Sunday, March 13, 2011
கும்பிடப் போன தெய்வம்
"என்னப்பா இன்னும் ரெடி ஆகேல்லையோ? ஏழுமணிப்பூசை தொடங்கப்போகுது. இப்பவே வெளிக்கிட்டால் தான் கார் பார்க் பண்ண இடம் கிடைக்கும் கெதியா வெளிக்கிடுமன்" நாகநாதனின் அலாரக் குரல் அது.
"இந்த மனுசன் ஒழுங்கா ஒரு சீரியல் பார்க்க விடாது, பழஞ்சீலை கிழிஞ்சது மாதிரி இனிக் கோயிலுக்கு வெளிக்கிடும் வரை புறுபுறுத்துக் கொண்டு வரப்போகுது" வீடியோக்கடையில் இருந்து எடுத்து வந்த திருமதி செல்வம் சன் டிவி சீரியலில் செல்வத்தின் நடிப்பை உச்சுக் கொட்டிக்கொண்டிருந்த நாகநாதன் பெஞ்சாதி சுந்தரி தன் தவ நிஷ்டை கலைந்த கோபத்தில் முணுமுணுத்தவாறே ஹோல் பக்கம் வந்தாள்.
"டோய் இன்னும் உந்த ப்ளே ஸ்ரேசனைக் (play station) கட்டிப் பிடிச்சுக் கொண்டிருக்கிறியே? கொப்பரைப் போல நீயும் கால் வயிறுச் சம்பளம் உழைக்கப் போறாய் போல, ஹோம் வேர்க் எல்லாம் செஞ்சாச்சோ செம்மரி, போய் குளிச்சு வெளிக்கிடு கோயிலுக்குப் போகோணும்" புருஷன் மேல் இருந்த கோபத்தை அப்படியே இலாவகமாகத் தன் ஏக புத்திரன் லவனிடம் இடம் மாற்றி விட்டு இன்றைய திருவிழா நாளுக்கு ஏற்ற சாறியைத் தேர்ந்தெடுக்கும் முனைப்போடு அலுமாரிப்பக்கம் போனாள் சுந்தரி.
கோயில் திருவிழா தொடங்கிவிட்டது. இனிப் பத்து நாள் சிட்னியே களைகட்டப்போகிறது. திருவிழாக் காலத்தில் வேலைக்கு விடுப்பெடுத்தோர் ஒருபக்கம், கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் எட்டத்து உறவினர்கள், தொலைந்து போன நண்பர்களைத் தேடிப் பிடித்து நட்பைப் புதுப்பித்து கார் பார்க் தேடத் துடிக்கும் அடியவர் ஒருபக்கம், லிவர்பூல் பக்கம் போய் சேலைக் கடை தேடி பத்து நாளுக்கும் விதவிதமான சாறி தேடி வாங்கி பக்காவாகாத் தயார் ஆகியிருக்கும் மாதர் கூட்டம் ஒருபக்கம் எனக் களை கட்டப் போகிறது திருவிழா.
"நீர் என்ன சினிமா சூட்டிங்குக்கோ போறீர்" காருக்குள் ஏறிய சுந்தரியைப் பார்த்து எள்ளல் தொனியில் நாகநாதன்.
"இஞ்சை உந்த நக்கல் நளினங்களை உங்கட சொந்தக்காரருக்குக் சொல்லுங்கோ, உங்கட வேலாயுதம் அம்மானின் பெட்டை நளினா, இந்தியா போய் எல்லோ கோயில் திருவிழாவுக்குச் சாறி எடுத்து வந்தவ தெரியுமோ" சைக்கிள் கேப்பில் சுந்தரியின் தாக்குதலால் நாகநாதனின் நிலை அமைதி ஒப்பந்தத்துக்குத் தாவியது.
கோயிலுக்குப் போகும் கார்ப்பயணத்தில் நாகநாதன் இளையராஜாவைப் போட, பக்கத்தில் இருந்த சுந்தரி ஹாரிஸ் ஜெயராஜுக்குத் தாவ ஒரு மாதிரி ரீமிக்ஸ் கலவையாகப் பயணித்தது. பின்னால் இருந்த லவன் விட்ட இடத்தில் இருந்து ப்ளே ஸ்ரேசனில் எதிரிகளைத் தாக்கிக் கொண்டிருந்தான்.
"இப்பதான் ஞாபகம் வருகுது, பொன்னம்பலத்தாற்ற மகன் ராசன் வெஸ்ட் மீட்டில் வீடு வாங்கியிருக்கிறான், போன கிழமை பிளமிங்டன் மார்க்கற்றில கண்டனான், திருவிழா நேரம் எங்கட வீட்டுப்பக்கம் கார் விடலாம் அண்ணை எண்டவன்" என்றவாறே நாகநாதன் ராசன் வீட்டுப் பக்கமாகத் திருப்பினான்.
"என்னப்பா பதினஞ்சு நிமிச நடை, பேசாமல் ட்ரெயினில் வந்திருக்கலாம்" சுந்தரி வியர்வையை நோகாமல் ஒற்றியவாறே.
"நடக்கிறது நல்லது கொலஸ்ட்ரோல் குறையும், பேசாமல் நடவும், டோய் உந்த அறுந்து போன ப்ளே ஸ்ரேசனை நிப்பாட்டடா" இது நாகநாதன்.
"நல்ல சனமப்பா, சுவாமி வெளிவீதி வர வெளிக்கிட்டுது, கொஞ்சம் இஞ்சால் பக்கம் நிப்பம்" வேகமாகப் பாய்ந்த நாகநாதனுக்கு சுந்தரியின் ஐடியா சரியாகப் படவே கோயில் முகப்புப் பக்கமாக ஒதுங்கினான்.
லவன் தன் கூட்டாளிப் பெடியன் ஒருத்தனைக் கண்டு விட்டான், "ஹாய்" என்று சிரித்துக் கொண்டே தொடர்ந்து தங்கள் தேசிய பாஷை ஆங்கிலத்தில் அளவளாவிக் கொண்டே அடுத்து வரப்போகும் புது வீடியோ கேம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்கள், தகப்பன்மாருக்கு அடுத்த ஆப்பு ரெடி.
"என்ன நாகநாதன் ஒளிச்சுக்கொண்டு நிக்கிறீர் இஞ்சால வாருமன்" ரக்ஸ் ஒபிசில் வேலை செய்யும் செல்வம் அது.
"இல்லை ஐசே ஒரே கூட்டமா இருக்கு அதான்"
"இஞ்சால வாரும் எங்கட கூட்டத்தில் வந்து ஐக்கியமாகும்" செல்வம் அழைக்கவே படியேறிக் கோயிலின் வளாகப் பக்கமாகச் செல்வத்தோடு சோடி சேர்ந்திருக்கும் நாலைஞ்சு பேருடன் ஐக்கியமானான் நாகநாதன்.
"இந்த மனுஷன் இப்பிடித்தான், போற போற இடத்திலை தனிய விட்டுட்டு ஓடிப்போயிடும்" சுந்தரியின் புறுபுறு புராணம் இந்த முறை மனதுக்குள்.
"எட சுந்தரி அக்கா! எப்பிடி இருக்கிறியள், கனகாலம் கண்டு, போன திருவிழாவுக்குப் பிறகு இப்பதான் காணுறம் என்ன" சுந்தரியைச் சுறண்டிய அந்தக் குரல் சந்திராவினுடையது. ஒரே ஊர்க்காரர்.
"ஓம் சந்திரா, ஒரே வேலை என்ன, திங்கள் தொடங்கினா வெள்ளிக்கிழமை வரை வெள்ளைக்காறனுக்குச் சேவகம் செய்யோணும், வீக் எண்டில் கூட வீட்டுக்காரருக்கு அவிச்சுக் கொட்டோணும் என்ன" சிரித்துச் சமாளித்துக் கொண்டே சமாவைத் தொடங்கினாள் சுந்தரி.
"உம்மட மரூன் கலர் சாறி உமக்கு நல்ல எடுப்பா இருக்கு, அவையவை தங்கட நிறத்துக்குத் தக்க உடுக்கோணும், சுந்தரத்தாற்ற மனுசி கொடியேத்தத்துக்குக் கட்டிக்கொண்டு வந்துதே ஒரு கலர்.." சுந்தரம் போக்கம் ஹில்ஸ் இல் பெரிய அப்ஸ்ரெயர்ஸ் வீடு கட்டின கடுப்பு சுந்தரிக்கு இருந்ததை சந்திரா கண்டுணரமாட்டாள் என்பதை அவளின் ஆமோதிப்பே காட்டிக் கொடுத்து விட்டது.
"நாங்கள் யாழ்ப்பாணம் போனாங்கள், எங்கட ஊர்ப்பக்கமெல்லாம் வேற குடிகள் வந்திட்டுது, ஒருகாலத்தில எப்படியெல்லாம் இருந்தனாங்கள் அக்கா, வெளியானுக்கு ரம்ப்ளரில் பச்சத்தண்ணி தன்னும் கொடுத்திருப்பமோ" சந்திரா தன் தேசிய உணர்ச்சியைக் கக்கினாள். இதை மாதிரி வெள்ளைக்காரனும் நினைச்சிருந்தால் மூன்று நாலு வீடு இந்த நாட்டில் வாங்கியிருப்போமோ என்று சொல்ல அந்த நேரத்தில் ஆருமில்லை. ஒருபக்கம் சுவாமி வெளிவீதியின் அரைச்சுற்றைத் தாண்டிப் பயணிக்கையில் சந்திராவும் சுந்தரியும் ஹோம் மினிஸ்ட்ரியை கவனிக்க கோயிலின் தெற்குப் பக்கமாக நாகநாதனும் பின்னே செல்வம் கூட்டணியும் வெளிநாட்டு அரசியலைப் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார்கள். இடைக்கிடை எதிர்ப்படும் தெரிந்தவர்களைக் கண்டு ஒரு சில வார்த்தைகள் குசலம் விசாரித்து விட்டுத் தொடர்ந்தது பேச்சுக் கச்சேரி. பின்வீதியில் இருந்த தண்ணீர்ப்பந்தலில் சர்பத் வாங்கியும் வயிற்றுக்கு நிரப்பியாச்சு, கியூவில் நின்று தோசை வாங்கிச் சாப்பிட்டாச்சு. நேற்று அன்னதானத்தில் என்ன மெனு என்றும் பேசி முடிச்சாச்சு, ஜப்பானில் அடித்து ஓய்ந்த சுனாமி வரைக்கும் அரசியலையும் உலக நடப்பையும் அக்குவேறு ஆணிவேறாக அலசியாச்சு. மணி ஒன்பதைத் தொட்டாலும் கூட்டத்துக்குக் குறைவில்லை.
தெற்கு வீதியில் தன்னோடு படித்த கூட்டாளி சுபா கடலை போட்டுக் கொண்டிருந்த சுந்தரியிடம் வந்து
"என்னப்பா வீட்டுக்கு வெளிக்கிடுவோமோ" நாகநாதன்.
"சரி சுபா நாங்கள் வரப்போறம் நாளைக்கு வேலை எல்லோ" சுபா வீட்டில் இருக்கிறதைக் குத்திக் காட்ட ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய திருப்தியில் சுந்தரி.
"என்ன நாகநாதன் அண்ணை இப்பிடி உழைச்சு என்னத்தைக் கண்டியள், பெடியனுக்கு சீதனம் கொடுத்தோ கட்டி வைக்கப்போறியள்" தன் பிள்ளை செலக்டிவ் ஸ்கூலில் தெரிவானதை பொடி போட்டுக் காட்டிய பரமதிருப்தியில் சுபா.
அசட்டுச் சிரிப்பை உதிர்த்துவிட்டு நாகநாதன்,சுந்தரி, லவன் சகிதம் அடுத்த பதினைந்து நிமிட நடைக்குத் தயார் படுத்தினான்.
"ஐயய்யோ, இரண்டு மணித்தியாலமா அங்கை இருந்தனாங்கள் கோயிலுக்கு உள்ளை போய் சுவாமி கும்பிடோணும் எண்டு யாருக்காவது உறைச்சதா" சுந்தரி
யாவும் கற்பனையே (என்று நம்புவோமாக)
எச்சரிக்கை: இது என் முதல் சிறுகதை முயற்சி ;-)
Labels:
சிறுகதை
39 comments:
எல்லாம் சரி அதென்ன கடைசியில ”என்று நம்புவோமாக” என்டு பொட்டிருக்கிறியள்.
அது சரி ஒரு மகன் இருக்கெண்டு வொல்லவேயில்லையே?
---------------
இப்பிடி உண்மை கலந்த நாட்குறிப்புக்களை எழுதுவதன் மூலம் எங்கள் இறுக்கமான மண்ணுக்குள் சற்று புதிய காற்று கிடைத்தால் மகிழ்ச்சியே.
அண்ணோய்
இதென்ன புரளி ;)
இது கற்பனையா தெரியல... கோயில்ல நடந்ததை ஒட்டுகேட்ட மாதிரி இருக்கு. :)
இலங்கைத் தமிழில் படித்து ரசிக்க மிகவும் இனிமையாக இருந்தது....எதார்த்தமான உண்மைகள்...சிறுகதைக்கு எப்போதுமே நல்ல கருதான்...வாழ்த்துகள் பிரபா...தொடர்ந்து சிறுகதைகள் நிறைய எழுதுங்கள்...
தல சிறுகதை அருமை ;)
இயல்பான எழுத்துநடை...கடைசியில ஒரு பஞ்ச்...எல்லாமே தூள் ;)
மேலும் நிறைய சிறுகதைகள் எழுதுங்கள் தல ;)
முதல் சிறுகதை என்டு பொட்டிருக்கிறியள். கடைசியில் வச்ச ட்விஸ்ட் அருமை.
கோவிலுக்கு போயும் சாமி கும்பிடவில்லையா ?இதென்ன நாத்தீக சிந்தனைகள் :-)
முதல் முயற்சியில பாஸ் பண்ணிட்டீங்க பிரபா!
இரா பிரஜீவ் said...
இது கற்பனையா தெரியல... கோயில்ல நடந்ததை ஒட்டுகேட்ட மாதிரி இருக்கு. :)//
;) (தம்பி மாதவன் குரலில்) இப்ப நான் என்ன செய்ய
முதல் சிறுகதை போன்று தோன்றவில்லை நண்பரே! வார்த்தைப் பிரயோகங்களும், உரையாடல் மூலமே கதையை நகர்த்திக்க் கொண்டு செல்லும் பாணியும், கடைசியில் இருந்த திருப்பமும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
பாச மலர் / Paasa Malar said...
இலங்கைத் தமிழில் படித்து ரசிக்க மிகவும் இனிமையாக இருந்தது..// மிக்க நன்றி சகோதரி
கோபிநாத் said...
தல சிறுகதை அருமை ;)
இயல்பான எழுத்துநடை...கடைசியில ஒரு பஞ்ச்...எல்லாமே தூள் ;)//
நன்றி தல ;) உங்க ஆசி இருந்தா இன்னும் வைப்போம்
சிறுகதைகளை தொடர்ந்து எழுதுங்கள்..இதுவும் உங்களுக்கு அருமையாக செய்ய வருகிறது ,,வாழ்த்துக்கள்
ரேகா ராகவன் said...
முதல் சிறுகதை என்டு பொட்டிருக்கிறியள். கடைசியில் வச்ச ட்விஸ்ட் அருமை.//
மிக்க நன்றி சார்
ramachandranusha(உஷா) said...
கோவிலுக்கு போயும் சாமி கும்பிடவில்லையா ?இதென்ன நாத்தீக சிந்தனைகள் :-)
முதல் முயற்சியில பாஸ் பண்ணிட்டீங்க பிரபா!//
ஆகா வசிஷ்டி(ர்) வாயால்...
ஹாஹா ஆஸி, லண்டன், பிரான்ஸ், கனடா என சகல இடங்களும் எங்கடையள் மாறினமாதிரி இல்லை அடுத்த தலைமுறை ஆங்கிலம், டொஷ்ச், பிரெஞ்ச் என பேசிக்கொண்டு திரிய நாங்கள் இன்னமும் வெளியாருக்கு டம்ளரில் டீ கொடுப்பதையும், பக்கத்து வீட்டுக்காரர்களை நக்கலடிப்பதையும் நிறுத்தவே மாட்டாம்
முதல் கதையே நல்ல கதை, அண்ணே உண்மையில் இது கற்பனை இல்லை என்பது வெளிநாடுகளில் இருக்கும் நம்மவருக்குப் புரியும்.
அதுசரி உங்களுக்கு பிளேஸ்டேசன் விளையாடுகின்ற வயசிலை ஒரு பொடியன் இருக்கின்றதை ஏன் மறைத்தீர்கள் ஹிஹிஹி.
கவிதை எழுதி சாதிச்சவர் நடிச்சு கலக்க வெளிக்கிட்டால், நடிச்ச நானும், அறிவிச்ச நீங்களும் கதை, கவிதை என்று அமர்க்களப்படுத்துவோமாக. இது முதல் கதையா? என்னாலை நம்பேலாது.. படிக்கிற காலத்திலை சதுர றூல் கொப்பியிலை எழுதின கதைகள் என்னவாச்சு?
வெங்கட் நாகராஜ் said...
முதல் சிறுகதை போன்று தோன்றவில்லை நண்பரே! //
வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
//யாவும் கற்பனையே (என்று நம்புவோமாக)//
நீங்க என்ன சொன்னாலும் நம்ப மாட்டம். :)
//எச்சரிக்கை: இது என் முதல் சிறுகதை முயற்சி ;-)//
முயற்சி திருவினையாக்கியுள்ளது. :)
சின்னக்குட்டி said...
சிறுகதைகளை தொடர்ந்து எழுதுங்கள்..//
நன்றி சின்னக்குட்டியர், முயற்சிக்கிறேன் ;)
Blogger வந்தியத்தேவன் said...
முதல் கதையே நல்ல கதை, அண்ணே உண்மையில் இது கற்பனை இல்லை என்பது வெளிநாடுகளில் இருக்கும் நம்மவருக்குப் புரியும்.//
வாங்கோ வந்தி
கதையல்ல நிஜம் தானே வாழ்க்கை ;0, ஆகா நீங்களும் வதந்தி பரப்புறீங்களா
இதைதானே சன்னதி திருவிளாவுக்கும் செய்யுறது
கே. எஸ். பாலச்சந்திரன் said...
கவிதை எழுதி சாதிச்சவர் நடிச்சு கலக்க வெளிக்கிட்டால், நடிச்ச நானும், அறிவிச்ச நீங்களும் கதை, கவிதை என்று அமர்க்களப்படுத்துவோமாக. //
வாங்கோ பாலா அண்ணை ;-)
சதுர றூல் கொப்பிக் காவியங்கள் தனிக்கதை ;-)
கலை said...
//யாவும் கற்பனையே (என்று நம்புவோமாக)//
நீங்க என்ன சொன்னாலும் நம்ப மாட்டம். :)//
ஆகா
நம்பித்தான் ஆகோணுமாக்கும் ;)
M.Shanmugan said...
இதைதானே சன்னதி திருவிளாவுக்கும் செய்யுறது
//
இதென்ன அண்ணை புதுக்குழப்பம்
தன்ர வீட்டு கதையை எழுதிப்போட்டு அதென்ன "யாவும் கற்பனையே (என்று நம்புவோமாக)" உங்கட பெடியன் சரியான குழப்படியோ? பாவம் அவனை அதிகம் ஏச வேண்டாம். அருமை.
சிறுகதை நன்றாக உள்ளது.
இதிலும் ராஜாவை விட்டு வைக்கவில்லை போல
yarl said...
தன்ர வீட்டு கதையை எழுதிப்போட்டு அதென்ன//
ஆகா மங்கை அக்கா நீங்களுமா ;)
WESLEY said...
சிறுகதை நன்றாக உள்ளது.
இதிலும் ராஜாவை விட்டு வைக்கவில்லை போல/
வாங்கோ வெஸ்லி, ராஜாவை எப்படியாவது சேர்த்திடுவோம் ;)
கானாதான் "நானா" வா?
ஹ்ம்ம்ம் , "play station" எண்டத்தான் ஞாபகம் வருது. என்ரை மகன் வச்சிருந்த "play station" தற்செயலாக என்ரை காலிலே மிதிபட்டு உடைஞ்சு போச்சு!
வாங்கோ சக்திவேல்
உங்கட ஒரு பின்னூட்டம் தணிக்கை ;)
இது சொந்தக் கதை அல்ல கண்ட கதை
ஆங் , மதுரை ஆட்சிதான் போல :-)
காண
சிட்னியில் கலாச்சாரம் நன்றாக வளர்கிறது??????
அருமையான கதை , மேலும் எழுதுக
பொம்பிலயளிட்டை அடி வாங்கப் போறிர் கவனம்
வருகைக்கு நன்றி NAMATHANGAM
நீங்களே போட்டுக்குடுப்பீங்க போல ;)
> கானா பிரபா said...
வாங்கோ சக்திவேல்
உங்கட ஒரு பின்னூட்டம் தணிக்கை ;)
-----------------
உங்கடை தணிக்கையாலை நொந்து நூலாகி நானும் சொந்தத் தொழில் தொடங்கிவிட்டேன் :-)
சக்திவேல்
நீங்களும் கடைவிரித்ததற்கு வாழ்த்துக்கள்
அழகான அருமையான புலம் பெயர் ஆன்மீகச் சூழலை அம்பலப்படுத்தும் கதை. முதற்கதை என்று நீங்கள் சத்தியம் பண்ணிச் சொன்னாலும் நம்பமுடியாதவாறு கதை இருக்கிறது.
- மணிவாசகன்
வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி மணிவாசகன்
Post a Comment