“உலகத் தமிழ் ஒலிபரப்பாளர்” என்ற அடையாளத்துக்குச் சர்வ இலட்சணங்களும் பொருந்தியவர் யார் என்ற கேள்விக்கு உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் தமிழரும் ஒரே ஆளுமையை அடையாளம் காட்டுவர். அது எங்கள் பேரபிமானத்துக்குரிய “எல்லோருக்கும் பொதுவான” B.H.அப்துல் ஹமீத் அவர்கள்.
நாம் சந்திக்கும் “பத்துத்” தமிழகத்தவரில் “பத்துப்பேராவது” இரண்டு பேரைப் பற்றிப் பேச்செடுப்பார்கள் ஒருவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம், இன்னொருவர் தமிழ் தன் நாவில் சிம்மாசனம் இட்டு வீற்றிருக்கும் பி.ஹெச்.அப்துல் ஹமீத் அவர்கள்.
தன் அரை நூற்றாண்டு வானொலி வாழ்வியலைப் பதிவாக்கிய “வானலைகளில் ஒரு வழிப்போக்கன்” நூலை எடுத்து விரித்தவுடனேயே அந்த வழிப்போக்கனோடு நாமும் பயணிக்க ஆரம்பிக்கிறோம்.
ஒரு குழந்தை தனக்குப் பிடித்த உலகத்தில் இறக்கி விட்டபின்னர் அங்கே எல்லாவற்றையும் அளைந்து, தொட்டுப் பார்த்துப் பூரித்து நெஞ்சில் நிறைத்து வைப்பது போல இந்த “வானலைப் பேராசைக்காரரின்” அனுபவங்கள் அமைந்திருக்கின்றன.
அது தன் எல்லை தாண்டி வானொலியைக் கண்டு பிடித்தவரின் தேசம் சென்று “மார்க்கோனியின் ஒலிபரப்புக் கலையகம் சென்று பார்த்த அனுபவங்களோடு தான் தொடங்க வேண்டும் என்று அவரின் மூளைக்குத் “தந்தி” அனுப்பியிருக்கிறது போல.
இன்று உலகத் தமிழ் வானொலிகள் பல்கிப் பெருகி விட்ட சூழலில் இலங்கை வானொலி பேரதிஷ்டம் செய்ததென்று தான் சொல்ல வேண்டும். கடல் கடந்து தமிழ் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட இலங்கை வானொலியின் ஆளுமைகள், கலைஞர்கள் படைத்த நூல்கள் வெறுமனே தன் வரலாற்றுச் செய்திகளாக ( மன ஓசை – சுந்தா சுந்தரலிங்கம், ஒரு சருகுக்குள்ளே கசியும் ஈரங்கள் – ஜோர்ஜ் சந்திரசேகரன், காற்று வெளியினிலே – அப்துல் ஜப்பார்) மட்டுமல்லாமல், வானொலி நாடகச் சுவடிகள் (தணியாத தாகம் – சில்லையூர் செல்வராசன், லண்டன் கந்தையா – செ.சண்முகநாதன் (சானா) முகத்தார் வீட்டுப் பொங்கல் – எஸ்.ஜேசுரத்தினம் ) (வானொலி நாடகங்கள், வானொலி நாடகம் எழுதுவது எப்படி போன்ற படைப்புகளோடு அராலியூர் நா.சுந்தரம்பிள்ளை எழுதிய நூல்கள், இலங்கை வானொலியின் தமிழ் நாடக வரலாறு – மறைமுதல்வன் ஜி.பி.வேதநாயகம்)
தமிழகம் உட்பட இலங்கை வானொலியை நேசித்த நேயர் நெஞ்சங்களின் நனவிடை தோய்தல்களின் தொகுப்பு (பன்முகப் பார்வையில் இலங்கை வானொலி, ஒலிபரப்பாளர்களின் நினைவுப் பகிர்வுகள் (நினைவலைகளில் வானொலிக் குயில் ராஜேஸ்வரி சண்முகம், இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் – தம்பிஐயா தேவதாஸ்), வானொலி வர்ணனைச் சுவடிகள் ( நல்லை நகர்ச் செவ்வேள் – செ.தனபாலசிங்கன்), அது மட்டுமன்றி செய்தி ஊடகர்கள் (The News Read by S.Punniamoorthy) , நிர்வாகப் பணியில் இயங்கிய பணிப்பாளர்கள் (The Green Light by Gnanam Rathinam) , கே.எஸ்.பாலச்சந்திரனின் “நேற்றுப் போல இருக்கிறது”, விமல் சொக்கநாதனின் “வானொலிக் கலை” என்று நீண்டு சமீபத்தில் வெளியான வி.என்.மதி அழகனின் “தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு" (இதற்கு முன்னர் என் மனப் பதிவுகள்) , வானொலி மற்றும் தொலைக்காட்சி என்று இருமுகப்பட்ட பரிமாணங்களில் நீண்ட வரலாற்று மற்றும் தகவல் களஞ்சியமாகத் திகழும் பி.விக்னேஸ்வரன் படைத்த “நினைவு நல்லது” என்று நீளும்.
இங்கே நான் பகிர்ந்தவை சில சோறுகள் தான். இப்படியாக வானொலியின் அத்தனை பரிமாணங்களையும் பல்வேறு ஆளுமைகளால் எழுதிப் பகிர்ந்த பெருமையை இலங்கை வானொலி அள்ளிக் கொண்டது.
இவற்றைத் தவிர ஒலிப் பேழைகள், இறுவட்டுகள் என்பவை தனிக்கணக்கு.
வானொலியாளரின் சுவாரஸ்யமான பகிர்வுகளை அவரின் பக்கத்தில் இருந்து கேட்டுச் சிரித்து, ரசித்த உணர்வை “சுந்தா” சுந்தரலிங்கம் அவர்களின் “மன ஓசை” அளித்தது. அவரின் அந்த அனுபவங்களை இப்போது கற்கண்டாய் இனித்தாலும், ஒலிபரப்புத் துறையில் நுழைந்த போது சந்தித்த சோதனைகள் தான் பின்னாளில் அவரைச் சாதனை படைக்க வழி கோலியது என்ற வானொலிப் பாடத்தைத் தான் சமீபத்தில் வாசித்து முடித்த எங்கள் அபிமான அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அவர்களின் “வானலைகளில் ஒரு வழிப்போக்கன்” என்ற நூல் வாசிப்பு அனுபவமும் வழங்கியது.
“ஆழமான சிந்தனைகளை உள்ளடக்கிய,
அல்லது தனக்குள்ள மொழியாற்றலை
வெளிப்படுத்தக்கூடிய நடையில் இதனை எழுத வேண்டும்
என்று இவன் முயலவில்லை”
என்று தன் முன்னுரையில் “வழிப்போக்கனின் வாக்குமூலமாக” அப்துல் ஹமீத் பதிவு செய்திருக்கின்றார்.
அவையடக்கமாகத் தன் அனுபவப் பதிவுகளை எழுதிச் செல்லும் போது “நான்” என்ற சொற் பிரயோகம் ஆணவத் தளை தட்டும் என்றெண்ணி “இவன்” என்ற சொல்லாடலாக அவர் பயன்படுத்துகின்றார். ஆனால் இந்த அவையடக்கத்தைக் களைந்திருக்கலாம். வாசிப்பு ஓட்டத்தில் “இவன்” ஒரு உறுத்தலாகத் துருத்திக் கொண்டிருக்கிறது.
இன்னாரின் சுய சரியதை என்றாலும் அவராகவே ஆகிவிடுவான் வாசகன். அப்படியானதொரு அனுபவ ஓட்டத்தில் இந்தச் சொல்லாடலை நான் ஆகவே ஆக்கியிருக்கலாம்.
“வானலைகளில் ஒரு வழிப்போக்கன்” வெறுமனே ஹமீத் அவர்களது வானொலி வாழ்வியல் அனுபவங்களை மட்டுமே பேசவில்லை. அவரின் அடுத்தடுத்த முன்னெடுப்புகளில் சந்தித்த அனுபவங்கள் என்று பரந்து விரிகின்றது.
இந்த நூலுக்கு முன்பே 2004 ஆம் ஆண்டில் அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீதுக்குப் பாராட்டு விழா மலரை எஸ்.கே.ராஜென் – சுந்தரம் ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரை இயக்குநர்களாகக் கொண்ட உலகத் தமிழ்க் கலையகம் “தமிழமுதம்” ஆகத் திரட்டித் தந்திருக்கிறது. அதை ஒரு முன்னோட்டம் என்று கூடச் சொல்லலாம். அவர் பால் அன்பு கொண்ட பல்வேறு ஆளுமைகளின் உள்ளக்கிடக்கைகள் பகிர்வுகளாக அங்கே திரட்டப்பட்ட போது
“வானலை வெளியினில் ஒரு வழிப்போக்கன்” என்ற தலைப்புடனேயே அங்கு தன் ஏற்புரையை பகிர்ந்திருக்கிறார் அப்துல் ஹமீத்.
வானொலியின் நதி மூலத்தைத் தேடித் தொடங்கும் முதல் அத்தியாத்தில் இருந்து இருபத்து மூன்றாவது அத்தியாயத்தில் தமிழ் மொழியை நம் எல்லோரும் பேணிப் பேசிப் பழகி, வளர்க்க வேண்டியதொரு தேவையை அழிந்து போனவைகளோடு ஒப்பிட்டு எச்சரிக்கின்றார்.
“தாயை நேசிப்பது போல்
தாய்த் தமிழ் மொழியையும்
நேசிப்போம்”
என்றுதன் அனுபவ வரலாற்றிலும் சமூகப் பிரக்ஞையைப் பதிவாக்கியிருக்கிறார்.
“விதை முளைத்த கதையில்” சிறுவர் மலரில் சேர்ந்த கதை ஒரு சிறுகதை போல இருக்கிறது. இன்றும் அதே 1 ஆம் இலக்கக் கலையகத்தின் முன்னால் அவர் படம் எடுத்துப் பகிர்ந்திருக்கிறார்.
சிறுவர் மலரையும் கணக்கிட்டால் 60 தேறும் வானொலி அனுபவம் கொண்டவர்.
தேடலும் பதித்தலும் ஒரு ஒலிபரப்பாளனுக்கு இருக்க வேண்டிய தேவையை எஸ்.கே.பரராஜசிங்கம் உணர்த்தியதும், பின்னாளில் இவருக்குக் கிடைத்த ஞாபகசக்திக்கான பாராட்டுகள் எனும் வெகுமதிகளுக்குப் பின்னால் அடிப்படையில் ஆரம்பத்தில் பயிற்சி கொடுத்த அந்த வழிகாட்டியை நினைத்துப் பார்க்க முடிகின்றது.
“நவரசக் கோவை” நாடக அனுபவங்கள் அறிவிப்பாளர் என்ற எல்லை கடந்து படந்த அடுத்த பரிமாணத்தின் திறவுகோலாய் அமைந்ததை சுயம்புவாக வளர்ந்த கதை வெளிப்படுத்துகின்றது.
சிட்னியில் நம்மிடையே வாழ்ந்து வரும் மூத்த கவிஞர் அம்பியின் “யாழ்பாடி” கவிதை நாடகத்தை நெறிப்படுத்திய சங்கதியும் சொல்லப்பட்டிருக்கிறது. இலங்கை வானொலியின் பவள விழா கொடுத்த புண்ணியத்தால் அந்தப் படைப்பு இறுவெட்டில் இன்று பாதுகாப்பாக நம்மிடையே இருக்கிறது.
மேலும் “தான் தோன்றிக் கவிராயர்” சில்லையூர் செல்வராசன் கவிதை நாடகமாக்கிய ஷேக்ஸ்பியரின் “றோமியோ ஜூலியட்” குறித்த அரிய செய்தியும் பதிவாகியிருக்கின்றது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அப்துல் ஹமீத் குரல் மீது அளவற்ற காதல் கொண்டிருந்ததை அறிவோம். அவரோடு ஹமீத் நிகழ்த்திய ஒலிப்பேட்டியும் இன்னும் பத்திரமாக அப்துல் ஹமீத் இணையத்தளத்தில் இருக்கின்றது. அதைக் கேட்கும் போதே இவர் மீது நடிகர் திலகத்தின் நேசத்தை உணர முடியும். இங்கே அந்தச் சந்திப்பின் பின்னணியும் விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது.
அதற்கெல்லாம் மேலாக மேஜர் சுந்தரராஜனின் கருணை உள்ளத்தை சம்பவ உதாரணத்தோடு சொல்லும் போது மெய் சிலிர்க்கின்றது.
வெறுமனே குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடாமல் வானொலி விளம்பரதாரர் நிகழ்ச்சிகளிலும் புதுமை படைத்துக் காட்ட முடியும் என்பதற்கமைய இவர் எடுத்த முயற்சிகளின் அறுவைகள் பெரும் ஜனரஞ்சக வெற்றிகளாகியிருக்கின்றன. “மீனவ நண்பன்” அதற்கோர் உதாரணம். பின்னாளில் “கிராமத்தின் இதயம்” என்று தமிழகத்துக் கிராமங்களின் இதயங்களைத் தேடிப் போன படைப்புப் பற்றியும் பேசப்பட்டிருக்கிறது.
ஈழத்து மெல்லிசை இயக்கத்தில் அப்துல் ஹமீத் அவர்களின் பங்களிப்பு பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டியது. ஆனால் அந்த முயற்சியை எடுக்கும் போது வேலைக்கே உலை வைத்து விடக் கூடிய காரியத்தைச் செய்தார் அந்த இளம் அறிவிப்பாளர்.
ஈழத்து மெல்லிசை இயக்கம் குறித்த மிகவும் ஆழமான பகிர்வை அவர் இந்த நூல் வழியே கொடுத்தது ஆய்வு நோக்கில் பெரும் வரப்பிரசாதமாக இருக்கப் போகிறது.
ஒல்லாந்து நாட்டில் வேற்று நாட்டு ஊடகர்களோடு ஒலிபரப்புக் கலையைக் கற்ற போது அங்கு நடந்த சுவாரஸ்யங்களையும் தன் டயறியின் பக்கங்களைக் கிழித்துக் கொடுத்தது போலத் தந்திருக்கிறார்.
24 மணி நேர வானொலிகள் தோற்றம் பெற்ற போது அப்துல் ஹமீத் அவர்கள் கெளரவ அழைப்பால் ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று தன் மனப்பதிவைப் பதிவைப் பதிவாக்கியவர். அவர் இரண்டு தசாப்தங்களுக்கு முன் சொன்னது இன்னமும் காதில் ஒலிக்கிறது
“தக்கன வாழும் தகாதன அழியும்”
“இன்னொருவர் நேரத்தை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் அதற்காக எதை நீங்கள் கொடுக்கப் போகிறீர்கள் என்பது முக்கியம்”
இவையெல்லாம் தாரக மந்திரங்களாக மாறி விட்டன இப்போது.
கடும் வெயிற் காலத்தில் ஒரு நீண்ட பயணத்தில் சிக்கி நா வரண்டு போய் மோர் விற்கும் ஒரு சிறுகடைக்குப் போனால் அங்கே பத்துப் பதினைந்து பேர் அப்துல் ஹமீத் வழங்கும் “இசையணித் தேர்வு” கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இவரின் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்று உய்த்துணர முடிகின்றது.
தாகசாந்தி செய்யாமலேயே பாலைவனத்தில் திடீரென எழுந்த நீர்ச்சுனையைக் கண்ட உணர்வு அவருக்கு வந்திருக்கும் அல்லவா?
“மதுரா இசை விழா” ஒளிப்பேழைகளை தொண்ணூறுகளை அனுபவித்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். தமிழ்த் திரையிசை உலகச் சாதனையாளர்களில் இருந்து புதிதாக இசைக்களத்துக்கு வந்திருப்போர் வரை நீண்ட நெடு மணி நேர நிகழ்ச்சியாக அது கொடுக்கப்பட்டதன் வரலாறும் இங்கே பதிவாகி இருக்கிறது.
பாட்டுக்குப் பாட்டு போன்ற சுய முயற்சிகள் மட்டுமன்றி மற்றோர் முன்னெடுத்த வானொலி உலக, திரையுலகச் சாதனைகளில் அப்துல் ஹமீத் ஒரு தவிர்க்க முடியாத அங்கம் என்பதன் சில உதாரணப் பருக்கைகள் அவை.
ஈழத்துத் திரைப்பட முயற்சிகளில் நேரடித் தமிழ்ப்படமான கோமாளிகள் மட்டுமல்ல, சிங்களத்தில் இருந்து மொழி மாற்றம் கண்ட படைப்புகளிலும் இவரின் பங்களிப்பை எடுத்து விபரிக்கின்றார்.
“மரியாதை முன்னோடிகளை” மறக்காமல் பதிவாக்குகிறார். எல்லோர் குறித்தும் பேசும் போதும் ஒரு நல் மாணாக்கனுக்குரிய பண்போடு கனம் பண்ணுகிறார். தான் நேசித்த மனிதர்களை, தன்னை வளர்த்த பெரியவர்களைத் தேடிச் சந்தித்ததையும் சொல்லி ஒளிப்படங்களோடு பகிர்கிறார்.
“தெனாலி” பட உருவாக்கத்தில் பங்களித்ததில் இருந்து “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்துக்கும் பாட்டு எழுதிய கதைகள் பேசப்பட்டிருக்கின்றன.
“இறைதாசன்” என்ற புனைப்பெயரிலே அப்துல் ஹமீத் எழுதிய ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் தனி இலக்கணம் வகிக்கும்.
பல்லண்டுகளுக்கு முன்னர் இறைதாசன் எழுதி ஃபயாஸ் – ரட்ணம் இசைமைத்த “இசையின் மழையில் நனைந்திடும் நேரம்” பாடல் தான் சமீபத்தில் மறைந்த பொன்.சுபாஷ் சந்திரனுக்கு இசை அஞ்சலி வழங்கிப் பிரியாவிடை கொடுத்தது.
“விழி நுகர் கனி இருப்ப” காய்கள் எதற்கு என்பது போலத் தன் கசப்பான அனுபவங்களில், சம்பந்தப்பட்டவரைச் சுட்டுவிரலால் அடையாளப்படுத்தாமல் தன் செய்தியை மட்டும் சொல்லி விட்டுக் கடந்து விடுகிறார்.
“வழிப்போக்கர்களே திசைகளைத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள்” என்று திரைப்பட இயக்குநரும், இந்த நூலின் எழுத்து வடிவத்துக்குத் துணை புரிந்தவருமான த.செ.ஞானவேல் அவர்கள் சொல்வதை அப்துல் ஹமீதின் அனுபவங்களே அவரின் திசையைத் தீர்மானித்ததாகவும் கொள்ளலாம்.
பேரன்புக்குரிய சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் இல்லாத இந்த உலகில் அவர் இந்த நூலுக்கு எழுதிக் கொடுத்து விட்டுப் போன வாழ்த்துரையையப் படிக்கும் போது மனசின் ஓரத்தில் ஒரு வலி கிளம்புகிறது.
“உடன் பிறக்கவில்லை என்றாலும் பி.எச். எனக்கு உற்ற நண்பன்
உயிரனைய ஸ்னேகிதன் – உரித்துள்ள சகோதரன்”
என்ற வார்த்தைகளைப் படிக்கும் போது அறுத்து உறுத்துத் தமிழகச் செய்தி மடல் கொடுத்து விட்டுப் போன அந்தக் குரல் நம் காது மடல்களில் ஒரு அதிர்வைக் கிளப்பி விடுகிறது.
தன்னுடைய 50 ஆண்டுகளைக் கடந்த வானொலி அனுபவங்களில் சந்தித்த ஆளுமைகள், கருத்துப் படங்கள் என்று நிறை வண்ணத்திலும், கருப்பு – வெள்ளையிலும் நிரம்பியிருக்கின்றன.
ஊடகத்துறையில் சாதிக்கத் துடித்த ஒரு இளைஞனின் பயண ஆவணமாக விரிகிறது இந்நூல். இன்று உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் அவர் வீற்றிருப்பதன் பின்னால் உள்ள கடின உழைப்பின் வாக்குமூலம் இந்த எழுத்துகள்.
அப்துல் ஹமீத் அவர்களது அனுபவங்கள் இந்த 315 பக்கங்களையும் தாண்டியவை என்பதைப் படித்து முடிக்கும் போதே உய்த்துணரலாம்.
காத்திருப்போம் இந்த நூல் இன்னும் விரித்து எழுதப்படும் சமயம் வரும் வரை.
அதுவரை “வானலைகளில் ஒரு வழிப்போக்கன்” உலகத் தமிழர்கள் ஒவ்வொருவர் வாசிப்புத் தளத்திலும் இருக்க வேண்டியதொன்று.
“உண்மையில் அப்துல் ஹமீத் தோற்றுவித்த நியமனங்கள் தான் நிகழ்ச்சி அளிக்கைகளுக்கு மிக முக்கியமாக அமைகின்றன”
என்ற பேராசிரியர் சிவத்தம்பியின் கூற்று இன்னும் பல காலம் கடந்தும் நிலைத்திருக்கும் மெய்த்தன்மை பொருந்தியது.
“வானலைகளில் ஒரு வழிப்போக்கன்” வாசித்து முடிந்ததும் அவரை மனம் எனும் பல்லக்கில் சுமந்து கொண்டு போகிறேன்.
கானா பிரபா
12.09.2023
0 comments:
Post a Comment