எங்கள் வீட்டில் பெண் பிள்ளை இல்லாத குறைக்கு என்னைத் தன் கைக்குள் பொத்தி வளர்த்துக் கொண்டிருந்தார் அம்மா.
தான் படிப்பிக்கும் இணுவில் அமெரிக்கன் மிஷன் பள்ளிக்கூடத்தில் சண்முகபிரியா டீச்சரிடம் சங்கீத வகுப்பில் சேர்த்து விட்டார். ஆனால் எனக்கோ அலைகள் ஓய்வதில்லை ராதா ஆரம்பத்தில் பாடும் அபஸ்வரமாகமே அமைந்து விட்டது. நான் அந்த நேரம் பெரிய ஈடுபாடு காட்டவில்லை என்பதால் சங்கீதமும் என்னைக் கை விட்டு விட்டது.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மீண்டும் ஈழத்தில் கனத்த சண்டை நேரம். அன்ரி (அம்மாவின் தங்கை) வீட்டுக்குப் போய் அங்கே துளசி அண்ணாவின் அறையை நோண்டினால் அவர் முன்பு பதிவு செய்து வைத்த இளையராஜாவின் பாடல்கள் ஒரு தொகை ஒலிப் பேழைகள் இருந்தது. கூடவே நீல நிற மேனியும், வெள்ளைப் பற்களுமாக ஒரு Melodica வாத்தியம் இருந்தது. துளசி அண்ணா வெளி நாடு போகும் வரை பழகிய வாத்தியம் அது.
வாயால் ஊதி ஊதி வாசிக்க வேணும்.
அன்ரியிடம் கேட்டால்
“அது இங்கை சும்மா கிடக்குது தானே எடுத்துக் கொண்டு போ பிரபு”
என்று பளிச்சென்று அனுமதி கொடுத்தார்.
அது நாள் வரை பூவரசம் பீப்பீயில் வாத்திய இசை வழங்கிக் கொண்டிருந்த எனக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது மாதிரி மனசுக்குள் ஒரு கொண்டாட்டம்.
மின்சாரமே இல்லாத தேசத்தில் இந்த வாயால ஊதி வாசிக்கிற வாத்தியம் பெரிய வரப்பிரசாதமாக இருந்தது.
மீனாட்சி அன்ரி வீட்டு வெளி விறாந்தையில் இருந்து அந்த அந்த வாத்தியத்தின் குரல்வளையை என் வாய்க்குள் திணித்து மெது மெதுவாக ஊதிக் கொண்டே அதன் வெள்ளைப் பற்களை அழுத்தி அழுத்திப் பழகிப் பார்த்தேன். பிடிபடவில்லை. நான் ஊதின அந்த ஊதுக்குப் பெரும் காடே தீப்பிடித்திருக்கும். ஆனாலும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் ஆனேன்.
இதன்னடா இது சினிமாப் பாட்டு கேக்கேக்கை அதில் வரும் புல்லாங்குழல் வாத்தியம் போல அபிநயம் எல்லாம் பிடிச்சு வாயால வாத்தியம் போட்டிருக்கிறன் ஆனால் கையில் நிஜமாகவே ஒரு வாத்தியம் கிடைத்தும் அனுபவவிக்க முடியவில்லையே என்று மனம் புழுங்கியது. நான் வாசித்துப் பழகுவதை மீனாட்சி அன்ரி வீட்டைக் கடந்து போகும் மனிதர்கள் விநோதமாக எட்டிப் பார்த்து விட்டுப் போவார்கள்.
“எடேய் பிரபு ।
யாழோசை கண்ணன் மாஸ்டரிட்ட கீபோர்ட் பழகப் போறேன்
நீயும் வரப் போறியோ”
என் பள்ளிக்கால சகபாடி ராஜன் என் கலைத்தாகம் சஹாரா பாலைவனம் ரேஞ்சில் இருப்பதைக் கண்டு ஒரு நாள் இப்படி ஒரு தண்ணீர் கலனோடு வந்தான்.
கரும்பு தின்னக் கூலியா?
நான் கீபோர்ட் பழக விரும்பும் செய்தியைஅம்மாவிடம் கேட்டால் மறு பேச்சில்லாமல் சம்மதித்தார்.
ஒரு சுபயோக சுப தினத்தில், நான் நினைக்கிறேன் விஜயதசமி நாள் என்று ஏனென்றால் அந்த நாளில் தான் பல இளையராஜாக்கள் புதுப்புது வாத்தியம் பழகுவார்கள்.
“யாழோசை” என்ற பெயர்ப் பலகையைக் கண்டதுமே ஏதோ அன்னக்கிளி பட வாய்ப்பு வந்தவன் போல சைக்கிளில் இருந்து துள்ளிக் குதித்தேன். கூடவே அந்த நீல நிற வாத்தியமும் வந்தது.
“யாழோசை” கண்ணமன் மாஸ்டர் வீட்டின் முன் முற்றம் முழுக்க எல்லாம் பெடி தரவளியள். நாங்கள் மேல் வகுப்புக்காரர் அவங்களோ லிடியன் நாதஸ்வரம் ரேஞ்சில் பெடிப் பிள்ளையள்.
நான் வச்சிருக்கிற ஊது குழல் மாதிரியும் வச்சிருக்கினம். எங்களை அந்தப் பெடிப்பயல்கள் ராக்கிங் பண்ணாத குறையாகப் பார்த்தாங்கள்.
எங்களுக்குக் கொடுத்த முதல் பால பாடமே
“நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது”
இதைத் திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப வாசிச்சுப் பயிற்சி எடுத்துக் கொண்டே இருக்க வேணும்.
இப்போது நினைத்தால் என்னடா இவ்வளவு தூரம் இளையராஜாவின் முரட்டு பக்தராக கண்ணன் மாஸ்டர் இருக்கிறார் என்றெண்ணத் தோன்றும்.
நான் போன வகுப்பெல்லாம் இதைத்தான் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம்.
கொஞ்சக் காலத்தில் சண்டைக் காலம் தீவிரமாகி மெல்ல மெல்ல எல்லாம் முடங்கிப் போகவும் எங்கள் கீபோர்ட் பயிற்சி வகுப்பும் ஒரு முடிவுக்கு வந்தது.
வெளிநாட்டுக்கு வந்த பின்னும் கீபோர்ட் வாத்தியம் பழகும் ஆசை விடவில்லை. கே.டி.குஞ்சுமோன் கணக்காகப் பெரும் பொருட் செலவில் எடுத்த எடுப்பிலேயே Korg கீபோர்ட் வாங்கினேன் (இளையராஜா எல்லாம் இதான் பாவிக்கினம் என்று ஆசிரியர் வேறு உசுப்பேத்தி விட்டுட்டார்) கொஞ்சக் காலம் பழகிப் பார்த்தேன்.
ஆனால் பாட்டுத் தேடல்கள், எழுத்து எல்லாம் என் இசைப் பயிற்சியை விட அதீத ஆர்வத்தைக் கொடுத்ததால் இன்னொரு தடங்கல்.
இப்போது இலக்கியா வேறு கீபோர்ட் பழக ஆரம்பித்து விட்டார்.
Korg கீபோர்ட் இன்னமும் ஓரமாக இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது, இலக்கியாவா நானா அதை மீண்டும் தொடப் போகிறோம் என்ற ஆவலோடு.
“நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது…”
https://youtu.be/RpSRYdtadlg?si=bQiGGNkjd6SS8Lth
பாட்டைக் கேட்கும் போதெல்லாம் “யாழோசை” கண்ணன் மாஸ்டரும் என்
ஞாபக அறையில் உட்கார்ந்திருப்பார்.
கானா பிரபா
12.10.2023
கோவிட் முடக்கத்துக்குப் பின் அம்மாவைப் பார்க்க இரண்டாண்டுகள் கழித்துக் கடந்த ஆண்டு ஊருக்குப் போக முடிந்தது, அது ஒரு குறுகிய பயணம்.
இன்னும் கோவிட் அலை முழுதாகக் கலையாத பயத்தில் அதிகம் ஊர் சுற்றாமல், கொழும்பில் கிடைத்த ஒரு பாதி நாளில் அப்படியே அன்ரியையும் (அம்மாவின் தங்கை) சித்தப்பாவையும் பார்த்து விட்டு வருவோம் என்று போனேன். உள்ளூர சுகாதார எச்சரிக்கையையும் மனம் கொடுத்துக் கொண்டிருந்தது. அவர்கள் தனியாட்கள் ஏதும் வைரஸ் ஐக் கொண்டு போய்க் கொடுத்து விடக் கூடாது என்று.
வழியில் அவர்களுக்குப் பிடித்தமான சைவ உணவகத்தில் வடை வாங்கிக் கொண்டு போனேன்.
"எட இங்க பிரபு!"
சித்தப்பா முகம் கொள்ளாத சிரிப்போடு வரவேற்றார்.
"ஓ"
பின்னால் வந்த அன்ரி சிரித்துக் கொண்டே வந்து கதை கேட்டார்.
அன்ரிக்கு ஞாபக மறதிச் சிக்கலால் கடந்த மூன்று பயணங்களிலும்
"படிச்சு முடிச்சாச்சோ" என்று கேட்பார்.
அவருக்கு நான் இன்னமும் பள்ளிக்கூட மாணவன் தான்.
ஆனால் இந்த முறை படிப்பைப் பற்றிக் கேள்வி எழவில்லை.
அன்ரிக்கு என்னை அடையாளம் கண்டதே சந்தோஷம் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். அன்ரியின் இந்த வயசுக்கு ஞாபக மாறாட்டம் வந்திருக்கக் கூடாது என்று அடிக்கடி நினைப்பதுண்டு. அவர் இன்னும் பல ஆண்டுகள் சுகதேகியாக இருக்க வேண்டியவர்.
கடந்த ஆண்டே சித்தப்பாவும் விடை பெற்று விட, இன்று அன்ரியும் போய் விட்டார். இனிப் படிப்புப் பற்றிக் கேள்வி கேட்கவும் என் அடுத்த பயணத்தில் அன்ரி இருக்க மாட்டார்.
இன்று காலை நான் எழுதிய பதிவில் அந்த Melodica வாத்தியத்தைத் தந்த அதே அன்ரி தான் அவர்.
அன்ரி ! உங்கள் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
பட்சமுள்ள
பிரபு.
0 comments:
Post a Comment