எங்களூரில் சிவராத்திரி காலம் என்றால் ஒரு பக்கம் கோவில் கோவிலாகச் சாமம் சாமமாக நடக்கும் பூஜையும் கலை விழாவும் என்று பக்திபூர்வமாக ஒரு பக்கம் இருந்தால் அதற்கு எதிர்மாறான இன்னொரு பக்கமும் இருந்தது. ஒவ்வொரு சிவராத்திரியும் வரும் போது அந்த இன்னொரு பக்கம் தான் வந்து நினைவுகளைக் கிளறும்.
எண்பதுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் அவ்வளவாக எட்டிப் பார்க்காத சூழலில் ஊரிலிருக்கும் யாரோ ஓரிரு பணக்காரர் வீட்டில் இருக்கும் குட்டிப் பெட்டியில் பாயாசம் போல புள்ளி புள்ளி வெள்ளைப் பொட்டுகளோடு அசைந்தாடும் மங்கலான காட்சியோடு ஒலி மட்டும் சத்தமாக ஒலிக்கும் தூரதர்ஷனின் "ஒலியும் ஒலியும்" காட்சியை வேலி தாண்டிய வெள்ளாடுகள் கணக்காக எட்டி நின்று பார்த்து வந்தவர்களுக்கு இந்தச் சிவராத்திரி வந்தால் ஒரு கை பார்த்து விட வேண்டும் என்ற முனைப்பில் முன்கூட்டியே இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் வீடியோ கடையில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டிக்கும், வீடியோ ப்ளேயருக்கும் ஒப்பந்தம் செய்து விடுவர்.
அந்தக் காலகட்டத்தில் அதிகம் வீடியோ கடைகளும் இல்லை. யாழ்ப்பாணத்தில் "நியூ விக்ரேஸ்" தான் ஆபத் பாந்தவனாக முளைத்திருந்தது. புதுப்படங்கள் தியேட்டருக்கு வருவதும் அரிதான சூழலில், சிவராத்திரிக்குச் சேர்த்து வைத்து நாலைந்து புதுப்படங்களிம் வீடியோ கசெட்டுகளை வாங்கி, வீட்டு முற்றத்தில் மர வாங்கு போட்டு டிவியை நடுக்கொள்ள வைத்து விடிய விடியப் படக் காட்சி நடக்கும். எம்.ஜி.ஆர் படங்களுக்கும் தனி மவுசு இருக்கும். அதனால் சண்டைப் படங்களை நள்ளிரவு பன்னிரண்டு மணி தாண்டித் தான் போடுவார்கள். வாத்தியார் "டிஷ்யூம் டிஷ்யூம்" என்று கவர்ச்சி வில்லன் கண்ணனையோ அல்லது மொட்டைத் தலைக் குண்டனையோ அடித்து உதைக்கும் போது முத்தத்தில் இருந்து சாறக் கட்டுடன் பார்க்கும் பெடிப்பயலுகள் உணர்ச்சி வசப்பட்டு முன்னால இருக்கிறவைக்கு உதை போடுதலும் நடக்கும். விடியும் போது நாலா திசைகளிலும் அந்தச் செம்பாட்டு மண்ணிலேயே பாதி நித்திரை, முழு நித்திரையோடு தெல்லுத் தெல்லாக படம் பார்க்க வந்த சனம் கவுண்டு போய்க் கிடக்கும். தொலைக்காட்சிப் பெட்டி தன் பாட்டுக்கு ஏதோ ஒரு படத்தோடு ஓடிக் கொண்டிருக்கும். அதையும் ஏதோ விரதம் போல முழுப் படத்தையும் பார்த்துத்தான் முடிப்பேன் என்ற இலட்சியத்தோடு கொவ்வைப் பழக் கண்களோடு இருப்போரும் உண்டு.
சிவராத்திரிப் படக்காட்சி என்பது வீடுகளைத் தாண்டி வாசிகசாலைகள், சனசமூக நிலையங்கள் என்று அந்தந்த ஊர்களில் இருக்கும் சமூக மன்றங்கள் ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ கட்டணத்தில் கிழுவந்தடி மறைத்த மைதானத்தில் ஒரு பொட்டுப் போட்டு தற்காலிக நுழைவு வாசல் அமைத்துப் படம் போட்ட காலமும் உண்டு. சில கோயில்களிலும் இந்தப் படக்காட்சிக் கூத்து இருக்கும் ஆனால் கடவுள் கோவிச்சுப் போடுவார் என்று திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர் போன்ற புராணப்படங்கள் தான் போடுவினம்.
எண்பதுகளில் தியேட்டர்களுக்கு மாற்றீடாக வந்தது மினி சினிமாக்கள் என்ற முறைமை. அதுவரை இயங்கிய ஏதாவது பல சரக்குக்குக் கடையை மூடி, இருட்டாக்கி நாலு வாங்கு போட்டு டிவி, வீடியோ ப்ளேயர் வைத்தால் அது மினி சினிமா ஆகிவிடும் இது கிராமங்களைக் கூட விட்டு வைக்கவில்லை. எங்களூரில் சயந்தா மினி சினிமா அப்போது இயங்கியது. சிவராத்திரிக்கு விசேட மூன்று புத்தம் புதுப் பிரதிகளோடு காட்சிகள் என்று அடுத்த ஊர் மானிப்பாய் காண நோட்டீஸ் அடித்து ஒட்டுவார் சயந்தாக்காறர். நல்ல பாம்பு, யார், பேய் வீடு என்று இந்த மினிசினிமாக்காரர் போடும் படமே ஒரு தினுசாக இருக்கும்.
என்னுடைய வாழ்க்கையில் ஒரு நாளாவது இந்த மினி சினிமாவுக்குப் போய்ப் படம் பார்க்க வேண்டும் என்பது அப்போது ஒரு உயர்ந்த இலட்சியமாக இருந்தது. அம்மாவிடம்
என் இலட்சியத்தைச் சொன்ன போது "அங்கையெல்லாம் கண்ட காவாலியள், களுசறையள் போவினம்" என்று அம்மா கொடுத்த வெருட்டில் இலட்சியமும் கண் காணாது போய்விட்டது.
1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவப் பிரச்சனையோடு சயந்தா மூடுவிழாவோடு உரிமையாளரும் குடும்பத்தோடு இந்தியா போய் விட்டார். ஊருக்குப் போகும் போதெல்லாம் சயந்தா மினி சினிமா இருந்த பக்கம் என்ர கண் தானாகப் போகும். சயந்தா மினி சினிமாவில் படம் போடுவது போலவும் நான் களவாக எட்டிப் போய்ப் பார்ப்பது போலவும் இப்பவும் எனக்கு அடிக்கடி கனவு வரும்.
கொஞ்சம் வளர்ந்த காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து சாமப்பூசை பார்த்த கையோடு அண்ணா தொழிலகம் அதிபர் வீட்டில் "ஒருவர் வாழும் ஆலயம்" படம் பார்த்தது மறக்க முடியாது. ஆலயத்துக்கு ஆலயம் ஆவன்னாவுக்கு ஆவன்னா (கிரேசி மோகன் குரலில்)
உயர் வகுப்புப் படிக்கும் காலத்தில் எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோயில் வசந்தமண்டபத்தில் இரவிரவாகக் கலை நிகழ்ச்சிகள். பெடியளாகச் சேர்ந்து "கனடா வேண்டாம்" என்று நாடகம் எல்லாம் போட்டோம்.
நாடகம் தொடங்க முன்னர் எங்களூரில் சங்கீத வித்துவான் என்று சொல்லிக் கொண்ட ஒரு ஐயா அரை மணி நேரம் தேவார பாராயணம் பாடப் போகிறேன் என்றார். இடம் கொடுத்தால் அரை மணி ஒரு மணியாகி ஒன்றரை மணியைத் தாண்டியது. இது வேலைக்கு ஆகாது என்று கூட்டத்தினர் கை தட்டிப் பார்க்க அவருக்கோ புளுகம் கூடி தன்னைப் பாராட்டுகிறார்கள் என்ற பெருமிதத்தோடு சிரித்துக் கொண்டே தன் கைகளைத் தட்டியும் ராகம் இழுத்தும் இன்னும் பாடிக் கொண்டே போனார். ஒருவழியாக அவரின் கச்சேரி முடிவு கட்டப்பட்டது.
"கனடா வேண்டாம்" வெளி நாட்டுக்குப் போவதால் எவ்வளவு தூரம் கலாசாரச் சீரழிவு நடக்கிறது என்பது தான் இந்த நாடகத்தின் கருப்பொருள். நாடகத்தில் நடித்தவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் கனடா, பிரான்ஸ், யு.கே என்று போய் விட்டார்கள். கனடா வேண்டாம் நாடகத்தில் வெள்ளைக்காரனாக நடித்த ஶ்ரீமான் அண்ணை வெளி நாட்டுக்கே போக மாட்டேன் என்ற பிடிவாதத்தோடு ஊரில் இருந்தவர். ஆறடி உயரம், களையான முகம், வெள்ளைக்காரனைப் போலத்தான் ஶ்ரீமான் அண்ணை.
விதானையார் என்று சொல்லப்படும் கிராம சேவகர் பதவியும் அவரைத் தேடி வரவும் சொந்த ஊரே சுகம் என்றிருந்த ஶ்ரீமான் அண்ணை சில ஆண்டுகளுக்கு முன்னர் தன் மனைவி குழந்தைகளை விட்டு நிரந்தமாகப் பிரிந்து விட்டார். அவர் போனது வெளி நாட்டுக்கு அல்ல, தன் இளவயதிலேயே இதய நோய் கண்டு இறந்து போய் விட்டார்.
2 comments:
உங்கள் மகள் வளர்ந்து படிக்க ஏதுவாக இப்பதிவுகள், அழகிய மலரும் நினைவுகள்.
amas32
சிறந்த பதிவு
தொடருங்கள்
Post a Comment