ஈழப்போராட்டத்தின் முன்னோடிப் போராளியாக, கவிஞராக, சமூகப்பணியாளராக அறியப்பட்ட கி.பி.அரவிந்தன் அண்ணரது இழப்பைச் சற்று முன்னர் அறிந்து மிகுந்த துயர் கொள்கின்றேன்.
இனவாத அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளம்பிய மாணவர் புரட்சியின் ஆரம்ப வித்துகளில் ஒருவர் இவர்.
அரவிந்தன் அண்ணர் பத்து வருடங்களுக்கு முன்னர் எனது ஊடகத்துறையின் ஆரம்ப காலத்தில் ஈழத்து அரசியல் சார்ந்த பல நிகழ்ச்சிகளுக்கு முதுகெலும்பாக இருந்து உதவியவர். குறிப்பாக 2005 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை பல்வேறு ஈழ நடப்புகள் சார்ந்த வானொலிப் பகிர்வுகள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான தூண்டுகோலாக இருந்து உதவியவர்.
பல அரசியல், கலை இலக்கிய ஆய்வாளர்களது தொடர்பை ஏற்படுத்தித் தந்தவர்.பேராசிரியர் சிவத்தம்பிக்கான சிறப்பு ஒலி ஆவணத் தொகுப்பைச் செய்ய வேண்டும் என்று சொல்லி இதற்குத் தகுந்தவர்களை அடையாளப்படுத்தி அந்தப் பகிர்வு சிறப்பாக அமைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி உதவியவர்.
என்னுடைய ஒலிப்பெட்டகத்தில் கி.பி.அரவிந்தன் அண்ணரது ஒரு
மணி நேரப் பேட்டி வழியாக அவரது ஆரம்பகாலப் போராட்டத்தில் இருந்து
புலப்பெயர்வு வரையான பகிர்வு அமைந்திருக்கிறது.
அந்தப் பேட்டி ஈழப் போராட்டத்தின் இன்னொரு வரலாற்றுச் சாட்சியமாக அமைந்திருக்கிறது.
அந்தப் பேட்டியைக் கேட்க
http://radio.kanapraba.com/interview/KiPi.mp3
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தமும் ஏற்படுத்திய பேரழிவும் அவருள் ஒரு மனச்சோர்வை ஏற்படுத்தியது. தொலைபேசியில் பேசும் போது வெறுப்பாக "இதிலிருந்து எல்லாம் ஒதுங்கி விட்டேன்" என்றார். ஆனால் தன் இனம், சாதி சுதந்தரத்தில் தீவிர வேட்கை கொண்ட இந்தப் போராளி அவ்வளவு சீக்கிரம் ஒதுங்க மாட்டார் என்பதை அவரின் அடுத்த பரிணாமமான "புதினப்பலக" செய்தித் தளம் வெளிக்காட்டியது. அதன் பின் பழைய கி.பி.அரவிந்தன் ஆக அவரைப் பார்க்க முடிந்தது,
"கம்போடியா - இந்தியப் பயணங்களைத் தேடி" என்ற எனது நூலை வானொலி வழியாகப் புதுமையானதொரு வழியில் நூல் வெளியீடாகச் செய்த போது பிரான்ஸ் இல் இருந்து அவுஸ்திரேலியா இணைப்பில் இருந்து கொண்டே அந்த வானலை வெளியீட்டு விழாவின் தலைவராக அமைந்து சிறப்பித்தவர்.
கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவில் இருந்து வெளிவரும் "காக்கைச் சிறகினிலே" தரமானதொரு கலை இலக்கியச் சஞ்சிகையை ஆதரித்து வளர்த்ததோடு அந்தச் சஞ்சிகையின் பிரதிகளைக் காலம் தவறாது அனுப்பி வைக்க வழி செய்தவர்.
"தமிழ்த் திரையிசை வழியாக இளையராஜாவின் பங்கு ஒரு சமூக மாற்றம்" என்ற தொனியில் என்னோடு ஒருமுறை பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கடந்த பத்தாண்டுக்கு மேலான நட்பில் ஒரு தடவையாவது என்னோடு தமிழ்த்திரையிசை குறித்து அவர் பேசியதே இல்லை.
கடந்த ஒரு வருடமாக இளையராஜாவின் பாடல்களைப் பற்றி அவர் என்னோடு பேசிக் கொள்வதும் சிலாகிப்பதுமாக இருந்தார்.
"காக்கைச் சிறகினிலே" இதழின் ஜூன் 2004 இதழ் "இளையராஜா சிறப்பிதழ்" ஆக மலரவிருக்கின்றது என்று சொல்லி என்னிடமிருந்து "தமிழ் சினிமாவில் இளையராஜாவின் பங்கு" என்ற கட்டுரையை வாங்கி சஞ்சிகைக்கு ஏற்றார்போல வடிவமைத்துவிட்டு என்னிடம் காட்டினார். பின்னர் தவிர்க்க முடியாத காரணத்தால் அந்தச் சிறப்பிதழ் வராத போதும்
"நீர் அந்தக் கட்டுரையை யாருக்கும் கொடுக்க வேண்டாம், என்னிடம் இருக்கட்டும், நான் அதைத் தகுந்த இடத்தில் கொடுப்பேன்" என்றார்.
கி.பி.அரவிந்தன் அண்ணரது அரசியல், கலை, இலக்கியம் சார்ந்த செயற்பாடுகளைப் புதினப்பலகை செய்தித் தளம் வழியாகப் பகிர்கிறேன்.
புதினப்பலகை செய்திக் குறிப்பு
புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்
புதினப்பலகை
ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளரும், ஈழ விடுதலைப்
போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்)
சற்றுமுன்னர் காலமானார் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத் தருகிறோம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த அவர், பிரான்சில் உள்ள மருத்துவமனையில் சற்று நேரத்துக்கு முன்னர் காலமானார்.
கவிஞரும், எழுத்தாளருமான கி.பி.அரவிந்தன், ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர்.
அக்காலப் பகுதியில் சுந்தர் என அழைக்கப்பட்ட அவர், ஈழப்போராட்டத்தில், முதன்முதலில் சயனைட் அருத்து உயிரித்தியாகம் செய்த, ஈழப் போராட்ட முன்னோடியான பொன் சிவகுமாரனுடன் இணைந்து செயற்பட்டவர்.
1990களின் முற்பகுதியில் பிரான்சில் குடியேறிய அவர், அங்கிருந்து கடைசி வரை ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக பணியாற்றி வந்தவராவார்.
1953ம் ஆண்டு கிறிஸ்தோபர் பிரான்சிஸ் என்ற இயற்பெயருடன் நெடுந்தீவில் பிறந்த இவர், பாடசாலைப் படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் முடித்தார்.
1972 ஆம் ஆண்டில் சிறிலங்காவின் 1972 அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான துண்டறிக்கையை விநியோகித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதான மூன்று தமிழ் இளைஞர்களில் கி.பி.அரவிந்தனும் ஒருவர்.
1976 ஆம் ஆண்டில் மீண்டும் கைதாகி டிசம்பரில் விடுதலையானார்.
அதையடுத்து, ஈரோஸ் அமைப்புடன் இணைந்து பணியாற்றிய அவர், 1990களின் ஆரம்பத்தில் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்தார்.
அங்கிருந்து அவர், பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர செய்தியாளராகப் பணியாற்றியதுடன், ஐரோப்பியத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தவர்.
பல கவிதைத் தொகுதிகளையும், நூல்களையும் எழுதியுள்ள கவிஞர் கி.பி அரவிந்தன் அவர்களின் கவிதைகளின் பிரெஞ்சு மொழித் தொகுப்பு, ‘Le messager de l’hiver’, [‘ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன்’] என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அப்பால்தமிழ் என்ற இணைய சஞ்சிகையை நடத்திய அவர், 2009ம் ஆண்டு புதினம் இணையத்தளம் நிறுத்தப்பட்ட பின்னர், புதினப்பலகை இணையத்தளத்தை வெளிக் கொணர்வதில் முக்கிய பங்காறி கடைசி வரை அதற்காக உழைத்து வந்தார்.
படங்கள் மற்றும் செய்தி நன்றி: புதினப்பலகை செய்தித்தளம்