"ஒரு மிடறு தேத்தண்ணி குடிச்சுட்டு இந்தா ஓடியாறன்" என் அம்மா அடிக்கடி சொல்லும் வார்த்தைப் பிரயோகங்களில் இதுவும் ஒன்று.
விடிகாலை நான்கு மணிக்கு எழும்பி காலைச் சாப்பாடாக பிட்டையோ இடியப்பத்தையை செய்து விட்டு மள மளவென்று மூன்று கறி (அதில் ஒன்று பால் கறி மற்றது தண்ணிப் பதமாக இன்னொன்று குழம்புக் கறி) செய்து அடுப்பில் உலை வைத்து விட்டு குளிக்கப் போய் விடுவார்.
மீண்டும் வந்து தேத்தண்ணி ஆத்தி வீட்டில் இருப்பவர்களுக்குக் கொடுத்து விட்டு அதுவரை குடும்பத்தலைவியாக இருந்த அவர் ஆசிரியையாகத் தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கும் போது
"ரீச்சர் நாங்கள் வந்திட்டம்" என்று வீட்டு வாசலில் குரல் கேட்கும். அயலில் இருக்கும் குடும்பங்களில் அம்மா படிப்பிக்கும் பாடசாலையில் படிக்கும் குழந்தைகளைப் பத்திரமாக (பவுத்திரமாக என்று நம்மூர்ப் பேச்சு வழக்கில்) கொண்டு போய், கொண்டு வருவது அம்மாவின் சமூக சேவை.
வாசலில் கேட்கும் அந்தக் குரலுக்கான பதிலாகத் தான்
"ஒரு மிடறு தேத்தண்ணி குடிச்சிட்டு இந்தா ஓடியாறன்" என்ற அம்மாவின் பதிலாக இருக்கும்.
இந்த மிடறு என்ற வார்த்தைப் பிரயோகத்தை நம்மில் இன்னும் எத்தனை பேர் இப்போதும் பயன்படுத்துகிறோம் என்று ஒரு சிந்தனை இன்று காலை என்னுள் எழக்காரணமாக இருந்தது சிட்னி முருகன் கோயிலின் காலைப் பூசையில் கலந்து கொண்டிருந்த போது. காலைப்பூசையின் ஒரு நிகழ்வாக பஞ்சபுராணம் ஓதும் போது வந்த
"இடறினும் தளரினும் எனதுறு நோய்" என்று திருவாவடுதுறை தலத்தை நோக்கி திருஞான சம்பந்தர் அருளிச் செய்த தேவாரத்தில் வரும் இந்த மிடறு என்ற சொல் தான் சுருக் என்று மூளையில் ஏற்றியது. இந்தத் தேவாரத்தைப் பலதடவை பாடியும், கேட்டுமிருந்தாலும் இந்த மிடறு என்பது அப்போது தேவாரத்தில் ஒன்றிய ஒரு சொல்லாகவே கடந்திருக்கிறது. இது மட்டுமல்ல நம்முடைய வாழ்க்கையில் வழக்கமாகக் கடந்து போகும் சங்கதிகளை நாம் ஊன்றிக் கவனிப்பதில்லை. எப்போதாவது ஒரு நாள் தான் பொறி தட்டி அதன் மீதான ஈடுபாடு இருக்கும்.
"சுறுக்கா வரேன்" என்பது வேகமாக/விரைவாக வருகிறேன் என்ற அர்த்தத்தில் ஈழத்திலுள்ள மலையகத் தமிழர் பாவிக்கும் சொலவடை.
"டக் கெண்டு வாறன்" இது ஈழத்தின் வட பாகத்தில் இருக்கும் இளையோரால் அதிகம் பாவிக்கப்படுவது. இதுவும் முன் சொன்ன சுறுக்கு/வேகம்/ விரைவு என்பதன் தம்பி, தங்கச்சி முறையான சொல் பயன்பாடு தான்.
"டக்கென்று வருவேன்" என்ற சிறுவர் இலக்கியம் தேவகெளரி.சு என்ற எழுத்தாளரால் எழுதப்பட்டு சேமமடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட செய்தியை விருபா புத்தகத் திரட்டு வழியாக அறிகிறேன்.
இந்த டக் என்ற வார்த்தையைப் பெரியோர் அதிகம் பேசி நான் கேட்டதில்லை. அதற்குப் பதிலாகத் தான் இருக்கவே இருக்கே "கெதியா" என்ற சொல்
"கெதியா வா" "கெதியா வாங்கோ" என்று ஆளாளுக்கு மரியாதை அளவுகோலை வைத்து இது வேறுபட்டுப் பயன்படுத்தப்படும்.
கொழும்பு போன்ற நகரப்பகுதிக்குப் போனதும் "டக்" மறைந்து "குயிக் (quick) ஆகிவிடும். உ-ம் "குயிக்கா வாறன்"
மீண்டும் "மிடறு" என்ற சொல்லுக்கு வருகிறேன். இந்தச் சொல் தண்ணீர், தேநீர் போன்ற திராவகப்பதார்த்தங்களைக் கையாளும் போது தான் பொருத்தமாக உபயோகிக்கப்படுகிறது.
"ஒரு மிடறு சோறு சாப்பிட்டுட்டு வாறன்" என்பதற்குப் பதில் "ஒரு வாய் சோறு சாப்பிட்டுட்டு வாறன்" என்று தானே பாவிப்போம். "ஒரு வாய்" என்பது நீராகாரத்துக்கும், திண்மையான பதார்த்தங்களுக்கும் பயன்படுத்தப்படும் பொதுச் சொல்லாக விளங்குகிறது.
உ-ம் ஒரு வாய் சோடா குடிச்சிட்டு மிச்சத்தை உன்னட்டைத் தாறன்.
எங்கள் வீட்டில் நான் கடைக்குட்டி, செல்லப் பிள்ளை. கள்ளத்தீனி என்னும் இனிப்புப் பதார்த்தங்களைச் சாப்பிடத்தான் பெரு விருப்பம். சாப்பாடு சாப்பிடுவதென்றால் கள்ளம்.
அம்மா பிட்டையும் உருளைக்கிழங்குக் கறியையும் தட்டில் வைத்துக் குழைத்து விட்டு
"இந்தாங்கோ ஒரு வாய், இந்தா இது தான் கடைசி வாய்" என்று சொல்லிச் சொல்லி எனக்குத் தீத்தி விட்டே முழுத்தட்டையும் காலி பண்ணி விடுவார். "போங்கோம்மா" என்று சிணுங்கிக் கொண்டே சாப்பிடுவேன். இது நான் அவுஸ்திரேலியா வரும் வரை நடந்த கூத்து.
அவுஸ்திரேலியாவுக்கு வந்த புதிதில் அடுத்த வேளை சாப்பாட்டை நினைத்து ஏங்கிய போதுதான் அம்மாவிடம் பிகு பண்ணியவை எழுத்தோட்டக் காட்சிகள் போலச் சுடும்.
"உங்கட அப்பா மாதிரிக் கதைக்கிறீங்கள்"
இலக்கியாவை மடியில் வைத்து நான் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம் இலக்கியாவின் அம்மா இப்படிச் சொல்வார். நான் ஊரில் புழங்கிய பேச்சு வழக்குச் சொற்களை அவ்வப்போது சமயம் கிடைக்கும் போதெல்லாம் பாவித்து விடுவேன். இலக்கியாவின் அம்மாவுக்கே அந்தச் சொல்லெல்லாம் சில சமயம் புரியாத புதிராக இருக்கும். அஞ்சு மாச இலக்கியாவுக்கா புரியப் போகிறது :-)
"ஒரு மிடறு குடிச்சுட்டுத் தாங்கோ" என்று இலக்கியாவின் அம்மாவும் இப்போது அடிக்கடி சொல்லப் பழகிவிட்டார்.
நம்முடைய சொந்த ஊரில் புழங்கும் அல்லது ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்த இந்தச் சொற்களை மீளவும் பாவிக்கும் போது நம்பியாண்டார் நம்பி சிதம்பரம் கோயிலில் கவனிப்பாரற்றுக் கிடந்த செல்லரித்தும், அழிந்தும் அழியாதும் கிடந்த தேவாரத் திருப்பதிக ஏட்டுச் சுவடிகளை ஒவ்வொன்றாக ஆசையோடு பொறுக்கித் தடவி அவற்றைக் கண்ணீரோடு படித்த சுகத்தை மனக்கண்ணில் விரிப்பேன்.
"கடல் தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே"
வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு திருபாற்கடலைத் தேவரும் அசுரரும் கடைந்த போது அது கக்கிய நஞ்சின் அகோரத்தைத் தணிக்க வேண்டி தேவர்கள் முறையிட்ட போது அந்த நஞ்சை மிடறினில் குடித்து அடக்கிய சிவனே.
இடறினும் தளரினும் பாடலில் வரும் மிடறு தொண்டை என்ற சொல்லுக்கு சம அர்த்தம் தரும். வாய்ப்பாட்டு இசையை மிடற்றிசை என்று வழங்குவதாக இன்று அறிந்தேன்.
சிட்னி முருகன் கோயில் காலைப்பூசையில் நம்பியாண்டார் நம்பி பாடியது போல அந்த "இடறினும் தளரினும்" தேவாரத்தின் பகுதியைக் காலையில் இருந்து அசை போடுகிறேன்,
"மிடறினில் அடக்கிய வேதியனே"
பதிவின் முகப்பில் இருக்கும் படம் எங்கள் வீட்டு விறகு அடுப்பு, அம்மாவின் ஆஸ்தான சமையல் கூடம்
டக்கென்று வருவேன் புத்தக அட்டை நன்றி : விருபா புத்தக விபரத்தளம்
2 comments:
இன்றைய பதிவு என்னை மிகவும் ஈர்த்தது. காரணம் தெரியவில்லை. மிடறு இன்றும் தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள சொல் தான்.
amas32
நல்ல ஒரு சிந்தனையைத் தூண்டி விட்டீர்கள் பிரபா.
உங்களுக்கு இன்று ‘மிடறு’ சிக்கியது போல எனக்கு ஒரு நாள் “சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை” சிக்கியது.
என்ன ஓர் அழகிய வார்த்தைப் பிரயோகம் ‘சித்தம் அழகியர்!’
புற வனப்பு முக்கியம் பெறும் இந் நாட்களில் இச் சொல் குறிக்கும் அர்த்தம் வலுவற்றுப் போனாலும் தேவாரத்தில் அது நிலை பெற்றதில் சற்றே சந்தோஷம்.
பகிர்வுக்கு நன்றி பிரபா.குழையல் சோறு போல ஒரு பதிவு!
இலக்கியாவை எங்களுக்கும் கொஞ்சம் காட்டலாமே! இலக்கியமும் இலக்கியாவும் இச் சொற்களோடு(ம்) வளர்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி!!
Post a Comment