இலக்கியவாதியாக இருப்பவர், மொழி பேதமற்ற சினிமா ரசிகராகவும் இருந்தால் நமக்குக் கிடைக்கும் இலாபம் எது என்பதற்கான விடை தான் இந்த நூல்.
எழுத்தாளர் லெ.முருகபூபதி அடிப்படையில் ஒரு பத்திரிகையாளராகவும் இயங்கியவர் என்பதால் அவரின் தளம் பரந்து விரிந்தது. ஐம்பது ஆண்டுகளைக் கடந்த இலக்கிய, வாசிப்பு, பத்திரிகைப் பணி எல்லாம் சேர்ந்து “சினிமா : பார்த்ததும் கேட்டதும்” அவரின் இன்னொரு அனுபவத் தேடலாகப் பதியப்பட்டிருக்கின்றது.
தான் வருடத்தில் குறைந்தது 200 திரைப்படங்களாவது பார்க்கிறேன் என்று ஒப்புதல் வாக்குமூலமும் அவர் கொடுத்திருப்பதால் இந்த நூலில் பகிரப்பட்ட கட்டுரைகள் இவ்வளவு காலமும் தான் கண்ட படைப்புகளில் ஆளுமை செலுத்தியவைகளின் பதிவுகளாகக் கூடக் கொண்டு நோக்கலாம். ஆனால் இதையும் தாண்டி “சொல்லப்படாத கதைகள்” இன்னொரு பாகமாகவும் நாம் எதிர்பார்க்கலாம்.
“திரைப்படங்கள் நமக்குள் உருவாக்கும் கனவுகள் மிக அந்தரங்கமானவை. அது கூடவே வளர்ந்து கொண்டேயிருக்கிறது. சில நேரங்கள் அந்தக் கனவுகள் பகிரங்கமாகி விடுகின்றன. ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு சினிமா மறக்கமுடியாத நினைவு ஒன்றின் பகுதியாகி விடுகிறது”
என்று சொன்ன எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அந்தக் கருத்தை நூலின் ஒரு கட்டுரையிலும் பதிவு செய்கிறார். இந்த நூலில் தொகுக்கப்பட்ட கட்டுரைகளின் அடிநாதமும் அதுவே எனலாம்.
சில கட்டுரைகளில் ஒரே நிகழ்வுகள் திரும்பவும் காட்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அவற்றைத் தனியாகப் படிக்கும் படிக்கும் போது அவற்றின் தேவையும் உணரப்படுகிறது. இது பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு என்பதாலும் சமரசம் கொள்ளலாம்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் திரையுலகப் படைப்பாக முயற்சிகளை “ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும்” என்ற கட்டுரையில் விலாவாரியாக எழுதும் போது அவற்றை வெறும் பட்டியலாகத் திரட்டாமல், அந்த முயற்சிகளின் பின்னால் உள்ள வரலாற்றுச் சங்கதிகளோடு கொடுப்பது தனிச் சிறப்பு. இவற்றில் பலவற்றைக் காலம் அடித்துப் போன, மறந்து போன செய்திகளாகவும் சொல்லலாம். இதே பாங்கிலேயே “கலைஞர் கருணாநிதியும் தமிழ் சினிமாவும்” கட்டுரையும் ஆழமான பல தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது.
ஈழத்தில் பிறந்த கலை மீதான வேட்கை கொண்டோருக்குக் கிடைத்த இன்னொரு இலாபம் சிங்களக் கலைப்படைப்புகள், ஆக்க கர்த்தாக்கள் பற்றிய அனுபவ அறிவும், தொடர்பும் அமையப்பெற்றிருப்பது. அதன் விளைச்சலாகவே சிங்கள சினிமாவின் பிதாமகன், இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், தர்மசேன பத்திராஜ போன்ற ஆளுமைகள் குறித்த பதிவுகளோடு, Death on a Full Moon Day (பெளர்ணமியில் ஒரு மரணம்), President Supper Star போன்ற திரை விமர்சனங்களை இவர் எழுதியிருப்பது. இந்தக் கட்டுரைகளிலும் முன் சொன்ன கூற்றின் நியாயத்தன்மையைப் பறை சாற்றுகின்றது.
தமிழ் சினிமாவின் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தாலும் நாகேஷ், மனோரமா ஆகியோரின் பரிமாணம் என்பது அந்தச் சுவைக்குள் மட்டுமே அடக்க முடியாதது என்பதை அந்தந்தக் கட்டுரைகள் விபரித்து முடிக்கின்றன.
இயக்குநர் மகேந்திரன், பாலுமகேந்திரா, எழுத்தாளர் கி.ரா (ராஜநாராயணன்) , நடிகர் ஓம்புரி போன்றோர் குறித்தும் படைப்பாளியின் பார்வையிலேயே தன் எழுத்தை நகர்த்துவதால் அவற்றில் சினிமாத்தனம் இல்லாத இலக்கியத்தனம் மிஞ்சி நிற்கின்றது.
“பொன்மணி” ஈழத்துப் படம் பிறந்த கதையைப் பகிர்பவர் நடுச்சாமத்தில் அந்தப் படத்தைக் கணினியில் தரவிறக்கிப் பார்த்த அனுபவம் போலவே தர்மசேன பத்திராஜவின் “In search of a road” ஆவணப்படம் பற்றிய கட்டுரையைப் படித்த பின் இணையமெங்கும் சல்லடை போட்டுத் தேடினேன். சிக்கவில்லை. யாராவது புண்ணியவான் அந்தப் படத்தை இணையத்தில் பகிர்வது காலத்தின் தேவை.
இலக்கியமும் சினிமாவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. அதுவே தழுவலாகவும் களவியலாக அமைந்து விடுகிறது.
“சினிமாவில் சாயலும் – தழுவலும் – திருட்டும் – எதிர்வினைகளும் !” என்ற கட்டுரையில் இலக்கியப் படைப்புகள் திரைப்படங்களான வரலாற்றைப் பேசிக் கொண்டே, சர்ச்சைக்குள் அகப்பட்டவை, எழுத்தாளரது எதிர்வினைக்கு ஆட்பட்டவை போன்றவற்றை காய்த்தல் உவத்தல் இன்றிப் பகிர்ந்து, நீங்களே அவற்றை ஒப்பு நோக்கி முடிவு செய்து விடுங்கள் என்றும் சொல்லி வைக்கின்றார்.
ஈழத்திலிருந்து ஜீவநதி வெளியீடாக, ஓவியர் திரு கிறிஸ்டி நல்லரெத்தினம் முகப்பு அட்டை அளிக்கையோடு, மொத்தம் 15 கட்டுரைகள் அமையப்பெற்ற “சினிமா : பார்த்ததும் கேட்டதும்” புலம்பெயர் மண்ணில் பல்கலைக்கழகப் புகுமுகப் பாட நெறியாகத் தமிழ் மொழியைப் படிக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். அவ்வளவுக்கு எளிமையான நடையில் ஆழமான வரலாற்றுச் சங்கதிகளைத் திரட்டித் தருகின்றது.
கானா பிரபா
01.10.2023
0 comments:
Post a Comment