எனக்குப் பிடித்த விடயங்களைப் பாரபட்சமின்றிப் பேசுவதில் நான் எப்போதும் பின்னிற்பதில்லை. நமக்குப் பிடித்தவற்றைப் பேசுவதற்கும் செய்வதற்கும் கூட குழு அமைத்துக் கண்காணிக்கும் சமூக ஊடகப் பரப்பில் இது சவால் நிறைந்த விடயமும் கூட. ஆனால் எனக்குத் தெரியும், என் ஒத்த சிந்தனையுள்ள ஒரு வாசக நண்பர் உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து எனக்கான ஆதரவுக்குரலாக இயங்கி வருவார் என்று. அந்த நம்பிக்கையே என்னை இத்தனை ஆண்டு கால வலைப்பதிவு வாழ்க்கையில் நீடித்து நிலைக்க வைத்திருக்கிறது. சமீபத்தில் சக ட்விட்டர் உமா கிருஷ் இன் இடுகை வழியாக இதை மெய்ப்பித்தும் கொண்டேன்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் வலைப்பதிவு உலகில் நான் காலடி எடுத்து வைக்கும் போது இருந்த சக வலைப்பதிவர்கள் ஏறக்குறையக் காணாமல் போய் விட்டார்கள். இன்னும் சிலர் கால மாற்றத்துக்கேற்ப ட்விட்டர், கூகிள் ப்ளஸ் என்று தாவிவிட்டார்கள். அங்கெல்லாம் நான் இருந்தாலும் என் தாய் வீடு இந்த வலைப்பதிவு உலகம் தான். அதனால் தான் என் மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற மூல வலைப்பதிவில் மாதாந்தம் ஒரு இடுகையேனும் இட்டு என் இருப்பைக் காட்டி வருகின்றேன். இந்த ஆண்டைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஒரு இடைவெளி இருந்த என் சக வலைப்பதிவான உலாத்தல் பதிவில் அதிக முனைப்போடு எழுதி வருகின்றேன். அத்தோடு கூடவே இருக்கு என் இசைச்சிலாகிப்புக்கும்,ஒலிப்பகிர்வுகளுக்குமென றேடியோஸ்பதி
ஏழு வருடங்களுக்கு முன்னர் என்னோடு பயணித்த சக வலைப்பதிவர்கள், வலைப்பதிவுப் பரப்பில் இருந்து நீங்கினாலும் எங்கோ ஒரு இடத்தில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் நண்பர் ஈழநாதனின் இழப்பு என்பது தனிப்பட்ட ரீதியிலும் என்னை வெகுவாகப் பாதித்த ஒரு விடயமாக இந்த ஆண்டு அமைந்து விட்டது.
ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வருடம் தமிழகம் போகிறேன். என்னை ஏந்திப் பிடித்து ஊர்சுற்றிக் காட்டிப் பத்திரமாக நாடு திரும்ப வைத்த அத்தனை உறவுகளும் என் இணைய வாழ்வில் பெற்ற பேறு. இதை எப்படி மறப்பேன்.
ஏழு ஆண்டுகள் என்ன ஏழேழு ஆண்டுகளும் அதே முனைப்போடு என்னை இயங்க வைப்ப நீங்கள் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகின்றேன், தற்காலிகமாக.
நேசம் கலந்த நட்புடன்
அன்பன்
கானா பிரபா
http://www.kanapraba.com/
2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.
2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு
2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்
2009 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்
2010 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்
வலையுலகில் நிறைந்த என் ஆறு ஆண்டுகள்
2011 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு
கடந்த 2012 ஆம் ஆண்டில் எழுதிய பதிவுகள்
ஈழத்தின் ஆளுமை வி.எஸ்.துரைராஜா

"இலங்கையில் தமிழர்" - முழுமையான வரலாற்று ஒலி ஆவணம்

செய்யது பீடியும் இந்தியன் ஆமியும்
1987 ஆம் ஆண்டு இந்தியன் ஆமிக்கும் புலிகளுக்கும் சண்டை மூண்ட பிறகு ஒவ்வொரு நாளும் கே.கே.எஸ் றோட்டுப் பக்கம் போறதே பெருங்காரியம் தான். எப்ப என்ன நடக்குமெண்டு தெரியாது. திடீரெண்டு சுத்தி வளைப்பு இருக்கும், றோட்டை மறிச்சு எல்லாரையும் நிக்க வச்சு விசாரணை நடக்கும், அதில் எத்தனை பேர் வீட்டுப் பக்கம் திரும்பி வருவினம் எண்டும் சொல்ல ஏலாது. அரைக்காற்சட்டை போட்ட என் வயசுக்க்காரருக்கு அப்படி ஒன்றும் இதுவரை பெரிய சிக்கல் இல்லை என்றாலும் அம்மாவுக்கு நான் வளந்த பெடியன்.
இணையத்திலே ஓர் ஈழத்து நூலகம்
இலங்கையில் வாழுகின்ற ஒரு வாசகனுக்கும் சரி, லட்சக்கணக்கில் உலகின் எல்லாத்திசைகளிலும் புலம்பெயர்ந்து வாழும் வாசகனுக்கும் சரி, அல்லது ஈழத்து எழுத்துக்களைத் தேடிப்படிக்க வேண்டும் என்று முனையும் தமிழக வாசகனுக்கும் ஒரு சேரத் தன் பணியை வழங்குவதில் இணையத்தில் இயங்கிவரும் ஈழத்து நூலகம் http://www.noolaham.org கொடுக்கும் முனைப்பும், சேவையும் உண்மையில் உயரியது என்பதை இந்தத் தளத்துக்குச் சென்றவர்கள் உணர்வர்.
ஏ எல் எடுத்துட்டு வீட்டில சும்மா இருக்கிறன்
ஏ.எல் (Advanced Level) என்பது பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுக்கான கல்லூரிப்பருவம். ஓ.எல் (Ordinary Level) வரைக்கும் நீல நிறக் கட்டைக்கழுசானும், அந்தக் கழுசானுக்குள் செருகிய அரைக்கை வெள்ளைச் சேர்ட்டோடும் கடந்த பதினோரு ஆண்டுப் பள்ளிப்பருவத்தின் பின்னான ஏ.எல் என்ற அடுத்த இரண்டு வருஷங்களும் வாழ்க்கையையே தீர்மானிக்கும் காலம். விரும்பிய துறையை எடுத்துப் படித்துப் பல்கலைக்கழகத்துக்குப் போவதற்கான வெட்டுப்புள்ளியையும் கடந்தால் தப்பலாம்.
ராஜேஸ்வரி சண்முகம் என்றதோர் வானொலிக்குயில் ஓய்ந்தது
இலங்கை வானொலியை உயர்த்திய ஒலிபரப்புச் சிகரங்களில் ஒருவர், வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் கடந்த மார்ச் 23 ஆம் திகதி இவ்வுலகை விட்டுப் பறந்தார். இலங்கை வானொலியின் பொற்காலங்களில் ராஜேஸ்வரி சண்முகம் என்ற வானொலி நட்சத்திரத்தின் குரலினிமையைக் கேட்டு ரசித்த கோடானுகோடி ரசிகர்களுக்கு இந்தச் செய்தி பேரிடியாக அமைந்திருக்கும்.
"இருளிலே தெரிந்தது"
சாலையைக் கடக்க முயன்ற நாயொன்று எதிர்ப்பட்ட வாகனத்தால் அடிவாங்கி உயிர்பிழைக்க மறுகரை நோக்கி ஓடுமே அதே தள்ளாட்டாட்டத்தோடு ஓடிப்போய் எதிரே Taxi Stand இல் தனியனாகத் தரித்து நின்ற Taxiக்குள் பாய்ந்து மூச்சிரைக்க ஆரம்பித்தான். Preston...Preston... என்று அராத்திக் கொண்டு எதிர்த்திசையை நோக்கி அவன் கைகள் உயர , Taxi சாரதி அவனை விநோதமாகப் பார்த்தவாறே வாகனத்தை முடுக்கினார் மீட்டர் ஓடிக்கொண்டிருந்தது. இரைக்க இரைக்க ஓடிவந்ததால் மார்புக்கூட்டு குத்திக் குத்தி வலித்தது. மார்பைப் பொத்திக் கொண்டே அழ ஆரம்பித்தான் தயாளன்.
எங்கட கோயில் கொடியேறி விட்டுது
மடத்துவாசல் பிள்ளையார் கோயில் கொடியேற இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னரேயே ஊர் உலகமெல்லாம் பரவிவிட்டது. இப்போது கொடியேறித் திருவிழா நடக்குது. போன வருஷம் தாயகம் போனபோது 16 வருஷத்துக்குப் பிறகு மடத்துவாசல் பிள்ளையார் கோயில் தேர்த்திருவிழா எல்லாம் கண்ட காட்சி இப்பவும் கண்ணுக்குள்ள நிக்குது. 16 வருஷம் எண்டவுடனை வருஷம் 16 றேஞ்சுக்குக் கன்னாபின்னாவெண்டு கற்பனை வளக்காதேங்கோ.
இன்று முதல் "கள்ளத்தீனி" கொடுக்கிறேன்
கள்ளத்தீனி என்ற சொற்பதம் தமிழக நண்பர்கள் எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருப்பார்களோ தெரியவில்லை. சிறு அளவில் அடக்கப்படும் மிக்சர், இனிப்பு வகையறா உள்ளிட்ட தின்பண்டங்களைத் தான் ஈழத்தில் பொதுவாக இந்தப் பெயர் கொண்டு அழைப்பார்கள். இந்தத் தின்பண்டங்கள் உடலுக்கு எவ்வளவு தூரம் ஆரோக்கியத்தை விளைவிக்கின்றன என்பது முக்கியமல்ல ஆனால் சாப்பிடும் கணம் கொடுக்கும் சுவை மட்டுமே முக்கியம். இந்தளவோடு நிறுத்தி என் கள்ளத்தீனிப் பதிவுக்குப் பாய்கிறேன்.
"அவுஸ்திரேலிய குடிசன மதிப்பீடு" கணக்கும் வழக்கும்
நாட்டின் 2 சதவீதமான மக்கள் தொகையைப் பிரதிபலிக்கும் தமிழர் பரம்பல் என்பது இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்திருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்பது போல இயங்கும் இந்த நாட்டின் வாழ்வியல் போன்று இலங்கை, இந்தியத் தமிழர் என்ற பாகுபாடு கடந்து மொழியால் ஒன்றுபட்ட ஒரே இயங்குதளத்தில் சொல்லிலும் சிந்தனையிலும் இயங்கினால் நம் தமிழ் மொழியின் எதிர்கால இருப்புக்கும் ஆரோக்கியமான அத்திவாரமாக அது நின்று நிலைக்கும் எனலாம்.
என்னை உயரே பறக்க வைத்த ஆர்.டி.பர்மன்
அந்தப் பாடலோடு 1942 A Love story படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாகப் பதியப்பட்டுப் பாடல்கள் வெளியாகின்றன. பட்டிதொட்டியெங்கும் அந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் மீண்டும் ஆர்.டி.பர்மனை உயிர்ப்பிக்கின்றன. 1942 A Love story படக்குழுவே அவருக்காக ஜனவரி 1, 1994 பிறக்கும் கணத்தில் ஒரு ஸ்பெஷல் பாராட்டு விழாவை நடத்துகிறார்கள். அதில் வரும் "ஏக்கு லடுக்கிக்கே" பாடல் ஒலிபரப்பாகும் வேளை அவர் தன் காரை நிறுத்திவிட்டுக் கம்பீரமாக அரங்கில் நுழைகின்றார். January 4, 1994 அவர் இவ்வுலகை விட்டுப் பிரிகின்றார், கடைசி உயிர்ப்பில் தன்னை நிலை நிறுத்திய திருப்தியில்.
"கள்ளத்தீனி" ஆகஸ்ட் 14
தான் எதற்காக வாழ ஆசைப்பட்டாள் என்பதைத் தேடிக்கண்டுபிடிக்கிறாள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு காலம் என்ற சாக்குத் தேவையில்லை என்ற உண்மையை உணர்கின்றாள். படத்தைப் பார்த்து முடித்ததும் ஆயிரம் எண்ண அலைகள். எப்படி வாழவேண்டும் என்று ஆசைப்பட்டதில் இருந்து இப்படியே வாழ்ந்துவிட்டுப் போவோமே என்றுதானே வாழப் பழகிவிட்டோம்.
சென்னை என்னை வா வா என்றது!
யன்னல் கதவு வழியே வெளியே பார்க்கிறேன். வெளியே தமிழ்ப்பெயர்ப் பலகைகளில் கடைகளின் பெயர்களை அடுக்காகக் காட்டிக் கொண்டே நிதானமாகப் போகிறது ரயில். ஒரு குழந்தை போல எட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே நான். ஆகா கனவுலகம் வந்தாச்சு என்று உள்ளூரப் பேசிக்கொள்கிறேன். சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் ஆகா, உன்னை எத்தனை எத்தனை கதைகளில் படித்திருப்பேன். கூட்டமும், இரைச்சலுமான ஜனசமுத்திரத்தில் நானோ சந்தோஷத்தின் உச்சியில்.
BBC தமிழோசை சங்கரண்ணா நினைவில்
சங்கரண்ணா என்று உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்குக் காற்றலை வழியே உறவுப்பாலம் அமைத்தவர் இவர். முப்பது நிமிட ஒலிபரப்பில் உலகின் முக்கிய செய்திகளோடு, அறிவியல், நாடகம், செய்தி விமர்சனம் என நறுக்காகக் கொடுத்து நிறைவான நிகழ்ச்சிகளைக் கொடுக்கமுடியும் என்பதற்கு இலக்கணமாக அமைந்தவர். வானொலி ஊடகம் சிகரத்தில் வைத்துப் போற்றப்பட்ட காலகட்டத்தில் மறக்கமுடியாத நாயகர்களில் ஒருவர் ஷங்கர் அண்ணா என்பதைக் கடந்த தலைமுறை இன்னும் நன்றியோடு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வானொலி ஊடகத்துறையில் தன் பங்களிப்பைக் கச்சிதமாக வெளிப்படுத்தியவர்.
ஈழநாதன் இனி வரமாட்டாராம் :-(
எப்போது பேசினாலும் நூலகம் என்ற ஈழத்தில் ஓர் தமிழ் இணைய நூலகத்தைப் பற்றி அவர் பேசாத நாளில்லை. அது மட்டும் போதாது, தற்போது வாழ்ந்து வரும் ஈழத்தின் கலை, இலக்கியவாதிகள் எல்லோரதும் சொந்தக் குரலில் அவர்களது வாழ்வியலைப்பதிவு செய்ய வேண்டும் என்பதில் அப்போது தீவிர முனைப்பாக இருந்தார். "பிரபா, 2007 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு வருமாற்போல ஒரு ஒலிக்களஞ்சியம் செய்வோம், செலவெல்லாம் நான் பார்க்கிறேன் முதலில் காரியத்தில் இறங்குவோம், உங்களால் முடிந்த அளவுக்கு நீங்கள் பணிபுரியும் வானொலி வழியாகவும் இதைச் செய்யப்பாருங்கோ" என்று விதை போட்டார்.
யாழ்ப்பாணம் போற பஸ்
ஒருவருஷத்துக்கு மேலாகத் தாயகம் செல்லாத நிலையில் இந்த நவம்பர் மாதம் தாயகம் செல்லலாம் என்று முடிவெடுத்திருந்த வேளை, அப்போதுதான் அங்கிருந்து வந்த நண்பர் "அங்கை கடும் மழை, வெள்ளம், அதோட டெங்குக் காய்ச்சலும் பரவுது, ஏனப்பா வலியப்போய் வினையைத் தேடுறீர்" என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த ஆண்டு இதை விட்டால் வாய்ப்பில்லை, ஷெல், குண்டு மழையிலேயே சீவிச்சனாங்கள், இதெல்லாம் என்ன பெரிசு என்று மனசுக்குள் சமாதானப்படுத்திக் கொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்தேன்.
இறுதி யுத்தத்தின் பின் "இனி அவன்" தமிழ் பேசும் திரைப்படம்
ஈழப்போரில் போராளிகளாகப் பங்கெடுத்தவர்களில், இறந்தவர்கள் தவிர இராணுவத்திடம் சரணடைந்து இப்போது மீண்டும் பொதுவாழ்வில் தம்மை இணைத்துக் கொள்ள விரும்பும் சகோதரர்களின் வாழ்வு இன்னொரு அவலக் கதை பேசும். அதைத்தான் "இனி அவன்" திரைப்படத்தின் முக்கிய பாத்திரம் வழியாகச் சொல்லப்படுகின்றது.
15 comments:
ட்வீட்டர் மூலம்தான் சமீப அறிமுகம் கிடைத்தாலும், உங்கள் வலைப்பதிவுகளுக்கு நேரம் கிடைத்தபோதெல்லாம் வருகை புரிபவன். நான் மட்டும் அல்லாமல் என் மனைவி, மகனுக்கும் வாசித்துக் காண்பிப்பேன். பின்னூட்டம் எழுதுவது இல்லையே ஒழிய உங்கள் பதிவுகளை ரசித்துப் படிப்பவன். உங்கள் பயணம் சிறப்பாகத் தொடர வாழ்த்துகள் !
மிக்க நன்றி அறிவுக்கரசு சார்
8ஆம் ஆண்டிலும் தொடருங்கள். பயணம் சிறக்கட்டும்.
கானா தல,
வாழ்த்துக்கள், ஏழு ஆண்டு எழுதுபது ஆண்டாக வளரட்டும்(ஹி...ஹி எழுநூறு கூட சொல்லலாம்)
மலரும் நினைவுகளாக பலப்பதிவுகளை தொடுத்துள்ளீர்கள்,நன்றாக உள்ளது.
நாமளும் இன்னும் விடாம தொங்கிட்டு இருக்கோம்ல :-))
வாழ்த்துக்கள் பிரபா
வாழ்த்துகள் பிரபா. ஆரம்ப காலம் தொட்டு என்னோடு பயணிப்பவர்களில் நீங்களும் ஒருவர்..
வாழ்த்துகள் கானபிரபா
ஹி ஹி..நீங்கள் உங்களை சொல்லத்தான் எனக்கும் ஞாபகம் வருகுது ..நானும் உந்த வலை உலகில் பேருக்கு இருக்கிறது கிட்ட தட்ட 7 வருசமாச்சு என்று ;-))
இளா சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன்:-)
இப்படிக்கு,
சக பயணி
வாழ்த்துகள் பிரபா. இந்த ஏழு இன்னும் பெருகிப் பெருகி சிறப்பாகட்டும்.
அதே நேரத்தில் ஏழு வருடங்கள் ஆகிவிட்டன என்பதும் ஒரு வியப்பாகத்தான் இருக்கிறது. நேற்றுதான் பிளாக்ஸ்பாட்டில் வலைப்பூவை உருவாக்கி தமிழ்மணக் கருவிப்பட்டையை இணைப்பதற்கு தட்டுத்தடுமாறியது போல இருக்கிறது.
இணையத்தில் பார்த்தவர்கள் பழகியவர்கள் எத்தனையோ விதமாக மாறியிருக்கிறார்கள். மாறதவர் நீங்கள். அதே எளிமை. அதே இனிய பழக்கம்.
கிட்டத்தட்ட இலங்கைக்கும் ராஜாவுக்கும் ஒரு அடையாள முகமாக இருந்து வருகின்றீர்கள்.
உங்களை மனமார வாழ்த்துகிறேன்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் தல ;))
NIZAMUDEEN said...
8ஆம் ஆண்டிலும் தொடருங்கள். பயணம் சிறக்கட்டும்.//
மிக்க நன்றி நிஜாம்தீன் நேரில் சந்திக்கும் நன்னாளுக்காகக் காத்திருக்கிறேன்
வவ்வால் said...
கானா தல,
வாழ்த்துக்கள், ஏழு ஆண்டு எழுதுபது ஆண்டாக வளரட்டும்(ஹி...ஹி எழுநூறு கூட சொல்லலாம்)//
வாங்க தல, என்னோடு நீங்களும் வந்துட்டே இருக்கீங்க ;-))
வாழ்த்துகள்!
வணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!
Post a Comment