Monday, September 03, 2007
நல்லை நகர்க் கந்தரகவல் - பதினெட்டாந் திருவிழா
நேரிசையாரியப்பா
(இஃது ஆறுமுக நாவலரவர்கள் தமையன்மாருளொருவரும் கதிரையத்திரை விளக்கத்திலுள்ள பல கீர்த்தனங்கள் செய்தவருமாகிய பரமானந்தப் புலவர் செய்தது.)
கடன்முகட் டுதித்த செங் கதிரெனத் திகழும்
படம்விரித்தொழுந்த பஃறலை யரவின்
பருமணித் தொகையு மரிமணிக் குவையும்
பச்சையும் வயிரமு மற்றைய மணியும்
விண்ணகத் திடையிடை தண்ணிழல் விடுப்ப
இந்திர வில்லென் றினமயி லேமாந்
தங்கணு மகவுஞ் செம்பொனி னிமையத்
தண்கிரி நடுவட் டழைத்தெழு பச்சைப்
பைங்கொடி யன்றருள் பண்ணிய மருந்தே
இருவராண் டளந்து மொருகரை காணாக்
கருணைவா ரிதியின் விளையுமா ரமுதே
கருத்துறக் கருதிக் கசிந்தவ ருள்ளத்
திருட்டொகை துரக்குந் திருத்தகு விளக்கே
இல்லையென் றொருவரை யிரவா தடியவர்
அல்லனோ யகற்றியின் பருளுநன் நிதியே
வண்டினங்க் குடைந்துபண் பாடிட வளர்முகை
விண்டலர் கடம்பெனும் வெறிமலர்த் தொடையனே
கோகன கத்தில்வாழ் கரவனைச் சிறைபுரிந்
தாருயிர் படைத்தரு ளளித்திடு முதல்வனே
கீரனைச் சிறைசெயுந் கிருத்திமந் தனைநெடு
வீரவேல் விடுத்துமுன் வீட்டிய விமலனே
அருட்குரு வாகிமுன் னகத்தியர்க் கருமறை
தெருட்டுநல் லுணர்வருள் சிற்பரா னந்தனே
நாரதன் மயக்கத்தினில் நணுகுறு செச்சையை
ஊர்தி யெனப் பிடித் தூர்ந்திடு மொருவனே
ஆறுருத் தனையுமோ ரங்கையா லணைத்துமை
ஓர்வடி வாத்திரட் டியவொகு முருகனே
தடநெடுஞ் சரவணந் தனிலறு மங்கையர்
குடமுலை யுறுபால் குடித்திடுங் குமரனே
ஆவினன் குடியினு மரியவே ரகத்தினுஞ்
சீரலை வாயினுந் திருப்பரங் கிரியினும்
பழமுதிர் சோலையென் றுரைபெறு மலையினும்
உளமகிழ் வோடுறை யொப்பிலா முதல்வனே
கொன்றுதொரு றாடல்செய் துலவிடுங் குழகனே
அதிர்கருங் கடல்புடை யாடர்ந்தவம் புவிதொழுங்
கதிரையங் கிரியுறை கங்கைதன் புதல்வனே
குடவளை யினம்பல குமிறுதண் பனையொடு
தடமலர் வாவிகள் தயங்குநல் லூரனே
அன்பினர் நெஞ்சத் தடந்தொறு மலர்ந்தநின்
பங்கயப் பாதமென் சிந்தைவைத் தியம்புவன்
மாயிரு ஞாலத்து மக்களிற் பற்பலர்
தந்தையுந் தாயும் தமருந் தனயருஞ்
செஞ் சொல்வஞ் சியருந் தேடிய பொருளும்
மீமிசைப் பவக்குழி வீழ்த்திடப் பிணித்த
பாசமென் றெல்லாம் பற்றறத் துறந்து
காட்டிடைப் புகுந்தொரு காலினை முடக்கிமேல்
நோக்கிய கண்ணோடு கூப்பிய கையுமாய்
நெடுந்தவம் புரிந்து மெலிந்தனர் தளர்ந்துங்
காற்றுதிர் ச்ருகுங் காயுங் கனியும்
வாய்த்தன வருந்தி வருந்தின ருலைந்தும்
பேயெனத் திரிந்தும் பேருடல் வரண்டுங்
கானிடை விலகெனக் காண்வர வுழன்றும்
வேற்றொரு தேவரை வேண்டார் நின்னடி
போற்றினர் முத்தி புகுவது பொருளாய்
அங்கவை யனைத்துஞ் சிந்தைசெய் யாது
தண்டலை மலர்விழும் வண்டின மென்னக்
கண்டன கண்டன காமுற்று வைகலும்
அறுசுவை யமுத மொருசுவை குறைந்துழி
அட்டனர் வெருவ வெட்டென வெகுண்டுந்
தண்ணறுஞ் சாந்து சவாது குங்குமம்
ஒண்மலர்ச் சூட்டென் றுள்ளன புனைந்தும்
நன்னெறி படர்கிலார் நட்பினை நயந்தும்
நாணிலாக் கணிகையர் நயனவேற் குடைந்தும்
வாணா ளெல்லாம் வீணாக் காழித்தனன்
தினகரர் போலொளி திகழ் முக மாறும்
ஒருமர வடிவா யுலகினை புலைத்தசூர்
இருபிள வாக வெறிந்திமை யோர்கள்
சிறை தவிர்த் தருளிய திருநெடு வேலும்
மற்றுள படையும் வரதமு மபயமும்
உற்றிடு பன்னிரு கைத்தல நிரையும்
அருவரை யனைய வகலமு மிரண்டு
மடவன முவந்து வாழ்வுறு பாலும்
கலகலென் றிசைக்கு நின் கழலுங் காட்டி
மரகதக் கலாப மயின் மிடைத் தோன்றும்
வடிவினை வாழ்த்தி மறவா துள்கி
இரவினும் பகிலினு மிறைஞ்சிலே னாயினும்
உன்னையே தெய்வமென் றுளத்துட் டுணிந்தனன்
அன்னது துணிந்தேற் குன்னது பாரஞ்
சினமொடு தீமையு மனமடு காமமும்
நெறியிடைப் புகாத பொருளிடைச் செலவும்
நரகிடை வீழ்த்துங் கொலைகள் வாதியும்
இன்னவு மிம்மையிலகற்றி
அம்மையின் முத்தி யருளூ மாறே.
திருச்சிற்றம்பலம்
நன்றி:
ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு - வெளியீடு: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்
புகைப்படம் உதவி: Ishta Siddhi Shree Subramanyaswamy Trust
0 comments:
Post a Comment