



இன்றைய திருவிழாப் பதிவில், சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த "நல்லூரான் திருவடியை என்ற பாடலை" இன்னிசை வேந்தர் பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடக் கேட்கலாம். தொடர்ந்து பெயர் குறிப்பிட விரும்பாத சிட்னி அன்பர் எழுதித் தந்த "சும்மா இரு" என்ற ஆக்கமும் இடம் பெறுகின்றது. இப்பதிவில் இடம்பெறும் புகைப்படங்கள் இந்த ஆண்டு இடம்பெற்ற திருக்கார்த்திகைத் திருவிழாவில் யாழில் இருக்கும் நண்பரால் அனுப்பி வைக்கப்பட்டதாகும்.

யாழ்ப்பாணத்தில் வெள்ளைக்கார சுவாமிகள் ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் இருந்தார். அவருடைய கையிலே "சும்மா இரு" என்ற தமிழ் வாசகம் பச்சை குத்தியிருந்தது. பலரும் அதைப்பற்றி வியப்பாகப் பேசினார்கள். "சும்மா இரு " என்றால், ஒருவேலையுமே செய்யாமல் இருப்பதா என்ற சந்தேகம் எல்லாலோருக்குமே! அந்த சுவாமிகள் யோகர் சுவாமிகளின் சீடர்.
யோகர் சுவாமிகள் தன்னிடம் வருபவர்களைப் பார்த்து "சும்மா இரு" என்று சொல்வது வழக்கம். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சனையோடு அல்லது மனக்கவலையோடு தான் அவரிடம் வருவார்கள். "சும்மா இரு" என்று சுவாமிகள் சொல்வதை அவரவர் தமது மன நிலைக்கேற்ப ஏற்றுக் கொண்டு திருப்தியடைவார்கள் என்று சொல்வார்கள். "சும்மா இரு என்ற சொற்றொடர் அருணகிரி நாதரின் "கந்தர் அநுபூதியிலே" வருகின்றது.
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றுமே அறிந்திலனே.
என்பது பாடல். "சொல் அற" என்பது தான் "சும்மா இரு" என்பதன் விளக்கம் என்று தெரிகிறது.
யோகர் சுவாமிகள் தனது குருவான சொல்லப்பா சுவாமிகளை நினைத்துப் பாடும் பாடல் ஒன்றிலே "எண்ணம் யாவும் இறந்திட வேண்டும், என் குருபர புங்கவ சிங்கனே" என்று பாடுகிறார்.
சுவாமிகள், மனதிலே பதியும் வண்ணம் சுருங்கிய சொற்களில் ஆழமான விரிந்த கருத்துக்களைக் கூற வல்லவர். "சொல் அற" என்றால் மனதிலே யோசனைகள் இல்லாமல் , மனதை வெறுமையாக வைத்திருக்கும் நிலை" - சும்மா இருத்தல் என்பது இதுதான் போலும்.
மனதை எப்படி வெறுமையாக வைத்திருப்பது?
சமயத் தலைவர்களும், தத்துவ ஞானிகளும், சிந்தனையாளர்களும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தக் கேள்விக்குத் தான் விடை தேடியபடி இருந்திருக்கின்றார்கள். இன்றும் மனம் பற்றிப் பலரும் எழுதியும், பேசியும் வருவதைப் பார்க்கலாம். சமீபத்திலே வாழ்ந்த தத்துவஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் "மனம்" பற்றி நிறையவே ஆராய்ச்சி செய்திருக்கின்றார்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் மனதைப் பற்றி சுவையான கருத்தொன்றைச் சொல்லி இருக்கின்றார். அவர் மனதை ஒரு ஸ்ப்ரிங் மெத்தைக்கு ஒப்பிடுகின்றார். ஸ்ப்ரிங் மெத்தையில் ஒருவர் உட்கார்ந்தால், தற்காலிகமாக ஸ்பிரிங் கீழே அமுங்கி விடும். அவர் மெத்தையிலிருந்து எழுந்தவுடன் ஸ்பிரிங் பழையபடி மேலே வந்துவிடும். எங்களுடைய மனமும் இப்படித் தான் என்கின்றார்.
பிரார்த்தனை செய்யும் போதோ அல்லது ஒரு சத் சங்கத்திலே அமர்ந்திருக்கும் போதோ நமது எண்ணங்கள் யாவும் கட்டுக்கடங்காமல் அலைபாயத் தொடங்கிவிடும். "சிவத்தியானம் என்னும் மருந்தைச் சாப்பிட்டுவா, மனக்குரங்கின் பிணி மாறும்" என்று யோகர் சுவாமிகள் வழி காட்டுகின்றார்.
சிவபுராணத்திலே மணிவாசகப் பெருமானும் "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்று அதே கருத்தைப் பாடுகின்றார். இவ்வேளையில் "மனமே கணமும் மறவாதே ஈசன் மலர்ப்பதத்தை" என்ற திரையிசைப்பாடல் நினைவுக்கு வருகின்றது.

எங்களைப் போன்ற சாதாரண மக்களுக்கு மனதை அலைய விடாமல் இருப்பது சுலபமல்ல. நாங்கள் ஆசாபாசங்களினால் கட்டுண்டு வாழ்கின்றோம். வயது ஏற ஏறக் கவலைகள் அதிகரிக்கின்றனவே அன்றிக் குறைவதாக இல்லை. எத்தனை நூல்களை வாசிக்கின்றோம்! எத்தனை பக்திப் பாடல்களைப் பாடுகின்றோம்! கேட்கிறோம்! எத்தனை பெரியோர்களின் பேச்சுக்களைக் கேட்டு மகிழ்கின்றோம்! ஆனால் மனமோ ஸ்ப்ரிங் மெத்தை போலத்தான் இருக்கின்றது!.
யோகர் சுவாமிகள் "சும்மா இரு" என்று சொல்லும் போது "கடமையைச் செய், உன்னுடைய வேலைகளைச் செய், ஆனால் செய்யும் போது பற்றில்லாமல் செய்" என்கிறார். பிரச்சனைகளைக் கண்டு பதற வேண்டாம். அமைதியாக இருக்கப் பழகு என்கிறார். தாமரை இலைத் தண்ணீர் போல் பற்றில்லாமல் வாழப்பழகு என்பது அவர் கருத்து. எங்களை அலைக்கழிக்கும் அகந்தை, அவா, கோபம், என்பனவற்றை நீக்கி வாழப் பழகு என்று வழிகாட்டுகின்றார். வள்ளுவரும்,
"பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு." என்கிறார்.
உகந்து மனங் குவிந்து ஒன்றுக்கும் அஞ்சாது
அகந்தை அவா வெகுளி அகற்றி - சகம் தனிலே
தாமரையிலை தண்ணீர் போல் சாராமல் சார்ந்து நற்
சேமமொடு வாழ்வாய் தெளிந்து.
(நற்சிந்தனை - சிவயோக சுவாமிகள்)

நன்றி: "சும்மா இரு" என்ற ஆக்கத்தை எழுதியனுப்பிய சிட்னி வாழ் அன்பர்.
புகைப்படங்கள் உதவி: பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர்
16 comments:
பிரபா, சும்மா இரு என்ற பாடம் முருகன் அருணகிரிக்குச் சொன்னது. முருகன் சொன்ன சும்மா இன்றைக்கு எந்த பொருளில் வழங்கப்படுகிறது என்றால் அது நகைப்புதான். :) எனக்குத் தெரிந்து சும்மா என்ற சொல் வரும் முதல் தமிழிலக்கியம் அநுபூதிதான் என்று நினைக்கிறேன். நீங்களும் குறிப்பிட்டுள்ள "செம்மான் மகளைத்" பாடலைப் பற்றி இனியது கேட்கின் வலைப்பூவில் முன்பு எழுதியது இங்கே.
http://iniyathu.blogspot.com/2006/04/13.html
படங்கள் மிக அழகாக இருக்கின்றன. இந்த ஆண்டு எடுத்ததா? சென்ற ஆண்டுகளில் எடுக்கப்படவையா? நல்லூரான் தகவல்களைத் தினமும் தரும் உங்கள் பணி சிறப்புடையது. அத்தோடு இனிய முருகன் பாடல்களையும் தந்து ஈழத்துக் கலைஞர்களையும் கலைகளையும் அறிமுகம் செய்வதும் சிறப்பு.
வணக்கம் ராகவன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள், செம்மான் மகளைக் குறித்த தங்கள் பதிவை விட்டு விட்டேன். இப்பொது படிக்க ஒரு சந்தர்ப்பம்.
இப்படங்கள் இந்த ஆண்டு தான் எடுத்தவை. நேற்றைய பதிவிலும் இந்த ஆண்டு நிகழ்ந்த மஞ்சத்திருவிழாப் படங்களைக் கொடுத்திருந்தேன்.
முருகனின் அருள் கிடைக்கவும் அவன் பால் நம் சிந்தையை வைத்திருக்கவும் இப்பதிவுகள் மூலம் என் கடனைச் செய்கின்றேன்.
பிரபா!
படங்கள் தந்த செந்தூரனுக்கு முதல் நன்றி!
மிக அழகான படங்கள், கண்கவரும் சாத்துப்படி...முத்துக்குமரன் அழகே தனி!
இந்தச் சாத்துப்படியில் சற்று கேரளச் சாயல் உண்டு. அத்துடன் திருவாச்சி இடத்தில் உள்ள செவ்வக அமைப்பைக் குறிப்பிடுகிறேன். கேரளாவிலும் யானையில் வரும் சுவாமி உருவங்கள் இப்படிதான் இருப்பதைப் தொலைக்காட்சியில் பார்த்தேன்.
பாடல் முழுமையாக இல்லை. ஆனால் இனிமை...
வணக்கம் யோகன் அண்ணா
கேரளச் சாயல் பல இடங்களில் இருக்கின்றதென்றால் இங்கேயும் இருப்பது அதிசயம். பாடலைத் தந்த வழங்கியில் சீர்கேடு இருப்பதால் புதிய ஊடகத்தில் தற்போது முழுமையாகத் தந்திருக்கின்றேன்
படங்கள் நன்றாக இருக்கு கானாண்ணா..புதிய தகவல்கள்..
நல்ல கட்டுரை "சும்மா இரு'' என்ற கட்டுரை என்னை மீண்டும் பாடசாலைக்கு அழைத்து சென்றது. பரீட்சையில் எழுதிய நினைவு. செந்தூரன் அவர்களுக்கும் கட்டுரை எழுதியவருக்கும் வாழ்த்துகள்.
வருகைக்கு நன்றிகள் தூயா மற்றும் தாசன்.
வணக்கம் தாசன்
யோகர் சுவாமிகள் குறித்த கட்டுரை நீங்கள் படித்த காலத்திலும் இருந்தது போல.
படங்களும்..."சும்மா இரு" தகவலும் தந்தமைக்கு நன்றிகள் தல :)
kanbin pirabavitku!
Naan Senthuran Kilavythoddam , karaveddy , Yarlpaananththilitunthu.Naan anuppiya padankal emathu uravukalukkaaka anupiyathu, aanal enathu nanapan otuvanaal than edukkapaddathu, Aakave appadi kurippiduvathayin anuppiyavar enre kurippdavum.
//கோபிநாத் said...
படங்களும்..."சும்மா இரு" தகவலும் தந்தமைக்கு நன்றிகள் தல :) //
நன்றி தல ;)
//Senthuran said...
kanbin pirabavitku!
Naan Senthuran Kilavythoddam , karaveddy , Yarlpaananththilitunthu.Naan anuppiya padankal emathu uravukalukkaaka anupiyathu, aanal enathu nanapan otuvanaal than edukkapaddathu, Aakave appadi kurippiduvathayin anuppiyavar enre kurippdavum.//
வணக்கம் செந்தூரன்
யாழில் இருந்து வந்தமைக்கு முதற்கண் நன்றிகள், தற்போது திருத்திவிட்டேன். முடிந்தால் இன்றைய சப்பரத் திருவிழா மற்றும் தேர், தீர்த்த உற்சவங்களையும் மின்னஞ்சல் மூலம் எனக்கு அனுப்பமுடியுமா?
என் முகவரி: kanapraba@gmail.com
Anbin Pitabavitku!
Ivan senthuran karavadeediyil itunthu.
Nichchayamaaka unkalathu venduthal niraivtrapadum.Ippadiyana sevai seivathil naan petu makilvu adaikinren.Intha kaalakaddaththil emathavarkal vatamudiyaviddalum inaiyathinude aavathu kaanpathat urthunaiyaaka itukkum enpathil iyamillai.
enathu mukavati cyberguy.77@gmail.com
//அன்பின் பிரபாவிற்கு
இவ்வண் செந்தூரன் கரவெட்டியிலிருந்து
நிச்சயமாக உங்கள் வேண்டுகோள் நிறைவேற்றப்படும். இப்படியான சேவை செய்வதில் நான் பெருமகிழ்வு அடைகின்றேன். இந்தக் காலகட்டத்தில் எம்மவர்கள் வரமுடியாவிட்டாலும் இணையத்தினூடேயாவது காண்பது உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.//
வணக்கம் செந்தூரன்
உண்மையிலேயே நான் உங்கள் மடல் கண்டு பெருமகிழ்வு அடைகின்றேன். நம் உறவுகள் நல்லைக்கந்தன் அருளால் நீண்டதொரு நிம்மதியான வாழ்வைப் பெறவேண்டும்.
பிரபா உங்களை கந்தனாக நினைத்து வணங்க வேண்டும். 22நாட்களும் மிகமிக அற்புதமான பதிவுகள். ஏனோ மனதை வருடிய சுகங்கள். சிவயோக சுவாமிகள் அணுஅணுவாக கந்தனை அனுபவித்து வழிபட்டவர். நல்லைக் கந்தனை பற்றி அவர் எது மொழிந்தாலும் அது ஆத்மார்த்தமான அனுபவ கருத்து. பிரபா அபிஷேக கந்தன் என்று மாவிட்டபுரம் கந்தனை சொல்வார்கள். ஒருதடவை உறுதி படுத்துங்கள்.
வணக்கம் விசாகன்
பெரிய வார்த்தைகளுக்கு நான் அருகதையற்றவன், எம்பெருமானின் மீது கொண்ட தீராத பக்தியே இப்பதிவுகளின் செயல்வடிவம்.
சன்னதியானை அன்னதானக் கந்தனென்றும், நல்லைக் கந்தனை அலங்காரக் கந்தனென்றும் அறிந்திருக்கின்றேன். மாதகல் நுணசை முருகனைக் காவடிக் கந்தனென்றும் பதிவர் வெற்றி குறிப்பிட்டிருக்கின்றார்.
மாவிட்டபுரக் கந்தன் அபிஷேகக் கந்தன் என்ற சிறப்புப் பெயருக்குப் பொருத்தமானவரே, ஆனால் தெரிந்தவர்கள் உறுதிப்படுத்தினால் நல்லது, அல்லது கேட்டு அறியத் தருகின்றேன்.
தங்கள் அன்புக்கு நன்றி
படங்கள் மிகவும் அழகு. முருகனே அழகு. அதனினும் அழகு இந்த அலங்காரத்துடன் அவன் இருப்பது. சிவா யோகச்வாமியின் சீடரான சிவாய சுப்ரமுனிய சுவாமி தான் நீங்கள் கட்டுரையில் குறிபிட்டுள்ள வேல்லைக்காரரோ என்று எனக்கு ஐயம். அவர் இப்பொழுது சமாதி அடைந்துவிட்டார். சைவ சித்தாந்த சபையை ஹவாயில் நிறுவி அடுத்த பட்டமாக போதினாதச்வாமி பொறுப்பேற்று இருக்கிறார்.
amas32
வணக்கம் அம்மா
ஹவாயில் யோகர் சுவாமிகளின் சிவதொண்டன் நிலையம் உண்டு, நீங்கள் குறிப்பிடும் சுவாமிகள் கூடப் பொருந்தலாம்
Post a Comment