Thursday, August 26, 2010
யாழ்ப்பாணத்துப் புதினங்கள் - கோள் மூட்டல் மூன்று
மதில் மேல் பூனை(க்காதல்)
ஆரம்ப வகுப்பில் எனக்கு ABCD யில் இருந்து Role play வரைக்கும் ஆங்கிலத்தைப் புகட்டிய ஆசிரியை உடுவிலில் இருக்கிறா. அதுவும் எங்களுக்கெல்லாம் இங்கிலீஷ் படிப்பிக்க எவ்வளவு கெட்டித்தனம் வேணும். சொல்ல மறந்திட்டன் அவவின் பெறாமகன் தான் இவர். அவவை இந்த முறையாவது சந்திச்சுக் கதைக்க வேணும் எண்டு கங்கணங்கட்டிக் கொண்டு உடுவில் மகளிர் பாடசாலைக்குப் பக்கத்து ஒழுங்கை என்று என் அம்மா சொன்ன ஒரே ஒரு குறிப்பு மட்டும் இருக்க லுமாலா லேடீஸ் பைக்கை வலித்தேன். எல்லாப் பக்கத்தாலும் விசாரிச்சால் அவரைத் தெரியவில்லை. ஜி.எஸ் (கிராம சேவகர்) வீட்டை கேட்டுப் பாருங்கோ என்று ஒருவர் வழிகாட்டினார். ஆனால் ஜி.எஸ் வீட்டில் நின்ற நாய் "மவனே, கால் வச்சே எலும்பிருக்கும் தசை இருக்காது" என்று பல்லை இளித்துக் கொண்டு உறுமிக் கொண்டே துரத்த ஆயத்தமானது. ரீச்சரை இந்த முறையும் பார்க்க முடியாத துர்பாக்கியத்தை நினைத்து வெதும்பிக் கொண்டே உடுவில் மகளிர் பாடசாலைச் சுவரைப் பார்க்கிறேன்.
"உன் பெயர் என்ன?
இன்னும் ஒருமணி அகவில்லையா?
ஒரு மணிக்கு வரச்சொன்னி
ங்க
என்னைக் காக்க வைத்து விட்டு
வரவில்லை"
இப்படி ஒரு பெடிப்பிள்ளை சோக்கட்டியால் சுவரில் எழுதியிருக்கிறார். இவன் பாவி எழுதின குறிப்பிலேயே இரண்டு எழுத்துப் பிழை இருக்கு. எதுவாக இருந்தாலும் மொபைல்போன் யுகத்திலும் பழமையைப் பேணும் இந்தத் தம்பியின் கனவு கைகூடவேணும் பாருங்கோ.
தரேலாது செய்யிறதைச் செய் பாப்பம்
சண்டை ஒருவழியா ஓய்ஞ்சாலும் ஓய்ஞ்சுது இப்பவெல்லாம் புதுப்புது நாட்டாமையள் கிளம்பியிருக்கினம் என்று அன்னம்மாக்கா புலம்பும் அளவுக்கு நிலமை மோசம். அப்படி ஒரு நாட்டாமையின் கதை தான் இது. ஆமிக்காறருக்கு வேலை இல்லை சந்திக்குச் சந்தி "டெங்குவை ஒழிக்க நாம் கை கோர்ப்போம்" என்று இராணுவ அறிவித்தல் பலகையில் எழுதுவது மாத்திரமன்றி மதகுப்பக்கம் இருக்கும் நெருஞ்சி முள் பத்தைகளை வெட்டிக் களையெடுப்பதும் மருந்தடிப்பதுமாக "ஒப்பரேஷன் டெங்கு" நடவடிக்கை என்று சொல்லுமளவுக்கு அவை ஒருபக்கத்தால் இயங்க, இன்னொரு பக்கத்தால் நான் சொன்ன நாட்டாமைக்காரரும் வெளிக்கிட்டினம். அவை தான் சின்னக்குஞ்சி ஐயா சொல்லுமாற் போல "ஊத்தை இஞ்சுப்பெற்றர்". யாரடா அவையள் என்று மலைக்காதேங்கோ, ஊரில் சுகாதார அதிகாரிகளை "ஊத்தை இஞ்சுப்பெற்றர்" என்று அழைப்பதே ஒரு தனி சுகம்.
"வீடுகளில் இருக்கும் பற்றைகளை ஒழித்துக் கட்டவும், தண்ணீர் தேங்கியிருக்கும் பாத்திரங்களை அப்புறப்படுத்திச் சுத்தம் செய்யவும் இதன் மூலம் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளை ஒழிப்போம், மீறினால் 50,000 ரூபா அபராதம்" என்று சுகாதார அதிகாரிகள் யாழ்ப்பாணத்தின் ஊர் நெடுகச் சொல்லி அலுத்துப் போய் அடுத்த கட்டமாக ஒவ்வொரு வீடு வீடாகப் போய்ப் பார்த்து வந்தவை. அப்படித்தான் எங்கட வீட்டுக்குப் பக்கமா இருக்கும் என் நண்பன் ஒருத்தனின் வீட்டுக்குப் போனவை. மண் குடிசை, நாலஞ்சு கோழிகள். சுத்தும் முத்தும் பார்த்தவைக்கு ஆப்பு வைக்க ஏதுவாக ஒரு சமாச்சாரம் கிட்டியது. சருவச்சட்டிக்குள் தண்ணீர், தண்ணீருக்குள் புழுக்கள்.
"இதென்ன காணும் புழுவெல்லாம் நெளியிது" - சுகாதார அதிகாரி
"அது பாருங்கோ கோழிக்கு வச்ச தண்ணி, எப்பிடியோ புழுக்கள் வந்துட்டுது" - இது என் நண்பனின் மனைவி
"இப்பவே எழுதுறன் அபராதம்" - இது கூடப்போன இன்னொரு சுகாதார அதிகாரி
"என்னட்டைக் காசு வாங்கிப்போடுவியோ நீ, எழுது பார்ப்பம் ஆனா ஒரு சல்லிக்காசு தரேலாது செய்யிறதைச் செய்" மண் வாரித் தூற்ற ஏதுவாக நின்று கொண்டு நண்பனின் மனைவி
"ஐயா உவள் விசரியின்ர கதையை விடுங்கோ, மன்னிச்சுக்கொள்ளுங்கோ ஐயா, தயவு செய்து எழுதிப்போடாதேங்கோ" நண்பன் ஏறக்குறைய காலில் விழாத குறையாக.
சுகாதார அதிகாரிகள் தண்டப்பண ரசீதை எழுதிக் கொடுத்துவிட்டு நகர்கிறார்கள். இதற்குப் பிறகு விதானையாரின் கடிதம், ஜே.பி (சமாதான நீதவான்) கடிதம் எல்லாம் எழுதி அனுப்பித் தான் தண்டம் தணிந்தது ;)
1820 ஆம் ஆண்டு எழுப்பப்பட்ட உடுவில் தென்னிந்தியத் திருச்சபை தேவாலயம்
மணியம் காரம் சுண்டல் பாருங்க ;)
"செம்பருத்தி செம்பருத்தி பூவப்போல பெண்ணொருத்தி" பாட்டுப் போட்டுக் கொண்டு ஐஸ்பழ வான்
காத்து வாங்கும் சின்னக்கடை
எல்லாப்பக்கத்தாலும் கொடியேறினாலும் ஏறிச்சு கடலுணவுகளுக்குக்கான கிராக்கி யாழ்ப்பாணத்தில் வெகுவாகக் குறைந்து விட்டது. சின்னக்கடைப்பக்கம் போனால் நண்டு, மீன் எல்லாம் விசிலடிச்சுக் கொண்டு ஹாயாக இருக்கினமாம், வாங்க ஆளில்லை. மேலே படத்தில் இருப்பது மீன் வண்டிக்காரர் உடுவில் பக்கமாக வந்த போது.
எங்கட ஊர் ரியூட்டறி
முன்னர் அருட்செல்வம் மாஸ்டர் வீடு பதிவில் எங்கள் ஊர் ரியூசன் சென்றரைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். இந்த முறை மீண்டும் அங்கே ஒரு வலம் வந்தேன் கமரா ஆசை ஆசையாக அடுத்த தலைமுறையைத் தன் கண்ணில் வாங்கிக் கொண்டது.
காதல் பாடமும் எடுத்த வகுப்பு ;)
எங்களுக்கு க.பொ.த சாதாரண வகுப்பு வரை தமிழும், பின்னர் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் இந்து நாகரீகமும் படிப்பித்த பாலா சேர் பாடம் நடத்த வரவும் நான் போகவும் கணக்காய் இருக்கு .
"எட பிரபு! அப்பிடியே இருக்கிறான்ரா இவன்" மகிழ்ச்சி பொங்க என் கைகளை வாங்கி வைத்துக் கொள்கிறார்.
நான் எழுதிய "கம்போடியா - இந்தியத் தொன்மங்களைத் தேடி" நூலைக் கொடுத்து விட்டு
"சேர், நீங்கள் அப்ப எங்களுக்குப் படிப்பிச்ச அறிவை வச்சுக் கொண்டு நான் கம்போடியா போய் எழுதின நூல் இது".
ஆச்சரியமும் பெருமிதமும் கலக்க என்னைக் கட்டியணைக்கிறார்.
"என்னட்டைப் படிச்ச பிள்ளை இப்படி புத்தகம் எழுதுவதெல்லாம் எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு" என்னைக் கட்டியணைத்தார் அப்போது. எனக்கு லேசாகக் கண்களில் துளிர்க்க
"எனக்கும் இப்ப சந்தோஷமா இருக்கு சேர் "
19 comments:
பாஸ் சூப்பரா இருக்கு!
டிரிப் ஊருக்கு போயிட்டு வர்றதெல்லாம் சாதாரணமா இல்லாம இப்படி நிறைய விசயங்களை கேமராவில கேட்ச் பண்ணிட்டு,பலரோடு பேசியனத ரிவைண்ட் பண்ணிக்கிட்டே வாழ்க்கைய ஓட்டிடலாம் ! - இதான் தோணுச்சு படிச்சு முடிச்சதும்!
ஐஸ்பழ வான் - ஐஸ்கீரிமு வேன்ல வருதா ? எங்க தெருவுல மீன் காரரு வர்ற மாதிரி ஒரு பொட்டியில வைச்சுத்தான் எடுத்து வருவாங்க ! :)
நல்ல ஊர் சுற்றுறிங்க தல...கடைசியில செம டச்சிங் ;)
வருகைக்கு நன்றி ஆயில்ஸ்
கோபிநாத் said...
நல்ல ஊர் சுற்றுறிங்க தல...கடைசியில செம டச்சிங் ;)
//
நன்றி தல ;)
நானும் பாலா ஆசிரியரிட்டை இணுவில் N.E.C யில் சமுகக்கல்வி பாடம் படித்திருக்கிறேன். கன காலத்துக்குப் பிறகு பாலா ஆசிரியரை உங்களின் பதிவின் மூலம் பார்க்கிறேன். நன்றி
அதுசரி உடுவில் மகளிர் கல்லூரிக்கு யாரைப் பார்க்கப் போன நீங்கள்?. சும்மா ஆங்கில ஆசிரியரைப் பார்க்கப் போனீர்கள் என்று சொல்லி மழுப்ப வேண்டாம்.
jaffna parthathu pola erunthuchu unga photos
பதிவும் படங்களும் கலக்கல்.
உடுவிலில் ஆங்கில ஆசிரியை மட்டும் தான் பார்க்கபோனீர்களா? #சந்தேகம்.
உந்த சுவரில் எழுதும் கலாச்சாரம் இன்னும் நிற்கவில்லையா? எழுத்துப்பிழையை கவனித்த உங்களின் புலமைக்கு பாராட்டுக்கள்.
வாங்கோ அரவிந்தன்
உடுவிலுக்குப் போனாலும் வேம்படிக்குப் போனாலும் இதுதான்யா பிரச்சனை ;)
priyan said...
jaffna parthathu pola erunthuchu unga photos//
வருகைக்கு நன்றி நண்பரே
வந்தியத்தேவன் said...
உடுவிலில் ஆங்கில ஆசிரியை மட்டும் தான் பார்க்கபோனீர்களா? #சந்தேகம்.//
ஐயா
உங்களுக்கும் கெட்ட கெட்ட சந்தேகம் எல்லாம் வந்து துலைக்குது ;)
சுவர்க்கலாச்சாரம் அடுத்த நூற்றாண்டிலும் இருக்கும் போல
"ஊத்தை இஞ்சுப்பெற்றர்"
ஆஹா :) நல்லபெயர் தான்.
"உடுவில் மகளிர் பாடசாலைக்குப் பக்கத்து ஒழுங்கை என்று என் அம்மா சொன்ன ஒரே ஒரு குறிப்பை மட்டும் இருக்க லுமாலா லேடீஸ் பைக்கை வலித்தேன்"
பள்ளி விடுமுறைக்காலம் என்பது நினைவு வந்திருந்தால் அந்தப் பக்கம் போகும் எண்ணம் வந்திருக்காது.
"காதல் பாடமும் எடுத்த வகுப்பு ;)"
ம் . அதனால் தான் சிட்னி வந்த பின்பும் அந்த ரியூட்டறியை மறக்கமுடியாமல் மீண்டும் மீண்டும் பதிவுகள் வருகின்றன.
உங்கள் பயணத்தைப் போலவே பதிவுகளும் ஆர்வத்தைத் தூண்டுபவை.
//எனக்கும் இப்ப சந்தோஷமா இருக்கு சேர் //
ஆசிரியருக்கு சந்தோசம் இருக்கத்தானே செய்யும்.
வாங்கோ சகோதரி ஃபஹீமாஜஹான்
அவ்வ் நீங்களும் உடுவிலைப் பார்த்து சந்தேகமா ;)
இன்னும் இருக்கு பதிவுப்பயணம் தொடரும், நன்றி வருகைக்கு
வருகைக்கு நன்றி இளா,
ஆசிரியரின் சந்தோஷத்தை நேரே காணும் சுகமே தனி
நீங்க எழுதின புத்தகத்தை பார்த்ததும் உங்கட சேருக்கு சந்தோசம்..
நம்ம கதை ரொம்ப வித்தியாசமானது. எங்கட பள்ளிகூடத்தில ஒரு அநாமதேயப் பேர்வழி பலான புத்தகம் கொம்யூட்டர் பிரின்ட் எடுத்து மாதாமாதம் வெளியிட்டு வந்தது. கோதாரி அதில பாத்திரங்களா நாங்களும் பக்கத்து பெண்கள் பாடசாலை ஆட்களும்தான் வருவினம். இது பிரின்சியிட்ட பிடிபட்டு பதிப்பாளர் வெளியீட்டாளர் எழுத்தாளர் யாரென்று அல்லோலகல்லோலப்பட்டுத் தேடியும் ஆள் யாரென்று தெரியேல்லை. அதோட அது முடிஞ்சுது.
கனநாளுக்குப்பிறகு என்ர சிறுகதையொன்று தினக்குரலில வந்தது. அதை நான் எங்கட பிசிக்ஸ் சேருக்கு காட்டினன். மனுசன் வாசிச்சுப் போட்டு பலநாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் என்றிட்டு..
நீதான் அந்த பலான கதைகளும் எழுதியிருக்க வேண்டும். ஏனென்றால் வகுப்பில கதை எழுதுற ஆள் நீதான் என்று போட்டாரே ஒரு போடு..
எனக்கு கண்ணெல்லாம் ஆனந்தக் கண்ணீர்.. :)
சயந்தன்
கலக்கல் நினைவுகள் :0 அப்ப கடைசிவரைக்கும் அந்த உண்மையை நீங்கள் சொல்லவே இல்லையா ;-)))
இப்படி ஒரு பெடிப்பிள்ளை சோக்கட்டியால் சுவரில் எழுதியிருக்கிறார். இவன் பாவி எழுதின குறிப்பிலேயே இரண்டு எழுத்துப் பிழை இருக்கு. எதுவாக இருந்தாலும் மொபைல்போன் யுகத்திலும் பழமையைப் பேணும் இந்தத் தம்பியின் கனவு கைகூடவேணும் பாருங்கோ.
இப்ப சம உரிமை பாருங்கோ. இதை ஒரு பெண்ணும் எழுதி இருக்கலாம் :-). 92 ஆம் ஆண்டு எண்டு நினைக்கிறேன். ஒரு விடுமுறைக்கு ஊர் போனேன். யாழ்ப்பாணக் கம்பஸ் கான்டீன் நோட்டீஸ் போர்டில் நிறையக் கவிதைகள். அதில் சரி பாதி, நம் பெண் கவிஞர்கள். "உன் புன்னகையில் மலர்ந்தேன், நீ தாடி வைத்தபோது கவிழ்ந்தேன், .... " எண்டு போகுது ஒரு சாம்பிள். அப்ப எல்லாம் பெண் உறுப்புக்களை வைத்து கவிஞைகள் எழுதத் த்டங்கவிலை பாருங்கோ. நான் தப்பினேன்.
Post a Comment