தமிழ் இணையப்பரப்பில் முக்கியமானதொரு ஆளுமையாக விளங்கும் மலேசியா வாழ் கணினியியலாளர் திரு.முத்து நெடுமாறன் அவர்களை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்தித்தேன். இந்தப் பேட்டியின் வாயிலாக முத்து நெடுமாறன் அவர்களது தமிழ் கணிய முயற்சிகளின் ஆரம்பம் முதல் இன்றுவரையான அவரின் மனப்பதிவுகளைப் பகிர ஒரு வாய்ப்பாக அமைந்தது. பேட்டிக்காக அழைத்த போது உடனேயே மகிழ்வோடு சம்மதித்து ஆழமான, விரிவானதொரு பேட்டியைப் பகிர்ந்து கொண்ட அவருக்கு என் நன்றியை நான் சார்ந்த வானொலி ஊடகம் சார்பிலும், முரசு, செல்லினம் பயனர்கள் சார்பிலும் பகிர்ந்து கொள்கின்றேன்.
Download பண்ணிக் கேட்க இங்கே அழுத்தவும்
வணக்கம் முத்து நெடுமாறன் அவர்களே!
முதலில் சம்பிரதாயபூர்வமான கேள்வியோடு சந்திக்கின்றேன். தமிழ் இணைய, கணினி உலகில் முக்கியமானதொரு ஆளுமையாக விளங்குகின்ற நீங்கள் முதலில் உங்களுடைய கல்விப்பின்னணியை நேயர்களோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.
நான் கணினிப் பொறியியல் துறையில் (Computer engineering) 1985 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவன். அந்த ஆண்டு நான் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளிவந்த போது மிகவும் பொருளாதாரச் சிக்கல் கொண்ட ஆண்டாக அமைந்திருந்தது. எனவே உடனே வேலை கிடைக்கவில்லை. பட்டப்படிப்பு கிடைத்தும் கூட Research & Development இல் பயிற்சிப்பொறியியலாளராகத் தான் சேர்ந்தேன். ஈராண்டு ஆயிற்று, 1987 ஆம் ஆண்டு தான் Sun Micro system நிறுவனத்தில் ஒரு முழுமையான பணியில் அமர்ந்தேன். அமெரிக்க நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அதன் பிறகு தொடர்ந்த வளர்ச்சிதான். நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. 1993 ஆம் ஆண்டு முதல் ஆசிய பசுபிக் வட்டார தொழில் நுட்ப மேம்பாட்டு இயக்குனராக சிங்கப்பூரில் இருந்து பணி புரிந்தேன். 2005 ஆம் ஆண்டு தான் மற்றவர்களுக்குப் பணி செய்யும் கடமையில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்று சொந்தப்பணியைச் செய்து வருகின்றேன்.
தமிழ் இணைய உலகில் முரசு சார்பில் நீங்கள் கொடுத்த எழுத்துருக்களை அறியாதவர்கள் யாருமே இல்லை என்று சொல்லிவிடலாம். அந்தவகையில் இந்த முரசு நிறுவனத்தின் ஆரம்பம் எப்படி அமைந்தது என்று சொல்லுங்களேன்?
முரசு என்பது என் முழுநேரப் பொழுதுபோக்கு என்று தான் சொல்ல வேண்டும். ஆறு வயதுப் பையனாக இருக்கும் போதே திருக்குறள், கொன்றைவேந்தன் எல்லாம் மனப்பாடம். அந்த வகையில் தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றிருந்த போது அதைப் முழு நேரப்பணியாக அல்லாமல் ஒரு பொழுதுபோக்கிற்காக செய்ய வேண்டும் என்ற முனைப்பில் 1985 ஆம் ஆண்டு முரசு அஞ்சல் முதற் பதிப்பு வெளிவந்தது. அதன்பிறகு எங்களுக்குப் பலரும் ஆலோசனை கூறினார்கள். இதை நீங்கள் முழுமையான செயலியாக வெளியிட்டால் பலருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று சொன்னார்கள். 1987 ஆம் ஆண்டுக்குள் நிறைய எழுத்தாளர்கள், தமிழ் மீது ஆர்வம் கொண்ட பலரும் முரசு செயலியைப் பயன்படுத்தி வந்தார்கள். 1987 ஆம் ஆண்டுதான் முதன் முதலாகத் தமிழ் ஓசை என்ற மலேசியத் தமிழ் நாளிதழ் அவர்களுடையான முழுமையான அச்சுப்பணிக்கு முரசு அஞ்சல் செயலியைக் கேட்டார்கள். அப்போது எனக்குப் பெரும் அச்சம் ஏனென்றால் அவ்வளவு பெரிய அளவுக்கு இந்த செயலி செயற்படுமா என்ற அச்சம் எனக்குள் இருந்தது. இருந்தாலும் ஆர்வத்தின் பேரிலும் அவர்கள் கொடுத்த உற்சாகத்தின் பேரிலும் இதைச் செய்யலாம் என்று துணிந்தோம். அந்த ஆண்டுதான் ஒரு முழுமையான அன்றாடம் வெளிவருகின்ற நாளிதழ் நமது மென்பொருளைப் பயன்படுத்தி வெளியிட்டார்கள். அதன்பிறகுதான் இதனை உலக அளவில் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அந்த வகையில் 1994 ஆம் ஆண்டு முரசு என்ற மென்பொருளை முரசு அஞ்சல் என்ற மென்பொருளோடு இணைத்து இலவசமாக வெளியிட்டோம். இதுதான் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. அப்போது அமெரிக்காவில் இருந்தெல்லாம் மின்னஞ்சல்கள் வந்தபோது சிவம் என்ற நண்பர் ஒருவர் எனக்குக் குறிப்பிட்டது, Thank you for the opportunity to rediscover my language என்று. அது எனக்குப் பெரும் உந்துதலையும் உற்சாகத்தையும் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக 2002 ஆம் ஆண்டு மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான அதிகாரபூர்வ மென்பொருளாக முரசு அஞ்சலை ஏற்றுக்கொண்டார்கள். அதைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூர் கல்வி அமைச்சு அவர்களுடைய தமிழ்ப்பயன்பாட்டிற்காக அரசாங்கத்தின் சார்பில் முரசு அஞ்சலைப் பெற்று எல்லாப் பள்ளிகளுக்கும் அனுப்பினார்கள். இவைகள் எனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள் என்று சொல்ல வேண்டும். அதேவேளை 2004 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முரசு அஞ்சலைப் பெற்று ஆப்பிள் கணினிகளில் இணைத்துக் கொண்டது பெரும் அங்கீகாரம் என்பேன். காரணம் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகளைப் பற்றி உங்களுக்குத் தெரியும் அவர்கள் மிகச்சிறந்த தரத்தைக் கைப்பற்றி வந்தார்கள். அந்தத் தரத்துக்கு ஒப்ப நம்மால் செய்ய முடிகின்றதென்றால் அது பெரும் அங்கீகாரம் தானே. கணினியிலேயே இது கிட்டுவதால் இன்னொரு மென்பொருளைப் பதிவிறக்கம் செய்து பாவிக்கும் சிக்கல் இல்லாமற் போய்விடுகின்றது.
கணினியில் தமிழ் என்ற நிலையில் இருந்து செல்போனில் தமிழைத் தாவ வைத்த முதற்பெருமையை செல்லினம் என்ற உங்கள் தயாரிப்பு தக்க வைத்திருக்கின்றது. இப்போதும் ஞாபகமிருக்கின்றது எனக்கு, சிங்கப்பூர் ஒலி வானொலி வழியாக அதனை கவிஞர் வைரமுத்து தலைமையில் செல்லினத்தை வெளியிட்ட அந்த நிகழ்வு. அதைப்பற்றிச் சொல்லுங்களேன்.
கைப்பேசியில் தமிழ் வரவேண்டும் என்ற எண்ணம் 2003 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. காரணம் இங்கிருக்கின்ற மலேசிய வானொலிகள், சிங்கப்பூர் வானொலி, தொலைக்காட்சிகளுக்கெல்லாம் நிரைய நேயர்கள் குறுஞ்செய்திகளை அனுப்பும் போது தமிழில் கூற வேண்டிய செய்தியை ஆங்கில எழுத்துக்களின் துணையோடு தான் அனுப்பினார்கள். இதைத் தமிழிலேயே கொடுத்தால் என்ன என்ற என்ணத்தில் தான் நாங்கள் இந்தப் பணியில் இறங்கினோம். அந்த வகையில் 200ஆம் ஆண்டு இதனுடைய வடிவமைப்பை (prototype) கோலாலம்பூரில் ஒரு நிகழ்ச்சியில் செய்து காட்டினோம். அதைப் பலரும் வரவேற்றார்கள். அதனின் செயலாக்கம் பொதுப்பயனீட்டுக்காக வெளியிட்ட ஆண்டு 2005 ஆம் ஆண்டு பொங்கலன்று சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலி நிறுவனத்துடன் அவர்களுடைய ஆதரவில் கவிஞர் வைரமுத்து நேரடியாகக் கலந்து கொண்டு அதை வெளியிட்டார்கள். அதை வெளியிடும் போது அவர் சொன்ன கவிதை அதை இப்போதும் செல்லினத்திலும் பார்க்கலாம். அதாவது
நேற்று வரை மூன்று தமிழ்
இன்று முதல் நான்கு தமிழ்
இதோ கைத்தொலைபேசியில் கணினித் தமிழ்
என்று அவர் சொல்லச் சொல்ல அதை வானொலி நிலையத்துக்கும் அனுப்பினார்கள் மலேசியாவில் இருக்கும் ஒரு எழுத்தாளருக்கும் அனுப்பினார்கள். அதுதான் தமிழின் முதல் தமிழ்க்குறுஞ்செய்தி என்ற போது அவையில் இருந்த ஆயிரக்கணக்கானோர்க்கு வியப்பும் ஏற்பட்டது. அதன்பிறகு 2006 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் ஆஸ்ட்ரோ நிறுவனம் 2007 ஆம் ஆண்டு U.A.E நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் இந்தியாவில் என்று தொடர்ந்தது. 2009 ஆம் ஆண்டில் தான் ஐபோனில் இந்த செல்லினம் வெளியானது.
உண்மையில் 2005 ஆம் ஆண்டு நீங்கள் செல்லினத்தை அறிமுகப்படுத்தியபோது இருந்த நிலையை விட இப்போது ஐபோன் வழியாகப் பன்மடங்கு பயனீட்டாளர்களுக்குச் சென்றடைந்திருக்கும் நிலை வந்திருக்கின்றது இல்லையா?
கண்டிப்பாக, அதற்கு முக்கிய காரணம் ஐபோனுக்கு முன்னர் மற்றைய தொலைபேசிகளில் செய்யும் போது அந்தந்த நாட்டு மொபைல் ஆபரேட்டர்ஸ் இற்கு அனுப்பி அவர்களுடைய ஆதரவைத் தேடவேண்டி இருந்தது. அங்கீகாரம் தேவைப்பட்டது. இல்லையேல் கைப்பேசியில் அதைத் தரவிறக்கம் செய்வது சிரமமாக இருந்தது. ஆனால் ஐபோன் வந்த பிறகு யார் யார் ஐபோன் வைத்திருக்கிறார்களோ அவர்கள் சுலபமாக ஒரு க்ளிக்கில் பதிவிறக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்கள். அதுவே இதன் பெரும் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது.
இந்த செல்லினத்தை இப்போது நேரடியாக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களுக்கான உள்ளீடாகவும் இணைத்திருக்கின்றீர்கள் இல்லையா?
இப்போது ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் நிறையப் பயனாளர்கள் தமிழில் பகிரும் வாய்ப்பு வந்திருக்கிறது அந்த வகையில் அவர்கள் எம்மிடம் கேட்டார்கள். போனிலேயே தமிழைக் கோர்த்து இந்தத் தளங்களுக்கு அனுப்பும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்ட போது அதை இப்போது நிறைவேற்றியிருக்கின்றோம்.
இப்போது ஐபோனுக்குச் சவாலாக முளைத்திருக்கும் ஆண்ட்ராய்ட் போன்கள் இவற்றிற்கான செயலியாக செல்லினம் வரும் வாய்ப்பு இருக்கின்றதா?
கண்டிப்பாக இருக்கின்றது. எங்களைப்பொறுத்தவரையில் எங்கெங்கெல்லாம் தமிழைக் கொண்டு சேர்க்க முடியுமோ அங்கெங்கெல்லாம் தமிழைச் சேர்க்க வேண்டும் என்பது தான் அடிப்படை அவா. ஆண்ட்ராய்டில் தமிழைக் கொண்டு வருவதற்கான சிக்கல் வந்து ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்திலேயே இருக்கின்றது. காரணம் இந்திய மொழிகளை இந்த இயங்குதளத்தில் சரிவர இயங்குவதற்கான வாய்ப்பை இன்னும் கொண்டுவரவில்லை. இருப்பினும் அதை எப்படியாவது நாங்கள் செய்யவேண்டும் என்ற முனைப்பில் இயங்கி வருகின்றோம். ஆண்ட்ராய்ட் 3வது பதிப்பில் அந்த வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றார்கள். அதற்கு முன்பாகவே நாங்கள் வெளியிடுவதற்கான முயற்சியில் இயங்கிவருகின்றோம். அப்படி வரும் போது ஆண்ட்ராய்டாக இருந்தாலும் சரி ப்ளாக்பெரியாக இருந்தாலும் சரி ஐபோனாக இருந்தாலும் சரி இவர்களுக்குள்ளாகவே தமிழ்மொழி வழியான செய்திப்பரிமாற்றத்துக்கான வாய்ப்பு இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
அடுத்து ட்விட்டர் வழியாக அன்பர்கள் சிலர் கேட்ட கேள்விகளையும் சேர்த்திருக்கின்றேன் அந்த வகையில் முதற்கேள்வி, மொபைல் ப்ளாக்குகளிலே செல்லினத்தின் பயன்பாடு வருமா? (like the wordpress app for Smartphones)
மொபைல் போனைப் பயன்படுத்தி வலைப்பதிவுகளைக் கொடுக்கவேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு இருக்கின்றது. அதைக் கண்டிப்பாகக் கவனித்துவருகின்றோம். பரிசீலனையில் வைத்திருக்கின்றோம். அதைவிட மிக அதிகமான தேவை என்னவென்று சொன்னால் எல்லா அப்ளிகேசனிலும் தமிழைக் கோர்க்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்த வாய்ப்பினை நாங்கள் ஏற்படுத்திக்கொடுத்துவிட்டோமென்றால் உதாரணத்துக்கு wordpress இல் ஒரு செயலி இருக்கின்றது. அந்த wordpress இலேயே தமிழைக் கோர்ப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தோமென்றால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகத் தமிழைக் கோர்பதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடுகின்றது. அந்த முயற்சியில் நாங்கள் இப்போது இயங்கிக் கொண்டு வருகின்றோம். அது முடியிறவரைக்கும் நாம் ஓயப்போவதில்லை.
இன்னொரு நேயரின் கேள்வி, ஐபோனில் இருக்கும் எல்லா அப்ளிகேசனிலும் தமிழை அடிக்கும் வசதி எப்போது வரும்?
அருமையான கேள்வி, எங்களுக்கும் இதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றது இதை முடித்துவிடவேண்டும் என்று. இப்போது பயனாளர்கள் அந்த வாய்ப்பினைப் பெறவேண்டும் என்றால் Jail break செய்ய வேண்டும். அந்த Jail break செய்யும் முறைமையை நாங்கள் ஆதரிப்பதில்லை. இயற்கையாகவே ஐபோனில் இருக்கும் எல்லா அப்ளிகேசனிலும் தமிழைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பினை நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். அதாவது நேரடியாகப் பார்க்கும் போது இது முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். சில பாதுகாப்புக்காரணங்களுக்காக இதுபோன்ற செயலிகளைப் ஐபோனில் பதிவிறக்க அவர்கள் அனுமதி கொடுக்க மாட்டார்கள். இருப்பினும் ஆப்பிள் நிறுவனத்தோடு நாங்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு வருகின்றோம். உலகத்தில் இருக்கும் தமிழர்களுக்கு இது தேவை என்ற ரீதியில் அணுகிவருகிறோம். கூடியவிரைவில் இது சாத்தியமாகும் என்றே நம்புகின்றேன்.
இன்னொரு நேயரின் கேள்வி, நான் நினைக்கின்றேன் முரசுவின் ஆரம்பகாலத்துப் பாவனையாளர் என்று நினைக்கின்றேன், அவர் கேட்டிருக்கின்றார் பழைய முரசு கோப்புகளை (.mrt file) வைத்திருப்போர் யூனிகோடு கோப்புகளாக மாற்றுவதற்கு ஏதும் வழி முரசு அளிக்கிறதா?
கண்டிப்பாக. இப்போது நாம் வெளியிட்டிருக்கும் பதிப்பு முரசு அஞ்சல் 10. Anjal.net என்ற இணையத்தளத்தில் அதன் தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த முரசு அஞ்சல் 10 இல் converter என்ற கருவியை Microsoft word, Microsoft Powerpoint, Microsoft excel போன்ற செயலிகளில் சேர்த்துவிட்டோம். Microsoft word ஐத் திறந்தால் Anjal converter என்ற கருவி இருக்கும். இந்த mrt கோப்புக்களை வைத்திருப்போர் என்ன செய்யலாம் என்றால் அவர்களுடைய கோப்புக்களின் பெயரை, உதாரணத்துக்கு myfile.mrt என்று இருந்தால் myfile.rtf என்று மாற்றியவுடன் அந்தக் கோப்பினை நீங்கள் word இலேயே திறக்கலாம். திறந்தவுடன் Anjal converter என்ற பட்டனைக் கிளிக் செய்தால் உடனே அந்த எழுத்துக்கள் யூனிகோர்டுக்கு மாறிவிடும்.
இன்னொரு அன்பரின் கேள்வி, முரசுவின் அழகிய எழுத்துருக்கள் ஏதும் தமிழுலகிற்கு இலவசமாக கொடுக்கும் திட்டம் இருக்கிறதா ? செல்லினம் மூன்றாம் பதிப்பின் அழகிய எழுத்துருக்கள் கலை நயத்தோடு கோர்த்த விதத்தில் எனக்கும் இந்த ஆவல் உண்டு
நல்ல கேள்வி, பலரும் கேட்கின்ற கேள்வியும் கூட. இதற்கு கொஞ்சம் விரிவாகவே பதிலளிக்கவேண்டும். தொடக்க காலத்தில் இருந்த வாய்ப்பை விட இப்போது பலருக்கும் தமிழைத் தட்டச்சு செய்கின்ற வாய்ப்பு பரவலாக வந்திருக்கின்றது. பலரும் முரசு அஞ்சல் செயலியின் அடிப்படையை வைத்துக்கொண்டு செயலிகளை உருவாக்கியிருக்கின்றார்கள். எனவே பலருக்கும் எழுத்துருக்களைக் கோர்ப்பதற்கான செயலிகள் பரவலாக இருக்கின்றன. எங்களுடைய எண்ணம் என்னவென்றால் தமிழ் என்பதற்காக அதன் தரம் குறைவாக இருக்கவேண்டும் என்ற நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழ் என்பதால் அதற்கு இரண்டாவது தரம் இருக்க வேண்டியதில்லை. ஆங்கிலத்துக்கு நிகராக தமிழுக்கு உலகத்தரம் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இப்போது செல்லினம் 3 ஆம் பதிப்பை வெளியிடக் கூடப் பலகாலம் பிடித்தது. காரணம் ஒவ்வொரு புள்ளியையும் ஆராய்ந்தோம். அவ்வளவு நுணுக்கமாக ஆய்வு செய்து அவ்வளவு அழகாகக் கொண்டு வந்திருக்கிறோம். இதற்கு ஒரு quality, value இருக்கவேண்டும். இப்போ நீங்க சொன்னீங்க இந்த எழுத்துருக்கள் அழகாக வந்திருக்கின்று. இதைக் கேட்கும் போது எமக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்கள் இதையெல்லாம் வரவேற்கின்றார்களே என்று. எனவே பொதுவான பயன்பாட்டுக்கு நிறைய செயலிகள் இருக்கையில் professional ஆகச் செய்யக் கூடியவேலைகளுக்கு ஒரு தரம் இருக்கிறது எனவே Price tag போடவேண்டிய தேவையும் இருக்கின்றது. அதுவும் மிகக்குறைந்த விலையைத் தான் , 25 அமெரிக்க வெள்ளிகளை நிர்ணயித்திருக்கின்றோம். 25 எழுத்துருக்கள் professionally crafted என்ற விதத்தில் இந்தப் பொதியில் இருக்கின்றது. இலவசமாக உண்டா என்ற கேள்விக்கு, இதற்கான எண்ணமும் ஆர்வமும் உண்டு. ஆனால் இதைச் செய்யயும் போது இவற்றுக்கான அங்கீகாரம் குறைந்து விடுமோ என்ற எண்ணமும் ஏற்படுகின்றது ஏனெனில் இவற்றைச் செய்வதற்கான Typocrafters ஐப் பணம் கொடுத்துத் தான் வேலை வாங்குகின்றோம். அவர்களுக்கான ஊதியமும், செலவினங்களும் ஏற்படும் இந்த விளக்கம் பொருத்தமாக அமையும் என்று நினைக்கின்றது.
ஒரு பொதுவான கேள்வி, முப்பது வருஷங்களைத் தொடப்போகின்ற உங்கள் பணிக்கான அங்கீகாரத்தைப் பரந்துபட்ட பயனீட்டாளர்களும், அரச மட்டத்திலும் கொடுத்திருக்கின்றார்கள். இந்த வேளையில் உங்களால் மறக்கமுடியாத பெருமைப்படும் தருணம் ஒன்றைப்பகிர்ந்து கொள்ளுங்களேன்.
செல்லினத்தை 2005 ஆம் ஆண்டு பொதுப்பயனீட்டுக்காக வெளியிட்ட நாளுக்கு மறுநாள் பலர் செல்லினத்தை நேரடியாகத் தரவிறக்கும் சிக்கல் ஏற்பட்டது. அதில் ஒருவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர் காண்ட்ராக்ட் தொழிலாளியாக இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்து வேலை செய்துகொண்டிருந்தார். அவர் என்னிடம் வந்து தன்னுடைய Samsung போனைக் கொடுத்து இதில் தமிழ் போட்டுக்கொடுங்க எனக்கு ரொம்ப அவசியமாத் தேவைப்படுது நான் வந்து வீட்டுக்கு அடிக்கடி தொடர்பு கொள்ளணும்னு. நான் உடனே "இப்பதான் நீங்க போனில் அழைப்பதற்கான வாய்ப்புக்கள் சுலபமாக இருக்கே காலேல ஒருதடவை போன் பண்ணிக்கலாம், சாயந்திரம் இன்னொரு வாட்டி அழைக்கலாம் இப்படி உங்க மனைவி கிட்ட ஒவ்வொரு நாளும் பேசலாமே இப்படி இருக்கையில் இந்த செல்லினத்தை ஏன் முக்கியமாகக் கருதுறீங்க என்று நான் கேட்ட போது அவர் சொன்னார்.
"என் மனைவிக்குப் பேச வராதுங்க"
கண்கலங்கிப் போய்விட்டேன். பல பொதுமேடைகளில் எனக்கு அங்கீகாரம் எனக்குக் கிடைத்திருக்கின்றது ஆனால் இவருடைய சந்திப்பு மறக்கமுடியாதது.
இந்தப் பேட்டியின் வழி இன்னொரு மகிழ்ச்சியான பகிர்வையும் சொல்ல விழைகின்றீர்கள் என்பதைப் பேட்டி ஏற்பாட்டின் போது அறிந்து கொண்டேன். இந்தவேளையில் அதைப்பற்றிச் சொல்லுங்களேன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செல்லினத்தின் 3 வது பதிப்பை வெளியிட்டோம். அதைப் பதிவிறக்கிய பலரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள் நீங்கள் உட்பட. ஆனால் பலரிடம் இருந்து ஒரு கேள்வி என்னிடம் இப்போது iPad இருக்கின்றது. iPad இல் தமிழ் வேண்டும் என்று மின்னஞ்சல் வழியாகக் கேட்டார்கள். இவர்களுக்கு ஒரு நற்செய்தி, செல்லினத்தின் 3.0.1ஆம் பதிப்பு இபோதுதான் வெளியீட்டிற்கன ஒப்புதலைப் பெற்றுள்ளது. இந்தப் பதிப்பு iPad கருவிக்காக சிறப்பக வடிவமைக்கப்பட்ட ஒன்று. இதுவே செல்லினத்தின் முதலாவது 'universal app' ஆகும். கடந்த 2 மணி நேரத்துக்கு முன்புதான் செல்லினத்தின் iPad இற்கான பதிப்பு பதிவேற்றம் கண்டுள்ளது. இப்போது iPad வைத்திருப்போரும் செல்லினத்தைப் பயன்படுத்தலாம். இந்த செய்தியை இப்போதுதான் வெளியிடுகின்றேன்.
http://sellinam.com/?p=114
நிறைவாக, கேட்டுக்கொண்டிருக்கின்ற தமிழ் அன்பர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ஒன்றேயொன்று தான். அதாவது எல்லாக்கருவிகளிலும் தமிழ் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்படுகின்ற எங்களுக்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதைப்பயன்படுத்த வேண்டும். இதனுடைய பயனாளராக அமைய வேண்டும். எங்கெங்கெல்லாம் தமிழைப் பயன்படுத்தமுடியுமோ அங்கெங்கெல்லாம் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரேயொரு விண்ணப்பம் தான்.
மிக்க நன்றி கானா, இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித்தந்த வானொலி நிலையத்தாருக்கும் சரியான கேள்விகளைக் கேட்டு முழுமையான விபரங்களை வெளிக்கொணர்ந்த உங்களுக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்.
14 comments:
அண்ட்ராய்டில் தமிழ்விசை என்று இகலப்பை நன்பர்கள் செய்துள்ளார்கள் (இலவசம்)
முத்து நெடுமாறன் அவர்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள். ;)
மிக அருமையான பகிர்வு தல ;)
என்ன ஒரு சேவை. இவரைச் சந்தித்தாலே ஒரு பெரிய கனவு நனவான மாதிரிங்க. நன்றி நண்பா!
iphoneல் தமிழ்99 முறையில் தட்டச்சு செய்ய முடியவில்லை. phonetic முறை மட்டும்தான் உள்ளதா?
பதிவுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி!
வணக்கம் செந்தழல்ரவி
தகவலுக்கு நன்றி, அவர்களின் பேட்டி வெகுவிரைவில் வரவிருக்கின்றது.
வருகைக்கு நன்றி தல கோபி
நண்றி பிரபா.இன்று நான் அதிகமாக நண்பர்களுடன் எனது இன்பதுன்பங்களை பகிர்ந்துகொள்ள காரணம் செல்லினம்தான் அதன்மூலம்தான் முகநூல்,வலைப்பதிவு வரை என்னால் முன்னேறமுடிகிறது.என் நண்றிகள் முத்து நெடுமாறனுக்கு.
ILA(@)இளா said...
என்ன ஒரு சேவை. இவரைச் சந்தித்தாலே ஒரு பெரிய கனவு நனவான மாதிரிங்க.//
மிக்க நன்றி நண்பா
ramalingam said...
iphoneல் தமிழ்99 முறையில் தட்டச்சு செய்ய முடியவில்லை. phonetic முறை மட்டும்தான் உள்ளதா?//
வணக்கம் அன்பரே
நான் அறிந்தவரை இல்லை
வணக்கம், நண்பர்களே, முத்து அவர்கள் எங்கள் நாட்டின் தமிழ் கணினி முன்னோடி..மலேசியாவில் தமிழ் இணைய மாநாடு 2001 வெற்றிக்கும் அவர்தான் காரணம்.
வணக்கம், முத்து அவர்கள் மலேசிய நாட்டின் தமிழ் இணைய முன்னோடி..மலேசியாவில் நடைப்பெற்ற 2011 தமிழ் இணைய மாநாட்டிற்கும் அவர்தான் முக்கியக் காரணம்
தங்கம் பழனி, நேசன், இளந்தமிழ்
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
அன்புள்ள ஐயா
முத்துநெடுமாறன் நேர்காணல் பல செய்திகளை வழங்கியது. இருவருக்கும் நன்றி.
ஆப்பிள் ஐபேடு இரண்டாம் பதிப்பில் தமிழ் 99 விசைப்பலகையில் தட்டச்சிட வசதி உள்ளதா?. அறிந்தோர் அறிவிக்கலாம்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
Post a Comment