போகுமெடி.
எத்தொழிலைச் செய்தாலென்
ஏதவத்தைப் பட்டலென்ன
கர்த்தன் திருவடிகள் - கிளியே!
காவல் அறிந்திடெடி.
பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே!
ஆறுமுகன் தஞ்சமெடி.
சுவாமி யோகநாதன்
சொன்னதிருப் பாட்டைந்தும்
பூமியிற் சொன்னாலெடி - கிளியே!
பொல்லாங்கு தீருமெடி.
நன்றி:
எனது இந்த நல்லூர்க்காலப் பதிவுகளில் உதவியளிக்க வேண்டும் என்ற விருப்போடு, இந்தப் பதிவில் இடம்பெற்ற "எந்நாளும் நல்லூரை", மற்றும் "நல்லூரான் திருவடியை" பாடல்களின் ஒலிப்பதிவைத் தந்துதவிய திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள்.
"நல்லூரான் திருவடியை" எழுத்து வடிவைத் தந்த சகோதரர் கன.சிறீதரன் வலைப்பதிவு.
நல்லூர் முருகன் உள் ஆலயப் புகைப்படம்: http://www.tamilshots.com/
6 comments:
ஞாயிறு காலையில் கந்தனின் அற்புதமான இசையறிமுகத்தைத் தந்தமைக்கு நன்றி பல.
எந்தநாளும் நல்லூரை என்ற பாடல் பாரம்பரியப் பாணி என்றால் "நல்லூரான் திருவடியை" பாடல் காவடிச் சிந்து. கழுகுமலை அண்ணாமலை ரெட்டியார் இயற்றிய வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னால் கூட உள்ளம் குழையுதடி என்ற பாடலின் மெட்டில் பாடியிருக்கின்றார்கள். கேட்க இரண்டு பாடல்களும் இதம். இதம்.
எந் நாளும் இளையத்தில் நல்லூர்ரளை ஆழைத்து வருவதற்க்கு நன்றி அண்ணா
வணக்கம் ராகவன்
தங்களின் ஒப்பீடு அருமை. எந்நாளும் பாடலை இன்று தான் நானும் கேட்டு அனுபவிக்கக் கூடியதாக இருந்தது.
நல்லூரான் திருவடியைப் பாடலின் இன்னொரு வடிவைத் தொடர்ந்த பதிவுகளில் ஒன்றில் தருகின்றேன்.
//தாசன் said...
எந் நாளும் இளையத்தில் நல்லூர்ரளை ஆழைத்து வருவதற்க்கு நன்றி அண்ணா //
வணக்கம் தாசன்
எந்நாளும் பதிவுக்கு வந்து ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றிகள்
பிரபா!
தமிழ்ப் பாட்டு கச்சேரி செய்ய இல்லையே எனும் வித்துவான்கள், நன்கு பாடலாம் இந்தப் பாடல்களை.
அருமையான பாடல் அழகாகப் பாடியுள்ளார். மகாராஜபுரம் சந்தானம் குரல் போல் உள்ளது. நம் பொன் சுந்தரலிங்கமா?..பரம் தில்லைராஜாவா??
யாரோ...மிகப் பிடித்தது. நன்றி
வணக்கம் யோகன் அண்ணா
நீங்கள் சொன்னது போல் தமிழிசை தேடுவோருக்குப் பொருத்தமான பாடல். பொன் சுந்தரலிங்கமாக இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கின்றேன். யாராவது உறுதிப்படுத்தினால் நல்லது.
Post a Comment