நல்லை நகர் நாயகன் கந்தப் பெருமானின் பதினேழாந் திருவிழாவில் இரண்டு பகிர்வுகளைத் தருகின்றேன். முதலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் அருளிச் செய்த நல்லைக் கந்தசுவாமி மீது வாழி விருத்தம் இடம் பெறுகின்றது.
அருணகவி சிதகமல மலரை நிகர் தருவதன
மாறுமநு தினமும் வாழி
அமரர் தொழு கனகசபை நடனமிடு பரமசிவ
னருண்முருகர் சரணம் வாழி
கருணைமழை பொழி பனிரு நயனமதி னெடுவலிய
கவினுலவு தோள்கள் வாழி
கனகிரியை யிருபிளவு படவுருவு நெடியவயில்
கரதலத் தினிது வாழி
வருணமர கதவழகு திகழவரு மவுணனெனு
மயிலினொடு சேவல் வாழி
வனசரர்த மரசனுத வியகுறமி னொடுகடவுண்
மயிலிவர்க டினமும் வாழி
தருணமிது வெனவமரர் பணிநல்லை யமர்கந்தர்
தமதடியர் நிதமும் வாழி
சகசநிரு மலபரம சுகிர்தபரி பூரண
சடாஷரம் வாழி வாழி
தொடர்ந்து, தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்க, இசைக்கலைமணி ஸ்ரீ வர்ணராமேஸ்வரன் பாடும் நல்லை முருகன் பாடல் ஒலியிலும் எழுத்திலுமாகத் தருகின்றேன்
|
பன்னீரில் தினம் குளிக்கும் கந்தமுருகேசா - நாங்கள்
கண்ணீரில் குளிக்கின்றோம்
வந்து அருள்வாயா? வந்து அருள்வாயா?
உன் வாயைத் திறவாயா? - நீ
வந்து அருள்வாயா? வந்து அருள்வாயா?
உன் வாயைத் திறவாயா?
சந்தணத்தைப் பூசி மலர் சூடி வருகின்றாய் - உன்
தம்பதிகளோடு தினம் வந்து அருள்கின்றாய்
செந்தமிழால் நாம் வடித்த இன்று மலர்கின்றாய்
செந்தமிழால் நாம் வடித்த இன்று மலர்கின்றாய்
என் தேகமெல்லாம் புல்லரிக்க வந்து சிரிக்கின்றாய்
பன்னீரில் தினம் குளிக்கும் கந்தமுருகேசா - நாங்கள்
கண்ணீரில் குளிக்கின்றோம்
வந்து அருள்வாயா? வந்து அருள்வாயா
நல்லூரின் வீதியிலே உந்தன் விளையாட்டு -எந்தன்
நாயகனே எனதெரிலே வந்து முகம் காட்டு
தொல்லை, துயர் சூழ்ந்ததய்யா நீதி நிலை நாட்டு
தொல்லை, துயர் சூழ்ந்ததய்யா நீதி நிலை நாட்டு
வந்த சூரர்களை ஓட்டுதற்கு வேலை எடுத்தாட்டு
பன்னீரில் தினம் குளிக்கும் கந்தமுருகேசா - நாங்கள்
கண்ணீரில் குளிக்கின்றோம்
வந்து அருள்வாயா? வந்து அருள்வாயா
சந்ததும் உந்தனையே வந்து தொழுகின்றோம் - நீ
சாத்துகின்ற பூக்களையே சூட்டி மகிழ்கின்றோம்
கந்தனே உன் காலடியில் வந்து விழுகின்றோம் - உன்
கண்ணில் எழும் அன்பதனுக்காக அழுகின்றோம்
பன்னீரில் தினம் குளிக்கும் கந்தமுருகேசா - நாங்கள்
கண்ணீரில் குளிக்கின்றோம்
வந்து அருள்வாயா? வந்து அருள்வாயா?
உன் வாயைத் திறவாயா? - நீ
வந்து அருள்வாயா? வந்து அருள்வாயா?
உன் வாயைத் திறவாயா?
நன்றி:
1.ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு - வெளியீடு: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்
2. நல்லை முருகன் பாடல்கள் - வெளியீடு : தமிழீழவிடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுப் பிரிவு
புகைப்படங்கள் உதவி: கெளமாரம் தளம்
2 comments:
புதுவையின் கவி வரியில் கண்ணன் இசையில் உங்களின் தெரிவு மிக்க நன்று. ''பன்னீரில் தினம் குளிக்கும் முருகா கண்ணீரில் தினம் குளிக்கின்றோம்'' என்ற வரிகள் எனக்கு பிடித்த வரிகள்.
//''பன்னீரில் தினம் குளிக்கும் முருகா கண்ணீரில் தினம் குளிக்கின்றோம்'' என்ற வரிகள் எனக்கு பிடித்த வரிகள். //
வணக்கம் தாசன்
17 வருஷங்களுக்கு முன் வந்த பாட்டு, இன்னும் நம் நிலைமை மாறவில்லை, வரிகள் மெய்ப்பிக்கின்றன.
Post a Comment